மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 10 ஜனவரி, 2015தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 16)

முந்தைய பகுதிகள் : 

பதினைந்தாவது பகுதியின் இறுதியில்...

"சரித்தான்... இந்தாங்க..." என்று கண்ணதாசன் சாவியைக் கொடுக்கும் போது அவனின் செல்போன் அழைத்தது.

"என்ன குமரேசன் கூப்பிடுறான்... இப்பத்தானே பேசினான்... இந்தாங்கத்தான் உங்ககிட்ட பேசவாத்தான் இருக்கும்" எனக் கொடுக்க அழகப்பன் வாங்கி "என்னப்பா... சொல்லு..." என்றார்.

"அத்தான்... பஸ் ஆக்சிடெண்ட் ஆயிருச்சு..." எதிர்முனையில் பதட்டமாய்ச் சொன்னான் குமரேசன்.

இனி...

குமரேசன் வந்த பஸ் ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு என்று பதட்டத்துடன் சொல்லவும் அழகப்பனுக்கு இதயத்துடிப்பு எகிறியது.

"என்னப்பா சொல்றே... ஆக்ஸிடெண்டா...? என்னாச்சு..?" பதட்டமானார்.

"என்னது ஆக்ஸிடெண்டா... ஆத்தி... என்னாச்சுன்னு கேளுங்கத்தான்..." பதறினான் கண்ணதாசன்.

"ஆமாத்தான்... லாரிக்காரன் வளைவுல வந்து இடிச்சிட்டான்.... வண்டிக்குள்ள இருந்த எல்லாருக்குமே சின்னச் சின்ன அடி... சைடு கண்ணாடி ஒடஞ்சி அபிக்குத்தான் கையில வெட்டிருச்சு..."

"ஆத்தி... ரொம்பக் காயமோ..?"

"இல்ல சின்னக் காயந்தான்..."

"பிள்ளைங்களுக்கு எதுவும்..." மெதுவாக இழுத்தார்.

"முன்னாடி சீட்ல போயி முட்டுனதுல ரெண்டு பேருக்கும் தலையில அடிபட்டு வீங்கியிருக்கு... எனக்கும் சின்ன சின்ன அடி... அம்புட்டுத்தான்..."

"எங்க இருக்கே... கண்ணதாசனை வரச் சொல்லவா?"

"அய்யோ... அதெல்லாம் வேண்டாந்த்தான்... அண்ணன் இங்க வர்றதுக்குள்ள நான் அங்க வந்துருவேன்... இப்ப எங்களை பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போக வண்டி ஏற்பாடு பண்ணிட்டாங்க... காமிச்சிட்டு வாறேன்... பதட்டப்பட வேண்டாம்.... ஒண்ணுமில்லை..."

"சரிப்பா... பாத்து வா... இல்ல ஆளு வரணுமின்னா சொல்லு... மணி கூட வந்துட்டான்... யாராச்சும் கெளம்பி வாறோம்..."

"வேண்டாந்த்தான்..."

"சரிப்பா..."

என்னமோ மாப்பிள்ளை பதட்டமாப் பேசுறாரே... என்னாச்சோ ஏதாச்சோ தெரியலையே என பதட்டமாய் வந்த காளியம்மாள் "என்னப்பா... எதுனாச்சும் பிரச்சினையா?" என்றாள்.

"இல்ல அயித்தை... ஒண்ணுமில்ல..." 

"எதாயிருந்தாலும் சொல்லுங்கப்பா.... எனக்கு பயமா இருக்கு?" கலங்கினாள்.

"அயித்தை எதுக்கு இப்ப கண்ணீரு... மாமாவுக்கு ஒண்ணுமில்லை.... நம்ம குமரேசன் வந்த பஸ் ஆக்ஸிடெண்டாயிருச்சாம்... ஒண்ணும் பிரச்சினை இல்லை... வர லேட்டாகும்ன்னு சொன்னான்..."

"அடி ஆத்தி... இந்தக் கெரகம் எங்குடும்பத்தை சுத்திச் சுத்தி அடிக்கிதே... எம்புள்ளைகளுக்கு என்னாச்சுப்பா... "

"அய்யோ அயித்தை... ஒண்ணுமில்ல... இதுக்குத்தான் சொல்ல வேண்டாம்ன்னு நெனச்சேன்... நல்லாயிருக்கான்... எதுக்கு இப்ப அழுவுறீக...?"

"ஆத்தா மாரி எதுக்கு இப்படி எங்குடும்பத்தைப் போட்டு ஆட்டுறே...? ஐய்யோ... எம்புள்ளைகளுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது. இந்த மனுசனை விட்ட எமன் அங்க பொயிட்டானோ... ஐய்யோ... குமரேசா..."

