மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 2 ஜூலை, 2011மனச் சுமை
பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. 'சே... என்ன ரேடியோ... ஒரு டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது... கட்ட வேற போச்சு போல... சவுண்டும் கொறச்சுக் கேக்குது. நாளைக்கு நாலு கட்டை வாங்கணும்"

"சத்தியப்பா... சத்தியப்பா...அட ஏங்க..."

"என்ன... சத்த இரு... "

"வந்து சாப்டுப் போயி என்ன வேணாலும் பாருங்க... டிவி பாத்தாலும் இந்த ரேடியாவ ராத்திரி நேரத்துல கர்ரு... முர்ருன்னு கத்த விடுறதே பொழப்பாப் போச்சு... வந்து சாப்டு உங்க ரேடியாவை நோண்டுங்க..."

"ஆமா... இருட்டுனா உனக்கு தூக்கம் வந்திரும்...இரு வாரேன்"

"வந்து சாப்ட்டா நான் படுப்பேஞ்சாமி... பகல் பூராம் ஊறிக்கிட்டே திரியிறது உடம்பெல்லாம் வலிக்கிது"

"சரி... என்ன சாப்பாடு..."

"ஆமா நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்ட நான் என்ன குமரியா..? மத்தியானம் வச்ச மொச்சக் கொட்டைதான்..."

சாப்பிட்டபடி "ஆமா... சத்தி பேசுனானா..."

"ஆமா... இவரு கலக்கிட்டரு வேலை பாக்கிறாரு... இப்பத்தான் வந்தாரு... சும்மா மரத்தடியில படுத்திருக்கிற உங்களுக்குத் தெரியாம எங்கிட்ட தனியா பேசுற மாதிரி..."

"சரி ஏன் விசனப்படுறே... பெரியவ கல்யாணம் வச்சிருக்கா... என்ன பண்ணலாம்... ஏது பண்ணலாமின்னு ...அவங்கிட்ட பேசணுமில்ல..."

"ஆமா.. சொல்ல மறந்துட்டேன்...காலையில போயி சின்னவங்கிட்ட கல்யாண விசயமா பேசிட்டு வாங்க..."

"நாளைக்கா..." மெதுவாக இழுத்தார்.

"என்ன இழுக்குறிய... அவன் வேலைக்குப் போறதுக்கு முன்னால போனாத்தான் அவங்கிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"

"இல்ல நாளைக்கி கண்டிப்பட்டி பந்தயம்... ராமசாமி கருக்கல்ல போலாமான்னு கேட்டான்... வாரேன்னு சொல்லிட்டேன்..."

"ஆமா... பேத்தி கல்யாணத்தைவிட பந்தயந்தான் முக்கியமா?" கோபமாக வார்த்தைகள் வந்தன.

"சரி... எதுக்கு இப்ப கூவுறே... காலையில சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வாரேன்...போதுமா?" என்றபடி எழுந்து வாசலில் கிடந்த கட்டிலில் போய் அமர்ந்து புகையிலையை அதக்கியபடி மீண்டும் ரேடியோவை நோண்ட ஆரம்பித்தார்.

***

"வாங்கப்பா..."

"ம்... பேத்திக்குட்டி எங்க?"

"தூங்குறா... அம்மாவையும் கூட்டிகிட்டு வந்து இருந்துட்டுப் போகமுல்ல..."

"இல்லப்பா... அவளுக்கு நம்ம ஊரைவிட்டு எங்கயும் வந்து இருக்கிற நெனப்பே இல்ல"

"வாங்க மாமா... அத்தை நல்லா இருக்காங்களா?"

"ம்... நல்லா இருக்காம்மா... "

"ஏம்ப்பா... எதுக்கு காலையில விழுந்து வாறீங்க... எனக்குப் போன் பண்ணியிருந்தால் நாளைக்கு லீவு நான் வந்திருப்பேனே..."

"இல்லப்பா... அக்கா கல்யாணம் வச்சிருக்குல்ல... நம்ம வீட்ல நடக்கிற மொத கல்யாணம்... மாமச்சீரை நல்லா சிறப்பா செய்யணும்... அதான் என்ன செய்யிறது... ஏது செய்யிறதுன்னு பேசி முடிவு பண்ணனுமில்ல... உங்கிட்டயும் சத்திக்கிட்டயும் பேசி ஒரு முடிவுக்கு வரலாமுன்னுதான் உன்னை கருக்கல்ல பாத்துப் பேசலாமுன்னு அம்மா சொன்னுச்சு... ""

"அண்ணன் பேசுச்சாப்பா... "

"இல்ல உங்கிட்ட பேசிட்டா... அவன் இன்னைக்கு நாளைக்குப் பேசினா... விவரமா சொல்லிடலாமுல்ல..."

