மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 12 டிசம்பர், 2019

சினிமா : அம்பிலி (மலையாளம்)

ம்பிலி...

கடவுளின் குழந்தை இவன்.

அதென்ன கடவுளின் குழந்தை..?

எத்தனை வயதானாலும் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைத்தனத்துடன் வாழ்பவர்களை... இதயத்தில் இருந்து வாழ்பவர்களை... பிற உயிர்க்குத் தீங்கு நினைக்காமல் வாழ்பவர்களை... குறிப்பாக வெளி உலகம் பற்றி அறியாமல் வாழ்பவர்களை...  வேறு எப்படி அழைக்க முடியும்..? அவர்கள் கடவுளின் குழந்தைகள்தான். மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் என அவர்களைச் சொல்லும் நாம்தான் துரோகம், குரோதம், வன்மம், போட்டி, பொறாமை என எல்லாம் சுமந்து திரியும் மூளை வளர்ச்சியற்றவர்கள். அவர்கள் இது எதுவும் அறியாத வளர்ந்த மனிதர்கள்.

Image result for ambili movie images hd

அப்படிப்பட்ட ஒரு குழந்தைதான் அம்பிலி... அப்பா, அம்மா இருவரும் இல்லாமல்... உறவென்று யாருமற்ற நிலையில் தனியே ஒரு வீட்டில் இருக்கும் குழந்தை மனம் கொண்ட இளைஞன் அவன்.  அவன் உலகம் வித்தியாசமானது... சிறு பிள்ளையாய் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான்... ஸ்கைப்பில் வெளியூரில் தங்கிப் படிக்கும் தோழியிடம் மணிக்கணக்கில் பேசுகிறான்... தனக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருக்கும் கடைகளின் வாடகை வாங்கச் செல்கிறான்... மொத்தத்தில் கட்டப்பனை என்னும் இடத்தில் இருக்கும் இயற்கை அழகோடு ஒன்றி பேரழகனாய் வாழ்கிறான்.

தன் வேலை மட்டுமின்றி தனக்குப் பிடித்தவர்களின் வீட்டில் சொல்லும் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொடுக்கிறான். அவனுக்கு அந்த வேலை கடினமாக எல்லாம் தெரிவதில்லை... அந்த மனிதர்களின் அன்பு மட்டுமே தெரிகிறது... எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவர்களைப் பாசத்தோடு அணுகுகிறான்... ஆனால் அவர்களில் சிலரோ பாசாங்கோடு அவனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் புரிந்து கொண்டானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

இப்படிப்பட்ட மனிதர்களைத்தானே இந்த உலகம் ஏமாற்ற நினைக்கும்..? அவர்கள் ஏமாற்றுவதில் நமக்கொரு அல்ப சந்தோசம் வரும்தானே..? அப்படித்தான் வாடகை வாங்கச் செல்லும் போது கடை வைத்திருப்பவர்கள் வாடகை கேட்டுப் போகும் போது, 'அம்பிலி உன்னோட கவிதை வந்திருக்கு பார்...?', 'உனக்கு இந்தச் சட்டை நல்லாயிருக்கா பார்...?' என்றெல்லாம் சொல்லி வாடகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்... அவனும் அதை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நினைப்போடு அங்கிருந்து நகர்கிறான்... அவர்களிடம் வாடகையைப் பெற்றானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

தோழி டீனா குரியனின் மனசுக்குள் அவன் காதலனாகத்தான் இருக்கிறான்... அவனுக்குள்ளும் அப்படித்தான். ஊருக்கு வருபவள் அம்பிலியிடம் இன்னும் நெருக்கமாகிறாள்... அவனைத்தான் கட்டுவேன் என வீட்டில் சொல்லும் போது அவளைப் பெற்றவர்கள் அதை ஏற்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை... காரணம் இரண்டு குடும்பத்துக்குமான முன்கதையும் அவர்களுக்கான நெருக்கமும் காஷ்மீர் இராணுவ முகாமில் இருக்கிறது என்பதால் அம்பிலிக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு... இவர்களின் காதல் ஏற்கப்பட்டதா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

