மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 8

தினம் ஒரு கோவிலுக்கான தேடல் பத்து நாளில் முடிந்து விடவில்லை. இன்னும் தொடரத்தான் செய்கிறது. ஒன்பது நகரக்கோயில்கள் என்பது எங்க மாவட்டத்தில் சிறப்பு. அதில் பிள்ளையார்பட்டி ஒன்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். மாத்தூரில் எல்லாம் எத்தனை அற்புதமான சிற்பங்கள்... எல்லாம் எழுதும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்... தொடர முடிகிறதாவென.

கொல்லங்குடி எழுதியவுடன் முகநூல் நண்பர் மருத்துவர் சென்பாலன் அவர்கள் நீங்க போடுற ரூட்டைப் பார்த்தா அடுத்தது நாட்டரசன்கோட்டைதான் போல எனக் கேட்டிருந்தார். கொல்லங்குடி தாண்டிட்டா அப்புறம் அப்புடியே கண்ணாத்தாவை பார்த்திட வேண்டியதுதானே என்று சொல்லி அடுத்த நாள் எழுதியது இப்பதிவு.

இந்த அம்மனைத் தோண்டி எடுத்த இடையர்கள் அதன் பின் ஏன் இந்தக் கோவிலில் உரிமை பெறவில்லை என்பது தெரியவில்லை. கோவில் உரிமை தற்போது நகரத்தார் மற்றும் கள்ளர் சமூகத்திடம்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் களியாட்டத் திருவிழாவில் முக்கியச் சிறப்புப் பெறுபவர்கள் கள்ளர்களும் கணக்குப் பிள்ளைகளும்.

அதேபோல் நாட்டரசன் கோட்டை காட்டுப் பகுதியில் இடையர்களால் தோண்டி எடுக்கப்பட்ட கண்ணாத்தா தனக்கான இடத்தைக் காட்டியதுடன் ஆரம்பத்தில் பூஜை செய்த வலையர் குல மக்களைத் தவிர்த்து எனக்குப் பூஜை செய்ய பொன்னமராவதியில் இருக்கும் பாராசைவர்களான உவச்சர்களே உவந்தவர்கள் என்று சொன்னதும் ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அம்மன் உவச்சர் குலத்தில் உதித்தவளா..? அல்லது முற்காலத்தில் உவச்சர் இனம் அங்கு வாழ்ந்து பின்னர் இடம் மாறிச் சென்றார்களா என்பதும் தெரியவில்லை.

முகநூலில் பின்னூட்டமிட்ட ஒரு நண்பர் நான் என்னவோ வரலாறை திரித்து எழுதியது போல், பாதி உண்மை... பாதி பொய் சொல்லியிருக்கீங்க என்றும் வலையர்கள் கையில் இருந்த கோவிலைச் செட்டியாரும் கள்ளரும் பறித்துக் கொண்டதே உண்மையான நிகழ்வு என்று சொல்லியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை... நகரத்தார்கள் கோவில்களுக்கு நிறையச் செய்வார்கள்... இதை ஒன்பது நகரக்கோவில்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி சென்றவர்கள் கண் கூடாக பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நகரத்தார் கோவிலை அபகரித்தார்கள் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல... இதே வேறு சாதியினர் என்றால் கூட இருக்கலாம் என்று சொல்லியிருப்பேன்... இதில் அவரும் சாதீயத்துடனே பதில் சொல்லியிருப்பது தெரிந்ததால் உங்களுக்குத் தெரிந்த வரலாற்றைச் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் என்றேன்... அதுக்கு அப்புறம் ஆளைக்காணோம்.

இடையர்கள், வலையர்கள் என ஆரம்பத்தில் இருந்தவர்கள்கள் காணாமல் போகக் காரணம் என்ன என்பதை இந்தக் கோவில் குறித்த ஆராய்ச்சி செய்திருக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் சொன்னால்தான் உண்டு.  முன்பே சொன்னதுதான் உண்மையான வரலாறுகளை அறிந்து கொள்ள முடியாமல் ஒவ்வொரு சாதியும் மாற்றி மாற்றி எழுதுவதுடன் சாமியையும் அந்தச் சாதியில் பிறந்ததாய்ச் சொல்லி முடித்து விடுகிறார்கள்.

விரிவான தேடலில்தான் கண்ணாத்தாள் விழாவில் கள்ளர்களுக்கு முக்கிய உரிமை இருப்பதே தெரியவந்தது... அதே போல் ஆடு பலி கொடுப்பதும்... அதுவரை கண்ணாத்தாள் நகரத்தாரின் தெய்வம், அவர்களுக்கே அங்கு முக்கிய உரிமை என்றுதான் நினைத்திருந்தேன். இன்னும் விரிவான வரலாறு தெரிய வேண்டுமென்றால் அப்பகுதியில் இருக்கும் நண்பர்கள் யாருடனாவது விரிவாகப் பேச வேண்டும்... அப்படியானதொரு வாய்ப்பு அமையுமா என்பது தெரியவில்லை.

நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம் மற்றும் வெளிப்புறம்

சிவகங்கை (9 கி.மீ) - தேவகோட்டை (41.8 கி.மீ) சாலையில் இடது புறமாகப் பிரியும் கிளைச்சாலையில் 1.2 கி.மீ பயணித்தால் நாட்டரசன் கோட்டையை அடையலாம் இங்குதான் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமையான கண்ணாத்தாள் கோவில் இருக்கிறது.
நாட்டரசன் கோட்டையின் தென்புறத்தில் இருக்கும் பிரண்டக்குளம், அல்லூர் மற்றும் பனங்காடியிலிருந்து பால் மோர், தயிர் விற்க மக்கள் நாட்டரசன் கோட்டைக்கு மரங்கள் அடர்ந்த காட்டுப் பாதை வழி வருவது தினசரி நிகழ்வு. அப்படிப் பால் கொண்டு வந்த இடையர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் கல் இடறி பால் முழுவதும் பூமியில் கொட்டியது. இது ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்தது. அதுவும் இந்நிகழ்வு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு மட்டுமின்றி பலருக்கும் இதுபோல் தொடர்ந்து நிகழ்ந்ததுள்ளது.
இது எதனால் நிகழ்கிறது...? அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது..? என்பதை பூமியைத் தோண்டிப் பார்த்தால் என்ன என்று தங்களுக்குள் விவாதித்த இடையர்கள், ஒருநாள் அந்த இடத்தில் வெட்டினர். அப்போது அந்த இடத்தில் ஊற்றிய பாலெல்லாம் ரத்தமாய் மாறிவிட்டதைப் போல தண்ணீர் ஊற்றாய் ரத்தம் பீறிட்டது. இது ஏதோ சாதாரணமாய் நிகழும் நிகழ்வல்ல... தெய்வத்தின் செயல் என்பதை உணர்ந்தனர். இந்த விபரம் அறிந்து அங்கு வந்த அம்பலக்காரரான மலையரசன் என்பவர் அந்த இடத்தில் முழுவதும் தோண்டிப் பார்க்கச் சொன்னார்.
அப்படித் தோண்டும் போது ஒருவருக்குக் கடப்பாறையின் நுனிபட்டு கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர, மற்றவர்கள் அவரை விலகிக் கொள் நாங்கள் வெட்டுகிறோம் என்ற போதும் நானே வெட்டுகிறேன் என மேலும் ஆழமாய் வெட்ட... அங்கே அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். சிலை மேலே தூக்கப்பட, அவள் மேலே வந்த மறுநொடி கண்ணில் அடிபட்டவருக்குக் காயம் சரியானது. அதனாலேயே 'கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' என எல்லோராலும் புகழப்பட்டு பின்னர் கண்ணுடைய நாயகி (கண்ணாத்தாள்) ஆனாள்.
தோண்டியெடுத்த சிலையை இடையர்கள் நாயன்மார்குளம் என்னும் இடம்வரை கொண்டு வந்து அதற்கு மேல் கொண்டு செல்ல முடியாமல் வைத்துவிட்டதாகவும், கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருந்த அம்மன், எனக்கு களியாட்டத் திருவிழா நடத்திப் பலி கொடுத்தால் நான் வடக்கு நோக்கி நகர்வேன் என்று சொன்னதாகவும், பெண் வீடு, மாப்பிள்ளை வீடு தனித்தனி குடில்கள் அமைத்து ஒரு மாத காலம் களியாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதில் கள்ளர் வகையறா பெண் வீட்டாராகவும் கணக்குப்பிள்ளை வகையறா மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தி, நாயன்மார்கள் சார்பாக அம்பாளுக்கு 1500 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டதாகவும் அதில் 1499 ஆடுகள் வெட்டும் வரை ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை என்றும் இறுதி ஆட்டை வெட்டிய போதுதான் ரத்தம் தெறித்து மண்ணில் விழுந்ததாகவும் அதன் பின்னரே அம்மன் அங்கிருந்து கிளம்பியதாகவும் வரலாறு சொல்கிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், வெளிப்புறம் மற்றும் தண்ணீர்
மேலும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அம்மன் வீரகண்டான் ஊரணி என்னும் பகுதியில் இருந்த சிவன் கோவிலில் தெற்குப் பார்க்க வைக்கப்பட்டதாம். மறுநாள் மக்கள் சென்று பார்த்தபோது அம்மன் வடக்கு நோக்கித் திரும்பி அமர்ந்திருந்தாளாம். அதன் பின் அங்கிருந்து வடக்கு நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போது ஆலயம் அமைந்திருக்கும் இடம் வந்ததும் இதுதான் என் வீடு... இங்கு வைத்து வழிபடுங்கள் என்ற அசரீரி கேட்டதாகவும் அதன்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டதாகவும், ஆரம்பத்தில் வலையர் குல மக்கள்தான் பூஜை செய்ததாகவும், அதன் பிறகு எனக்குப் பூஜை செய்ய உகந்தவர்கள் பொன்னமராவதியில் இருக்கும் பாரசைவர்களாகிய உவச்சர் குல மக்கள் என்று தனக்குப் பூஜை செய்யும் வலையரின் கனவில் சொன்னதாகவும். அதன்படியே அவர்கள் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அன்று முதல் இன்று வரை அவர்களே பூஜைப் பணியைத் தொடர்வதாகவும் வரலாறு கூறுகிறது.
