மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 ஆகஸ்ட், 2016

அரசனின் 'இண்ட முள்ளு'


ண்ட முள்ளு...

சகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து குத்துவாங்கி வளர்ந்திருக்கிறோம்... இது இண்டமுள்ளு... புது வார்த்தை... 'தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது.' அப்படின்னு தன்னோட அணிந்துரையில் கவிஞர் சி.கருணாகரசு சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது இது இலந்தை முள்ளோ அல்லது சூறா முள்ளோதான் என்று நினைத்திருந்தேன்... அவைதான் கடந்து செல்வோரை கொத்தாக பிடித்துக் கொள்ளும். ஆனால் நேற்று அரசன் முகநூலில் பகிர்ந்த படத்தைப் பார்த்தபோது அதுபோன்ற ஒரு முள்ளை பார்த்த ஞாபகம்... அதன் கிளைகளில் எல்லாம் சூறா முள்ளைப் போல் கொக்கி கொக்கியாக இருக்கும்... ஆனா எங்க பக்கம் அதற்கு என்ன பேருன்னுதான் ஞாபகத்தில் வரவில்லை... சரி இப்ப முள் ஆராய்ச்சி எதற்கு இண்டமுள்ளின் பின்னே பயணிப்போம்.

கதைக்களமாய் தான் பிறந்த 'உகந்த நாயகன் குடிக்காடு' மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் அங்கு வாழ்ந்த, வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அந்த மக்களின் சந்தோசம், துக்கம், வலி, வேதனை,ஏமாற்றம். சூழ்ச்சி, வஞ்சகம், காமம் என எல்லாம் சுமந்து நிற்கிறது.

பெருஞ்சொம, தூவானம், சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காற்று என மொத்தம் ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில்... கதைகள் நவரசம்... பெரும்பாலான கதைகள் சோகம் சுமந்து நிற்கின்றன. மண்ணின் மணத்தோடு மண்ணின் மாந்தர்களைக் கதையின் நாயக, நாயகிகளாக ஆக்கும் போது சுகத்தைவிட துக்கமே தூக்கலாக இருக்கும் என்பதே உண்மை. 

நான் எழுதும் கதைகள் கூட பெரும்பாலும் சோகம் சுமந்தே காணப்படும். 'நீங்க எப்பவுமே நெகட்டிவாத்தான் சிந்திக்கிறீங்க... பாஸிட்டிவ்வா சிந்திங்க...' அப்படின்னு ஒரு வலைத்தள நட்பு என்னுடன் நீண்ட விவாதமே... ஏன் சண்டையே போட்டார்... சண்டையின் இறுதியில் 'உன்னோட சிந்தனையில் துருப் பிடித்திருக்கிறது' என்றும் அன்பாய்ச் சொன்னார். எப்படித்தான் சிந்தித்தாலும் விவசாயத்தின் வேர் அறுந்து போன ஊரில் விழுதுகள் நகரங்களில் கிளைவிட்ட பின்னர் அந்த விழுதுகளைச் சுமந்த வேர்கள் மட்டும் அந்த வீணாகிப் போன பூமியை விட்டு வெளியே வரப்பிடிக்காமல்... அந்த மண்ணின் மீதான தீராக்காதலை சுமந்து தவிப்பதை கதையாக்கும் போது சுகங்களைவிட சோகமே தொக்கி நிற்கும்... அந்த வகைக் கதைகளை அரசன் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

'இந்த இண்டமுள் கொஞ்சமேனும் உங்களை தைத்தால் அதுவே நான் கொண்ட முயற்சிக்கு வெற்றி' என்று ஆசிரியர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். கொஞ்சமேனும் அல்ல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமாக தைக்கின்றன. இதுவே எழுத்தாளரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. நடைமுறை வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கில் சொல்வதென்பது எளிதன்று... அப்படியிருக்க மிகச் சரளமாக பேச்சுவழக்கை கையாண்டிருக்கிறார். எவன் ஒருவன் தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் என்றென்றும் மாறாத காதல் கொண்டிருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களை கதை மாந்தர்களாக மட்டுமின்றி அந்த மண்ணின் வாசத்தையும் வாசிப்பவர் மீது இறக்கி தான் பிறந்த மண்ணை எல்லார் மனதிலும் வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அரசனுக்கு கிடைத்திருப்பது தவம்... அவரின் எழுத்துக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஒன்பது கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தவிர, எல்லாமே சாவைப் பேசுகிறது... பல கதைகள் காமத்தை மையப்படுத்துகிறது... பெரும்பாலும் உடல்சார்ந்த எல்லை மீறல்கள்... அவை சர்வசாதாரணமாக... அதுவும் இருவரும் விரும்பியே நடக்கின்றன... இதில் ஆண் பெண் வேற்றுமை எல்லாம் இல்லை... சாந்தி, மருதன், பார்வதி, நாராயணன், சங்கர், ராமன், லதா என எல்லாருமே இதில் திளைக்கிறார்கள். காமம் சார்ந்து எழுதுவது என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்... அதை மிகச் சரியாக ஆசிரியர் கையாண்டிருந்தாலும் அந்த மண்ணில் அவர் சொல்வது போல 'புழங்குவது' என்பது சர்வ சாதாரணம் போல என்று தோன்ற வைத்து விடுகிறது. மனிதர்கள் மீது இரக்கம் வர வேண்டிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. 

