மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 4 டிசம்பர், 2019

மரப்பாலம் - வாசிப்பனுபவம் (காற்றுவெளி கட்டுரை)

டிசம்பர் மாத காற்றுவெளியில் வெளியான படித்த புத்தகம் குறித்தான அனுபவக் கட்டுரை. கதை, கவிதை, கட்டுரை என மின்னிதழ்களிலும் இதழ்களிலும் நிறைய எழுதியிருந்தாலும் ஒரு புத்தகம் குறித்தான எனது எழுத்து மின்னிதழில் மலர்வது இதுவே முதல்முறை. அனுப்பியதும் அதைப் பிரிசுரித்ததால் இனி அடிக்கடி எழுதலாம் எனத் தோன்ற வைத்துவிட்டது. சினிமா, புத்தகம்ன்னு மற்றொரு பக்கம் பயணிக்கலாம் என்ற ஆசையும் கூடவே.

புதியவர்களுக்கும் தொடர்ந்து எழுதும் பழையவர்களுக்கும் சரிசமமாய் இடங்கொடுத்து நகரும் மின்னிதழ்களில் காற்றுவெளியே முன்னணி என அடித்துச் சொல்வேன். அவர்கள் தங்களுக்கென அதிக பக்கங்கள் எடுத்துக் கொள்வதில்லை... எழுத்தை ஊக்குவிக்கிறார்கள்... அதனால்தான் இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து என்னால் அதில் பயணிக்க முடிகிறது. கதைகளுக்குக் கொடுக்கும் பக்கங்களைவிட இதற்கு அதிகமாய் பக்கம் கொடுத்து அழகாய் மலரச் செய்த முல்லை அமுதன் அண்ணனுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை


மரப்பாலம் - வாசிப்பனுபவம்
ரப்பாலம்...

இன்றைய நிலையில் அதிகமாகப் பணத்தைச் சுருட்டாமல் கட்டுகின்ற சிமெண்ட் பாலங்கள் கூட சில வருடங்களிலேயே பல்லைக் காட்ட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியிருக்கும் போது மரப்பாலம்..? அதுவும் மழை வெள்ளம் நிறைந்து  ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டும் மரப்பாலம்...? 

பல உயிர்களைக் காவு வாங்கி... காவு வாங்கி... மீண்டும் மீண்டும் உயிர்தெழும் மரப்பாலம் முழுமையாக கட்டப்பட்டதா..? 

ஜப்பானியர்கள் நினைத்தபடி அதில் இரயில் பயணத்தைத் தொடர்ந்தார்களா...? 

அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கு உடைந்ததா...? என்பதையெல்லாம் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் மரப்பாலம் நாவல் முழுமையாகச் சொல்லியிருக்கிறது. இந்நாவலை வாசிக்கும் போது நாமும் பாலம் கட்டும் இடத்தில் அடிமைகளுடன் இருந்த,  அவர்களின் வலியையும் வேதனையையும் சுமந்த  உணர்வைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

தகவல்களை நிறைத்து எழுதப்படும் நாவல்கள் நான் அதிகம் வாசித்ததில்லை. நானெல்லாம் எப்போதும் கிராமத்து மனிதர்களின் ஆடம்பரமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத, எதார்த்தம் நிறைந்த வாழ்க்கைக் கதைக்குள் சுற்றுபவன். கிராமத்தான் நான் எனச் சொல்லிக் கொள்ளத் தயங்காதவன். அந்த வாழ்க்கைக்குள் வழுக்கிக் கொண்டு பயணிக்கத் தெரிந்த எனக்குத் தகவல்களைக் கொண்டாடி நானுறு, ஐநூறு பக்கங்களுக்கு மேல் தன்னுள் தகவல்களை நிறைத்துத் தனித்து நிற்கும் நாவல்களை வாசிப்பதென்பது பெரிய சவாலான விஷயம். அதானால் எப்போதும் வாழ்க்கைக் கதைகளுக்குள்ளேயே என் வண்டியை நிறுத்திக் கொள்வேன்.

