மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 மே, 2020

தப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)

ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த காலக்கெடு. ஒருவர் இரண்டு கதைகள் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தார். ஒரு கதை எழுதுவதே கடினம் இதில் இரண்டு எங்கிட்டு எழுத என்று நினைத்து பார்வையாளனாய் நிற்கிறேன் என்றதும் அதெல்லாம் வேண்டாம் நீ எழுது என்றார். வெள்ளி விடுமுறை என்பதாலும் போட்டிக்கான இறுதிநாள் என்பதாலும் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அமர்ந்து எழுதி, தலைப்பைக் கூட பதியாமல் அப்படியே முகநூலில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

அந்தக் கதை இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறது. சிறுகதைப் போட்டிகளுக்கு கதை அனுப்புவதை கொடுக்கப்படும் பரிசுக்காக என நான் எப்போதும் நினைத்து அனுப்புவதே இல்லை... அப்படியாகினும் ஒரு கதை எழுதலாமே என்பதாலும் நம் கதை நடுவரின் கவனத்தைப் பெறுகிறதா என்று பார்க்க நினைப்பதாலும் மட்டுமே கலந்து கொள்வேன். பெரும்பாலும் போட்டிக்கு அனுப்பும் கதைகள் அதற்கான இடத்தைப் பிடித்திருப்பதில் கிடைக்கும் சந்தோஷம் அலாதிதானே.

கணேஷ் பாலா அண்ணன் இதுவரை நடத்திய 3 படத்துக்கான போட்டியில் இரண்டு முறை பரிசு பெற்றிருக்கிறேன். திடீர் போட்டியை நடத்திய கணேஷ் பாலா அண்ணனுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்த எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களுக்கும் நன்றி.

தப்புக்கணக்கு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வரைதல்

தவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சர்வர் சுந்தரேசன், அறைக்குள் கண்ட காட்சியால் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.

கட்டிலில் சாய்ந்திருந்த சாலமனின் கை டீப்பாயில் இருந்த தலையின் மீது இருந்தது. தலையின் அடியில் ரத்தமாய் இருந்தது.

பின்புறம் இருந்து பார்த்ததால் அது யார் தலை என்பது தெரியவில்லை.

ஒரு கொலையைச் செய்து விட்டு இந்தாளு எப்படி இப்படிச் சர்வசாதாரணமாக உக்காந்திருக்கிறான். அதுவும் எதுவும் நடக்காதது போல காபி வேறு கொண்டு வரச்சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறான். இப்படியே திரும்பிப் போய்விடலாமா என யோசித்தான்.

"எஸ்... சுந்தரேசன் வாங்க... என்ன அங்கயே நின்னுட்டீங்க போல..." திரும்பாமல் கேட்டான்.

"சா.... சார்..."

"அட கதவை சாத்திட்டு வாங்க... தலைவலியா இருக்குன்னு காபி கேட்டா... கொண்டாந்து வச்சிக்கிட்டு நிக்கிறீங்க... ஆறிடப்போகுதுங்க..." சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அது பி.எஸ். வீரப்பாவின் சிரிப்பைப் போல் இருந்தது. அந்தச் சிரிப்பு இன்னும் பயத்தைக் கொடுத்தது.

மெல்ல அவனருகில் வந்து காபியை நீட்டினான் சுந்தரேசன்... ஏனோ அந்தத் தலையைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

காபியை வாங்கி டீப்பாயில் தலையின் அருகே வைத்துவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு எதிரே கிடந்த நாற்காலியைக் காட்டி 'உக்காருங்க' என்றான் சாலமன்.

"இ... இ... இல்லை சார்... எ...ன..க்...கு... வே... வேலை இருக்கு..."

"அட இருங்க... நான் கூப்பிட்டிருக்கேன்னு தெரியும்ல்ல... அப்புறம் என்ன... இருங்க போகலாம்... என்றபடி டீப்பாயின் மீதிருந்த தலையில் தட்டினான்.

"சா... சார்.... நான் புள்ள குட்டிக்காரன்... என்னைய விட்டுருங்க சார்.... நான் இங்க வரலை... உங்ககிட்ட பேசலை... நான் ஒரு வாரம் லீவு போட்டுட்டு ஊருக்குப் பொயிட்டு வாரேன் சார்..."

சாலமன் சிரித்தான்... "இப்ப என்னாகிப் போச்சுன்னு ஏதேதோ புலம்புறீங்க..?"

"என்ன சார் ஆகணும்...? ஒருத்தனை வெட்டிக் கொன்னதும் இல்லாமத் தலையையும் கொண்டாந்து வச்சிக்கிட்டு சாவகாசமாப் படுத்துக்கிட்டு அதுமேல கையை வச்சிக்கிட்டு உக்காந்திருக்கீங்க...'

