மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 20)

முந்தைய பகுதிகள் : 


பத்தொன்பதாவது பகுதியின் இறுதியில்...

"ன்ன விஷயமா வந்திருக்காங்களாம்..?" மனைவியிடன் கேட்டபடி தலையில் எண்ணெய் தேய்த்தான்.

"அதை நீங்களே கேளுங்க...?"

"அத்தான்...." குமரேசன் மெதுவாக அழைத்தான்.

"யாருக்கு யாருடி அத்தான்.... அத்தான் நொத்தானுன்னு... இங்க எதுக்குடி வந்தான்..?" கத்தியவன் கையிலிருந்த எண்ணெய்ப் பாட்டில் வாசலில் போய் விழுந்தது.

இனி...

மேஷ் விட்டெறிந்த எண்ணெய்ப் பாட்டில் வாசலில் போய் விழவும் குழந்தைகள் இருவரும் அவர்களிடம் இருந்து விலகி ஒரு ஓரமாக ஒதுங்கினர். கோபத்தில் சேரில் இருந்து எழுந்த குமரேசனை அழுத்தி உட்கார வைத்த கண்ணதாசன், "அத்தான்.. என்ன இது? உங்க கோபம் நியாயமாவே இருக்கலாம். அதுக்காக இப்படியா நடந்துக்கிறது" என்றான் மெதுவாக.

"என்ன எனக்குச் சொல்லித்தாறியளோ... எங்களுக்குத் தெரியும் எப்படி நடக்கணுமின்னு... வந்துட்டானுக வாலாட்டிக்கிட்டு..." 

"இப்ப எதுக்கு இப்படி நடந்துக்கிறீக...? அவுக நம்ம வீட்டு தேடி வந்திருக்காக... கோபமோ தாபமோ எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு... அக்கா வீடுன்னு தேடி வந்தவனை வான்னு சொல்றதுல என்ன கெட்டுப் போச்சு... எங்கூடப் பொறந்தவுக என்ன வக்கத்துப்போயா வாசல்ல வந்து நிக்கிறாக..."

"இங்கேருடி... என்ன வக்காலத்து வாங்குறியா... வாயைப் பேத்துப்புடுவேன் பேத்து... சொல்லிட்டேன்..." கத்தினான்.

"அத்தான்... எதுக்கு கத்துறீங்க.. அன்னைக்கு கூடப்பொறந்தது கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கவும் அப்படி நடந்துக்கிட்டான். இதே உங்க தங்கச்சி வீட்ல பிரச்சினையின்னு வந்து நின்னா நீங்க செய்ய மாட்டீங்களா?"

"என்ன வக்கீல் மாதிரி பேசுறீக... இதையெல்லாம் இங்க வந்து பேசாதீக... உங்க வீட்ல வச்சிக்கங்க.."

"இப்ப எதுக்கு அதுக்கிட்ட கத்துறீக... அது என்ன பண்ணுச்சு உங்களை..."

"இங்கேருடி.. உங்க சித்தப்பமவன் பெரியப்பமவனெல்லாம் புத்தி சொல்ல நா என்ன குடிச்சிட்டு தெருவுலயா கெடக்கேன்... இல்ல மொன்னைப்பயலாத் திரியுறேனா... இவரு என்ன மயித்து எல்லாத்துக்கும் ஆட்டிக்கிட்டு வாராரு..."

"அத்தான்..." கத்தினான் குமரேசன்.

"டேய்... சும்மா இருடா...." அவனை அடக்கினான் கண்ணதாசன்.

"நீ சும்மா இருண்ணே... எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு... எங்களைப் பிரிச்சிப் பாக்க நீங்க யாரு... நாங்க சொன்னோமா சித்தப்பமவன் பெரியப்பமவன்னு... நாங்க எல்லாரும் அண்ணந்தம்பிதான்... தேவையில்லாம எதுக்கு பேசுறீக... எங்க வீட்டுப் பிரச்சினையை பேச நாங்க வருவோம்... அது இங்கேயின்னு இல்ல... சுந்தரி அக்கா வீடா இருந்தாலும் சரி, கற்பகக்கா வீடா இருந்தாலும் சரி... நாங்கதான் போயிக் கேப்போம்... வந்தவங்களை வான்னு கேக்கத் துப்பில்லை... சித்தப்பனாம் பெரியப்பனாம்..."