முகிலினி வாசிப்பு பஞ்சாலைகள் குறித்த வரலாற்றுச் செய்திகளைக் கொடுத்தது. மிகப்பெரிய புத்தகமான அதை வாசித்தபோது தகவல்கள் எந்த ஒரு அயற்சியையும் கொடுக்காமல் கதை தன் போக்கில் பயணித்ததால் அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட, புத்தகத்தை கீழே வைக்காமல் தொடர்ந்து வாசித்து முடித்த போது அந்தப் பஞ்சாலையும் அதனைச் சுற்றி நகர்ந்த மனிதர்களும் மனசுக்குள் நெருக்கமாய் அமர்ந்து கொண்டார்கள். தகவல்களை மிகச் சிறப்பாக நம்முள் பாய்ச்சும் வீரியம் அந்த எழுத்தில் இருப்பதை உணர முடிந்தது. இதைப் போன்ற சில நாவல்கள் கொடுத்த தைரியத்தில் கையில் எடுத்ததுதான் கரன் கார்க்கியின் மரப்பாலம்... சில நாவல்களின் தகவல்கள் நம்மை அயற்சி அடைய வைக்கும். இந்நாவலும் முகிலினி போல் அயற்சி இன்றிப் பயணிக்க வைத்தது. இதற்குப் பின் இதுபோன்ற நிறைய நாவல்களை வாசிக்க முடிந்தது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்துக் கதை... கதை சென்னையில் தொடங்குகிறது. ஆரம்பத்தில்  சில பக்கங்கள் மிக மெல்லத்தான் நகர்ந்தது. கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்ற ஒரு இளைஞனின் நிலையில்தான் வாசிக்க முடிந்தது. இந்த வாசிப்புத் தொடருமா... இல்லையா என்ற எண்ணம் எழத்தான் செய்தது. ஆனால் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கப்பல் பயணித்தபோது மெல்ல வேகமெடுத்து சிங்கப்பூருக்குள் நுழைந்து இரண்டாம் உலகப்போர் , மரப்பாலம் கட்டுதல் என காட்சிகள் நகர ஆரம்பித்தபோது விறுவிறுவென நகர்ந்து பிணக்குவியல்கள் மீது நின்றபோது மக்கள்பட்ட வேதனையும் வலியும் துயரமும் என்னையும் சூழ்ந்து கொண்டது. அத்தனை நிகழ்வுகளும் கண் முன் காட்சிகளாய் விரிந்தபடி பல வினாக்களை எழுப்பி விடை தேட ஆரம்பித்தன.

மண்ணாசைதான் எத்தனை கொடியது... அது ரத்தவெறி பிடித்து அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் போது இப்படி அந்த நாட்டைப் பிடித்து இவர்கள் யாரை ஆளப் போகிறார்கள்..? அப்படி ஆண்டு என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்..? என்றே எண்ணத் தோன்றியது என்றாலும் உலகமே என் கையில்... நான் உலகை ஆண்டேன்.... என வரலாற்றைச் சமைத்துச் செல்வதில் அவர்களுக்கு இருந்த ஆனந்தமே இத்தனை வன்மத்தை அவர்களுக்குள் விதைத்திருக்கிறது என்றுதான் தோன்றியது. மனிதனே மனிதனைக் கொன்று குவிப்பது இப்போதும் தொடரத்தானே செய்கிறது. வலிகளோடு நாம்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம், அவர்கள் உடல்களின் மீது உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களின் தலைகளை கம்பிகளில் குத்தி வைத்திருப்பது, பெண்களைக் கொடுமைப்படுத்தியது, மரப்பாலம் கட்ட ஆட்களைக் கொண்டு சென்று காட்டுக்குள் சரியான சாப்பாடின்றி, உறக்கமின்றி, வேலை ஒன்றே முக்கியமெனக் கொத்தடிமைகளாய் நடத்தி நோய் வாய்ப்பட்ட வைத்து, சரியான மருத்துவமில்லாமல் சாகவிட்டு, உடல்களை ஒரு குழிக்குள் அள்ளிக் குவித்து எரியூட்டுதல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத கோரச் செயல்கள்... கொடுஞ்செயல்கள்... இதையெல்லாம் நிகழ்த்தியவன்  ஜப்பானியன்.

