மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சினிமா : அம்மா கணக்கு

மலாபால் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்ற போதிலும் வாழ்க்கையை வாழத் தவறிய சினிமா நடிகைகளின் வரிசையில் இணைந்திருப்பது வருத்தமான விஷயம்.


மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்ற தன்னோட கனவை, நான் வேலைக்காரியாத்தான் ஆவேன் என்று சொல்லும் மகள் எங்கே தகர்த்து விடுவாளோ என்று மனசுக்குள் வருந்தி... அவள் படிக்க வேண்டும்... கலெக்டர் ஆக வேண்டும் என்பதற்காக தானே மாணவியாய் பள்ளிக்குச் செல்லும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு.

பதின்ம வயதுக் குழந்தைகள் தான் நினைப்பதே சரி... தான் சொல்வதுதான் சரியென வளர்கிறார்கள். பள்ளியில் நல்ல நட்பில்லாது உருப்படாத நட்புகளுடன் சேர்ந்து படிக்காமல் லூட்டி அடிக்க நினைக்கும் பிள்ளைகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். கலெக்டரோட பிள்ளை கலெக்டர்... டாக்டரோட பிள்ளை டாக்டர்... வக்கீலோட பிள்ளை வக்கீல்... அப்ப வேலைக்காரி பிள்ளை வேலைக்காரிதானே என அம்மாவிடம் தர்க்கம் செய்யும் படிப்பின் மீது ஆசையில்லாத, பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் பிள்ளைதான் அபிநயா கோபால் (யுவஸ்ரீ).

மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது அல்ப ஆயுசில் போன கணவனின் ஆசை என்பதுடன் தனது வாழ்நாள் லட்சியமே அதுதான் என்பதால் அதை நிறைவேற்ற வீட்டு வேலை... மீன் கடை வேலை... ஹோட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை என பரபரப்பாக நாளெல்லாம் வேலை பார்த்து பணம் சேர்க்கும் ஏழைத்தாய், தன் மீது மோத வந்த காரில் இருந்து இறங்கி மன்னிப்புக் கேட்ட கலெக்டர் வீடு தேடிப் போய் அவரிடம் கலெக்டர் ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் வெள்ளந்தி மனுஷி சாந்தி கோபால் (அமலாபால்)

மகளுக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்பதால் எங்கே அவள் பத்தாம் வகுப்பில் பெயிலாகி விடுவாளோவெனப் பயந்து அவளிடம் படி... படி... எனக் கத்திப்பார்த்து 'நான் வேலைக்காரியாத்தான் ஆவேன்' என்று சொன்னதும் தான் வீட்டு வேலை பார்க்கும் டாக்டர் ரேவதியிடம் புலம்புவதும் அந்தப் புலம்பலின் தொடர்ச்சியாக ரேவதி அவரை பள்ளிக்குப் போய் நீயும் படி எனச் சொல்ல, நானா... இந்த வயசிலா என்று வியந்து ரேவதியின் வற்புறுத்தலாலும் உதவியாலும் தன் மகள் படிக்கும் பள்ளியில் அவளது வகுப்பிலேயே மாணவியாகச் சேர்கிறாள் சாந்தி.