டீனாவின் அண்ணனும் அம்பிலியின் நண்பனுமான பாபி குரியன் ஒரு சைக்கிள் வீரன்... தேசியப் போட்டிகளில் வென்றவன்... அவனின் ஒவ்வொரு வெற்றியிலும் அதிகம் மகிழ்பவன் அம்பிலி... ஊருக்கு வரும் பாபிக்கு அம்பிலியின் குழந்தைத்தனமான செயல்பாடுகள் மீது ஒரு வெறுப்பு... அவனை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறான்... இந்நிலையில் தங்கையின் காதலும் தெரியவர, எதிர்ப்பைத் தூக்கிக் கொண்டு நிற்பதுடன், பாவப்பட்ட அம்பிலியை வீட்டில் போய் அடித்துத் துவைக்கிறான்... அடிபட்ட அம்பிலி அவனைப் பலி வாங்கினானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

Image result for ambili movie images hd

ஆம்...

குணா கமல் மாதிரி ஒருத்தனைக் காதலிப்பதை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா...?

அவர்களைப் பிரிக்கச் செய்யும் சதி என்ன...?

காதலர்கள் சேர்ந்தார்களா... அல்லது செத்தார்களா...?

அம்பிலி  அசகாய சூரனானா..?

தன்னைத் தாக்கிய பாபியைத் தூக்கிப் போட்டு மிதிச்சானா..?

டீனாவைக் கைப்பிடித்தானா...?

நூறு பேரை அடித்து வீர வசனம் பேசினானா..?

இப்படியான கேடுகெட்ட யோசனை எல்லாம் இன்னும் மலையாளக் கரையோரம் நகரவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஒரு சிறு கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பானதொரு படத்தை நம்முன்னே வைப்பதில் இப்போது வரும் மலையாள இளம் இயக்குநர்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள்... திரையில் ஆளாளுக்கு அடித்து ஆடுகிறார்கள். சமீபத்தில் பார்த்த எல்லாப் படங்களும் சின்னக் கதையை வைத்து சித்திரம் வரைந்தவைதான்... அத்தனை அழகு... ரசிக்க வைத்த படங்கள்.

நாம்தான் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொண்டு சாதியை வைத்தே படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இளம் இயக்குநர்களில் பலர் சாதிக்குள் மட்டுமே சுற்றி வருகிறார்கள். இது ஆபத்தானது... ஆனால் அதைத்தான் நாம் விரும்புகிறோம். கொடி பிடிக்கிறோம்.. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் 'என்னை அடக்கி வச்சே... நான் முளைச்சி வருவேன்'னு வசனம் பேசப் போறோமோ தெரியலை... எல்லா இடத்திலும் எல்லாரும் முளைத்து வந்தாச்சு... இந்தப்படங்கள் வளரும் கிளைகளை ஒடித்துச் செடியைக் கருக வைக்குமே ஒழிய வளர வைக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

அந்த வகையில் மலையாளிகள் இப்போது வர்க்க பேதம், பொருந்தாக் காதல் என எதையும் பேசவில்லை என்பதே மகிழ்ச்சிதான்... இதனாலேயே அவர்களின் கதைகள் மீது ஒரு தனி மரியாதை வருகிறது... நம் புதிய இயக்குநர்களின் கதைகள் சாதிய விதையைப் பரவலாக முளைக்க வைத்து அதன் மூலம் பணம் சம்பாரிக்கிறார்களே என்ற கோபம்தான் வருகிறது..

இன்னும் சொல்லப் போனால் மலையாளிகள் மாஸையும் நம்புவதில்லை... சதையையும் நம்புவதில்லை... சாதியையும் நம்புவதில்லை... கதையை மட்டுமே நம்புகிறார்கள். சமீபத்தில் பார்த்த படங்கள் எல்லாமே ஒருவரிக் கதைதான்... ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் காட்சிக்கு காட்சி ரசித்துப் பார்க்க வைக்கிறது.

தங்கள் கதை வெல்லும் என்றால் எவனையும் நாயகனாக்கலாம் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் மலையாளிகள். அம்பிலியாக பஹத் பாசில், துல்கர், நிவின் பாலி, ஷேன் நிகம் போன்றவர்களைப் போட்டிருக்க முடியும் ஆனால் இயக்குநரின் தேர்வு ஷெளபின் ஷாகிர். இந்தக் கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.

காதலும் இல்லை... மோதலும் இல்லை என்றால் அப்ப கதைதான் என்ன..?

