மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 14 மார்ச், 2017

மனசு பேசுகிறது : நாக தீபம்

Image result for நாக தீபம்

நாக தீபம்...

சாண்டில்யன் அவர்கள் சேர, சோழ, பாண்டியர்களை விடுத்து ராஜபுதன வரலாற்றுக்குள் மூழ்கி முத்தெடுத்ததில் அவருக்கு கிட்டிய ஒரு சுவையான நிகழ்வே 'நாக தீபம்' புதினம். இதன் முன்னுரையில் 'கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ராணா அமரசிம்மன், ஜஹாங்கீருக்கு பணிந்து சமாதானம் செய்து கொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலை மதிக்க முடியாத சிவப்பு ரத்தினக்கல்  ஒன்றை மொகலாயச் சக்கரவர்த்திக்குக் கொடுத்ததாக குறிப்பு இருந்தது. அந்தக் குறிப்பைத் தொடர்ந்து மொகலாய ராஜபுதன போர்களைப் பற்றி ஆராய்ந்த போது வரலாற்றின் அந்தப் பகுதி மிகச் சுவையாக இருந்தது. நல்லதொரு கதைக்கும் இடம் இருந்தது' என்று சொல்லியிருக்கிறார்.

மோவாரின் படைத்தலைவனாய் இருந்து மொகலாயருக்கு எதிரான கடைசிப் போரில் மொகலாயர் படைத் தலைவன் அப்துல்லாவை வெட்டி வீழ்த்தி, வீரமாய் செயல்பட்டு எதிர்பாராத விதமாக ஈட்டி மார்பில் பாய்ந்து புரவியில் இருந்து சாய்ந்த பின்னர் ஐஹாங்கீரின் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஹரிதாஸ் ஜாலா, இரண்டு வருடங்களுக்குப் பிறகு ராணாவிடம் இருக்கும் ஒரு சிறு பொருளைக் கேட்டுப் பெற்றோ அல்லது வேறு விதமாகவோ கொண்டு வர வேண்டும் எனவும் அப்படிக் கொண்டு வந்தால் மோவாருடனான போர் நிறுத்தப்படும் என்றும் சொல்லி, அவனின் வாள் மீது சத்தியம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்யப்படுகிறான். அந்தச் சிறு பொருள்தான் மோவார் ராணியிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத சிவப்பு ரத்தினக் கல்லான 'நாக தீபம்'.

தன் நாட்டுப் பொருளை மொகலாயனுக்குத் தாரை வார்க்க தானே காரணமாய் இருக்கப் போவதை நினைத்து, தனது விதியை நொந்தபடி பலவித எண்ணங்களுடன் பாலவனப் பகுதியில் ஜஹாங்கீர் தனக்களித்த புரவியில் சென்று கொண்டிருக்கும் போது தூரத்தில் அம்பாரியிட்ட ஒட்டகத்தில் பெண்ணொருத்தி விரைந்து வர, அவள் பின்னே புழுதி பறக்க புரவி வீரர்கள் வருவதைப் பார்க்கிறான். உடனே திரும்பி அவளைக் காப்பாற்ற விரைகிறான். அவள் மோவாரைச் சேர்ந்த சந்தாவதர்கள் வம்சத்து ராஜபுத்திரி. 

அவளுடன் வந்தவர்கள் அவளின் பாதுகாப்பு வீரர்கள் என்பதை அறிந்து மொகலாயர்கள் எந்த நேரத்திலும் வரலாம்... அவள் செல்ல நினைக்கும் பிரும்மபுரிக்கு இப்பச் செல்ல முடியாது என்று சொல்லி, ஒரு குதிரையில் பொருட்களை எடுத்துக் கொண்டு, ஒரு வீரனை மட்டும் அழைத்துக் கொண்டு கால்நடையாக கொஞ்ச தூரத்தில் இருக்கும் சோலைக்குப் போய் கூடாரம் அமைத்துச் தங்கச் சொல்கிறான். அவள் முதலில் மறுத்து பின்னர் ஏற்றுக் கொள்கிறாள். அவள் அங்கு சென்று தங்கிய பின்னர் அவனும் அங்கு வருகிறான்.  அதன் பின்னான பொழுதுகள் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதலில் நகர, தான் யார் என்பதையும், ஜஹாங்கீரின் தூதனாய் தான் மோவார் செல்வதையும் அதற்கு அடையாளமாக தன்னிடம் இருக்கும் ஜஹாங்கீரின் முத்திரை மோதிரத்தையும் காட்டுகிறான் பொய் சொல்லாமல் உண்மையே பேசும் ஜாலா வம்சத்தில் உதித்த ஹரிதாஸ். 