மாணவியாக அம்மா தன் வகுப்பில் இருப்பது பிடிக்காத மகளுக்கும் அம்மாவுக்கும் இடையில் பனிப்போர் மூழ்கிறது. நன்றாகப் படிக்கும் மாணவனுடன் நட்பாகி, அவனுக்கு சாப்பாடெல்லாம் கொண்டு வந்து கொடுக்கும் சாந்தி, அவன் சொல்லித் தரும் சுலபமான வழிமுறைகளைப் பின்பற்றி கணக்கை கற்றுக் கொள்கிறாள். தன் சொல்லை மீறி அம்மா வகுப்பிற்கு வருவது பிடிக்காத மகள், அம்மாவை விட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கிறாள். வீட்டுக்குள் படுக்கை தனித்தனியாக மாறுகிறது... பேச்சு வார்த்தையும் அற்றுப் போகிறது. இந்நிலையில் பரிட்சையில் அம்மா பாஸ் மார்க் வாங்க மகள் பெயிலாகிறாள். மகளின் நட்புக்கள் கூட சாந்தியின் அன்பிற்குள் வந்துவிட, தனித்து விடப்படும் அபி பொங்கி எழுகிறாள். அடுத்த பரிட்சையில் நான் அம்பது மார்க் வாங்கிக் காட்டுறேன் அப்புறம் நீ பள்ளிக்கு வரக்கூடாது என்று சொல்ல, சாந்தி ஏற்றுக் கொள்கிறாள்.


சொன்னபடி மகள் மார்க் வாங்கிக் காண்பிக்க ஆனந்தக் கண்ணீரோடு பூரித்துப் போகும் தாய், இனி பள்ளிக்கு வருவதில்லை என்று முடிவெடுக்கிறாள். அப்போது மகள் மீண்டும் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறாள்... உன்னைய ஜெயிக்கத்தான் நான் பாஸ் மார்க் வாங்கினேன்... நான் பாஸ் பண்ணினாலும் உன்னால என்னைய படிக்க வைக்க முடியாது. ஒரு வேலைக்காரி மக வேலைக்காரியாத்தான் ஆகணும் என்று சொல்ல, உடைந்து போகிறாள்... கனவு தகர்ந்தது எனக் கண்ணீர் வடிக்கிறாள். 

இரவு வேலை முடிந்து வரும் அம்மாவை ஒருவர் வண்டியில் கொண்டு வந்து விட, அதைப் பார்க்கும் மகள் அவளைத் தப்பாக நினைக்கிறாள். தப்பான வழியில் சம்பாரித்து தன்னை வளர்ப்பதாக நினைக்கிறாள். அவளைப் பழி வாங்க, நாளெல்லாம் உழைத்துக் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு வீட்டுக்கு வரும் மகளிடம் இப்ப செலவுக்கு என்னடி பண்ணுவேன் எனத் திட்டும் போது அந்தப் பணத்தை நீ எப்படி சம்பாதிச்சேன்னு தெரியும் என மகள் சொல்லவும் உடைந்து போகிறாள்.

சாந்தி பள்ளிக்கு வராதது மாணவர்களுக்கு கவலை அளிக்கிறது. சாந்திக்கு நண்பனான நல்லாப் படிக்கும் மாணவன் சாந்தி ஏன் வரவில்லை என அபியிடமே கேட்கிறான். அவளோ எனக்கிட்ட கேட்டா... எனக்கென்ன தெரியும் என மழுப்ப, சாந்தி உன்னோட அம்மான்னு எனக்குத் தெரியும் என்று சொல்லி அவளை மாலை ஒரு ஒர்க் ஷாப்புக்கு வரச் சொல்கிறான்... அங்கு செல்லும் அவள் அவன் வேலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்... அவன் மூலமாக அவள் அம்மா இவள் படிக்க வேண்டும் என கஷ்டப்படுவதை அறிவதுடன் அவள் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதையும் பார்க்கிறாள். மேலும் அந்தப் பையன் அவள் அம்மாவைக் கொண்டு வந்து விடுவது வேறு யாருமல்ல அது அதே கடையில் வேலை பார்க்கும் தன்னோட அண்ணன் என்றும் அவரும் தன்னைப் படிக்க வைக்கவே கஷ்டப்படுகிறார் என்றும் சொல்கிறான். அந்த நிகழ்வுக்குப் பின் தன் செயலை நினைத்து வருந்துகிறாள். 

