மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

நினைவின் ஆணிவேர் (பரிசு பெற்ற கதை)

(வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)

வெட்டி பிளாக்கர்ஸ்


"நாம உடனே சென்னை போகணுமாஎன்னடா சொல்றேஅப்படி என்ன அவசரம்?" கேள்விகளை அடுக்கினான் பழனி.

"ம்... அவசரந்தான்... வேணு சார் வீட்டுக்குப் போகணும்..."

"வேணு சார் வீட்டுக்கா... ஊரை விட்டுப் பொயிட்டாங்கன்னு தெரியும்... அவங்க சென்னையிலயா இருக்காங்க..?"

"ஆமா..."

"உனக்கு யார்டா சொன்னா?  எனக்குத் தெரியாம எங்க போய் விசாரிச்சே..?"

"நேற்று அவங்க வீட்டுப் பக்கமா போனேன்.... அப்படியே அவங்களைப் பற்றி விசாரிச்சா என்னன்னு தோணுச்சி. இப்ப இங்க வந்திருக்கிற நிலமையில அது கூட நல்லவிதமா முடியலாம்ன்னு மனசுக்குப் பட்டுச்சு. அதான் அங்க போயி விசாரிச்சேன். வீட்டை வாங்கினவருக்கு எங்க இருக்காங்கன்னு விவரமெல்லாம் தெரியலை. ஆனா வேணு சாரோட மைத்துனர் வைத்தி ஐயரை விசாரிச்சா விவரம் தெரியும்ன்னு சொல்லி அவரோட அட்ரஸ் கொடுத்தார். அங்க போயி விசாரிச்சேன். அவர்தான் சென்னையில இருக்காங்கன்னு சொல்லி அட்ரஸ் எழுதிக் கொடுத்தார்."

"எதுக்குடா அங்கெல்லாம் போனே... அவருக்கு உன்னை அடையாளம் தெரியலையா?"

"இல்லை... நானும் ராமகிருஷ்ணன்னு சொல்லலை... கருப்பையா வாத்தியார் மகன் பழனின்னு உன்னோட பேர்லதான் அறிமுகப்படுத்திக்கிட்டேன். அதுபோக அவருக்கு கண்ணு சரியாத் தெரியலை... ஒரு சின்னப் பயகிட்ட சொல்லித்தான் அட்ரஸ் எழுதிக் கொடுத்தாரு..."

"ம்... இது தேவையாடா?"

"பாக்கணுன்டா... பாத்தா நல்லதுன்னு தோணுது. ஆனா சென்னை போயி கொஞ்ச நாள்ல வேணு சார் இறந்துட்டாராம்..."

"இறந்துட்டாரா... ஆனா அவருக்கு ஏற்பட்ட அந்த மிகப்பெரிய இழப்புக்கு அப்புறம் வேணு சார் ரொம்ப ஒடஞ்சிட்டாரு... கொஞ்ச நாள்ல வீட்டை வித்துட்டு மகன் கூட பொயிட்டாங்கன்னு சொன்னாங்க... அதைத்தான் நானும் உங்கிட்ட சொன்னேனே..."

"ம்... சொன்னே... ஆனா என்னால இப்படி..."

"உன்னால இப்படி இல்லடா... அவராலதானே நாம எத்தனை முறை கேட்டோம்... ஆனா அவரு... சரி விடு... இனி பேசி என்னாகப் போகுது... அவரு உடம்பையும் மண்ணு தின்னுருச்சு... ஆமா உடனே போயி என்னடா பண்ணப்போறோம்... வேணான்டா... இனி அந்தக் குடும்பத்தோட ஒத்துப் போறது நல்லாயில்லை... இப்படியே விட்டுடலாம்..."

"இல்லடா... அபிக்காகவாவது அவங்களைப் பார்த்தாகனுன்டா... அவளோட இந்த நிலை மாற அவங்க மூலமா எதாவது வழி கிடைக்குமான்னு முயற்சித்துப் பார்க்கலாண்டா... நாம இன்னைக்கு ராத்திரி கிளம்புறோம்..."

"இத்தனை அவசரம் எதுக்குடா... முதல்ல அபியை நல்ல டாக்டர்கிட்ட காட்டலாம்... அப்புறம் போகலாம்...  அதுபோக அங்க போனா தேவையில்லாம பிரச்சினை வருமுடா... வேணான்டா...”