அந்த இரவில் இருவருக்குள்ளும் மோதல் போக்கு நீடிக்கும் போது அங்கு எதிர்பாராத விதமாக வருகிறார் மொகலாயர்களிடம் சமரசமாகப் போகலாம் என்ற முடிவுக்கு வந்து மந்திராலோசனை சபையில் படைத்தலைவர்களுடனும் மந்திரிகளுடனும் ஆலோசனை செய்த அமரசிம்மனை கையைப்பிடித்து இழுத்துச் சென்று போரில் ஈடுபட வைத்து மோவரின் வீரப்பெயரை சரித்திரத்தில் இடம்பெற வைத்தவரும் ராஜபுதனத்தின் பிதாமகருமான ஜயன் சந்தாவத்.

மூவரும் பேசப் பேச, தான் எதற்காக மோவாருக்குப் போகிறேன் என்பதைச் சொல்லாவிட்டாலும் ஜஹாங்கீரின் தூதனாகப் போவதை ஜயனிடம் மறைக்காமல் சொல்லி, வாளின் மீது சத்தியம் செய்திருப்பதால் கொடுத்த வாக்குத் தவறமாட்டேன் என்றும் சொல்கிறான். அவன் மீது உள்ள வெறுப்பில் ராஜபுத்திரி அவனை சிறை செய்யச் சொல்ல, அதற்கு மறுக்கும் பிதாமகர், தான் வேறு மார்க்கத்தில் செல்வதாய்ச் சொல்லி, அவனை இப்போது கைது செய்ய முடியாது எனவும் அப்படியே கைது செய்தாலும் கணவனைக் கைது செய்து மனைவியிடம் ஒப்படைப்பதா..? என்றும் சொல்கிறார் அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பின் அவர்களிடம் சின்ன வயது நிகழ்வைச் சொல்லி, அவனின் வாளுக்கு அவள் மாலையிட்டதாகவும் அப்படிச் செய்தால் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் சொல்லி, அவர்கள் இருவரையும் மோவார் தலைநகர் ஒண்டாலாவுக்குச் செல்லச் சொல்லி, தான் திரும்பியதும் ராணா முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லிச் செல்ல, ஒண்டாலா புறப்படும் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் தொடர... அதனாலான கோபம் மெல்ல மெல்ல ஊடலாகி பின் காதலாகி.. கசிந்துருக, அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்குள் வருகிறான் மகாராணியின் சொந்தக்காரனும் ராஜபுதனத்தின் மற்றொரு படைத்தலைவனுமான சுந்தர்தாஸ். 

அவர்களின் காதலும் பேச்சுக்களும் சுந்தர்தாஸுக்கு வேப்பங்காயாக இருக்கிறது. காரணம் ராஜபுத்திரியை தான் மணம் முடிக்க ராணாவிடம் அனுமதி பெற்றிருக்கிறான். இந்நிலையில் ஜாலாவுடன் அவள் கொஞ்சுவது அவனுக்குப் பிடிக்குமா என்ன... மூவரும் மறுநாள் காலை பாலைவனத்தில் பயணித்து ஒண்டாலா கோட்டையை அடைய, அவர்களை விடுத்து சுந்தர்தாஸ் மட்டும் அரண்மனை நோக்கி விரைய, ஜாலாவும் ராஜபுத்திரியும் அவளின் இல்லம் செல்கிறார்கள். அங்கு தாங்கள் இருவரும் சேர்ந்து விட்டால் மன்னனின் தண்டனையில் இருந்து ஜாலா தப்ப முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் ராஜபுத்திரி இறங்க, ஜாலாவை மன்னர் அழைத்து வரச் சொன்னார் என காவலர்கள் கதவைத் தட்டுகிறார்கள்.

