மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன் - 4 : வீணான விஜயதசமி

சென்ற சனிக்கிழமை கமல் வழக்கம் போல் வந்தோம்... பேசினோம்... தானே சிரித்தோம்... போனோமுன்னு நிகழ்ச்சியைக் கரையேற்றினார். உள்ள இருக்கவனுங்களுக்கும் சரி கமலுக்கும் சரி ரொம்பப் போரடிப்பது போல்தான் பேசினார்கள். மூனு வாரமாச்சு இன்னமும் டேக் ஆப் ஆகாமலேயே கிடக்கேன்னுதான் தோணுச்சு... கொரோனாவுக்கு வீட்டுக்குள்ள முடங்குன மாதிரி பிக்பாஸ்-4 முடங்கிப் போச்சுன்னுதான் தோணுச்சு.

ஞாயிற்றுக்கிழமை தலைவரை வாடிவாசல்ல இருந்து அவுத்து விட்டுட்டானுங்க... மூனு வாரமா விட்டதை ஒரே நாள்ல பிடிச்சிட்டாரு... முழுக்க முழுக்க கமலோட ஆட்டம்தான்... அன்னைக்குத்தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கூட ஜெயிச்சிச்சில்ல... இவரும் அடிச்சி ஆடினாரு... அனிதாவை வாரி... பாலா... அர்ச்சனா... சுரேஷ் எனச் சுற்றி எல்லாப் பக்கமும் தன்னோட பந்தைத் திருப்பி, 'நம்ம' ரம்யாவை ரொம்ப விவரமான நர்சுன்னு சொல்லிப் பேசி கலந்து கட்டி ஆடினார்... அவரின் பேச்சு, சிரிப்பு என எல்லாமே நடிப்பாக இல்லாமல் இயல்பாக இருந்ததே நிகழ்வின் அதிரடிக்குக் காரணம். 

பிடிக்காதவங்களுக்கு கொம்பு, பிடித்தவங்களுக்கு கீரிடமெல்லாம் வைக்கச் சொல்லி விளையாடினார்... சொல்லி வச்ச மாதிரி அம்புட்டுப் பேரும் பாலாவுக்குக் குத்த, இந்த வாரம் வெளியே போவது யாருமே இல்லைங்கிறதை முன்னரே முடிவு பண்ணிட்டாலும் பாலாவை நீ பாஸ்ன்னு சொன்னப்போ சனம் முகத்துல லைட் எரிஞ்சிச்சு... அர்ச்சனா முகத்துல பவர் கட். ஆஜீத்துக்கிட்ட வெளியேற்றத்தைத் தடுக்கும் அலாவுதீனுடைய அற்புதவிளக்கு இருப்பதால் விளையாட்டை கண்டுக்காம இருக்கான்னு அவனோட அஸ்திரத்தைப் பறிச்சிருவோமுன்னு முடிவு பண்ணி அதைச் செய்தார்கள் கமலும் பிக்பாஸூம்... பாவம் அவன் கேப்ரில்லா பின்னாடி கேப் விடாமச் சுத்துறான்னு தெரியலை போல.

வெள்ளைச் சட்டை போட்ட ரவுடி, பன்னீர் செல்வம் அப்படின்னு டைமிங் காமெடிகள் செம... அர்ச்சனாவுக்குத்தான் கை தூக்குவானுங்கன்னு தெரிஞ்சும் அப்படியான தேர்வு முறையை இந்த வாரத் தலைமைக்காக கமல் கடைபிடித்தது மட்டுமே விதிவிலக்கு, மற்றபடி அரசியல் அதிரடியுடன் வழக்கமான கமலாய் வந்தது சிறப்பு. இப்படி இருந்தால்தான் வார இறுதியாச்சும் மகிழ்வாக இருக்கும்... ஆண்டவரே இப்படியே அடிச்சி ஆடுங்க... ஒரு மாட்ச் ஆடிட்டு ஒன்பது மாட்ச் தோல்வியைத் தழுவுற சென்னை சூப்பர் கிங்க்ஸ் மாதிரி இல்லாம இனி வரும் வாரங்களையும் உங்கள் கட்டுக்குள் வையுங்கள்... இதுவரை ஒளிபரப்பப்பட்டதில் ரசித்துப் பார்க்க வைத்தது அன்றைய பகுதி மட்டுமே. 