"என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லைடா... முதல்ல நாம அங்க போறோம்..."

"நம்ம ரெண்டு பேருந்தானே..?" கலவரமாய்க் கேட்டான்.

"இல்ல அபியையும் கூட்டிப் போறோம்..."

"என்னடா விளையாடுறியாஅவ இருக்க நிலமையில இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டுப் போகணுமா... அவளைப் பார்த்தா ரொம்ப பிரச்சினை ஆகுமேடா..."

"என்ன ஆனாலும் பரவாயில்லைடா... அவளை கூட்டிப் போயே ஆகணும்..."

"எனக்கென்னவோ நீ பண்ணுறது சரியின்னு தோணலை... அவ எப்படிடா இவ்வளவு தூரம்... அதுதான்டா எனக்கு பயமா இருக்கு..."

"இங்க விட்டுட்டுப் போனா மத்தவங்களால அவளைப் பாத்துக்க முடியாது... அது போக அவ என்னை விட்டுட்டு இருக்கமாட்டாங்கிறது உனக்குத் தெரியுமில்ல..."

"தெரியும்டா...அவளுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காகத்தானே சிங்கப்பூர்ல இருந்து இங்க வந்தோம்... அப்புறம் அதை விட்டுட்டு வேணு சாரு வீட்டைத் தேடிப் போயி..."

"போறோம்... நீ வர்றே... ராத்திரி ரெடியா இரு... வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்." என்று சொல்லி அவனது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.


சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த சிகப்புக் கலர் ஸ்கார்பியோ. ராமகிருஷ்ணன் காரை ஓட்டிக் கொண்டிருக்க முன் இருக்கையில் பழனி அமர்ந்திருந்தான். பின்னிருக்கையில் அபிராமி படுத்திருந்தாள்.

"எனக்கென்னவோ அபிராமி வர்றதுதான்டா ரொம்பப் பயமா இருக்கு. அவ இல்லைன்னாக்கூட நாம எப்படியும் சமாளிச்சிட்டு வந்திடலாம். இந்த நிலமையில அவளை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்கிறது..."

"அவளை வச்சிக்கிட்டு சமாளிக்கலாம்டா... அவளை வீட்ல விட்டுட்டு வந்தா அம்மாவாலே சமாளிக்க முடியாது. நான் இல்லாட்டி சாப்பிட மாட்டா... பாரு சின்னப்புள்ள மாதிரி தூங்குறா... உனக்கே தெரியும் அவ எப்படி துறுதுறுன்னு இருப்பான்னு... இப்ப பாரு.... ஒரு குழந்தை மாதிரி ஆயிட்டா... அவ மறுபடியும் துறுதுறுன்னு இருக்க அபியா மாறணுன்டா..."

"சரிடா... என்ன பண்ணுறது.... எல்லாம் நேரம்டா... சரியாகும்... சரியாகும்... அவ மறுபடியும் பழைய அபிராமியா சீக்கிரமே மாறுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்குடா..."

"ம்... அந்த நம்பிக்கையிலதான் ஏழெட்டு வருசத்துக்கு அப்புறம் இங்க வந்திருக்கேன். பார்க்கலாம்..."

திகாலையில் சென்னையை அடைந்து ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கிக் குளித்து காலை டிபனை முடித்துக் கொண்டு வைத்தி ஐயர் சொன்ன முகவரியை விசாரித்து நகரின் அடையாளங்கள் சற்றே குறைந்த பகுதியில் இருந்த அந்த வீட்டை அடைந்தனர்.

"டேய் பழனி... அபி வண்டிக்குள்ளயே இருக்கட்டும்... நாம ரெண்டு பேரும் போகலாம்" என்றான் ராமகிருஷ்ணன்.

"அவ மட்டும் இருப்பாளா?"

"அதெல்லாம் இருப்பா... அபி இங்கயே இருடா... நான் இப்போ வாரேன்" என்றபடி இறங்கியவன் காரை ஆட்டோ லாக் பண்ணினான்.

"எனக்கென்னவோ பயமா இருக்குடா?"

"பேசாம வா... என்ன நடந்தாலும் நடக்கட்டும்..."

காலிங்பெல்லை அடித்ததும் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் கதவைத் திறந்து "யாருஎன்ன வேணும்?" என்றார்.

