மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 மே, 2012

கிராமத்து நினைவுகள் : பனை மரம்


கிராமத்து நினைவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. இன்று எழுதலாம் என்று நினைத்து அமர்ந்த போது மனதில் நிறைய விசயங்கள் வந்து அமர்ந்தன. திருவிழா மாதம் என்பதால் திருவிழா குறித்து எழுதலாம் என்று நினைத்து பிறகு எழுதலாம் என்று தள்ளி வைத்த போது பனை மரம் என்னைப் பற்றி எழுது என்று மனசுக்குள் வந்து உக்காந்து கொண்டது.

'பனை மரத்துக்கு கீழ இருந்து பாலைக் குடிச்சாலும் ஊரு கள்ளுன்னுதான் சொல்லும்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பனைமரம் எப்படியெல்லாம் நம்மகூட உறவாடியதுன்னு பாக்கலாம்...

எங்கள் ஊரில் நிறைய பனைமரங்கள் இருக்கும். அதிக பனைகள் நிற்கும் ஒரு இடம் வயல்வெளிக்குள் இருந்தாலும் அந்த இடத்துக்குப் பேர் பனங்காடு. நெட்டையும் குட்டையுமாக மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு நிற்கும் அழகே அழகுதான். பனைகளுக்கு நெட்டைப் பனை, குட்டைப் பனை, சதைக்காச்சி என தனித்தனி பெயர்கள் உண்டு.

பனை ஓலை காய்ந்து கீழே விழுந்து கிடக்கும் அதை எடுப்பதற்காக காலையில் விழுந்து அடித்து ஓடிய காலமும் உண்டு. அதில் ஒருவர் அமர்ந்து கொள்ள ஒருவர் கோவிலைச் சுற்றி இழுத்துக் கொண்டு போக வேண்டும். அது ஒரு சந்தோஷம்தான் போங்க. அப்பல்லாம் பனை ஓலை விசிறிதான் எல்லார் வீட்டிலும் இருக்கும்.

காய்ந்த ஓலையில் இருக்கும் மட்டையின் அடிப்பகுதியை அழகாக வெட்டி வண்டி செய்து அதன் முன்பக்கம் நுகத்தடி போல் கம்பைக் கட்டி அதன் இரண்டு பக்கத்திலும் களிமண்ணில் செய்த மாட்டைக்கட்டி அதிலிருந்து கயிறைக்கட்டி இழுத்துக் கொண்டு திரிந்தால் சாப்பாடு மறந்து போகும். கார்த்திகை அன்று சுளுந்து என்று ஒன்றை காய்ந்த ஓலையில் செய்து விளைந்து நிற்கும் வயலின் சனி மூலையில் வைத்து கொளுத்திவிடுவோம். அதற்காக ஓலை கிடைக்காமல் அலைந்து திரியும் நிலமையில்தான் இன்று எங்கள் கிராமம் இருக்கிறது என்று சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

பனை காய்க்க ஆரம்பித்ததும் யாருக்கும் தெரியாமல் நுங்கு வெட்டிக் குடிக்க ஒரு குழுவாக கிளம்பி விடுவோம். மரம் ஏறுவதற்கென்றே பிறந்த சில மச்சான், மாமன் இருப்பார்கள்... அவர்கள் மரத்தில் சரச்சரவென ஏறி... கருக்கு வெட்டிவிடாமல் லாவகமாக பிடித்து அமர்ந்து எது நுங்கு என்பதை கண்டுபிடித்து பிடிங்கிப் போடுவார்கள். பின்னர் யாருக்கும் தெரியாத இடத்தில் அமர்ந்து வெட்டிக் குடிப்போம். நுங்கு சட்டையில் பட்டால் கறை பிடிக்கும். அதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. துணி துவைக்க கண்மாய்க்கு சென்ற அம்மா வந்து வசைபாடும் போதுதான் அந்த நினைப்பே வரும். அதை அப்பவே உதறிட்டு விளையாட ஒடிருவோம்.