ஆம்.... இரண்டாம் உலகப்போரில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் கைப்பற்றிய ஜப்பானின் அடுத்த ஆசை... இலக்கு... இந்தியாவுக்குள் நுழைய வேண்டும் என்பதே. அதற்கான காய் நகர்த்தலில் முக்கியமானதுதான் தாய்லாந்தின் சயாம் முதல் பர்மா வரை கிட்டத்தட்ட 415 கிமீ தூரத்திற்கு அவர்கள் கட்டிய மரப்பாலம். இதில்தான் இரண்டாம் உலகப்போரால் வாழ்வாதாரம் இழந்து, சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பாதிக்கப்பட்டு, வேலையுடன் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து போகிறோம்... இனி உயிர்ப்பயமும் இல்லை... உணவுப் பஞ்சமும் இல்லை எனக் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வந்த தழிமர்கள், சீனர்கள், மலேசியர்கள், சிங்கப்பூர்காரர்கள் எல்லாம் ஜப்பான் ராணுவத்தால் நசுக்கிப் பிழியப்பட்டு பிணங்களாய் குவிக்கப்பட்ட வரலாற்றை வலியுடன் பேசும் நாவல்தான் 'மரப்பாலம்'. இங்கே ஆங்கிலேயனும் அடிமையாய் வேலை பார்த்திருக்கிறான். அவனும் அடிபட்டிருக்கிறான், உயிரிழந்திருக்கிறான். ஆமாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியன் தாறுமாறாய் ஆட்டம் போட்டிருக்கிறான்.

1941-ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கி தன்னையும் இரண்டாம் உலகப்போருக்குள் இணைத்துக் கொண்ட ஜப்பான், நேச நாடுகளுக்கு எதிராக அச்சு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டது. 1942 வரை ஏறுமுகமாக இருந்த ஜப்பானின் வெற்றி, அதே ஆண்டின் இறுதியில் இறங்குமுகத்துக்கு மாறியது. நேச நாடுகள் இழந்தவற்றை மீட்டெடுக்க ஆரம்பித்தன. 1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா , நாகசாகி மீது அமெரிக்கா குண்டு வீசியபின் ஜப்பான் சரணடைய இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. 1942 - 1943 காலகட்டத்தில் மலேயா சிங்கப்பூரில் ஜப்பானின் ஆட்டம்தான் மரப்பாலம்.

கதையின் நாயகன் சின்ன முக்கட்டையன்... சிறுவயதில் அநாதையாய் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஜார்ஜ் கபே என்ற பெயரில் வளர்ந்து திடகாத்திரமான இளைஞனாகி, லூயிஸ் துரை என்னும் ஆங்கில அதிகாரியிடம் வேலை செய்கிறான். அவரோ சென்னையில் வகித்த அரசுப் பணியை விடுத்து இங்கிலாந்து செல்ல விரும்புகிறார். அவன் மீது கொண்ட நேசத்தில் - அவனும் யாருமற்றவன் என்பதால் - தன்னுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். இங்கிலாந்து செல்ல வேண்டிய நேரத்தில் உலகப்போரின் காரணமாக லூயிஸ் துரை சிங்கப்பூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, கூடவே ஜார்ஜ் கபேயும் அவன் வளர்க்கும் கெய்ஸ் என்ற நாயும் பயணிக்கிறார்கள். கப்பலில் அவனுடன் லூயிஸ் துரை எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இருவரும் யாரோ போல் பயணிக்கிறார்கள்.

சிங்கப்பூர் சென்றதும் லூயிஸ் துரையின் ஏற்பாட்டில் அவரின் நண்பர் ராபர்ட்டின் லீஜண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான் ஜார்ஜ் கபே. லூயிஸ் துரை வந்து பார்ப்பார் என்று ராபர்ட் சொல்ல, ஜார்ஜ் கபேயும் நம்பிக்கையுடன் இருக்கிறான். அங்குதான் கிருஷ்ணன், கந்தசாமி போன்ற தமிழர்களின் நட்புக் கிடைக்கிறது. ஆரம்பத்தில் கிருஷ்ணனுக்கு ஜார்ஜை கண்டாலே பிடிக்காது. கிருஷ்ணனைப் பொறுத்தவரை வேலை அது முடிந்தால் ஹோட்டலில் சூசாவுடன் களியாட்டம் என்பதாய் நகரும் வாழ்க்கையில் இடையிடையே அவன் வளர்க்கும் பூனையுடனும் இணக்கமாய் இருப்பான். கந்தசாமியோ எங்கே போகிறான்..? எப்போது வருவான்..? என்பது மர்மமாகவே இருக்கிறது.

இவர்கள் வாழ்க்கை சீராக நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, சீனா, அமெரிக்கா என இரண்டாம் உலகப்போர் உலகெங்கும் வியாபித்து மலேசியா சிங்கப்பூருக்குள்ளும் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் கிழக்கு எல்லை வரை கைப்பற்றிவிட்ட ஜப்பானின் குறிக்கோள் இந்தியாவைப் பிடிப்பதே என்பதால்தான் பர்மா - சயாம் மரப்பாலம் போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள் பணிக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்களில் ஜார்ஜ் கபேயும் ஒருவனாகும் சூழல் உருவாகிறது.

