மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018சிறுகதை : எதிர்சேவை

Image result for தல்லாகுளத்தில் அழகர்

ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்றாங்கன்னு கை, கால் புரியல... எங்கண்ணன் அதை விரும்பிச் சாப்பிடும்... இதை விரும்பிச் சாப்பிடும்ன்னு ஒரே அண்ணன் புராணம். 

எனக்கு மாமாவோ அத்தையோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாமா மக அகிலா வருவாதானே... சின்னப் பிள்ளையில் பார்த்தது. இப்போ எப்போதேனும் மாமா வீட்டுக்குப் பேச நேர்ந்தால், ஒருவேளை அவள் போனெடுத்தால் ரெண்டு வார்த்தை பேசுவாள் அவ்வளவுதான்.

மாமா தன்ராஜ்... அம்மாவுக்கு நேரே மூத்தவர்... மாமாவுக்குப் பின்னே அம்மாவும் லெட்சுமி சித்தியும் கஸ்தூரி சித்தியும்... மாமாவுக்கு திருச்சி பெல்லில் இஞ்சினியர்... வசதி வாய்ப்புக்கு குறைவில்லை... ரெண்டு கார் வைத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த பந்தங்களில் நல்லது கெட்டதில் அவரைப் பார்க்க முடியும். எங்க வீடுகளுக்கு எல்லாம் வருவதில்லை... வேலை அதிகம்... லீவு போட்டு சொந்தம் பந்தமெனப் போனால் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்கும் என்பார். ஆனால் அது காரணமில்லை... அத்தைக்கு அம்மாக்களுடன் அப்படி ஒன்றும் இணக்கமான உறவில்லை என்பதே காரணம்.

இந்த முறை அழகர் வைகையில் இறங்குவதைக் காண வருகிறேன் என்பதெல்லாம் ஜால்சாப்புத்தான்... மதுரையில் பிரபலமான துணிக்கடை முதலாளி மகளை மகனுக்குப் பேசவே அழகர் பேரைச் சொல்லி.... அம்மாவைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி... வருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கான பயணம்தான்... அழகருக்காகவோ தங்கைக்காகவோ அல்ல என்றாலும் இந்தப் பயணத்தில் நான் அகிலாவைப் பார்க்கலாமே... அந்த ஆனந்தம் ஒன்றே இப்போது மனசுக்குள்.

மாமா வந்தது முதல் தன் பெருமையையும் பிள்ளைகள் பெருமையையுமே பேசினார். பெங்களூரில் வேலை பார்க்கும் கம்பெனியில் மகனில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பது போல் பேசினார். அகிலா மாதிரி படிக்கவே  முடியாது... எத்தனை தடவை அவ கல்லூரி முதல்வர் எனக்குப் போன் பண்ணி பேசியிருக்கிறார் தெரியுமா... அவளோட முடிவெல்லாம் டாக்டரேட் பண்ணி, நிறைய சாதிக்கணுங்கிறதுதான்... அப்படியிப்படின்னு அள்ளி விட்டார். எப்பவுமே இப்படித்தான் பிள்ளைகள் புராணம் பேசுவார்... இதொன்னும் புதிதில்லை.

அத்தையைப் பொறுத்தவரை இந்த வைர நெக்லஸ் தங்கமயில்ல சொல்லி வச்சி வாங்குனேன். அகிலா போட்டிருக்கிற ஜிமிக்கி இது வரைக்கும் நம்மாளுக யாருமே போடாத மாடல் ஜோய் அலுக்காஸ்ல சொல்லி கேரளாவுல இருந்து ஸ்பெஷலா செஞ்சி வாங்கினேன்... அவ கால்ல போட்டிருக்கிற தங்க கொலுசு சென்னை போகும்போது வாங்கினது என தற்பெருமையும் நகைபெருமையுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.