சின்ன வயசுல மத்தவங்க நுங்க குடிச்சிட்டு போடுற குதம்பையை எடுத்து வந்து அழகா செதுக்கி ரெண்டு சக்கரம் போல செய்து இடையில் கம்பை சொருகி நீளமான கவக்கம்பு வெட்டி நுங்கு வண்டிய தரையில் வைத்து கவட்டைக் கம்பை வைத்து அழகாக ஓட்டிக் கொண்டு கம்மாய் வரைக்கும் ஓடுவதுண்டு... போகும் போதே ரோட்டோரம் இருக்கும் மாமரத்தில் (காய் திங்க அருமையா இருக்கும்... குழம்புக்கு சுமார்தான்) ஆள் பார்த்துக் கொண்டு ஒரு கல் விட்டுப் பாக்கிறது. மாங்காய் விழுந்தால் அதை எடுத்து கடித்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு ஓடுவோம். அந்த மரத்து ஓனரு... ஆ...யா... பாத்தா ஆரம்பமே அமர்களமான வார்த்தையில் ஆரம்பித்து ரவுண்ட் கட்டி கத்த ஆரம்பிக்கும். நமக்குத்தான் இந்தக் காதுல வாங்க அந்தக் காதுல விடுற அருமையான கலை தெரியுமில்ல... அப்புறம் என்ன அது பாட்டுக்கு லோ... லோன்னு கத்த... நாம கருமமே கண்ணா நுங்கு வண்டியோ நூறாங்குச்சியோ வெளாண்டுக்கிட்டு இருப்போம்.

நுங்குக் காலம் முடிந்த கொஞ்ச நாளில் பனம் பழம் விழ ஆரம்பிச்சிரும். பனம் பழம் பொறக்க விடிகாலையில் ஒருவருக்கு முன் ஒருவர் என பனங்காட்டுக்குப் போவோம். குறிப்பா சதைக்காச்சி, இனிப்புப் பனையில்தான் முதல் தேடல். எடுத்து வந்து விறகு அடுப்புல வச்சி சுட்டு பதமா சுட்டதும் ஆளுக்கு ஒரு கொட்டையாக பிரித்து சாப்பிடுவோம். சில நேரங்களில் ரெண்டு கொட்டை, ஒரு கொட்டை பனம் பழத்தில் சிறிதாக சதையாக ஒரு பகுதி இருக்கும். அதுக்குப் பேர் மக்குவாச்சி, அதுதான் வேண்டும் என ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வோம். கொட்டையா எடுத்தா கொஞ்சம்தான் சதை இருக்கும்... மக்குவாச்சியில கொட்டை இல்லாமல் சதையா மட்டுமே இருக்குமே அதுதான் சண்டைக்கான காரணம். அதன் நார் போன்ற பகுதியை சப்பி சாப்பிடும் போது மஞ்சள் கலரில் வரும் கலவை வாயைச் சுற்றி மஞ்சளாக ஒட்டிக்கொள்ளும். கழுவாமல் விட்டால் வறவறவென்று பிடித்துக் கொள்ளும்.

பனங்கொட்டையை காய வைத்து அதன் மேல்புறம் நாறை அழகாக நீக்கி அதில் கண், மூக்கு, வாய் எல்லம் வரைத்து அழகிய பெண்ணாகவோ அல்லது மீசையெல்லாம் வைத்து ஆணாகவோ செய்து நிலைப்படியில் ரெண்டு பக்கமும் மாட்டி வைப்போம். எங்கள் வீட்டிலெல்லாம் நிறைய இருந்தது. தற்போது யார் வீட்டிலும் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆள் விட்டு பனை ஓலை வெட்டும் போது மறக்காமல் பனங்காய்களை வெட்டி வந்து அழகாக சதையை மட்டும் கட்பண்ணி பனையில் போட்டு அது வேவதற்குத் தேவையான தண்ணீர் வைத்து அதற்குள் கொஞ்சம் வெல்லம் போட்டு வேகவைத்து எடுத்து வைத்தால் அது பாட்டுக்கு வயித்துக்குள்ள போய்க்கிட்டே இருக்கும்.

