மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 நவம்பர், 2022

சினிமா : நா தான் கேசு கொடு ( மலையாளம் - 2022)

நா தான் கேசு கொடு-

ஒரு சாமானியன் தொடுக்கும் வழக்கில் அமைச்சரைக் கோர்ட்டுக்கு இழுக்கும் நகைச்சுவைப் படம் இது.
மலையாளிகளைப் பொறுத்தவரை இதையெல்லாம் எப்படி இரண்டு மணி நேரத்துக்கு மேல் மக்களை உட்கார வைத்துப் பார்க்க வைக்க முடியும் என்று நினைக்கும் வெகு சாதாரணக் கதைக்களத்தை திரை மொழியில் மிக அழகாக்கி, கொஞ்சம் பொறுமையுடன் பார்க்க வைத்து மெல்ல மெல்ல நம்மைக் கதைக்குள் இழுத்து ரசிக்க வைத்து விடுவார்கள். அப்படியானதொரு மேஜிக்கை சமீபத்தில் பார்த்த மூன்று படங்களும் - நா தான் கேசு கொடு, ஒரு தெக்கன் தள்ளுகேசு, பல்து ஜன்வர்- கொடுத்தன, அதில் இதுவும் ஒன்று.


சின்னச் சின்னச் திருட்டுக்களைச் செய்து போலீஸ் ஸ்டேசன் போனதால் எந்தெந்த சட்டப் பிரிவுகளில் வழக்குப் போட முடியும் என்பதெல்லாம் அத்துபடியானவன் நாயகன் ராஜீவன் (குஞ்சாக்கோ போபன்). ஒரு திருட்டில் தப்பித்து ஓடி வந்து தமிழ்க்குடும்பம் ஒன்றில் தஞ்சமடைகிறார். அங்கு தனது அப்பாவுடன் தனித்து இருக்கும் நாயகி தேவி (காயத்ரி) மீது காதல் ஏற்பட திருமணம் செய்யாமல் இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
திருந்தி வாழ நினைத்தவனை இந்தச் சமூகம் அவன் பார்த்த பழைய தொழிலை வைத்தே எடை போடும் என்பது நாமறிந்ததுதான். அப்படித்தான் ஒரு திருவிழா இரவில் எம்.எல்.ஏ வீட்டுச் சுவரோரத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கியவன், தன் மீது ஆட்டோ மோத வருவதைப் பார்த்துச் சுவரேறிக் குதிக்க, வீட்டிற்குப் பாதுகாவலாய் இருக்கும் இரண்டு 'கினி'கள் - இவற்றைப் பற்றி நீதிமன்றத்தில் சொல்லும் போதெல்லாம் நீதிபதியே முந்திக் கொண்டு பேரைச் சொல்லிவிடுவதுண்டு - பின்பக்கச் சதையைப் பிய்த்து தின்றுவிடுகின்றன. இதுவரைக்கும் ரொம்பப் பொறுமையாகப் படத்தைப் பார்த்தால் இதன் பின்னான நீதிமன்றக் காட்சிகள் எல்லாம் சிரிப்புடன் ரசிக்க வைத்து நம்மையும் அங்கு அமர்ந்து ராஜீவனின் குறுக்கு விசாரணைகளை ரசிக்க வைத்துவிடும்.
ராஜீவனுக்குச் சொந்த ஜாமீன் வழங்கும் நீதிபதி, அவன் வழக்குத் தொடுக்கும் போது இதெல்லாம் எதற்காக எனச் சொன்னாலும் அவனுக்கு ஒவ்வொருமுறையும் உதவி செய்யத்தான் செய்கிறார். தனக்காக அவனே வாதாடும் போது அவன் பேசுவதை ரசிக்கவும் செய்கிறார். நாய் கடித்ததில் ஆரம்பிக்கும் கதை அப்படியே ஆட்டோ, வேன், சைக்கிள், பைக் என ஒன்றன்பின் ஒன்றாய் பயணித்து வந்து நிற்கும் இடம் அமைச்சர்... இவரை எதற்காக இதற்குள் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கதையின் முக்கியப்புள்ளி.
