மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 அக்டோபர், 2015

மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே...


லைப்பதிவர் விழா முடிந்ததும் அது குறித்து விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் நிறைகளுடன் சில கேள்விகளையும் முன்வைத்தார்கள். ஏன் நான் கூட விழாவில் வைக்கப்பட்ட கவிதைக் கண்காட்சியில் எனது கவிதையும் இருந்ததா தெரியவில்லை என்று கேட்டிருந்தேன். எல்லாருடைய கேள்விகளுக்கும் முத்துநிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, கீதா அக்கா உள்ளிட்ட உறவுகள் மிக அழகாக விளக்கம் அளித்தார்கள். அவர்களின் விளக்கங்கள் மூலமாக எல்லாரும் விவரமாக அறிந்து கொள்ள முடிந்தது.

இன்று காலை கில்லர்ஜி அண்ணாவின் பதிவு பார்த்தேன்... அதில் முத்து நிலவன் ஐயா குறித்து ஒரு நண்பர் சொல்லியிருந்த கருத்துப் பற்றி எழுதி நிலவு நட்சத்திரங்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை...நிலவைத் தேடித்தான் நட்சத்திரங்கள் செல்ல வேண்டும் என்று எழுதியிருந்தார். வாசித்ததும் ஏன் நம் உறவுகள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று தோன்றியது. நான் விழாவுக்குப் போகவில்லை என்றாலும் கவிதை, மின்னூல், கையேடு குறித்து எழுதிய சமீபத்திய பதிவில் ஐயா அவர்கள் விளக்கமாக கருத்து எழுதியிருப்பார்கள். அந்தப் பதிவு குறைகளைச் சொல்ல எழுதியதில்லை... நடப்பு இப்படி என்பதாய் எழுதியது. அதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்... ஆனால் சிலர் நான் ஏதோ குறை சொல்வது போல் நினைத்துவிட்டார்கள். குறையோ நிறையோ சொல்ல நான் விழாவுக்கே செல்லாமல் எப்படி முடியும் சொல்லுங்கள்... செவி வழி  மற்றும் பதிவின் வழியாகவும் கேட்டு எழுதியவைதான். அதை தனிப்பட்ட முறையில் முத்துநிலவன் ஐயாவிடம் மின்னஞ்சல் மூலமாக சொல்லியிருக்கலாம்தான்... ஆனால் அவரின் பதில்களை அனைவரும அறிய வேண்டும் என்பதாலே எனது மனசின் பக்கத்தில் சினிமாச் செய்திகளுடன் எழுதினேன். ஐயாவும் தன் கருத்தைச் சொல்லியிருந்தார்.

ஒரு விழாவை முன்னின்று நடத்துவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எங்க ஊர் திருவிழாவில் எங்க சித்தப்பாதான் கணக்கு வழக்குப் பார்த்து எல்லாம் செய்வார். தலைமையாசிரியராக இருந்தவர் அதனால் எல்லா வேலைகளுக்கும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார். புதிதாக பார்ப்பவர்களுக்கும் என்னடா இவர் இப்படிக் கத்துறாரு என்று தோன்றும்... ஆனால் அவர் கத்துவதால் வேலை நடக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். அவரே பார்ப்பதா... வேறு ஆள் மாற்றுவோம் என்று சின்ன பிரச்சினையில் ஆள் மாற்றினார்கள்... அந்த வேலையை மற்றவர்கள் செய்யும் போதுதான் தலைமைப் பணியின் கஷ்டம் என்ன என்பதை அறிய முடிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தலைமையில் இருப்பவர்களைப் பற்றி நாம் சுலபமாகப் பேசிவிடலாம்... ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து... அனைவருடனும் ஒருங்கிணைந்து நிகழ்வைச் சரிவர நடத்தி முடிப்பதில் எத்தனை சிரமங்கள், சிக்கல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் யாரும் அறிவதில்லை... அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.... தன்னை முன்னிறுத்தவே முத்துநிலவன் ஐயா இந்த விழாவைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறாராம்... என்னய்யா இது... நம்ம வீட்டு விழா என்றாலே நம்மால் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய முடியாது. அப்படியிருக்க புதுகை நண்பர்களை அரவணைத்து இரவு பகல் பாராது வேலை பார்த்து ஒரு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியவருக்கு தன்னை முன்னிறுத்த நினைத்தார் என்பதாய் ஒரு பட்டம்... ஒருவேளை அவர் முத்துநிலவன் ஐயாவைப் பற்றி அறியாதவராய் இருக்கக்கூடும். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அவர் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்ளத் தேவையில்லை... அவர் நீண்டநாள் பிரபலம்தான்... லியோனி பட்டிமன்றத்தில் பேசி பட்டிதொட்டி மட்டுமின்றி உலக அரங்கில் எல்லாம் பிரபலமாய் வலம் வருபவர்தான்.... அவரை வலையுலக மாநாடுதான் பிரபலமாக்க வேண்டும் என்பது இல்லை. படைப்பாளி, பண்பாளி, பேச்சாளி என்ற வகையில் அவர் மிகவும் பிரபலம் என்பதை இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்காக இரவு பகல் பாராது வேலை பார்த்தவர் அவர்... கில்லர்ஜி அண்ணன் சொன்னது போல் அதிகாலையில் எல்லாம் பின்னூட்டங்களும் பதிவும் அவரிடம் இருந்து வரும். அவர் பிரபலமாக இருந்த காரணத்தால்தான் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து போட்டிகள் வைக்க  முடிந்தது. அதேபோல் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தரையும் விழாவில் பேச அழைத்து வர முடிந்தது. விழாக் குழுவினரை முடுக்கிவிட்டு கவிதை ஓவியக் கண்காட்சி, வலைப்பதிவர் கையேடு, திட்டமிட்டு நடத்திய விழா நிகழ்வுகள், நிறைவான சாப்பாடு என பார்த்துப் பார்த்துச் செய்ய முடிந்தது. இவை அனைத்துமே அவர் தன்னை முன்னிறுத்தச்  செய்தவையா நண்பர்களே...?