கண்ணாத்தாள் எட்டுத் திருக்கரங்களுடன் சண்டன் என்னும் அசுரனைத் தன் இடது காலில் போட்டு மிதித்தபடி, வலது காலை மடக்கி ஒய்யாரமாக அமர்ந்தபடி சுயம்புவாய் காட்சி தருகிறாள். வடக்குப் பார்க்க அமர்ந்து அருளாசி புரிவதால் 'வடக்கு வாய்ச்செல்வி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. (வாய் என்பது வாசல் எனப் பொருள்படும்). இந்த ஊருக்கு 'களவழிநாடு' என்ற பெயரும் உண்டு.
அம்மனின் கைகளில் சூலம், உடுக்கை, குருவாள், கேடயம், கிளி, கபாலம் போன்றவை உள்ளன. அம்மன் சன்னதிக்கு நேரெதிரே சிம்ம வாகனமும் பலிபீடமும் உள்ளது.
கோவில் பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், வீரபத்திரர், பைரவர் சன்னதிகள் இருக்கின்றன.
களியாட்டத் திருவிழா என்பது அம்மனுக்கு மிகவும் பிடித்த திருவிழா. கும்பகோணம் மகாமகம் போல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திருவிழா மிகச் சிறப்பாக, நாற்பத்தெட்டு நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுகிறது.
மேலும் சிவாச்சாரியர்கள், வைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் வைகாசிப் பிரமோத்ஸவம் நடத்தப்படுகிறது. அப்போது ஆகம விதிப்படி கொடியேற்றி காப்புக் கட்டுகிறார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் கோலாட்டம், தை மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் தைலக்காப்பு, ஆடி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் முளைக்கொட்டுத் திருவிழா போன்றவை முக்கியமானவை. முளைக்கொட்டுத் திருவிழாவில் (எங்க பக்கம் செவ்வாய் திருவிழா என்று சொல்லப்படும்) ஒன்பது வெள்ளி ஓட்டிலும் ஒரு தங்க ஓட்டிலும் முளைப்பாரி போட்டு வளர்க்கப்படும். திருவிழா நாளான ஆடிப் பௌர்ணமி அன்று காலையில் தங்க முளைப்பாரியைத் தன் தலையில் சுமந்து அம்மன் திருவீதி உலா வருவாள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’Andalvastu’ எனச்சொல்லும் உரை
இதேபோல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது ஒன்பது நாட்கள் கொலு வீற்றிருக்கும் அம்மன் பத்தாம் நாளான விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருவாள்.
நவராத்திரி நாட்களில் லட்சார்ச்சனை நடைபெறும்.
திருக்கார்த்திகை அன்று அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளிச் சொக்கப்பனை கொளுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கண் தெரியாதவர்கள் இக்கோவிலில் நாற்பத்தெட்டு நாள் தங்கி, விரதமிருந்து தினமும் அம்மனை வணங்கி அபிஷேகத் தீர்த்தத்தைக் கண்களில் விட்டுவர பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கண்ணாத்தாளிடம் குழந்தை வரம் வேண்டி கரும்புத் தொட்டில் கட்டும் பக்தர்கள், அவள் அருளால் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்று பெயர் வைப்பது இப்பகுதியில் வழக்கத்தில் இருக்கிறது.
கண்ணாத்தாளைப் பாட்டுடைத் தலைவியாக்கி சைவநெறி முத்துநாயகம் என்னும் முத்துக்குட்டிப் புலவரால் எழுதப்பட்ட 'கண்ணுடையம்மன் பள்' என்னும் நூலில் நாட்டரசன் கோட்டையை தென்பனசையூர் என்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களை வடகலை வேள்வி நாடென்றும் சொல்லியிருக்கிறார். இந்நூல் 1750 களில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. ஏட்டுச் சுவடியாய் இருந்ததை 1938-ல் செட்டியார்கள் நூலாக்கினார்கள். இதுவே இதன் முதல் பதிப்பு. ஏழூர் நகரத்தார் என்னும் செட்டியார்களைப் பற்றிப் பேசும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் கண்ணாத்தாளை கரு மறத்தி என்றும் மாணிக்கச் செட்டிச்சி என்றும் தெய்வக் கள்ளிச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முத்துக்குட்டி.
அம்மன் சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் போன்றவை மன்னர் பரம்பரையினராலும் அலங்கார மண்டபம், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உயரமான ராஜகோபுரம் மற்றும் சொக்காட்டாஞ்சாரி என்னும் கர்ணக்கால் மண்டபம் போன்றவை நகரத்தாரால் எழுப்பப்பட்டவை.
கோவிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் உள்ளது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் உட்புறம்
களியாட்டத் திருவிழா குறித்த முழு விபரம் அறிய நாட்டரசன் கோட்டை நகரத்தார் நலச் சங்கம் சென்னை என்னும் தளத்திலோ அல்லது அப்பு! இது காரைக்குடிப்பு! என்னும் முகநூல் பக்கத்திலோ சென்று வாசிக்கலாம்... இந்தப் பதிவுகளில் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

