மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 ஜூலை, 2014

கிராமத்து நினைவுகள் : ஐஸ் வண்டி


ப்பல்லாம் ஐஸ் வண்டி ஊருக்குள் வருவது என்பது எப்போதாவது பெய்யும் கோடைமழை போலாகிவிட்டது. அப்படியே வந்தாலும் அன்று கிடைத்தது போல் சுவையான ஐஸ் இப்போது கிடைப்பதில்லை. ஐஸ் கட்டியில் கலரும் இனிப்பும் மட்டுமே சேர்க்கப்பட்ட கலவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பள்ளியில் படிக்கும் காலத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பள்ளியின் இரண்டு வாயில் பக்கமும் ஐஸ் பெட்டி தாங்கிய சைக்கிள்கள் நிற்கும். பால் ஐஸ், சவ்வரிசி ஐஸ், சேமியா ஐஸ், திராட்சை ஐஸ் என பல ஐஸ்கள் விலை வித்தியாசத்தில் கிடைக்கும்.

இது தினமும் நடக்கும் கதை என்றாலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை நாட்களில் ஊருக்குள் ஐஸ் வண்டி வந்து செல்லும். கண்மாய்க் கரையில் ஏறி மாமரத்தின் அருகில் வரும்போதே சைக்கிளில் கட்டியிருக்கும் ஹாரனை 'பாம்... பாம்..' என்று அழுத்தி அடிக்க வீட்டில் இருக்கும் நமக்குள் 'அய்யா... ஐஸ் வந்தாச்சு' என்று நினைப்பு தோன்றும்போதே நாவில் எச்சில் வர ஆரம்பித்துவிடும். கோவிலுக்கு அருகே வேப்பமரத்தடியில் வந்து நின்று கொண்டு 'ஐஸ்...ஐஸ்... பால் ஐஸ், சவ்வரிசி, சேமியா ஐஸ்' என்று குரல் கொடுத்தவாறு ஹாரனை 'பாம்... பாம்...' என்று அடிப்பார்கள். உடனே வீட்டில் எத்தனை பேருக்கு வேண்டும் என தலையை எண்ணிக் கொண்டு காசும் ஐஸை வாங்க ஒரு கிண்ணம் அல்லது தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு ஐஸ் வண்டி நோக்கி பறப்போம்.

எங்க ஊருக்கு தொடர்ந்து வரும் ஐஸ் வண்டிக்காரர் செந்தி என்கிற செந்தி மாமா. எல்லோரும் அவரை மாமா என்றுதான் அழைப்போம். ஒரு காலை சற்று தாங்கி நடப்பார். அவர் வரும் நேரத்தில் வேறு வண்டிக்காரரும் வந்தால் செந்தி மாமாவிடம் மட்டுமே வாங்குவோம். காசைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார். கொடுக்கும் காசுக்கு ஐஸ் கொடுப்பார். எல்லோரும் ஐஸ் வாங்கும் போது வீட்டில் அம்மா வெளியே போய்விட ஐஸ் வண்டியையே பார்த்துக் கொண்டே நிற்பவர்களுக்கு காசில்லாமலே ஐஸ் கொடுத்து விட்டுச் செல்வார். எப்பவும் உடைந்த ஐஸ்களை எல்லாம் எல்லாரிடமும் கொடுத்து விட்டுச் செல்வார். அதனாலேயே செந்தி மாமா என்றால் எல்லாருக்கும் உயிர். அவரும் சிங்கப்பூர் ஆசையில் ஐஸ் வண்டியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு பறந்தார். இப்போ உலகை விட்டே சென்று விட்டதாக கேள்விப்பட்டேன்.

