மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஜூன், 2020

மனசு பேசுகிறது : ஜூம் வழி எதிர்சேவை அறிமுகம்

கோதர் நந்தா அவர்களின் முன்னெடுப்பில் அமீரக பறம்பு வாசகர் வட்டம் மற்றும் கத்தார் கீழடி வாசகர் வட்டம் சார்பாக இன்று நடைபெற்ற காணொளி கலந்துரையாடல் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், நித்யா குமார், Sasikumar Ssk, Aalayam Ganesh மற்றும் Sudarvizhi Sethupathi Raja உட்பட, உரை

இந்நிகழ்வில் சசி அண்ணன் மற்றும் எனது புத்தகம் பற்றிய அறிமுகப் பார்வை இருந்தாலும் திரு. களப்பிரன் அவர்களின் தஞ்சையில் மூடிக்கிடக்கும் ஆவணங்கள் என்ற தலைப்பிலான 'மோடி' ஆவணங்கள் குறித்த பேச்சு மிகவும் சிறப்பு. நேரம் கருதி அவர் முடித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும் அதன் பின்னான கேள்வி நேரத்தில் நிறையக் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்வு தொடங்கிய உடன் சசி அண்ணனின் 'மெல்லச் சிறகசைத்து' என்னும் பயண நூலைக் குறித்து துபையில் இருக்கும் திருமுருகன் மிக அருமையாகப் பேசினார். புத்தக ஆசிரியர் பயணம் செய்தது, அங்கு பார்த்தவை, கேட்டவை, ரசித்தவை என எல்லாவற்றையும் விரிவாகப் பேசினார். எழுத்தாளர் அறிமுகமும் கூட விரிவாகத்தான் இருந்தது.கேரளாவுக்குச் சென்ற போது சசி அண்ணன் மலையாளத்தில் கேட்டது அதற்கு அங்கிருப்பவர்கள் பதில் சொன்னது, அவர் பயண நூல்கள் இன்னும் எழுத வேண்டும் என்றும் அதைவிட அவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்பை எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.
இதற்கு ஏற்புரை வழங்கிய சசி அண்ணனின் பேச்சு எப்பவும் போல் அருமை... எழுத்தாளர் அறிமுகம் என்பது இவ்வளவு தேவையில்லை என்றும் நான் அறிமுகத்தை விரும்புவதில்லை என்றும் சொன்னார். இந்த நூல் எனது முதல் நூல் என்றார்.பயணங்களின் போது குறிப்பெடுத்துக் கொள்வதில்லை தம்பி நித்யாவைப் போல் பார்த்தவை, கேட்டவை எல்லாம் ஒரு வாரம் கழித்து உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போது அப்படியே மனக்கண்ணில் வரும் என்றும் சொன்னார். சிறப்பான பேச்சாக அவரின் பேச்சு இருந்தது.
ஒருமுறை தன் மனைவி, மகனுடன் வெளியில் செல்லும் போது ஒரு இடத்தைப் பார்த்து ரசித்த போது இதைப் பற்றி இப்பவே எழுதுவாரு பாருங்க என்று பையன் சொன்னதாகவும் ஆனால் அப்போது எழுதவில்லை என்றும் பத்து நாட்களுக்குப் பின் எழுத உட்கார்ந்தபோது கண்ட காட்சிகள் எல்லாம் எழுத்தாய் உருமாறின என்றும் சொன்னார்.
திருமுருகன் பேசும்போது சசி சார் என்று பேசியது நிகழ்வில் ஒன்றச் செய்யாது தனித்து நிற்பதாய் உணர முடிந்தது. அதையே சசி அண்ணன் சொல்லும் போது திருமுருகன் எனது அலுவலக நண்பர், அங்கு சார் என்று அழைப்பதால் இங்கும் சார் போட்டுட்டார்... நிகழ்வுகளில் சசி என்று சொல்லுதலே அழகு என்றும் சொன்னார்.
அடுத்ததாக எதிர்சேவை குறித்து தங்கை சுடர்விழி பேசினார். ஒவ்வொரு கதையையும் அவர் சொன்ன விதமும் அதைப் புரிந்து கொண்டு விதமும் உண்மையில் சிறப்பு. விமர்சனமாகக் கூட இதையெல்லாம் அவர் எழுதலையே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒவ்வொரு கதையையும் அது சொல்லிச் செல்வதென்ன... நம்மிடம் விட்டுச் செல்வதென்ன என அலசி ஆராய்ந்து பேசினார். மொத்தமாய் விரிவான பார்வை... விளக்கமான பார்வையும் கூட.
