மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

அட ஆயிரம் பேசலாம் வாங்க

தாவது பேசலாமே...?

என்ன பேசலாம்...?

என்னத்தைப் பேசலாம்..?

எதைப் பற்றி பேசலாம்...?

யாரைப் பற்றி பேசலாம்...?

எதையாச்சும் பேசு...

யோசிக்கிறேன் அது வரைக்கும் இந்த டான்ஸைப் பாரு.... ரிலாக்ஸ் ஆகலாம்...


செம குத்துப்பா.... நான் ரிலாக்ஸ் ஆயிட்டேன்... நீ பேசப்பா...

ம்... பேசலாமே எதை வேண்டுமானாலும் பேசலாம்... யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. பேசுவதற்கு இங்கு யார் தடை விதிக்கப் போகிறார்...?

ஓ... அப்ப அரசியல்...?

அதெதுக்கு நமக்கு... சசிகலா புஷ்பாக்களின் லீலைகளை இதுவரை சொல்லாதவர்கள் இன்று வரிசை கட்டி வருகிறார்கள்.... காஷ்மீரம் பற்றி எரியும் போது இங்கே ஒரு நாதாரி தமிழனின் பெயரைக் கெடுக்கும் விதமாக 'காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்'ன்னு பாட்டுப் பாடுது... ஒரு சந்தோஷம் எதிர்க்கட்சி தலைவரைக் கூட மைனாரிட்டி கருணாநிதியின்னு சொன்ன அம்மா, நேற்று சட்டசபையில் 'மை டியர் எங் மேன்' அப்படின்னு திமுக எம்.எல்.ஏ. ராஜாவைப் பார்த்துச் சொல்லியிருக்கு... சரி அதெதுக்கு நமக்கு... வாங்குன காசுக்கு ஓட்டுப் போட்டாச்சு... இனி அஞ்சு வருசத்துக்கு எல்லாத்தையும் தூக்கிச் சொமக்க வேண்டியதுதானே...

சரி இது வேண்டாம்... சினிமா...?

அட ஏம்ப்பா... கபாலி பத்தி பேசினா அம்புட்டுப் பேரும் சண்டைக்கு வர்றான்... இங்க அடிக்கிற வெயில்ல பாதிப்பேர் கோட்டுப் போட்டுக்கிட்டுத்தான் வேலைக்குப் போறான்... கோட்டுப் போடாதவன் எவனிருக்கான்... கோட்டுப் போடுவேன்டா... கால் மேல கால் போடுவேன்டான்னு எப்பப் பேசுறது... வீட்டுல பயபுள்ளக அப்பனுக்கு முன்னால கால் மேல கால் போட்டுக்கிட்டு ஆண்ட்ராய்டு போன்ல கேம் வெளாண்டுக்கிட்டு இருக்குக... (ஆமா கேம்னாலே விளையாட்டுத்தானே) இந்தக் காலத்துல அண்ட்ராயரு போடுறதைப் பத்திப் பேசுறானுங்க... முதல்ல தமிழன் தமிழன்னு படமெடுக்குறவனை எல்லாம் ஊரை விட்டே விரட்டணும்... ஆண்ட பரம்பரை... பேண்ட பரம்பரையின்னு... எந்தப் பரம்பரையில வந்தா என்ன நம்ம வந்த பரம்பரை நல்ல பரம்பரைதானே... பின்ன என்ன...

சரி... சரி... கோபப்படாதே... விஷயத்துக்கு வா...

மெட்ரோ படம் பாத்தியா... பைக்ல வந்து ஜெயின் அக்குற கதை... சூப்பரான படந்தான்... ஆனா வரிவிலக்கு இல்லை... யூ சர்ட்டிபிகேட் இல்லை... எல்லாம் அரசியல் ஐயா அரசியல்...

அரசியல் வேண்டான்னு சொன்னே... மறுபடிக்கும் அதுக்குள்ளே போறே பாரு... வேற பேசு...