நாளை கோவிலூர்...

நன்றி: படங்கள் இணையத்திலிருந்து.
-----

இன்று மாலை இந்திய நேரம் 7.30 மணியளவில் 'எதிர்சேவை' குறித்த அறிமுகம் ஜூம் வழி நிகழ்கிறது. முடிந்தவர்கள் கலந்து கொண்டால் மனசு மகிழும். நிகழ்வில் கலந்து கொள்ள ZOOM MEETING - USER NAME & PASSWORD இணைத்திருக்கும் போட்டோவில் இருக்கிறது. நன்றி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், நித்யா குமார், Sasikumar Ssk மற்றும் Sudarvizhi Sethupathi Raja உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உரை
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நேரம் இருக்கும் போது நண்பர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்...

களியாட்டத் திருவிழா பற்றிய சிறப்பை இணைப்பில் அறிந்தேன்... மற்றொரு இணைப்பை முகநூலில் வாசிக்க வேண்டும்...

மாதேவி சொன்னது…

'நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி 'ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் வியப்புதான்.

துரை செல்வராஜூ சொன்னது…

நாட்டரசன் கோட்டையும் தரிசனம் செய்ததில்லை..

கண்ணாத்தாள் கருணை செய்ய வேண்டும்....

ஸ்ரீராம். சொன்னது…

இங்கெல்லாம் சென்றதில்லை.  எப்போது கொடுத்து வைத்திருக்கிறதோ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நாட்டரசன்கோட்டை.... கண்ணாத்தாள் கதை நன்று.

திருவிழா சமயத்தில் இங்கே சென்று வர ஆசை வந்திருக்கிறது. அவள் அருள் கிடைத்தால் வாய்ப்பு கிடைக்கும்! அவள் அருள் புரியட்டும்.

தொடரட்டும் கோவில் உலா.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

படித்தவுடன் அங்கு செல்ல வேண்டும் என்ற மன எழுச்சி வருகிறது சிறப்பு வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இக்கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை.செல்லும் ஆர்வத்தினை உண்டாக்கியது இப்பதிவு.

ஆ.மீனாட்சி சுந்தரம் சொன்னது…

1499 ஆடுகள் வெட்டியதில் இரத்தம் வரவில்லையாம் நம்பும்படி இல்லை

ஆ.மீனாட்சி சுந்தரம் சொன்னது…

தோண்டியவன் எடுத்து வந்தவன் இவர்களை எனக்கு நீ பூஜை செய்ய வேண்டாம் என சாமி சொல்லியதா. யார் புறம் தள்ளியது எப்படி உரிமை போனது

ஆ.மீனாட்சி சுந்தரம் சொன்னது…

யார் கனவில் சொல்லி பூசாரி மாறினார்கள் என்னும் விடை தெரியாது. தோண்டி எடுத்த ஊரில் பிள்ளை கள்ளர் கிடையாது அவர்கள் எப்படி இத்தனை உரிமை பெற்றனர். கோவில் பழமை 500முதல் 1000 என்று சொல்லும் அனைவரும் மன்னரிடம் சொன்னதாக கூறியுள்ளனர் எந்த மன்னர் என யாரும் சொல்லவில்லை 250 ஆண்டு காலமே சிவகங்கை மன்னர் 300 க்கு முன் சேதுபதி 500 ஆண்டு என்றால் நாயக்கர் (அ) பாண்டியர்