மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக்கும் வாக்சினேசனும்

'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் மரணத்துக்குப் பின்னே அவர் குறித்தான நல்ல செய்திகள் எல்லாம் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன... இருக்கும் போது ஒருவனைக் கொண்டாடாத, அல்லது கொண்டாடத் தெரியாத நாம் அவர் இறந்த பின்னே அவரின் நல்ல குணங்களை எல்லாம் வெளியில் சொல்லிச் சிலாகிக்க ஆரம்பிக்கிறோம்... இறந்த பின்பு பாரத் ரத்னா கொடுப்பதைப்போல.  

இன்று சமூக வலைத்தளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து கிடக்கிறார் விவேக். இருக்கும் போது திரு.அப்துல்கலாம் அவர்கள் சொன்னதால் கோடியை இலக்காகக் கொண்டு முப்பத்தி மூன்று லட்சங்களுக்கு மேல் தனது 'கிரீன் கலாம்' என்னும் அமைப்பின் மூலம் மரம் நட்டவர் என்பதை எத்தனை பேர் பெருமையாகப் பேசியிருக்கிறோம்..? 

'இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்...', 'எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்...', 'மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமாப் பேசிட்டேன்...' என ஒரு காமெடி நடிகராகத்தான் அவரைப் நாம் பார்த்திருக்கிறோம்... மிஞ்சிமிஞ்சிப் போனால் சமூகக் கருத்துக்களை தன் நகைச்சுவைக் காட்சிகளில் புகுத்தியவர் எனப் பெருமையாகச் சொல்லியிருப்போம்... அவ்வளவுதானே... இதை இல்லை என்று சொல்ல முடியுமா...?

வெள்ளைப் பூக்க.ள் என்றொரு படம்... அதில் விவேக் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்... காமெடியனாகப் பார்த்த நாம் குணச்சித்திர நடிகராக அவரை அந்தப் படத்தில் ரசித்தோமா... என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவரின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்பது உண்மைதான்... அந்த மரணத்தை வைத்து கொரோனா தடுப்பூசி போட்டால் செத்துப்போவாய் என அரசியல்வாதிகள் அள்ளி விடுவது ஏன்..? ஒருவரின் மரணத்தை வைத்துமா உங்கள் அரசியலைச் செய்ய வேண்டும்... ஊசி போடாதே என்று சொல்லும் அரசியல்வாதிகள் எல்லாம் ஊசி போடவில்லையா என்ன..? என் பின்னாலேயே நில் முன்னாடி வந்துவிடாதே என்பதை எல்லா அரசியல்வாதியும் தவறாமல் கடைபிடிப்பதுடன் மக்களின் வாழ்க்கையில் மட்டுமே விளையாடுகிறார்கள்.... எல்லாமே அரசியலில் அவர்கள் பிழைக்கத்தானே ஒழிய நம்மைக் காக்க அல்ல என்பதை நாம் புரிந்து கொள்வதேயில்லை.

இங்கு வாக்சினேசன் போட ஆரம்பித்த பின் அதை மக்களிடம் கொண்டு செல்ல, போட்டாக வேண்டும் என்பதை கட்டாயமாக்கிட அரசு செய்த எதையும் எவனும் எதிர்க்கவும் இல்லை... மறுக்கவும் இல்லை... ஏனென்றால் இங்கு மன்னர் ஆட்சி... முடியாது என முட்டிக் கொண்டு நின்றால் தட்டிப் போட்டுவிடுவார்கள்... நமக்குத்தான் சுதந்திரம் இருக்கே... ஜனநாயகம் வேறு... ஊசி போடச் சொன்னால் ஊத்தைவாய் அரசியல்வாதிகளின் பசிக்காக எதைச் சொன்னாலும் அதை அப்படியே கேட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாம்ப்பா... எங்க தலைவரே சொல்லிட்டாருன்னு பேசிக்கிட்டு இருக்கிறோம். நாமெல்லாம் பூம்பூம் மாடுகளாய் அஞ்சுக்கும் பத்துக்கும் தலையாட்டிக் கொண்டே போய் சேர வேண்டியதுதான்.