"இது வேணு சார் வீடுதானே?"

"ஆமா அப்பாதான்... அவங்க இறந்துட்டாங்களே... நீங்க?"

"நாங்க கும்பகோணத்துல இருந்து வர்றோம்"

"கும்பகோணமா... அங்க யாரு எனக்கு அடையாளம் தெரியலையே..."

"நான்...." ராமகிருஷ்ணன் சொல்ல ஆரம்பிக்க, பழனி இடையில் புகுந்து " நான் பழனிங்க... எங்கப்பா கருப்பையா வாத்தியார்... காலேசுல படிக்கும்போது வேணு சார் கூட ரொம்ப நெருக்கம்... சார்தான் எங்க டிபார்ட்மெண்ட் தலைவர்... வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வருவோம். இவன் என்னோட பிரண்ட்..."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்... உள்ளே வாங்க..."

"அம்மா...?"

"ம்... இருக்காங்க.... அப்பா இறந்ததும் அம்மா தலைக்கு மொட்டை அடிச்சி... வெள்ளைச்சேலை உடுத்த ஆரம்பிச்சிட்டாங்க... நல்லது கெட்டது எதுக்கும் போறதில்லை... அவளுக்கு எல்லாமே எங்க வீட்டுக்குள்ளதான்..."

"அம்மாவை பார்க்கலாமா?"

"பாக்கலாம்... இப்படி உக்காருங்க... தனம் வந்தவங்களுக்கு காபி கொடும்மா... ஆமா என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க... எதுவும் கோவில் விசேசமா.?. நம்ம ஆட்களைப் பார்க்கிறது இங்க அரிதா இருக்கு... ஊர்க்காரங்களைப் பார்க்கிறதுல இருக்கிற சந்தோஷம் தனிதானே... "

"ஒண்ணுமில்ல... சார் இறந்துட்டாருன்னு வைத்தி ஐயர் சொன்னார். அதான் சென்னைக்கு ஒரு வேலையா வந்தோம். அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு அவருகிட்ட அட்ரஸ் வாங்கிக்கிட்டு வந்தோம்." என்றான் பழனி.

"அப்பாவோட ஸ்டூடண்ட் அவரை ஞாபகம் வச்சிக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

பேசாமல் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணன் "சார் அம்மாவை பார்க்கலாமா?"என்றான்.

"ம்... பார்க்கலாம்... அவங்க பின்னால தோட்டத்துல உக்காந்துக்கிட்டு இருப்பாங்க... தனத்தைப் போயி கூட்டியாரச் சொல்லுறேன்..." என்றபடி மனைவிக்கு ஆணையிட்டார்

"ம்... அது சரி தோட்டமா... ?! சென்னையில தோட்டத்தோட ஒரு வீடா... ஆச்சரியமா இருக்கே.."

"நான் இந்தப் பக்கம் வீடு வாங்குறப்போ ரொம்ப வீடுகள் வரலை... அப்போ பின்னால கிடந்த இடத்தையும் வாங்கிப் போட்டு தோட்டமாக்கிட்டேன்." என்றார்.

"வாங்கோ... கும்பகோணத்துல இருந்து வந்திருக்கேளா?" என்றபடி வந்த மாமியைப் பார்த்ததும் மடிசார் கட்டி தலை நிறைய மல்லிகையும் நெற்றியில் வட்டக் குங்குமமுமாய்  "வாடா ராமு... என்ன சாப்பிடுறே...?" என்று கேட்கும் கும்பகோணம் மாமி மனசுக்குள் வரராம்கிக்கு கண்கள் கலங்கின.

"ஆமாம்மா... நான் கருப்பையா வாத்தியார் மகன் பழனி"

"அடடே.... நம்ம கருப்பு வாத்தியார் பையனா நீயி...என்னமா வளர்ந்துட்ட.. அதான் அடையாளமே தெரியலை... அதுபோக இப்போ கண்ணும் கொஞ்சம் மங்கலாயிண்டே வர்றது... ஆமா இது யாரு..."

"அம்மா நா... நான் ராமகிருஷ்ணன்..."

"ராமுவா... அடப்பாவி நீயாடா... பிள்ளை மாதிரி பாத்தோமேடா... ஆனா நீ...?"

"அம்மா... நா..."

