மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 23 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : 'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பு


டந்த சில ஆண்டுகளாக சின்னச் சின்ன சூறாவளியைக் கடந்து வந்து கொண்டிருப்பவனை இந்த ஆண்டு ஆரம்பம் முதல் அடித்துத் துவைக்க ஆரம்பித்தது. தீராப் பிரச்சினைகளின் பின்னே தீர்வில்லாமல் எல்லாப் பக்கமும் நகர்ந்து, எழ முடியாத நிலைக்குத் தள்ளிக் கொண்டு போனது. வெளிநாட்டில் இருக்கும் பிச்சைக்காரன் என்ற நிலையில்தான் இன்றுவரை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையிலும்  ஏதோ ஒரு வகையில் உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையிலேயே நகர்கிறது வாழ்க்கை, வட்டி கட்ட முடியாத சூழலில்தான் இந்த நாள் வரை தினமும் விடிந்து கொண்டிருக்கிறது. வருத்தங்களும் வலிகளுமே வசதியாய் அமர்ந்திருக்கின்றன... வாழ்க்கை வசந்தமாகும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மனசுக்குள் வலுவிழக்காமல்.

'இது என்ன வாழ்க்கை..?' என்ற புலம்பலுடனேயே நகரும் நாட்களில் எழுத்தும் வாசிப்பும் மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது... கூடவே ஊருக்குப் பேசுதலும்... மகனின் சேட்டைகளும். இவை இல்லையென்றால் என்ன ஆகியிருக்குமோ தெரியாது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன், நீ கதை எழுது... உனக்கு எழுத வரும் எனப் போட்ட விதைதான் எழுத வைத்தது. அங்கு தொடங்கியது அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் எதாவது ஒரு இடத்தில் முளைக்கும். இப்படியாகத்தான் இதுவரை நகர்ந்து வந்திருக்கிறது என்றாலும் எழுத்து நீர்த்துப் போகவில்லை... அது மெல்ல மெல்ல உருமாறி... உருமாறி... எளிய மனிதர்களைப் பற்றிய களத்தில் வந்து நிற்கிறது. இதுதான் நம் இடம் என்பதாய் அந்த வாழ்க்கைகளை மட்டுமே கதைகளாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் மகிழ்வை வலிந்து திணிப்பதில்லை... வாழ்க்கைக்கு ஜிகினா பூசுவதில்லை... எதார்த்தத்தை எதார்த்தமாய் எழதப் பழகி வருகிறேன். ஆஹா ஒஹோ என்றெல்லாம் எழுதவில்லை என்றாலும் என் கதைகள் வாசிப்பவரை ஏதோ ஒரு விதத்தில் கண்டிப்பாக ஈர்க்கும்... முடிவு ஒரு சிலரையேனும் வருந்தவோ அழவோ  வைக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும்.

என் வலைப்பூவில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன்... இங்கே 126 கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் பரிசு பெற்ற, மின்னிதழ்களில் வந்த கதைகள்தான் அதிகம் இருக்கும். இப்போதெல்லாம் சில காரணங்களால் எழுதிய எல்லாக் கதைகளையும் இங்கு பகிர்வதில்லை.

மேலும் புத்தகமாக்கும் சூழலை எப்போதும் உருவாக்கிக் கொள்ள நினைத்ததில்லை... பணம் கொடுத்துப் போட வேண்டிய அவசியமும் இல்லை... நண்பர்கள் பணம் கொடுத்துப் போடுவதைப் பார்க்கும் போது அவ்வளவு பணம் கொடுத்து யாருக்காகப் போடவேண்டும் என்ற எண்ணமே மனதுக்குள் எப்போதும் தோன்றும் கேள்வியாய்... கதைகள் அதற்கான இடத்தை அடைய முடிந்தால் அடையட்டும்... பணம் கொடுத்துப் போட்டு வாங்கி பரணில் போட்டு வைக்கும் அளவுக்குப் பொருளாதாரமும் இல்லை... எண்ணமும் இல்லை. மேலே சொன்ன நிலையில் இருந்து மீள்தல்தான் இப்போதைய சிந்தனையெ ஒழிய, வேறொன்றும் எனக்குள் இல்லை. எல்லாவற்றிலும் இருந்து வெளிவர வேண்டும்... மனநிறைவான வாழ்க்கை போதும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு எழுத்தாளர் திரு. காவிரிமைந்தன் அவர்கள் மூலமாக பத்தொன்பது புத்தகங்கள் கொண்டு வரும் முயற்சி நடந்தது. எழுத்தாளர் ஆசிப் மீரான் அண்ணா தம்பி உன் கதைகளைப் புத்தகமாக்க வேண்டுமென சொல்லிக் கொண்டேயிருப்பார். அவர் பத்தொன்பதில் ஒன்றாக்கி விடலாம் என முயற்சித்தார். இருபது கதைகள் கொடுத்தோம்... இந்தா வரும்... அந்தா வரும்... எனக் காத்திருக்க, ஏதோ காரணத்தால் அது முன்னெடுத்த வேகத்தில் பின் தள்ளப்பட்டுவிட்டது. பத்தொன்பது என்பது பறந்து போனது. ஒரு சில புத்தகங்கள் தனித்து வந்தன. ஏமாற்றத்தில் என்னைவிட வருந்தியவர் ஆசிப் அண்ணன்தான். 