மகள் படிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பள்ளிக்கு வருகிறாள். சாந்தி பள்ளிக்கு வராத சமயத்தில் உங்களது கனவு என்ன என ஆசிரியர் கேட்டதற்கு ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்ல, ஆர்த்தி மட்டும் தனக்கு கனவே இல்லை என்று சொல்கிறாள். திரும்பி வந்த சாந்தியிடம் 'உன்னோட கனவு என்னன்னு சொல்லு என்று ஆசிரியர் சொல்ல, மகளைக் கலெக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவை எப்படிச் சொல்வது என்பதால் ஒன்றும் பேசாமல் எழுந்து நிற்கிறாள். சொல்லு இல்லாட்டி வெளியில போ என ஆசிரியர் கத்த, வெளியில் போக வாயிலை நோக்கி நடக்கும் போது அவங்களோட கனவு என்னன்னு நான் சொல்றேன் சார் என ஆரம்பிக்கிறாள் அபி.

சாந்தி கோபாலாக... ஒரு ஏழைத் தாயாக அமலா பால். அப்படியே வாழ்ந்திருக்கிறார்... சிந்து சமவெளி என்னும் படத்தில் அறிமுகமாகும் போது மாமனார் மீது ஆசைப்படும் மருமகளா நடித்தவரா இவர் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு மகளுக்காக... அவள் படித்து கலெக்டராக வேண்டும் என கனவுகளுடன் வாழும் அம்மாவாக... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். அதுவும் பள்ளிச் சீருடையில் கூனிக்குறுகி மகளின் வகுப்பிற்குள் செல்வதாகட்டும்... மகளுடன் படிப்பில் போட்டி போடுவதாகட்டும்... கலெக்டர் வீட்டுக்கு அலைவதாகட்டும்... ரேவதியிடம் புலம்புவதாகட்டும்... இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராத மகளுக்காக வீதியில் பதட்டமாய் காத்திருப்பதாகட்டும்... கலக்கியிருக்கிறார் அமலா பால். வாழ்த்துக்கள்...

மகளாக வரும் யுவஸ்ரீக்கு இது முதல் படம்... துடுக்குத்தனமான பேச்சுடன் பள்ளியில் அடிக்கும் லூட்டி... அம்மாவிடம் தர்க்கம் பாடுவது... பள்ளிக்கு வரும் அம்மாவுடன் மோதுவது... அம்மாவை விரட்ட கணக்கு பாடத்தை விரும்பிப் படிப்பது... தனது தோழமைகள் தன்னை விட்டு அம்மாவுடன் நட்பாகும் போது கொதிப்பது... அம்மா வேறொருவருடன் தவறாக பழகுகிறாள் என நினைத்து அவள் சேமித்து வைத்த பணத்தை எடுத்துப் போய் ஊதாரித்தனமாக செலவழிப்பது... அம்மாவின் நிலை அறிந்து வருந்துவது... அம்மாவின் கனவு என்ன என கண்ணீரோடு சொல்வது என அமலா பாலுக்கு நிகராக சிக்ஸர் அடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி தலைமை ஆசிரியராக வருகிறார்... நம் பள்ளியில் இவரைப் போல் ஒரு சில ஆசிரியரைப் பார்த்திருக்கலாம் என்றாலும் ஒரு தலைமை ஆசிரியர், இப்படி கோமளித்தனமாக நடப்பதாக காட்டுவதை ஏற்கமுடியவில்லை. தேசிய விருது வாங்கிய நடிகனை ஒரு சாதாரண தலைமை ஆசிரியனாக காட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... நடிப்பும் வெளுத்து வாங்கியிருப்பார். அவரின் செயற்கைத்தனமான உடல்மொழி மனதில் ஒட்டவில்லை.