ஒரு சைக்கிள் பயணம்... ஆம் இதுதான் கதை.

சைக்கிள் வீரனான பாபி கின்னஸ் சாதனைக்காக கேரளாவில் இருந்து பல மாநிலங்களைக் கடந்து காஷ்மீரை அடையும் சாகசப் பயணத்துக்குத் தயாராகிறான். அவனுக்கு வழியெங்கும் தங்கிச் செல்ல, உதவ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Image result for ambili movie images hd

அவன் கிளம்பிச் சென்றபின் அவனிடம் அடிபட்ட அம்பிலியைக் காணோமென ஊரே தேடுகிறது... எங்கே சென்றிருப்பான்...? அடிபட்ட வருத்தத்தில் எங்காவது சென்று செத்திருப்பானா..? எனப் பரபரப்பாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் எல்லாரும் அம்பிலி மீது எவ்வளவு நேசம் வைத்திருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது...

எங்கே போயிருப்பான் என்ற பதைபதைப்புக்கு இடையே பாபியின் சைக்கிளின் பின்னே தன் பழைய சைக்கிளில் பயணிக்க ஆரம்பிக்கிறான் அம்பிலி. கதையும் சுவராஸ்யமாய்ப் பயணிக்க ஆரம்பிக்கிறது.

அதன் பின் இருவர் மட்டுமே பயணிக்கிறார்கள்... இருவருக்கும் நட்பு ரீதியிலான பந்தம் இல்லை. அம்பிலி நட்போடு நகர்ந்தாலும் பாபி அப்படி நகரவில்லை. கள்ளங்கபடமில்லாத நட்பைக் கொடுத்து ஒவ்வொரு இடத்திலும் அம்பிலி மனிதர்களைப் பிடித்துக் கொள்கிறான். அவனின் உலகம் அன்பால் ஆனது... அதில் பல மொழி பேசும் மனிதர்களை அமர்த்திக் கொள்கிறான். பாபியோ இவனை எப்படியும் கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறான். அதற்காக முயற்சி மேல் முயற்சி செய்கிறான். அவனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது.

அம்புலி தன்னுடன் வருவதைப் பற்றித் தங்கையிடம் சொல்ல, அவளோ அம்பிலியிடம் உன்னால் அவ்வளவு தூரம் போக முடியாது... திரும்பி வா என்றழைக்கிறாள். அவளின் பேச்சுக்கு எப்பவுமே எதிர்ப்பேச்சு இல்லை என்பதால் திரும்பிப் போகிறேன் எனச் சோகமாய்ச் செல்பவன், ஏனோ காதலியைவிட இந்தச் சைக்கிள் பயணத்தையே பெரிதும் விரும்புகிறான்... பாபியின் மனசுக்குள் இருக்கும் தன் மீதான வெறுப்பை அழித்து அவனுள் இடம் பிடிக்கவோ அல்லது தனக்கும் காஷ்மீருக்குமான பந்தத்தின் காரணமாக அந்த மண்ணை மிதிக்கவோ... ஏதோ ஒன்றுக்காய் அவனுக்கு இந்தப் பயணம் தேவைப்படுகிறது... காதலியின் சொல்லை மறந்து கேரளம் திரும்பிய சைக்கிளை காஷ்மீர் நோக்கித் திருப்புகிறான்... ஆம் மீண்டும் பாபியின் பின்னே சைக்கிளை மிதிக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் பாபிக்கு உடல்நலமில்லாமல் போக, சில நாள் ஒரு கிராமத்து மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல்... அப்போது அம்பிலி அவனைத் தாயைப் போலக் கவனிப்பதுடன் அங்கிருப்பவர்கள், குழந்தைகள் என எல்லாரிடமும் மொழி தெரியாவிட்டாலும் தெரிந்தவரை பேசி நெருக்கமாகிறான். அவனின் அந்த நேசம், பழகும் பாங்கு பாபியின் மனசுக்குள் முதல் முறையாக அம்பிலி மீதான வெறுப்புணர்வைக் கொன்று அன்பை விதைக்கிறது.

அதன் பின் இருவருவருமாய் பயணிக்கிறார்கள்... காஷ்மீர் போய் அம்பிலியும் பாபியும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவாய்.

