மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பூமாராங் (காற்றுவெளி மின்னிதழ்)

சித்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி.

இதழுக்கான இணைப்பு : http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

*****பூமாராங்
'இந்த அநியாயம் எங்கயாச்சும் நடக்குமா என்ன... இப்படிப் பண்ணிட்டாளே... இவளெல்லாம் பொம்பளப் புள்ளதானா...' காயத்ரிக்கு மனசு கிடந்து அடித்துக் கொண்டது. 

'சை என்ன ஜென்மங்களோ... இவளுகளுக்கு எல்லாம் எப்படி இப்படித் தோணுதோ... இதுகளை எல்லாம் செங்கக் காலவாயில வச்சி எரிக்கணும்...' மனசுக்குள் திட்டிக் கொண்டே சுபத்ரா கொடுத்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தாள். 

வாயில் ஊற்றிய நீர் வெளியில் வடிந்து மார்ப்புச் சேலையை நனைத்தது.

"ஏன்டி... தண்ணிய மெதுவாத்தான் குடிச்சா என்ன... அப்புடியென்ன அவசரம்... எந்த ரெயிலப் பிடிக்கப் போறே.... நல்லாத்தான் சின்னப்புள்ளயாட்டம் சேல எல்லாம் நனச்சிக்கிட்டு..." சிரித்துக் கொண்டே கேலி செய்தாள் சுபத்ரா.

"அடியாண்டி நெஞ்சு பத்திக்கிட்டு எரியுது... இவளுக எல்லாம் என்ன நெனச்சிக்கிட்டு இருக்காளுக... இந்நேரம் இதயே ஒரு பய பண்ணியிருந்தான்னா நம்ம ஊர்ல எல்லாப் பயலும் வாள்வாள்ன்னு கத்தியிருப்பானுங்க... பொட்டச்சி பண்ணினா... அதுவும் அவனுக வீட்டுல பண்ணினா சத்தங் காட்ட மாட்டானுங்க..."

"ஏய்... இப்ப எதுக்கு நீ இந்தக் குதி குதிக்கிறே...?"

"என்னடி தெரியாத மாதிரி பேசுறே... இது படிச்ச பொட்டச்சி செய்யிற வேலயா... சொல்லு..."

"இங்க பாரு... அந்தக் குடும்பத்துக்கும் நம்ம பங்காளிகளுக்கும் ஒத்து வராது... நீ ஏதாவது பேசப்போக அவனுக அத ஊதிப் பெரிசாக்கி நம்மக்கிட்ட பிரச்செனக்கி வருவானுங்க... அவனுகளப் பத்தித்தான் தெரியுமில்ல... பேனப் பெருமாளா ஆக்குறவனுங்க... இது அவனுக வீட்டுப் பெரச்செனங்கிறதால பேசமா இருக்கானுங்க.. இந்நேரம் இது நம்ம வீட்டுப்பக்கம் நடந்திருக்கட்டும்... இந்நேரம் ஊருக்கே தந்தி அடிச்சிருப்பானுங்க..."

"அதுக்காக... அவ பண்ணுது செரியின்னு சொல்லுறியா...?"

"இங்க பாரு... நான் செரியா தப்புன்னு பேச வரல... இத யாரு செரியின்னு சொல்லுவா... நமக்கு இது தேவயில்லன்னுதான் சொல்லுறேன்... நம்ம வீட்டுப் புள்ளயள நாம செரியா வளத்தாப் போதும் அம்புட்டுத்தேன்… நமக்கு வேண்டாத சனங்க எப்புடிப் போனா நமக்கென்ன... விட்டுட்டு வேலயப் பாரு... கத்திரிக்காய் முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆவும்... ஆமா..."

"என்னடி இப்படிப் பேசுறே...? யாரு வீட்டுப் புள்ளயா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களோட மனசு என்ன பாடுபடும்..."

"அடிப்போடி... பாதிக்கப்பட்டவுங்களுக்காக நாம பாவப்பட்டாலும் அவனுக யாருக்காகவும் பாவப்படுறவனுக இல்லதானே... மூத்தவள ஒரு இடத்துல கட்டுனானுங்க... என்னாச்சு... மாப்பிள்ளை இப்ப வீட்டோட... எங்க பயல எங்ககிட்ட திருப்பிக் கொடுங்கன்னு கேக்க வந்த அப்பன அவனோட மவன விட்டே வெரட்ட வச்சானுங்களா இல்லயா...”

