மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 ஜூலை, 2014

மனசு பேசுகிறது : நடிகர்களும் பட்டங்களும்...

ன்றைக்குப் படிச்சிப் பட்டம் வாங்கலைன்னாலும் பரவாயில்லை நடிச்சிப் பட்டம் வாங்கிறது ரொம்பச் சுலபம். முதல்படம் ஓடிவிட்டால் போதும் அடுத்த படத்தில் பேருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொள்ளத் துடிக்கும் நாயகர்களே அதிகம். சமீபத்தில் ஒரு வார இதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் இன்னார்தான் என்று சர்வே பண்ணிச் சொன்னதால் அதன் பின்னான நாட்கள் அந்த நாயகனைத் தூக்கியும் தாக்கியும் செய்திகளைத் தாங்கி வந்தன.


சினிமாவில் பட்டம் என்பது ஒரு நாயகனுக்கு கொடுக்கப்பட்டால் அது அவருடனே ஒட்டிக் கொள்ளுமே தவிர அடுத்த ஆளுக்கு தாரை வார்க்கப்படுவது இல்லை. ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மட்டும் விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவருக்கும் ஒரு கண். அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக வேண்டும் என்ற போதை எல்லோருக்கும் தலைக்கு ஏறிவிடுகிறது. நாம் அதற்குத் தகுதியான ஆளா என்று எவரும் சிந்திப்பதில்லை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி இருவருடைய பட்டத்துக்கும் இதுவரை யாரும் போட்டியிடவில்லை. ரஜினி, கமல் இருவருமே தங்களது திறமையால்தான் இந்த உயரத்தை அடைந்தார்கள். அன்று மக்கள் திலகமாக ரஜினியும் நடிகர் திலகமாக கமலும் மாறியிருக்கலாம். ஆனால் அதை அவர்கள் விரும்பவில்லை. மக்கள் மனதில் மக்கள் திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டுமே அதேபோல் நடிகர் திலகம் என்றால் சிம்மக்குரலோன் மட்டுமே என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு பேருக்கு முன்னே எதாவது பட்டம் வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராதவர்கள் கூட சூப்பர் ஸ்டார் நாற்காலி தனக்குத்தான் என்று சப்புக்கொட்டிக் கொண்டு நிற்க ஆரம்பித்ததுதான் கேவலத்தின் உச்சம். நண்டு சிண்டுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாருடன் நாளைய முதல்வர் ஆசையும் சேர்ந்து கொண்டதையும் சேர்த்துச் சொல்லலாம்.


சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த  இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.  அப்படியே சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடிச்சு நடிக்கத் தெரியாமலே முன்னுக்கு வந்துட்டார்ன்னு நாம சுலபமாச் சொல்லிடலாம். ஆனா அந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடிச்ச ரஜினிக்குப் பின்னால எத்தனை இழப்புக்கள் எத்தனை வலிகள் இருந்திருக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டோம். நான் பெரும்பாலும் ரஜினி படங்களைப் தியேட்டரில் போய் பார்ப்பதில்லை ஒரு சில படங்களைத் தவிர... அவருக்கு நடிப்பு சரியா வராதுன்னு சொல்லலாம்... ஆனா ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், படிக்காதவன் இப்படிப் பலபடங்களில் அவரது நடிப்பு நம்மைப் பிரமிக்க வைக்கும் என்பது உண்மைதானே.

இன்று இளைய தளபதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரரான விஜய் அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்தச் சினிமாவில்... சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இப்படி அலைகிறாரே என்ற கேள்வி எழாமல் இல்லை. அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக சொன்னதும் சந்தோஷப்பட்டு நன்றி சொன்னவர் சங்கோஜப்பட்டு சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான் அவருக்கு முன்னும் பின்னும் வேறு சூப்பர் ஸ்டார்கள் இல்லை என்று சொல்லி மறுத்திருந்தால் எல்லோர் மனதிலும் உச்ச நட்சத்திரமாக மாறியிருப்பார். செய்தாரா இல்லையே... நாந்தான்... நாந்தான்தான் என மார்தட்டி நன்றி சொன்னார்.

இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சினையில் ஊரெங்கும் ரஜினி ரசிகர்கள் நோட்டீஸ் ஒட்டி பிரச்சினை... அஜீத் ரசிகர்கள் பிரச்சினை.. என அடுத்தடுத்த நாட்களில் அரங்கேற சூப்பர் ஸ்டார் என்றைக்கும் என் தலைவர்தான்... உங்க குடும்பத்தைப் பாருங்க... என்று ரசிகர்களுக்கு அறிக்கைவிட்டு தல ஒதுங்கிக்கொண்டார். நடிகர்களுக்கு பட்டங்கள் மக்கள் மனதில் அவர்களுக்குக் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து கிடைக்க வேண்டுமே தவிர கேட்டு வாங்கக் கூடாது... பரத் சின்னத்தளபதி என்று போடச் சொன்னதைப் போல...


