மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரமாய் சுதந்திரம்..


பள்ளிக்குச் செல்லும்போது
பின்னால் கிழிந்த
காக்கிக் டவுசரை
இழுத்து விட்டு
வடியும் மூக்கை
புறங்கையால் புறந்தள்ளி
அனுப்பவித்த சிறுவனின்
சந்தோஷம்...

தெருவில் குப்பை
பொறுக்கினாலும்
கிழிந்த சாக்கை
தோளில் தூக்கி
அறுந்த செருப்பில்
சணல் கட்டி
சரட்டி நடந்து
கிழிந்த பேப்பரில்
ரஜினி தேடிய
ரசிகனின் சந்தோஷம்...

சாக்கடை அள்ளி
உடம்பெல்லாம்
கருப்புக் கலரில்
ஜொலித்தாளும்
தாயன்போடு கொடுத்த
தண்ணீரைக் குடித்து
நனைந்த உதட்டில்
மலர்ந்த புன்னகையை
உதிக்கும் உழைப்பாளியின்
சந்தோஷம்...

வறண்ட மார்பில்
பால் தேடும்
குழந்தைக்கு
தண்ணீரைக் குடிக்க
கொடுக்கும்போது
மனசு வலித்தாலும்
பசி மறந்து
சிரிக்கும் குழந்தையை
வறண்ட மார்பில்
அனைத்துக் கொண்டு
சோகமாய் சிரிக்கும்
தாயின் சந்தோஷம்....


பூப்பறித்து
பொறுமையாகக் கட்டி
அதை நாலாக்கி
அம்மாவுக்கு
அக்காவுக்கு
கொஞ்சம் சாமிக்கு
பகிர்ந்து கொடுத்துவிட்டு
தனக்கும்
தன் தோழிக்கும்
ஒதுக்கிக் கொள்ளும்
சிறுமியின் மனசுக்குள்
குடிகொண்ட சந்தோஷம்...

இப்படி இன்னும்
எத்தனையோ
சந்தோஷங்களைத் துறந்து
இயந்திர உலகில்
இயந்திரமாகிப் போன
மனிதர்களும்...
மதம்பிடித்த
மதங்களும்...
நாட்டை அழிக்கும்
அரசியலும்
இன்றைய வாழ்வின்
பெரும்பகுதியை
ஆக்கிரமிக்க...

விடியலில் குண்டு
துளைக்காத கூண்டுக்குள்
நின்று சுதந்திரமாய்
கொடியேற்றுவார்கள்
நம் நாட்டின் தலைவர்கள்...
தொலைக்காட்சிகளில்
சிறப்பு நிகழ்ச்சிகளின்
நடுவே பார்த்து மகிழ்வோம்
இந்த சுதந்திரத்தை...

நமக்குள்ளும்
சுதந்திரமாய் சொல்லிக்
கொள்வோம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விடியலில் குண்டு
துளைக்காத கூண்டுக்குள்
நின்று சுதந்திரமாய்
கொடியேற்றுவார்கள்//

ஆக இன்னும் விடியவும் இல்லை, சுதந்திரமும் இல்லை...!

Yaathoramani.blogspot.com சொன்னது…

வேற்றுமையில் ஒற்றுமைபோல்
சங்கடங்களுக்குள்ளும் சந்தோஷம்
அப்படிச் சொல்லி
சமாதானம் செய்து கொள்ளவேண்டியதுதான்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

செங்கோவி சொன்னது…

Very good Kumar!

Unknown சொன்னது…

சுதந்திர தின நல வாழ்த்துக்கள்,குமார்!!!///சரி,எதற்காக குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ...........................?////வெறும் நாடுகளில் இந்த நடைமுறை உண்டா????

ஸ்ரீராம். சொன்னது…

கொண்டாடிடுவோம். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படம் மனதைக் கலக்கியது.....

சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....

அம்பாளடியாள் சொன்னது…

உண்மையான சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லும் காலம் வெகு விரைவில் உருவாக வாழ்துக்கள் சகோ ! மிக்க நன்றி பகிர்வுக்கு .

சென்னை பித்தன் சொன்னது…

நாட்டை நெஞ்சிலேயே சுமக்கச் செய்து விட்டீர்கள் சிறுவனை!

கார்த்திக் சரவணன் சொன்னது…

வணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_18.html