மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 டிசம்பர், 2019

மறக்க முடியாத 2019 - வலியிலும் மகிழ்விலும்

Image result for 2019
31-12-2019 இந்த வருடத்தின் நிறைவு நாள்.

இந்த வருடம் என்ன செய்தது என்பதை இந்த நாளில் பலர் நினைவு கூர்ந்து எழுதுகிறார்கள்.

எப்பவுமே கடந்து சென்ற வருடம் செய்ததையும் வர இருக்கும் வருடம் செய்ய இருப்பதையும் பெரிதாய் பேசுவதில்லை. இதற்குக் காரணம் வருடங்கள் வயதை மட்டுமே கூட்டி விட்டுச் செல்கின்றனவே ஒழிய, மாற்றங்கள் என எதுவும் இதுவரை நிகழ்ந்து விடுவதில்லை. இனி வரும் வருடங்கள் நிகழ்த்தும் என்ற கனவு எதற்கு...?

2019 என்னைப் பொறுத்தவரை வடிவேலுவை முட்டுச் சந்தில் வைத்து அடித்து அதுவும் போதாதென மூத்தரச் சந்தில் வைத்து அடித்த கதைதான்... இத்தனை வலிகளையும் வேதனைகளையும் எந்த வருடமும் கொடுத்ததில்லை என்று மட்டும் அடித்துச் சொல்ல என்னால் முடியும். 

இன்னும் தீராப் பிரச்சினைகளை அடுத்து வரும் 2020க்கும் மிச்சம் வைத்தே செல்கிறது. வலிகளை அவ்வளவு சீக்கிரத்தில் இறக்கி வைத்து விடுவாயா என்ற எகத்தாளத்துடன் சிரிக்கிறது.

வருட ஆரம்பம் முதலே விராட் ஹோலியைப் போல அடித்து ஆட ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை என்பதே உண்மை. பணமே பிரதானம் என்னும் உலகில் அதுவே மிகப்பெரிய பிரச்சினையாய்... கடன்களும் வட்டிகளும் தூங்கா இரவைத்தான் கொடுத்தன... வலியை நான் சுமந்ததைவிட என் மனைவியே அதிகம் சுமந்தார். அரவணைப்புக்கு ஆளின்றி தினமும் கஷ்டத்தை மட்டுமே தலையணையாக வைத்து கலங்கிக் கொண்டிருந்தார்... இருக்கிறார்.

2019 என்னை வாட்டி அவர்களையாவது மகிழ்வாய் வைத்திருந்திருக்கலாம்... ஆனால் செய்யவில்லை. என்னைவிட அவர்களையே அதிகமாய் வாட்டியது. அவ்வப்போது உதவ நண்பர்கள் இருந்தாலும் எத்தனை முறை அவர்களிடம் நிற்பது..? 

இந்த வருடம் கொடுத்த மிகப்பெரிய வலி ஊருக்கு ஒருமுறை கூட செல்ல முடியாததுதான். கிட்டத்தட்ட 19 மாதங்களுக்குப் பிறகு விடுமுறை கேட்டு விண்ணப்பித்த போதும் ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரமென ஏலம்தான் கேட்கிறார்கள். ஒரு வாரம் போய் என்னடா பண்ணமுடியும் என சண்டை போட்டுப் போட்டு இப்போது நாலு வாரம் என்பதாய் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

வருட இறுதியில்தான் இரண்டு நேர்முகத் தேர்வு வந்தது... தேர்வில் வெற்றி என்றாலும் இன்னும் அவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யாமல் காத்திருக்க வைத்திருக்கிறார்கள்... சம்பள விவகாரம்தான் முக்கிய முடிவாக இருக்கும். இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வரும் முயற்சி விதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் செடிபோல அழகாகத்தான் தழைத்தது. பச்சைப் பசேரென நிற்கும் செடி சில நாளிலேயே காய்ந்து போவதைப் போல் பின்னொரு நாளில் அது தோல்வியில் முடிந்தது. வலிகளைச் சுமக்கத் தெரிந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

நமக்கும் காலம் வருமென்ற நம்பிக்கைதான் இந்த வருடம் முழுவதும் பல நேரங்களில் மனசுக்குள் தோன்றிய நேர்மறை எண்ணங்களை மாற்றியது. அதேபோல்தான் ஷார்ஜா புத்தக விஷயத்திலும் மனம் எண்ணிக் கொண்டது. 

மிகப்பெரிய வலிகளை வாழ்க்கையில் சுமக்க வைத்த வருடமென்றாலும் எழுத்தில் என்னை நிறைவடையவே வைத்தது என்று சொல்லலாம். அந்த எழுத்தே பல நேரங்களில் என் மோசமான சிந்தனைகளை மாற்றி அமைத்திருக்கிறது. இல்லையேல் இந்நேரம் நானில்லை என்பதாய்த்தான் இருந்திருக்கும்.

