மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஆகஸ்ட், 2016

'அப்பா' - அம்மாக்களுக்கான சினிமா

து அப்பா படத்துக்கான விமர்சனம் இல்லை... படம் பிடித்திருப்பதால் முன்னர் எழுதிய பகிர்வை பதிவிடுவோமா... வேண்டாமா... என்ற எண்ணத் தோன்றலில் பதிவிடுவோம் என்பது முன்னே நிற்க ஒரு பகிர்வாக பகிர்ந்திருக்கிறேன்.


நூறு கோடிகளை மூலதனமாக்கி ஆயிரங்கோடிகளை ஆறே நாளில் சம்பாரித்து விட்டோம் என்று கொக்கரிப்போம் மத்தியில் போட்ட காசு வந்ததா வரலையா என்பதல்ல எங்கள் கவலை... நாங்கள் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொன்னோமா...? நாங்கள் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டார்களா...? நாங்கள் சொன்னதால் சமுதாயத்தில் சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்ததா...? என கண்டிப்பாக நினைத்திருப்பார்கள் அம்மா கணக்கு, அப்பா போன்ற படங்களில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்....

அப்பா... எல்லாருக்குமே அப்பாவைப் பிடிக்கும் என்றாலும் பெண் குழந்தைகள் கூடுதல் ஒட்டுதலோடு இருப்பார்கள்... அதனால்தான் இயக்குநர் ராம் 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று' என தங்க மீன்களைக் கொடுத்தார். அப்பாக்கள் நம் மீது வைக்கும் பாசம் அலாதியானது... ஆனால் அம்மாக்களைப் போல் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே உண்மை.

பசங்க ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பாக்களிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். பதின்ம வயது என்பது பசங்களின் நடை,உடை, பாவனைகளில் மாற்றம் தரும் வயது. அந்த வயதில் அப்பா எது கேட்டாலும் 'இவரு என்ன எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறார்' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும் போது அப்பா மகனின் உறவில் விரிசல் விழுகிறது. இது நாளடையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொடுத்து விடுகிறது. என்ன வேண்டுமென்றாலும் அம்மாவிடம் சொல்லி பெற ஆரம்பிக்கும் போது அப்பாவின் பாசம் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமலேயே போய் விடுகிறது.

இயக்குநர் சமுத்திரகனி கையில் எடுத்திருக்கும் 'அப்பா', மூன்று வித்தியாசமான களங்களில் பயணித்து இன்றைய கல்வி முறையை, பணம் ஒன்றே குறிக்கோளாகத் திகழும் கல்வி நிலையங்களை நம் கண் முன்னே காட்சிகளாய் விரிக்கிறது. சமூகச் சாடல்கள் நிறைந்த இந்தப் படத்தை கபாலியை விரும்பிய அளவுக்கோ... கொண்டாடிய அளவுக்கோ... நாமும் அரசும் கண்டு கொள்ளாதது வேதனையான விஷயம்.

கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... உலகைப் புரிந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அப்பாவாக சமுத்திரகனி... குடிப்பது கூழாக இருந்தாலும் மற்றவர்களுக்கு முன்னால் பன்னீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மனைவி... 'நீயெல்லாம் நாட்டுக்கோழிடா' என்று சொல்லி வளர்க்கும் அப்பாவின் அன்பில் வளரும் மகன் (விக்னேஷ்).

தன்னோட கனவுகளை தன் மகன் மீது இறக்கி வைக்க ஆசைப்பட்டு அதற்காக அவனை தொந்தரவு செய்யும் அப்பாவாக தம்பி இராமையா... கணவன் செய்வது தவறுதான் என்றாலும் சொல்லப் பயந்து கொண்டு வாழும் மனைவி, அப்பாவின் கனவுகளைச் சுமக்கும் மகன் (ராகவ்).


'ஊரோடு ஒத்து வாழாதே... எதையுமே சந்தேகக் கண்ணோடு பாரு...' என்று சொல்லி மகனை வளர்க்கும் அப்பாவாக நமோ நாராயணன்... கணவனை எதிர்க்க நினைக்காத, விரும்பாத மனைவி, வீட்டில் அம்மா தவிர மற்றவர்கள் வெறுக்கும்  உருவத்தில் கூட வளர்ச்சி கிடைக்காத குட்டையன் (நசத்)