"தம்பி... இந்தச் சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்... அண்ணந்தம்பியே அத்துக்கிட்டு நிக்கும்போது இவுக உறவு போட்டு ஆட்டுறாங்களாம் உறவு... என்ன கேட்டே வான்னு சொல்லலைன்னுதானே... அதான் போன்னு சொல்லிட்டேனுல்ல... ஆட்டிக்கிட்டு வந்த வாலைச் சுருட்டிக்கிட்டு போவேண்டியதுதானே..."

"அப்புறம் இங்க என்ன உக்காந்து சாப்பிட்டுப் போகவா வந்தோம்... வாண்ணே... மரியாதை தெரியாத மனுசனுக்கிட்ட பேசிக்கிட்டு..." குமரேசன் கொதித்தான்.

"டேய்... இருடா... அப்பா என்ன சொல்லி அனுப்புனாரு... சும்மா எல்லாத்துக்கும் கோபப்படாதே... என்ன சொல்லிட்டாரு... அவரு சொன்னது சரிதானே... நான் உங்க பெரியப்பன் மவந்தானே... விடு... அத்தான் கொஞ்சம் கோபத்தை விட்டுட்டு பேசுங்க... கொண்டாங்குடுத்தானுக்குல்ல மொறைச்சிக்கிட்டு நின்னு என்னாகப்போகுது... தயவு செய்து உக்காருங்க..." கெஞ்சினான் கண்ணதாசன்.

"நல்லநாளும் பெரியநாளுமா வீட்டுக்கு வந்ததுகளை மனசு வருத்தப்பட வச்சா குடும்பம் வெளங்குமா? இந்த மனுசனுக்கு இதே பொழப்பாப் போச்சு... எதுக்கெடுத்தாலும் கிறுசுகெட்டுப் பேசிக்கிட்டு..." முந்தானையில் கண்ணீரைத் துடைத்தவள் மூக்கையும் கிருட்டென்று அதிலேயே சிந்தினாள்.

"எதுக்குடி இப்ப ஓப்பாரி வைக்கிறே... தூக்கிப் போட்டு மிதிச்சேபுடுவேன்... பேசாம இருக்கியா இல்லையா..."

"ஏண்டி நீ இப்ப ஒப்பாரி வைக்கிறே...? அடேய்... உனக்கென்ன கிறுக்குப் புடிச்சிருக்கா... வீட்டுக்கு வந்திருக்குக.. வான்னு சொல்லாம என்னைக்கோ நடந்ததை இன்னமும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு கத்துறே...?" அதட்டினாள் ரமேஷின் அம்மா

"அம்மா... நீ சும்மா இருக்கமாட்டே... என்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சம்மந்தப்புரத்துமேல பாசம் பொத்துக்கிட்டு வருது"

"ஆமா... பொத்துக்கிட்டு கிழிக்கிது.... என்ன இருந்தாலும் வீடு தேடி வந்திருக்குக... வான்னு சொல்றதுல என்ன கொறைஞ்சி போயிடுவியா.... இந்த சொந்த பந்தங்களைப் பகைச்சிக்கிட்டு போகும்போது என்னத்தை கொண்டு போகப்போறோம்... உங்கப்பன் அண்ணந்தம்பி அம்புட்டுப் பேரையும் பகைச்சிக்கிட்டு இருந்தாரே... என்னாச்சு செத்தன்னைக்கு ரத்த உறவு எது வந்துச்சு சொல்லு... சுத்தமாவே அத்துப் போச்சுல்ல..."

"அம்மா..." கத்தினான் ரமேஷ்.