என்னத்தைப் பேசுறது... எதைப் பேசுவது... ஆங்... எப்படியய்யா இம்புட்டு நாளா அதைப் படிக்காமல் விட்டிருந்தேன்... ஆஹா... என்ன ஒரு எழுத்து... அப்படியே பின்னாலயே இழுத்துக்கிட்டுப் போகுதய்யா... அலுவலக வேலை... அறையில்... சமையல் செய்யும் போது... இப்படி எல்லா நேரமும் சுத்தி வருதுய்யா... விட மாட்டேங்குது...

எந்தக் காதல் கதையில விழுந்தே... 

அடச்சீ... காதல் கதையா... வரலாற்றுக் கதைய்யா... வரலாற்றுக் கதை... சோழ சாம்ராஜ்யத்துக்குள் சிக்கி வச்சிட்டாருய்யா... அந்தாளு பேனாவுல மை ஊத்தி எழுதுறதுக்குப் பதிலா இலக்கியத்தை கரைத்து ஊற்றி எழுதினார் போல.... மனசு முழுக்க வந்தியத்தேவனும் பூங்குழலியும் நிறைஞ்சிருக்காங்கய்யா... பொட்டப்புள்ளய பூவா வளக்கணும்ன்னு கிராமத்துப் பக்கம் சொல்லுவானுங்க... இங்க புயலா வளந்திருக்கு.... காட்டுக்குள்ள மான் மாதிரி ஓடும்போது பின்னாலயே ஓடச் சொல்லுதுய்யா... விடாது கருப்பு மாதிரி படிச்சி முடிச்சாத்தான் விடும் போல...  இதுல ஒரு சந்தோஷம் என்னன்னா முகநூல்ல மூழ்க்கிக் கிடக்கலை... வலைப்பூப் பக்கம் வலம் வரலை... அதுவே சந்தோஷம்தானேய்யா...

என்ன... வரலாற்றுக் கதையா... நீ க்ரைம் நாவல் கிராக்கியில்லய்யா... விடாமா வாசிச்சவனாச்சே... எப்படி இதுல மூழ்கினேன்... அது சரி அதான் வலைப்பக்கம் படித்து கருத்திடலையா...?

ஆமாம்... ஆமாம்... பொன்னியின் செல்வனில் மூழ்கிக் கிடக்கிறேன்... கிளப்பி விட்டது நம்ம தமிழ்வாசி பிரகாஷ்... இணைப்பும் கொடுத்தாரு... இப்போ போன்ல பொன்னியின் செல்வன் துள்ளிக் குதிக்கிறான்... அடுத்து உடையாரோடு பயணிக்க எண்ணம்... தினேஷ் கூட பிடிஎப் அனுப்பி வைக்கிறேன்ன்னு சொன்னார்... அடுத்து கங்கை கொண்ட சோழபுரம்... இப்படியே பயணிக்கனும்... வலைப்பக்கம் மொய்க்கு மொய்தானேய்யா... நானும் மொய் வைக்கலை... மற்றவர்களும் மொய் வைக்கலை... 

அது சரி... அது சரி...  வலைப்பூ உலகை தப்பாச் சொல்றே...

அட தப்பாச் சொல்லலை... யாரைக் கேட்டாலும் இது உண்மையின்னு சொல்வாங்க... ஏதோ மன திருப்திக்கு எழுதுறோம்... பல பேர் எழுதுறதில்லை தெரியுமா? ஆரம்பத்துல டுவெண்டி 20 ஆடின வலையுலகம் இப்போ டெஸ்ட் மேட்ச் ஆடிக்கிட்டு இருக்கு...

விடுப்பா... எழுதுவாங்க... நீ கதைக்கு வா...