“ம்…”

“இன்னைக்கு மாமானும் மாப்பிள்ளயுமா வண்டியில சுத்துறானுங்க... பெத்த அப்பன் டவுனுக்குள்ள ஒரு கட வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கய ஓட்டிக்கிட்டு இருக்காரு... சரி அத வுடு... ரெண்டாவது புள்ளய கட்டுனானுங்களே... அதாச்சும் சேர்ந்து வாந்துச்சா... புருஷன் அடிக்கிறான்... புருஷன் திட்டுறான்னு தினம் ஒரு பொய்ய ஆத்தாக்கிட்ட அவுத்து விட்டுட்டு... அத எல்லாரயும் நம்ப வச்சி... ஆத்தா பின்னாடியே திருஞ்சிச்சு... முறுக்கிக்கிட்டு போன அவ புருஷன் இப்ப மாமியாவுக்கு டிரைவரு... பொண்டாட்டி முந்தானய பிடிச்சிக்கிட்டு அவனும் பெத்த நாத்தானப்பன ஏவங் கேக்குறானா இல்லயா... விட்டுட்டுப் போடின்னா..."

"ஏன்டி வெக்கங் கெட்டவனுங்க பெத்தவங்கள விட்டுட்டு இங்க வந்து கிடக்குறானுங்களே... இதே மாதிரி நாளக்கி இவங்க பொத்திப் பொத்தி வளக்குற மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... அவன் இவங்களப் பாக்காம மாமியா வீட்டுக்குப் பொயிட்டா... பொயிட்டா என்ன... போகத்தான் போறான்... நான் பாக்கத்தான் போறேன்... அன்னக்கி கெடந்து கத்துவாளுங்கதானே... அப்பத் தெரியுமில்ல அவங்க பண்ணுனதோட பலனு..." கடுகடுப்பாகப் பேசினாள் காயத்ரி.

"என்னத்த அனுபவிக்கப் போறானுக... அவனுக நல்லாத்தான் இருப்பானுக... நல்லது நெனக்கிற நமக்குத்தான் எல்லாமே நேர்மாறா நடக்கும். செரி நீ எதுக்கு இம்புட்டுக் கோபமா இருக்கே... அவுக வெதச்சத அவுக அறுப்பாக... அந்தாளுக்கு அதெல்லாம் தெரியமயா மாப்பிள்ளகளுக்கு நில புலனெல்லாம் வாங்கி இங்கிட்டே செட்டில் பண்ணுறான்... என்ன செய்ய... இன்னக்கி ஒரு குடும்பதையில அறுத்துப் போட்டுப்புட்டானுக... செரி இதப் பேசுனா மனசு ஆறாது...  விட்டுட்டு வேலயப் பாருடி..."

"எனக்கு அந்த வீட்டு மூணாவது சிறுக்கி பண்ணுனதைக் கேள்விப்பட்டதுல இருந்து மனசு கொதிக்கிதுடி... நாக்க புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என்னோட கோபமெல்லாம் அடங்கும். என்ன தகிரியம் அந்தக் குட்டிக்கு... என்ன நெஞ்சுரம் இருந்தா இப்படிப் பண்ணியிருப்பா..."

"அவதான் லெட்டர் எழுதி வச்சிருக்காளாமே... எனக்குப் பிடிக்கல... எங்கப்பாம்மாதான் என்னை கட்டாயப்படுத்துனாங்கன்னு..."

"படிச்சிருக்காதானே... பிடிக்கலன்னா முன்னாடியே சொல்றது... ஒருத்தனோட வாழ்க்கயில்ல போச்சு... நெடுங்குளத்துல மரியாதயான குடும்பத்துப் பிள்ள அது... ரோட்டுல பாத்தாக்கூட பல்லுத் தெரியாம சிருச்சிக்கிட்டு அத்த நல்லாயிருக்கிகளான்னு கேட்டுட்டுப் போகும்... அதோட வாழ்க்கயில வெளாண்டுட்டாங்களே பாவிய..."