காற்றுவெளியிலும் தேன்சிட்டிலும் பாக்யா மக்கள் மனசு பகுதியிலும் கிட்டத்தட்ட எல்லா மாதத்திலும் என் படைப்பு வந்திருக்கிறது. இதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிதான் என்னைப் பொறுத்தவரை.

முத்துக்கமலத்துக்கு அவ்வப்போது அனுப்புவதுண்டு... அதுவும் பிரசுரமாகும்... ஒருமுறை என் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகப் பரிசு பெற்றது. புத்தகங்கள் வீடு வந்து சேர்ந்தன.

நண்பர் சத்யா அகல் மின்னிதழுக்கு கட்டுரை எழுதச் சொல்லி வாங்கிப் போடுவார்... அங்குதான் நான் மனதுக்குப் பிடித்த கட்டுரைகள் பல எழுதியிருக்கிறேன். இந்த முறைதான் இரண்டு கதைகள் வேண்டுமென்றார். நான் மூன்று கதைகளுடன் ஒரு கட்டுரையும் அனுப்பினேன். அவருக்கு எல்லாம் பிடித்துப் போனது. ஒவ்வொன்றாய் வரும் என்று நினைக்கிறேன்.  

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணா கேட்டு வாங்கி போடும் கதையில் மூன்று அல்லது நான்கு கதைகள் இந்த வருடத்தில் போட்டிருக்கிறார். இன்னும் அதிகமாக அனுப்பியிருந்தால் அவரும் பகிர்ந்திருப்பார். நாந்தான் அனுப்பவில்லை. நல்ல விமர்சனம் வேண்டுமெனில் எங்கள் பிளாக்கில் கதைகளைப் பகிரவேண்டும்.

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத்தொகை வந்ததான்னு கேட்கக்கூடாது... எழுத்து தனக்கான இடத்தைப் பிடித்ததேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்... அதைத்தான் நான் எப்பவும் செய்வேன்... இப்பவும் கூட.

கொலுசு மின்னிதழில் கவிதைகள் வெளிவந்தன. 

பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும் பிக்பாஸ் குறித்து எழுதிய பகிர்வுக்கு பிரதிலிபியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வருடம் அதிகம் வாசிக்கப்பட்டோர் வரிசையில் என்னையும் பிரதிலிபி சேர்த்திருக்கிறது. இல்ல முகவரி எல்லாம் வாங்கியிருக்கிறார்கள். புத்தாண்டு பரிசு அனுப்புவார்களாம்.

மின் கைத்தடி இணைய இதழில் முதல் சிறுகதை எழுதிய எழுத்தாளன் எனப் பெயர் பெற்றதுடன் தீபாவளிக்கு என் கதையை சிறப்புச் சிறுகதையாகப் பகிர்ந்து கொண்டார்கள். நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் 'இணை' எனக்கு மிகவும் பிடித்த கதையாய்... இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மின் கைத்தடிக்கென ஒரு புத்தாண்டு வாழ்த்து வீடியோ கேட்டு அதன் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. கமலக்கண்ணன் பேசினார். எழுத்து பல நண்பர்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சிறுகதைகள்.காம் தளத்தில் என் கதைகள் பகிரப்பட்டன.

மனசுக்குப் பிடித்த புத்தகங்கள் வாசித்து அது குறித்து வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டேன். அதன் ஆசிரியர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டது மகிழ்வான நிகழ்வு. இதை எழுதும் போது காற்றுவெளியில் வந்த மரப்பாலம் கட்டுரையை வாசித்த திரு.கரன் கார்க்கி அவர்கள் கட்டுரை சிறப்பு , இந்தளவு மரப்பாலத்தை உள்வாங்கி எழுதியிருப்பது மகிழ்ச்சி என முகநூலில் தனிச்செய்தி அனுப்பியிருக்கிறார். இதைவிட வேறென்ன வேண்டும்..?

சென்ற ஆண்டைவிட இந்த வருடம் எழுதிய கதைகள் குறைவுதான் என்றாலும் எல்லாமே மனசுக்கு நிறைவாய்.

எழுத்தாளர் சுப்ரஜா தீபாவளியின் போது டிஜிட்டல் தீபாவளி மலர் கொண்டு வந்தார். அதற்கு கதை அனுப்பியபோது புத்தகம் தயாராகிக் கொண்டிருந்ததால் அதில் இடம்பெறவில்லை. இதோ இப்போது பொங்கல் டிஜிட்டல் மலரில் முத்திரைக் கதையாக வர இருக்கிறது.