கொட்டைகளை எல்லாம் சேர்த்து வைத்து வீட்டு அருகிலோ அல்லது கொல்லையிலோ மண் மேடு போட்டு அதில் பதித்து வைப்போம். அதற்கு நாள் கணக்கு உண்டு. அந்த நாள் வந்ததும் பறித்துப் பார்த்தால் அம்புட்டுக் கொட்டையும் கிழங்கு வைத்து இருக்கும் கிழங்கை சுட்டோ அல்லது அவித்தோ திங்கலாம். அவிழ்த்த கிழங்கை விட சுட்ட கிழங்குக்கே சுவை அதிகம். இப்ப கிழங்கு ஆசை வந்தா மார்க்கெட்டுல மூணு கிழங்கு பத்து ரூபா கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டியிருக்கு. அந்த கொட்டையை தூக்கிப் போடுவோம் என்றா நினைத்தீர்கள் அதையும் ரெண்டாக வெட்டி உள்ளே வெள்ளையாக இருப்பதை எடுத்து தின்போம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

நான் படிக்கும் காலத்தில் எல்லாம் எங்கள் வீட்டு மாட்டுக் கசாலை பனை ஓலையால்தான் கட்டப்பட்டிருக்கும். ஓலை வெட்டி வந்து மட்டையை தனியாக எடுத்து ஊரணியில் ஊற வைத்து, ஓலைகளை எல்லாம் அழகாக அடுக்கி தண்ணீர் ஊற்றி ஊறவைத்து... மட்டையை நாராக உரித்து வைத்துக் கொண்டு கசாலையில் ஓலை மாற்றும் அன்று காலை முதல் ஓலைக்கு தண்ணீர் ஊற்றி ஊற்றிக் கொடுக்க பூமி அண்ணனும் அவருடன் வருபவர்களும் மழை பெய்தால் தண்ணீர் இறங்காத வண்ணம் மோடு கட்டி இறங்கும் போது சூரியன் மறைந்திருக்கும் நமக்கு உடம்பெல்லாம் வலி உயிர் போகும். அப்படியே புதுசா ஓலை மாற்றிய கசாலைக்குள் போனால்... அப்பப்பா... என்ன சுகமான காற்று... அனுபவித்தால்தான் புரியும். அந்த சந்தோஷத்துடன் கண்மாய் தண்ணீருக்குள் போய் விழுந்தால் வலியெல்லாம் பறந்து போகும்.

அப்புறம் ஓலை வெட்டி கொண்டு வந்து சேர்த்து பண்டுகம் பாத்து கட்டுறதுக்குள்ள ஆவி போயிரும். தென்ன ஓலை வாங்கி கட்டிறலாம் என அப்பா தென்னை ஓலைக்கு மாறினார்... வேலைப் பளு குறைந்தது... ஆனால் வருசம் ஒருமுறை மாத்த வேண்டியிருக்கு என இப்ப ஓட்டுக் கசாலயாக மாறிப் போச்சு... குறிப்பா ஒன்னு சொல்லனுங்க... ஓலைக் கசாலையில நரை எருமை, வெள்ளச்சி, கருத்தப் பசு, காறிக்காளை, மச்சக்காளை என எல்லாரும் வாழ்ந்து எங்களையும் வாழ வச்சாங்க... இப்ப ஓட்டுக் கொட்டகையில வெறுமை மட்டும்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அம்மாவுக்கு மழைக்காலத்தில் விறகு அடுக்கி வைக்க மட்டுமே கசாலை பயன்படுககிறது.

பனை மடடை வண்டியோ, நுங்கு வண்டியோ இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. கிரிக்கெட்டும் கணிப்பொறியும் அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் கொடுப்பதாக நினைக்கிறார்கள்... உண்மையான சந்தோஷம் நாம் ஓட்டி மகிழ்ந்த டயர் வண்டி, விளையாண்டு மகிழந்த நூறாங்குச்சி, கபடி இவற்றில்தான் இருந்தது என்பது அனுபவித்த நமக்கு மட்டும்தான் தெரியும்.

-'பரிவை' சே.குமார்.

படங்களுக்கு நன்றி : கூகிள்

29 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமையான பதிவு குமார். ரசித்து வாசித்தேன். பல நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்.

கோவை நேரம் சொன்னது…

nice review..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அற்புதமான கட்டுரை குமார். பனை நம் வாழ்வோடு எல்லா கட்டங்களிலும் இணைந்து இருந்தது. அதெல்லாம் ஒரு காலமாகி விட்டது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பனங்கொட்டைக்குள் வெள்ளையாக இருப்பதை முட்டை என்றும் சொல்வார்கள். மிகவும் குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மிஞ்சிய பனங்கிழங்கை அவித்து, சிறுதுண்டுகளாக ஒடித்து காய வைத்தும் தின்பார்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரொம்ப அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் சார் !