மாமியா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஆதரவா பேசியது கண்மணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுதான் நல்ல தருணம் எனச் சுதாரித்து, "அயித்த சொல்றது சரிதானே... மாமா செத்ததுக்கு அவுகல்லாம் வரலை... அவுக வீட்டு நல்லது கெட்டதுக்கு நாம போகலை... இப்ப உங்க சொந்தத்தோட ஒட்டுமில்லாம உறவுமில்லாம இருக்கோம்... எங்க பக்கமும் அத்துக்கிட்டுருங்க... நாமளா சந்தோஷமா இருப்போம்..." கடுப்பாகப் பேசினாள்.

"இவ ஒருத்தி... இவனுக உறவுதான் நம்மளை தூக்கி நிறுத்தப் போகுதாக்கும்..."

"தூக்கி நிறுத்துதோ இல்லையோ... நாளைக்கி சபையில எம்புள்ளைகளுக்கு அதுக வந்து மாலை எடுத்துப் போட்டாத்தான் மரியாதை... ஏன் நம்ம செத்தாலும் அதுகளோட பிள்ளங்க வந்துதான் மாப்ள மொறை செய்யணும்... இல்லேன்னா ஒண்ணுக்கு நாலு மச்சினனுங்க இருக்கானுங்க மாப்ள மொறை செய்ய ஒருத்தன் கூடவும் இவுக உறவு வச்சிக்கலைன்னு ஊரு பேசும்..."

"ஏண்டி இவளே பொங்க அன்னைக்கு சாவைப்பத்தி பேசுறே... சத்த சும்மா இருக்க மாட்டே.... இந்தருப்பா.... வந்தவுகளை வான்னு கேளு... ஏதோ வெஷயமாத்தான் உன்னைய பாக்க வந்திருக்குக... கோபத்தை விட்டுட்டு உக்காந்து பேசு..." மருமகளை அதட்டி, மகனிடம் அன்பாச் சொன்னாள்.

"அத்தான்... இவன் உங்ககிட்ட நடந்துக்கிட்டது தப்புத்தான்... அது முடிஞ்ச கதை... பெரியத்தானை எப்படி வீட்ல மூத்தபிள்ளையா நினைக்கிறோமோ அது மாதிரித்தான் நீங்களும் கற்பகக்கா வீட்டுக்காரரும்... நாங்க உறவு வேணுமின்னு நினைக்கிறோம்... என்னத்தைக் கொண்டு போகப்போறோம் சொல்லுங்க... பொறந்தாச்சு... வாழுற வரைக்கும் சொந்தங்களோட சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போவோமே... இந்தா அபி இவனை நம்பி வந்து நம்ம குடும்பத்துல எல்லாருக்கிட்டயும் பாசமா இருக்குது... யாருக்கு ஒண்ணுனாலும் முன்னால நிக்கிது... அப்படி எல்லாரும் ஒண்ணா இருந்து சந்தோஷமா இந்த வாழ்க்கையை நகர்த்துவோம்..."

ரமேஷ் பதில் பேசாமல் சேரை இழுத்துப் போட்டு தனியே அமர்ந்தான்.

"இவன் பண்ணுன தப்புக்கு நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுகிறேன்..." என்ற கண்ணதாசன் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் சேரில் இழுந்து எழுந்து  ரமேஷின் காலில் விழுந்தான்.

"ஏய்... ஏய்... என்ன இது?" கத்தியபடி சேரில் இருந்து எழுந்தான்  ரமேஷ்.

"அண்ணே... என்ன பண்றே...?" பதறி அவனைத் தூக்கினான் குமரேசன்.

