மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 (ஓவியம் : ஹாசிப் கான்)

'இவ்வளவு பேரும் எங்க போறாங்க?’
 - நகரச் சாலைகளின் டிராஃபிக்கைப் பார்க்கும்போது எல்லாம் இப்படித் தோன்றும். நாலு பேரை வளைத்துப் பிடித்து, 'எங்கடா போறீங்க இவ்வளவு வெரசா..?’ என விசாரிக்க வேண்டும். பாதிப் பேர் இயர்போனில் தனியே பேசிச் சிரித்தபடி, லூஸுப் பையன்களாகத் திரிகிறார்கள். முக்கால்வாசி யுவதி களை மொபைல் நோண்டியபடியான சித்திரங்களிலேயே பார்க்கிறேன். காதில் செல்போனை இடுக்கியபடிப் பறக்கிறார்கள். டாஸ்மாக்குகளில் லேப்டாப்பை அண்டக் குடுத்தபடியே குடிக்கிறார்கள். சிக்னல் போடுவதற்குள் குபீர் என்று குறுக்கே பாய்கிறார்கள். ஏகாதசி ராத்திரியில் சொர்க்க வாசலைப் பார்க்கப் போய், கோயில் ஏரியாக்களைக் குமுறடிக்கிறார்கள். ரயில்களில்கூட ஃபுட்போர்டு அடித்துப் போகிறார்கள். சதா இரை தேடி அலையும் மானுடம். காகம்போல் கரையும் மனம். ஜனத்திரட்சி. நெரிசல் காடு. எப்போதும் பரபரப்பு. தாளாது விம்மும் எண்ணங்கள். தலைக்குள் பிதுங்கும் கருத்துகள். தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சிப் பிம்பங்கள்... இவற்றுக்கு நடுவே நாம் 'மற்றும் பலர்’ சந்திப்போமா..?

பாலு, 47-டி பேருந்து ஓட்டுநர். நீல கலர் சட்டையும் பேன்ட்டுமாக, தோளில் சிவப்புக் கட்டம் போட்ட குற்றாலத் துண்டில்தான் காணக் கிடைப்பார். டெப்போவில் நிற்கும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், ஒரு ரூபாய் சுபாரி பாக்குப் பொட்டலத்தைக் கிழித்து வாயில் போட்டுக்கொள்வார். ''வண்டி ஓட்டும்போது போன் பண்ணாதேனு எத்தன தடவ சொல்றது..?'' என சிக்னலில் நிற்கும்போது மொபைலில் மனைவியைத் திட்டுவார். ''படில நிக்காத... உள்ள வா... பச்ச சட்ட... ஏறி வா. பார்றா மொறைக்கறத... அக்கா, தங்கச்சிகளுக்குக் கல்யா ணம் பண்ணிட்டியா..? போயிட்டின்னா யாரு பண்ணிவைப்பா..?'' என சைடு கண்ணாடியில் சிடுசிடுப்பார். பூக்கடையை பஸ் க்ராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி உட்கார்ந்தபடியே பஜாரில் வீட்டுக்கு மாம்பழங்கள் வாங்குவார். கூட்டம் இல்லாத பகல்களில் முன்சீட்டில் வரும் போக்குவரத்து ஊழியருடன், ''பையனை பாலிடெக்னிக் சேக்கறதுக்கே முப்பது ரூவா ஆச்சு... இன்ஜினீயரிங் அஞ்சு ரூவா... மெடிக்கல் இருவது ரூபாயாம்... எங்க போறது நாம? டிப்ளமோவ வாங்கிக் குடுத்துடுறேன்... அதுக்கு மேல ஒஞ் சமத்துனு சொல்லிட்டேன்'' என்றபடி பேசிவருவார். ஆள் இல்லாத இரவுகளில் சிலுசிலுவெனக் காத்தடிக்க, சட்டைக் காலரைப் பின்னால் தூக்கிவிட்டபடி வண்டி ஓட்டும்போது, 'படைத்தானே... படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே’ என மெல்லிய குரலில் பாடுவார். ஐந்தாறு வருடங்களாகப் போய்வந்த பேருந்தில், இவ்வளவுதான் பாலுவை நான் பார்த்தது. நெரிசல்களுக்கும் சத்தங்களுக்கும் நடுவே இப்படிச் சில வழக்கமான சித்திரங்களையே எனக்குத் தந்திருந்தார் அந்த அரசுப் பேருந்து டிரைவர்.