அப்புறம் 350 நண்பர்களின் அன்போடு பயணித்து ஏதோ நாமளும் எழுதுறோம்ன்னு கிறுக்கி... கிறுக்கி... வெங்கட் நாகராஜ் அண்ணாவின் பயணக் கட்டுரைகளில் லயித்து... செல்வராஜூ ஐயாவின் ஆன்மீகத்தில் சிந்தை மயங்கி... கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் வேலு நாச்சியாரில் நின்று... தனபாலன் அண்ணாவின் திருக்குறள் பாடல் விளக்கத்தில் சிலாகித்து... தேவா அண்ணனின் எழுத்தில் என்னை மறந்து... தேனாக்கா, காயத்ரி அக்கா, நிஷா அக்காவின் அன்பில் நனைந்து... தளிர் சுரேஷின் ஹைக்கூக்களில் சிக்கி... ஸ்ரீராம் அண்ணாவின் எழுத்தில் மகிழ்ந்து... கில்லர்ஜி அண்ணாவின் நகைச்சுவையில் நானும் சிரித்து...  இன்னும் இன்னுமாய் ஐயாக்கள் ஜிஎம்பி, வைகோ, பழனி கந்தசாமி, முத்து நிலவன் என பெரும் எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்து.... ராமலெட்சுமி அக்கா, ஆசியா அக்கா இன்னும்....

எப்பா... இப்படியே முன்னூறு பேரையும் சொல்ல முடியுமா...? நீ பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போறே...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய்.... குடந்தை சரவணன் அண்ணன், கலியுகம் தினேஷ், என் நண்பன் தமிழ்க்காதலன் உள்ளிட்ட பலர் எழுத்தை நிறுத்தி எப்போதாவது வந்தாலும் இன்னும் அன்பாய்... எல்லாரையும் சொல்ல முடியாது என்றாலும்... இந்த நேரத்தில் எல்லாருக்கும் 'மனசு'ல நன்றி சொல்லணுந்தானே...

கண்டிப்பாச் சொல்லணும்... நன்றி மறந்தா அது நல்லதில்லையில்ல...

அது... இதுன்னு கிறுக்கி... ஏன் ரெண்டு தொடர்கதை எழுதி... மூணாவதும் ஆரம்பித்து... கிட்டத்தட்ட 25 மலையாள சினிமாவுக்கு விமர்சனம்(?) எழுதி நாமளும் மனசுல மட்டும் 1000 பதிவுக்கு வந்துட்டமுல்ல... அது பெரிய விஷயமில்லையா...? கதைகள் கவிதைகள்ன்னு சதம் அடிச்சிருக்கோமே... இது போக முன்னாடி எழுதின நெடுங்கவிதைகள் தளத்தில 65... ஹைக்கூ தளத்தில் 110.... சிறுகதைகள் தளத்தில் 20 என மொத்தமாய் 1195 பதிவுகள் எழுதியிருக்கிறேன்... பெரும்பாலான பதிவுகள் மனசுக்கு திருப்தியான பதிவுகள் என்பதில் மிகுந்த சந்தோஷம்...

ம்... எல்லாம் சொல்லிட்டே... இதுக்குத்தான் என்ன பேச... எதைப் பேச... அப்படியிப்படின்னு டயலாக் பேசினியாக்கும்....

ஹா..ஹா... வேற ஆயிரமாவது பதிவு வித்தியாசமா எழுதணும்ன்னு ஆசை... ஒண்ணும் தோணலையே... அதான் இந்த பில்டப்பு... சொல்ல மறந்துட்டேனே... பத்திரிக்கைகளில் வந்த கதைகள் தவிர்த்து வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின்னர் என் எழுத்தையும் விரும்பி எனக்கு தொடர்ந்து எழுத வாய்ப்பளிக்கும் அகல் மின்னிதழுக்கும்... எனது கதைகளை பிரசுரித்த அதீதம்... சிங்கப்பூர் கிளிஷே... கொலுசு மின்னிதழுக்கும் என நன்றி.

சரி... சரி... நன்றி சொல்லிட்டே... இன்னும் கபாலி சுரம் ஓயலை... கபாலி பற்றி... ரஜினிக்கு வயசாயிருச்சு... பாட்ஷாவில இருந்த வேகம்  இல்லைன்னு சொல்லாதே... அவருக்கிட்ட இப்ப இருக்க வேகம் உங்கிட்ட இந்த வயசுல இருக்கான்னு பாரு...