எப்பவுமே... எதிலுமே தடங்கள் என்பது நமக்குப் பழக்கப்பட்டதுதான் என்பதால் அதைச் சுலபமாகக் கடந்து வந்துவிட்டேன். அதற்காக யாரிடமும் புலம்பவில்லை... போச்சே என்று வருந்தவில்லை... எப்போது வரவேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக வரும்... அதுவரைக்கும் நாம் நாமாக நகர்வோ என்பதுதான் என் எண்ணம். அப்படியே வந்தாலும் அல்லது வரலாமலேயே போனாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை... என் நிலை அப்படியேதான் நகரும். 

மேலும் இங்கே மிகச் சிறப்பாக எழுதும் எத்தனையோ பேர் வலைப் பக்கங்களிலும் முகநூலிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கு முன் நானெல்லாம் ஒரு பெரிய எழுத்தாளான் ஒன்றுமில்லை... அவர்கள் எல்லாரும் புத்தகம் போட்டுவிடுவதில்லை... எழுத்தின் மீதான காதலில் எழுதுகிறார்கள்... அப்படியே நாமும் இருந்துவிட்டுப் போவோம் என்ற எண்ணம்தான் எனக்குள்ளும். என் கதைகள் எனக்கான இடத்தை என்னிடம் கதை கேட்டு வாங்கிப் போடும் வலை நண்பர்களிடம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதைவிட வேறென்ன வேணும்..?

ஆசிப் அண்ணனின் முயற்சி வெற்றி பெறாததில் அவருக்கு மிகுந்த வருத்தம் என்று சொன்னேனல்லவா... இப்படி ஆகிப் போச்சே எனப் பலமுறை வருந்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அண்ணா... விடுங்க... எப்ப நடக்கணுமோ அப்ப நடக்கட்டும் என்றே கடந்து வந்தேன். அதன் பின் சகோதரர் நெருடா கூட பணம் நான் போடுகிறேன் என ஆசிப் அண்ணனிடம் பேசியிருக்கிறார். இது எனக்குப் பின்னர்தான் தெரியும். 

இப்படித்தான் சில வருடங்கள் முன்பு 'கலையாத கனவுகள்' நாவலை நான் பணம் போட்டு புத்தகம் ஆக்குகிறேன் என நின்றார் நிஷாந்தினி பிரபாகரன் அக்கா. அப்போது பின்னர் பார்க்கலாம் என மறுத்தேன். விடாமல் மல்லுக்கு நின்றார் அக்கா. தள்ளிப்போவது நமக்கு வாடிக்கை என்பதால் அந்தச் சூழலில் தள்ளிப் போட்டேன்... என்னால் அவர் ஏன் நஷ்டப்பட வேண்டும். இதேபோல் பல நண்பர்கள் முன்னெடுக்க முன்வந்தார்கள். எல்லாரிடமும் சின்னச் சிரிப்போடு மறுத்துவிட்டேன். 

பின்னர் ஒரு முறை சகோதரர் பிரபு கங்காதரன்  போனில் பேசும் போது தல நாம புக் கொண்டு வர்றோம் எனச் சொல்லி, அவரின் நண்பரான கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் அவர்களிடம் பேசி கதை அனுப்பச் சொல்லி, அவருக்கு கதைகள் பிடித்ததால் அடுத்தடுத்த வேலைகள் விரைவாய் நடந்தேறி நேற்று புத்தகமும் தயாராகிவிட்டது. இது எதிர்பாராதது... இப்படி நிகழுமா என்ற ஆச்சர்யமே என்னிடத்தில் தொக்கி நிற்கிறது. 