இது பெண் பார்க்கும் படலம் என்பதால் மாப்பிள்ளையும் வந்திருந்தான். எப்போதும் போனில்தான் இருந்தான். சிலேட்டு மாதிரி பெரிய போன்... யாரிடமும் பேசவில்லை... அந்தப் பக்கமாக யார் போனாலும் ஒரு சிரிப்பு... அவ்வளவே.

அகிலாவும் கூட போனில்தான் மூழ்கியிருந்தாள். வரும்போது பார்த்துச் சிரித்தவள்தான்... அதன் பின் கண்டு கொள்ளவில்லை. அவளுடன் பேச மனம் துடித்தது... ஆனாலும் நம்மோடு பேசுவதை விரும்பாதவளிடம் என்ன பேசுவது என்ற யோசனையும் தடை செய்தது. 

என் தவிப்பை உணர்ந்த தங்கை, 'என்ன அவகிட்ட பேசணுமாக்கும்... அவ எங்கிட்டயே ஒழுங்காப் பேசல... போன்ல யார் கூடவோ கடலை போடுறா... பேசாம வண்டி எடுத்துக்கிட்டு போயி உன்னோட ஆளு சுபாவோட பேசிக்கிட்டு இருந்துட்டு வா' என்றாள்.

சுபா என்னோட ஆளு இல்லை பிரண்ட்... உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு... அதிக பிரசங்கித்தனம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிய போக ஹாலைத் தாண்டியபோது 'என்ன மச்சான்... இங்க இருக்க லா காலேஜ் பத்தி எங்களுக்கே நல்லாத் தெரியுது... உங்களுக்குத் தெரியாதா என்ன... சரவணனை இதுல சேர்த்து விட்டிருக்கீங்க... இங்க படிச்சி அவன் என்ன பெரிசா சாதிக்கப் போறான்... சிந்தாமணியிலயும் தேவியிலயும் படம் பார்த்து ஊரு சுத்துவான். தலை முடியக் கூட வெட்டாம... ரவுடி மாதிரியில்ல இருக்கான்... எம்பையனையும் பாருங்க... அவனையும் பாருங்க... ஊருக்குள்ள புகாரி மெஸ் ஓனருன்னு உங்களுக்கு ஒரு நல்ல பேரு இருக்கு...  அதைக் கெடுத்துருவான் போலவே...' என என்னை வாரிக் கொண்டிருந்தார்.

'அவன் நல்லாப் படிப்பான் மச்சான்.. சின்னப்பயலுகதானே கொஞ்சம் அப்புடி இப்பிடித்தான் இருப்பானுக... வேலைக்குன்னு பொயிட்டா சரியாயிருவானுங்க...' என எப்பவும் போல் அப்பா எனக்காக முட்டுக் கொடுத்தார்.

'என்னமோ போங்க... வக்கீலுக்குப் படிச்சி என்னத்த சம்பாதிக்கப் போறான்...' என்று அவர் இன்னும் என்னை வாருவதில் குறியாக இருக்க, எனது புல்லட்டை வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன். 

'டேய் மத்தியானம் வீடு வந்து சேரு... சாயந்தரம் தல்லாகுளத்துக்கு எல்லாரையும் நீதான் கூட்டிப் போகணும்' அம்மா வீட்டுக்குள் இருந்து கத்தினாள். என் வண்டி புகையைக் கக்கியபடி கேட்டைத் தாண்டியது. 

கண்டிப்பாக மாமா இப்படி வண்டி எடுத்ததற்கும் எதாவது திட்டியிருப்பார். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழ்க்கை என்னாகிறது. மதுரை மண்ணுக்குன்னு ஒரு கெத்து இருக்கா இல்லையா.