மன்னரின் அழைப்பு தண்டனைக்காகத்தான் என்பதை உணர்ந்தாலும் அதை ஏற்காமல் இருக்க முடியாது என்பதால் ஜாலா, ராஜபுத்திரியிடம் பிரியாவிடை பெற்றுச் செல்ல, ராணாவோ ஜாலாவிடம்   சுந்தர்தாஸ் மொகலாயரின் வேவுக்காரன் எனவும் அவன் எதிர்பார்ப்பது 'நாக தீபம்' என்பதையும் அதை அவன் எதற்காக எதிர்பார்க்கிறான் என்பதையும் சொல்லி, நாக தீபத்தை பாதுக்காக்க நீதான் சிறந்த ஆள் என்று சொல்லி, வெளியாட்கள் நுழையக் கூடாத, மீறி நுழைந்தால் மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய அந்தப்புரத்துக்குள், அதுவும் மகாராணியின் அறைக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு மகாராணி இவன் ஜஹாங்கீரின் தூதன் என்று வாதிடுகிறாள்.

மகாராணிக்கு எடுத்துச் சொல்லி,  அவளிடமிருந்து சிவப்பு ரத்தினக்கல்லை வாங்கித் திறந்து கட்ட, அந்த அறையே அதன் பிரகாச ஒளியால் சிவப்பாக மாறுகிறது. இது என் உயிர்... நமது ராஜ்ஜியத்தின் பாரம்பரியம் இதனால்தான் இன்றும் வளர்ந்து நிற்கிறது. இதை இழந்தால் நாட்டை இழப்போம் என்று சொல்லி ஜாலாவிடம் கொடுத்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி, வாளின் மீது சத்தியம் செய்யச் சொல்கிறார்.  ஜாலாவோ யோசிக்கிறான்... மறுக்கிறான்.

ராணாவோ எனது உத்தரவை மீறினால் மரணதண்டனை தெரியுமல்லவா என்று கோபமாய்க் கேட்க, எல்லா நாளும் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்கிறான் ஜாலா. பின்னர் பதினைந்து நாள் பாதுகாக்க முடியுமா என ராணா இறங்கிவர, அவனும் ஒத்துக் கொண்டு வாளின் மீது சத்தியம் செய்கிறான் பதினைந்து நாள் மட்டும் காப்பேன் என்று... ராணாவும் பதினாறாவது நாள் ஜஹாங்கீரிடம் கொடுக்க சம்மதிக்கிறார். நாகதீபத்துடன் அவனைச் சித்தூருக்கு பயணப்படச் சொல்லும் ராணா, வழியில் சுந்தர்தாஸை சந்திக்க நேர்ந்தால் கொன்று விடு என்றும் சொல்லி அனுப்பி வைக்கிறார். அடுத்த ஆபத்தை அறியாமல் நாலு வீரர்களுடன் கிளம்புகிறான் சித்தூரை நோக்கி.

நேர் பாதையில் செல்லாமல் வீரர்கள் சுற்றுப் பாதையில் சோலைகளில் தங்கிச் செல்ல, சந்தேகப்பட்டு ஏன்... எதனால் சுற்றிச் செல்கிறோம் என்று ஜாலா விசாரிக்க, அங்கு வருகிறான் சுந்தர்தாஸ். அவன் மூலமாக ஒண்டாலாவில் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோர் அவனின் ஆட்கள் என்றும் ராணாவே இப்போது பாதுகாப்பற்று இருப்பதையும் அறிந்து வேதனைப் படுகிறான் ஜாலா, சங்கர்தாஸோ ஜாலாவை மிரட்டி அவனிடம் இருக்கும் நாக தீபத்தைக் கேட்கிறான். ஜாலா கொடுக்க முடியாது என்று சொல்ல, இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் சிறையில் இருந்து தான் எப்படி... யாரால் விடுதலை செய்யப்பட்டோம் என்பதும், ராணியின் சொந்தக்காரனான சுந்தர்தாஸால் சுலபமாக நாக தீபத்தை கைப்பற்ற முடியும் என்ற சூழலில் ஏன் ஜாலாவைத் தேர்ந்தெடுத்தார் ஜஹாங்கீர் என்பதும் தெரிய வருகிறது. 