எப்பவும் எங்கள் ஊர் திருவிழா அன்று கரகம் இறக்கப் போகும் போது நாலைந்து ஐஸ் வண்டிகள் வரும். இந்த முறை ஒரே ஒரு வண்டிதான் வந்தது... சின்னப் பிள்ளைங்க சிலர் வாங்கிச் சாப்பிட்டார்கள். அவரும் கண்மாயுடன் திரும்பி விட்டார். ஐஸ் வண்டிகள் எல்லாம் மறைந்து விட்டன... இப்போது அந்த இடத்தை அருண் ஐஸ்கிரீம், ஜமாய் ஐஸ்கீரிம் என பெரிய கம்பெனிகள் பிடித்து விட்டன. பிஸ்தா, பாதாம் எனப் போட்டு பணத்தைப் பிடுங்கிவிடுகிறார்கள். என்னதான் இருந்தாலும் 50 காசு, ஒரு ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட குச்சி ஐஸ்க்கு முன்னால் இவை சாதாதான்.


இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்... இந்த முறை காரைக்குடியில் பெரியார் சிலையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் புதிதாக ஒரு ஐஸ்கிரீம் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். என்னமோ பெயர்... நினைவில் வரவில்லை... ஸ்ருதி அங்குதான் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று இரண்டு மூன்று தடவை கேட்டும் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரு முறை சரி வாங்கலாம் என்று போனால் என்ன பிளேவர் எனக்கேட்டு ஒரு டப்பாவில் போட்டு அதன் மீது மாங்கோ சாஸ், அது இது என்று கேட்டுக் கேட்டு ஊற்றி எல்லாத்தையும் மொத்தமாக வைத்து எடை போட்டு 5 சிறிய டப்பா ஐஸ்கீரிம் 875 ரூபாய் என்றார்கள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது... சரி பிள்ளைகளுக்காக வாங்கியாச்சு என்று சமாதானமாகி பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன். போகும் வழியில் சாப்பிட்டால் பாதிதான் குழந்தைகளுக்குப் போனது... வாங்கிட்டமே என மற்றவர்கள் சாப்பிட்டோம். 

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

கிராமத்து நினைவுகள்,பசுமை தான் எப்போதுமே!நம் பள்ளிக் காலத்திலும்,எங்கள் பள்ளி/கல்லூரிக்கு இரண்டு பேர் ஐஸ் வண்டியுடன் வருவார்கள்.எல்லா ஊர்களிலும்(நாடுகளிலும்)இதே கதை தான்.இப்போதெல்லாம் பெரும்பாலும்,ஐஸ் வண்டிகளை ஊருக்குள் பார்ப்பதே அரிது.கிராமங்கள் நகரங்களாகி விட்டதால்,பிரதான தெருக் கடைகளில் ஐஸ் பெட்டி வைத்து,ஐஸ்கிரீம் வியாபாரம் செய்கிறார்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…


உண்மைதான் நண்பரே,,, அதுஒரு நிலாக்காலம் ஞாபகம் வருதே,,, ஞாபகம் வருதே,,,

மனோ சாமிநாதன் சொன்னது…

ஐஸ் வண்டி, குச்சி ஐஸ் எல்லாம் மறக்கக்கூடியதா என்ன? அருமையாக எழுதி இள‌ம் பருவத்து நினைவுகளில் மிதக்க வைத்து விட்டீர்கள்!!

Angel சொன்னது…

மிக அருமையான சிறுவயது நினைவுகள் ...எனக்கும் நினைவிருக்கு ..ரோஸ் எசன்ஸ் போட்ட குச்சி ஐஸ் ,அப்புறம் கோலி குண்டு ஐஸ் கோலா ஐஸ் ..சேமியா ஐஸ் ..அதெல்லாம் என்ன சுவை!! அதுவும் அந்த கிரேப் ஐசில் சில நேரம் முழு திராட்சை வரும் !!
அந்த ஐஸ் வண்டிக்காரர் பெட்டியை திறக்கும்போது அருகில் நிற்போம் குளுமையா இருக்கும் !!

