மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 10 ஆகஸ்ட், 2013

தொடர் பதிவு : பாடி வா... பாடி வா... ஆடி வா...

பதிவுலகில் இப்போ தொடர்பதிவு ஆடி மாதத்து திருவிழாக்கள் போல தொடர்ந்து மேளதாளத்துடன் அரங்கேறி வருகின்றன. இப்போதுதான் சந்தோஷ தருணங்கள்ன்னு தென்றல் சசிகலா அக்கா சொல்லச் சொன்னாங்க. ஒரு வழியா சொல்லி முடிச்சிட்டு ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடான்னு உக்காந்தா எங்கள் ப்ளாக்  ஸ்ரீராம் அண்ணா அடுத்து மாட்டிவிட்டுட்டாரு... பாடி வா.... கபடி... கிரிக்கெட்டுன்னு எழுதச் சொல்லிட்டாரு...

சரி ஆசையா கூப்பிட்டுட்டாங்க... எதாவது எழுதிட்டு ரெண்டு பேரை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவோம்...

சரி வாங்க பாடுவோம்...

நுங்கு வண்டி, கண்டொளிஞ்சு, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு, டயரு வண்டி, ஓடிப்புடிச்சு, கோழிக்குண்டு, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் இப்படி சீசன் விளையாட்டுக்கள் எங்கள் கிராமத்தை அலங்கரித்து இருந்த நேரம்... மாலை நேரத்தில் கபடியும் உண்டு. ம்.... அது ஒரு கனாக்காலம். இப்போ பசங்களெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டும்தான் விளையாடுறாங்க... எத்தனை விதமான விளையாட்டுக்கள்... கண்மாய்த்தண்ணிக்குள் விளையாண்ட விளையாட்டுக்கள் எல்லாம் எத்தனை சுகமானவை. இன்னைக்கு ஷவர்ல குளிக்கிற நமக்கு அதெல்லாம் எங்கே தெரியப்போகுது...


கபடி... எங்கள் ஊரில் இரவு மாரியம்மன் கோவிலருகே எல்லாரும் கூடி சந்தோஷமாக விளையாடுவோம். எங்களுக்கு மூத்த குரூப் அதாவது எங்க அண்ணன்கள் குரூப்பில்தான் கபடி அனல் பறக்கும். மணிச் சித்தப்பா கபடி பாடும் அழகே தனி... பாண்டி மச்சான், செல்வ அண்ணன், எங்க அண்ணன் என இரண்டு குழுவாக... அதாவது ஆட்கள் அதிகமிருந்தால் ஏழு பேராக பிரிப்பார்கள்... இல்லையென்றால் இருப்பவர்களைப் பிரித்து விளையாடுவார்கள். ஆட்டம் அனல் பறக்கும்... கபடி... கபடி என்ற சத்தம் அங்கு நிறைந்திருக்கும்.... நேரம் ஆக ஆக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அழைப்பு வர ஆரம்பிக்கும். ஒவ்வொருவராய் கிளம்ப ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

என்னடா அண்ணன்கள் விளையாண்டதே சொல்றானேன்னு பார்க்கிறீங்களா... நம்ம எப்பவுமே அதிகமா விளையாடுறது இல்ல... கபடி எப்பவாவது விளையாடுவோம். கல்லூரியில் வேலை செய்யும் போது ஆசிரியர்களுக்கான கபடி போட்டியில்  எங்க அணி கோப்பை வெல்ல காரணமாய் இருந்தவன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... அருமையான போட்டி அது... மணல் அதிகம் போடாமல்... கை காலெல்லாம் சிராய்ப்பு ஏற்ப்பட்டுடுச்சு... இருந்தாலும் பரிசு வாங்கும்போது வலி தெரியலை...

கபடி பாடும்போது கபடி.. கபடின்னு மூச்சை விடாமல் பாடவேண்டும் ... எதிர் அணியினர் நிற்கும் இடத்தில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் பாடிப் போயி அதைத் தொட்டு காலைத் தூக்க வேண்டும். அதாவது வலது கால் கோட்டில் வைத்தால் இடது காலைத் தூக்க வேண்டும். தொடாமல் வந்தால் பாடிப்போனவர் அவுட். இப்பக்கூட எங்கள் ஊர்ப்பக்கம் கபடிப் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லா விளையாடுபவனை குறிவைத்துத் தூக்கி அடித்து கைகால் மூட்டுக்களை இறக்கிவிடுவார்கள்... இருந்தாலும் தமிழர்களின் விளையாட்டான கபடி இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது சந்தோஷம்தான்...


அடுத்து கிரிக்கெட்... கிரிக்கெட் போட்டி என்றால் இன்றும் இரவு எத்தனை மணி ஆனாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன். அந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம்... ஊரில் என் தம்பி கிரிக்கெட் விளையாட்டில் கில்லி... அண்ணாமலை படத்தில் இடுப்பில் துண்டைக்கட்டி வருவது போல் கைலிக்கு மேல் எல்லாருடைய இடுப்பிலும் குத்தாலம் துண்டு இருக்கும்... கைலி அவுறவே அவுறாதுல்ல... இடப்பற்றாக்குறை காரணமாக கட்டம் போட்டு அந்தக் கட்டத்துக்குள்தான் எங்கள் ஊரில் கிரிக்கெட் விளையாடுவார்கள்.... சிக்ஸ் அடிச்சா அவுட்... இதுக்குப் பேர் ஹண்ட்ரம்ஸ்ஸோ என்னவோ சொல்லுவாங்க மறந்து போச்சு...