நாம் அனைவரும் நிறைகளையும் குறைகளையும் சொல்கிறோம்... அதற்கு அவர்களும் என்னடா இவர்கள் என்று எண்ணாமல் பொறுமையாய் பதிலளிக்கிறார்கள். குறைகள் இல்லாத விழாக்கள் இல்லை... இந்தக் குறைகளை அடுத்த விழாவில் நிறைகளாக்குவோம் என்றுதான் அவர்களும் நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பின்னர் எதற்காக நாம்... அவர் தன்னை முன்னிறுத்தப் பார்க்கிறார்... இவர் தன்னை முன்னிறுத்தப் பார்க்கிறார் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்.... மன்னிக்கவும் விரலுக்கு வந்தபடி எல்லாம் பதிவேற்றுகிறோம்... இது நியாயமா?, ஒருவேளை இதை எழுதிய நண்பர் இந்த விழாவின் நிறை குறைகளை வைத்து இப்படி ஒரு கருத்தை எழுதினால் தானும் வலையுலகில் முன்னணிக்கு வரலாம் என்று நினைத்திருப்பார் போலும்... அப்படி நினைத்தால் அது தவறு. அவரது எழுத்துக்கள் அவரை தானாகவே முன்னணிக்கு கொண்டு வரும்.

விழாவுக்கு விரும்பியவர்கள் நன்கொடையாகத்தான் கொடுத்தார்களே தவிர... அனைத்துப் பதிவர்களும் கட்டாய உறுப்பினர் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை. தாங்களால் முடிந்ததைவிட மிகச் சிறப்பாக நடத்தினார்கள்... அதற்கான செலவு அவர்கள் கையைப் பிடித்தபோது கூட இவ்வளவு குறைகிறது எல்லாரும் பகிர்ந்து கொள்வோம் என்று சொல்லவில்லை... வலைப்பதிவர் கையேடுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். அப்ப செலவில் கூடுதலானதை அவர்கள்தானே ஈடு செய்திருப்பார்கள். அப்படியிருக்க புதுகை நண்பர்களை வாழ்த்தாவிட்டாலும் வசைபாடாதிருப்போம். அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

