மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பா... நண்பா...


இன்று நண்பர்கள் தினமாம்... முதலில் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். 


கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.. வகுப்பறையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தவன் மெதுவாக நான் அண்ணாத்துரை, காளையார் கோவிலுக்கு அருகே கடம்பங்குளம் என்றான் சினேகமாக... நானும் சினேகமானேன். பின்னர் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன் நான் சேவியர், சூராணத்துல இருந்து வாரேன் என்றான். மூவரும் நண்பர்களானோம்.. அண்ணாத்துரையும் சேவியரும் இராம்நகரில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து சமைத்து சாப்பிட்டு தங்கிப் படித்தனர்.

சில நாட்கள் மெதுவாக நகர, ராமகிருஷ்ணன், முத்தரசு பாண்டியன், ஆதிரெத்தினம், திருநாவுக்கரசு, பிரான்சிஸ், நவநீதன் என எங்கள் நட்பு வட்டம் விரிந்தது. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை திருவாடானை, தேவகோட்டை எனத்தான் அணிகள் பிரியும்... பின்னர் அடித்துக் கொள்ளவும் செய்யும். ஆனால் எங்கள் வகுப்பில் புதுமையாக தேவகோட்டையே இரண்டு பிரிவாக ஆகி இதில் ஐந்து... அதில் ஐந்து... என மோதிக் கொண்டிருந்தது. எங்கள் அணி ஆசிரியர்களுக்குப் பிடித்த அணியாக இரண்டு துருவங்களுக்கும் நடுவில் பொதுவான அணியாக இருந்தது.

எப்பவும் ஜாலிதான்... பங்காளி, மாப்பிள்ளை என்ற உறவு முறைகளுடன் சந்தோஷமாக கழிந்தன கல்லூரி நாட்கள். எங்கள் நட்பு வட்டத்தில் எல்லாருடைய வீட்டிலும் சென்று தங்கி சந்தோஷமாகக் கழித்திருக்கிறோம். எங்களுக்குள் சாதி மதங்கள் எல்லாம் தடையாக வரவில்லை. மதியம் சாப்பிடும் போது யாருடைய சாப்பாடு யாருடைய கையில் என்றெல்லாம் பார்ப்பதில்லை எல்லாருடைய சாப்பாட்டையும் எல்லாரும் பகிர்ந்து சாப்பிடுவோம். எப்பவும் ஆதியின் சாப்பாடு அவன் கைக்குச் செல்வதே இல்லை... எங்களிடமே முடிந்துவிடும்.

காலையில் நானும் ராம்கியும் பேருந்து நிலையத்துக்கு எதிரே சைக்கிளில் காத்திருப்போம். நண்பர்கள் பேருந்தில் வந்து இறங்க, எல்லாப் பிரிவு பசங்களும் எங்களுடன் நட்பாக இருப்பார்கள் பதினைந்து இருபது பேர் கூட்டாக வருவோம். நான் சைக்கிளில் இருக்க, சைக்கிள் கேரியர் எல்லாம் நண்பர்களின் நோட்டுக்களால் நிறைய இரண்டு பக்க தோளிலும் நண்பர்கள் கை போட்டுக்கொள்ள சைக்கிளை ஓட்டாமலே கல்லூரி வந்து சேரும்... முத்தரசும் திருநாவும் அரசியலை அக்குவேர் ஆணிவேராக ஆராய்வார்கள். மெதுவாக எதையாவது கிளப்பிவிட்டுவிட்டால் போதும் கல்லூரி வந்து சேர்வதே தெரியாது. அனல் பறக்கும் விவாதத்தின் முடிவு எப்பொழுதுமே தெரிவதில்லை.

தீபாவளி வருகிறது என்றால் ஊதுபத்தியும் வெடியும் ஆதியின் கைகளில் எப்பவும் இருக்கும். எங்கு வைப்பான் எப்படி வைப்பான் என்பது எங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. சரியாக வெடிக்க வேண்டிய நேரத்தில் வெடிக்கும். அதே போல் ஏப்ரல் முதல் தேதி பெரும்பாலும் உஜாலா பாட்டில் வாங்கி வந்துவிடுவார்கள்.  பிரின்ஸ்பால்கூட உஜாலாவில் குளித்திருக்கிறார்.

