மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 6 ஜூலை, 2016

நேசம் மறந்ததா நெஞ்சம்?


"அப்பா... அம்மா செத்தா நீங்க அழுவீங்களாப்பா?" ஐந்து வயது மகன் ராகேஷின் கேள்வியால் ஒரு கணம் ஆடிப் போய்விட்டான் ரமேஷ். மகன் எதற்காக இப்படிக் கேட்கிறான் என்று புரியவில்லை. அவனை அருகில் இழுத்து "என்னப்பா கேட்டே?" என்றான்.

"அம்மா செத்தா அழுவீங்களான்னு கேட்டேன்?" என்றான்.

"அம்மாவை எதுக்குடா சாகச் சொல்றே?"

"இல்லை... அப்பத்தா செத்தப்போ நீங்க அழுகலையே... அதான் கேட்டேன்..." 

அதைக் கேட்டதும் அவன் மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.

"ஏய் ராகேஷ்... என்ன வயசுக்கு மீறின பேச்சு... வந்தேன்னா தெரியுமா..? போ.. போய் புக்ஸை எடுத்துப்படி... ஒன் வீக்கா புக்கே எடுக்கலை..." கிச்சனில் இருந்து கத்தினாள் ராகினி.

"ம்..." என்றவன் ரமேஷைப் பார்த்தபடி புத்தகத்தை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். மகனின் கேள்வியால் நிலை குலைந்த ரமேஷ் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.

"இந்தாங்க காபி..." என டம்ளரை கொடுத்தபடி அவனருகே நெருக்கமாய் அமர்ந்து "ஏய்... சின்னப்பய வாய்த்துடுக்கா ஏதோ கேட்டுட்டான்... அதுக்குப் போயி... சரி... சரி... காபியைக் குடிங்க ரிலாக்ஸ் ஆயிட்டு நாம வெளியே பொயிட்டு வரலாம்... உங்க மனநிலை மாறும்" என்றாள்.

"இல்லம்மா... அவன் கேட்ட கேள்வி நியாயமானதுதானே...? நான் ஏன் என் அம்மாவுக்கு அழுகலை..." என்றவனுக்கு கண் கலங்கியது.

"ஏய்... அப்பா பாரு... கண் கலங்குறாரு பாரு... அவரை ஏன்டா அப்படிக் கேட்டே.... உனக்கு யாரு இதெல்லாம் சொல்லித் தந்தா.... அதிகப் பிரசங்கி..." என்று ராகேஷின் முதுகில் ஒரு அடி வைத்தவள் "விடுங்க... சின்னப்பிள்ளையாட்டம் கண் கலங்கிக்கிட்டு..." என்றாள்.

ராகேஷ் அழுதபடியே "என்ன கேட்டேன்... அப்பத்தாவுக்கு ஏன் அழுகலைன்னுதானே... சித்தப்பா அழுதாங்கள்ல... அத்தைங்க எல்லாம் அழுதாங்கதானே... அதான் கேட்டேன்... நம்ம முகேஷ் கூட நிதிலா அக்காக்கிட்ட எல்லாரும் அழுகிறாங்க... ரமேஷப்பா மட்டும் கல்லு மாதிரி நிக்கிறாருன்னு சொன்னான்... எனக்கு எவ்வளவு ஷேமா இருந்துச்சு தெரியுமா?" என்றான்.

"இங்க பாரு ராகேஷ்... அவங்க சின்னப் பசங்க... ஏதாவது பேசுவாங்க... அம்மா மாதிரி லேடீஸ்தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க... அப்பா மாதிரி ஜென்ஸ் எல்லாரும் அழ மாட்டாங்க... மனசுக்குள்ளயே வச்சிப்பாங்க... உங்க சித்தப்பா மாதிரி சிலர்தான் லேடீஸ் மாதிரி அளுவாங்க... இதெல்லாம் உனக்குப் புரியாது... நீ பெரியவனானதும் உங்க அப்பா மாதிரி மனசுக்குள்ள வச்சுப்பியோ இல்ல உங்க சித்தப்பா மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியோ யாருக்குத் தெரியும்.. சோ... இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது ஓகேவா..." என்று அவனின் அழுகையை நிறுத்து விதமாக இழுத்து மடியில் அமர்த்திப் பேசினாள்.