ஆத்தாடி... நாந்தான் ரெண்டு பதிவுக்கு முன்னாலயே சொல்லிட்டேனே... கபாலி பத்திப் பேசி முகநூல்ல விருப்பம் தெரிவிக்கிற நட்பெல்லாம் போச்சு... வலையிலுமான்னு சொல்லியிருந்தேனா இல்லையா... ஆளை விடு...

அட சொல்லுப்பா....

நாயகன் படம் பாத்தியா.... அதுல கடைசியில கமலுக்கிட்ட அவரோட பேரன் கேட்பானே... ஞாபகம் இருக்கா...?

என்ன கேட்பான்... ?

அதானே... அதையும் நானே சொல்லுறேன்... 'நீங்க நல்லவரா... கெட்டவரா...' அப்படின்னு  கேட்பான்... நேற்று கபாலியை ரொம்ப பொறுமையா மறுபடியும் பார்த்தேன்.... நிறைய பேசலாம்... வேண்டாம்... தமிழன் தமிழன்னு இனி இயக்குநர்கள் யாரும் பொங்க வேண்டாம்... போதும்.. பொங்கிப் பொங்கியே நம்ம பொழப்பு நாறிப் போச்சு... அதான் காஷ்மீர் பத்தி பேசுடான்னா நம்மாளு பாட்டுப் படிச்சிக்கிட்டு இருக்கான்... தில்லியில அவன் படிச்சது பத்தாதுன்னு நம்மாளு சட்டசபையில பாட்டுப் பாடுறான்... இவனுகளை தேர்ந்தெடுத்தா பாட்டுத்தான் பாடுவானுங்க... வேற என்னத்தைப் புடுங்கப் போறானுங்க... சரி... சரி... விஷயத்துக்கு வருவோம்.. தமிழன் தமிழன்னு பொங்க வச்சது போதும்... கோட்டுப் போடுறது எங்கய்யா இப்ப பிரச்சினையா இருக்கு... பள்ளிக்கூடத்துப் பயலுக கூட கோட்டுப் போட்டுக்கிட்டுத்தானேய்யா போறாங்க... ம்... நாயகன்ல கேட்ட மாதிரி கபாலி நல்லாயிருக்கா.. நல்லாயில்லையான்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு இருக்கேன்... விடை தெரிந்தால் சொல்றேன்... சரியா...

அட நாதாரி... இதுக்கு எதுக்கு அரசியல் எல்லாம் பேசினே..?

அதுலயும் அரசியல் பேசுறாங்கப்பு... சரி விடு... நாம நன்றி சொல்லணும்... அம்புட்டுத்தான்...

என்னை எழுத வைத்த வலையுலக ஜாம்பவான்களுக்கு எனது நன்றி... முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன்...

என்னத்தைப் பேச... எதைப் பற்றி பேச... எதையும் பேசலாம்... இது நம்ம இடம்... இங்க நாமதானே எல்லாம்...

சரி... சரி... விட்டா எழுதிக்கிட்டே போவே.... அப்புறம் பேசிக்கலாம்... நிப்பாட்டு... உனக்காக நானும் நன்றி சொல்லிக்கிறேன்...

அட நீ யார்யா எனக்காக நன்றி சொல்றே... ரொம்ப நல்லவனா இருக்கே...

அட நாந்தாய்யா உன்னோட 'மனசு'... நான் இல்லாட்டி நீ....

சரி... சரி... நாங்கிளம்புறேன்... நீ இந்தப் பாட்டையும் கேட்டுக்கிட்டு பேசிக்கிட்டு இரு....


-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

ஆயிரம் பதிவு எழுதி விட்டீர்களா. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.தொடர்ந்து பதிவு எழுதி வருவதற்கு ஸ்பெஷல் பூங்கொத்து.