நேற்று நாலு மணி நேரத்துக்கு மேல விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னானுங்க... அப்பவே சுதாரிச்சிருக்கணும்... பண்டிகைகளின் போது 'கும்கி' படத்தை ஏழு மணி நேரம் போட்டு எழவக் கூட்டுற மாதிரி கூட்டுவானுங்களேன்னு... ஏதோ ஒரு நப்பாசையில பாக்க உக்காந்தாச்சு... விதி வலியது. ஆரம்பத்துல ஆர்ப்பரிக்கும் ஆகாசவாணி அனிதாதான் இன்றைய நிகழ்வின் தொகுப்பாளினின்னு சொன்னானுங்க... மனச்சாட்சியே இல்லையா பிக்பாஸ்... சும்மாவே தொறந்த வாயை மூடாது... எல்லாரும் எந்திரிச்சிப் போனாலும் கேமராக்கிட்டயாவது பேசிக்கிட்டு இருக்கும்... மூச்சு விடாம பாடுனாரு எஸ்.பி.பின்னு கொண்டாடுற நம்மாள மூச்சு விடாமப் பேசுற அனிதாவைக் கொண்டாட முடியாதது துரதிஷ்டமே.

ஆத்து ஆத்துன்னு ஆத்துச்சு... அம்பது கேமராவுக்கும் முன்னாலயும் நின்னு நின்னு பேசிப் பேசி... ஸ்ஸப்பா... பாவம் பிக்பாஸ்... நமக்கு கொடுத்த நாலு மணி நேரமே நாக்குத் தள்ள வச்சிச்சின்னா... அவருக்கு...? அப்புறம் ஒரு வழியா டெக்கரேசன் பண்ற மாதிரி ஒரு வாழையைக் கட்டிக்கிட்டு நின்னானுங்க... மத்ததெல்லாம் பிக்பாஸ் அணி வந்து பண்ணியிருக்கும்... ஏதோ இவனுகளே பண்ணுன மாதிரி... செம பில்டப்பு... சமையல் செய்யிற கதைதான்... நாம நாலு பேருக்குச் சமைக்கவே அலுத்துக்கிறோம்... இதுல இவனுக மூனு நேரமும் பதினாறு பேருக்கும் சமைக்கிறானுங்களாம்... சரி கதைக்கு வருவோம்.

கொலுப் பொம்மையைக் கொடுத்து கலர் கொடுங்கடான்னு சொல்லிட்டார் பிக்பாஸ்... ஆளாளுக்கு கலர் கொடுக்க, ஷிவானியம் பாலாவும் ஒரு ஓரமாக கரை ஒதுங்கினார்கள்... செம க்யூட்... அவங்க ரெண்டு பேரோட பேச்சும்...  பாட்டும்... கேப்ரியாலா, சனமெல்லாம் சம்மதம் வாங்க முடியாதுங்கிறதுங்கிறது கன்பார்ம்... பய ஷிவானி பின்னால போயிருவான் போல... அதுவும்தான் மயங்கிக் கிடக்கு... பாடி பில்டர் ஒரு பக்கம் அர்ச்சனாவை அடித்து உக்கார வச்சிக்கிட்டு தன்னோட டிராக்குல, ஷிவானி கூட அழகாப் பயணிக்க ஆரம்பிச்சிட்டான். இப்பத்தான் வால்டர் வெற்றிவேல் தம்பிக்கு மனசு சந்தோஷப்படும்... கேப்புல உள்ள போயிறலாமுல்ல.

'நம்ம' ரம்யா ஒரு பக்கம் உக்காந்து கலர் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு... ரம்யாவை விபரமானவர், அறிவானவர்ன்னு சொல்லி, அன்பானவர்ன்னு சொல்லாமல் கட்டம் கட்ட ஆரம்பிச்சிட்டானுங்க... ஆனா அதுக்கு அது தெரியாமத்தான் எல்லார்க்கிட்டயும் சிரிச்சிக்கிட்டே பழகுது... இனி வரும் வாரங்களில் எல்லாரும் சேர்ந்து ரம்யாவை நாமினேஷன் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்... ஆனா பிக்பாஸ் விடாது பிடித்து வைத்துக் கொள்வார் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

கொலுப் பொம்மைக்கு கலர் கொடுத்த கொலுக்களைக் கூப்பிட்டு கிராமம், நகரம்ன்னு பிரிஞ்சி சமையல் பண்ணுங்கடான்னு சொல்ல கிராமம் கேசரியையும் நகரம் பாயாசத்தையும் செய்தார்கள். கிராமத்துக்கு அன்னபூரணி அர்ச்சனாவும் அமர்க்களம் சுரேஷும், நகரத்துக்கு நாந்தான் இருக்கேனுல்ல சனமும், பாடி பில்டரும்... சனத்துக்கு பாடி பில்டர பக்கத்துல வச்சிக்க ரொம்ப ஆசை... ஆனா அவனோ 'ஷீ போ நீ'ன்னு சொல்லி ஷீவானின்னு நிக்கிறான்.