சுடர் பேசிய விஷயங்களில் எல்லாமே கவர்ந்தது என்றாலும் அவரின் நுணுக்கமான பார்வை வியப்பாய் இருந்தது. மேலும் வீராப்பு பற்றிப் பேசும் போது கிராமத்து மனிதர்கள் இப்படித்தான் என்றாலும் எல்லாத்துக்கும் வீம்பு பண்ண மாட்டாங்க... காதல் திருமணத்தை எதிர்ப்போம்தான்... ஆனாலும் எங்களுக்குள்ளும் ஒரு பாந்தமான மனசு இருக்கத்தான் செய்யும் என்பதை கண்டிப்பாக இங்கே சொல்லியாக வேண்டும் என்றார். அதுதான் எதார்த்தம்... பாதிப்புக்களைத் தாங்கிப் பழக்கப்பட்ட மனசுக்கு பக்குவமாய் நடக்கவும் தெரியும்தான்.
தீபாவளிக் கனவில் அந்தச் சிறுமியுடன் பயணித்தார். அவர் சொன்ன பெண்ணாய் இருந்து என்ற வார்த்தையை இன்னொரு கதையில் இன்னும் விரிவாய் எழுதியிருந்த போது பலர் சொல்லியிருக்கிறார்கள். அதில் அம்மா பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தில் எப்படி நடந்துக்கணும் என்று சொல்வதாய் வரும்... நாமும் பெண்களுடன் பிறந்தவர்கள்தான்... பெண்ணைப் பெற்றவர்கள்தான் அந்த உணர்வும் வலியும் தெரியாமல் போகுமா என்ன... தங்கை சுடர்விழிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை... இரு நாட்கள் மன அழுத்தத்தில் இருந்த போதிலும் சிறப்பான பேச்சு.
கிராமத்து வாழ்க்கை இன்னும் இரண்டு தலைமுறைக்குப் பின் தெரியாமலே போய்விடும் காரணம் நகரத்தை நோக்கி நகர்ந்து செல்லுதலே... இப்படியான வாழ்க்கையை யார்தான் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது... அதை இந்தக் கதைகள் செய்யும்... நிறையக் கதைகள் எழுதி வச்சிருக்காங்க... அதெல்லாம் புத்தகம் ஆக வேண்டும் என அன்பின் மிகுதியால் பேசினாலும் கிராமத்து வாழ்க்கையை கதைகளாகவேணும் எழுதி வைக்கத்தான் வேண்டும்... அந்த மனிதர்கள் ஜிகினா பூசிக் கொள்வதில்லைதானே.... மேக்கப் இல்லாத மனிதர்களையே என் கதையில் உலாவ விடுவேன்... கிராமம் தாண்டாத என் கதைகள் இன்னும் அங்கிருக்கும் வாழ்க்கைய பதிவு செய்து கொண்டேதான் இருக்கும். நன்றி சுடர்.
ஏற்புரை குமார் என்றதுமே நமக்கு நாக்கு வறண்டிருச்சு... நினைவின் ஆணிவேர் குறித்து எழுத்தாளர் வாமு கோமு சொன்னதை சொல்லிடலாம்... வீராப்பு கதை ரியாத் தமிழ்ச் சங்க சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது... அதுல வர்ற வீரய்யா இருக்காரே அப்படின்னு ஏதாவது பேசிடலாமுன்னு முடிவு பண்ணி வச்சிருந்தா, போற போக்குல சுடர்விழி அதையும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன முதல் பேச்சுத்தானே எனக்கு கோர்வையா பேச வராதுய்யான்னு சொல்லிட்டு கொஞ்சமாய் பேசிவிட்டு முடித்துக் கொண்டேன்... இருப்பினும் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஐயா குறித்துப் பேசி, பணம் வாங்காமல் புத்தகம் வெளியிட்ட தசரதன் என்னும் சகோதரன் குறித்துச் சொல்லி, புத்தகம் வெளிவர பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்ற பிரபு, நெருடா பற்றிப் பேசி, புத்தகம் ஆகும் முன்னே கதைகளை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இராஜாராம், சுடர்விழி, பால்கரசு பற்றிப் பேசி, என் கதைகள் கிராமத்துக்குள்தான் சுற்றும் என்றும் அதில் வருபவர்கள் ஜிகினா பூசிக் கொள்வதில்லை என்றும் சொல்லி, எனது கதைகள் எல்லாமே முடிவில் வருத்தத்தையே பதிவு செய்யும் என்றும் பெரும்பாலும் சுபமாக முடிவதில்லை என்றும் அதனாலேயே வலைப்பூ எழுத வந்த போது பலர் சண்டையிட்டதையும் சொல்லி, எதிர்சேவைக்கான பெயர் விளக்கமும் அட்டைப்படமும் குறித்துப் பேசி, எதிர்சேவை கதை இன்னும் விரிவாக எழுதலைன்னு பலர் சொன்னாலும் அது சிறுகதை என்பதால் போதுமே என்று நினைத்ததாகவும் சொல்லி ஒருவழியாக என் ஏற்புரையை முடித்தேன்.
