மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 ஜூலை, 2014

மனசு பேசுகிறது : எப்படியெல்லாம் ஏமாத்தப் பாக்குறாங்க...

முன்பெல்லாம் திருவிழா, திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே கருவை மர விறகு வெட்டி காய வைத்து, அதை உடைத்து அடுக்கி வைத்து விடுவார்கள். விஷேசத்துக்கு சில தினங்கள் முன்பு செம்மண் வெட்டிக் கொண்டு வந்து கல்லை வைத்து அடுப்புப் போட்டு அதில் தினமும் சாணியால் மெழுகி விஷேசத்தன்று சமைப்பார்கள். இப்போது விறகு, மண் அடுப்பெல்லாம் போயாச்சு... இப்போ கடையில் இருந்து வாடகைக்கு கேஸ் அடுப்பு தூக்கி வந்து சமைக்கிறார்கள். அது போக இப்போதெல்லாம் இரவு விருந்து என்பது பலகாரமாகிவிட்டது. புரோட்டா கடையில் வாங்கி வந்து விருந்தை நடத்துகிறார்கள். இந்த முறை நாங்களும் கேஸ் அடுப்பில் சமைப்பதற்காக அடுப்பு எடுத்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. 

நானும் தம்பியும் போய் கேஸ் அடுப்பை குட்டியானை என்று சொல்கிற சின்ன வேனில் ஏற்றிக் கொண்டு வர வீட்டில் இருந்த சிலிண்டரை வைத்து சமைக்க ஆரம்பித்தார் சமையல்கார ஐயா. திடீரென ஒரு பக்க அடுப்பின் பர்னருக்குக் கீழே கேஸ் வெளிவர ஆரம்பித்துவிட்டது. நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம்... ம்ஹூம்... நிறுத்த முடியவில்லை... சமையல்காரர் ஒரு அடுப்பை வைத்து எப்படி சமைப்பது என்று புலம்ப, அந்த நேரம் பார்த்து கத்தி சாணை பிடிப்பவர் வந்தார். அவரும் பார்த்துவிட்டு எம்-சீல் வச்சா நிக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். நானும் தம்பியும் கடைக்குப் போக வேண்டியிருந்ததால் அந்த வேலையுடன் எம்-சீலும் வாங்கி வந்தோம். அதை வைத்து அடைத்தாலும் ஓட்டை பெருசு என்பதால் நிற்கவில்லை. உடனே கடைக்காரருக்குப் போன் செய்தால் ஆளெல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்ல, அவருடன் கொஞ்சம் வேகமாகப் பேச சரி மற்றொரு அடுப்பு அனுப்புறேன் வண்டி அனுப்புங்க என்றார். மீண்டும் வண்டி அனுப்பி மற்றொரு அடுப்பை எடுத்து வந்தோம்.

மறுநாள் அடுப்பைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கும் போது இரண்டு அடுப்புக்கு பணம் என்றார். என்னங்க ஒரு அடுப்பு வேலை செய்யலைன்னுதானே மற்றொரு அடுப்பு வாங்கினோம்... இப்ப ரெண்டடுப்புக்குப் பணம் கேக்குறீங்க... ரெண்டு தடவை வேன் வாடகை கொடுத்திருக்கோம் எங்களுக்குத்தான் நஷ்டம் என்றதும்... ஆமா என்ன பிரச்சினை அடுப்புல என்று கேட்டார். எல்லாம் விவரமாச் சொன்னதும் எம்-சீல் வச்சீங்களா... இனி அந்தப் பர்னர் வேலைக்கு ஆகாதுப்பு... உடைச்சித்தான் எடுக்கணும்... ஆயிரமோ... ரெண்டாயிரமோ செலவாகும் என்றதும்... அதுக்கு இப்ப என்ன...ஓட்டை அடுப்பைக் கொடுத்தது நீங்க... இப்ப இம்புட்டு பேசுற நீங்க சரியான அடுப்பையில்ல கொடுத்திருக்கணும்... எம்-சீலெல்லாம் எடுக்க முடியும்... சும்மா காசுக்காக சொல்லாதீங்க என்று குரலை உயர்த்தியதும் ஓனருக்கு போன் பண்ணுறேன்... அவுக சொல்லட்டும்... என்றபடி ஓனருக்கு போன் பண்ணினார். அவர் போனில் என்னிடம் அப்படி ஆகும்... இப்படி ஆகும்... நேர்ல வாறேன் என்றார். இவ்வளவுக்கு எனது நண்பனின் கடையாக இருந்து மற்றொருவரிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்கள். அதை தற்போது நடத்துபவரும் எனக்கு ரொம்பத் தெரிந்தவர்தான். சரி வரட்டும் என்று காத்திருந்தேன்.