சாலமன் சிரித்தபடி, "வெட்டி எடுத்த தலை கூட கொஞ்ச நேரம் விளையாடலைன்னா எப்படி... தூக்கி வீசிட்டுப் போறதுக்கா தனியா வெட்டி எடுத்தாந்தேன்... கை வச்சிக்க நல்ல ஸ்டாண்ட்டா... ஸ்டைலா இருக்குல்ல... " என்றவன் சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து நசுக்கி விட்டுக் காபியை எடுத்துக் கொண்டான்.

சுந்தரேசன் தலையை நிமிராமல் பதட்டமாய் நின்றிருந்தான்.

"ஆமா சுந்தரேசா... நீங்க இந்த அறைக்கு வந்தது சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்காதா என்ன... ஊருக்குப் போனா மட்டும் தப்பிச்சிருவீங்களா...?" 

"ஏன் சார் இப்படி... நீங்க கொலையெல்லாம் செய்வீங்களா...?"

"அதான் செஞ்சிட்டேனே..."

"என்னை எதுக்கு சார்.... ப்ளீஸ்... நான் போறேன் சார்..."

"இருங்க... நான் எப்படிக் கொலை பண்ணுனேன்னு யார்க்கிட்டயாச்சும் சொல்லணும்ன்னு தோணுச்சு... இங்க நீங்கதானே எனக்கு ரொம்பத் தெரிந்தவர்.... அதான் காபி கொண்டு வரச் சொன்னேன்... கொலை எப்படிப் பண்ணினேன்னு கேட்டுட்டுப் போங்க..."

"வே... வேண்டாம் சார்.... நான் போறேன்...."

"என்ன அவசரம்... ஆமா தலையவே பார்க்க மாட்டேங்கிறீங்க... யாரு தலைன்னு பாருங்க...."

"வே... வேண்டாம் சார்... வெட்டுப்பட்ட தலையைப் பாக்க என்னால முடியாது...."

"அட பாருங்கன்னா..."

சுந்தரேசன் தலை தூக்கி மெல்ல அந்தத் தலையைப் பார்த்தார்...

"சா... சா...ர்.... இ...இது.... நடிகர் ராம்....லக்ஷ்...மண்... தானே..."

"எஸ்... அவனே தான்...."

"என்ன... சார்... இது... அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு சொல்ற நடிகரோட தலையை வெட்டி எடுத்தாந்து வச்சிக்கிட்டு இருக்கீங்க..."

"என்னோட வளர்ச்சிக்கு இவன்தான் முதல் எதிரி... அதான் கொன்னுட்டேன்..."

"சார்... அநியாயம் சார்... தொழில் போட்டி கொலை வரைக்கும் போகுமா...?" சுந்தரேசன் சற்றே சப்தமாகக் கேட்டான்.

"அட... பயமெல்லாம் போயிருச்சு போல... ம்... என்னோட வளர்ச்சிக்கு மட்டுமில்ல... என்னோட ஆசைகளுக்கும் இவன்தான் எதிரா இருந்தான்... அதான் வெட்டிக் கொண்டாந்துட்டேன்..."

"உங்க திறமையால நீங்க முன்னுக்கு வரணும் சார்... சினிமாவுல ரெண்டு பேரும் ரெண்டு துருவம்... நீங்களும் முன்னணியிலதான் இருக்கீங்க... என்ன அவருக்கு நண்டு சிண்டெல்லாம் ரசிகரா இருக்குக... அதுனால அவர் முதல் இடத்துல இருக்கார்... எப்படி நடிச்சாலும் விசிலடிக்க கூட்டம் இருக்கு... உங்களுக்குன்னும் தனி ரசிகர் வட்டம் இருக்குல்ல... அப்புறம் எதுக்கு சார் இதெல்லாம்...? பாவம் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகலையே சார்..."

"ம்... அந்தக் கல்யாணம்தான் என்னைக் கொலைகாரனா மாத்துச்சு..."

"நீங்க நடிகை வானதியை லவ் பண்றதாச் சொன்னாங்க... ஆனா அவங்க அவரைத்தான் விரும்புறேன்னு பேட்டி எல்லாம் கொடுத்தாங்க... திருப்பதியில கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க... அப்படியிருக்க... இது பாவமில்லையா சார்...."

"இவனில்லைன்னா அவ என்னைய கல்யாணம் பண்ணியிருப்பால்ல..."

"அநியாயம் சார்... போட்டி பொறாமையில ஒருத்தரை கொன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுத்திட்டீங்களே..."

"ஹா... ஹா... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிட்டேன்..." என்றபடி தலையைத் தூக்கி சுந்தரேசனை நோக்கி வீசினான்.

"ஆத்தி... ஐயோ..." என்றபடி சுந்தரேசன் விலக, தலை சேரில் விழுந்து அப்படியே  தரையில் விழுந்து உருண்டது.

"அதை எடுங்க..."