"சொத்துப் பத்து இருக்க குடும்பம்ன்னு இவங்க போனாங்க... அவங்களுக்கும் இவுக மாப்பிள்ளகள வீட்டோட வச்சிக்கிறதும் தெரிஞ்சிருக்கு... இவ சங்கதியும் தெரிஞ்சிருக்கு… சரி தூரத்துச் சொந்தம் வேற... நமக்கிட்ட அப்படியெல்லாம் நடக்க மாட்டாக... புள்ளயும் பாக்க கலரா மொக லெட்சணமா இருக்கா... அவளும் ஒத்துக்கிட்டு பயலையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளேன்னு நெனச்சிருக்காங்க... பாவம் இப்ப வெளிய தலகாட்ட முடியாம நொந்து போயிகெடப்பாக... அதுக்காக நாம என்ன பண்ண முடியும்... “

"என்ன பண்ண முடியும்ன்னு என்னால் இருக்க முடியலடி... அவள… அந்தச் சிறுக்கி மவ சிறுக்கியோட முடியை அறுத்து எரியணும்... களவாணி நாயக் கண்டந்துண்டமா வெட்டணும்... என்ன ஒரு திமிரு... எம்புட்டுத் தகிரியம்… ஒருத்தனுக்கு கழுத்த நீட்டிட்டு எனக்குப் பிடிக்கல... நான் லவ்வு பண்ணுனவன் கூட போறேன்னுட்டு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போவா...”

“அவள வெட்டுணாச் சரியாயிருமா…” 

“இந்தச் சிறுக்கிய வெட்டுறதவிட இவளக் கூட்டிக்கிட்டு போனாம்பாரு அவனயும் சேர்த்து வெட்டணும்... பாவம் அந்தப் புள்ள மனசொடிந்து போயி மருந்தைக் குடிச்சி இப்ப ஆஸ்பத்ரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காம்.... அதோட தலயெழுத்து இந்தச் சிறுக்கிய கட்டி தொட்டுக்காம கட்டிக்காம மருந்தக் குடிச்சிட்டுக் கெடக்கு... இனி அதுக்கு கல்யாணமின்னாலே பாவக்காய் சாப்பிட்ட மாதிரி நெனக்காதா..."

"சனியன் இத்தோட போச்சுன்னு விட்டுட்டு வேற புள்ளயப் பாத்து கட்டிக்கிட்டு அது சந்தோஷமா வாழணும்... இதை நெனச்சிக்கிட்டு செத்து என்ன பண்றது... சரி அதை விட்டுட்டு நீ வேலயப் பாரு... எவளோ எக்கேடோ கெட்டுட்டுப் போறா... நாம் பொலம்பி என்னாகப் போவுது."

"என்னடி இப்படிப் பேசுறே... நீ எல்லாத்தயும் லேசா எடுத்துக்கிறே...? ஆனா என்னால முடியல..."

"வேற என்ன பண்ணச் சொல்றே... நம்ம புள்ளயா இப்படிப் பண்ணுச்சு... அது ஒரு கேடுகெட்ட குடும்பம்... அதப் பேசி என்ன பண்ண.... எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா உன்னய மட்டுமில்ல என்னயிம் தூக்கிப் போட்டு மிதிக்கும்... இது நமக்குத் தேவயா... வேலையைப் பாருன்னா..." 

“நம்ம பரம்பரெக்கே இந்தப் புத்தியில்ல…”

“நீ சொல்றது செரிதான்…”

"என்னவோ போ... இப்படியும் பண்ணிட்டு எப்படித்தான் சந்தோஷமா வாழுவாளுங்களோ தெரியல... என்னத்தைப் படிச்சி என்ன புண்ணியம்... படிக்க வச்சதுக்கு இதுதான் பலன்... ம்... நம்ம வீட்டு புள்ளயளயும் காலாகாலத்துல கட்டிக் கொடுக்கணும்... காலங் கெடக்குற கெடயில நமக்கெல்லாம் இந்தப் பேரு வேண்டாந்தா..." என்றபடி எழுந்தாள் காயத்ரி.