எனது கதைகளை புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று நினைத்து ஐயாவிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அப்போது மலேசியா, சிங்கப்பூர் என பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தார். தனக்கு இப்போது நேரமில்லை சில நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு பின்னர் ஒருநாள் நல்லாயிருக்கு என்று சொன்னார். நானும் அவரும் அது குறித்து பின்னர் பேசவில்லை.... இன்னும் புத்தகம் கொண்டு வரவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தனது வேலைகளின் இடையில் கூட பதிவுலக நட்பை மதித்து இத்தனாம் தேதிக்குள் படித்து கருத்துச் சொல்கிறேன்... தாமதத்திற்கு மன்னியுங்கள் ஐயா என்று மின்னஞ்சல் அனுப்பியவர் அவர். பதிவர்களை உறவாய் பார்ப்பவர்களில் அவரும் ஒருவர்... நான், மதுரைத் தமிழன், முரளிதரன் ஐயா சொல்லித்தான் தன் வலைப்பூ பிரபலமானது என்று பலதடவை சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லித்தான் அவர் பிரபலமாக வேண்டும் என்பதில்லை... அவர் பிரபலத்துக்கு பிரபலம்... அவர்தான் எங்களை அறிமுகம் செய்யும் இடத்தில் இருக்கிறார். 

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை...  தயவு செய்து தன்னை முன்னிறுத்தத்தான் இந்த பதிவர் விழாவை அவர் நடத்தினார் என்று இனிமேலும் பேசாதீர்கள். அவர் மட்டுமல்ல புதுகை நண்பர்களும் இன்னும் சிலரும் பட்ட கஷ்டங்களுக்கு நிறைவான விழாவாய் அமைந்தது என்பதை மறக்காதீர்கள்... நாம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த வேண்டாம்... அவர்களின் மனதைப் புண்ணாக்கிப் பார்க்காமல் இருந்தால் போதும்... பிரபலமே பிரபலமாகத்தான் இதை நடத்தியது என்று சொல்லி உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவுலகில் முகம் பார்க்காமல் எழுத்து மூலமாகவே எல்லோரும் உறவாய்... நட்பாய்... பாசமாய் உலகெங்கும் விரிந்து கிடக்கிறோம். இந்த உறவுகள் என்றும் சந்தோஷமாய் தொடர வேண்டும்... நாம் இருக்கும் வரை நட்போடு இருப்போம்... நம் வீட்டு விழாவில் நிகழ்ந்த சிறு தவறுகளை மறந்து அடுத்த நிகழ்வில் இந்தத் தவறுகள் நிகழாது பார்த்துக் கொள்வோம்.

நிறை எழுதுகிறேன்... குறை எழுதுகிறேன்... என்று சொல்லிக் கொண்டு ஒரு மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாய் நின்று கல்லெறியாதீர்கள்... விழும் கல்களால் அடிபடுவது நம் இதயம்தான்... மேலும் இரவெல்லாம் விழித்து பதிவு போட்டு... பதிவு போட்டு... தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள தனபாலன் அண்ணா இந்த விழாவைப் பயன்படுத்தினார் என்றோ... எல்லாருடைய பதிவிலும் கருத்து இட்டு விழாவுக்கு வாங்க... விழாவுக்கு வாங்கன்னு சொல்லி  கீதா அக்கா தனைப் பிரபலப்படுத்திக் கொள்ள முயன்றார் என்றோ... விழாவுக்கு போகவில்லை என்றாலும் தினமும் பகிர்வில் விழா குறித்து எழுதி.. எழுதியே கில்லர்ஜி அண்ணா இதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சித்தார் என்றோ... புதுகைப் பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து எழுதி சே.குமார் இதன் மூலம் தன்னைப் பிரபலமாக்க நினைக்கிறான் என்றோ... பேசவோ எழுதவோ செய்யாதீர்கள். அவரவர் எழுத்தில் அவரவர் நிறைவாய்த்தான் இருக்கிறார்கள்... இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல்... அதில் அவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வலைப்பதிவர் விழா குறித்து நிறை, குறை எல்லாம் நிறையப் பேசியாச்சு... இனி யாரும் அது பற்றி எழுத வேண்டாம் என்பதே என் எண்ணம். மீண்டும் அவரவர் பாணிக்கு திரும்புவோம்... எப்போதும் போல் சந்தோஷமாக நகரட்டும் நம் நாட்கள்...

இந்தப் பகிர்வு முத்துநிலவன் ஐயாவைச் சொல்லிவிட்டார்களே என்பதற்கான பதிவு அல்ல.... நம்மில் யாரைப் பற்றி சொல்லியிருந்தாலும் இங்கு கண்டிப்பாக எழுதியிருப்பேன். குறை கூறுகிறேன் என்று நம்மைநாமே குறைத்துக் கொள்வதை தவிர்ப்போம். இரவு பகல் பாராது உழைத்த நம் புதுகை உறவுகளைப் பாராட்டுவோம்...