நான் எப்பவுமே கருவை நினைத்து வைத்து கதையை உருவாக்கி எழுத அமர்வதில்லை.... உட்கார்ந்தால் அது எத்தனை மணி நேரமானாலும் முடித்து விட்டுத்தான் எழுவேன் என்றும் பாதி எழுதி விட்ட கதையை மீண்டும் தொடர்வதில்லை என்றும் கதையின் போக்கிலேயே என்னை நகர்த்தி முடிவிற்கு வருவேன் என்றும் சொன்னேன். இதை பெருமைக்காகச் சொல்லவில்லை... பெருமைப்படும்படியாக இன்னும் எதுவும் எழுதிவிடவும் இல்லை... என்றாலும் நான் இப்படித்தான் என்பதைச் சொல்லவே அங்கு பகிர்ந்தேன்.
நிகழ்வில் கலந்து கொண்ட கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனைப் பேசச் சொன்னோம்... அவர் பேசியது உண்மையில் மகிழ்வாக இருந்தது. அவர் புத்தகத்தால் நஷ்டமடைந்தேனா லாபம் அடைந்தேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது... அது தேவையுமில்லை... பிரபு சொல்லி கதைகளை வாங்கிப் படித்தபோது பிடித்திருந்தது. ஒரு புதிய எழுத்தாளனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாலேயே புத்தகமாக்கினேன் என்றார். கொரோனா இல்லை என்றால் இந்நேரம் அடுத்த புத்தகம் கொண்டு வந்திருப்பேன். கொரோனாவால் தள்ளிப் போனாலும் அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு முன்னர் கொண்டு வருவேன் என்றார். உண்மையில் அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி சகோதரா.
அடுத்து களப்பிரன் களமிறங்கினார்... தஞ்சைக்குள் எல்லாரையும் இழுத்துப் போனார்... எத்தனை விபரங்கள்... எவ்வளவு விளக்கங்கள்... எப்படி இப்படி மடை திறந்த வெள்ளம் போல் இரண்டு மணி நேரங்கள் ஒரு மனிதனால் பேச முடிகிறது. அதுவும் எல்லாமே தகவல்களும் தரவுகளுமாய்... நகைச்சுவை என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு பேச்சால் பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியும் என்பதை இன்று உணர முடிந்தது.
தஞ்சையில் மராட்டியர்கள் வருகையில் ஆரம்பித்து வெள்ளையர்கள், டச்சுக்காரர்கள் எனப் பயணித்து நூற்றம்பது ஆண்டுகள், பதிமூன்று மராட்டிய மன்னர்கள் என்பதையெல்லாம் சொல்லி மங்களவிலாசம், கல்யாண மஹால் பற்றி எல்லாம் விரிவாகப் பேசினார்.
மோடி ஆவணங்கள் மொத்தம் 1760 மூட்டைகளாக கட்டப்பட்டன என்றும் அதில் 400 மூட்டைகளை A என்றும் 400 மூட்டைகளை B என்றும் மீதமிருந்த 960 மூட்டைகளை C என்றும் பிரித்ததாகவும் A,B-யை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென சென்னை ஆவணக்காப்பகத்தில் வைத்துக் கொண்டு C-யை அழித்துவிட முடிவு செய்த போது தஞ்சை மக்கள் அழிப்பதை எங்களுக்குக் கொடுங்கள் என்று வாங்கி சரஸ்வதி மஹாலில் வைத்துக் கொண்டதாகச் சொன்னார். இந்த C-யில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதில் கிடைத்த தகவல்களே இவையெல்லாம் எனவும் வேண்டாமெனச் சொன்னதிலேயே இவ்வளவு கிடைத்திருக்கிறதென்றால் வேண்டுமென வைத்திருக்கும் 800 ஆவணங்களை ஆய்வு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்றார்.