மூணு மணிக்கு மேல்தான் வீடு வந்தேன்... 'என்ன எம்மாமன் மக எங்கிட்ட பேசமாட்டேங்கிறாடின்னு சுபாகிட்ட புலம்பிட்டு வந்தியாக்கும்... உனக்குத் தெரியுமா... அகிலா எங்கிட்ட ரொம்ப நேரம் கலகலப்பாப் பேசிக்கிட்டு இருந்தா' என வெறுப்பேற்றியவள் 'உன்னைப் பற்றிக்கூட பேசினாள்' என என் முகம் பார்க்க, போட்டு வாங்கப் பார்க்கிறா, என்ன கேட்டான்னு நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடாதேடா சரவணான்னு கேக்க நினைத்ததைக் கேட்காமல் அவளை ஒரு அசால்ட் லுக் விட்டேன். 'நம்பாட்டி போ' என நகர்ந்தவளிடம் சரி சொல்லு என்ன கேட்டா என்றதும் 'உங்கண்ணன் இப்படித்தான் ஊரு சுத்துமா... வீட்லயே இருக்காதான்னு கேட்டா' என்றவளிடம் 'அவளும் சுத்த வார்றாளான்னு கேட்டுச் சொல்லு' என்றேன்.

'சாப்பிட்டியாடா' என்ற அம்மாவின் முகம் சரியில்லை. ஏன் என்னாச்சு...? நம்ம புள்ளையைக் கட்டிக்காம வேற இடத்துல பெண் பாக்குறாரே அண்ணன்னு வருத்தமா இருக்கும் என்று நினைத்துக் கடக்க நினைத்தவனுக்கு எப்பவும் மகிழ்வாய் இருக்கும் அம்மாவை அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை. அப்பா, மாமா, அத்தையின்னு யாரும் அங்கில்லை. எல்லாரும் தூங்கலாம்... அம்மா அருகில் போய் 'என்னம்மா... முகமெல்லாம் வாடியிருக்கு' என அம்மாவைக் கட்டிக் கொண்டு கேட்டேன். 'அய்யே பாசம்' என கவிதா நகர்ந்தாள்.

'ஒண்ணுமில்லடா... எங்க சுத்திட்டு வர்றே... வந்திருக்கவங்க என்ன நினைப்பாங்க...' என்றாள் என் முகம் வருடி. 

'அவங்க என்னமோ நினைக்கட்டும்... அவங்க பாடுற புகழைக் கேட்டுக்கிட்டு இங்க இருக்க எனக்குப் பிடிக்கலை.. அதை விடு... நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே...' என்றதும் 'அதான் சொன்னேனே... ஒண்ணுமில்லேன்னு...' என்றாள். 

'சொல்லாட்டி போ...' எனக் கோபமாய்ப் போவது போல் பாசாங்கு செய்ய, 'இன்னைக்கு பொண்ணு பாக்கப் போனோம்' என்றாள்.

'அதான் தெரியுமே... உன்னோட உடன்பிறப்பு அதுக்குத்தானே வந்திருக்கு... அது சரி பொண்ணு எப்படி... உங்கண்ணன் மகன் நம்ம கவிதாவைக் கட்டிக்கலைன்னு வருத்தமோ..?' என்றபடி அம்மா மடி சாய்ந்தேன். 

'எம்மவளுக்கு என்னடா... அவளுக்கு ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவான்... அதெல்லாம் ஒரு வருத்தமுமில்லை.... அந்த துணிக்கடைக்காரன் எங்கண்ணனுக்கிட்ட உங்களுக்கு உங்க தங்கச்சி வீட்டுல வசதி பத்தலைன்னா நம்ம வீட்டுக்கு வந்துருங்க... இங்க எல்லா வசதியும் இருக்குன்னு சொல்றான்... நாம எந்த விதத்துல குறைஞ்சி பொயிட்டோம்...' 

'இதுக்குத்தானா... ஆமா உங்கண்ணன் என்ன சொன்னார்... இப்பவே வர்றோம்ன்னு சொல்லிட்டாரா...' காலைக் கடுப்பில் நக்கலாய்க் கேட்டேன்.

