மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 6

கோவில்களின் தேடலில் ஒன்றைக் கண்டு கொள்ள முடிந்தது. அது என்னன்னு முதல் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். அதாவது ஒரு ஆண் தெய்வத்தின் கோவிலில் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆண் தெய்வத்தின் பெயர் மங்கி, பெண் தெய்வத்தின் பெயர் பிரதானமாகிறது. அப்படியான ஒரு கோவில்தான் இன்று பார்க்கப் போகும் கோவில்.

அய்யனார் கோவிலாய் இருந்தது இன்று அம்மன் பெயரில்தான் இருக்கிறது. அபிஷேகம் அய்யனாருக்கு என்றாலும் மற்றதெல்லாம் அம்மனே முதலில் பெற்றுக் கொள்கிறாள்.

எங்க ஊருக்கு அருகில் இருக்கும் கோவில் இது... கண்டதேவி மேற்கில் என்றால் இது தென் கிழக்கில்... கோவில் இருக்கும் கண்மாய் தாழக்கண்மாய்... இந்தக் கண்மாயின் உள்வாய்க்குள் எங்கள் ஊர் வயல்கள்... கண்மாய் நிறைபெருக்காய் ஆகும் காலத்தில் எங்க ஊர் வயல்கள் பாதிக்கு மேல் தண்ணிக்குள் போகும்... பயிரெல்லாம் அழுகிப் போகும். இந்த வயல்களைக் கடந்தால் ஊர். எங்க வீட்டில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும்... அதன் பின் கருவை மண்டிய வயல்களான பின் கோவில் தெரிவதில்லை.

என் படிப்பின் பெரும்பாலான விடுமுறை தினங்கள் இந்தக் கோவிலில் அமைதியில்தான் கழிந்தது. புத்தகமும் ஒரு துண்டுமாய் கிளம்பிப் போய் இங்கு அமர்ந்துதான் படிப்பது வழக்கம். இப்போது இருக்கும் பெரிய மண்டபமெல்லாம் இல்லாதிருந்தது அப்போது... மரத்திலேறிப் படிப்பதும் கோவில் கட்டைச் சுவற்றில் அமர்ந்து படிப்பதுமாய் நகரும் விடுமுறை தினம்.

அதேபோல் சிவன் ராத்திரிக்கு வைக்கப்படும் நாடகம் பார்க்க சிறுவயதில் வயல் வழியே நடந்து செல்வோம். பூக்குழி வளர்க்கும் வரை பார்த்து விட்டு இரவோடு இரவாகத் திரும்புவோம். ஒன்பதாவது போன பின் சைக்கிளில் பயணம்... நடந்து சென்றால் சீக்கிரம் போய்விடலாம். சைக்கிள் என்றால் தேவகோட்டை போய்த்தான் வரவேண்டும். இருந்தாலும் எங்கள் ஊர்ப் பாதையில் இருக்கும் செட்டியார் தோட்டத்தில் இரவில் இளநீர் வெட்டிக் குடித்து மெல்ல வர சைக்கிள்தான் சரியாக வரும்.

கோவிலில் நேர்ந்து விடப்பட்ட மாடுகள் நூற்றுக்கும் மேலிருக்கும்... விவசாய நேரத்தில் இரவில் வயலுக்குள் புகுந்து காலி செய்து விடும்... இது எங்கள் ஊரில் மட்டுமல்ல. சுற்றியிருக்கும் ஊர்கள் எல்லாத்திலும் நடக்கும்... இந்த மாடுகள் சாக்கோட்டை, திருவாடானை வரைக்கும் போகும்... கிட்டத்தட்ட 30, 40 கி.மீ பயணித்து போய் விட்டு திரும்பவும் சில நாளில் கோவில் வந்து சேரும். இதற்காக எங்கப்பாவெல்லாம் வயலிலேயே சிறியதாய் கொட்டகை அமைத்து அந்தப் பனியில் படுத்துக்கிடந்து இரவெல்லாம் சத்தம் கொடுத்து தகரத்தில் 'டண்டண...'வென மேளமடித்து மாடு விரட்டுவார்கள்.

பள்ளியில் படிக்கும் போது இந்த மாடுகள் எங்கள் கண்மாய் உள்வாய்க்குள் இருக்கும் வாழ்கின்றமாணிக்கம் வயலில் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது என கண்டதேவி ஆட்கள் வலை வைத்துப் பிடித்தார்கள். அந்த வருடத்துக்குப் பின் இன்று வரை அந்த வயல்கள் விளையவில்லை... இப்போது சிலர் இடங்களை வாங்கி தோட்டம் ஆக்கியிருக்கிறார்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற வர தேவதை இவள்.