"வே... வேண்டாம் சார்... நா.... போறேன்...."

"எடுத்துத் தந்துட்டுப் போங்க..."

"ஆத்தாடி... நான் மாட்டேன்..."

"அட சும்மா எடுங்க... அது உண்மையான தலை மாதிரி இருக்கிற பிளாஸ்ட்டிக் பொம்மைத்தலைதான்..."

"சா...ர்..." என்றவன் பயத்தோடு எடுக்காமல் நின்றான்.

"ஆமா சுந்தரேசா... ராம்லக்மனோட நான் நானேதான் படத்துல அவனுக்குச் சிலை வச்சிருப்பாங்களே... படம் பாத்தியா... அந்தச் சிலைக்காக செய்த தலையில இதுவும் ஒண்ணு.... அந்தப் படத்தோட இயக்குநர் சசிதரன்தான் இப்ப என்னோட படத்தோட இயக்குநர்... அவர்கிட்ட இந்தத் தலையை வாங்கினேன்... எனக்கு இவன் மேல கோபம் வரும்போதெல்லாம் எடுத்து வச்சி நாலு குத்துக் குத்துவேன்... உங்கிட்ட காபி கொண்டு வரச்சொல்லிட்டு கொஞ்சம் விளையாடலாம்ன்னு தோணுச்சு... அதான்... தலையை வச்சி... கொஞ்சமா சில்லி சாஸை சுத்தி ஊத்தி... நீயும் பயந்து நடுங்கி..."

"உண்மையான தலை மாதிரியே இருக்கு சார்... ஏன் சார் இந்த மாதிரி... பயத்துல செத்திருப்பேன் சார்..."

சாலமன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி, "ஒருத்தனை எங்கயோ வச்சி வெட்டிட்டுத் தலையை எடுத்துக்கிட்டு எதுக்கு இங்க வரணும்... அதுவும் ரத்தத்தோட...வெட்டுப்பட்ட தலையை பக்கத்துல வச்சிக்கிட்டு அதுல கை வச்சிக்கிட்டு ரொம்பக் கேசுவலாப் படுத்துக்கிட்டு ஒருத்தன் கதவையும் திறந்து வச்சிக்கிட்டு, காபியும் கொண்டு வரச் சொல்வானா என்ன... அதுவும் தலையைச் சுற்றி காயாத ரத்தம் வேற... எதையும் யோசிக்காம எத்தனை பதட்டம்... நான் புள்ளகுட்டிக்காரன்னு சென்டிமெண்ட் வேற.... நல்ல ஆளுய்யா நீயி...." சிரித்தான்.

"அடப் போங்க சார்... மனுசனை என்னமாப் பயமுறுத்திட்டீங்க... ரெண்டு நாளைக்கு நான் லீவைப் போட்டுட்டு ஊருக்குப் போறேன் சார்... ராகவனை உங்க ரூம் பார்க்கச் சொல்றேன்..." என்றபடி கிளம்பினான் சுந்தரரேசன்.

"நான் உன்னைப் பயமுறுத்துனேன்னு சொல்லிக்கிட்டுத் திரியாதே..."

மறுநாள்...

மனைவி கொடுத்த காபியை வாங்கிக் குடித்தபடி டிவியை ஆன் பண்ணினான் சுந்தரேசன்.

'நடிகர் ராம்லக்ஷ்மன் தனது பண்ணை வீட்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரின் உடல் மட்டுமே கிடைத்திருக்கிறது. தலையைக் கொலையாளி எடுத்துப் போயிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது... தனிப்போலீஸ் படை தலையைத் தேடிக் கொண்டிருக்கிறது' என செய்தி வாசிக்கும் பெண் சொல்லிக் கொண்டே போக...

டீப்பாயின் மீதிருந்த தலை அவன் மனசுக்குள் மெல்ல எட்டிப்பார்க்க..

அப்ப அது உண்மையான தலையா... இல்லை பிளாஸ்ட்டிக்தானா... என்ற யோசனையோடு மயங்கிச் சரித்தான்.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

கதை செம...!

Yarlpavanan சொன்னது…

சிறந்த முயற்சி
பாராட்டுகள்

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார்.  கதை அங்கே பேஸ்புக்கிலேயே படித்திருந்தேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். நல்லதொரு முயற்சி. போட்டிகள் நடத்தும் நண்பர் பாலாவிற்கும் பாராட்டுகள்.

மாதேவி சொன்னது…

வாழ்த்துகள். இறுதியில் பக்....பக்.

கோமதி அரசு சொன்னது…

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
கதை நன்றாக இருக்கிறது.

Geetha Sambasivam சொன்னது…

முகநூலிலும் படித்தேன். அருமையான கதை. பரிசு பெற்றதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நல்ல திருப்பம். விறுவிறுப்பான கதை. வாழ்த்துகள். 

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துகள் குமார்.