மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தண்டவாளப் பூக்கள்



"என்னடி... ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கே... எப்பவும் இருக்க கலகலப்பு இல்லாம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே... பன்னெண்டு மணியானாலும் டிவியை ஆப் பண்ணாம பார்ப்பே... ரெண்டு நாளா டிவி கூட பாக்கலை... என்னாச்சுடி... என்ன பண்ணுது..."
"ஒண்ணுமில்லம்மா.... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..."
"சும்மா சொல்லாதடி... பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை நல்லாயிருக்கா இல்லையான்னு... உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன... எதா இருந்தாலும் சொன்னாத்தானே தெரியும்... என்னமோ ஒரு பிரச்சினை உனக்குள்ள இருக்கு.... அதான் ஒரு மாதிரி இருக்கே... என்னான்னு சொல்லுடி..."
"அய்யோ... அம்மா நான் எது மாதிரியும் இல்லை எப்பவும் போல உங்க பொண்ணு நந்தினியாத்தான் இருக்கேன்... போதுமா?"
"ஏண்டி நல்லா இருக்க பிள்ளையை ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்லி உடம்புக்கு நோவு வர வச்சிருவே போல... இப்ப என்ன உன்னோட பிரச்சினை... அவ டிவி பாக்கலைங்கிறதா.... உன்னைய மாதிரி நாடகங்களை கட்டிக்கிட்டு அழுகாம அவளாவது இருக்கட்டுமே... டிவி பாக்காம இருக்கது நல்லதுதானே... காலேசுக்கு கிளம்புற பிள்ளைக்கிட்ட ஏதாவது சொல்லி வருத்தப்பட வைக்காம சும்மா இரு..."
"ஆமா இவுகளுக்கு மகளை ஒரு வார்த்தை சொல்லிட்டா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்... ரெண்டு நாளா அவ ஆளே நல்லாவேயில்லை.... சொல்லப் போனா என்னய கிறுக்கச்சி ஆக்கிருவீங்க.... வேலைக்குப் பொயிட்டு வந்து பாக்குற உங்களுக்கும் வீட்ல இருந்து பாக்கிற எனக்கும் வித்தியாசம் இல்லையா... சும்மா எல்லாத்துக்கும் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க... சொல்லிப்புட்டேன்..."
"இங்கபாரு அவ நல்லாத்தான் இருக்கா... அவளுக்குன்னு நாம இதுவரைக்கும் எதாவது குறை வச்சிருக்கோமா என்ன... அவளுக்கு ஒரு பிரச்சினையின்னா நமக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறா சொல்லு... சரி நீ காலேசுக்கு கிளம்பும்மா... உங்கம்மா சும்மா நொய்  நொய்யின்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பா"
"சரிப்பா..... அம்மா பை..." என்றபடி வேகமாக ஓடினாள். இதற்கு மேல் நின்றால் அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சண்டையை தொடர வேண்டியிருக்கும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
*****
ல்லூரிக்குள் நுழைந்த நந்தினி ஏனோ வெறுமையாக உணர்ந்தாள். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு அழுத்தத்தைக் கொடுத்தது. வகுப்பறைக்கு எப்பவும் போல் சென்றவளுக்கும் முதல் பாடவேளையே மனசு வகுப்பிற்குள் இல்லாமல் எங்கோ தனியாகப் போய் அமர்ந்து விட்டது. அதற்கு மேல் இருக்க முடியாது என்று நினைத்தவள் தோழியிடம் தலை வலிக்கிறது லேடீஸ் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். மேடம் கேட்டா சொல்லிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். கொண்டு வந்த புத்தகதை லேடீஸ் ரூமில் வைத்துவிட்டு அதற்குப் பின்னால் விளையாட்டு திடலில் இருக்கும் உட்காரும் கல்லில் போய் அமர்ந்தாள்.
இதே கல்லில் அமர்ந்திருக்கும் போதுதான் ராகேஷ் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னான். அன்று நந்தினி இந்தக் கல்லில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராகேஷ் அவளிடம் எப்பவும் போல் பேசிவிட்டு மெதுவாக 'நந்து... நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியல்ல..' என்றான். 'என்னடா நீ நம்ம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்து பிரண்ட்... உன்னைய நான் இதுவரைக்கும் தப்பா நினைச்சிருக்கேனா என்ன... ஏன் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறே... என்ன சொல்லப் போறே சொல்லு...' என்றாள்.
அவன் தயங்கித் தயங்கி மெதுவாக அவள் மீதான தன் காதலைச் சொன்னான், அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் மனம் அவளது காதலை ஏற்க்க மறுத்தது. எல்லாரையும் மாதிரித்தான்டா நீயும் இருந்திருக்கே... என்று சொல்லிவிட்டு அவனது பதில் என்ன என்பதைக்கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பினாள். ராகேஷ் ஒன்றும் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.
தொடர்ந்து வந்த நாட்களில் அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள். பல நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்க அவனிடம் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் ஒரு காதல் ஜோடி சுதந்திரமாக வலம் வந்தது.