சமீபத்தில், பள்ளியில் பாப்பாவை விடப் போயிருந்தபோது, ரொம்ப நாட்களுக்குப் பிறகு பாலுவைப் பார்த்தேன். ஒரு குட்டிப் பாப்பாவைத் தூக்கியபடி அந்தப் பள்ளிக்கூட வாசலில் நின்றார். பாப்பாக்களை உள்ளே அனுப்பிவிட்டு, தேர்வு விண்ணப்பங்கள் வாங்குவதற்காக எங்களை வெளியே உட்காரவைத்திருந்தார்கள். அவரைப் பார்த்ததும், ''சார்... நீங்க ஃபார்ட்டி செவன் டிரைவர்தானே?'' என்றேன்.

''ஆமா தம்பி. பரவால்லையே... கரெக்ட்டா நெனவு வெச்சிருக்கீங்களே...'' என்றார் சிரிப்புடன். ''ரிட்டையராகிட்டேன் தம்பி... காதுல இன்னமும் இன்ஜின் சத்தம்தான் கேக்குது...'' என்றவர், ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். நான் பத்திரிகை, சினிமாவில் வேலை பார்க்கிறவன் என்பது தெரிந்ததும் இன்னும் உற்சாகமாகிவிட்டார். பேச்சுக்கு நடுவே, ''பாப்பா... உங்க பேத்தியா சார்..?'' என்றதும், ''பேத்தி மாரிதான்... மாரி என்ன பேத்திதான்...'' என்றவர், சட்டென்று அமைதியாகிவிட்டார். ஏதோ யோசனைகளுக்குப் போனவர் மீண்டு, ''உங்கள்ட்ட சொல்லலாம் தம்பி. அது... ரிட்டையராகறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி சத்யா ஸ்டுடியோகிட்ட வந்துட்டு இருந்தேன். நைட்டு. ரோட்ல வண்டிகளே இல்ல. கொஞ்சம் ஸ்பீடா இழுத்துட்டேன். பெட்ரோல் பங்கு திருப்பத்துல திருப்புனேன் பாருங்க... சைடுல இருந்து வண்டில வந்த ஒரு ஆளு உள்ள வுழுந்துட்டான். சுதாரிக்கவே முடியல... டயர்ல போயிட்டான்... அங்கயே அவுட்டு. ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோயாச்சு. எனக்கு மெமோ, கேஸு, சஸ்பென்ஷன்னு ஒரு மாசம் இழுத்தடிச்சு விட்டாங்க. இத்தன வருஷத்துல இப்பிடி நடந்தது இல்ல தம்பி. டயர்ல கெடந்த அந்த பாடியப் பாத்தேன் பாருங்க... தூக்கமே போச்சு. ஒண்ணும் பண்ண முடியல. அந்தாளு வூட்டுக்குப் போய் நின்னேன். அவன் பொண்டாட்டி மூஞ்சப் பாக்க முடியல... ஏழபாழைக. இப்பிடி வந்தா என் தெசைல விழணும் ஒரு உசுரு... இந்த பாப்பா அவங்க புள்ளதான். நானே படிக்கவைக்கிறேன்னு சொல்லிட்டேன். எங்கூட்லதான் வளருது. டெய்லி ஸ்கூலுக்குக் கொண்டுவந்துவிட்டுப் போயிட்டு, இதோடதான் நம்ம வாழ்க்க போவுது. என்னவோ இது மூஞ்சியப் பாக்கும்போது மனசு பூத்துப் போவுது...'' என்றவர், ''அப்ளிகேஷன் குடுத்துட் டாங்க வாங்க...'' என உள்ளே ஓடினார். திரும் பும்போது அந்தப் பாப்பாவின் ரைம்ஸ் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது... நெடுந்தூரம்!

'மற்றும் பலராக’ சிறு கணங்களில் நம் வாழ்க்கையில் வருகிறவர்கள் எவ்வளவு பேர்? டிராஃபிக் சாலை மாதிரி எத்தனை பேர் டைட்டில் கார்டே இல்லாமல் வந்து வந்து போகிறார்கள்? ஆனால், பாலு மாதிரி ஒவ்வொருவரின் பின்னாலும் எவ்வளவு கண்ணீர், புன்னகைக் கதைகள் இருக்கின்றன.