"ஏண்ணே நீயி... உன்னையவிட வயசுல சின்னவருண்ணே அவரு... அவரு கால்ல விழுந்துக்கிட்டு... ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்குண்ணே... அதை அவங்க பேசித் தீத்துப்பாங்க... நீ ஏண்ணே... கால்ல எல்லாம் விழுந்துக்கிட்டு... " கண்ணீரோடு கண்ணதாசனின் காலைப் பிடித்துக்கொண்ட கண்மணி, கணவனை நோக்கி, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க...சித்தப்பமவன் பெரியப்பமவன்னுதானே... பாத்தீங்களா... இது... இதுதான் நாங்க... எங்களுக்கு ஆத்தா,அப்பன் வேணுமின்னா வேறயா இருக்கலாம்... ஆனா பொறப்பால நாங்க ஒருதாயிப் புள்ளைங்கதான்... கூடப்பொறந்தவன் தப்பு பண்ணினாக்கூட மன்னிப்புக் கேக்க தயங்குற வர்க்கம் உங்களது... ஆனா... பாத்தியல்ல... இனிமே தயவு செய்து சித்தப்பமவன் பெரியப்பமவனுல்லாம் பேசாதீக... கண்ணதாசண்ணன் எங்க அண்ணன்... எங்க ரத்தம்..." கண்ணீரோடு சொன்ன கண்மணியிடம் வந்து ஒண்டிய குழந்தைகளின் கண்களும் கலங்கி இருந்தது.

"என்னண்ணே நீயி... எனக்கு அப்பா மாதிரிண்ணே நீ... நான் அத்தானை கோபத்துல சட்டையைப் பிடிச்சது தப்புத்தான்... அதுக்கு நீ எதுக்கு கால்ல விழுந்துக்கிட்டு... அவரு கோபம் குறையலைன்னா இருக்கட்டும்... அதுக்காக நீ... ச்சே... போண்ணே...." கண்ணதாசனை தோளோடு அணைத்துக் கொண்டு கலங்கினான் குமரேசன், தலையைக் குனிந்தபடி எதுவும் பேசாமல் நின்றான் ரமேஷ்.

"இப்ப என்னாச்சு... நம்ம அத்தாந்தானே... அவரு கால்ல விழுறது என்ன தப்பு... நல்ல நாள் அன்னைக்குத்தானே விழுந்திருக்கேன்... பொங்க அன்னைக்கு அளுக்காளு அழுதுக்கிட்டு.... பிள்ளைகளையும் அழுக விட்டுக்கிட்டு... ஏய் கண்மணி... மொதல்ல அழுகுறதை நிப்பாட்டு... ஆத்தா மாமாக்கிட்ட வாடா... பொம்பளப்புள்ள கண்ணக்கசக்கிக்கிட்டு...." என மருமகளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டு கண்ணைத் துடைத்துவிட்டான் கண்ணதாசன்.

"ஏண்ணே... இப்படிச் செஞ்சிட்டே... அவரு அப்படியே இருக்கட்டும்ண்ணே... எத்தனையோ பாவத்தைச் சுமந்து வச்சிருக்காரு... இதுல நீ வேற கால்ல விழுந்து இன்னொரு பாவத்தையும் சேத்து சொமக்க வைச்சிட்டியேண்ணே..." புலம்பியபடி எழுந்தாள்.

"இந்தா... பாவம் புண்ணியமுன்னு பேசிக்கிட்டு... சும்மா இருக்க மாட்டே... சரி... கொஞ்சம் தண்ணிங்கொடு..." என்ற கண்ணதாசன் அவ கொண்டு வந்து கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டு "அத்தான் உங்க கோபம் அப்படியே இருக்கட்டும்... அதை பின்னால பாத்துக்கலாம்... இவ்வளவு நேரம் பேசியும் உங்க மனசு மாறலை.. அது மாறாதுன்னு தெரிஞ்சி போச்சு... பிரச்சினையை புடம் போட்டு வச்சிருக்கீக... இருக்கட்டும்... அப்பா சொத்தைப் பிரிச்சிடலாம்ன்னு பாக்குறாரு.... அதை மாப்பிள்ளைகளை வச்சித்தான் பண்ணனுமின்னு நினைக்கிறாரு... ஊரு சிரிக்கிற மாதிரி வச்சிராம நாளக்கி பொங்க முடிச்சிட்டு கண்மணி பிள்ளைகளை அனுப்பி வச்சிட்டு நீங்க நாளான்னக்கி கண்டிப்பா வந்துருங்க... அப்பா ரொம்ப எதிர்பார்ப்பாரு... வர்றோத்தான்... உங்க கால்ல விழுந்ததை சந்தோஷமாத்தான் நினைக்கிறேன்... அதுக்காக வருத்தப்படாதீங்க... உங்க மச்சாந்தானே... வயசு கெடக்குது... வயசு... ஆத்தா வர்றோம்... டேய் வாடா..." என குமரேசனை அழைத்துக் கொண்டு கண்ணதாசன் கிளம்ப, "அண்ணே... இருண்ணே.... இருக்கச் சொல்லுங்கங்க..." எனப் பரிதவித்தாள் கண்ணகி.