'சீச்சி... அங்க எல்லா வசதியும் இருக்கு... நிச்சயமெல்லாம் முடியட்டும்... அப்புறம் வரும்போது இங்க வந்து தங்குறோம்ன்னு சொன்னார்...' என்ற அம்மாவிடம் 'அப்ப அடுத்த பயணத்துல உங்க அண்ணனை நீ போய் அவர் சம்பந்தி வீட்டுலதான் பாக்கணும்...' எனச் சிரிக்க, 'உனக்கு கொழுப்பு ரொம்பத்தான்... சரி... சாயந்தரம் மாமா கார்ல எல்லாரும் தல்லாகுளம் போலம்ன்னு சொன்னார்... அப்பா கடைக்குப் போயிடுவார்... நீ கார்ல எங்ககூடவே வா...' என்றாள்.

'சாரி மம்மி... அந்தாளு கார்ல.... நெவர்.... என்னோட புல்லட் இருக்கு... பிரண்ட்ஸ் இருக்காங்க... நான் தனியாப் போயி அழகரைச் சந்திச்சிக்கிறேன்... உங்க சங்காத்தமே வேண்டாம்... கூட்டத்துல எங்கூட படிக்கிற எதாச்சும் ஒரு பொண்ணு பார்த்து ஹாய்ன்னு வந்து பேசினா உங்கண்ணன் என்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்வார்... நமக்கு ஆயிரம் பிரண்ட்ஸ் இருக்காங்க... அதுல முக்கால்வாசி பெண்கள்தான்...' என்றபடி எழுந்து சென்றேன்.

மாலை எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'அம்மா... நான் கார்ல வரலை... அண்ணங்கூட வர்றேன்...' என்றாள் கவிதா. 

'ஏன்டி அவன் எங்கிட்டு சுத்தப் போறானோ... அவங்கூட போயி...' என்ற அம்மாவிடம் ' நீங்க பூமா ஆஸ்பிடல் பக்கம்தானே காரை பார்க் பண்ணிட்டு வருவீங்க. நான் நவநீத கிருஷ்ணன் கோவிலுக்கிட்ட நிக்கிறேன்' என்றவளுக்கு அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன்.

'நானும் கவிதாவோட வண்டியில போறேன்' என்றபடி காரில் ஏறாது நின்றாள் அகிலா. 'மூனு பேரா... வண்டியிலயா... அதெல்லாம் சரிவராது. அகி வண்டியில ஏறு' அத்தை கத்தினாள்.

'போம்மா... ஜ லைக் புல்லட்... நான் வண்டியில வர்றேன்... வேணுமின்னா கவிதாவை கார்ல கூட்டிக்கிட்டுப் போங்க... நான் சரவணன் கூட வண்டியில வர்றேன்...' என பிடிவாதமாய் நின்றாள். கவிதாவை அத்துவிட அடி எடுத்துக் கொடுத்ததும் என் பெயரைச் சொன்னதும் மகழ்ச்சியாய் இருந்தாலும் நான் எதுவும் பேசவில்லை.

அகிலாவின் பிடிவாதம் வெல்ல, 'டேய் வேகமா ஓட்டாதே... ரெண்டு பேரையும் கிருஷ்ணன் கோவில்கிட்ட விட்டுட்டு நீயும் நாங்க வர்ற வரைக்கும் அங்கயே நில்லு' என அம்மா சொல்லியபடி காரில் ஏற, என் வண்டி அழகரின் புஷ்ப பல்லக்கு போல் தல்லாகுளம் நோக்கிப் பயணித்தது. 

கவிதா சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுட்டு அம்மா சொன்னதுக்காக நிற்காமல் அகிலாவுக்காக நின்றேன். அதைப் புரிந்து கொண்ட கவிதா 'நடத்துடி... நடத்து...' என மெல்ல என் காதைக் கடித்தவள், 'இங்கயே நில்லுங்க... இந்தா வர்றேன்..' என தன்னைக் கூப்பிட்ட நண்பிகள் கூட்டம் நோக்கிப் போனாள். 