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல... மற்றவர் மீது எதுவும் அறியாமல் சேற்றை இறைக்காதீர்கள் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரைதான் இது. தவறாக இருந்தாலோ புண்படுத்தியிருந்தாலோ என்னை மன்னியுங்கள் நண்பர்களே.... நாம் என்றும் உறவாய் இருப்போம் என்பதைச் சொல்ல விளைந்த கட்டுரைதான் இது.

ஆம்... நாம் நாமாகவே இருப்போம்.


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

/////தலைமையில் இருப்பவர்களைப் பற்றி நாம் சுலபமாகப் பேசிவிடலாம்... ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து... அனைவருடனும் ஒருங்கிணைந்து நிகழ்வைச் சரிவர நடத்தி முடிப்பதில் எத்தனை சிரமங்கள், சிக்கல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் யாரும் அறிவதில்லை... அறிந்து கொள்ள விரும்புவதில்லை.////

இன்றைய நிஜம் இது! தலைமை என்பது வெளியிலிருந்து பார்க்கத்தான் பளபளப்பு அதற்கான அவர்கள் பாடுகள் என்ன என்பதை அனுபவித்தால் தான் புரியும். குறையும் நிறையும் குறித்த அருமையான பகிர்வு குமார். நன்றிப்பா!

ஸ்ரீராம். சொன்னது…

மீண்டும் ஒரு பதிவர் விழா பதிவு!
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நாம் நாமாகவே இருப்போம். உள்ள உணர்வுகளைப் பகிர்வதில் தவறில்லையே.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உண்மைதான்... தலைமையாய் செயல்படுவதில் எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு தெரியாமல் பேசுகிறார்கள்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நம் உள்ளத்தின் உணர்வுகளைப் பதிவதில் தவறில்லை ஐயா...
எல்லாருமே பகிர்ந்தோம்... அதற்கான பதிலையும் பெற்றோம்....
அது ஆரோக்கியமானது... ஆனால் தனிமனித தாக்குதல் ஆரோக்கியமானதில்லையே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் மனதிலிருந்து வந்த உண்மைகள்...

புரிகிறது சகோதரரே... நன்றி...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

Yarlpavanan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
”தளிர் சுரேஷ்” சொன்னது…

பதிவர் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் இந்த மாதிரி சலசலப்புக்கள் எழுந்து அடங்கிவிடும் பதிவர் கூட்டம் என்பது ஓயாத அலை! இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச வேண்டியது இல்லை! விழா நடத்துவது எத்தனை சிரமம் என்று நானும் அறிவேன். எங்கள் சங்கம் சார்பாக சில விழாக்களை நடத்தி அனுபவப் பட்டவன். உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி! புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை குமார்! உங்கள் மனசுதான் எங்கள் பதிவர்கள் அனைவரது மனசும்!

நாம் அனைவருமே ஒரு குடும்பம்தானே. குடும்பம் என்றால் பல பிரச்சனைகள் வரும் போகும். அவற்றைவிட , நாம் நட்பு, அன்பு, மனிதம் என்றவற்றை மட்டும் நோக்கினால் அமைதியான நதி வளம் சேர்ப்பது போல் இவை எல்லாம் பாராட்டாமல் நாம் அமைதியாக நமது படைப்புகளைப் படைத்து வலையுலகிற்கு வளம் சேர்ப்போம்.

மனசு அழகாய் பேசியிருக்கின்றது. வாழ்த்துகள் குமார்.

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே...
விடயங்களை அழகாக விளக்கி விட்டீர்கள் இதற்க்கு மேல் விபரங்கள் ஒன்றும் இல்லை நன்று நன்று
U.A.E. முழுவதும் சிதறிக்கிடந்த 110 தேவகோட்டையர்களை ‘’துபாய்’’ என்ற ஒரு இடத்தில் ஒன்றிணைக்க நான் பட்ட கஷ்டம் எனக்கே தெரியும் முடிவில் எனக்கு 25 சதவீதம் கெட்ட பெயரும் கிடைத்தது இதற்கு நான் கொடுத்த விலை எனது சொந்த பணமும், கால விரயங்கள் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலும்...

முடிவில் அழகான விடியல் புகைப்படத்தை இட்டது அருமையிலும் அருமை
இனி விடிவது நம் அனைவருக்கும் நலமாகும் ஆம் நாம் நாமாகவே இருப்போம் தொடர்ந்து....