கிரிக்கெட் மேல உள்ள ஆர்வத்துல நானும் முருகனும் பசங்களைச் சேர்த்து எங்க ஊர்ல கிரிக்கெட் போட்டி நடத்தினோம்... அதுக்காக கொல்லைக்காட்டுப் பக்கம் ஆவரஞ்செடி, காராஞ்செடி எல்லாம் வெட்டி சுத்தம் செய்து கொட்டகை போட்டு இனிமே நடத்தக்கூடாது என்ற முடிவுடன் போட்டி நடத்தி முடிச்சோம்... அதுக்குக் காரணம் நானும் முருகனும் கையைச் சுட்டுக்கொண்டோம் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

அப்புறம் கல்லூரியில கிரிக்கெட் போட்டி நமக்கும் அதுக்கும் ரொம்பத்தூரம்ன்னு சொன்னாலும் கேட்கலை... கபடியில கலக்குனமாதிரி கலக்குவேன்னு நினைச்சு வம்படியா இழுத்தாங்க.... பீல்டிங்க் அப்போ ரெண்டு போரைத் தடுத்தேன்.. ரெண்டு தடவைதான் பால் நம்ம பக்கம் வந்திச்சு... அப்புறம் பேட்டிங்க் நாலாவது ஆளா இறங்கி நாலு நிமிசத்துல திரும்பி வந்தாச்சுன்னா பாத்துக்கங்களேன்... தோத்துப் பொயிட்டோமுல்ல... இருந்தாலும் ரன்னர் அப்படின்னு ஆளுக்கொரு டம்ளர் கொடுத்தாங்க...

அப்புறம் வாழ்க்கை அப்படியிப்படின்னு சுத்தி அபுதாபிக்கு வந்த போது சில சமயங்களில் இங்கிருக்கும் உறவுகளுடன் புட்பால், வாலிபால் விளையாடுவதுண்டு...

இதுக்கு மேல புராணம் பாட ஒண்ணும் இல்ல... நாமளும் ரெண்டு பேரை கோர்த்து விடணுமாம்... யாரைக் கோர்க்கலாம்.... ம்.. யோசித்ததில் சிக்கியவர்கள்...

1. குடந்தையூர் - ஆர்.வி. சரவணன் அண்ணா
2. வாரியர் - தேவா அண்ணா  

அண்ணாஸ்... நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்... அடுத்து என்ன தொடர்பதிவு வரப்போகுதே தெரியலையே...
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

நுங்கு வண்டி, கண்டொளிஞ்சு, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு, டயரு வண்டி, ஓடிப்புடிச்சு, கோழிக்குண்டு, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் இப்படி சீசன் விளையாட்டுக்கள் எங்கள் கிராமத்தை அலங்கரித்து இருந்த நேரம்.//

அந்தக்கால விளையாட்டுக்கள் எல்லாம் அருமை. நீங்கள் சொல்வது போல் அது ஒரு கனாக்காலம் தான்.

வானொலியில் பழைய பாடல் ஒன்று கேட்டேன் கண்டொளிஞ்சு, விளையாட்டுக்கு : கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு ஆளை இப்போது இன்னாரென்று கண்டு பிடிக்க வேணும் தப்பாது, கருத்து நிலை மாறாமல், கட்டை அவுத்து பார்க்காமல் என்ன அருமையான் பாடல்!
இப்போது கம்ப்யூட்டரில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.
என் பேரனுடன் ஒளிந்து கொள்கிறேன் கண்டுபிடி விளையாட்டு விளையாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் அக்கா... அது ஒரு கனாக்காலம்தான்...

எங்கள் ஊரில் 'கண்ணாங்கண்ணாம் பூச்சி... கடகட தோழி... எத்தனை முட்டை... (இப்போ கண் பொத்தப்பட்டவர் விளையாடுபவரைக் கணக்கில் வைத்து நம்பர் சொல்லுவார்... உதாரணமாக் 5 என்று வைத்துக் கொள்வோம்) உடனே கண்ணைப் பொத்துபவர் 5 முட்டையில ஒரு முட்டைய தின்னுட்டு மீதியக் கொண்டுவான்னு சொல்லுவார்.... ம்... அது கனாக் காலம்தான்....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஸ்ரீராம். சொன்னது…

ஆஹா..... கபடி உள்கோடு பற்றி நினைவே இல்லை. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் தம்ளர்தானா பரிசு! தொடர்ந்ததற்கு நன்றி குமார். இன்றும் கிராமங்களிலாவது வெளி விளையாட்டுகள் விளையாட வாய்ப்பிருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் சுத்தமாக வாய்ப்பு இல்லை. கணினியில் மட்டுமா, அலைபேசியிலேயே டெம்பிள் டவர் போன்ற கேம்ஸ்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

பழைய நினைவுகளைப் கிளப்பியது பகிர்வு. 6,7 ஆம் வகுப்புகளில் பள்ளியில் எங்களுக்கும் கபடி உண்டு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான மலரும் நினைவுகள்..!

dheva சொன்னது…

குமார் @

தம்பி..நீ சொல்லி நான் எழுதாம இருப்பேனா...

கண்டிப்பா எழுதுறேன்...!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுகமான நினைவுகள்.....

கோலிகுண்டு, பச்சைக்குதிரை, ஹாண்ட் கிரிக்கெட், பேஸ்கட் பால், badminton என்று விளையாடியதுண்டு......

தொடர் பதிவு சீசன்..... :)

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - மலரும் நினைவுகள் - நேரம் கிடைக்கும் போது நினைத்துப் பார்த்து மறுபடியும் அசை போட்டு ஆனந்தித்து மகிழ்வது - ஹா ஹா - எவ்வளவு நல்லா இருக்கும். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

r.v.saravanan சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்கவும் குமார் தொடர் பதிவு விரைவில் எழுதுகிறேன்