திரு.பெருமாள் முருகன் தன்னோட மாதொரு பாகனில் முழுக்க முழுக்க காமத்தையே மையப்படுத்தியிருப்பார்... பேசக் கூசும் வார்த்தைகளையெல்லாம் அள்ளி விதைத்திருப்பார்... அது உண்மை பேசும் கதை... அப்படித்தான் எழுத முடியும் இதிலென்ன தப்பு என்று அவருக்கு வக்காலத்து வாங்க சிலரும்... இதை அவர் வீட்டு பெண்கள் படித்திருப்பார்களா..? எனச் சிலரும் மோதிக்கொள்ள நேர்ந்ததை நாம் அறிவோம்... நல்ல எழுத்தாளர்.... மாதொருபாகன் பிரச்சினையால் எழுத்துக்கு தடா போட்டு விலகியிருந்து தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவர் வளர்ந்த எழுத்தாளர்.. நம் அரசனோ வளரும் எழுத்தாளர்... காமம் கலந்து எல்லாராலும் எழுத முடியாது... எதார்த்தம் பேசும் கதைகளில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அது இல்லாத வாழ்க்கை எதார்த்தத்தை இன்னும் நிறையப் பேசலாமே என்பது என் எண்ணம். இது அரசனுக்குத்  தவறாகத் தெரிந்தால் மன்னிக்கவும்.

மேலும் நம் நட்பில் ஒரு சிலருக்கு நான் சொல்வது தவறாகத் தெரியலாம்... எழுத்தாளன் காதலையும் காமத்தையும் எழுத வேண்டும்... இதில் என்ன தவறிருக்கிறது என்றும் வாதிடலாம். இந்தக் கதைகளின் போக்கில் இவை தவறில்லை என்பது உண்மைதான்... சரியான கதைக்களம்தான்...  சமீபத்தில் ஒரு போட்டிக்காக சிறுகதை எழுதினேன்... அந்தக் கதையை அந்தத்தளத்தில் படித்த, என் எழுத்துக்களை நேசிக்கும் சகோதரி ஒருத்தர் 'நல்லாயில்லைப்பா' என்று ஆரம்பித்து 'நீங்க சொல்லியிருக்கும் உறவுமுறை... வேண்டாம்ப்பா... இப்படி எழுதாதீங்க' என்றார். எங்க பகுதியில் நான் பார்த்த ஒரு நிகழ்வுதான் என்று சொன்ன போதும் 'உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை... இப்படியெல்லாம் எழுதாதீங்க' என்றவர் 'அந்த உறவுமுறை எப்படிப்பட்டது தெரியுமா..? அது தப்புச் செய்யுமா..?' என்றெல்லாம் பேசினார். இதை ஏன் சொல்றேன்னா... ஆஹா... அருமை... சூப்பர்.... அப்படியே கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே காட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை.... சில உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைப்பதாலேயே இங்கு எழுதியிருக்கிறேன்... அரசன் என் சகோதரன் என்ற முறையில் இன்னும் சிறப்பான கதைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கருத்துத்தான் இது. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாத் தரப்பிலும் வாசகர்கள் அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்.

கிராமத்து வாழ்க்கையில் காமம் தவிர்த்து எத்தனையோ இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக் கதையை நட்பு, நேசம், பாசம், காதல், வன்மம் என எத்தனையோ விதத்தில் பேசலாம்... இதிலிருக்கும் கதைகளில் காமம் நிரம்பியிருப்பதால் கிராமம் என்றாலே இப்படித்தானோ என எண்ண வைத்துவிடும் என்பதே என் பயம். இருப்பினும் மிக அழகாக, மிகவும் யோசித்துச் செதுக்கப்பட்ட கதைகளுக்காக அரசனை கட்டிப்பிடித்து வாழ்த்தலாம்... அதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வந்த வாழ்க்கையை கண் முன்னே காட்டிச் செல்லும் எழுத்து எல்லாருக்கும் அமைவதில்லை... அது அரசனுக்கு கை வந்திருக்கிறது... அதற்காகவே அவரின் கரங்களை இறுகப்பற்றி வாழ்த்தலாம்.

கிராமத்து பேச்சு வழக்கு என்பதை கதையில் மிகச் சரியாக கையாண்டிருக்கும் அரசன்... அந்த மனிதர்கள் பேசும் போது மட்டுமல்லாமல் தான் அவர்கள் குறித்துச் சொல்லும் போதும் அப்படியே எழுதியிருப்பது மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெயர்களை கிராமத்து மனிதர்கள் அழைக்கும் போது பாஞ்சால, அஞ்சல என்று அழைத்தாளும் கதையில் அவர்கள் பேசுவதாகவோ, அவர்கள் குறித்து நாம் சொல்வதாகவோ எழுதும் போது பாஞ்சாலி, அஞ்சலை என்றுதான் பெரும்பாலும் எழுதுவது  வழக்கம். ஆனால் இண்டமுள்ளில் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கு... இதுவும் வித்தியாசமாய்... அருமையாய்... வாசிக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திச் செல்கிறது... நல்லாத்தானிருக்கு அரசன்... வாழ்த்துக்கள்.

புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்... கண்டிப்பாக வட தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கைக்குள் நீந்திச் சுகம் பெறுவீர்கள்... வாழ்வியல் பேசும் அருமையான கதைகள்... மனம் கனக்கச் செய்யும் கதைகள்... இப்படியான வாழ்க்கையைத்தானே தினம் தினம் கிராமங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வைக்கும் கதைகள்...

வாழ்த்துக்கள் அரசன்... மிகச் சிறந்த எழுத்தாளருக்கான சிம்மாசனம் உங்களுக்காக காத்திருக்கிறது. அடுத்த தொகுப்பை விரைவில் கொண்டு வாங்க. உங்கள் தந்தை சேகர் அவர்களும் தாய் வளர்மதி அவர்களும் உங்கள் துணைவியார் சகோதரி கலையரசி அவர்களும் உங்கள் வளர்ச்சி கண்டு சந்தோஷம் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள். 

புத்தக வடிவமைப்பு : பால கணேஷ் அண்ணா... அருமையாகச் செய்திருக்கிறார். அரசன் வளர்மதி பதிப்பகத்தின் மூலமாக சொந்தமாக வெளியிட்டிருக்கிறார். 160 பக்கங்கள்... விலையோ 100 ரூபாய்தான்.

ஒரே ஒரு குறைதான்... பொருளடக்கம் என்ற பக்கத்தை மறந்துவிட்டார்கள்.

(இதுதான் இண்டமுள்ளு... அரசனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்...  உங்கள் பார்வைக்காக)
கதைகளைக் குறித்து ஒன்றுமே சொல்லலையின்னு நினைக்காதீங்க... எல்லாக் கதைதளும் அருமையான கதைகள்... வாசிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். நேரம் கிடைத்தால் மற்றொரு பகிர்வில் கதைகள் குறித்துப் பேசுவோம்...  இல்லை கதைகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துதான் படிப்போம் என்றால் கொஞ்சமல்ல... பல எழுத்தாளர்களின் பார்வையில் இண்டமுள்ளுவைப் பற்றிநிறைவாய்த் தெரிந்து கொள்ள 'இண்டமுள்ளு' முகநூல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

அரசனோட வலைப்பூ : கரைசேரா அலை
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பகிர்வு.

arasan சொன்னது…

வணக்கம் அண்ணே ...

மிகவும் மகிழ்வாய் இருக்கிறது. சொல்ல வார்த்தைகள் இல்லை ...
மிகவும் நிதானமாய் வாசித்து விட்டு மனதில் தோன்றிய கருத்துக்களை சமரசம் செய்துகொள்ளாமல் கூறியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நீங்கள் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு வருகின்ற படைப்புகளில் கவனமாக இருக்க முயல்கிறேன்.

கிராமத்தின் வாழ்க்கைப்பாடுகளை கதையாக கட்டமைக்க முயலுகையில் நேர்ந்த ஒன்று தான் காமமும், சாவும். சம்சாரிகளின் வாழ்வினை கூறுகையில் இதையெல்லாம் சொல்லாமல் விடமுடியாது, அது ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடமை.

அன்பின் கருத்துக்களுக்கு மீண்டுமொரு நெகிழ்வான அன்பும் நன்றியும் அண்ணே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அரசன் எங்கள் நண்பரும் கூட. இண்டமுள்ளு வாங்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று மனதில் உள்ளது....நல்ல விமர்சனம்...வாங்கிக் கிடப்பவையே இன்னும் வாசிக்கப்படாமல் உள்ளன...

நல்ல ஆழ்ந்த விமர்சனம்...மிக்க நன்றி குமார்

Kasthuri Rengan சொன்னது…

அருமை தோழர்

Unknown சொன்னது…

இண்டமுள்ளு என்றால் மலையாள சொல் என்றல்லவா நினைத்து இருந்தேன் ?
படித்தவர்களை நிச்சயம் இண்டமுள்ளு குத்தாமல் விடாது போலிருக்கே :)

துரை செல்வராஜூ சொன்னது…

இந்த இண்டை முள் தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அதிகம்.. இப்போது எப்படியோ தெரியவில்லை...

எந்தப் பக்கத்திலிருந்தும் பிடித்து எடுக்க முடியாது.. எதற்கும் பிடிபடாது!..

மிக மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது..

UmayalGayathri சொன்னது…

இண்டமுள்ளு என்றால் மலையாள சொல் என்றல்லவா நினைத்து இருந்தேன் ?//

நானும் ஜி நினைத்தது போல் தான் நினைத்திருந்தேன்.

அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான விமர்சனம்! நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். படிக்க நினைத்திருக்கும் புத்தகம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அரசன்....
புரிதலுக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் மது சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.