'வண்டி நல்லா ஓட்டுறீங்க... அம்புட்டுச் சந்து பொந்தும் அத்துபடி போல...' என பேச்சை ஆரம்பித்தாள் அகிலா.  நான் ஒன்றும் சொல்லவில்லை.

'எனக்கும் பைக் ரைடிங் ரொம்பப் பிடிக்கும்...' கண்கள் விரித்து அவ பேசும்போது திருக்கல்யாண மீனாட்சியாய் சொக்க வைத்தாள். அதில் மயங்கி பேசாது நின்றேன். 

''என்ன பேசவே மாட்டேங்கிறீங்க... அப்புறம் கவிதாட்ட நான் பேசமாட்டேங்கிறேன்னு சொன்னீங்களாம்... வீட்லயே தங்க மாட்டீங்க போல...' என்றவள் கேட்டபோது 'எனக்கு லீவு நாள்ல வீட்டுல தங்க பிடிக்காது... நாங்க ஒரு கேங்க்கா யானைமலை, திருபரங்குன்றம், அழகர்கோவில், ஹவாவெளின்னு எங்கயாச்சும் கிளம்பிடுவோம்...' என்றேன். 

'நாங்க வந்திருக்கும் போதாச்சும் வீட்ல இருக்கலாம்ல' என்றாள்.

'நீங்க எங்க எங்கிட்ட பேசினீங்க... நீயும் உங்கண்ணனும் போன்ல சாட்டிங்... உங்கம்மாவுக்கு நகைப் பெருமை... உங்கப்பாவுக்கு என்னையத் திட்டணும்...அப்புறம் நான் எங்கிட்டு வீட்டுல இருக்குறது....' என்றதும் சத்தமாகச் சிரித்தாள்.

'அப்பா எப்பவும் பிள்ளைங்க பெருமை பேசுவார்... மற்றவங்க பிள்ளைகளை மட்டம் தட்டித்தான் பேசுவார். அது மட்டும்தான் அவருக்கிட்ட பிடிக்காது... மற்றபடி ரொம்ப நல்லவர்.... அம்மாவுக்கு நகை, பணம்... அம்மாவோட பிடுங்கலாலதான் என் கால்ல தங்கக் கொலுசு... அண்ணனை பெங்களூர் ரொம்ப மாத்திருச்சு... நீங்க யாரும் எங்கிட்ட பேசலை... அதான் நான் என் பிரண்ட்டுக்கிட்ட பிளேடு போட்டேன்...' என மீண்டும் சிரித்தாள். 

அழகரைக் காண கூட்டம் அலைமோதியது, எங்களைக் கடந்த இளைஞர்கள் மீனாட்சி போல் அழகாய் இருந்த அகிலாவைப் பார்வையால் தின்று கொண்டே சென்றார்கள். பலருக்கு அவளருகில் நான் நிற்பதே பொறாமையாக இருந்தது. கடந்து சென்ற பெண்கள் கூட அந்த அழகியை ஒரு முறை பார்க்கத் தவறவில்லை. எனக்குப் பெருமையாக இருந்தது. 

'இன்னும் ரெண்டு நாள் இங்க இருப்போம்... அழகர்மலைக்கு பைக்ல கூட்டிப் போவீங்களா..?' என அவள் கேட்ட போது கவிதா வந்து சேர, கார் பார்ட்டிகளும் வந்து சேர்ந்தது. 

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது 'சரிம்மா... வர்றேன்... நீங்க பாத்துட்டு இந்த இடத்துல வந்து நின்னு போன் பண்ணுங்க...வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...' எனக் கிளம்ப, 'இனி எங்க போறே... எங்ககூட வந்து சாமி பாத்துட்டு வரவேண்டியதுதானே...' என்றாள் அம்மா. 