ரேவதியை முதல் காட்சியில் பார்க்கும் போது 'பச்சைமலைப் பூவு இது உச்சி மலைத் தேனு...?' என கார்த்திக் பாட, அழகோவியமாய் இருக்கும் ரேவதியா இது என்று தோன்ற வைத்தது மேக்கப் இல்லாத முகம். வயதான கோலத்தில் ரேவதியை மனது ஏற்க்கவில்லை என்றாலும் இதுதானே நாளை நமக்கும் என்பதாலும் அதன் பின் மேக்கப் போட்ட ரேவதியாக வலம் வந்ததாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது. தன் பங்கு நடிப்பை எப்பவும் போல் சிறப்பாக செய்திருந்தார். அவரின் கணவராக வருபவருக்கு அதிக நடிப்பில்லை.

கணக்கில் புலியாக வரும் சோடாபுட்டி கண்ணாடி போட்ட மாணவனின் நடிப்பும், யுவஸ்ரீயின் தோழமைகளாக வரும் இருவரின் நடிப்பும் அருமை. கலெக்டர், கலெக்டர் வீட்டு காவலர்கள், பக்கத்து வீட்டுப் பெண், மீன் கடை சூப்பர் வைசர் என எல்லாருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு உயிரோட்டம் நல்ல கதையும் இசைஞானியின் பின்னணி இசையும்தான்... ராஜா கலக்கியிருக்காரு... இப்படி ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.


தனியார் பயிற்சிப் பள்ளிகள் கூட அதிக மார்க் வாங்குபவர்களைத்தான் மாணவர்களாக சேர்த்துக் கொள்வோம் என்று சொல்வது இன்றைய நமது கல்வி முறையை தெளிவாகக் காட்டுகிறது.  அமலாபால் மாணவியாக வேண்டும் என்றும் தான் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவியின் தாயார் என்று சொல்லும் போது முதல்வருக்கு அவரைத் தெரியவில்லை என்று சொல்வது அபத்தம். அதுவும் படிக்காத, பள்ளியில் சேட்டை செய்யும் பெண்ணின்... அப்பா இல்லாத பெண்ணின் அம்மாவை... தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவியின் அம்மாவை தெரியாது என்று சொல்வது உறுத்தல்.

தனுஷின் ஒண்டர்பார் நிறுவனமும் சாமுராய் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். தனுஷைப் பொறுத்தவரை குறைந்த செலவில் விருது பெறும் படங்களாக தயாரித்து சம்பாதிக்கும் கலையை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.



அம்மா கணக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில்...

-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல படம் என்று நானும் கேள்விப்பட்டேன்.

UmayalGayathri சொன்னது…

நல்ல விமர்சித்து இருக்கீங்க சகோ.
சமுத்திரக்கனியை இப்படி காட்டி இருக்காமலிருந்து இருக்கலாம் தான். நல்ல நடிகர் அவர். அமலா பாலும் நல்லாடித்து இருக்காங்க.நல்ல அலசல் சகோ

Avargal Unmaigal சொன்னது…

சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மனதிற்கு பிடித்த நல்ல படம் அம்மா கணக்கு

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் அருமை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
அவசியம் பார்ப்பேன் நண்பரே

கோமதி அரசு சொன்னது…

விமர்சனம் பார்க்க ஆவலை தூண்டுகிறது. தியேட்டர் போய் படம் பார்த்தே வருடம் பல ஆகிறது.

தொலைகாட்சியில் மட்டுமே இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்களின் விமர்சனம் திரைப்படம் மீதான ஆர்வத்தை மிகுவித்துவிட்டது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இணையத்தில் பார்க்க முடிந்தால் பாருங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

நல்ல விமர்சனம். இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது.
பகிர்வுக்கு நன்றி குமார்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். பார்க்க முயல்கிறேன்.

Angel சொன்னது…

இப்போ தான் அப்பா பார்த்தேன் ..மிக அருமையான விமர்சனம் .இந்த படத்தை கட்டாயம் விரைவில் பார்க்கிறேன் .

Yarlpavanan சொன்னது…


அருமையான பதிவு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல படம் இது என்று கேள்விப்பட்டோம். பார்த்துவிடுகிறோம்..