மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 அக்டோபர், 2012மனிதன் : கருப்புசாமி
அவரை எனக்கு இதற்கு முன் தெரியாது. எனது உறவும் இல்லை. தினசரி எதிரெதிரே சந்திப்பவர்களை தொடர்ந்து சில நாட்கள் சந்தித்தால் முதலில் ஒரு சிறு புன்னகை... அப்புறம் மலர்ந்த சிரிப்பு... பிறகு ஒரு ஹலோ... பின்னாளில் 'எப்படியிருக்கீங்க' என ஆரம்பித்து சில நாட்கள் பார்க்காமல் போனால் எந்த பாதிப்பும் இன்றி மீண்டும் புதிதாக பார்ப்பவரிடம் ஒரு புன்னகையில் ஆரம்பிக்கும் தண்டவாளப் பயணமாப் போகும் வாழ்க்கையில் இவரை புகுத்திப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு பந்தம்... உறவாகிப் போன நட்பு... பாசம் என்னும் வலையை பாசாங்கு காட்டி விரிக்கும் உறவுகள் எத்தனையோ இருக்க என்னில் எதுவும் எதிர் பார்க்காமல எனக்குள் புகுந்த நட்பு இது.
நான் எங்கள் கம்பெனியின் ஒரு வருட பணிக்காக அந்த அரசு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து மூன்று  நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அருகில் இருக்கும் மீட்டர் வழங்கும் பிரிவில் ஆபீஸ் பாயாக இருக்கிறார். என்னைப் போல் இவரும் வேறொரு கம்பெனியில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்தான். அவரின் கம்பெனி கொடுக்கும் சொற்ப சம்பளம் கண்டிப்பாக போதாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஊரில் சித்தாளாக போகும் ஒரு ஆள் ஒரு நாள் 250,300 ரூபாய் வாங்குகிறார்கள் ஆனால் இவர் வேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஒரு நாள் கூலி அதைவிட ரொம்ப ரொம்ப குறைவு. இவரைப் போல் நிறைய நண்பர்கள் இதுபோல் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். ஊரில் பையன் துபாயில் இருக்கிறான் என்ற பெருமை மட்டும்தான் மிச்சம். இவர்களின் கண்ணீர் யாரும் அறிவதில்லை. இங்கு காலை 6 மணிக்கு வந்து மதியம் 3 மணி வரை வேலை. அதன் பிறகு இரண்டு மூன்று வீடுகளில் பகுதி நேர வேலை என எல்லாம் முடித்து அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகும். அப்புறம்தான் துணி துவைக்கிறது, சாப்பாடு எல்லாம். இவர் மட்டுமல்ல அந்தக் கம்பெனியில் எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான். 
வழக்கம் போல் நான் நடந்து வந்து அலுவலக கேட்டருகே வரும் போது தனது காரை நிறுத்திவிட்டு என்னுடன் பேசியபடி வந்த கேரளாவைச் சேர்ந்த அண்ணன், இவர் எதிர்படவும் என்ன சாமி... என்று மலையாளத்தில் நலம் விசாரித்தார். இவரும் மலையாளத்தில் பேசிவிட்டு எனக்கும் கை கொடுத்துச் சென்று விட்டார். மதியம் வேலை முடிந்து வெளியே வரும் போது என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். பின்னர் 'சேட்டா நாட்டுல எவட?' அப்படின்னு கேட்டார், நான் காரைக்குடி அறியுமான்னு கேட்டேன். நீங்க காரைக்குடியான்னு தமிழுக்கு தாவினார். நான் ஆமா என்றதும் சரியாப் போச்சு போங்க நான் மேலூருக்குப் பக்கம் என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். காலையில அவரு கூட வந்ததால நீங்க மலையாளியோன்னு நினைச்சேன் என்று சிநேகமாக சிரித்தார். நானும் உங்களை அப்படித்தான் நினைச்சேன் என்றேன். பிறகு சில விசாரிப்புக்கள்... அவருக்கு வண்டி வர சென்று விட்டார்.