ஜப்பானியர்களின் வசமானபின் மலேசியா - சிங்கப்பூர் மக்கள் பட்ட அவதி, கொடுமைக்காரனாக இவர்களுடன் வந்து தங்கும் யமசிட்டா, உதவ நினைக்கும் ஜப்பான் மொழி கற்பிக்கும் ஆசிரியர் அகிரா ஹச்சிட்டா, காணாமல் போன கந்தசாமி, யமசிட்டாவால் மரித்துப் போகும் கிருஷ்ணன், போரின் விளைவாக பாதிப்புக்குள்ளாகும் ஜார்ஜ், ஜப்பானியர்களிடம் சிக்கிய லூயிஸ் துரை என கதை இன்னும் பல மாந்தர்களைச் சுமந்து பயணித்து, பர்மா - சயாம் மரப்பாலம் கட்டும் இடத்தில் வந்து நிற்கிறது. அங்கு வேலை செய்பவர்களைப் பார்த்துக் கொள்ளும் தைக்குருத்தோக்களில் ஒருவனாய் ஜார்ஜ் கபே இருக்கிறான். அங்கு அவனுக்குச் செல்லக்கண்ணு, செல்லாயி, கூத்தன், கதா என நிறையத் தமிழர்களின் நட்பும் கிடைக்கிறது. இவனின் மனித நேயம் நிறைய நட்பைப் பெற்றுத் தருகிறது. அதுவே அவன் லூயிஸைத் தேடவும் உதவியாக இருக்கிறது.

அடிப்பட்டவர்கள்... நோய்வாய்ப்பட்டவர்கள் என எவருக்குமே சரியான மருத்துவம் பார்க்க மருத்துவர்களோ மருந்துக்களோ இல்லாத நிலையில் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் இடத்தில் கொண்டு போய்ப் போட்டு வைத்திருந்து இனிப் பிழைக்க மாட்டான் என்ற நிலையில் தூக்கிக் கொண்டு போய் சாவுக் கொட்டாயில் கிடத்தி வைத்திருந்து இறந்ததும் பிணக்குழியில் போட்டு மொத்தமாக எரிப்பது... வேலை இடத்தில் ஓய்வே கொடுக்காமல் துன்புறுத்துவது என இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வசம் சிக்கிய மக்கள்பட்ட கஷ்டத்தைக் கண் முன்னே நிறுத்துகிறது மரப்பாலம்.

ஹிட்லர், முசோலினி, விமானத் தாக்குதல், குண்டு வீசுதல், எங்கெல்லாம் பிரச்சினை எழுந்தது, அதற்கு யார்தான் காரணம் என எல்லாவற்றையும் தரவுகளோடு விரிவாகப் பேசுகிறது இந்நாவல்.

நாயகிகள் இல்லாமல் ஐநூறு பக்கங்களைப் போருடன் வாசித்தால் போரடிக்காதா என்ன... அதனால் தமிழ்ச் சினிமாவில் இரட்டை நாயகிகள் போல... இங்கே மூன்று நாயகிகள்... மூவரும் மூன்று விதமாக.

ஜார்ஜ் கபே கப்பலில் பயணிக்கும் போது கப்பல் தலைவனின் மகள் ப்யூனஸ்க்கு அவன் மீது காதல். இருவரும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வரை கடலுக்குள் காதலிக்கிறார்கள். என்னுடனே இருந்துவிடு என்று சொல்பவளிடம் லூயிஸ் துரையுடன் செல்ல வேண்டிய காரணத்தால் மறுத்துக் கரையிறங்குகிறான். இவர்களின் காதல் முத்தத்துடன் முறிந்து போகிறது என்றாலும் இடையிடையே பியூனஸூடன் போயிக்கலாமோ என்று யோசிக்கத்தான் செய்கிறான். கடல் காற்றில் கப்பலின் மேல் தளத்தில் அந்தத் தேவதை கொடுத்த காதல் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதாக இல்லை அவனுக்கு.

