மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 9 நவம்பர், 2022

புத்தக விமர்சனம் : கரிஷ்மா சுதாகரின் 'எங்க கருப்பசாமி'

ங்க கருப்பசாமி -

எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும், அந்தக் கதைகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொருவிதமாகச் சொல்லப்படும். அதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்றெல்லாம் தெரியாது என்றாலும் வழிவழியாக அதன் மீதான நம்பிக்கை மட்டும் ஒரு துளி கூட குறையாமல் இருக்கும்.
அதேபோல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெண் தெய்வம் - வீட்டுச்சாமி, குறிப்பாக கன்னி - இருக்கும். அது அந்த வீட்டில் பிறந்து மாண்டவராகவும், அவரைக் குறித்த கதையொன்றும் இருக்கும். வருடா வருடம் அதற்கென பூஜைகள் செய்வார்கள். அந்தப் பூஜைகளில் கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறைகளையெல்லாம் பயபத்தியுடன் செய்வார்கள். அந்தப் பெண் தெய்வமும் அந்தக் குடும்பத்தை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும். நானும் எங்கள் குடும்பத்தில் கண்கூடாய் பார்த்து வருகிறேன்.
2020 கொரோனாவின் பிடி சற்றே தளர்ந்திருந்தாலும் அதன் பாதிப்பின் பயத்தில் இருந்து மக்கள் மீளாத ஒரு நாளில் மனைவியின் பிரசவத்துக்காகக் கதையின் நாயகன் - சுகுமாறன் - காத்திருக்கும் போது அவன் பாக்கெட்டில் இருந்து எடுக்கும் கைக்குட்டைக்குள் பச்சைக்கல் ஒன்று மின்னுவதில் ஆரம்பிக்கும் கதை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த கதைக்களத்துக்குள் பயணிக்கிறது.