"அயித்தை... சத்த சும்மா இருக்கீகளா? ஒண்ணுமில்லைங்கிறேன்னுல்ல..."

"சின்னம்மா... தம்பிதான் பேசினான்... ஒண்ணுமில்ல... லேட்டா வருவானாம்... அக்கோவ்... நீயும் கண்ணைக் கசக்காம... அம்மாவை கூட்டிக்கிட்டு போயி உக்கார வையி... எதாவது ஒண்ணுன்னா நாங்க இங்கயா நின்னுக்கிட்டு இருப்போம்... போக்கா... போம்மா..." கண்ணதாசன் விரட்டினான்.

தியம் ஒரு மணிக்கு மேல் கந்தசாமியை வெளியில் கொண்டு வந்து படுக்க வைத்தார்கள். எல்லாரும் கூடி நின்று பார்க்க, லேசாக சிரித்தவர் வரிசையாக ஒவ்வொரு முகமாகப் பார்த்தார் இறுக்கமான முகத்துடன் மாப்பிள்ளை அழகப்பன்..., அழுது வீங்கிய விழுகளுடன் சுந்தரி..., கண்ணீரோடு கண்மணி..., சோர்வாய் மணி..., உதடு துடிக்க கண்கள் சிவக்க உடைந்து அழும் நிலையில் கண்ணதாசன், அவனருகே சோகமாய் கண்ணகி... கடைசியாய் உயிரை இழந்தவள் போல் காளியம்மாள்... என எல்லாரையும் பார்த்தவரின் கண்கள் குமரேசனைத் தேட அவன் எங்கே என கேட்பது போல் மனைவியைப் பார்க்க, அவரின் பார்வை புரிந்தவள் என்ன சொல்வது என தவித்தாள்.

"குமரேசனுக்கு பஸ் கிடைக்கலை மாமா... வந்துக்கிட்டு இருக்கான்... இப்ப வந்துருவான்...."  காளியம்மாள் எதாவது சொல்லி விடுவாளோ எனப் பயந்து அழகப்பன் வேகமாகச் சொன்னார்.

"ஆமாங்க... இப்ப வந்துருவான்..." என்றாள் காளியம்மா.

"ம்... மகா... மருமக... நல்லாயிருக்காகளாப்பா... " மணியைப் பார்த்து திக்கித் திக்கி கேட்டார்.

"எல்லாரும் நல்லாயிருக்காக... நீங்க பேசாம படுத்து ரெஸ்ட் எடுங்க..." என்றான் மணி.

'கட்டுக்கட்டுன்னு திரியிற மனுசனை ஒரு ராத்திரி திருப்பிப் போட்டுருச்சே.... என்னவோ ஜீவன் போகப்போற மனுசன் மாதிரி கிடக்காரே... எரவாமரம் பிடிச்சி தண்ணி எறச்சா... அவரு பாடுற பாட்டு பக்கத்தூருக்கு கேக்கும்.. இப்ப பேசக்கூட ஜீவனில்லாம... இந்த வலி இனி இவருக்கு வரவே கூடாதுப்பா...' என மனசுக்குள் நினைத்த கண்ணதாசனுக்கு கண்ணீர் தானாக இறங்கியது.

"டேய்... கிறுக்குப்பலே... சின்னப்புள்ளயாட்டம் அழுதுக்கிட்டு... எனக்கு ஒண்ணுமில்லடா... போகணுமின்னா போயித்தானே ஆகணும்... பிடிச்சி நிப்பாட்ட முடியுமா? எதுக்கு இப்ப அழுகுறே...?" மெதுவாகப் பேசி மகனை செல்லமாய் அதட்டினார்.

"போங்க சித்தப்பா... நீங்கதான் எனக்கு எல்லாமே... நேத்துல இருந்து எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா?" விசும்பினான்.

"கண்ண மச்சான்... என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்... இம்புட்டு நேரம் கலங்கமா நின்னுட்டு மாமாவை பார்த்ததும்... போங்க வெளிய இருங்க... வாங்க எல்லாரும் அவரு தூங்கட்டும்... வெளிய போவோம்..."

"டேய் கண்ணா... எதுக்குடா அழுகுறே... அதான் அப்பா நல்லா பேசுறாருல்ல... அப்புறம் என்ன... விடு..." ஆறுதல் சொன்ன மணியின் கண்கள் கலங்கியதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்தான்.

"சார் அவரை ரெஸ்ட் எடுக்க விடுங்க... சுத்தி நின்னு பேசாதீங்க... டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்... இப்படி கூட்டமா நின்னா எங்களைச் சத்தம் போடுவாரு... போங்க சார்... வெளியில இருங்க..." நர்ஸ் விரட்டியபடி குளுக்கோஸ் பாட்டிலை மாற்றினாள்.