சந்தோஷமாக போன அவர்களின் காதல் பயணத்தில் சில நாள் முன்னர் சிக்கல் ஆர்ம்பித்தது. எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருந்தாள். வேகமாக வண்டியில் வந்தவன் 'நந்து உங்கிட்ட முக்கியமா பேசணும்.... வண்டியில ஏறு பார்க் போகலாம்... அங்க தனியா இருந்து பேசலாம்' என்றதும் 'என்ன விளையாடுறியா நான் பார்க்குக்கு எல்லாம் வரலை... எதுவா இருந்தாலும் இங்க சொல்லு நான் வீட்டுக்கு கிளம்பணும்' என்று தனது சைக்கிளை தள்ளியபடி பேசினாள். அவனும் தனது வண்டியை ஆப் பண்ணிவிட்டு அவளுடன் வண்டியை தள்ளியபடி நடக்கலானான்.
"நந்து... எங்க வீட்ல எனக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க..." மெதுவாக அவன் சொன்னதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.
"எ.. என்ன?"
"ஆமா நந்து எங்க மாமா பொண்ணு உனக்குத் தெரியுமே சரண்யா... அவளுக்கும் எனக்கும்  நிச்சயம் பண்ணி வைக்கப் போறாங்களாம்"
"இன்னும் நீ படிப்பே முடிக்கலை... அவ இப்பத்தானே லெவன்த் படிப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்?" பதட்டமில்லாமல் கேட்டாள்.
"மாமா இருந்தப்போ அப்பா சொன்னாராம் சின்னவனுக்குத்தான் உன் பொண்ணுன்னு... அவரு இறந்ததும் எங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன பண்றதுன்னு அத்தைக்குப் பயம் வந்திருச்சாம்... அப்பாகிட்ட நாம நினக்கிறதுக்கு மாறா நம்ம பிள்ளைங்க நினைச்சிட்டா என்னண்ணே பண்றது... நாளைக்கு ராகேஷ் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்ப நான் என்ன பண்றதுன்னு கேட்க... உடனே அப்பா இப்படி ஒரு ஏற்பாடை செய்திட்டாரு..."
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவனே தொடர்ந்தான். "இப்ப நிச்சயம் பண்ணிட்டு நான் படிப்ப முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்ன்னு இருக்காங்க..."
"...."
"என்ன நந்து நீ எதுவுமே பேச மாட்டேங்கிறே?"
"இதுல என்ன பேசணுமின்னு நினைக்கிறே... பேசினது உங்க வீட்ல... உனக்கும் சரண்யா மேல ஒரு கண்ணுதானே... அவளையே கட்டிக்க..."
"என்ன சொல்றே நீ... இதுக்குத்தான் லவ் பண்ணினோமா?"
"அப்ப நீ வீட்ல சொல்லியிருக்கணும்... நான் ஒருத்திய லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்னு..."
"எப்படி நந்து... இப்போ சொன்னா தேவையில்லாத பிரச்சினை வரும்... யாருடா அதுன்னு கண்டிப்பா கேப்பாங்க... அப்ப நான் உன் பேரை சொல்ல வேண்டி வரும்... வீணாவுல உன் மேல உயிரையே வச்சிருக்கிற உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பிரச்சினை வரும். இது போக அத்தை மொத்தமா அத்துக்கிட்டுப் போயிருவாங்க..."
"இவ்வளவு யோசிக்கிற நீ இதை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... சரி... சொல்லப் பயமா இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை... தாராளமாக அவளையே கட்டிக்க..."
"இங்க பாரு நந்து... அவளைக் கட்டிக்க... அவளைக் கட்டிக்கன்னு சொல்றியே.... அப்படி அவளைக் கட்டுறதா இருந்தா உன்னைய காதலிச்சு இருக்க மாட்டேனே... சரி நீ டென்சனா இருக்கே நந்து... நான் சொல்றதை கோவப்படாம கேளு."
"என்ன..?"
"நாம எங்கயாவது போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு வந்தால் எல்லாம் சரியாகும்"
"எதுக்குடா உனக்கு இப்படி புத்தி போகுது?"
"வேற என்ன பண்றது சொல்லு... ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி நாம கல்யாணம் பண்ண முடியாது... சாதி நம்ம காதலுக்கு எதிரியாயிடும்... இல்லேன்னா நிச்சயம் பண்றபடி பண்ணட்டும். மேரேஜ்க்கு முன்னால நம்ம காதலை சொல்லி நிறுத்தப் பாக்கலாம்... அதுலயும் ஒத்துக்கலைன்னா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்"
"ஓடிப்போறேன்... ஓடிப்போறேன்னு சொல்லுறியே... ஓடிப்போயி... இப்ப ஓடினா நம்ம படிப்பும் போகும்.... லைப்பும் போகும்... சரி நீ சொல்ற மாதிரி படிப்பு முடிச்சிட்டு காதலை சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்து அதுவும் நடக்கலைன்னு நாம அப்ப ஓடினாலும் வேலை வெட்டி இல்லாம குடும்பம் நடத்த முடியுமா? நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க இந்தாங்க வேலையின்னு கூப்பிட்டு கொடுப்பாங்களா என்ன... இல்ல நண்பர்கள் உதவுறதுக்கும்... ஒரு பாட்டுல பெரிய லெவலுக்கு வர்றதுக்கும் இது என்ன சினிமாவா...சும்மா ஓடிப்போவோம்... ஓடிப்போவோமுன்னு... புரியாம பேசாதடா"
"அப்ப உன் முடிவுதான் என்ன.."
"இதுல என்னோட முடிவு என்ன இருக்கு... எனக்கா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க... உனக்குத்தான் நிச்சயம் நீதான் முடிவு பண்ணனும்..."
"நந்து ப்ளீஸ் என்னைக் கொல்லாத..."
"நான் கொல்றேனா... நீ ஒண்ணு செய்யி நம்ம காதலைக் கொன்னுட்டு உங்க வீட்ல நிச்சயம் பண்ற சரண்யாவை கட்டிக்க... நான் வாறேன்... பை..."
"நந்து..."
"அவனது கத்தலை பொருட்படுத்தாமல் சைக்கிளில் ஏறி மிதிக்கலானாள்.
'சை... புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளே...' என்று நினைத்து தரையில் உதைத்தவன் "சை... என்ன இவள் யாரோ லவ் பண்ணின மாதிரி பேசிட்டுப் போறாள்... சரி டென்சனா இருக்கா... விட்டுப் பிடிப்போம்... ரெண்டு நாள்ல சரியாகும்..' என்று நினைத்தபடி பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