இங்கு முன்பெல்லாம் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வந்தே கொரோனோ பரிசோதனை செய்தார்கள். முதல் நாள் எடுத்தால் மறுநாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்துவிடும்... அல்லது அதற்கென இருக்கும் அல்கோஷன் ஆப்பை செல்போனில் வைத்திருந்தால் அதில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

அரசு மற்றும் சில அலுவலகங்களில் பணி புரிபவர்கள் வாராவாரம் பரிசோதனை செய்து அறிக்கை கொண்டு போக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அப்பதெல்லாம் கட்டிடத்துக்கு வந்தோ அல்லது கட்டிடத்துக்கு அருகில் திடீரெனச் செய்யும் சோதனையிலோ நாம் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதால்... அதையே அந்த வாரத்துக்கு அலுவலகத்திலும் காட்டலாம்...  அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள 85 திர்ஹாம் (கிட்டத்தட்ட 1700 ரூபாய்) என்பதால் இந்தச் சேவை பலருக்கு உதவியாய் இருந்தது. 

அதன் பின் 65 திர்ஹாமாகக் குறைத்த பின் பொதுவில் செய்யும் இலவச சேவை நிறுத்தப்பட்டது... ஆனாலும் வாக்சினேசன் கொடுக்கும் தற்காலிகக் கூடாரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு ஊசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் 70% பேர் இரண்டு டோஸும் போட்டு விட்டார்கள். 90% பேர் முதல் டோஸ் போட்டு விட்டார்கள். இன்னும் சில நாட்களில் மொத்தமாய் 90% பேர் இரண்டு டோஸூம் போட்டு முடித்திருப்பார்கள். மீதம் இருக்கும் போடாத நபர்கள் கண்டிப்பாக போட்டே ஆகவேண்டும் என்று அரசு சொல்லும் போது ஊசிக்கு பணம் எனக் கொண்டு வந்து விடுவார்கள் என்றாலும் 100% முடித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்... போடவில்லை என்றால் வேலைக்குப் போகமுடியாது என்ற சொன்னால் போதும் எல்லாரும் போட்டுவிடுவார்கள். இங்கு நாங்கள் சட்டத்தை மதிப்போம்... ஊரில் என்றால் 'எதுக்கு..?' என்ற கேள்வியோடு நிற்போம்.

மாஸ்க் இல்லாமல் வெளியே போனால் 3000 திர்ஹாம்... நாலு பேர் நெருக்கமாய் நடந்து போனால் 3000 திர்ஹாம்... கூட்டம் கூட்டி வீட்டுக்குள் நிகழ்ச்சி நடத்தினால் 5000 திர்ஹாம்.... காரில் டிரைவருடன் சேர்த்து மூவருக்கு மேல் போனால் 5000 திர்ஹாம்... என அபராதம் கடுமையாக இருக்கும் நிலையில் மாஸ்க் இல்லாமல் போவீங்க...... எப்பவும் மாட்டுக்கு வாய்க்கூடு போட்டது போல்தான் திரிகிறோம்... ஆனால் ஊரில்...?

இங்கிருந்து போன நண்பர்கள் கூட ஊரில் யாரும் மாஸ்க் போடலை அதனால் நானும் போடலை எனச் சொல்வதைக் கேட்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை... நேற்று வரவேண்டிய அறை நண்பர், பிசிஆர் சோதனைக்குப் போன இடத்தில் கொரோனா என ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஊருக்கு வர வேண்டிய நேரத்தில் பார்த்து இருக்கக் கூடாதா என்றால் இங்க யாருமே மாஸ்க் போடுறதில்லை... அதான் நானும் போடலை என அசால்டாகச் சொல்கிறார்... அவரின் பயண டிக்கெட்டுக்கான பணம் கிடைக்க வாய்ப்பில்லை... அது அவருக்கு மிகப்பெரிய நஷ்டம்.... நாம் எதையுமே யோசிப்பதும் இல்லை... அதனாலான பயன் என்ன என்று சிந்திப்பதும் இல்லை... படிக்காதே, போகாதே என அரசியல்வாதி சொல்வதைக் கேட்டுக் கொண்டு முட்டாளாகிக் கொண்டேதான் போகிறோம். இப்போது அரசியல்வாதிகளுடன் சினிமாக்காரர்களும் சேர்ந்து விட்டார்கள்.

ஒரு மாதமாக வாக்சினேசன் போட முயற்சித்தேன்... எங்க பி.ஆர்.ஓ ஓமானைச் சேர்ந்தவர்... மூன்று முறை அரசாங்க மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். நிற்கும் கூட்டத்தைத் தவிர்த்து விஜபிக்களுக்கான இடத்துக்கு கொண்டு சென்று பிரஷர் பார்த்தபோது கூடுதல் போட முடியாது எனத் திருப்பி அனுப்பி விட்டார்கள். தனியார் மருத்துவமனையில் பிரஷர் பார்த்த போது கூடுதல் எல்லாம் இல்லை என்று சொன்னார்கள்... அதைச் சொன்னாலும் இங்கே கூடத்தான் இருக்கு... போடமுடியாது. எனச் சொல்லி விட்டார்கள். போடுங்க என்று இங்கு நிற்க முடியாது என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு திரும்பிவிட்டோம்.