அப்பு ஓனர் வந்து என்ன சொல்றாரோ அதைச் செய்யிங்க... அப்படி இப்படி என அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க அவர் வரட்டுங்க பேசிக்கலாம்... என்று சொல்லிவிட்டேன்.. ஓனரின் மருமகன் வந்தார்.... என்னைப் பார்த்ததும் நீங்களா சார்? நான் யாரோன்னு நெனச்சி வந்தேன் (நல்லாப் படிங்க இந்த வார்த்தையை.... யாரோன்னு... அப்ப மாட்டுனான்டா ஒரு மன்னாருன்னு வந்திருக்கான்) ரொம்பத் தெரிஞ்சவங்களாப் பொயிட்டீங்க... உங்ககிட்ட என்ன சொல்றது... ம்... புதுசாத்தான் மாத்தணும் சார்... ஒண்ணு செய்யலாம்... சர்வீஸ் பண்ணுறவங்க வரட்டும்... அதை உடைச்சி எடுக்காம சர்வீஸ் பண்ணிட்டா ஓகே... இல்லைன்னா நீங்க பாதி... நாங்க பாதிதான் போடணும் என்று இறங்கிப் பேசுவது போல் பேசினார்.

நானும் சரி உன் வழியில் வர்றேன்னு நினைச்சிக்கிட்டு சர்வீஸ் ஆள் வரும்போது போன் பண்ணுங்க... அப்ப நானும் வாறேன் பாக்கலாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பினேன். இதே வேற யாராவது மாட்டியிருந்தா ரெண்டாயிரம் ரூபாய் அபேஸ்தான். சரி விஷயத்துக்கு வருவோம்... ஒரு பத்து நாள் கழித்து அந்தக் கடையில் இருந்து அவர் கூப்பிட்டார். 'அப்பு நான்  பாத்திரக்கடையில் இருந்து பேசுறேன்...' என்றார். 'சொல்லுங்க என்ன வேணும்?' என்றேன். 'அந்த அடுப்பு சர்வீஸ் பண்ணுன வகையில் 350 ரூபாய் செலவுய்யா..' என்றார். 'அதுக்கு என்ன பண்ணனும்..?' என்றேன். 'இல்ல சொல்லுறேன்...' என்றார். 'சரி சொல்லீட்டிங்கதானே... பாக்கலாம்' என்று போனை கட் பண்ணினேன். அதன் பின் அவர் தொடர்பு கொள்ளவேயில்லை... வந்தவரை லாபம் என 350க்கு அடிப் போட்டிருக்கிறார். ஏமாத்த நினைப்பவருக்கு கொடுக்க என்ன காசு இங்க கொட்டியா கிடக்கு. அத்துடன் இனி தெரிஞ்ச கடை என அந்தக் கடையில் எந்தப் பொருளும் எடுக்க வேண்டாம் என அப்பாவிடமும் சொல்லிவிட்டு வந்தேன்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

இதையும் ஒரு பிழைப்பாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.. உஷாராக இல்லை என்றால் - அவ்வளவுதான்!..

ப.கந்தசாமி சொன்னது…

அக்கிரமம்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஏமர்ற்றுகிற கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது
தம2

ஸ்ரீராம். சொன்னது…

தெரியாதவர்களை விட தெரிந்தவர்கள்தான் ரொம்பவே ஏமாற்றுகிறார்கள்! உண்மையில் அவர்கள்தான் நஷ்ட ஈடு தர வேண்டும். இது மாதிரி அடுப்புகள் தந்து ஏதாவது விபரீதம் நிகழ்ந்திருந்தால்...? நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.


திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தெரிஞ்சவர்கள் என்றால் ரொம்பவே ஏமாற்றுவார்கள்....!

Unknown சொன்னது…

உங்களிடமுமா?///ஹூம்...........பிழைக்கத் தெரிந்தவர்கள்!

J.Jeyaseelan சொன்னது…

இது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ராஜ்யம் என்பது சரிதான் ஐயா !

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஓட்டை அடுப்பைக் கொடுத்துவிட்டு ஏமாற்ற பார்த்திருக்கிறார்கள்! சாமர்த்தியம் இருந்ததால் பணம் மிச்சம் ஆகியிருக்கிறது! எப்படியெல்லாம் ஏமாற்றி பிழைக்கின்றனர் மக்கள்?!

கோமதி அரசு சொன்னது…

ஸ்ரீராம் சொன்னது போல் வேறு ஏதாவது விபரீதம் நடந்து இருந்தால் என்ன செய்வது?
வாடகைக்கு அடுப்பு கொடுப்பவர்கள் செக் செய்து நல்லா இருக்கா என்று பார்த்து தானே தரனும்.