மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பார்த்த சினிமாக்கள்

சென்ற வாரத்தில் அறை மாற்றியதால் இணைய இணைப்பு கிடைக்க ஒரு வாரம் ஆனது. அந்த நேரத்தில் சில படங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி கொஞ்சமாய் சில

கோலிசோடா:

கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதைகளாய்... படுக்க இடமின்றி... மார்க்கெட்டில் சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்து வயிற்றைக் கழுவும் எத்தனையோ பேரில் இயக்குநர் நான்கு சிறுவர்களின் கதையை கோலிசோடாவாக ஆக்கியிருக்கிறார். பசங்க படத்தில் சிறுவர்களாக வந்தவர்கள் இதில் பதின்ம வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் அநாதையாக இருக்கும் ஏக்கமும் பள்ளிக்கூட பெண்களை சைட் அடிக்கும் அந்த வயதிற்கே உரிய செயல்களும் இருக்கிறதை ஆரம்பக் காட்சிகளில் காட்டுகிறார். அவர்களும் எதாவது ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து அதற்காக மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் பெரிய மனிதரின் கடையைப் பிடித்து ஆச்சி மெஸ் வைத்து வரவு செலவுகளைப் பார்த்து அவர்களை தனது பையன்களாகப் பார்க்கிறார் ஆச்சி. 

ஆச்சியின் மகளுடன் ஒருவனுக்கு காதல்... ஆரம்பத்தில் காமெடிப் பாத்திரம் போல் காட்டப்பட்டு படத்தின் போக்கில் முக்கிய கதாபாத்திரமாக மாறும் எடிஎம் என்ற அந்த நாயகி லட்சணங்கள் அற்ற பெண்... அவள் மனம் பார்த்து விரும்பும் பையன் என போகும் கதையில் வில்லனின் வேலைகள் ஆரம்பமாக சூடு பிடிக்கும் படம் அடிதடி... ஊர் விட்டு ஊர் கொண்டு சென்று பிரித்தல்... மீண்டு சேர்ந்து போராட்டம் எனப் போய் சுபத்தில் முடிகிறது.


சிறுவர்கள் காதல்... வில்லனின் ஆட்கள்  இடைவேளைக்குப் பின்னர் அடிக்கடி அவர்களைத் துவைத்து எடுக்கும் காட்சிகள் என சில தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் அண்ணாச்சியின் நகைச்சுவையும் கதையின் ஓட்டமும்.... ஆச்சியின் அருமையான நடிப்பும் படத்தை மிக அழகாக நகர்த்துகிறது.

கானா பாடல் ஒன்று ஆரம்பத்தில் நீண்ட நேரம் கதையோடு பயணிக்கிறது. சிறுவர்களின் கதையை எடுத்த இயக்குநர் அவர்களை மட்டுமே கதைக்களத்தில் உலவ விட்டிருக்கிறார். கோயம்பேடு மார்க்கெட்டும் அதில் இதுபோல் இருக்கும் மற்ற மனிதர்களும் தனித்து விடப்பட்டுவிட்டனர். நல்லதொரு கதை அம்சம் கொண்ட படமாக அமைந்ததால் ரசித்துப் பார்க்க முடிகிறது.

என்றென்றும் புன்னகை:

தனது அம்மா சிறுவயதிலேயே ஏமாற்றிவிட்டுப் போனதால் பெண்களை வெறுக்கும் ஜீவா, தனது நண்பர்களான வினய், சந்தானம் இருவரோடு சேர்ந்து திருமணம் செய்வதில்லை என்று சபதம் ஏற்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் சபதத்தை மீறி திருமணம் செய்து கொள்ள அவர்களை வெறுக்கும் ஜீவா, எப்படி திரிஷாவுடன் காதலில் விழுகிறார்... அவர்களுக்குள் ஏற்படும் பிரிவினையில் இருந்து மீண்டு இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.


எப்பவும் இரட்டை அர்த்த வசனங்களும் சிரிக்க முடியாத வசனங்களும் பேசிக் கொல்லும் சந்தானம் வீரம், என்றென்றும் புன்னகையில் சில ஒன் லைன் நகைச்சுவையில் சிரிக்க வைத்திருக்கிறார். எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு அதை அம்மாவால சீரணிக்க முடியலை என்றும் அவர் மனைவி சொல்லும் போது உங்கம்மா ஏன் செத்த நாயை சாப்பிட்டாங்க என்று கேட்பார். இப்படி நிறைய இடங்களில் சிரிக்க வைத்தார்.

பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆண்ட்ரியா மழைப் பாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நாசர் அப்பாவாக வந்து நிறைவாய் செய்திருக்கிறார். ஒரு முறை பார்க்கலாம்.

நீல ஆகாசம் பச்சக் கடல் சுவர்ண பூமி:

மலையாளப் படமான இதில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருந்தார். தனது காதலியைத் தேடி நண்பனுடன் பைக்கில் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்... அவர்களின் நிலை என எல்லாவற்றையும் அழகான படமாகத் தந்திருக்கிறார்கள். 


படம் ஆரம்பித்து நண்பர்கள் இருவரும் பயணிக்க ஆரம்பிக்கும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே பயணப்பட ஆரம்பித்து விடுகிறோம். அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை அமைப்பு... மலையாளத்தில் எவ்வளவு அருமையான கதைகளை படமாக ஆக்குகிறார்கள். நாமோ இன்னும் டாஸ்மார்க்கில்தான் கிடக்கிறோம் என்று நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இது போன்ற நல்ல கதைகள் தமிழிலும் வர வேண்டும்.

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

மகேந்திரன் சொன்னது…

கோலிசோடா விமர்சனம் மனதில் நிற்கிறது..
படம் பார்க்கத் தூண்டுகிறது சகோதரரே...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மலையாளத்தில் கதைக்குத்தான் முக்கியத்துவம். இங்கோ நடிகர்களுக்குத்தான் அத்தனையும்.
நாம்தான் நடிகைகளுக்குக் கோயில் கட்டுகிறோமே.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.3

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உலக சினிமா வரலாற்றில் யதார்த்தமான திரைப்படம் எடுப்பது மலையாளிகள்தான்.

அங்கே நடிக்கும் சூப்பர் ஸ்டார்கள் வீட்டுக்குள்ளே பேன்ட் சர்ட் கோட்டுடன் இருக்க மாட்டார்கள், சாதாரணமாக எப்படி ஒரு மனிதன் வீட்டுக்குள் இருப்பானோ அதேபோல்தான் இருப்பார்கள், நம்மாளுங்கதான் எப்பவும் வீட்டுக்குள்ளே பேன்ட் சூட்ல இருக்காங்க!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுருக்கமான விமர்சனம்...

விரைவில் தமிழிலும் வந்து விடும்... விழுந்து கிடக்கும் நாயகனின் குத்துப் பாடலோடு...!

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு.நான் மலையாளப் படம் தான் பார்க்கவில்லை.சமீபத்தில் வெளியான,'ரம்மி' மற்றும்,'பண்ணையாரும் பத்மினியும்','புலிவால்'கூட நல்ல படங்கள் தான்.

கவிதை வானம் சொன்னது…

மலையாளப் படங்களில் எப்பவோ நெடுமுடி....பெயர் தெரியவில்லை பார்த்தது ரொம்ப நல்லா இருந்தது...அப்புறம் நிறைய படங்கள் பார்த்து வேருத்துப்போனேன்...போன வருடம் சுகுமாரி நடித்த ஒரு படம் பார்த்தேன் நன்றாக இருந்தது
உங்கள் பதிவு நல்ல தொகுப்பு

ஸ்ரீராம். சொன்னது…

காற்றத்த கிளிக்கூடு, மஞ்சில் விரிஞ்ச பூக்கள் போன்ற படங்கள் முன்...பு பார்த்திருக்கிறேன். தற்சமயம் திரிஷ்யம் பார்க்கக் காத்திருக்கிறேன்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

தங்களின் பார்வையில் சுருக்கமான விமர்சனம்.படிக்க திகட்டாதது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ezhil சொன்னது…

கோலி சோடா பார்க்கணும் நினைச்சிட்டிருந்தே... இப்ப உங்க விமர்சனம் அந்த ஆவலைத் தூண்டியிருக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விமர்சனம் படித்தேன். படம் பார்க்க முயல்கிறேன்.