தாழையூர் கூத்தாடி முத்துப்பெரியநாயகி அம்மன் திருக்கோயில்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்
தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். தாழையூர் கண்மாய் உள்பக்கத்தில்தான் எங்கள் ஊர் இருக்கிறது. கோவில் எங்களுக்கு அருகாமைதான்... கல்லூரியில் படிக்கும் போது தேர்வுக்காக படிக்கச் செல்வது இங்குதான்... ரொம்ப அமைதியாக இருக்கும்.
வெங்களூருக்குப் பிரியும் சாலை வலப்பக்கமாக வளையுமிடத்தில் ஒரு தோரணவாயில் இருக்கும் அதுவழி நேரே சென்றால் பத்துப்பதினைந்து அடி தூரத்தில் இடப்பக்கமாக ஆலமரத்தடியில் இருக்கும் தொட்டிக்கல் முனீஸ்வரரை சாலையில் நின்று தொழுது கண்மாயைக் கடக்கும் சிறு பாலத்தில் சென்றால் கோவிலை அடையலாம்.
சுற்றிலும் கண்மாய் சூழ இருக்கும் கோவிலுக்கு கண்மாய்க்குள்ளேயே சிறியதொரு ஊரணி... இரண்டே இரண்டு படித்துறைகள் மட்டுமே.
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பூக்குழி, காவடிகள் என அமர்க்களப்படும்... சுற்றுவட்டார மக்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.
உசுலாவுடைய அய்யனார் கோவிலான இங்கு ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நாடக நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கண்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் 'எங்கே போனாய்? யாருடன் போனாய்?' என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை. தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கிவிட, கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள் என்பது வழிவழியாகச் சொல்லப்படும் அம்மனுக்கான வரலாறு... அய்யனார் கோவில் குறித்தான வரலாறை யாரும் சொல்லவில்லை.
அய்யனாரும் அம்மனும் மிகப்பெரிய கருவறைக்குள் தனித்தனியே இருக்கும் இரண்டு சிறிய கருவறைகளுக்குள் இருக்கிறார்கள். அம்மன் தெற்குப் பார்க்கவும் அய்யனார் கிழக்குப் பார்க்கவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். அய்யனார் கோவிலாக இருந்தது அம்மன் அமர்ந்தவுடன் அம்மன் பெயரில் கூத்தாடி முத்துப்பெரியநாயகி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. நாங்களெல்லாம் 'கூத்தாடிச்சியம்மன்' என்றுதான் அழைப்போம்.
புதன் மற்றும் சனிக்கிழமை மாலையில் தேவகோட்டை சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி மற்ற ஊர் மக்களும் வந்து வழிபட்டுச் செல்வார்கள். அய்யனாருக்கு பாலாபிஷேகம் நடக்கும்... அதன் பின் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படும்.
பெரியநாயகியின் சிலை சந்தனமரத்தில் ஆனது என்பதால் அபிஷேகம் எல்லாம் இல்லை... விஷேச நாட்களில் சந்தன அலங்காரம் மட்டுமே... வாசனைத் திரவியங்களை அம்மன் சிலை மீது தெளிப்பார்கள்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
நாங்க படிக்கும் போது இருந்த கோவிலை மண்டபங்கள் கட்டி மாற்றியமைத்து விட்டார்கள். அதேபோல் அம்மனுக்கு எனக்கட்டப்பட்ட கல்கோவில், அம்மன் அய்யனார் கருவறையைவிட்டு வெளியில் வர மறுத்ததாலும் பெரும் மழையின் காரணமாக மண்மூடியதாலும் மண்ணுக்குள் தலைகாட்டியபடி இருக்கும்... அதெல்லாம் இப்போது முழுவதுமாக உடைத்து எடுத்து வெற்றிடமாக வைத்திருக்கிறார்கள். திருவிழாவின் போது மக்கள் தங்க கொட்டைகையும், அன்னதானக் கொட்டகையும் போடும் இடமாக இருக்கிறது. ராஜகோபுரம் இரண்டு கட்டியிருக்கிறார்கள். இன்னும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.
அம்மன் கம்பங்காட்டைச் சேர்ந்தவள் என்பதால் இப்பவும் திருவிழாவுக்கு கூத்து (நாடகம்) நடக்கும் போது முதலில் அம்மனின் வம்சாவழியினர் வந்து மேடையில் பாடல்பாடி ஆடியபின்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்கள். நாடகமேடை அம்மன் சன்னதிக்கு நேரே அமைக்கப்பட்டிருக்கிறது. நாடகம் நடக்கும் இரவில் அம்மனின் கருவறைக் கதவு திறந்தே இருக்கும். அந்த இரவு முழுவதும் அம்மன் நாடகத்தை ரசிக்கும் விதமாக கதவை அடைக்கக் கூடாது என்றும் அப்படி அடைத்தால் நாடகம் ஏதோ ஒரு பிரச்சினையால் பாதியிலேயே நின்று விடும் என்றும் சொல்வார்கள்.

இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது சிவன் ராத்திரி சமயத்தில் அதிகாலை மனைவி கும்பிடுதனம், மகன் அங்கப் பிரதட்சனம் செய்ததால் அங்கு சென்ற போது நாடகம் நடந்து கொண்டிருந்தது. கோவிலின் நுழைவு வாயில் பூட்டியிருந்தாலும் அம்மனின் கருவறை திறந்திருந்தது. விளக்குள் அணைத்தும் போடப்பட்டிருந்தது. ஆம் அம்மன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மன் தலையை இடது புறமாகச் சாய்த்துக் கூத்தாடும் நிலையில் காட்சி தருவாள்... அவளின் கழுத்தில் தூக்குக் கயிறும் இருக்கும்... பூ, மாலை மற்றும் சந்தன அலங்காரம் இல்லாத அம்மன் சிலையைப் பார்க்க நேர்ந்தால் இதைப் பார்க்கலாம்.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்தகன்னிகள் எழுவர் சிலை கோவில் மண்டபத்துக்குள் இருக்கிறது. பிள்ளையார், சின்னக் கருப்பர், பெரிய (பதினெட்டாம்படி) கருப்பர், பத்ர காளியம்மன், இசக்கியம்மன், உளிவீரன், சன்னாசி போன்றோருக்குத் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன.
கூத்தாடியம்மன் பல ஊர் மக்களுக்கு குலதெய்வமாக இருக்கிறாள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம் மற்றும் வெளிப்புறம்
மனதில் நிறைவேற வேண்டிய காரியத்தை நினைத்து அம்மனை வணங்கி கோவிலுக்குப் பின் இருக்கும் ஈச்சை மரத்தில் முடிச்சிப் போட்டு வைப்பார்கள். காரியம் நிறைவேறியதும் முடிச்சுகள் நிரம்பியிருக்கும் மரத்தில் ஏதாவது ஒரு முடிச்சை அவிழ்த்து விடவேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டி மரத்திலான சிறிய தொட்டியை இந்த மரத்தில் கட்டுவார்கள்.
கோவிலுக்கு மாடு நேர்ந்து விடுவார்கள்... நூற்றுக்கு மேலான மாடுகள் நிற்கின்றன.

இந்த கோவில் மனசுக்கு ரொம்ப நெருக்கமான கோவில்... எங்கம்மா பிறந்த வீட்டுக்கு குலதெய்வம் இது. அதே போல் மனைவியின் அம்மா பிறந்த வீட்டுக்கும் இதுதான் குலதெய்வம்.
அகல் மின்னிதழில் 'கூத்தாட வந்தவள் தெய்வமான கதை' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறேன். விருப்பமிருப்பின் கட்டுரையை எனது மனசு வலைப்பூவிலும்வாசிக்கலாம்.

நாளை : கொல்லங்குடி

நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

ஐயனாரும் அம்மனும் மனதில் நிறைகிறார்க்ள்..

புதிய செய்திகள்... பதிவு அருமை..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கோவிலைப் பற்றி அனுபவத்துடன் பகிர்ந்த விதமே சிறப்பு குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

சென்னை திருவொற்றியூரிலும் சிவன் கோவிலை இப்படிதான் அம்மன் பெயர் வாங்கிக்கொண்டார்.  வடிவுடை அம்மன் திருக்கோவில் என்று நினைக்கிறேன்.  அய்யனார் எங்கள் குலதெய்வம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள் குமார். எத்தனை கதைகள் நம் ஊர் கோவில்களில். இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.