"ம்..." அந்த ஒற்றைச் சொல்லில் அவன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பது அவளுக்குப் புரிய, அவனை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

காபியைக் குடித்து விட்டு எழுந்து போய் பெட்டில் விழுந்தான் ரமேஷ்.  அவன் பின்னாலேயே வந்த ராகினி, "என்னங்க நீங்க... இதுக்குப் போயி அப்செட் ஆயிட்டீங்களா...? ஏதோ பசங்க பேசினாங்கன்னு கேட்டுட்டான்... விடுங்க" என்றாள். 

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா... ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்... அப்புறம் நீ சொன்ன மாதிரி வெளியில போகலாம்... ப்ளீஸ்" என்றதும் "ராகேஷ்... அப்பா தூங்கணும்... அங்க போயி அவரைத் தொந்தரவு பண்ணக்கூடாது... சரியா..." என்றபடி பக்கத்து வீட்டு பார்கவியிடம் பேசச் சென்றுவிட்டாள்.

'எப்படி... நான் அம்மா என்று கூட சொல்லாமல் இருந்தேன்.. அந்தளவுக்கு காலம் என்னை பாசமற்றவனாக மாற்றிவிட்டதா...?' என்று நினைத்தவன் சுடுக்காட்டில் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தான். அம்மாவை குழிக்குள் இறக்கி முகத்தை கிழக்குப் பார்த்தார் போல சாய்த்து வைத்து கட்டெல்லாம் அவிழ்த்து அவள் கையிலிருந்த மோதிரத்தைக் கழட்டி எடுத்துக் கொடுத்துவிட்டு  உள்ளே இறங்கி நின்ற இருவரும் ஒரு சேர ஏறியதும் மகன்களை முதலில் மண்ணள்ளிப் போடக் கூப்பிட்டான் அம்பட்டைய வீட்டு ராசு. இவன் எதுவும் சொல்லாது சிவனேன்னு அள்ளிப் போட தம்பியோ கதறி அழுதபடி அள்ளிப் போட்டான். எல்லாம் முடிந்து சுற்றி வந்து விழுந்து கும்பிட்ட போது 'ஏப்பா... ரமேஷ் இப்பவாச்சும் அம்மா, அம்மான்னு சொல்லிக்கிட்டு கும்பிட்டு விழு... இனி எப்பக் கூப்பிடப் போறே' எனக் கிண்டலாகச் சொன்னார் துரை மாமா. அப்பவும் அவன் அம்மான்னு சொல்லவில்லை.

அம்மா... எங்களுக்காகவே கஷ்டப்பட்டவளாச்சே... எங்கள் ஐவரையும் வளர்க்க அவள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா... எத்தனை கஷ்டங்கள்... எத்தனை போராட்டங்கள்... கஷ்டப்பட்டாலும் முகத்தில் கவலையை காட்டாது எங்களை வளர்த்தவளாச்சே... சின்ன வயதில் அம்மா அம்மான்னு அவள் முந்தானையை பிடித்துக் கொண்டே திரிந்தவந்தானே நான்... சின்ன வயதில் என்ன கல்யாணம் வரைக்கும் அம்மா பிள்ளைதானே நான்... இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்துக் கொண்டு வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களை பார்த்தபடி அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டு ரசித்தவந்தானே நான்...எத்தனையோ இரவுகள் இருந்த சாப்பாட்டை எங்களுக்குக் கொடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்தவள்தானே அம்மா.