இவர்கள் மூவரின் கல்விப் பயணம் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஆரம்பிக்கிறது... மனைவியின் தொல்லை தாங்காமல் தனியார் பள்ளியில் அதிக பணம் கட்டி தன் பையனைச் சேர்க்கும் சமுத்திரகனி, பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் போது மற்றவர்கள் பாய் கடையில் வாங்கிச் செல்ல, இது உனக்கான பணி... இதை நீயே செய்ய வேண்டும்... என்று சொல்லி அதற்கான பொருட்களை மட்டும் வாங்கி இரவெல்லாம் மகனை கண்விழித்து செய்ய வைத்து அனுப்புகிறார். ஆசிரியையோ ரொம்ப மோசம் என்று எழுதி அனுப்புகிறார். பெற்றோர் கலந்துரையாடலுக்கு வரும் சமுத்திரக்கனியிடம் பையனைப் பற்றி குறை கூற, அவர்கள் செய்யும் செயல்களை வெளுத்து வாங்கிவிட பையனுக்கு அங்கு இடமில்லை என மாற்றுச் சான்றிதழை கையில் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இதன் காரணமான சண்டையில் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீடு செல்பவள் ஒரு கட்டத்தில் வக்கீல் நோட்டீசும் அனுப்புகிறாள். தன் வாழ்க்கை பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும் தன் மகனுக்கு படிப்புடன் உலக அறிவையும் சேர்த்து வழங்கி அவனை நீச்சலில் கின்னஸ் சாதனை படைக்க வைத்து படிப்பில் வெற்றி பெற வைக்கிறார். அவனது அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தையே இல்லை என்பதாய் வளர்கிறான்.

நல்லாப் படிக்கும் மகனை தன் வெளிநாட்டுக் கனவினால் துரத்தும் தம்பி இராமையா.... பத்தாம் வகுப்பில் 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவனாக வந்த போதும் ஒரு மார்க்குக்காக மறுகூட்டல் போடப் போறேன் என்று சொல்வதும், பதினொன்றாம் வகுப்பில் மிகச் சிறந்தபள்ளியில் இடம் வாங்குவதுமாய் அவனை மிரட்டியே படிக்க வைப்பதால் எல்லாவற்றிக்கும் பயந்து பயந்து வளர்கிறான்.... கடைசியில் அவனது  முடிவும் நாம் பயந்த மாதிரியே ஆகிவிடுகிறது.

யாருக்கும் எதுவும் செய்யாதே... தனித்து இருக்கப் பழகிக் கொள் என்று சொல்லும் நமோ நாராயணனின் மகனோ வளராமல் குட்டையாகவே இருக்கிறான். வீட்டில் அக்கா கூட அவனை தம்பி என்று சொல்லத் தயங்குகிறாள். படிப்பில் ரொம்ப மோசம், பத்தாவது எழுத முடியாது என பள்ளித் தலைமை சொல்லிவிட, சமுத்திரக்கனி உதவியோடு தனது தனித்திறமையான எழுத்தாற்றலால் உயர்ந்து நிற்கிறான், மேலும் டுட்டோரியல் மூலமாகப் படித்து பத்தாவதும் பாஸாகி விடுகிறான்.

ஒரு பெண்ணைப் (கேபரில்லா) பார்த்ததும் தனக்கு வயிற்றுக்குள் என்னமோ பண்ணுது ஒண்ணுக்கு வருதுப்பா என்று சொல்லும் மகனுடன் பேருந்தில் பயணித்து அவளை வீட்டுக்கு அழைத்து வந்து காபி கொடுத்து இருவரையும் நண்பர்களாக்கும் சமுத்திரகனியும், தன் மகன் ரம்யாவுக்கு (யுவலெட்சுமி) லவ் லெட்டர் கொடுக்கப் போகும் போது பார்த்து அந்தப் பழியை அந்தப் பெண் மீது போட்டு நடு ரோட்டில் அவளை அடித்தது மட்டுமில்லாமல் அவள் வீட்டுக்கே சென்று பிரச்சினை செய்யும் தம்பி இராமையாயும் மாறுபட்ட அப்பாக்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.