சமைக்கும் போதே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார் அனிதா, எப்படியும் பிடிச்ச அர்ச்சனா, நிஷா, ரியோன்னு எல்லாரும் இருக்க கிராமத்துப் பக்கம்தான் தன்னோட தீர்ப்பைச் சொல்லும்ன்னு நினைச்ச நினைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டு நாட்டாமை தீர்ப்பை மாத்தி நகரத்தின் பாயாசமே பக்கான்னு சொல்லிடுச்சு... மூனு பேரு இருந்தும் சுரேஷும் கேப்ரியாவும் இருந்ததால் தீர்ப்பில் ஓரவஞ்சனை... அப்புறம் அமர்க்களம் சுரேஷ் மண்ணா இருக்க பாயாசத்துக்குப் பரிசான்னு பொங்கிக்கிட்டே இருந்தாரு... அனிதா அனலுக்குள் உக்கார்ந்திருக்க, எப்படியும் வெடிக்கும் இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸான்னு தோணுச்சு.

ஒரு பிரேமுக்குள்ள நின்னு அழுகாச்சியோட வீட்டுல இருக்க எல்லாருக்கும் விஜயதசமி வாழ்த்துச் சொன்னானுங்க... நல்லநாள் பெரியநாள் அழுகணும்... எம்புட்டு அழுகுறியளோ அம்புட்டு மார்க்குன்னு பிக்பாஸ் சொல்லி அனுப்பியிருப்பாரு போல... வழக்கம் போல ஓப்பாரி வச்சானுங்க.... அப்புறம் அங்கிருக்கும் அஷ்ட லெட்சுமிகளைப் பற்றி நாலு நல்ல வார்த்தை பேசணும்... அம்புட்டுப் பேரும் உங்களைப் போல ஊருக்குள்ள யாருமில்லைன்னு லாலி பாடுனுங்க பாடி பில்டர் இப்படித்தான்... இதுதான்... நீங்களும் போட்டியாளர்கள்தான்... அடிச்சி ஆடுவோம் வாங்கன்னு சொல்லிட்டுப் போனான்... அதுதான் சரியான பேச்சு.

அப்புறம் அண்ணன் வேல்முருகன்... சும்மாவே மேடைகளில் பாடும் போது ஓவர் ஆட்டமாயிருக்கும்... இங்க ஆடலை... ஆனா கம்மாயில மடை ஓடாதபோது ஏரவாமரம் கட்டி வயலுக்குத் தண்ணி இறைக்கும் போது உடல்வலி தெரியாமலிருக்க பாட்டுப் பாடுவார்கள்... அதுபோக அந்தப் பாட்டுல இத்தனை பிள்ளையார் பாடினால் இந்த வயலுக்குப் போதும் என்ற கணக்கெல்லாம் உண்டு... ஆனா இவரு ஏறி பாட ஆரம்பிச்சாரு... சாரு... சாரு... சாரு... அம்புட்டுப் பேரையும் சாறு பிழிஞ்சி கண்ணீர் வத்திப் போச்சுடான்னு சொன்னதும்தான் உக்காந்தாரு... வயல் நிறைந்து பக்கத்து வயலுக்கெல்லாம் போற அளவுக்குப் பாடிட்டாரு... வேலு பாடு... உன்னோட இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றலாமான்னு அவருக்கிட்ட இனி எவனும் கேக்கமாட்டான்... அம்புட்டுப் பாட்டு... தியாகராஜ பாகவதர் தோத்துப் போனார்.