அந்தப் பச்சைக்கல் என்ன? அது எங்கிருந்து கிடைத்தது? அதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றிப் பேசும் நாவலில் நாயகனுக்குப் பிரச்சினைகள் வரும் போதெல்லாம் ஒரு சுருட்டுப் பிடிக்கும் கருப்பு மனிதன் காப்பாற்றுகிறான்... அவன் யார்? அவனுக்கும் நாயகனுக்கும் என்ன உறவு? அந்தக் கருப்பு மனிதன்தான் கருப்பசாமியா? என்பதையெல்லாம் பரபரப்பாக பயணிக்கும் கதைக்குள் விரிவாய் சொல்லி வைத்திருக்கிறார் நாவலாசிர்யர் கரிஷ்மா சுதாகர்.
கிராமங்களில் வழிவழியாக கோவில் கருவறைக்குள், அந்தப் பகுதியில் புதையல் இருக்கு என்ற கதைகள் இருப்பதுண்டு. அப்படியொரு கதையாய் பச்சைக்கல் வனதுர்க்கை கோவிலில் இருப்பதாகவும் அதை எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போவதாகவும் அந்தக் கல்லுக்கென்று ஆளாளுக்கு ஒரு கதையும் இருக்கின்றன.
அந்த பச்சைக்கல்லுக்கு ஒரு கதையுண்டு. அது வனதுர்க்கையின் அம்சமாகப் பிறந்த ஒருத்தியுடன் தொடர்புடையது, அது கதையின் பயணத்தில் இறுதியாகத்தான் வருகிறது என்றாலும் மிக முக்கியமான கதை, நாவல் ஆரம்பத்தில் இருந்து பேசும் கதையின் ஆரம்பப்புள்ளியே அதுதான். நாயகனின் குடும்பத்தில் சில தலைமுறைகளுக்கு முன் கந்தமாறன் என்பவருக்கு மகளாகப் பிறந்து, ஊரார்கள் எல்லாருக்கும் தேவதையாக, தேவியாக வளரும் சீதாவுக்கும் அவளின் கழுத்தில் இருக்கும் பச்சைக்கல்லுக்கும் பாதுகாவலனாய் ஊருக்கு வரும் தேவமாயனுக்கும் காதல்.
அந்தக் கல்லைத் திருட வரும் திருடர் தலைவன் பதுமன், கல்லின் மீது அவளின் மீதும் ஆசையும் காமமும் கொள்கிறான். அவனால் வரும் ஆபத்தில் சீதா தன்னை மாய்த்துக்கொள்ள, அவளைக் காப்பாற்ற முடியாமல் தன்னையே மாய்த்துக் கொள்கிறான் தேவமாயன். அப்போது மாயமாகும் பச்சைக்கல்லை எடுக்கத்தான் தலைமுறை தலைமுறையாக சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
அந்த ஊரில் நிறைய கிணறுகள் இருக்கின்றன, அந்தக் கிணறுகள் எதற்காக..? அதற்கும் வனதுர்க்கை கோவிலுக்கான தொடர்பு என்ன..? பச்சைக்கல்லுக்கும் இந்தக் கிணறுகளுக்கும் என்ன தொடர்பு என்பதை எல்லாம் பச்சைக்கல்லைத் தேடிவரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருபுறம், ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கொண்டு வரும் மந்திரவாதி மறுபுறம் எனத் தேடலை ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் தேடல் என்ன ஆனது என்பதுதான் நாவல் சொல்லும் கதை.
நாயகன் சுகுமாறனுக்கு முதல் காதலில் சுபமில்லை, அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் தேவதையான வினோதினியைத் திகட்டத் திகட்ட காதலிக்கிறான். அவனுக்குச் சாமி, பேய் மீது நம்பிக்கை இல்லையென்றாலும் தன்னைப் பயமுறுத்தும் கனவால் பேய் இருக்கிறதோ என யோசிக்கிறான். அவனுக்கு கண்டம் இருக்கு என்று குடுகுடுப்பைக்காரன் சொன்னதால் அவனை எப்படியும் பாதுக்காக்க வேண்டுமென நினைக்கிறாள் அக்கா. இதற்கு இடையே மந்திரவாதி மற்றும் ஆய்வாளர் இருவரின் கண்ணும் இவன் மீதுதான் இருக்கிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் வென்றது யார் என்பதை நாவலை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
கரிஷ்மா சுதாகர் அவர்களின் முதல் நாவல் என்பதை நம்ப முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக பயணிக்கும் கதைக்களம். சில இடங்களில் சறுக்கல்கள் இருந்தாலும், சில கதாபாத்திரங்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போனாலும் கதை அதன் பாதையில் சரியாகப் பயணிக்கிறது.
நாயகன் சுகுமாறனை - சுகா என்றே அழைத்திருக்கலாம் - சில இடங்களில் சுகன், மாறன் என்று மாற்றி மாற்றி எழுதியிருப்பது வாசிப்பவருக்கு குழப்பத்தை உண்டாக்கும். தலைப்புக்கும் நாவல் பயணிக்கும் கதைக்களத்துக்கு இன்னும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றியது, கருப்பசாமி என்பவன் கிராமங்களைப் பொறுத்தவரை காவல் தெய்வந்தான் என்பதால் காவல் காப்பவனாய் மட்டுமே காட்டியிருக்கிறார், அதையும் இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்.
விஞ்ஞானமும் அறிவியலும் வீம்பாய் வளர்ந்து பகுத்தறிவு மேலோங்கிய இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா என்று ஏளனம் செய்ய வேண்டாம். நம்பிக்கை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புக்குச் சொந்தமானது என்றும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு பிடித்த தெய்வங்கள் இருக்கும். அந்த தெய்வம்தான் அவனுடைய முதல் ஹீரோவாக இருக்கமுடியும். எங்கள் குலதெய்வம் கருப்பசாமியும் அப்படித்தான் இந்தக் கதைக்கு ஹீரோவானார் என்று தனது என்னுரையில் சொல்லியிருக்கிறார் நாவலின் ஆசிரியர் கரிஷ்மா சுதாகர்.
விருப்பமிருப்பின் முடிந்தவர்கள் வாங்கி வாசியுங்கள், ஒரு வித்தியாசமான அனுபவத்தை ருசிக்கலாம்.
---------------------------
எங்க கருப்பசாமி
கரிஷ்மா சுதாகர்
கலக்கல் ட்ரீம்ஸ்
விலை : 180 ரூபாய்.
---------------------------
-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

நலமா? கதை விமர்சனம் தங்கள் கருத்தாழம் மிக்க எழுத்தில் நன்றாக உள்ளது. இந்தக் கதையை எழுதிய கதாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் அருமை...