ஆரம்பத் தடங்கலுக்குப் பின் நிகழ்ந்த அதிரடி நிகழ்வு இது... ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வர நினைத்து முடியாமல் போனது அடுத்த சில மாதத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து நிற்கிறது. இதற்கு முழுக்காரணம் சகோதரர்கள் பிரபுவும் நெருடாவும்தான்... அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. இதில் நான் எதையும் நகர்த்திவிடவில்லை... கதைகள் அனுப்பியதைத் தவிர. இருவருக்கும் நன்றி எனச் சொல்லி தள்ளி வைக்க மனமில்லை... இந்த உறவு இறுதிவரை நீடிக்கட்டும்... அது போதும்...   

எங்கள் குல தெய்வம் கள்ளழகர்... அவரின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'எதிர்சேவை' புத்தகத் தலைப்பாய்... அட்டையில் அழகர் கோவிலும் கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமுமாய்... அமைந்ததெல்லாம் எதார்த்தமான நிகழ்வுதான்... யோசித்த மூன்று தலைப்பில் இது நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்ததால் தேர்ந்தெடுத்தோம். அட்டைப்படம் முழுக்க முழுக்க கலக்கல் ட்ரீம்ஸின் எண்ணம்தான்... முதல் முறை அட்டைப் படத்தைச் சகோதரர் தசரதன் அனுப்பிய போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... ஆம் அழகனின் தரிசனம்... இந்தத் தரிசனத்தைக் காண மதுரை வீதிகளில் கூட்டத்துக்குள் அலைந்தவன் என்பதால் அந்தப் பரவசம் எனக்குத் தெரிந்தது. ஆம் என் முதல் புத்தக அட்டையில் கள்ளழகர்... வேறென்ன வேண்டும்.

சகோதரர் தசரதன் பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்... எந்த எதிர்பார்ப்புமின்றி கதை பிடித்துப் போனதால் புத்தகம் ஆக்கியிருக்கிறார். புத்தகங்கள் விற்பனையைப் பொறுத்து அவர் என் மீது கொண்ட நம்பிக்கை இன்னும் இறுக்கமாகும் என்று நம்புகிறேன்.

எத்தனை முறை மாற்றங்கள்... பிழை திருத்தங்கள்... அமீரகத்தில் இருந்து இரவு 12 மணிக்கு (ஊரில் 1.30) ஒரு மாறுதல் சொன்னால் காலை 5.30 மணிக்கு எழும்போது இப்ப சரியா இருக்கான்னு பாருங்க சகோ என வாட்ஸப்பில் அனுப்பி வைத்திருப்பார். புத்தகம் ரெடி... அடுத்து நாவல் பண்றோம்... ரெடியாகுங்க... என்றார் போனில் பேசும்போது...  எங்கிட்ட நிறைய கைவசம் இருக்கு என்றதும் புத்தகக் கண்காட்சி முடிந்ததும் கொடுங்க வாசிக்கிறேன்... புத்தகமாக்கிடலாம் என்று சொல்லியிருக்கிறார். நல்ல எழுத்துக்களை நேசிப்பவர்கள் எப்போதும் நம்மோடு இருத்தல் நலம். இறுக்கிப் பிடித்துக் கொள்வேன் அவரையும் அவர் கரங்களையும்.

கதைகள் எப்படியிருக்கு என நண்பர்களிடம் அறிய பிடிஎப் ஆக மாற்றி, நான் கொடுத்த 50 கதைகளையும் வாசித்து தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் முதல் என் எழுத்தின் வளர்ச்சியில் மகிழ்ந்து இன்னும் சிறப்பாய் எழுது என உற்சாக மூட்டிக் கொண்டிருக்கும் வலைத்தள நட்புக்கள் வரை எல்லாருக்கும் தனித்தனியாய் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது மொத்தமாய் எல்லாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். பின்னொரு நாளில் தனித்தனியாய்.

எப்போதும் என் வாழ்க்கை நண்பர்களாலேயே சிறக்கிறது... அது இப்போதும்... 