"ஆமா யாரக் கூட்டிக்கிட்டு ஓடுனாளாம்..." சுபத்ரா மெதுவாகக் கேட்டாள்.

"என்னடி என்னய பேசாதேன்னு சொல்லிட்டு இப்ப நீ மறுக்கா ஆட்டய ஆரம்பிக்கிறே...?"

"இல்ல யாருன்னு வெவரந் தெரியுமான்னு கேட்டேன்..."

"இவுகதான் மெட்ராஸ்ல வேல பாக்குறேன்னு லாத்துனாகள்ல... அங்க எவனோ ஒருத்தன லவ்வு பண்ணுனாகளாம் லவ்வு... வீட்ல சொன்னதுக்கு யாரு எவன்னு கூட கேக்காம நாங்க சொல்றவனத்தான் கட்டிக்கணுமின்னு மிரட்டி இந்தப் புள்ளக்கி கட்டி வச்சாகவளாம்”.

“அது செரி…”

 “ஒரு மாசமா ரெண்டுக்கும் ஒண்ணும் நடக்கலயாம்... ஒப்புக்குத்தான் புருஷன் பொண்டாட்டியாம்... வீட்டுக்குள்ள தனித்தனியாம்...  என்னமா யோசிக்கிறாளுங்க இப்ப உள்ளவளுவ...”

“அடி ஆத்தி…. இம்புட்டு நடந்திருக்கா… நமக்குத்தேன் ஒண்ணுந் தெரியிதில்ல…”

“சனியன் ஒத்துக்காம மருந்தைக் குடிச்சி செத்திருந்தாக்கூட பரவாயில்லை... அவன மேடயேத்தி இன்னக்கி அறுத்துப் போட்டுட்டு பொயிட்டா... அவளக் கூட்டிக்கிட்டு ஓடுன நாயி வெளங்குங்கிறே... எங்கயாச்சும் போகயில ரெண்டும் அடிபட்டுத்தான் சாகும்..." கைகளை நெறித்து 'சடச்சட'வென நெட்டி பறித்தாள்.

"சரி வாறேன்... பொழுசாய அங்கிட்டு வா..." என்றபடி எழுந்து முந்தானையை இழுத்து சொருக்கிக் கொண்டு அவிழாத கொண்டையை அவிழ்த்து கொண்டை போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினாள்.

'என்ன காயத்ரி ஒனக்கு வெசயந் தெரியுமா... ஒங்கண்ணன் மவன் இருக்கானுல்ல... அதான் ஒம்மவ செம்பவத்த கட்டணுமின்னு வச்சிருந்தியே... அந்தப்பய கூட வேல பாக்குற புள்ளய கட்டிக்கிட்டானாம்.... இப்பத்தான் ஒங்கண்ணனுக்குத் தெரியுமாம்... வீட்டுல கூகூன்னு கெடக்காம்... ஒங்கூரு ராமசாமி சொன்னான்... ஒனக்கு யாரும் சொல்லலயா...' என்றபடி மாணிக்கம் சைக்கிளை மிதிக்க, மகள் செண்பகம் கண்ணில் தோன்றி மறைய காயத்ரிக்கு நெஞ்சை அடைத்தது.

*************

நான் எழுதிய 'ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்' என்ற பகிர்வு துபை நண்பர் நந்தகுமார் மூலமாக இந்நேரம்247 என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இந்நேரத்தாருக்கும், அதற்கு காரணகர்த்தாவாக இருந்த நண்பருக்கும் நன்றி. அந்தப் பதிவின் கீழ் பேரைக் கொண்டு வருவதற்குத்தான் வெகுநேரம் முயற்சிக்க வேண்டியிருந்தது.

***

பிரதிபிலி மாயா சிறுகதைப் போட்டியில் 'பய'ராத்திரி அப்படிங்கிற பேர்ல நம்ம கதையும் இருக்கு. பேய், பிசாசு, திகில் எல்லாம் கலந்து எழுத வேண்டிய கட்டாயத்தால் கிறுக்கிப் பார்த்தேன்... வாசிங்க... ஆனா இதுல என்னய்யா திகிலு இருக்குன்னு கம்பு தூக்கிறாதீங்க.... நன்றி.


***
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...