சமீபத்தில்தான் மறைமலை நகரில் ரோட்டோரம் கொசுவலை விற்றுக்கொண்டு இருந்த வையாபுரி நாயக்கர் குடும்பத்தைப் பார்த்தேன். வையாபுரி நாயக்கர் ஊரில் மார்கழி மாசத்தின் அதிகாலைகளில் பஜனை பாடியபடி சங்கு ஊதிக்கொண்டு வீடு வீடாக வருவார். எங்கிருந்து என்றே தெரியாமல் ஆற்றைக் கடந்து வந்து, கருக்கலின் வாசலில் முண்டாசோடு நிற்பார். வாசல் வாசலாக நின்று 'கோபாலகிருஷ்ணா... கோலம் என்னவோ...’ என தெலுங்கு வாசத்தோடு பாடியபடி, சங்கு ஊதுவார். வருடத்தில் மார்கழியின் அந்தக் காலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். அப்புறம் பொங்கலுக்கு மறுநாள் சைக்கிளில் கூடை கட்டிக்கொண்டு வந்து கரும்பும், வாழைப் பழமும், சில்லறையும் வாங்கிப் போவதோடு சரி. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, புறநகரின் சாலையோரம் குடும்பத்தோடு கொசுவலை விற்றுக்கொண்டு இருக்கும்படி அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. உத்திதான் அவரிடம் என்னை அழைத்துப் போனான்.

''நம்மூரு சங்கூதிரா... ரோட்டோரம் வித்தாங்கன்னு கொசுவலைக பூராத்தையும்போலீஸ் கொண்டுபோயிருச்சாம்... அவரு பையனை யும் புடிச்சுட்டுப் போயிருச்சாம். ஸ்டேஷன்ல போய்ப் பேசணும்... அதான் உன்னையக் கூப்பிட் டேன்...'' என்றான்.

ஸ்டேஷனுக்குப் போனால், அங்கே கோபி உட்கார்ந்திருந்தான். பஸ் ஸ்டாண்டில் நீலகிரித் தைலம் விற்பவன். போனஸாகத் திருட்டு வி.சி.டி., ரயில்வே கிராஸிங், யூரின் பாசிங், வித் அவுட் டிக்கெட் எனப் பிசாத்து கேஸ்களில், 'கேஸ் கணக்கு காட்ட’ அவ்வப்போது கோபியை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய், ரவா தோசை வாங்கித் தருவார்கள். பிரதிபலனாகத் திருட்டு வி.சி.டி. பிளாக்கில் சரக்கு, பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு பிளாக் டிக்கெட்டெல்லாம் விற்றுக்கொள்வான். அவனை ஸ்டேஷனில் பார்த்ததும் வழக்கமான 'மரியாதை’ என நினைத்து, ''என்ன கோபி... என்ன கேஸு..?'' என்றேன்.

''கேஸ் எல்லாம் இல்ல சார்... அய்யாவுக்கோசரம் வந்தேன்...'' என்றான் வையாபுரி நாயக்கரைக் காட்டி. உடனே வையாபுரி சொன்னார், ''கோபி தம்பிய உங்களுக்குத் தெரியுமா..? அவர்தான் இங்க எங்களுக்குத் தங்க எடம்லாம் பாத்துவெச்சது!''

எனக்கு இயற்கையின் தீராத முடிச்சுக்களை நினைத்து ஆச்சர்யம் பொங்கியது. எஸ்.ஐ-யிடம் பேசிக் கொசுவலைகளை மீட்டு, அவரை வீட்டுக்கு அழைத்துவந்தோம். கோபி போய் எல்லோருக்கும் பரோட்டா வாங்கி வந்தான். வையாபுரி அய்யா, அந்தச் சிறு வீட்டில் சாய்ந்தபடி, ''எங்க தம்பி... ஊர்ல யார் இருக்கா? விவசாயம்லாம் இப்ப யாரு ஜீவனெடுத்துப் பாக்குறா? எதுவும் முன்ன மாரி இல்ல. பையன் திருப்பூர்ல வேல பாத்தான்ல... அவன் மூலியமா இந்தக் கொசுவல பிசினஸ் வந்து, அப்பிடியே குடும்பத்தோட வந்துட்டோம்...'' என்றார்.