Asiya Omar சொன்னது…

எங்க ஊர் பக்கமும் பனைமரம் அதிகம் உண்டு,பகிர்வு அருமை,பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியிமே பயந்தரக்கூடியது.எங்க ஊரில் நுங்கு,பதனி,கிழங்கு தவிர தவுனு என்று வெள்ளையாக பஞ்சு போல லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும் அதனையும் விற்பார்கள்.சகோ அதனை ருசித்ததுண்டா?

சசிகலா சொன்னது…

கோடைவிடுமுறைக்கு நுங்கு தனிச்சிறப்பு பழைய நினைவுகள் இதோ கிளம்பிட்டேன் எங்க ஊருக்கு .

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கோவை நேரம் அவர்களே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமசாமி அண்ணா...
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சி... நல்லாயிருக்கீங்களா?.
ஆமா நாங்க அதை தாதுக்கொட்டை என்போம்... அது அவ்வளவு சுவையாக இருக்கும்.

அவித்த கிழங்கு மிஞ்சினால் நீங்கள் சொல்வது போல் ஒடித்து காய வைத்து தின்பார்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன்...
நமக்கும் கொஞ்ச வயசுதான்...
இந்த சாரெல்லாம் வேண்டாம்... அந்நியப்படுத்துவது போல தெரிகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
நீங்க தவுனு என்று சொல்வதை நாங்கள் தாது என்று சொல்லுவோம்...
அதற்கு வீட்டில் அடிதடியே நடக்கும் அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி சசிகலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஹா நீங்கள்லாம் நினைச்சதும் கிளம்பமுடியுது... சந்தோஷமா நுங்கு சாப்பிட்டு வாங்க.

ராஜி சொன்னது…

நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம்ன்னு ஆசையை தூண்டிட்டீங்களே. இப்ப என்ன பண்றது?

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக அருமையான பதிவு! பாராட்டுக்கள்!!கிராமத்துக்கே சென்று அனைத்தையும் அனுபவித்துத் திரும்பி வந்தது போல இருக்கிறது! பனம்பழம், பனங்கிழங்கு, பனையோலை, நுங்கு, என்று அனைத்து செய்திகளுமே மிகுந்த சுவை! இந்தப் பாலையில் இருந்து கொண்டு நுங்கையெல்லாம் மிஸ் பண்ணுகிறோம்! ஆசியா 'தவுனு' என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பனம்பழம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன்.அதற்கு உங்கள் விள‌க்கத்தை அறிய ஆவலாக உள்ள‌து.‌

கருமையிலிருந்து தங்கள் வலைப்பதிவு வெண்ணிறத்திற்கு மாறியிருப்பது அழகாயும் படிப்பதற்கு வசதியாகவும் உள்ளது. என் வேன்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து இந்த மாற்றம் செய்திருப்பதற்கு அன்பு நன்றி குமார்!!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பனங்கொட்டையின் உள்ளே வெள்ளையா இருக்கறதை நாங்களும் தவனுன்னுதான் சொல்லுவோம்.

நுங்கு வண்டி மற்றும் பனையோலையில் செஞ்ச காத்தாடின்னு நினைவலைகளைக் கிளப்பி விட்டுட்டீங்க. இங்கே சீசனில் பதனீர், நுங்கு, ஏன் பனங்கிழங்கு கூட கிடைக்கும்,. ஆனா, தவனு மட்டும் கிடைக்காது.

ஹேமா சொன்னது…

என் வீட்டுக் கொல்லைப்புறமும்,பனையும் ஞாபகத்துக்கு வந்து போகிறது குமார்.பனையின் பயன்களை முழுதுமாக அனுபவித்தவள் நான்.கற்பகதரு என்றும் சொல்வோம்.அருமையான பதிவு.இப்போ நுங்கி இங்கே டின்னில் அடைத்து வருகிறது.அதை வாங்கிக் குடிக்க விருப்பமேயில்லை.சிரிப்புத்தான் வருகிறது அதைப் பார்க்க !