சரஸ்வதி மஹால் உலகில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டாவது பழமையான நூலகம் என்றார். முதலாவது நூலகம் வாடிகன் நூலகம் என்றும் சொன்னார். சரஸ்வதி மஹாலை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அதாவது 1978-ல் இந்திராகாந்தி மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் எனச் சொன்னபோது பராமரிப்புச் செலவுகளை மத்திய அரசும் ஆட்களை வேலைக்கு வைத்தல் மற்ற பணிகளை மாநில அரசும் செய்யும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகச் சொன்னார்.
இன்னும் நிறையப் பேசினார்... பெண்களை விலைக்கு விற்பது... பனிரெண்டு வயசுப் பிள்ளைகளை விலைக்கு வாங்கி அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ளுதல் என்பதையெல்லாம் ஆதார ஆவணத்தில் இருந்து வாசித்தே காட்டினார். அப்போது இருந்த சாதீய ஏற்றத்தாழ்வுகள், படிப்பு, பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தது என எல்லாமே பேசினார்.
யானைகளை எப்படிப் பேணிக்காக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கஜசாஸ்திரம் என்னும் நூல் சரஸ்வதி மஹாலில் இருப்பதாய் சொன்னார். சரஸ்வதி மஹாலில் 25000 ஓலைச்சுவடிகளும் 24000 காகிதச் சுவடிகளும் இருந்ததாய்ச் சொன்னார்.
மொத்தத்தில் மிக விரிவான பார்வை... கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம் விரிவாகப் பதில் சொன்னார். கேள்வி கேட்டவர்களும் மூன்று, ஐந்து என மொத்தம் மொத்தமாய்க் கேள்வி கேட்டார்கள்.
மூவாயிரம் பேர் நடந்தே காசிக்குச் சென்றதாக அவர் சொன்னதை வைத்து பால்கரசு மூவாயிரம் பேரும் ஒரே நேரத்தில் போனார்களா என்று கேட்டார். அவரும் அதற்கு விளக்கம் கொடுத்தார்.
அவர் சொன்ன மோடி ஆவணங்கள் பற்றிய புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது எனவும் படிக்க வேண்டிய நூல் அது எனவும் எல்லாரும் வாசியுங்கள் என்றும் நெருடா சொன்னார். முத்துநிலவன் ஐயா பையன் என்றதும் நானும் நெருடாவும் பல வருடப் பழக்கம் என்றும் இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் அறையில் நெருடாவும் நானும் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் என்றார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், செல்ஃபி
அசோக் அண்ணன் விபரமாக கேள்விகள் கேட்டார். சுந்தர் காளி எழுதிய புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு சில வருட விபரங்களை களபிரனுடன் விவாதித்து அறிந்து கொண்டதுடன் அவருக்குச் சில விஷயங்களைச் சொன்னபோது இன்னும் முழுவதுமாக வாசித்து தெரிந்து கொள்கிறேன் தோழரே என களப்பிரன் அவர்கள் சொன்னார்கள். அசோக் அண்ணன் அவருடன் நிறைய விஷயங்கள் பேசினார்.
களப்பிரன் அவர்கள் ஆரம்பிக்கும் போதே, மோடி எனத் தலைப்பிட்டு வைத்திருந்தார் நந்தா... அந்தத் தலைப்பிலேயே இருந்திருந்தால் இந்நேரம் உளவுத்துறை இங்கு வந்திருக்கும் என்று ஆரம்பத்தில் சொன்னார். என்ன சொல்வது விபரங்களை அள்ளி வீசி அடித்து ஆடினார். நானெல்லாம் ஆய்வாளர் களபிரன் என்றதும் தாடி வச்ச பெரியவர் வந்து உக்காந்து உரை ஆத்துவார்ன்னு நினைச்சேன்... ஆனா சும்மா ஜம்முனு வந்து கலக்கிட்டுப் போய்விட்டார். இன்னும் விரிவான் அவரின் உரை மட்டுமேயான ஒரு நிகழ்வை நந்தா அண்ணன் முன்னெடுத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன்.