மற்றொரு உண்மையாக, ஜாலா ஒண்டாலாவில் இருந்து வெளிவந்த பின்னர் மொகலாய படையை கோட்டையைத் தாக்க வருமாறு சங்கர்தாஸ் அழைத்ததையும், அப்படித் தாக்கச் சென்ற மொகலாயர் படையை, ஒண்டாலாவுக்குத் திரும்பிய பிதாமகர் ஜயன் சத்தாவத்தின் தலைமையிலான படை விரட்டி அடித்ததையும், அதனால் மொகலாயரின் கோபத்தையும்  சுந்தர்தாஸின் சதித்திட்டம் பயனற்றுப் போனதையும், மொகலாய படைத்தலைவன் முகமது பெக், சுந்தர்தாஸை சந்திக்க வந்த போது கோபமாகச் சொல்வதை தான் உயிரைக் காப்பாற்றிய வீரன் ஒருவனின் உதவியுடன் அறிந்து கொள்கிறான்.

சுந்தர்தாஸுக்குத் தெரியாமல் முகமது பெக்கை தனியாகச் சந்தித்து ஜஹாங்கீரின் முத்திரை மோதிரத்தைக் காட்டி, விவரம் சொல்லி பாலைவனத்தில் படைத்தளம் அமைத்து தங்கியிருக்கும் இருக்கும் ஜஹாங்கீரால் அதிர்ஷ்டசாலி மகன் என்று அன்போடு அழைக்கப்படும் சுல்தான் குர்ரமை சந்திக்க அனுமதி கேட்கிறான்... அவனும் அனுமதித்து காலையில் கிளம்புவோம் என்று சொல்கிறான். தாங்கள் இருவரும் செல்லும் போது சுந்தர்தாஸ் வரக்கூடாது என்ற கோரிக்கை வைக்கிறான் ஜாலா.

ராணா சொன்ன பதினைந்து தினங்கள் முடிந்த நிலையில் தன் சத்தியத்தைக் காக்க ஜஹாங்கீரின் மகன் குர்ரமிடம் நாகதீபத்தை ஒப்படைக்க, அவனும் அதை முகமது பெக் மூலம் தன் தந்தைக்கு அனுப்பி வைப்பதாகவும், தந்தை சொன்னபடி போர் நிறுத்தம் செய்கிறேன் என்றும் சொல்ல,   தன்னை மீண்டும் ஒண்டாலா செல்ல அனுமதிக்க வேண்டும்... தான் மீண்டும் படைத்தலைவனாய் உங்களை எதிர்க்க வேண்டும் என்று ஜாலா சொன்னதும் இனித்தான் அமைதி நிலவப் போகிறதே ஜாலா, பின்னர் போர் எதற்கு என வினவுகிறான் குர்ரம். 

ராணா பிரதாப் அமைதியை விரும்பவில்லை என்றும் சுதந்திரத்தைத்தான் அவர் விரும்பினார் என்றும் ஜாலா சொல்ல, ஆனால் அவரின் மகன் ராணா அமரசிங்கன் அமைதியைத்தான் விரும்புகிறார். அதற்காக அவர் நேற்றே சுபகரண்சிங்கை தூது அனுப்பியிருக்கிறார் என்று சொல்ல, மிகச் சிறந்த படைத்தளபதி சுபகரண்சிங் தூது வந்திருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட்டாலும் தனக்கு தன் நாடு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை மாற்றிக் கொள்ள மறுக்கிறான் ஜாலா. பின்னர் அவனுக்கு அனுமதி கொடுத்து அவன் மீது யாரும் கைவைக்கக் கூடாது என ஓலையும் எழுதிக் கொடுத்து ஒண்டாலாவுக்கு அனுப்பி வைக்கிறான் குர்ரம்.

சில நாட்களுக்குப் பிறகு மன்னன் ராணாவின் தூதனாக மீண்டும் மொகலாயைரைச் சந்தித்து சமாதனப் பேச்சு பேசி, ராணாவை முன்னிறுத்தி தலைவணங்க வைக்காமல், சின்ன ராணா கருணாசிம்மனை அழைத்துச் சென்று காரியத்தை சுபமாக முடிக்கிறான் ஜாலா . பல ஆண்டுகளாக மொகலாயருக்குப் பணிய மறுத்த மோவாரை நிபந்தனைகளுடன் பணிய வைத்ததுடன் மோவார் ராணாவின் பரம்பரை ராசிக்கல்லான ரத்தினக்கல்லை... நாக தீபத்தை மொகலாயர் வசம் கொடுத்ததாலும் தன் மனைவியான ராஜபுத்திரியை சந்திக்கப் பயந்து அவள் மாளிகைப் பக்கம் போகாமல் இருக்கிறான். 