r.v.saravanan சொன்னது…

பனை பற்றி நல்லா அருமையா சொல்லியிருக்கீங்க குமார்

கோடைகாலத்தில் பனைக்கு இணை உண்டா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ராஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்ப கோடை காலம் தானே ஒரு எட்டு ஊர் பக்கம் பொயிட்டு வாங்க.
ஊரை பாத்த மாதிரியும் இருக்கும்... நுங்கு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ராஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்ப கோடை காலம் தானே ஒரு எட்டு ஊர் பக்கம் பொயிட்டு வாங்க.
ஊரை பாத்த மாதிரியும் இருக்கும்... நுங்கு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அம்மா தவுனு என்று ஆசியாக்கா சொல்லியிருப்பது என்னவென்றால் பனங்கொட்டையை மண்ணில் புதைத்து வைத்து கிழங்கு வைத்தது எடுத்து கிழங்கை அவிழ்த்தோ சுட்டோ தின்போமல்லவா... கொட்டையை தூக்கி எறியமாட்டோம் அதை இரண்டாக வெட்டிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாக முட்டை போல் இருக்கும் அதை எடுத்துத் தின்றால் அத்தனை சுவை... அதற்கு எங்க பக்கம் தாதுக் கொட்டை என்று பெயர்.

இப்போ படிப்பதற்கு சிரமமில்லை அல்லவா...?
சில நாட்களாக வலைப்பூ திறக்க முடியவில்லை. நேற்றுதான் சரியானது. நேற்று சென்னை கிங்ஸ் பதில் எழுதவிடவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமா டின்னில் வரும் நுங்கு மட்டுமல்ல... இளநீரும் கூட சுவையை இழந்தே இருக்கிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சாரல் அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

சகோ அப்படியே எம் ஊர் நினைவைக் காட்டுகிறது... இனி ஆடி வரப் போகுதென்றால்.. கூழ் காய்ச்ச கருப்டபணிக்கு அலைவதை மறப்போமா?

நாடோடி இலக்கியன் சொன்னது…

கட்டுரைக்கு இயல்புத்தன்மையை அதிகபடுத்துபடியான புகைப்படங்கள் தேர்வு அசத்தல்.

நல்ல கட்டுரை.

கோமதி அரசு சொன்னது…

பனை மடடை வண்டியோ, நுங்கு வண்டியோ இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. கிரிக்கெட்டும் கணிப்பொறியும் அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் கொடுப்பதாக நினைக்கிறார்கள்... உண்மையான சந்தோஷம் நாம் ஓட்டி மகிழ்ந்த டயர் வண்டி, விளையாண்டு மகிழந்த நூறாங்குச்சி, கபடி இவற்றில்தான் இருந்தது என்பது அனுபவித்த நமக்கு மட்டும்தான் தெரியும்.//

உண்மை இக்கால குழந்தைகள் இழந்த விளையாட்டுக்கள் அதிகம்.
உங்கள் அனுபவங்களை அருமையாக சொன்னீர்கள்.

எங்கள் வீட்டு மாட்டுக் கசாலை பனை ஓலையால்தான் கட்டப்பட்டிருக்கும். //
மாட்டு தொழுவங்களுக்கு இப்பொழுது காற்றாடி போடுகிறார்கள்.நீங்கள் சொல்வது இயற்கைக் காற்று உள்ளே தென்றாலாய் வீசும் போலவே!
அருமை அருமை.

J.P Josephine Baba சொன்னது…

அருமை

Radha rani சொன்னது…

பனைமரத்தில் எத்தனை விதமான பயன்கள்..அறியாத சிறுவர்களுக்கு உபயோகமான பகிர்வு. கிராமத்து நினைவுகளை அழகாய் சொல்லிவிட்டீர்கள் தம்பி. தங்கள் வலையை தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி. பனம் பழத்தில் திருஷ்டி முகம் செய்வது இப்பொழுது அரிதாகி விட்டது.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே,குமார்
19,01,2013 இன்று உங்களின் பனை மரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் மிக அருமையான படைப்பு
இந்தப் பதிவை படிக்கும் போது எங்களுடைய ஊரில் பனைமரம் மிக அதிகம் இப்போ வெளி நாட்டு வாழ்க்கைகயால் ஒடியல் பழம் நுங்கு இவை மட்டும்மல்ல (ஓடியல் கூல்தான் எங்களுடைய ஊரில் மிக பிரபலியம்)இப்போ ஒன்றும் இல்லாமல் இந்திர வாழ்க்கை வாழ்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-