புத்தகம் தயாராகிவிட்டது... வாங்கிப் படித்து உங்க கருத்தைச் சொல்லுங்க...  எழுதும் வரை தான் கதைகள் என்னுடையது... இப்போது புத்தக வடிவில் அது உங்களிடம் எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள்... திருத்திக் கொள்கிறேன். உங்கள் விமர்சனமே என் எழுத்துக்கான உரமாய் அமையும்.

வாழ்வில் கடந்து சென்ற வருடங்களில் அடையாத மோசமான நிலையைக் கொடுத்தது 2019.... வாழ்வில் மறக்க முடியாத வருடம் இது. வருடத்தின் கடைசியில் கொஞ்சமாய் சாரல் மழை பெய்து செல்ல ஆரம்பிக்கிறது... ஆம் சிறுகதைத் தொகுப்பு, சென்ற ஆண்டு கணேஷ்பாலா அண்ணன் நடத்திய படத்துக்குக் கதையெழுதும் போட்டிக்கு வந்த கதைகளின் தொகுப்பாய் வெளிவந்திருக்கும் 'பூக்கூடை'யில் என் கதையும் (பரிசு பெற்றது) இருக்கிறது. வாதினி வெளியிடும் டிஜிட்டல் பொங்கல் மலரில் முத்திரைக் கதையாய் என் கதை வர இருக்கிறது. அகல் பொங்கல் மலருக்கு கதைதான் வேண்டுமெனக் கேட்டு வாங்கியிருக்கும் நண்பர் சத்யாவென அடுத்த வருடத்தின் ஆரம்பம் மகிழ்வாய் இருக்கிறது... அந்த மகிழ்வோடு  வரும் வருடமேனும் நிம்மதியானதாய் அமையட்டும்.

புத்தகம் வாங்குவது குறித்த விபரங்களுக்கு...

திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com
விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)

விலையில் எதுவும் சலுகை உண்டா, வங்கிக் கணக்கு விபரம் உள்பட மற்ற விபரங்களைச் சகோதரர் தசரதனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

மு. கோபி சரபோஜி சொன்னது…

வாழ்த்துகள் குமார்.... வாசித்து பின்னொரு நாள் பேசுகிறேண்

G.M Balasubramaniam சொன்னது…

நினைத்தது நடண்டல் மகிழ்ச்சிதானே ஆன்னல் பாருங்கள் நமெழுத்டை விரும்பி படிப்பவரும் இருக்கிறார்களென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே நான் எழுதுவதே என் எண்ணங்களை அவை பெரும்பாலும்நடப்பில் இருக்கும் கருத்துகளும் நம்பிக்கைளும் தான் கடத்துவதற்குதான் என் எழுத்தில் நான் கம்ப்ராமைஸ செய்வதில்லை

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி அய்யா

'பரிவை' சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக பேசுங்கள் அண்ணா உங்க கருத்து எனக்கு வேண்டும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// எழுத்தும் வாசிப்பும் ///

விட்டு விடாதீர்கள்... தொடரட்டும்...

ithayasaaral.blogspot.com சொன்னது…

எத்தனை ஆண்டுகள் கண்ட கனவு இன்று கனிந்து கைகூடி இருக்கிறது. எழுத்துக்கான இடத்தை எழுத்து தீர்மானிக்கிறது. அதற்கான களம் அதன் தரத்தை வெளிக்கொணர்கிறது. கதைகளை நேசிப்பவர்களால் வாசிக்கப்படும் போது அதன் தகுதியை எடைப்போட்டு காட்டுவார்கள். சிறந்த எழுத்தாளன் என்பதும் சிறந்த எழுத்து என்பதும் ஒரு துலாக்கோலின் இரண்டு தட்டுகள் போன்றது. இரண்டும் சமமாய் இருப்பதுதான் சிறப்பு. என்றும் மிகச்சிறப்பாக வாழவும், எழுதவும், வெற்றிக்கொள்ளவும் என்றும் அன்புடன் வாழ்த்தும் - நண்பன் தமிழ்க்காதலன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் நண்பா. நம் அனைவரின் புத்தகமும் வரவேண்டும் என்ற ஆசை. விரைவில் எல்லாம் நடக்கும். கருத்துக்கு நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்வேன்... நன்றி அண்ணா.