நம்ம ஊரில் ஊசி போடச் செல்லும் போது பிரஷர் எல்லாம் பார்க்கிறார்களா..? ஏதாவது நோய் இருக்கா... மாத்திரை சாப்பிடுகிறீர்களா எனக் கேட்கிறார்களா...? எனத் தெரியவில்லை... ஆனால் பிரஷர் இருந்தால் போடக்கூடாது என்பதையாவது கடைபிடித்தால் நல்லது. அதுதான் அட்டாக்கில் கொண்டு வந்து முடிக்கும் என இங்கு சொல்கிறார்கள்.

நேற்று மாலை நடைப்பயிற்சி சென்ற போது அருகில் இருக்கும் தற்காலிக வாக்சினேசன் கூடாரத்தில் கூட்டம் இருக்கா எனப் பார்த்து வரலாம் எனச் சென்றால் கூட்டமே இல்லை... ஒரு மாதம் முன்பு பிரபல நடிகரின் படத்துக்கு நிற்கும் கூட்டத்தைப் போல் ஜேஜேன்னு இருந்த இடம்... நான் சொன்னேனே 70%, அது முடிந்ததால் கூட்டமில்லை... உள்ளே போய் பெயர், செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்து பிரஷர் பார்த்தால் கொஞ்சம் கூடுதல்... பரிசோதனை செய்த பிலிப்பைனி நடந்து வந்தாயா எனக் கேட்டார். ஆம் நடைப்பயிற்சிக்கு வந்தேன்... அப்படியே இங்கு வந்தேன் எனச் சொன்னாலும் அரசு அலுவலகத்தில் சொன்னதுதானே இங்கும் நடக்குது என்ற யோசனை. வேலையின் காரணமாக, சில பிரச்சினைகளின் காரணமாகக் கூட பிரஷர் அதிகமிருக்கலாம்... இன்றும் ஊசி போடமாட்டார்களோ என நினைத்தபடி சென்ற வாரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நார்மலாகத்தான் இருந்துச்சு என்றேன்.

பிலிப்பைனி புன்னகைத்தபடி, நடந்திருக்கேயில்ல... ஒரு பதினைந்து நிமிடம் ஓய்வெடுத்துப் பின் வா என்றார். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் போனால் நோன்பு திறக்கும் நேரம்... ஒரு மணி நேரத்துக்குப் பின்தான் பரிசோதனை செய்வோம் எனச் சொல்ல, மீண்டும் ஒரு மணி நேரக் காத்திருந்தல்... அதன்பின் மீண்டும் பரிசோதனை... இப்போது பிரஷர் சரியாக இருக்க, முதல் ஊசிக்குப் பிரச்சினை இல்லை... இரண்டாவது ஊசிக்கு முன் டாக்டரைப் பார்த்து மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள் எனச் சொல்லிவிட்டு, ஊசி போட அனுமதி கொடுத்தார்.

ஊசி போட்டபின் பத்து நிமிட அங்கயே அமர வைத்து மீண்டும் பிரஷர் பார்த்து சரியாக இருந்தால், ஊசி போட்ட இடத்தில் வலியிருக்கா..? உடம்பில் ஏதேனும் மாற்றம் தெரியுதா என்றெல்லாம் கேட்டு, காய்ச்சல் வந்தால் பெனடால் போட்டுக்க, உடம்புக்கு ரொம்ப முடியலைன்னா இந்த நம்பரில் கூப்பிடு, அடுத்த ஊசி இத்தனாம் தேதி போடணும்... கார்டில் எழுதியிருக்கு... அன்னைக்கு வந்து போட்டுக்க என எல்லாம் சொல்லித்தான் போகச் சொன்னார்கள்.