நினைவில் இருந்து மீண்டவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். அப்பா அம்மாவா... இல்லை ராகேஷான்னு பார்த்தா எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்... ஆனா அவன் காதலிக்கிறேன்னு சொன்னப்பவே முடியாதுன்னு மறுத்திருக்கணும்... அவன் மனசையும் கெடுத்த பாவம் என்னைத்தான் சேரும்... இருந்தாலும் நான்தான் உலகம் என்று இருக்கவங்களை தவிக்க விட்டுட்டு இவனே உலகமுன்னு நம்பிப் போனா இரண்டு பேரையும் கொன்ன கொலைகாரியாயிருவேன்... வேண்டாம்... இதயத்தில் நுழைந்த காதலுக்காக தொப்புள் கொடி உறவை தவிக்க விடணுமா என்ன... இந்தக் காதல் மரித்தால் சில காலம் வலியிருக்கும்... பரவாயில்லை நம்ம பிள்ளை நல்லா படிக்குமின்னு அனுப்புன அப்பா அம்மாவை ஏமாத்திட்டு காதலிச்சதுக்கு தண்டனையா இதை ஏத்துக்கிறேன்... அப்பா இல்லாத அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்... ராகேஷ்கூட நிச்சயம் ஆகி அவனையே நினைச்சு வாழப்போறவளை கல்யாணத்தப்போ நாங்க லவ் பண்றோமுன்னு சொல்லி அவ கனவை கலைக்கனுமா... அது நியாயமா... இல்ல அவளுக்கும் ராகேஷூக்கும் கல்யாணம் நடக்கணும். ராகேஷ் கொஞ்சம் கொஞ்சமா மாறி அவளை நல்லாப் பாத்துப்பான். அவன் நல்லவன்... என்று நினைத்தபடி கல்லில் இருந்து எழுந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியவள் காதலையும் அங்கயே விட்டுச் சென்றாள்.

-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ராணி முத்துவில் வரும் சில குடும்ப கதைகள் போலவே, கொஞ்சம் சோகம் கலந்த கலவை, வாழ்த்துக்கள் குமார்...!

துளசி கோபால் சொன்னது…

நல்லா இருக்கு. நடை இயல்பாவும் அப்பா அம்மா உரையாடல் யதார்த்தமாவும் இருக்கு.

பாராட்டுகள்.

Asiya Omar சொன்னது…

வழக்கம் போல எழுத்து நடையும் கதையும் அருமை..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நல்லதொரு கதை, குமார். நந்தினி மாதிரி யோசிக்க தெரிந்திருந்தால் பல உயிர்களின் பலியை தடுக்கலாம்.

சிவஹரி சொன்னது…

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_856.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...