மறுநாள் நான் வரும் போது எனக்காக காத்திருந்து கூப்பிட்டுப் பேசினார். பின்பு ஒரு சகோதரன் போல குடும்பம் விசாரிப்புக்கள்... அவரின் குடும்பக் கதைகள் எல்லாம் சொன்னார். சரி ஒரு பத்து மணி போல வாங்க என்றார். பத்து மணிக்குப் போனால் ரெண்டு பிரட் சாண்ட்விச் ரெடியாக வச்சிருந்தார். போனதும் சாப்பிடச் சொல்லி ஒரு அருமையான காபி போட்டுக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதைகள் பேசிவிட்டு கிளம்ப தினமும் வரணும் நான் சாப்பிட எதாவது ரெடி பண்ணி வைக்கிறேன் என்றார். அட போங்கண்ணே நீங்க வேற... எவனாவது பாத்துட்டு உங்காளுக்கிட்ட சொன்ன அம்புட்டுத்தான். தேவையில்லாத வேலை எதுக்கு நேரம் இருக்கும் போது வந்து பாத்துட்டுப் போறேன்.. ஆனா சாப்பிடன்னு வரமாட்டேன் என்றதும் அட சும்மா வாங்க என்றார். நான் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் காபி, டீ, சாண்ட்விச் என எதாவது கொடுக்காமல் இருக்கமாட்டார்.
என் மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது நான் அவரைப் பார்க்கவில்லை என்றாலும் போன் பண்ணி எப்படி இருக்காங்க... பேசினீங்களா என்று விசாரிக்கத் தவறமாட்டார். அவருக்கு மகன் பிறந்த போது எனக்கு போன் பண்ணி உடனே வாங்க... எனக்கு பையன் பொறந்திருக்கான் அப்படின்னு சந்தோஷமாக சொன்னார்.  முதலில் இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவதாய் பையன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பையனுக்குப் பேர் கார்த்தின்னு வச்சாச்சு என்றார். என்ன்ண்ணே நியூமரலாஜி பாத்து வச்சிக்களா என்றதற்கு அட போங்க நீங்க வேற பிறப்புச் சான்றிதழ்ல கார்த்தின்னு கொடுத்துட்டு வேற பேர வச்சோமின்னா நாளைக்கு அவனுக்கு ரெண்டு பேரால பிரச்சினை வரும். அதுக்கு எங்க அண்ணனே சாட்சி அப்படின்னு அந்தக் கதையை வெள்ளந்தியாக சொல்ல ஆரம்பித்தார். பின்பு ஊர் நிலவரங்கள் எல்லாம் என்னிடம் பேசினார்.
இப்படியாக எனக்குள் அண்ணனாக இறங்கியவர்தான் இந்த கருப்புசாமி, வீடு கட்டுவது குறித்தும் அதில் இருக்கும் சின்ன பிரச்சினைகள் குறித்தும் என்னிடம் கேட்கத் தவறுவதில்லை. என்ன பிரச்சினை வந்தாலும் வீடு வேலை நல்லா முடியும் கவலைப் படாதீங்க அப்படின்னு தைரியம் சொல்லி நிறைய பேசுவார். எனக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் முசிறியால் பிரச்சினை வந்தபோது அவனை விட்டுதள்ளுங்க... அவனெல்லாம் ஒரு மனுசன்னு நம்ம போக்குல போங்க என்று ஆறுதல் சொல்லி மனசை லேசாக்கினார். 