"நீ எதுவும் பேசாதே... ஆதி இவனை இங்கிருந்து போகச் சொல்லு... தனம் இவன் நின்ன இடத்தை ஜலம் ஊத்திக் கழுவி விடு... "

"அம்மா... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க...." என்றான் பழனி.

"வேணாம்... நாங்க எதையும் கேக்கத் தயாரா இல்லை... தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க..."

"ப்ளீஸ் வாங்க..." என்றபடி வெளியே கூட்டி வந்தவர் "எதுக்குங்க வந்ததும் நீங்கதான் ராமகிருஷ்ணன்னு சொல்லலை... சுத்தி வளைச்சிப் பேசினீங்க... எனக்கும் உங்களை அடையாளம் தெரியலை... இல்லேன்னா வீட்டுக்குள்ள உங்களை அலோவ் பண்ணியிருக்க மாட்டேன். எப்படிங்க உங்களுக்கு எங்களைத் தேடி வர மனசு வந்தது"

"ப்ளீஸ் நீங்களாவது நாங்க சொல்றதைக் கேளுங்க..." கெஞ்சினான் ராமகிருஷ்ணன்.

"என்னத்தைக் கேக்கிறது... அந்த இன்சிடெண்டுக்கு அப்புறம் எங்க குடும்பம் அக்ரஹாரத்துல எவ்வளவு கேவலப்பட்டுப் போச்சு தெரியுமாஅப்பாவால ரோட்டுல தலை நிமிர்ந்து நடக்கமுடியலை... வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்குள்ளேயே அடஞ்சி கெடக்க ஆரம்பிச்சிட்டார். பூர்வீக வீட்டை வித்துட்டு இங்க வந்ததுல அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார். அந்தக் கவலையே அவரைக் கொன்னுடுச்சி... அவரு இறந்ததும் எங்க வீட்டோட சந்தோஷமே போயிடுச்சு. அம்மா இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வந்தா மறுபடியும் அவளை பழசை எல்லாம் நினைக்க வச்சிட்டிங்களே... வேண்டாம் போயிடுங்க... உங்க உறவுகளைச் சொல்லிக்கிட்டு எங்க குடும்பத்து சந்தோஷத்தை கெடுத்திடாதீங்க... ப்ளீஸ்..."

"நாங்க செஞ்சது தப்புத்தான்... முதல்ல வேணு சார்கிட்டதான் சம்மதம் கேட்டோம்... ஆனா அவருதான் ஆச்சாரம் அது இதுன்னு சொல்லி ஒத்துக்க மாட்டேனுட்டாரு..."

"எதுக்குங்க பழசெல்லாம்... நீங்க இப்ப கிளம்புங்க அது போதும் எங்களுக்கு..."

"ப்ளீஸ் சார்... நீங்களாவது நான் சொல்றதை கேப்பீங்கன்னு பார்த்தேன்..." என்றதும் வெளியே வந்த அவரின் மனைவி " என்னண்ணா... அவா என்னதான் சொல்றாள்ன்னு கொஞ்சம் கேக்கலாமே... ஏழெட்டு வருசத்துக்கு அப்புறம் வந்திருக்காள்... இன்னும் பழசைப் பேசி என்னாகப் போறது... சித்த இருங்க... அவா சொல்லட்டும்..."

"உனக்குத் தெரியாதுடி..."

"ப்ளீஸ்... சொல்றதை நீங்க கேக்காட்டியும் அக்காவாவது கேட்கட்டுமே... நான் படிப்பு முடிஞ்சதும் சிங்கப்பூர் பொயிட்டு திரும்பி வந்து உங்க வீட்ல எங்க காதலைச் சொல்லி முறைப்படி பொண்ணு கேட்டேன்... ஆனா வேணு சார் ஒத்துக்கலைன்னதும் நான் அவளை எவ்வளவோ கன்வீன்ஸ் பண்ணிப் பார்த்தேன். பட் அவ எதையும் ஏத்துக்கிற மனநிலையில இல்லை... நான் இல்லேன்னா செத்துருவேன்னு சொல்லிட்டா... பெரியவங்க சம்மதத்தைவிட அவ காதலும் அதைவிட முக்கியமா அவளோட உயிரும் எனக்குத் தெரிஞ்சது. அதான் அவளை கூட்டிக்கிட்டுப் போயி திருச்சியில பிரண்ட் வீட்டுல தங்கியிருந்துட்டு அப்புறம் நான் மட்டும் சிங்கப்பூர் போயி அவளுக்கும் விசா ரெடி பண்ணி அங்க கூட்டிக்கிட்டேன். ஆனா..."