இரண்டாவதாக லீஜண்ட் எக்ஸ்போர்ட் மாடியில் தங்கியிருக்கும் போது பக்கத்து வீடான சாங்-விங்கின் குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட, அவரின் மகள் லூலி மீது காதல். தன்னை அவன் இரவில் கூடத் தேடும் அளவுக்கு காதல் பைத்தியம் கொள்ள வைக்கிறாள் அந்தச் சைனா அழகி. ஜப்பான் ராணுவம் அவளின் வீட்டுக்குள் புகுந்து செய்யும் அட்டூழியத்தில் அப்பா கொல்லப்பட்டு, அண்ணன் தலைமறைவாக... அவளும் அம்மாவும் ராணுவத்தால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இப்படித்தான் கிருஷ்ணனின் சூசாவும் இழுத்துச் செல்லப்படுகிறாள். சோளகர் தொட்டியில் பெண்கள் என்றால் வனக்காவலர்கள் கொல்ல மாட்டார்கள் என்று சந்தோஷப்படும் வேலையில் அது சிறுமி என்றாலும் தங்களின் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்னும் வலியைச் சுமக்க நேரிடுவது போல் இந்தப் பெண்களும் ராணுவத்தினரின் இச்சை தீர்க்கவே இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மூன்றாவதாய் மரப்பாலம் கட்டுமிடத்தில் கட்டைகளைத் தூக்கிச் செல்லும் யானையைச் செலுத்தும் பாகி...  குவான்ஜை மீது காதல் பிறக்கிறது. உடல்நலமில்லாத போது தன் வீட்டிலேயே வைத்துப் பார்க்கிறாள். இவன் மீது அவளுக்கு அளவு கடந்த காதல்... இவனுக்கும்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கும் போது எதிர்பாராமல் பார்க்க நேரும் ஒரு நிகழ்வு இவர்களின் காதலை  உடைந்து போடுகிறது என்றாலும் அவள் மீதான காதல் அவனுள் அப்படியேதான் நகர்கிறது,அவளும் கூட அதே அன்போடுதான் தொடர்கிறாள்.

மூன்று காதல்களுமே கரை சேராமல் போகிறது... அவனுக்கான கரையோ லூயிஸ் துரையுடன் சேர்வதில்தான் இருக்கிறது என்பதால் எதையும் அவன் பெரிதாக எடுத்துப் புலம்பவில்லை. புலம்பும் சூழலிலும் அவன் இல்லை. அவனின் எண்ணமெல்லாம் தன்னை பெரிதும் விரும்பிய, மதித்த மனிதன் எங்கேயிருக்கிறான்..? எப்படியிருக்கிறான் என்பதில்தான் இருக்கிறது.

ஆம்... தன்னை இங்கிலாந்துக்கு கூட்டிச் செல்கிறேன் எனச் சொன்ன லூயிஸ் துரை ஜப்பானியர் வசம் மாட்டியிருக்க, அவரை எப்படியாவது பார்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருப்ப்பவன் எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்துக் கொண்டே பயணித்து மழை வெள்ளத்தில் அடித்துப் போகும் மரப்பாலத்திலும் ஜப்பானின் கை தாழ்ந்த சமயத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலிலும் காயம் அடைந்து மருத்துவமனையில் கிடக்கிறான். அங்கிருந்து வெளி வரும் அவன் லூயிஸ் துரையைச் சந்தித்தானா..?

அவர் உயிருடன் மீட்கப்பட்டாரா...?

தன் காதலிகளில் யாரையாவது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஜார்ஜ்க்குக் கிடைத்ததா..?

அவனின் கனவான இங்கிலாந்துக்குச் சென்றானா..?

இல்லை முக்கட்டையன் என்ற அநாதையைச் சுமந்த சென்னைக்கே திரும்பினானா..?

என்பதையெல்லாம் கதையை வாசித்தால் அறிந்து கொள்வீர்கள். கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் இது.

நாவலின் தொடக்கத்தில் பெரியார், காந்தி குறித்த சிறு உரையாடல் ஒன்று ஜார்ஜ் கபேக்கும் லூயிஸ் துரைக்கும் இடையே நடக்கும். அதன்பின் சித்தாந்த அரசியல் குறித்த விவாதங்களுக்கு இடமின்றி கதை இரண்டாம் உலகப்போருக்குள் புகுந்து கொண்டு காட்சிகளை நம் கண் முன்னே விரிக்க ஆரம்பிக்கிறது.