இன்று காலை அவரை சந்திக்கப் போனபோது எப்போதும் உற்சாகமாக வரவேற்ப்பவர் லேசாக சிரித்தார். என்னண்ணே வருத்தமா இருக்காப்ல இருக்கு என்ன எதுவும் பிரச்சினையா என்றேன். இல்ல ஒரு பெங்காளி வந்து ஜெராக்ஸ் கேட்டான். சரி பாவமுன்னு எடுத்துக் கொடுத்துட்டேன். அப்பன்னு பார்த்து இந்த களவாணிப் பய வந்துட்டான். (அவரு இருக்கும் அலுவலகத்தின் பெரிய ஆள் - சரியான முசுடு) யாருக்கு எடுக்குறேன்னு கேட்டான். நான் இவரு கேட்டாரு அதான்ன்னு சொன்னதும் வேணுமின்ன வேற எங்கயாவது போயி எடுக்கச் சொல்லு. இங்க எதுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்னு கத்திட்டான். சை ஏண்டா எடுத்தோமுன்னு ஆயிருச்சு... அப்படின்னு புலம்பினார். சரி விடுண்ணே... இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன அப்படின்னு சொன்னதும்... இது ஒரு வித்தியாசமான உலகம் அவனவன் அவனவன் வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். இங்க எவனும் எவனுக்காகவும் இறங்கிப் போகவே இல்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்கவோ கூடாது அப்படின்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு வந்தேன்.
இந்த உறவு.... எனக்கு சாப்பாடு கொடுத்தார்... எனது கஷ்டத்துக்கு மருந்தாக இருந்தார் என்று மட்டும் நினைக்க வைக்கும்  உறவல்ல... எங்கோ பிறந்து இங்கு வந்து தமிழால் மட்டுமே இணைந்த உறவு... எனக்கு ஒரு நல்ல நண்பனாக... அண்ணனாக கிடைத்த உறவு.... ரயில் சிநேகம் , பேருந்து நட்பு போல பயணிக்கும் காலத்தில் மட்டும் பாச ஊற்று ஊறாமல் இனி தொடரும் எனது காலங்களில் இவரின் நட்பும் என்னுடனே பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. டிசம்பர் வரை இந்த ஆபீஸ்.. அப்புறம் வேறு இடம் வேறு அலுவலகம்... மாறும் பயணத்தில் மறக்க முடியா சில நட்புக்கள் இருக்கும், அந்த நட்பில் கருப்புசாமி அண்ணன் என் குடும்ப நட்பாக... இல்லை உறவாக இருக்க வேண்டும். அதுவே எனது ஆசை.
கருப்பு அண்ணன் போல முகம் பார்க்காமல் அண்ணனாய்... தம்பியாய்... அக்கா... தங்கைகளாய் எத்தனை உறவுகள் எல்லாமே என்றும்  நீடிக்க வேண்டும் என்பதை நான் இறைவனிடம் கேட்கும் ஒன்று.

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. இது கதையா அனுபவமா என்று தெரியவில்லை ஆனால் மனதைத் தொடும் வகையில் எழுதி இருக்கிறீர்கள்.ஆங்காங்கே இதுபோல் நட்புகள் இருக்கத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இது கதையல்ல... உண்மைதான்... இப்போது நடப்பதுதான்...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நண்பனாய் இருந்தாலும் உறவினரை போல் நம் மீது அக்கறை செலுத்தும் நட்பு மிகுந்த மரியாதைக்குரியது குமார் அந்த நட்பு கிடைக்க பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. எனது பழைய நண்பரின் ஞாபகம் வந்தது... கிட்டத்தட்ட 23 வருடங்கள்... (அப்போது இப்போதுள்ள தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லை) பிறகு சந்தித்த நட்பு இன்றும் தொடர்கிறது...

  தங்களின் நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 5. இது போன்ற உறவுகள் எல்லோருக்குமே அவ்வப்போது ஏற்படத்தான் செய்கிறது. ' இரத்தத்தால் ஏற்படும் உற‌வுகளைக்காட்டிலும் உணர்வுகளால் ஏற்படும் உறவுகளுக்கு வலிமை அதிகம்' என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லா உற‌வுகளும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும்!!

  பதிலளிநீக்கு
 6. இந்த நட்பு இல்லையில்லை உறவு என்றும் தொடர வாழ்த்துக்கள்!! இப்படியும் சிலர் இருக்கிறார்கள்....மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. தொடரட்டும் உங்கள் உறவு தம்பி...நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. ஆர்வி. சரவணன் அண்ணா...
  சகோதரர் தனபாலன்
  மனோ அம்மா
  மேனகா அக்கா
  ஆசியா அக்கா

  அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...