'அதானே... எங்களை மறுபடியும் வீட்டுக்கு கூட்டிப் போகணுமில்ல... எங்க கூடவே வரவேண்டியதுதானே... பிரண்ட்ஸ் நாளைக்குப் பாத்துக்கலாம்...' என்றாள் கவிதா. அத்தை அவளை முறைக்க, கொய்யால இந்த முறைப்புக்காகவே நான் வருவேன்னு வண்டியை ஓரங்கட்டிட்டு அவங்க கூட நடந்தேன்.

கூட்டம் கட்டி ஏறியது... ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்க, அகிலாவின் வலது கரம் என் தோள் பற்றியது அதைக் கவனித்த கவிதா என்னை மெல்ல இடித்து 'இன்னைக்கு அழகரோட எதிர்சேவை பாக்குறோமோ இல்லையோ மீனாட்சி திருக்கல்யாணம் கூடிய சீக்கிரம் பார்ப்போம் போல' என என் காதைக் கடித்தாள். 

'வாராரு... வாராரு....அழகர் வாராரு...' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டம் நெட்டித் தள்ளியதில் அகிலாவின் இடதுகரமும் என் கையைப் பற்றியது. அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் என்ன என்பது போல் பார்க்க, எங்களின் கண்கள் எதிர்சேவை செய்து கொண்டன.

....கண்டோம் அழகர் கண்டோம் அழகு கொண்டோம் மதுரை வாழியவே !! கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே !! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே !!....

என்ற வரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, கூட்டம் ஆர்ப்பரிக்க... என் மனசுக்குள்ளும் தத்தோம்... தகிட தத்தோம்....
'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

 1. எதிர் சேவை - நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

  வெளியிடுமுன் ஒரு தடவை படித்துப் பார்த்திருக்கலாம் குமார்.... சில இடங்களில் வார்த்தைகள் சேர்க்க வேண்டியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. அட அட! மனசு லேசாகி, பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்து சேர்த்தது.

  பதிலளிநீக்கு
 3. நன்றாக இருக்கிறது நடை ,வாழ்த்துக்கள் அண்ணா,,/

  பதிலளிநீக்கு
 4. மதுரை கதைக்களம் என்பதே ஒரு தனி சுவாரஸ்யம். உறவில் திருமணம் செய்வது கூடாது என்கிற மனநிலை கூடவே வந்ததையும் மீறி அகிலா-சரவணன் உணர்வுகள் மனதில் நின்றன. உறவானால் ன்ன, வெளியானால் என்ன, காதல் காதல்தான்! ரசித்தேன் குமார்.

  பதிலளிநீக்கு
 5. எதிர்சேவைக்கு வந்த இடத்தில் காதல் கனிந்து விட்டது.
  அழகர் வந்தார் அருளைதந்தார்

  பதிலளிநீக்கு
 6. கதை மிக மிக அருமை! எதிர்சேவையில் காதல்துளிர்த்து கவிதா சொல்லியது போல் திருக்கல்யாணம் தொடங்கிடும் போல....கதையை மிக மிக ரசித்தோம் குமார்.

  ---இருவரின் கருத்தும்..

  பதிலளிநீக்கு
 7. எதிர் சேவை மதுரை மண் மனம் கமழும் கதை.

  பதிலளிநீக்கு
 8. சரவணனின் மன உணர்வுகளை அழகாகக் கொண்டு சென்றது மனசில் நிற்கிறது. காதல் நிறைவேறுமா என்பது ஒருபக்கமிருக்க, அதைத் தொட்டு, (முதலில் முதுகு, பின்னர் இடதுகரம்..)தொடர்ந்து முடித்த விதம் அருமை.
  எதிர்சேவை – பொருத்தமான தலைப்பும் கூட. ஆனால்… ஏனோ ஒரு நிறைவின்மை தோன்றுகிறதே! (எனக்குத்தான் இப்படியா? வேறுயாரும் ஏதும் சொல்லக் காணோமே?) உங்களுக்கு நல்லாக் கதைசொல்ல வருது!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...