Yarlpavanan சொன்னது…

சுவையான பதிவு
சின்ன அகவை நினைவு
மீள வருகிறதே!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இளமைக்கால நினைவுகளில் நீந்தச் செய்துவிட்டீர்கள் நண்பரே
தம 3

ஸ்ரீராம். சொன்னது…


ஜில் ஜில் நினைவுகள் குமார். பதினஞ்சு பைசா சேமியா ஐஸ் ஆகட்டும்.. அப்போதைய கப் ஐஸ் ஆகட்டும்... ஆஹா...

அட, அந்த பத்துப் பைசா பால் ஐஸின் சுவையை இப்போ எங்கயாவது பெற முடியுமா சொல்லுங்க!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதுவும் அந்த சேமியா ஐஸ் சுவையே தனி தான்... ம்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஜிலு ஜிலு என பசுமையான
ஐஸ் நினைவுகள்..!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

கிராமத்து நினைவுகள் நெஞ்சை அள்ளிச்சென்றது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி சொன்னது…

சகோதரரே!..

சில்லிட்ட நினைவலைகள்!..
சிறுபராயத்தில் நிகழ்ந்தவை எனக்கும் நினைவில் உண்டு..

அனுபவித்து - அனுபவத்தைப் பதிவிட்டீர்கள்! அருமை!
வாழ்த்துக்கள்!

துரை செல்வராஜூ சொன்னது…

அன்றைக்கு சாதா ஐஸ் என்றாலும் பால் ஐஸ் என்றாலும் நேர்மையுடனும் தொழில் பக்தியுடனும் செய்து கனிவுடன் விற்று மகிழ்வித்தார்கள்..

இன்றைக்கு வெறும் ஆடம்பரமே!..

அந்த நாட்களைப் போல இனியொரு காலம் வரவே வராது!..

J.Jeyaseelan சொன்னது…

மறக்க முடியாத பசுமை நினைவுகள் . இன்னும் எங்க கிராமத்தில் ஐஸ் வண்டிகள் வருகின்றன . ஆனால் முன்னர் இருந்த டேச்ஸ்ட் மிஸ்ஸிங்.

கவிதை வானம் சொன்னது…

இந்த ஐஸ்-களில் கலர் சாயம் போட்டு இருப்பாயிங்க....வீட்டுக்கு தெரியாம தின்னாலும் காட்டிக் கொடுத்துவிடும் வாயில்...உதட்டில்...கையில் படியும் சாயம் ...ஹா..ஹா..
இப்ப ஐஸ் நான் சாப்பிடக்கூடாதாம் அதனால் ஐஸ்கிரீம் கடையை கண்ணில் பார்ப்பதில்லை

vanathy சொன்னது…

Super post.

ராஜி சொன்னது…

எனக்கு கிரேப் ஐஸ்தான் பிடிக்கும். அது இல்லன்னா, மேங்கோ ஐஸ் இல்ல பால் ஐஸ் பிடிக்கும்.

கோமதி அரசு சொன்னது…

அருமையான நினைவலைகள்.
பள்ளிப்பருவம் நினைவுக்கு வந்துவிட்டது.ஐஸ்பெட்டியின் மூடியை அடித்து சத்தம் எழுப்பி ஐஸ் வகைகளை பேர்சொல்லி கூவி அழைக்கும் ஒலிகூட காதில் விழுகிறது.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

குச்சி ஐசின் சுவை பிராண்டட் தயாரிப்புக்களில் இருப்பதில்லை! அந்த காலம் வராது! அருமையான பகிர்வு! நன்றி!

இராய செல்லப்பா சொன்னது…

மங்களூர் போனால் 'ஐடியல் ஐஸ்க்ரீம்' கடைக்குச் சென்று வாருங்கள். இந்தியாவிலேயே அதுபோன்ற ஐஸ்க்ரீம் வேறெங்கும் கிடைக்காது. அதற்கென்றே மும்பாயிலிருந்து வந்து போகிறவர்கள் உண்டு. விலையும் சாதாரணமான விலைதான்.

மாதேவி சொன்னது…

இவை எல்லாம் ஒருகாலம்.... நினைத்தாலே மகிழ்ச்சி.