மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 மே, 2020

மனசு பேசுகிறது : திருமண நாள்

காலம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது... பள்ளிச் சிறுவனாய்... கல்லூரி மாணவனாய்... சுற்றித் திரிந்த நாட்களையெல்லாம் கடந்து உனக்கும் ஒரு குடும்பமாகிப் போச்சு... இனி சூதனமாப் பொழச்சுக்க எனக் காலம் சொல்லி பதினேழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

திரும்பிப் பார்த்தால் இப்போதுதான் திருமணமானது போல் இருக்கிறது... நிகழ்காலத்தில் பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறார் எங்கள் வாழ்வின் வசந்தமாய் வந்த மகள் ஸ்ருதி... இந்தப் பதினேழு வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள் வாழ்வில்...

வாழ்க்கை மீதான கனவுகளை எல்லாம் பொடிப்பொடியாக்கி நகரும் வாழ்வில்... எல்லாப் பிரச்சினைகளையும் தன் தலையில் தூக்கி வைத்து, அதை எப்படிச் சமாளிக்கலாம் என யோசித்து, அதன்படி நடந்து இதுவரை தான் முன்னின்று என்னை நடத்திச் செல்லும் என் மனைவிக்கு நிகர் அவரே.

வீடு கட்ட ஆரம்பிக்கும் வரை மகிழ்வான வாழ்வுதான்... அதைவிட அமீரகம் வருவதற்கு முன் கஷ்டமோ நஷ்டமோ தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என வாழ்க்கை மகிழ்வாகவே நகர்ந்தது. அந்த வாழ்க்கைக்குள் நாங்கள் மட்டுமே... சுக, துக்கம், மகிழ்ச்சி, வேதனை என எல்லாமே எங்களைச் சுற்றித்தான்... உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாய்க் கழிந்த காலங்கள் அவை.

வீடு கட்டி... அதன் பின்னான கடன்களின் பின்னே ஓட ஆரம்பித்து இன்னும் நிற்கவில்லை... அதன் காரணமாக நிறையச் சிக்கல்களில் மாட்டிச் சின்னாபின்னமாகிய போதும் என்னைத் தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் எழுத்தை விட எங்கள் வாழ்வைத் தூக்கிச் சுமக்கும் என் மனைவியே நான் எந்த ஒரு தவறான முடிவுக்குப் பின்னாலும் நகராமல் கரம் கோர்த்து நிற்கிறார்.

சின்னச் சின்ன சண்டைகள்... சில நாட்கள் பேசாதிருத்தல்... எல்லாம் இழந்து நிற்கிறேன் என்ற புலம்பல்கள் எல்லாமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் கொண்ட அன்பில்... அந்த நேசத்தில் எப்போதும் என்னைவிட உயர்ந்தே நிற்பார்... நிற்கிறார்.

எல்லாரும் வேண்டும்... எல்லாருக்கும் வேலை பார்க்கணும் என்ற எண்ணம் கொண்டிருந்த போதும் உறவுகள் ஏனோ உதாசீனம் செய்வதுடன் தங்கள் வேலைக்கு மட்டுமே பயன்படுத்துவதைப் பார்த்துப் பலமுறை நீ எதுக்கு அங்க போய் வேலை பாக்குறே... அவங்களால முடியாதாமா... உன்னையத்தான் அவங்க ஒதுக்கித்தானே பாக்கிறாங்க என்றால் அவங்க எப்படியோ பாத்துட்டுப் போகட்டும்... நான் அவங்களை எப்பவும் போலத்தான் பார்க்கிறேன் என அடுத்த நாளும் அங்கு போய் ஏதாவது பார்த்துக் கொடுத்துட்டுத்தான் வருவார்... எல்லார் வேலைக்கும் வண்டி எடுத்துக் கொண்டு ஓடுவார். வண்டியில் அலைவதை ஒருபோதும் அவர்களிடம் வருத்தமுடன் பகிர்ந்து கொள்ளமாட்டார்... ஆனால் என்னிடம் எல்லாத்தையும் இறக்கி வைக்கத் தவறமாட்டார்.

என்னைப் போல் எதைப்பற்றியும் யோசிக்காத, எழுத்து ஒன்றே இலக்கென அலையும் ஜென்மத்துக்கு இப்படியானதொரு மனைவி கிடைக்க இறைவன் அருள் இருந்திருக்க வேண்டும் அல்லது கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வரும் நாட்கள் நமக்கான நாட்களாய் இருக்கும் என்ற எண்ணத்துடனே நகர்ந்து கொண்டிருந்தாலும்... மீளாத பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன... எப்போது தீரும் எனத் தெரியாது ஆனாலும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்... நம்பிக்கைதானே வாழ்க்கை.

ஏழேழு ஜென்மங்களுக்கும் இவரே எனக்கு மனைவியாக வேண்டும்... வாழும் வாழ்வில் இறுதிவரை இதே அன்போடு பயணிக்க வேண்டும்... பணக்கார, படோடபத்துடன் வாழ நினைக்கவில்லை ஆனால் கடனில்லாத, கண்ணீரில்லாத வாழ்க்கை இனி வரும் காலங்களில் எங்களுக்கு நிலைக்க வேண்டும்.

மே-04/2003-ல் கரம் பிடித்தோம்... இன்று வரை அன்போடு பயணிக்கிறோம்... இனியும் பயணிப்போம்... இறுதிவரை அன்போடு தொடர்வோம் வாழ்வை...

ஆம் இன்று எங்களின் திருமணநாள்... 

உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி.


-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். உங்கள் பிரச்சனைகள் தீரட்டும்.

என் திருமண நாளும் மே மாதத்தில் தான்! :)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே

G.M Balasubramaniam சொன்னது…

திருமண் நல் வாழ்த்துகள் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மகிழ்வுடன் நீடூழி வாழ்க

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய திருமணநாள் வாழ்த்துகள் குமார்...

அருமையான பாடல்... வாழ்க வளத்துடன்...

எல் கே சொன்னது…

வாழ்த்துகள்

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நல்வாழ்த்துகளுடன்
துரை செல்வராஜூ...

இராய செல்லப்பா சொன்னது…

என்றென்றும் இனிதான இல்லற வாழ்வு நிறைவேறிட எந்தன் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

மனைவியை மதித்து, அவருக்கு மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கும் உங்கள் வாழ்க்கை நிச்சயம் என்றைக்கும் உயர்ந்ததாகவே இருக்கும்.
உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!

மாதேவி சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உங்கள் மனைவிக்கு வாழ்த்துகள். வாழ்க இனிதாக.