அப்புறமும் நகரமும் கிராமமும் பந்தை வச்சி, அடுக்கப்பட்ட ஏழு கல்லை எறிந்து விழுத்தாட்டி எதிர் அணியிடம் அவுட் ஆகாமல் தப்பி மணி அடிக்கும் முன் பழையபடி அடுக்க வேண்டும். அதுலயும் நகரமே ஆட்டம் போட்டது. கிராமம் உக்காந்து போச்சு... காரணம் ரியோவுக்கு நானே ஆளப்பிறந்தவன்னு எண்ணம்... அர்ச்சனா, சுரேஷ், வேல்முருகன், நிஷான்னு பெருசுகளை எல்லாம் கிராமத்துக்குத் தள்ளிட்டா... எந்திரிச்சி அசஞ்சி நடந்து வர்றதுக்குள்ள சனம், ஷிவானி, ரம்யான்னு அடிச்சி ஆடிருதுக... கூட பாலாவும், ரமேஷூம் இருக்க, வால்டர் வெற்றிவேல் தம்பியும் இருந்தான். கேப்ரில்லா ஆடும்போது அவனும் ஆடினான்னா பாத்துக்கோங்க... ஆமா அவனும் குழுவில் இருந்தான்.

அப்புறம் விளக்கேத்துனாங்க... சுமங்கலி வான்னு சொல்லி ஆகாசவாணியை அமர்க்களம் அழைக்க, ஆகாசவாணி கேட்ச் பிடிச்சி வச்சிக்கிச்சு... எப்படியும் அடுத்த ஆட்டம் போடலாம்ன்னு நம்பிக்கை கண்ணில் தெரிந்தது. அடுத்து அறிவுரை ஆரி கிராமம் பற்றி சிறப்பாகப் பேசினார்... 'நம்ம' ரம்யா நகரம் பற்றி அடித்து ஆடினார். அடுத்துப் பேச வந்த ஆகாசவாணி அனிதா, சுரேஷ் சுமங்கலி வான்னு சொன்னதுக்குப் பதில் கொடுக்க, தொகுப்பாளினியா இருந்தும் நகரத்துக்கு ஆதரவாப் பேசுறேன்னு பரட்டைக்குப் பத்த வச்சிருச்சு... பரட்டை பத்திக்குச்சு... ஆனா படர்ந்து எரிய நேரம் பார்த்துக் காத்திருந்தது. அடுத்து கேப்ரில்லாவுக்கு ஒரு டான்ஸ்... ஷிவானிக்கு ஒரு டான்ஸ்... அம்புட்டுப் பேரும் ஆடுனாங்க... பாடிபில்டர் பாலா பக்காவா ஆடுறான். இங்க பேசும் போது சென்னையில் சாதியைக் கேட்பதில்லைன்னு சொல்லுச்சு... கிராமத்துல என்ன ஆளுகன்னு கேப்பாங்கன்னும் சொன்னுச்சு... ஆஹா... நகரத்துல கேக்கமாட்டாங்களாம்.... சரி சாதி எதுக்கு இங்க.... 

அடுத்துச் சின்னதாய் ஒரு நாடகம்... சனத்தை வைத்து பிக்பாஸ் பேசுவது போலும் அதுக்கு அவர் நடிப்பது போலும் சோமு நடத்தினான்... சனத்தை சாணம் எனச் சொல்லி சாணி மெழுகினாலும் நல்லாப் பண்ணினான்... அப்ப பாலா வரும் போது ஆஹா அழகான பாலான்னு சனம் பூத்தப்போ, உனக்கு அப்புடித்தான்டி தெரியும் கேப்ரில்லா ஆத்துப்போச்சு... அடுத்து இறங்குன கிராமத்துக்கு தியாகராஜ பாகவதரோட ஜிக்கி நிஷாவும் பாட, அரக்கன் அமர்க்களைத்தைத் தூக்கிப் போட்டு வகுந்தார் அன்னபூரணியாய் இருந்து துர்க்கையாக மாறிய அர்ச்சனா... எல்லாரும் ஆஹா... ஓஹோ... துர்க்கையே நேரில் வந்தாய்ன்னு புகழ்ந்தானுங்க... அதுல சிவனா வந்த ஆரிக்கிட்ட சிவன் கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி நடப்பாருன்னு யாரோ சொல்லிட்டாங்க போல... காக்கா வலிப்பு வந்தவன் கையில கம்பியக் கொடுத்தமாரிக்க ஒரு நடிப்பு... முடியல அறிவுரை நம்பி.