ராஜீவனை வெறுக்கும் காதலி (மனைவி) சீதாவே ஒரு கட்டத்தில் அவனே வழக்கைத் திரும்பப் பெற நினைத்தாலும் பிடித்தபிடியில் நிற்கிறாள். இவர்களின் வழக்கு என்னாச்சு..? வென்றார்களா..? என்பதை நகைச்சுவையாய் சொல்லும் படம்தான் இது.
ஆரம்பத்தில் இருந்து இறுதிக் காட்சிக்கு முன் வரை கிட்டத்தட்ட நான்காண்டுகள் நடக்கும் வழக்கில் இருக்கும் நீதிபதி (குஞ்சிக்கிருஷ்ணன்) செம கலக்கல். அந்த மனிதரின் மேனரிசமே நமக்குச் சிரிப்பை வரவழைத்து விடும். கண்ணாடியை இறக்கிவிட்டு அதற்குள் இருந்து பார்க்கும் பார்வையாகட்டும், சாட்சிகளை ஒற்றை விரலால் இந்தக் கூண்டில் இருந்து அந்தக் கூண்டுக்குப் போகச் செய்வதாகட்டும், நீதிமன்றத்துக்குள் பறக்கும் புறாவை கல்லை விட்டு எறிவதாகட்டும், அமைச்சரை நின்று பேசச் சொல்வதாகட்டும் மனுசன் அடிச்சி ஆடியிருக்கார்.
சாட்சியாக வர மறுக்கும் டீச்சரிடம் பேசும் போது தேவி, 'நீங்க உங்களோட முன்பக்கத்தை மட்டும் பாக்குறீங்க, எங்க மாமாவோட பின்பக்கத்தையும் பாருங்க' என்று சொல்வது, நீதிமன்றத்தில் 'நாய் குண்டியை கடிச்சிருச்சு' என்று ராஜீவன் அடிக்கடி சொல்லும் போது சிரிப்பலை எழ, அதை மாற்றச் சொல்லி நீதிபதி சொன்னதும் 'என்னோட பிருஷ்டத்தில்' என அவன் மாற்றிச் சொல்வது என படம் முழுக்க சிரிப்புப் பட்டாசுதான். இதனூடே டீச்சரைக் காதலிக்கும் ஆட்டோ டிரைவர் வரும் இடங்கள் எல்லாமே ரசிக்க வைக்கும்.
குஞ்சாக்கோ வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, வழித்துச் சீவிய தலையுடன் காலைச் சாய்த்து வைத்தபடி நடந்து கொண்டு நீதிமன்றத்தில் சட்டப்பிரிவுகள் சொல்லி வாதாடுவதும், சாட்சிகளைத் தேடிச் சென்று தனக்காக சாட்சி சொல்ல அழைத்து வருவதும், ஒவ்வொரு முறையும் அதில் தோற்கும் போதெல்லாம் விடாமல் எழுந்து நிற்பதும் மிகச் சிறப்பு. காயத்ரி தனக்கான இடத்தைச் சரியாகவே செய்திருக்கிறார்.
கூகுள் குட்டப்பா என்னும் நகைச்சுவைப் படத்தை இயக்கிய ரத்தீஷ் பாலகிருஷ்ணனின் கதை, இயக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரிக்க, குஞ்சாக்கோ மற்றும் உதயா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு - ராகேஷ் ஹரிதாஸ் - அருமை, அதேபோல் எடிட்டிங்கும் - மனோஜ் கன்னோத் - சிறப்பு. படத்துக்கு இசை டான் வின்சென்ட்.
வழக்கில் ஆண்டுகள் கடந்து செல்லுவதைக் காட்டும்போது கூடவே பெட்ரோல் விலையும் காட்டிக் கொண்டே வருவது இயக்குநரின் நக்கல் என்றாலும் கூட அதற்கான ஒரு வசனம் படத்தின் முடிவில் வரத்தான் செய்கிறது.
எல்லா மலையாளப் படங்களையும் போல் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நாடகம் போல நகரும் படத்தை மெல்லக் கடந்து விட்டால் அதன்பிறகு ரசித்துப் பார்க்க முடியும்.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்த்து விட வேண்டியது தான்... நன்றி...