வகுப்புக்குக் கட் அடித்து விட்டு பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் பயணித்தது, பிரான்சிஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எல்லாரும் அவன் வீட்டில் போய் இருந்தது, கல்லூரிக் கடைசி நாளில் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றது, கவிதைப் போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் மாறு வேடப் போட்டிகளில் யாராவது ஒருவர் கலந்து கொள்ள எல்லாரும் தூண்டுதலாய் இருந்தது... கல்லூரி ஆசிரியரைப் பார்த்து சில்வர் பிளஸ் என்று சொல்லி அதற்காக ஒருநாள் பேருந்து நிலையத்துக்கு எதிரே வாங்கிக் கட்டிக் கொண்டது என இன்னும்... இன்னும்... சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்ணாத்துரையை எனது திருமணத்திலும் பின்னர் அவனது திருமணத்திலும் சந்தித்ததோடு சரி. சேவியர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருப்பதாகக் கேள்வி, ஆதி திருவாடானையில் ஐயப்பன் கோவில் பூசாரியாக இருக்கிறான். திருநாவின் திருமணத்திற்கு ஊருக்குப் போய் வந்தேன். பிரான்சிஸ் பெங்களூரில் இருக்கிறானாம். ராம்கி எங்கிருக்கிறான் யாருக்குமே தெரியவில்லை, நவநீதன் அ.தி.மு.க. வழக்கறிஞராக காளையார்கோவிலில் இருக்கிறான். போனில் சிலமுறை பேசியிருக்கிறேன். முத்தரசு பாண்டியனை அடிக்கடி சந்திப்பேன். ஏனென்றால் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான். 

எல்லாருடனும் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆசை அதிகமிருக்கிறது. ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது நமக்கான வேலைகள் திரும்பி வரும்வரை சிறகடித்துப் பறக்கின்றன... எங்கே தேடுவது. பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் இன்னும் மனசுக்குள் அதே உரிமைகளையும் நட்பையும் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே எங்கிருந்தாலும் சந்தோஷமாய் இருக்கள்... உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்.

ம்.... இன்னும் சிலரை சொல்லமல் போவது நட்புக்கு அழகல்லவே... என்னில் கரைந்த மற்றவர்களில் முக்கியமானவன் கரு.முருகன், படிக்கும் காலத்திலும் கல்யாணத்துக் முன்னரும் எந்நேரமும் இருவரும்தான் ஒன்றாகச் சுற்றுவோம். தேவகோட்டைக் கல்லூரி தமிழ்த்துறையில் பணிபுரிகிறான். எங்கள் நட்பில் இடையில் சிறிய விரிசல் வந்து தற்போது எப்பவும் போல் தொடர்கிறது.

மனசு கையெழுத்துப் பிரதி நடத்த நாங்கள் ஆசிரியர் குழு அமைத்து வெற்றிகரமாக இரண்டு வருடங்கள் இதழ் நடத்தினோம். அதில் ஆசிரியர்களாக இணைந்த இளையராஜா, அம்பேத்கார், பிராபாகரன் மூவரும் அருமையான நண்பர்கள்... இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல முருகனும் தெரியவில்லை.

மேலும் எங்கள் இதழில் ஆசிரியராக இருந்த சுபஸ்ரீ, நல்ல தோழி, எதற்கும் பயப்படாதவர். தற்போது வங்கிப் பணி, இடையில் தேவகோட்டைக்கு வருவாராம் ஐயா வீட்டிற்குச் செல்லும் போது அம்மா சொல்வார்கள். 

தினமும் கல்லூரி முடிந்ததும் நாங்கள் கூடும் இடம் எங்கள் ஐயா வீட்டில்தான். ஐயாவுடன் சில பல விவரங்கள் பேசுவதுடன் எங்களுக்குள் பேச்சு அரட்டை என சந்தோஷமாக கழிந்த தினங்கள் அவை. முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, அன்பு அண்ணன், தமிழ்குமரன், பார்த்தீபன், மணிவாசகன், மணி மேகலை  என தனி நட்பு வட்டம் கல்லூரிக்கு வெளியேயும் இருந்தது. 

எத்தனை சந்தோஷமான நாட்கள் அவை.... நட்பே எங்கிருக்கிறாய்....?

இணைய நட்புக்களுக்கும் என் இனிய நட்புக்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அருமையான பகிர்வு..

நானும் என் பள்ளி நண்பர்களில் பெயர்களை முகநூலில் இன்று தேடித் பார்த்தேன்... யாருமே கிடைக்கவில்லை நண்பரே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பள்ளி, கல்லூரி நட்புக்கள் எப்போது நினைத்தாலும் இன்பம் தரக்கூடியது.
நட்பு சிறக்கட்டும்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கல்லூரி நண்பர்களை கூடிய மட்டும் சந்திக்கப் பாருங்கள் அதனால் எப்போதும் இளமையாகவே இருக்கலாம்.

யாவருக்கும் வாழ்த்துக்கள்...!

Robert சொன்னது…

எல்லாருடனும் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆசை அதிகமிருக்கிறது. ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது நமக்கான வேலைகள் திரும்பி வரும்வரை சிறகடித்துப் பறக்கின்றன. //உண்மைதான் என்னென்னமோ நினைத்துக் கொண்டு போனாலும் நமது வேலைகள் அதை நேராக்கி விடுகின்றன. அனுபவ உண்மை ...

கோமதி அரசு சொன்னது…

அருமையான பகிர்வு.
நட்பு வாழக!