குறிப்பு – பதிவர் மாநாடு நடக்கும் அந்த ஒருமாத காலமும் கூடுதலான பதிவுகள் வெளியிட்டதற்காக நானும் சிலரால் விமர்சனத்துக்கு ஆளானேன் என்பது குறிப்பிடத்தக்கது அதை தங்களுக்கு நேரடியாக சொல்லி இருந்தேன்.
தமிழ் மணம் 5

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே
குறை கூறுவோரைப் பொருட்படுத்த வேண்டாம்
என்பதே என் எண்ணமாகும்
நன்றி நண்பரே
தம +1

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

வணக்கம் நண்பர் குமார் அவர்களே. என்மீது யார் குறைசொன்னாலும் அதையும் காதுகொடுத்துக் கேட்டு, என்மீது குறை இருக்கிறது என்பதை நான் உணர்ந்தால் அந்தக் குறையை நிறைவாக எடுத்துக் கொண்டு செய்யும் பக்குவம் எனக்கு இந்த 60வயதில் வந்திருக்கிறது. யாராவது பாராட்டினாலும் அப்படித்தான் அதில் உண்மையிருக்கிறதா இல்லை “சொறிதல்“ தானோ? என்றும் சந்தேகப்படுவேன். நமக்குத் தெரியாதா நாம் எதை எப்படிச் செய்திருக்கிறோம் என்று? ஒவ்வொரு நிகழ்வின் பின்னும், உலகின் பல்வேறு நாடுகளில் பேசிய பேச்சின் பிறகும் இதை நான் உணர்ந்திருக்கிறேன். எனவே, அந்த நண்பர் சொன்னதைப் பெரிது படுத்த வேண்டாம் நண்பர் குமார் அவர்களே. வார்த்தைகளை விடவும் அதன் பின்னணி உணர்வு முக்கியம். (சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கப்படலாம் --நக்கீரன்) அதனால்தான் தங்களின் முந்திய கேள்விகளுக்கு நானும் தங்கை மு.கீதாவும் எங்கள் விழாக்குழுவினரும் எங்கள் விளக்கத்தைத் தந்தோம். தங்கள் அன்பிற்கு நன்றி. இதே பின்னூட்டத்தில் பொறுப்பாக எழதியிருக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. திரு யாழ்பாவாணன் அவர்களின் கருததை மட்டும் நான் ஏற்கவில்லை. கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமே அன்றி, கட்டையால் அல்ல யாழ்வாணரே! அது கருத்தாளரின் பலவீனமேயாகும். அது வேண்டாம்.

நிஷா சொன்னது…

நானும் இந்த ஜோதியில் ஐக்கியமாகி விடலாமா என யோசிச்சுட்டிருக்கேன் குமார். ஆனாலும் பதிவுகள் பார்த்தால் தயக்கமாகவும் இருக்கு. நிஜம் சொன்னால் நேரம் என்பதை நான் பிடித்து இழுத்து தான் கொண்டு வர வேண்டும். இன்னும் ஒரு வாரம் யோசிப்போம்ல!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பருக்கு வணக்கம்...
தங்கள் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும்... ஐயா மீதான நம் பாசத்தை பிரதிபலித்தாலும்... அதில் இருந்த கோப வார்தைகளை ஐயா அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும்... நண்பரின் செயலோடு கருத்து மோதல் செய்வோம்... மற்ற மோதல்கள் எதற்கு... என்பதாலும் நீக்கும்படி ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
ஆவலோடு... விரைவில் ஜோதியில் ஐக்கியமாகுங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நடந்து முடிந்து விட்டது. அடுத்த விழா எங்கே என்பதைப் பற்றி பேசலாம். :) அடுத்த விழா பற்றி, எங்கே என்பது பற்றி ஏதேனும் முடிவு உண்டா?

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.

நல்ல தலைப்புடன் ௬டிய கட்டுரை. நன்கு புரிந்து கொள்ளும்படி தாங்கள் சிறப்பாக எழுதிய பதிவை படித்து விபரங்கள் புரிந்து கொண்டேன். என்றுமே நம் மனநிறைவின் முழுதான சந்தோஷத்தில் குறைகள் நாளடைவில் காணாமல் போய்விடும் இயல்புடையவை. பதிவர் விழாவை பாடுபட்டு சிறப்புற நடத்திய அனைவரையும், நாம் மனதாற பாராட்டுவோம். பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.