இன்றுதான் கையில் நல்ல வலி இருக்கிறது... காலை முதல் தூக்கமாய் வருகிறது. எனது அலுவலக நண்பர் நான்கு நாட்கள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழித்தார் என்பதால் பெரிதாகப் பயம் எதுவுமில்லை. இங்க நாங்கல்லாம் அதே சைனா ஊசியைத்தான் போட்டுக் கொள்கிறோம்... ஆனால் ஊரில் இருப்பவனிடம் இது அரசின் சதி, போட்டுக்காதே எனச் சொல்லி அரசின் மீதான கோபத்தை தனி மனிதனின் உயிரில் செலுத்துவும் செய்கிறோம் எந்த வித சிரிஞ்சும் இல்லாமல். 

இன்றைய எதிர்கட்சிகள் நாளைய ஆளுங்கட்சி ஆகும்பட்சத்தில் இந்த ஊசி வேண்டாம் எனச் சொல்லுமா..? யோசிக்க வேண்டும் மக்களே... அரசியலுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள்... லட்சக்கணக்கில் தினமும் எகிறிக் கொண்டிருக்கும் கொரோனாவைக் கருத்தில் கொண்டு உங்களது உயிரின் முக்கியத்தை உணர்ந்து ஊசி போட்டுக் கொள்வதுடன் மாஸ்க் உபயோகியுங்கள்... கூட்டம் கூட்டும் நிகழ்வுகளை எல்லாம் தள்ளிப் போடுங்கள்... ஒதுக்கி வையுங்கள்... பாதுகாப்பாய் இருங்கள். மரம் நட்டு மனிதம் வளர்த்த விவேக்கின் மரணத்தை ஊசியுடன் கோர்த்து அரசியல் பிழைப்போரையும் தள்ளி வையுங்கள்.

எல்லாருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... கோமாளி அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்... முடிந்தவர்கள் ஊசி போட்டுக் கொள்ளுங்கள்... இருநூறு ரூபாய் என்பது பெரிதல்ல... மிகப்பெரிய அரசு இந்தத் தொகைக்கு ஊசி போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல... அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழக அரசு 12% ஊசி மருந்தை வீணாக்கி இந்தியாவில் முதன்மை மாநிலமாக நிற்பது நம் துரதிஷ்டமே... எப்போது பணத்துக்காக ஓட்டை விற்றோமோ அப்போதே பீகாரை விடக் கேவலமான நிலைக்குப் போய்விட்டோம்... இனித் திருந்தப் போவதில்லை நாம்... கொஞ்சமாவது நமக்காகவேனும் சிந்திப்போமே.

அப்புறம் இன்னொன்னு கணேஷ் பாலா அண்ணன் மின்கைத்தடியில் நடத்திய படத்துக்கு நகைச்சுவைக் கதை எழுதும் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருக்கிறது. சோகக் கதைக்களத்திலேயே நகரும் நான் நகைச்சுவை கதை எல்லாம் எழுதுவதென்பது கடினமே என்றாலும் முயற்சித்தேன்... வெற்றி கிட்டியது...  இந்த எழுத்தே என்னை இன்னும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது... உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அங்கு உள்ளதை போன்ற சோதனைகள் செய்வது இங்கு அனைவருக்கும் இல்லை... குழப்பமும் அதிகம்...

எப்போதும் கவனமாக இருங்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

இங்கும் பிரஷர், டெம்பெரேச்சர் பார்த்துதான் ஊசி போடுகிறார்கள்.  எனக்கு கொஞ்சம் பிரஷர் ஏற்றத்தில் இருந்தது,  மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார்கள்.  ஆம் என்றேன்.  போட்டு விட்டார்கள்.  நேற்று இரண்டாம் டோஸ் போட்டிருக்க வேண்டும்.  நான் போடவேண்டிய இடத்தில் ஸ்டாக் இல்லை.  எனவே காத்திருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நலமா...

உடல் நலன் பார்த்துக்கோங்க

இங்கும் சில இடங்களில் டெஸ்ட் செய்துதான் போடுகிறார்கள்.

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சரியான நேரத்தில் சரியான பதிவு குமார். இங்கே அரசியல்வியாதிகள் - நீங்கள் சொல்லும் கோமாளி அரசியல்வாதிகள் அனைத்தையும் அரசியல் ஆக்குகிறார்கள். தான் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களை போட்டுக்கொள்ளாதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சில மருத்துவமனைகளில் பரிசோதனை உண்டு. பெரிய மருத்துவமனைகளில் பரிசோதனை இல்லை - ஆனால் 30 நிமிடம் அங்கேயே அமர்ந்து இருக்க வேண்டும். பிரச்சனை இல்லாத பட்சத்தில் வீடு திரும்பலாம்.