அடுத்து ஏதோ போட்டி வச்சானுங்க... அப்புறம் படுத்துக்கிட்டு அன்னபூரணிக்கிட்ட தூபம் போட்டார் அமர்க்களம்... நீ அடிச்சி ஆடு... இல்லாட்டி நா ஆடுவேன்னு... அடுத்து அந்தச் சுமங்கலி கதைதான் ஓடுச்சு... ஆகாசவாணி அம்புட்டுப் பேர்கிட்டயும் நான் செஞ்சது தப்பான்னு பேசுச்சு... பேசுச்சு... பேசிக்கிட்டே இருந்துச்சு... சிவாஜி கூட உங்கிட்ட பேசமுடியாதும்மா... பேசமுடியாதுன்னு போயிருவாரு... இங்க ரியோதான் நடுவரா இருந்தார்... இந்த வாரம் அர்ச்சனாதானே ஹவுஸ் ஓனர்... அதாங்க கேப்டன்... ஆனா ரியோதான் கேப்டன் மாதிரி தெரியுது. சரி சரி... நாட்டாமை இருந்தா என்ன... சின்ன நாட்டாமை இருந்தா என்ன பாலாவோட மோதி முகரையை உடைச்சிக்காம இருந்தாச் சரி.

சரி... வாங்கடா... ஒருத்தன் வந்து சீட்டை எடுத்து அதுல வர்ற பாட்டை நடிச்சிக் காமிங்க... உங்க குழுவினர் கண்டு பிடிச்சிட்டா... அதை எல்லாரும் பாடுறேன்னு ரெண்டு நிமிசம் கொலையாக் கொல்லுங்கன்னு அர்த்த ராத்திரியில பாட்டுப்போட்டி வச்சாரு பிக்பாஸ்... அதுல நகரம் அடிச்சி ஆடிருச்சு... அப்பல்லாம் அமர்க்களம் ஒரு பக்கம் அமராமல் எரிஞ்சிக்கிட்டு இருந்தார். எல்லாம் முடிச்சி போங்கடா போய் படுங்க... இனி செம்மத்துக்கும் ஆகாசவாணியை தொகுப்பாளினி ஆக்கமாட்டேன்னு பிக்காலிப் பாஸூ தூங்கப் போயிட்டாரு.... இவனுக பஞ்சாயத்தை ஆரம்பிச்சானுக... ஆகாசவாணி அமர்க்களத்தை விரட்ட, அவரோ கட்டுத்தொறைக்கு வராத காளமாடு மாதிரி சுத்திக்கிட்டு வந்தாரு... ரியோதான் இங்கிட்டும் அங்கிட்டும் பேசிக்கிட்டு இருந்ஹ்டான். கடைசி வரைக்கும் ஆகாசவாணிக்கு வெற்றியில்லை... ஆனா இன்னைக்கும் விடாதுன்னு தோணுது.

மொத்தத்துல நாலு மணி நேரத்தை பேதி மருந்து சாப்பிட்டு பாத்ரூம் வாசல்ல உக்காந்திருக்க மாதிரி உக்கார வச்சிட்டானுக... குறிப்பாக பார்த்தது என்னன்னா ஷிவானியோட லுக்குல பாலா அவுட் ஆகலாம்... அர்ச்சனாவோட முக்கியமான டார்க்கெட்டே பாலாதான்... அதுக்குப் பின்னால ரியோ, நிஷா, சுரேஷ்ன்னு ஒரு கூட்டமே இருக்கு... முப்பெரும் தேவிகளின் அடிதடிக்கு பாலாவே காரணமாவான்... இன்னொன்னு என்னன்னா எந்தம்பி... எந்தம்பின்னு 'நம்ம' ரம்யா வால்டர் வெற்றிவேல் தம்பியைக் கொஞ்சுது... ஆனா அவன் அதை ஒரு இடத்தில் என் அக்கான்னு சொல்லலை... காலை வாரி விட்டுருவான்னு தோணுது... 'நம்ம' ரம்யாவுக்கு ஒண்ணுன்னா பிக்பாஸ் பாக்குறதையே விட்டுருவோமுல்ல...

இந்த வாரம் பதினோரு பேரை நாமினேட் பண்ணியிருக்கனுங்க... அதுக்கு பிக்பாஸ் போட்டோவை எரிங்கடான்னு சொன்னதெல்லாம் தேவையில்லாத ஆணியிலும் தேவையே இல்லாத ஆணி... செவத்தைப் பாத்துச் சொல்லுங்கடான்னு சொல்லியிருக்கலாம்... இதுக்கு போட்டோ பிரிண்ட் எடுத்து நெருப்பு மூட்டி, யப்பா நேரத்தை ஓட்ட என்னென்ன பண்ணுறானுங்க... கண்டென்டு கிடைக்கலை போல.

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

போட்டாவை எரித்தது பிடிக்கவில்லை...