ஆதி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்தார், தனம் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதற்காக ‘ம்’ என்றாள்..

"அங்க போய் ஒரு மூணு வருசம் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு விபத்துல அபி கோமா ஸ்டேஜ்க்கு பொயிட்டா. ரெண்டு வருசம் அப்படியே இருந்தா... கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பும்போது அவளுக்கு பழசெல்லாம் நினைவில் இல்லை. ஏன்... என்னையவே தெரியலை... ஆரம்பத்துல என்னையப் பார்த்தே பயப்பட்டா... அப்புறம் எங்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிக்கிட்டா... ஆரம்பத்துல இருந்த பயம். கோபம், ஆக்ரோஷம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சிருச்சி...  எந்தப் பிரச்சினையும் பண்ணாம சின்னக் குழந்தை மாதிரி எங்கிட்ட ஒட்டிக்கிட்டா... அவளுக்கு எல்லாமே நாந்தான்... எங்களுக்கு பழக்கமான எல்லார்கிட்டயும் ஒரு நேரம் இல்லாட்டியும் ஒரு நேரம் இருப்பா ஆனா ரொம்ப ஒட்டுதல் இருக்காது..... எங்கிட்ட மட்டும்தான் பேசுவா... அவளுக்கு சாப்பாடு கொடுக்கிறதுதான் பிரச்சினை... வேலைக்கு ஆள் வச்சிருந்தாலும் சாப்பிட மட்டும் நான் வேணும்... என்ன வேலை கிடந்தாலும் நான்தான் அவளுக்கு சாப்பாடு கொடுக்கணும்... இல்லேன்னா சாப்பிடாமா ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா... இதுக்காகவே ஆபீஸ் பக்கத்துல வீட்டை பிடிச்சி இருந்தோம்... எங்க ஆபீசிலயும் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க... அவளைப் பொறுத்தவரை அவளோட உலகமே நாந்தான்... என்னைப் பொறுத்தவரை என்னோட உயிரே இவதான்... " ராமகிருஷ்ணனின் கண்கள் கலங்கியதும் பழனி ஆறுதலாய் அவனை அணைத்துக் கொண்டான்.

கண்களை துடைத்தபடி மீண்டும் பேச ஆரம்பித்தான் "அங்க நான் எத்தனையோ வைத்தியம் பார்த்தேன் அவளுக்குச் சரியாகலை... இங்க வா... இங்க வச்சிப் பார்த்து சரி பண்ணலாம்ன்னு அம்மா கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க... எனக்கு வர விருப்பமில்லை... எதுக்கு வீணாவுல எல்லாரையும் பார்த்து மறுபடியும் பிரச்சினையை மறுபடியும் உருவாக்கணுமின்னு யோசிச்சேன்... போகப்போக பிரச்சினைகளைவிட அவ எனக்கு ரொம்ப முக்கியங்கிறதை உணர ஆரம்பிச்சேன். அப்புறம்தான் அவளுக்கு டீரீட்மெண்ட் எடுக்க இங்க கூட்டியாந்தேன். வந்த இடத்துல உங்களை எல்லாம் பார்த்தா அவளுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடாதாங்கிற ஒரு நப்பாசையிலதான் விசாரிச்சு உங்களைத் தேடி இங்க வந்தேன்... ஆரம்ப காலத்துல இவன் இங்க இருந்ததால எல்லா விவரமும் சொல்லுவான். இப்போ இவனும் சிங்கப்பூர்லதான் இருக்கான். அதான் சார் இறந்ததெல்லாம் தெரியலை... நாந்தான் எனக்கு உதவியா இருப்பான்னு இவனையும் கூட்டிக்கிட்டு வந்தேன். இப்பச் சொல்லுங்க... உங்க குடும்பத்தை காயப்படுத்திட்டு நாங்க மட்டும் சந்தோஷமா இருந்தோமா என்ன...”