''ஐயா... ஃபீலிங்க விடு... ஒரு கட்டிங் வுட்டுக்குறியா..?'' என கோபி பரோட்டாவைப் பிச்சிப் போட்டான். வெளியே வந்தபோது குளிர் கும்மியது. இது மற்றும் பலரின் மார்கழி!

மற்றும் பலர் சுமந்து வருகிற வார்த்தைகள், நினைவுகள், கதைகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு காலத்தில் போஸ்ட்மேன் மற்றும் பலரில் முக்கியமானவர். ஒவ்வொரு ஊருக்கும் அவர் எவ்வளவு பெரிய தேவ தூதனாக இருந்தார்? இப்போது அவரை அட்மாஸ்பியரிலேயே காணவில்லை. அப்படி ஓர் இனத்தையே கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். 'சார்... போஸ்ட்...’ என்ற குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு? நேற்று எம்.எம்.டி.ஏ. வீட்டுக்கு ஒரு போஸ்ட்மேன் வந்து அப்படிச் சொன்னார். சட்டென்று விசித்திரமான உணர்வு நிலை ஏற்பட்டது. அப்படிச் சொல்லிவிட்டு தபாலைத் தந்தவர், சிஸ்டத்தில் இணையத்தில் நான் இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்ன கனெக்ஷன் சார்... பி.எஸ்.என்.எல்லா..? பேக்கேஜ் எவ்வளவு சார் வருது?'' எனப் படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். எனக்கு அப்போது தபால்காரத் தாத்தா ஞாபகம் வந்தது. தபால்காரத் தாத்தா எங்கள் ஊரின் போஸ்ட் மேன். அது கடிதங்களின் உலகம். ஆகவே, அப்போது ஊரில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு. அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நீண்ட அலுமினியக் கம்பியில் கடிதங்களைக் கோத்துக் கோத்து சேர்த்து, வீட்டில் மாட்டிவைத்திருப்பார். நல விசாரிப்புகள், பிரியங்கள், துக்கங்கள் என யார் யாரின் எழுத்துக்களாலோ நிறைந்திருந்தது தபால்  காரத் தாத்தாவின் உலகம். அவரும் யாருக்காவது ஏதாவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். அவரது அறை முழுக்கக் கம்பி கோத்த கடிதங்கள் சேர்ந்துகொண்டே இருந்தன. தாத்தா இறந்த பிறகு, ஒரு போகி அன்று கொல்லையில் மூட்டை கட்டிக்கிடந்த அந்தக் கடிதங்களைப் பார்த்தேன். மற்றும் பலரின் உணர்வுகள் பலவும் இப்படித் தான் கிடக்கின்றன... நம்மால் படிக்கப் படாமல்! 
 
நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார் 

9 எண்ணங்கள்:

சாந்தி மாரியப்பன் சொன்னது…

விகடனில் வாசிச்சுருந்தாலும் இங்கே மறுபடி வாசிக்கத் தெவிட்டலை. அதான் ராஜு முருகனின் எழுத்தின் ருசி.

r.v.saravanan சொன்னது…

பலரின் உணர்வுகள் பலவும் இப்படித் தான் கிடக்கின்றன... நம்மால் படிக்கப் படாமல்!

vikatanil thodarndu padithu kondirukkiren

Yoga.S. சொன்னது…

அருமையான பகிர்வு,நன்றி!!!

Riyas சொன்னது…

நல்லாயிருக்கு.

கோமதி அரசு சொன்னது…

ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளும் அற்புதம்.

மற்றும் பலரின் உணர்வுகள் பலவும் இப்படித் தான் கிடக்கின்றன... நம்மால் படிக்கப் படாமல்! ..

உண்மைதான்.

SNR.தேவதாஸ் சொன்னது…

47டி டிரைவர் பாலு மாதிரி மனித நேயம் உள்ளவர்கள் இருப்பதால் தான் இன்னமும் உலகம் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.இத்தனை அக்கிரமங்களையும் பாவங்களையும் நாம் செய்த பிறகும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஏற்கனவே படிச்சிருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி குமார்.எத்தனை எத்தனை படைப்புக்கள்..அதிசய உலகம்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விகடனில் படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன்!அருமையான பகிர்வு! நன்றி! இந்த பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது வாழ்த்துக்கள்!