அந்தப் பெண்களுடன் மூன்று பசங்களையும் நட்ப்பாகி தன் வீட்டில் படிக்க வைத்து அவர்களுக்கெல்லாம் அப்பாவாக உயர்ந்து நிற்கும் சமுத்திரகனி, தன் மாமனாருக்காக மனைவியின் செய்கைகளை பொறுத்துக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார். அப்பா வீட்டில் தனக்கான அதிகாரம் குறைந்து ஒரு ஜடமாக வாழும் மலர், தன்னைப் பார்க்க வரும் மகனுடன் மீண்டும் புகுந்த வீடு வருகிறார். அவரின் வருகையால் மீண்டும் பூகம்பங்கள் வெடிக்க நேரிடும் என்பதால் தன் தோழர் வீட்டில் போய் தங்க, அங்கும் பசங்களின் அட்டாகாசம் தொடர்கிறது. திருமணம் ஆகாமல் வாழும் அவரின் தோழருக்கு ரம்யாவின் அக்காவை கோர்த்து விடுகிறார்கள். தன் கணவன் மிகவும் நல்ல மனிதன் என்பதை உணர்ந்து சமுத்திரகனியை வீட்டுக்கு அழைக்கிறாள் மலர்.


தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதை படம் முழுக்கச் சாடியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. படத்தில் இந்த மூன்று குடும்பங்களுடன் அந்தப் பெண்களின் குடும்பம், 'கல்யாணத்தப்போ என்ன சொன்னாங்க' என்று அடிக்கடி வந்து செல்லும் குடும்பம் என கதையை மிக அழகாக நகர்த்தியிருக்கிறார். சமூகச் சாடல் அதிகம் இருந்தாலும் அதை பசங்களின் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது சிறப்பு... படத்தில் எத்தனையோ வலி மிகுந்த காட்சிகள் இருந்தாலும் குட்டிப்பையன் புத்தக வெளியீட்டில் பேசும் இடத்திலும், சிங்கபெருமாள் இறந்ததை அறிந்து ரம்யா கதறும் இடத்திலும் நம்மை அறியாமல் நாம் அழுது கொண்டிருப்போம்... இதுவே இயக்குநரின் வெற்றி.

சொல்ல மறந்துட்டேனே சமுத்திரக்கனியின் நண்பர் இயக்குநர் சசிகுமார் , டாக்டராக வந்து தன் பங்குக்கு தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களை பட்டியலிடுகிறார்...

சாதியை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் இன்றைய சமூக பிரச்சினையை மையமாக்கி படமெடுக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கல்வி வியாபாரத்தை காவியமாக்கிய இயக்குநர் சமுத்திரகனி போற்றுதலுக்கு உரியவர்.

சமுத்திரக்கனியின் மகனாக வரும் விக்னேஷின் வயசுக்கு மீறிய செயல்பாடுகள், சில சினிமாத்தனமான காட்சிகள் இருந்தாலும் நச்சென்ற வசனங்களாலும் சமுத்திரக்கனியின் நடிப்பாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் அப்பாவை....

மொத்தத்தில் அப்பா - அப்பாக்களுக்கான படம் அல்ல... அம்மாக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

விமர்சனம் படத்தினை உடனே பார்க்க வைக்கும் ஆர்வத்தினை தூண்டினாலும் இப்போதைக்குரிய வேலைச்சுமையால் அதை தள்ளி ப்போடுகின்றேன்! நவம்பர் டிசம்பரில் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பார்க்க வேண்டும் என குறித்தும் வைத்தேன் குமார்.

அருமையான அழகிய விமர்சனப்பகிர்வுக்கு நன்றி!

ஸ்ரீராம். சொன்னது…

என்னுடைய மூத்த சகோதரர் கூட இந்தப் படம் பார்த்து விட்டு எண்ணெய் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார்.

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

திரைப்படம் என்று தோன்றவில்லை..பல காட்சிகளில் கண்கள் கலங்கின..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

நானும் படம் பார்த்தேன். ஒருசில குறைகளைத் தவிர இன்றைய சூழலுக்கு தேவையான அற்புதமான படம். எத்தனை படம் வந்தாலும் நம் மக்கள் தனியார் பள்ளியில் பணத்தைக் கொட்டி பிள்ளைகளை சேர்ப்பதை நிறுத்தப்போவதில்லை.
அருமையான விமர்சனம்.
த ம 3

Anuprem சொன்னது…

அருமையான படம்...ஆனால் முடிவில் ஏற்படும் சோகத்தை தான் ஏற்க முடியவில்லை...

சாரதா சமையல் சொன்னது…

நான் அப்பா படம் பார்த்து விட்டேன்.எல்லோரும் பார்க்க வேண்டிய படம். அருமையான விமரிசனம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக நல்ல படம்! உங்கள் விமர்சனமும் அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு படம் என்று அனைவரும் சொல்கிறார்கள். பார்க்க வேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாருங்க அக்கா... நல்ல படம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
ஆமாம்... மிகுந்த சோகம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.