அம்மா மீது வைத்த அத்தனை பாசமும் நேசமும் எங்கே போச்சு..? மனைவி வந்ததும் எல்லாத்தையும் இவளிடம் கொடுத்து விட்டேனா... அதெப்படி எங்களை உயிராய் பார்த்த அம்மா மீதான பாசம் அத்தனையையும் மனைவியிடம் கொடுக்க முடியும்? மனைவியும் ஒரு அம்மாதானே... ஆம் அம்மாதான்... அதுக்காக தன் ரத்தத்தை பாலாக்கி பசியாற்றியவள் மீதான பாசத்தை இடையில் வந்த சொந்தம் சொல்லி கீழே போட்டு உடைக்க முடியுமா..? உடைத்தேனே... இவ்வளவுக்கும் அவள் என்னைக் கட்டுப்படுத்தியதில்லை... இருந்தும் எனக்கு நானே விலங்கிட்டுக் கொண்டேனே... அது ஏன்..? மனைவிக்காகவா...?  இதை நான் மட்டுமில்ல பெரும்பாலான ஆண்கள் செய்கிறார்களே... அம்மாவை கவனிப்பதே இல்லையே... அவளுக்கு செய்ய வேண்டியதை செய்தேன்தான் ஆனால் அவள் மீதான பாசம் எப்படி என்னை விட்டு விலகியது. செலவுக்கு காசு கொடுத்தால் மட்டும் போதுமா... அவளின் ஆசாபாசங்களைக் கேட்டேனா...? அப்பாவின் இறப்புக்குப் பின்னால் அம்மாவை மாதம் ஒருமுறையேனும் சென்று பார்த்து அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தேனா... இல்லையே...

சின்னப்பய கேட்ட கேள்வி எவ்வளவு சரியானது... நாளை எனக்கு முன்னே மனைவி இறந்தால் அழுகாமல் இருப்பேனா..? பாடுபட்டு வளர்த்த அம்மாவுக்கு வராத அழுகை பாதியில் வந்து என்னில் பாதியானவளுக்கு மட்டும் வருவதேன்... இந்த உலகமே இப்படித்தானே... தாய்க்குப் பின் தாரம் என்பதெல்லாம் மலையேறிப் போச்சே... இப்போ பெரும்பாலானோருக்கு தாரம் சொல்லே மந்திரம் ஆயிருச்சுதானே... அவளுக்குத்தான் நான் என்ற மனநிலைக்கு எப்படி மாறினேன்...? எப்போது மாறினேன்..? மனைவியின் அன்பு மகத்தானதுதான்... அது கணவனுக்கானது மட்டும்தான் அதற்காக முப்பது வருடங்கள் வளர்த்த அம்மாவின் அன்பை எப்ப்டி தள்ளி வைத்தேன்..? சுகம் துக்கம் என என்னவள் என்னோடு பயணிப்பதாலா..? இல்லை எனக்கே எனக்கானவல் அவள் என்ற எண்ணத்தாலா...? எதனால்..? எப்படி..? இந்த ஏழாண்டு மனமாற்றம் அம்மாவின் மரணத்தில் கூட தள்ளியே நிற்குமா..? எப்படித் தள்ளி நிற்கும்.. என்ன இருந்தாலும் பெற்றவள் எனும் போது கண்ணீர் மடையை உடைத்துக் கொண்டு வரத்தானே செய்யும்... ஆனால் எனக்கு வரலையே... ஏன் வரவில்லை..? அப்போ எனக்குள் அம்மா மீது பாசமே இல்லாமல் போய் விட்டதா...? இருந்து தொந்தரவு பண்ணாம இறந்தது சரியின்னு மனசு நினைச்சிருச்சா...

அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்கு இந்த உலகத்தில் ஈடு இணை ஏதுமுண்டா... இறந்து கிடந்தவளைப் பார்த்து கடைசியாய் அம்மா என்று கூட சொல்லாத... சொல்ல முடியாத... சொல்லக்கூடாத அளவுக்கு அவள் அப்படி என்ன செய்து விட்டாள்? சின்ன வயதில் ஊசி போடும் போது எனக்காக அழுதவள்தானே அவள்... உடம்பு முடியாமல் படுத்தால் இரவெல்லாம் உறங்காது விழித்துக் கிடந்தவள்தானே அவள்... கல்லூரிக்குச் செல்ல அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாய் சாப்பாடு செய்து கொடுத்தவள்தானே அவள்... முதல் முறை வேலைக்குச் சென்றபோது அம்மாவை விட்டுப் போறோமே என்று கண்கலங்கியவனை தேற்றி அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் அழுது கொண்டு கிடந்தவள்தானே அவள்... அப்படிப்பட்ட அம்மா இறந்து கிடக்கும் போது அழுகாமல் அமர்ந்திருக்க என்னால் எப்படி முடிந்தது..? 