ஸ்ரீராம். சொன்னது…

மலர் டான்ஸ் காட்சியை நானும் ரசித்திருக்கிறேன். பூவுக்குள் புயல்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் குமார்! ஆயிரம் அடித்த மனசிற்கு வாழ்த்துகள்! அட உங்க அந்த மனசுதானே பேசுது இங்க!!! அப்ப அதுக்குத்தானே வாழ்த்துகள் சொல்லணும்! என்ன நாங்க சொல்றது சரிதானே!! குமார்!!

வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள். பதிவையும் மிகவும் ரசித்தோம்.

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி. பரிவை.பாரதிராசாவுக்கு ஆயிரமெல்லாம் சாதாரணம். லட்சங்கள் பதிவையும் கடக்கவுள்ளாய். :)

Yarlpavanan சொன்னது…

என்னங்க - நீங்க
ஆயிரம் பதிவை இட்டு வெற்றி பெற
350 நண்பர்களின் அன்போடு பயணித்து என
அவையடக்கம் வாசிக்கிறீங்களே!

முகநூலில் கிறுக்குவது போல
வலைப்பூவில கிறுக்க முடியாது
முகநூலில் விருப்பு (Like) எடுப்பது போல
வலைப்பூவில எடுக்க முடியாது
ஆனாலும் - தாங்கள்
நிறைந்த வாசகருடன்
ஆயிரம் பதிவைக் கடந்து முன்னேற
எத்தனையோ தடைகளைத் தாண்டி
வந்திருப்பியளென நானறிவேன்...
சிறந்த பல்சுவைப் பதிவுகளை
தொடர்ந்தும் பகிருமாறு வாழ்த்துகிறேன்.
முடிவாக
பரிவை சே.குமார் என்பது
உறவுப் பெயர் மட்டுமே...
தங்கள் எழுத்து
தங்கள் பெயருக்கான அடையாளம் என்று கூறி
மீண்டும் வாழ்த்துகிறேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறுகதைகளும் சிலிர்க்க வைக்கும் கவிதைகளும் உங்களின் தனிச்சிறப்பு! மண் மணம் கமழும் சிறுகதைகளோடு தொடர்களும் எங்களை கட்டிப்போட்டன! ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! என்னை நினைவில் வைத்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனசு தளத்தில் 1000 பதிவுகள். மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் குமார். மேலும் பல உயரங்களைத் தொட எனது வாழ்த்துகள்.....

பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருப்பது கண்டேன். மகிழ்ச்சி!

துரை செல்வராஜூ சொன்னது…

நல்ல மனசு..
1000 பதிவுகள் - என்பது மகத்தான சாதனை..

மேலும் பல நூறு பதிவுகளைத் தர வேண்டும்..
அன்பின் நல்வாழ்த்துகள்!..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரரே..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மகிழ்ச்சி சகோ..மனமார்ந்த வாழ்த்துகள்.

புதினங்கள்...பிரமாதம் சகோ..
PS moondru murai, SS irandu murai padiththu vitten..meendum meendum padithu rasikkalam.
Udaiyaar padiththirukkiren..thanjai kovil kattumanam pattri ariya meendum padikkalaam.
Padiyungal..padiyungal..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களது எழுத்துப்பணி தொடரட்டும். தொடர்ந்து வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

1000 பதிவுகள் - வலையுலகில் சாதனையே. நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

ஆயிரம் பதிவுக்கு வாழ்த்துகள் !
#வலைப்பக்கம் மொய்க்கு மொய்தானேய்யா... நானும் மொய் வைக்கலை... மற்றவர்களும் மொய் வைக்கலை#
நாம் எழுதுவதே பலருக்கும் சென்று சேர வேண்டும் என்பதால்தான் ,மனத் திருப்திக்காக என்றால் ,வலைப்பூ ,திரட்டிகள் தேவையில்லையே?
எதிர்மறையான உங்களின் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு எல்லோரையும் ஆதரியுங்கள் ,இன்னும் நல்லா வருவீங்க :)