ஒருநாள் ராணாவே ஜாலாவை ராஜபுத்திரியிடம் அழைத்துச் சென்று அவன் நாகதீபத்தை தான் சொன்ன பதினைந்து நாள் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜஹாங்கீருக்குச் செய்து கொடுத்த சத்தியப்படி கொடுத்து விட்டதாகவும் அதன் பயனாக தான் மொகலாயரிடம் தலை வணங்காமலும் ராஜபுத்திர பெண்கள் மானம் போகாமலும் கண்ணியமான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்தான் என்று வாதிட, அவளோ திரை மறைவில் நின்று அவனை ஏற்க மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் கோபமான ராணா, 'உன் குடும்ப நாகரத்தினத்தை உனக்கு அளித்துவிட்டேன்... கைப்பற்றுவது உனது சாமர்த்தியம்' என்று சொல்லி வெளியேறி விடுகிறார். 

மூன்றாவது மனிதன் போயாச்சு... கணவன் மனைவி தனியே... கோபமும் ஊடலும் எவ்வளவு நேரம்..?  பேசிப்பார்த்த வீரன் ஜாலா, பேச்சால் காரியமில்லை என்பதை உணர்ந்து வாளை எடுக்கிறான்... மனைவி மறைந்திருக்கும் திரையைக் கிழிக்கிறான்... ஆரம்பக் கோபம்... ஊடலாகி... காதலாகி... அந்த வீட்டில் இன்ப நாதத்தை மெல்லப் பரவச் செய்கிறது.

சாண்டில்யனின் சேர, சோழ, பாண்டிய வரலாற்றுப் புதினங்களில் இருந்து மாறுதலான கதை வாசிக்க நினைத்தான் நாக தீபம், மலையரசி வாசிக்கலாம்.

-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வளவு ஆழ்ந்த விமர்சனம் உங்களால் மட்டுமே முடியும்... ரசித்தேன் - மகிழ்தேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது, மதிப்புரை. பாராட்டுகள்.

Yarlpavanan சொன்னது…

நூலுக்குள் நுழைந்து
நன்றாக அலசி உள்ளீர்கள்

ஸ்ரீராம். சொன்னது…

கதைச் சுருக்கத்தையே கொடுத்து விட்டீர்கள். சுவாரஸ்யம்தான். ஒரத்தநாடு கார்த்திக் பக்கத்தை புக்மார்க் செய்து வைத்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

40 வருடங்களுக்கு முன் படித்தது. சாண்டில்யன் நாவல்களைப்படிக்கும்போது எல்லோருமே இது 'கடல் புறா மாதிரியில்லை', 'யவனராணி' மாதிரி இல்லை என்று ஒப்பிட்டு சொல்வது வழக்கம். அந்த நினைவுகளெல்லாம் திரும்பவும் மனதில் வந்தமர்ந்தன. விமர்சனம் மிக அருமை!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான விமர்சனம் குமார். வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும்.

KILLERGEE Devakottai சொன்னது…

அலசல் அருமை நண்பரே.

Kasthuri Rengan சொன்னது…

ஆகா ஆகா ஆகாக.
யப்பா நாவலுக்கு ட்ரைலர் அருமை தோழர்
கல்லூரிக் காலத்தில் படித்து

Kasthuri Rengan சொன்னது…

தமா ஒன்று

துபாய் ராஜா சொன்னது…

அருமையான சரித்திர நாவல். அழகான கருத்துரை விமர்சனம்.

நிஷா சொன்னது…

ஆஹா எத்தனை பொறுமையாக படித்திருந்தால் இத்தனை விரிவான விமர்சனம் எழுதி இருக்க முடியும் என நினைத்து பிரமிப்பு வருகின்றது குமார். அசத்திட்டிங்கப்பூ.

இராய செல்லப்பா சொன்னது…

மீண்டும் சாண்டில்யனின் நாவலின் சுருக்கம்..கடினமான பணியை இனிமையாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இன்னும் எதிர்பார்க்கிறோம்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் அறிமுகம். பல இடங்களில் மோவார் என வந்திருக்கிறது. அது மேவார். ஹிந்தியில் மேவார் என எழுதினாலும் படிப்பது மேவாட்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
படித்து மகிழ்ந்திருக்கிறேன் நண்பரே