பாதிப்படத்துக்கு மேல் சைக்கிள் பயணமாய் நகரும் கதையில் ஆங்காங்கே சந்திக்கும் மனிதர்கள் மற்றும் கடக்கும் நிலங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

காதலியை நினைத்து ஒரு பாடல், காதலனை நினைத்து ஒரு சோகப்பாடல், நண்பர்களுக்குள் போட்டிப் பாடல் அல்லது பாசப்பாடல், இடையில் சண்டைக் காட்சிகள், இதனிடையே ஒரு குத்தாட்டம் என்றெல்லாம் நம்மைப் போல் யோசிக்காமல் அந்த இருவரையும் அவர்கள் கடக்கும் நிலங்களையும் மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் கடக்கும் நிலங்கள் ஓராயிரம் கதை பேசுகின்றன. அதையெல்லாம் படம் பார்க்கும் போது நாம் ரசித்துக் கேட்கலாம்.

மிக அழகாகப் பயணிக்கும் கதை... இப்படியானதொரு கதையை எடுத்ததற்காகவே இயக்குநர் ஜான்பால் ஜார்ஜைப் பாராட்டலாம். அவ்வளவு நேர்த்தியாய் கதை சொல்லியிருக்கிறார்.  சைக்கிள் பயணத்தில் என்ன சுவராஸ்யத்தைக் காட்டிவிட முடியும்... அதுவும் படம் முழுவதும் இருவர் சைக்கிளில் பயணிப்பது பார்ப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்காதா..? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை... பார்ப்பவர்களை அம்பிலியின் சைக்கிளின் பின்னே தன்னால் காஷ்மீருக்குக் கொண்டு செல்ல முடியும் என நம்பியிருக்கிறார்... அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

பரந்த நிலப்பரப்பை மேலிருந்தே படமாக்கியிருப்பது சிறப்பு. படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் எடிட்டிங்கும் மிக முக்கியமானதாய்... மூன்றும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன... ஒளிப்பதிவாளர் ஷரன் வேலாயுதமும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்யும் எடிட்டர் கிரண் தாஸூம்  கலக்கியிருக்கிறார்கள்... இந்த மும்மூர்த்திகளுக்குப் பாராட்டுக்கள்.

Image result for ambili movie images hd

குறிப்பாக ஷௌபினின் நடிப்பு... அற்புதம்... அருமையான கலைஞன்... இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் நாம் முன்பு பார்த்த அதே நடை, உடை, பாவனையில்தான் நடிப்பார்கள்... இதில் இவர் அதை முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்... பாராட்டப்பட வேண்டிய கலைஞன்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை மிக அழகாகக் கொடுத்து விடுகிறார் ஷௌபின். சூடானி ப்ர்ம நைஜீரியா, கும்பளங்கி நைட்ஸ் என எல்லாப் படத்திலும் அவரின் நடிப்பு தனித்தே தெரியும். படத்துக்குப் படம் தன் நடிப்பை பட்டை தீட்டிக் கொண்டேயிருக்கிறார். நான் ரசிக்கும் கலைஞன் ஷௌபினுக்கு வாழ்த்துக்கள்.

டீனாவாக தன்வி ராமும் பாபியாக நவீன் நஜீமும் கதைக்கு வலுச் சேர்க்கிறார்கள். மேலும் இவர்களின் அப்பாவாக வரும் வெட்டுக்கிலி பிரகாஷ், அம்மாவாக வரும் நீனா குருப், பாட்டியாக வரும் ஸ்ரீலதா நம்பூதிரி என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

E4 Entertainment மற்றும் AVA Productions-க்காக மனோஜ் A.மேத்தா,  A.V. அனூப் மற்றும் C.V. சாரதி தயாரிப்பில் வந்திருக்கும் அம்பிலி அருமையானதொரு படம்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் கூட.************

எனது நாவலொன்று அமேசானில் இருக்கிறது. வாசிக்க நினைத்தால் வாசியுங்கள். அங்கு வாசிக்க : நெருஞ்சியும் குறிஞ்சியும்
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் தரும் விமர்சனமே, படம் பார்க்க வேண்டும் வேண்டும் ஆவலைத் தூண்டுகிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றிண்ணா... நல்ல படம். முடிந்தால் பாருங்கள்.