எனது பேராசான் தன் வீட்டில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தங்கை மணிமேகலை மூலமாக காரைக்குடியில் இருந்து எதிர்சேவை குறித்த முழுப் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் பேச வைத்துவிட வேண்டும் என நினைத்திருக்கும் போது அது முடியாமல் போக, இறுதியில் மேகலா பேசினார். எப்பவும் சொல்வது போல் குமார் எங்க வீட்டுப் பிள்ளை எனச் சொல்லாமல் சொல்லிச் சென்றார். எப்படியோ நம் வீட்டில் இருந்து ஒருவர் பேசியாச்சு... ஐயா எதிர்சேவை குறித்த பேச்சைக் கேட்டாச்சு... இது போதுமே இன்னும் எழுத....
அப்பாவுக்கும் குமாருக்குமான நட்பு ஆசிரியர்-மாணவர் என்பதாய் இருக்கவில்லை... எனக்கும் குமாருக்குமான நட்பு 1991-ல் எங்கள் வீட்டுக்கு வந்ததில் இருந்து தொடர்கிறது... குமார் என் நண்பன்... அப்பவுல இருந்து இப்ப வரைக்கும் எதையும் நுணுக்கமாய் பார்ப்பார். அவரின் முதல் புத்தகத்தை அப்பாவுக்கு சமர்ப்பணம் பண்ணியிருந்தார்... இது அவங்க இடையிலான அன்பைக் காட்டியது என்று சொன்ன மேகலா, களபிரன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொன்னார்... எவ்வளவு தரவுகள், தகவல்கள் மிகச் சிறப்பாக நிறைய விஷயங்களைச் சொன்னீர்கள். உங்களின் அடுத்தடுத்த கூட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறேன்... என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். இதுதான் உண்மையில் நந்தா அண்ணனுக்கு கிடைத்த வெற்றி. பேசியதற்கு நன்றி மேகலா.
நன்றியுரை கூறிய நண்பர் அபிராமன் அழகாகப் பேசினார். ஜீவநதி கதை தன் வாழ்வில் நிகழ்ந்ததைச் சொன்னது போல் இருந்தது என்றார்.மகிழ்ச்சி நண்பா. திருமுருகனில் ஆரம்பித்து சசி அண்ணாவைச் சொல்லி சுடரின் பேச்சை வியந்து நான் குதறியதை மதுரை பேச்சு மக்கான்னு சிலாகித்து, களப்பிரனின் பேச்சை வியந்து இந்த நிகழ்வு பறம்பு, கீழடி என்பதைத் தாண்டி நந்தா ஒருவராலேயே சாத்தியப்பட்டது என்றும் இதற்கு முழுக்காரணமும் நந்தாவே என்றும் சொன்னார். அதுதான் உண்மை...
மிகவும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி.
நல்ல நிகழ்வு சகோ என்னோட வாழ்த்துகளையும் நன்றியையும் பிரபுக்கும் நந்தாவுக்கும் சொல்லிவிடுங்கள் என்று தசரதன் குறுஞ்செய்தி அனுப்பினார். முகநூலில் இதைப் பகிர்ந்து கொண்டதை கலக்கல் ட்ரீம்ஸ் இணையப் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். நன்றி சகோ.
கல்லூரிக் காலம் முதல் இன்று வரை அதே நட்போடு பயணிக்கும், என் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட என் நண்பர் டொமினிக், தமிழாசிரியை ஷோபியா, சகோதரர் வேல் முருகன், சகோதரி ரமாமலர், விழாவை முன்னெடுத்த நந்தா அண்ணா மற்றும் கலந்து கொண்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.
கலந்து கொண்ட நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.
சில நாள் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக நேற்றைய மாலை அமைந்தது. அனைவருக்கும் மீண்டும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு நிகழ்வு... கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்... ஆவணங்கள் பற்றிய விளக்கம் (தொடர்பில்) அளித்ததற்கு நன்றி குமார்...

மாதேவி சொன்னது…

நடந்த நிகழ்வுகளை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தெளிவான நிகழ்வுகளை, விரிவான பதிவாக தந்துள்ளீர்கள்! நன்று!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தெளிவான நிகழ்வுகளை, விரிவான பதிவாக தந்துள்ளீர்கள்! நன்று!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விரிவான தகவல்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல நிகழ்வு. உங்கள் புத்தகம் இப்படி அறிமுகமாவது மிகவும் சிறப்பு. நிகழ்வை விவரித்த விதமும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள் குமார்

துளசிதரன்

கீதா