திரு. பா. இரவிக்குமார் அவர்கள் தன் முன்னுரையில் 'இரண்டாம் உலகப்போரின் குருதி படிந்த வாழ்க்கைகளைத் துல்லியமான சித்தரிப்புக்களின் மூலம் வாசகர்கள் முன் படைத்துள்ளார் கரன் கார்க்கி' என்றும்,  'மனிதனின் எல்லையற்ற அன்பும் வரலாற்றின் கொடூரங்களுக்கு முன்னால் செயலிழந்து விடுவதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தின் மௌனசாட்சிதான் ஜார்ஜ்கபே' என்றும் சொல்லியிருக்கிறார்.

மேலும் அவர் ' உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தியும் தயக்கமில்லாமலும் உரைப்பேன். ஹிட்லர் ரஷ்யாவின் மீது போர் தொடுத்த பின்னணி, சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றிய போது விண்ணில் பறந்த விமானங்களின் பெயர்கள், ஜப்பானிய மொழி அங்கே பரவிய தன்மை, சிங்கப்பூரின் சாலைகள், மவுண்ட் பேட்டன் - சர்ச்சில் சந்திப்பு, போரில் ஈடுபட்ட, பலியான ராணுவத்தினரின் எண்ணிக்கை, சாவு கொட்டாய் என்பதன் விளக்கம், வாம்போ முகாமில் நேசப்படைகள் நடத்திய விசாரணை, போர்க்கைதிகள் குறித்த தகவல்கள், சயாம் காடுகள், அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்திய கேமராக்கள், சிகரெட்டுக்களின் பெயர்கள், மதுபானங்கள், கடல் வழியே கடத்தப்பட்ட பொருள்கள், கப்பல்கள் குறித்த தரவுகள், ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் என்று எண்ணற்ற தகவல்களை, மிகவும் துல்லியமாக விவரித்துள்ளார் கரன் கார்க்கி' என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆம் மேற்சொன்னவைகள் மிக மிக விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன... கதையின் போக்கில் எந்த மாற்றமும் இல்லாமல் கதையினூடே கதை மாந்தர்கள் வழியே வரலாற்று நிகழ்வு, இராண்டாம் உலகப்போரின் காலகட்டம் நம் கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது. காட்சிகள் கண் முன்னே விரியும்படி கதை சொல்லியிருக்கிறது நான் மதிக்கும் அண்ணன் கரன் கார்க்கியின் எழுத்து... இதுவே அவரின் வெற்றி... நாவலின் வெற்றி.

எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் உழைப்பு மகத்தானது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முழுப் புனைவாய் எழுதாமல் அதற்கென உழைத்து இப்படி ஒரு அற்புதமான நாவலைக் கொடுத்திருப்பது பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இவ்வளவு துல்லியமான தரவுகளுடன் வரலாற்றுப் பின்னணியில் ஒரு நாவல் இதுவரை எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு தகவல்கள் எல்லாம் மிக நேர்த்தியாய்த் தேடி எடுக்கப்பட்டு கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மரப்பாலம் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் தனது கறுப்பர் நகரம் குறித்த பேட்டியில் 'அடுத்து சயாம்-பர்மா மரண ரயில் குறித்து என்னுடைய பார்வையில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மரப்பாலம் மறக்கப்பட்ட வரலாற்றின் மீதான புனைவாக இருக்கும். முக்கியமான நாவலாக இருக்கும்.' என்று சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. இது தமிழின் முக்கியமான நாவல்தான் என்பதில் சந்தேகமேயில்லை.

எழுத்தாளர் கரன் கார்க்கியின் மரப்பாலம், கறுப்பர் நகரம், சட்டைக்காரி என நான் வாசித்த நாவல்கள் எல்லாமே நமக்கு முந்தைய தலைமுறைகளின் வரலாறுகளைச் சுமந்து வந்திருக்கும் நாவலகள். கரன் கார்க்கி கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மரப்பாலம்... உலகை உலுக்கிய இரண்டாம் உலகப்போரின் ஒரு ஆவணமெனக் கொள்ளலாம். 

ஆழ்ந்து வாசிக்க வேண்டிய நாவல். 

சில இடங்களில் வாசிக்கும் நம் இதயத்தை அறுக்கும் சோளகர் தொட்டி போல.

மரப்பாலம்
கரன் கார்க்கி
உயிர்மைப் பதிப்பகம்
விலை : ரூ. 500 
-‘பரிவை’ சே.குமார்.

2 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

நல்ல அறிமுகம்
பாராட்டுகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய முயற்சி (அனுபவம்) தொடரட்டும் குமார்...