அமேசானில் எனது 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவலை வெளியிட்டு வைத்திருக்கிறேன். அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்பதை அறியும் ஆவலுடன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரபு மற்றும் நெருடாவின் முயற்சியால் சகோதரர் தசரதன் கதைகளை வாங்கிப் படித்து அதில் அவருக்குப் பிடித்த 12 கதைகளைத் தேர்வு செய்து 'எதிர்சேவை' என்னும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். என் எண்ணப்படி எழுத்து தனக்கான இடத்தைப் பணம் கொடுத்துப் பிடிக்காமல் இத்தனை விரைவாய் ஒரு புத்தகம் வருமென நினைக்கவேயில்லை. இறைவன் நாடினால் எதுவும் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றாலும் மேலே சொன்ன மூன்று சகோதரர்களும் நன்றிக்குரியவர்கள்.

இப்படி எழுத்து என்னை மெல்ல மேல் நோக்கிக் கொண்டு சென்று கொண்டுதான் இருக்கிறது என்றாலும் இது மட்டுமே வாழ்க்கை அல்லவே. வாழ்க்கையோ 'நாளை என்ன செய்யப் போகிறாய்..?' என்ற கேள்வியுடந்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

2020-ல் சிம்ம ராசிக்கு செல்வாக்குத்தான் என ராசிபலன் சொன்னாலும் இன்றைய நிலையில் இருக்கும் பிச்சைக்காரன் நிலமை உடனே எப்படி கோடீஸ்வரனாகும்..? கடினமான பாதையில்தான் இதுவரை நடந்து வந்திருக்கிறேன். இனிமேலேனும் கற்களும் முற்களுமில்லாத பாதையாக அமைந்தால் நலம்.

வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பேன் என்பதில் மட்டும் எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. வலிகளும் வேதனையும் என்றாவது மாறாதா என்ன..?

2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...

Image result for 2020

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த வருடம் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வீர்கள் குமார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா...

Hema சொன்னது…

2020 மிகச் சிறப்பான வருடமாக அமையும் என்று பேரன்போடு வாழ்த்துகிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம். முதல் வருகை.
ரொம்ப நன்றி சகோதரி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

வேதனையிலும் தன்னம்பிக்கையுடன் அருமையான எழுத்து நடை. எழுத்துலகில் தங்களது முன்னேற்றங்கள் மகிழ்ச்சியை தருகிறது.

இந்த வருட குழப்பங்கள், அது தருவித்து தந்த வேதனைகள் நீங்கி, வரும் புத்தாண்டு தங்கள் வாழ்வில் அத்தனை நலன்களையும், ஒருசேர அழைத்துக் கொண்டு வந்து தங்களுக்கு நன்மைகள் தர மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

சென்ற வருடத்தின் கஷ்டங்கள் இந்த வருடம் விலகட்டும்.   வரும் ஆண்டுகள் துன்பங்களைக் குறைத்து, இன்பங்களை அதிகம் வழங்கட்டும்.  உங்கள் புத்தக முயற்சிக்கு வாழ்த்துகள் குமார்.   எங்களையும் சொல்லியிருப்பதற்கு நன்றி.   அதிகம் கதைகள் அனுப்புங்கள்.   ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Bhanumathy Venkateswaran சொன்னது…

சென்ற ஆண்டின் துயரங்கள் எல்லாம் இந்த ஆண்டில் தீர்ந்து, செழிப்பான, மகிழ்வான ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வேண்டுகிறேன் 

துரை செல்வராஜூ சொன்னது…

மேன்மேலும் மேன்மைகள் எய்த வேண்டும்...

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வாழ்வின் யதார்த்தமே இதுதான். இனிவரும் ஆண்டுகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் குமார்.

இந்த வருடம் உங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

துபாய் ராஜா சொன்னது…

இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

Thenammai Lakshmanan சொன்னது…

எல்லாம் நலமாகும் குமார். பாஸிட்டிவாகவே நினையுங்கள். எழுத்து சம்பந்தமா எல்லாம் முடியும்போது மற்றதெல்லாமே நல்லாத்தான் நடக்கும். நடக்கும் என்று நம்புங்கள். எங்கள் பிரார்த்தனைகளும். குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் ( மனைவிக்கு ஸ்பெஷலாக ) வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

Pandiaraj Jebarathinam சொன்னது…

சிறப்படைய வாழ்த்துகள்!!

சிகரம் பாரதி சொன்னது…

2020இலும் பேச வருமாறு தங்கள் மனதை அழைக்கிறேன்.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எட்டாவது தளமாக தமிழா… தமிழா… வலைப் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

Ramesh DGI சொன்னது…

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News