இந்த நெஞ்சம் அவளின் பாசத்தை அத்தனை சீக்கிரம் அழித்து விட்டதே... இந்த நெஞ்சம் அவள் மீதான நேசத்தை எப்படி சுத்தமாய் துடைத்து எறிந்தது..? கல் நெஞ்சக்காரன் என்றாலும் அம்மாவின் இழப்பை தாங்காமல் கண்ணீர் சிந்துவானே... நான் எப்படி..? என்னால் எப்படி...? என் பிள்ளை என் பிள்ளை என்று சீராட்டிய அம்மாவை என் அம்மா என்று நினைத்து அழக்கூடாச் செய்யாத பாவி அல்லவா நான்... என் அம்மாவின் நேசம் மறந்ததா என் நெஞ்சம்..?

மனசுக்குள்ளேயே புலம்பிய ரமேஷ் ஒரு கட்டத்தில் உடைந்து அழுதான்... 'அம்மா... உன்னை குழிக்குள் வைத்து மண்ணைப் போட்ட போது கூட உன் மீதான பாசம் என்னை அழ வைக்கவில்லையே... நான் எவ்வளவு பெரிய பாவி... என்னை மன்னித்து விடு அம்மா...' என வாய் விட்டு அரற்றினான்.

அப்பாவின் அழுகை கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த ராகேஷ், "இதை அன்னைக்கு அழுதிருந்தா எனக்கும் ஷேம் ஆயிருக்காதுல்ல..." என்றபடி அவனருகே வர, இழுத்து அணைத்துக் கொண்டு அழுதான். அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த மனைவி அவன் உடைந்து அழுவதைப் பார்த்து 'மனசுக்குள்ள கிடந்த சோகம் வெடித்துச் சிதறட்டும்'  என்று நினைத்தபடி அவனருகே அமர்ந்து மெல்ல அணைத்துக் கொள்ள அவள் தோள் சாய்ந்து அழுதான்... அழுதான்... அழுதுகொண்டே இருந்தான்.
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நெகிழ்ந்தேன் நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெகிழ்ச்சி. அந்த நேரத்தில் சிலருக்கு அழத் தோன்றுவதில்லை அல்லது அழ முடிவதில்லை.....

கோமதி அரசு சொன்னது…

பதிவை படித்தவுடன் மனம் கனத்து போனது.
மனம்விட்டு அழுதபின் மனபாரம் குறையும்.
என் அம்மா நான் இறந்த பின் யாரும் அழக்கூடாது தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும் என்றாலும் அழாமல் இருக்க முடியவில்லை.

KILLERGEE Devakottai சொன்னது…

தனிமையில் கண்ணீர் மன அமைதிக்கு தலை சிறந்த மருந்து

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனது நெகிழ்ந்தாலும் ஒரு சிலர் அழாமலேயே தங்கள் வருத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு அதற்காக மருகுபவர்களுக்கும் உண்டுதான்...அல்லது மிகவும் மனது நல்ல பக்குவமடைந்த மனதாக இருந்தால் அழுகை வராது. இல்லையோ...

Yarlpavanan சொன்னது…

தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்

r.v.saravanan சொன்னது…

நெகிழ்ச்சியூட்டும் கதை.நல்லாயிருந்தது. குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

ரமேஷின் சிந்தனையுடனேயே நடந்தேன்.

Unknown சொன்னது…

அழுதால் தான் பாசமிக்க மகனா ?எனக்கென்னவோ அழுபவர்களில் பலரும் வேஷம் போடுபவர்களாகவே தெரிகிறார்கள் :)
அருமையான உங்கள் கதை ,நிறைய பேரை சென்றடைய இதோ என் த ம வாக்கு +5

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அய்யா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
அழ வேண்டாம் என்று சொன்னாலும் அழாமல் இருக்க முடியுமா..?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
ஆமாம்... சிலர் அழுவதில்லைதான்...
இருந்தாலும் சிறிதளவேனும்கண்ணீர் எட்டிப் பார்க்கும்...
அது வராதது குறித்த வருத்தமே இந்தக் கதை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.