"இப்ப அவ எங்கே?" மெதுவாகக் கேட்டார் ஆதி. தனத்துக்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"கார்ல இருக்கா... இருங்க கூட்டியாறேன்..." என்றவன் காருக்குச் சென்று அபியை மெதுவாகக் கூட்டி வந்தான்... புதிய மனிதர்களைப் பார்த்ததும் மலங்க மலங்க விழித்தாள். பின்னர் ராமின் தோளில் சாய்ந்து கொண்டு "ராம் யார் இவங்கள்லாம்... எனக்கு பயமா இருக்கு... வா போகலாம்..." என்றாள் மிரட்சியாய்...

"அபி ஒண்ணும் பயமில்லடா... இவங்க உன்னோட அண்ணனும் அண்ணியும்..."

"அண்ணனா..?"  என்றவள் அப்படியே ஆதியை ஒருமுறை பார்த்துவிட்டு ராமகிருஷ்ணனுடன் இறுக்கமாக ஒட்டிக் கொண்டாள். அவளது இதயம் பயத்தில் படபடப்பது அந்த அணைப்பில் அவனுக்குத் தெரியஅவளை ஆதரவாய் பற்றிக் கொண்டான். கண்களை எல்லாப் பக்கமும் சுழல விட்டு ஹாலில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்த அபி, தன் பார்வையை விளக்குகள் கண்சிமிட்ட மாலைக்குள் சிரித்த வேணு வாத்தியாரின் புகைப்படத்தில் நிலைக்குத்தினாள். அவள் பார்வை போன திசை நோக்கியவன் அங்கே இருந்த புகைப்படைத்தையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான். அவளது கண்கள் கலங்கியிருப்பது நன்றாகத் தெரிந்தது.

அதற்குள் மாமியாரை கூப்பிட்ட தனத்திடம் ‘அவள் எப்படியோ போகட்டும் அவ இனி எதுக்கு இந்தாத்துக்கு வர்றா..? என்னைக்கு நம்மாத்து மனுசாளை மறந்துட்டுப் போனாளோ அன்னைக்கே அவ செத்துட்டான்னு ஸ்நானம் செஞ்சாச்சு என்று கத்தினாள் மாமி, ‘அவளுக்கு நம்மளைப் பார்த்தாலாவது பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராதானு கூட்டிண்டு வந்திருக்கா.. நீங்க உங்க மகளா அவளைப் பார்க்க வேண்டாம்... ஒரு பொண்ணாப் பாருங்கோ.. .நொந்துபோய் வந்தவாளை நாமளும் காயப்படுத்தணுமா என்ன... மாமா நம்மளை இப்படியா இருக்கணுமின்னு சொல்லியிருக்கார்.... சொல்லுங்கோ...” என்று சமாதானப்படுத்தினாள் தனம்.

வேண்டா வெறுப்பாக வந்து நின்றவளைப் பார்த்ததும் "அபி உங்க அம்மா வந்திருக்காங்க..." என்றான் ராமகிருஷ்ணன்.

அவளை ஏற இறங்கப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். மீண்டும் மெதுவாக அவளைப் பார்த்தாள்.. உதடு திறக்காமல் மெல்லச் சிரித்தாள்... அந்தக் கள்ளமில்லா குழந்தைச் சிரிப்பு... அவளின் துறுதுறுப்பான முகத்தை மனசுக்குள் கொண்டு வர மாமியின் முகத்தில் கோபம் மறைந்து லேசான மலர்ச்சி தெரிந்தது.

"ராம்... அ... அம்...மா…  அம்மாவா?" என்றாள் குழந்தையைப் போல். அதுவரை பேசாமல் பார்த்த மாமி ‘அம்மா’ என்ற வார்த்தையைப் பலவருடங்களுக்குப் பிறகு  கேட்டதும் ‘பட்டு’ என்று நாதழுதழுக்க சத்தமாக அழைத்தாள். அபிக்கு வீட்டில் பெயர் பட்டு. அந்தப் பெயரைக் கேட்டதும் ராமின் தோளைப் பற்றிய கைகளை விடுத்து அவளையே நன்றாகப் பார்த்தாள். ராமின் முகம் நோக்கியவள் மெதுவாக அம்மாவை நோக்கி நடந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை திரும்பி ராமைப் பார்த்தாள். அவன் சும்மா போ என்பது போல் தலையசைத்ததும் அவளை நோக்கி சின்னக் குழந்தை தத்தித்தத்தி நடப்பது போல் நடந்தாள்.