காளியம்மாள் மட்டும் அவரருகே இருக்க, மற்றவர்கள் வெளியில் வந்து அமர்ந்தனர்.

ண்ணதாசன் வீட்டுக்குப் போய் வருவதாகச் சொல்ல மற்றவர்கள் அங்குதான் இருந்தனர். மணியும் அழகப்பனும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னத்தான் குமரேசனை இன்னும் காணோம்...? நா வேணுமின்னா போனடிச்சிப் பார்க்கவா?"

"வேண்டாம் மணி... கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் பேசினான்... வந்துருவான்... ஆளாளுக்குப் பேசினா இங்க என்னமோன்னு பயப்படுவான்... வரட்டும்..." சூழல் அறிந்து பேசினார் அழகப்பன்.

அவர் சொல்வது சரியெனப்பட்டது மணிக்கு, பேசாமல் டேபிளில் கிடந்த தினத்தந்தியை எடுத்து வாசிக்கலானான்.

"எப்ப வீடு கட்டப் போறே?" மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

"வீடா... அட போங்கத்தான்.... வாங்குற சம்பளம் வாய்க்கும் கைக்குமே பத்தலை... இதுல வீடு கட்டி... வாழும் போங்க..."

"இடந்தான் வாங்கியாச்சில்ல... லோனைக்கீனைப் போட்டுக் கட்டு..."

"இடம் வாங்கவே அங்க இங்க பிச்சிப் பிடிங்கி வாங்கியிருக்கேன்.... வாங்கின கடனெல்லாம் கட்டணும்... அப்புறம் பாக்கலாம்..."

"கடன் இருக்கத்தான் செய்யும்... எதாவது பண்ணிப்பாரு... என்னால முடிஞ்சதை செய்யிறேன்... அம்மா சிமெண்ட் வேணுமின்னா ஏற்பாடு பண்ணித்தாறேன்... நம்ம ஊர்ல காசிப் பெரியப்பா வீட்ல செங்கக் காலவாய் போடுறாங்க...அங்க சொல்லிட்டு செங்க எடுத்துக்கலாம்... அப்புறம் கொடுத்துக்கலாம்..."

'இல்ல மச்சான்... கொஞ்ச நாளாகட்டும்... இடம் விலைக்கு வருதுன்னு ஆசைப்பட்டா... அங்கிட்டு இங்கிட்டு வாங்கி வாங்கிட்டேன்... பின்னால பாப்போம்... இப்ப மக படிப்பு அது இதுன்னு செலவு இருக்குல்ல..."

"ஆமா... அதுவும் சரிதான்..." என்று சொன்ன போது மருத்துவமனை வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து குமரேசன் இறங்க, அவனைத் தொடர்ந்து இறங்கிய அபிக்கு கையிலும் தலையிலும் பெரிய கட்டுப் போட்டிருந்தது. பின்னே இறங்கிய குழந்தைகளுக்கும் நெற்றியில் பஞ்சு வைத்து ஒட்டியிருந்தார்கள்.

"டேய்...சின்னக் காயம்ன்னு சொன்னே...?" என மணி வேகமாக எழுந்து வந்து பேக்கை வாங்க, "என்ன மாப்ள எல்லாருக்கும் அடிபட்டிருக்கு... அபிக்கு இத்தனை கட்டுப் போட்டிருக்காங்க... சின்ன காயந்தான்னு சொன்னே...' என கேட்டபடியே வந்தார் அழகப்பன்.

"இல்லண்ணே...சின்னக் காயந்தான்... கட்டுத்தான் பெரிசு... " சொல்லி வலியை மறைத்துச் சிரித்த அபி "மாமா எப்படியிருக்காங்க?" என்று கேட்டபடி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். அப்போது அங்கு வந்து நின்ற காரில் இருந்து கண்மணியின் கணவன் ரமேஷ் இறங்கினான்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே!

  நல்லவேளை! யாருக்கும் அதிக தொந்தரவு இல்லாமல் சுபமாக முடித்திருக்கிறீர்கள்.
  படிக்கும் போதே படபடப்பாக இருந்தது. சுவாரஸ்யமான அடுத்தப் பகுதிக்கு காத்திருக்கிறேன். தொடருங்கள். நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி.
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. இயல்பாக நடையில் சுவாரஸ்யமாக செல்கிறது கதை! அம்மா சிமெண்ட்டு கூட இயல்பாய் இதற்குள் புகுத்தி விட்டீர்களே ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. சுவாரஸ்யமாக போகிறது நண்பரே,,,,
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. உரையாடல்கள் வழக்கம்போல் எங்களை உடன் அழைத்துச்செல்கின்றன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. வழக்கம் போல் நன்றாகச் செல்கின்றது தொடர்! தொடர்கின்றோம். அடுத்தப் பகுதிக்கு ஆர்வத்துடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   வணக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...