"அத்தான்... அன்னைக்கி அக்கா, அழுதுக்கிட்டு வந்து நின்னப்போ அது உடம்பெல்லாம் நீங்க அடிச்சி ரணமாகிப் போனதைப் பாத்துத்தான் உங்க சட்டையைப் பிடிச்சி அடிக்க வந்தேன்... ஆனா இன்னைக்கி வரைக்கும் உங்க மேல மரியாதை வச்சித்தான் இருக்கேன்... உங்ககிட்ட அன்னைக்கி அப்படி நடந்துக்கிட்டது தப்புத்தான்... ஆனா அதுக்கு அப்புறம் நீங்க அக்காவை வச்சிருக்க மாதிரி யாரும் வச்சிக்கலைன்னும் எனக்குத் தெரியும்... அதுவே எனக்குப் போதும்... எனக்காகவோ அண்ணனுக்காகவோ நீங்க வரவேணாம்... உங்க மாமனாரு... செத்துருவேன்னு பயந்துதான் சொத்தப் பிரிக்க நிக்கிறாரு... அவருக்காக வாங்க... வராம இருந்து அவரைக் கொன்னுடாதீங்க... ப்ளீஸ்..." குமரேசன் கண் கலங்கச் சொல்லிவிட்டு கண்ணதாசனுடன் நடந்தான்.

"ஏங்க... இன்னும் என்னங்க உங்களுக்கு கோவம்... வீட்டுக்கு வந்துட்டு எந்தங்கங்க கண்ணக் கசக்கிக்கிட்டுப் போகுதுங்க... கூப்பிடுங்க... வாங்கன்னு சொல்லுங்க..."

"அப்பா... ப்ளீஸ்ப்பா.. மாமாவைக் கூப்பிடுங்கப்பா... ரெண்டு மாமாவும் அழுதுக்கிட்டு போறாங்கப்பா... மாமாவைக் கூப்பிடுங்கப்பா...ப்ளீஸ்..." அவனை உலுக்கினாள் சுவேதா.

அவர்கள் வண்டிக்கு அருகில் செல்ல, "கண்ணமச்சான்... அவனையும் கூட்டிக்கிட்டு உள்ள வாங்க" மகளை அணைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டான் ரமேஷ்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

செம டச்சிங் எபிசோட்....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

இரசிக்கவைக்கு கதை நன்றாக உள்ளது....அடுத்த பகுதிக்கா காத்திருக்கேன்.. பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

மனதை தொட்டுப் போகிறது...

கோமதி அரசு சொன்னது…

கண்ணில் நீர் வந்து விட்டது. மிக அருமையான பாசப்பிணைப்பு.
வாழ்த்துக்கள்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

மனதைத் தொடுகின்ற தொடரின் தொடருக்காகக் காத்திருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

கோபம், தாபம், குணம், மனம் - எல்லாம் சேர்ந்து தானே நல்லதொரு குடும்பம்!..
சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் பெருகட்டும்!..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

குடும்பம் என்றாலே அனைத்தும் அடங்கியதுதானே
தொடர்கிறேன் நண்பரே
தம +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

விட்டுப் போன பதிவுகளையும் படித்து விட்டேன். அருமையாக குடும்ப நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வருகிறீர்கள்.! படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு யதார்த்தமான சொற்களுடன் இந்த வாரம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.