அனைவரும் ஒன்றும் பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர். ராமுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. பக்கத்தில் போனதும் யாரு நீயின்னு கத்திக்கிட்டு திரும்பி வந்துருவாளோன்னு ஒரு பயம் மனசுக்குள் பரவியது. மற்றவர்களோ தன் மகளை ஏற்றுக்கொள்வாரா... மாட்டாரா... என பார்த்துக் கொண்டிருந்தனர். அருகில் போய் நின்றதும் நான்கு கண்களும் சந்திக்க கண்ணீர் அணை போட்டது. “பட்டும்மா.... எத்தனை வருசமாச்சு.... இப்படியா உன்னையப் பார்க்கணும்... எங்களோட துறுதுறுப்பான பட்டு எங்கடி போனா... என்னடா இப்படி இளைச்சிப் போயிட்டே... " என தாயுள்ளம் பொங்க கண்ணீரோடு கட்டிக் கொண்டாள்.

சற்று நேரம் அப்படியே நின்றவள் மெதுவாக அம்மாவைக் கட்டிக் கொண்டாள். அவள் கண்களில் ஆரம்பத்தில் இருந்த பீதி கொஞ்சம் குறைந்திருந்தது. தாயின் அணைப்பில் அவளுக்குள் ஏதோ கரைவது போல் தோன்றியது. திரும்பி ராமைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தாள்... அந்தச் சிரிப்பு இதுவரை அவன் பார்த்த சிரிப்பில் இருந்து சற்றே மாறுபட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அம்மாவின் பிடிக்குள் இருந்து வெளியேறி ராமின் தோள் சாயத்தோன்றினாலும் உடம்பு அந்த அணைப்புக்குள் அடங்கிக் கொண்டது.

அணைப்பை சற்றே விலக்கி 'பட்டு... பட்டு...என்று உச்சிமோர்ந்த அம்மாவை ஒன்றும் சொல்லாமல் பார்த்தவள்சற்றே விலகி 'ராம்... ராம்..." என்று அழைத்துஅருகில் வந்தவன் தோளில் சாய்ந்து அம்மாவை நோக்கிச் சிநேகமாகச் சிரித்தாள். அவள் அம்மாவைக் கண்டு கொண்டாளா என்று தெரியாவிட்டாலும் அவளது செய்கை... அந்தப் புன்னகை... அவளை விரைவில் பழைய அபியாக பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கையை அவனுள் விதைத்தது.

-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Philosophy Prabhakaran சொன்னது…

குமார்,

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்... வெட்டி ப்ளாக்கரில் வெளியான போதே உங்கள் கதையை படித்துவிட்டேன்... ஆனால் உங்கள் கதை என்று தெரியாது...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் கதை நன்றாக உள்ளது...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். சொன்னது…

பிரமாதம் குமார். மிகப் பிரமாதம். வாழ்த்துகள்.

கோமதி அரசு சொன்னது…

அழகான நெகிழ்வான கதை.
அபி பழைய துறுதுறுப்பான பட்டுக் குட்டியாக மாற வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

சிறுகதை சற்று நீளம் என்றாலும் அருமை !
த ம 4

vanathy சொன்னது…

Good story. Congrats.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான கதை.. வாழ்த்துகள்.

Menaga Sathia சொன்னது…

சூப்பர் கதை சகோ,வாழ்த்துக்கள்!!

r.v.saravanan சொன்னது…

நெகிழ்ச்சியூட்டும் கதை இப்பொழுது தான் படித்தேன்

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குமார்

மகிழ்நிறை சொன்னது…

முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள் சகோ!
கதை செம டச்சிங் !

ezhil சொன்னது…

உணர்ச்சிப்பூர்வமான கதை...முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கதை அருமையாக இருக்கிறது குமார்.....

பரிசு பெற்றமைக்கு மீண்டும் வாழ்த்துகள்.

S.டினேஷ்சாந்த் சொன்னது…

வெட்டி ப்ளாக்கர் சிறுகதைப்போட்டியில் நான் 5/5 வழங்கிய சொற்ப சிறுகதைகளில் இச் சிறுகதையும் ஒன்று .அருமையான சிறுகதை.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நான் ரொம்ப லேட் பாஸ்! :)) இப்பதான் படிச்சேன். நல்லாருக்கு! வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்!