பட்டங்கள் இல்லாமலும் ஜொலித்த நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து நடிப்பில் உச்சத்தைத் தொட வேண்டுமே ஒழிய உச்ச நட்சத்திர நாற்காலிக்கு அடித்துக் கொள்ளக் கூடாது என்பதை நடிகர்கள் உணர வேண்டும். அவரவருக்கு கிடைக்கும் பட்டம் அவருக்கு மட்டுமே அதில் போட்டி போட நமக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து தங்கள் நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டினால் சூப்பர் ஸ்டாருக்கு மேலான பட்டத்தையும் பெறலாம். 

நடிகர் விஜய்க்கு முதல்வர் நாற்காலி ஆசையும் முளைவிட்டதால்தான் இன்று இப்படியான் செயல்களை எல்லாம் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார். இதை அவராக செய்யவில்லை என்பதும் தந்தையின் சொல் மந்திரமே இன்று அவரை சந்திக்கு இழுக்கிறது என்பதையும் சொல்லியா தெரியவேண்டும். இளைய தளபதி மீண்டும் துள்ளாத மணமும் துள்ளும் போன்ற துள்ளளான படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் முன்னணியில் நிற்க முயல வேண்டும், செய்வாரா? இல்லை அடுத்த படத்தின் போஸ்டரில் இன்றைய சூப்பர் ஸ்டார் என்று போடச் சொல்லி பிரச்சினைக்கு எண்ணெய் வார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

நடிகர்களைப் பற்றி நல்ல அலசல்... ஆனால் அவரவர் மனசாட்சிக்குத் தெரியுமே!..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆசை பேராசை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

ஸ்ரீராம். சொன்னது…

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்றிருந்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.... இதில் சந்தேகமில்லை.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவர்கள் எல்லோரும் தேற மாட்டார்கள்... அது மட்டும் உறுதி....!

ADHI VENKAT சொன்னது…

நம்மைத் தேடி பட்டம் வரணுமேத் தவிர இப்படி கேட்டா பெறுவது....:(

சூப்பர் ஸ்டார் ... அது தலைவர் மட்டும் தான்.

கவிதை வானம் சொன்னது…

படித்து வாங்கும் பட்டத்துக்கு வேலை இல்லை ...வீதியில் அலைகிறது
நடித்து வாங்கும் பட்டத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது என்ன உலகமோ?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

துட்டு கொடுத்து வாங்கும் பட்டம் பறக்கத்தான் உதவும்! மக்களாய் கொடுக்கும் பட்டமே நிரந்தரம்! தேவையில்லாத பப்ளிசிட்டி செய்கிறார்கள்!

J.Jeyaseelan சொன்னது…

ஒரே சூரியன் ! ஒரே சூப்பர் ஸ்டார் ! தலைவர் மட்டுமே!

KILLERGEE Devakottai சொன்னது…


நண்பர்களே... இந்த புரட்சித்தலைவர், உலகநாயகன், சூப்பர் ஸ்டார், கேப்டன், தல, ஆக்சன்கிங், இளையதளபதி, பழையதளபதி, லிட்டில்ஸ்டார், சுப்ரீம்ஸ்டார், புரட்சித்தமிழன், இந்தப்பட்டங்களெல்லாம் நமக்காகவும், நாட்டுக்காகவும், எந்தநிமிடமும் உயிரைக்கொடுக்கத்தயாராக இருக்கிறார்களே நாட்டின் எல்லையிலே.... பட்டாளக்காரர்கள் அவர்களுக்கு கொடுப்பதுதான் மரியாதை உண்மையில் அவர்கள்தான் நிஜஹீரோ எல்லோருமே நிழலைக்கண்டு மகிழ்கிறீர்கள், நண்பர் சே.குமார் அவர்களுக்கு நான் முதல் கருத்துரை கொடுக்கவேண்டியவன் காத்திருந்தேன்.... இதற்கென்று ஒருகூட்டமே இருக்கிறது நாமெல்லாம் முடிந்த அளவு சமூக அவலங்களை விரட்ட முயற்சிப்போமே, நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை, எதுவும் தெரியாதவனும் இல்லை. நான் எழுதியது தவறெனில் படிக்கும் அனைவருமே மன்னிக்க....

அன்புடன்.
Killergee
அபுதாபி

செங்கோவி சொன்னது…

விஜய் மறுத்திருந்தால், அவர் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும். ஆனால்...!!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//மக்கள் மனதில் மக்கள் திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டுமே அதேபோல் நடிகர் திலகம் என்றால் சிம்மக்குரலோன் மட்டுமே// உண்மை..

Unknown சொன்னது…

சூப்பர் ஸ்டார் ... அது தலைவர் மட்டும் தான்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர்தான் - ரஜனி தான் - இதற்கெல்லாம் பதிவே தேவை இல்லை - பரவாய் இல்லை - சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள் - பாராட்டுகள்

த,ம : 6

நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

Unknown சொன்னது…

பட்டம்...............ஹ!ஹ!!ஹா!!!