"சரிப்பா... "

"மாமா... மூத்தவர்கிட்ட பணம் அனுப்பச் சொல்லி எல்லா செலவையும் பாருங்க... வீடு கட்ட லோன் வாங்கிட்டாரு... மாசமான பிடிச்சது போக கிடக்கிறத வச்சு குடும்பத்தை ஓட்டவே கஷ்டமாயிருக்கு.."

"என்னம்மா சொல்றே... ரெண்டு பேரும் செய்ய வேண்டிய செலவு இது... அவன் ஒருத்தனை எப்படி சுமக்க சொல்ல முடியும்?"

"ம்... இத்தன வருசமா வெளி நாட்டுல சம்பாதிக்கிறவரு.. செஞ்சா குறஞ்சிடமாட்டாரு..."

"ஏய்... என்ன பேசுறே...? அவரு நம்மள மாதிரித்தானே இருக்காரு.... அப்பா அவ கிடக்கிறா ஆக வேண்டியதைப் பாருங்க... அண்ணங்கிட்ட பேசிட்டு எல்லாம் வாங்குங்க... எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல..."

"ஏங்க அவருகென்ன கொள்ளக்காச்சல்... நம்மளை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கா பாத்து வாழ்றாரு..."

"என்னம்மா சொன்னே... நம்ம குடும்பத்துக்காக சத்தி பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல... ஒம் புருஷன் இன்னக்கி வாத்தியாரா இருக்கானா... அதுக்கு அவந்தாம்மா காரணம்"

"ஆமா பெரிய வாத்தியார் வேலை... அவர மாதிரி இவரும் வெளிநாடு போயிருந்தா நாங்களும் தோட்டம் தொறவுன்னு இருந்திருப்போம்..."

"என்ன நீ... வாய்க்கு வாய் பேசுறே.... எங்க இருந்து வந்துச்சு இந்த வாய்..."

"டேய்... அவ பேசட்டுமுடா... ஏம்மா... இத்தனை வருசம் சம்பாதிச்சு காசு பணம் இருந்தாலும் அவங்கிட்ட என்ன சந்தோஷம் இருக்கு சொல்லு... குடும்பம் பொண்டாட்டி புள்ளையின்னு இருக்க முடிஞ்சதா சொல்லு... வயசையும் வாழ்க்கையையும் தொலச்சிட்டு இன்னைக்கு பட்டமரமா நிக்கிறான்... இந்த வயசுல பொண்டாட்டிய தூக்கி கொடுத்துட்டு... புள்ளைகளுக்காக இன்னமும் வெளிநாட்டுல கிடந்து கஷ்டப்படுறான்.... வயசான காலத்துல எங்களால அந்தப் புள்ளைகளுக்குப் பாக்க முடியாதுன்னு அனாதைக மாதிரி ஆஸ்டல்ல விட்டு படிக்க வைக்கிறான்... அவனாமா நல்லா இருக்கான்..."

"அப்பா... பேசணுமின்னு பேசுறவகிட்ட எதுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு... விடுங்கப்பா... நடக்க வேண்டியதைப் பாருங்க..."

"இல்லப்பா... எல்லாரு மனசிலயும் சத்தி நல்லாயிருக்கான்... பணம் காசு இருக்குங்கிற எண்ணம் மட்டும்தான் இருக்குப்பா.... உங்கக்காகூட பேச்சு வாக்குல பெரியவங்கிட்ட சொல்லி தாலிச் செயின் வாங்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லுறா... சின்னவ வீடு கட்ட பணம் வேணும் அண்ணங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கோமுன்னு சொல்லுறா... இங்க ஒம் பொண்டாட்டி அவங்கிட்ட இருக்க பணம் எங்ககிட்ட இல்லையின்னு சொல்லுறா.. ஆனா உங்க யாரு மனசுலயும் அவன் பட்டமரமா நிக்கிறானேங்கிற எண்ணம் வரவேயில்லையே...அவன நெனச்சு வருந்த எனக்குகூட நேரமில்ல... அவனுக்காக அழுகுற ஒரு ஜீவன் உங்கம்மா மட்டுந்தான்..." என்றபோது அவரது கண்கள் கலங்கின.

"அப்பா... அவதான் எதோ பேசுறான்னா... நீங்க கண் கலங்கிக்கிட்டு..."

"இல்லப்பா... அவ கேக்கிறது தப்பில்ல... கூடப்பொறந்ததுகளே பேசும் போது வந்தவ அவ பேசுறது தப்பில்ல...விடு... சரிப்பா வாரேன்..." அவனது பதிலை எதிர்பார்க்காமல் நடக்கலானார்.

மனசு நொந்து சைக்கிளை மிதித்தவர்,'அவகிட்ட சொன்னா ரொம்ப வருந்துவா.... சொல்ல வேண்டாம்.. பயலுக சமாச்சிடுவாங்கன்னு சொல்லிடலாம்..." என்றபடி மனைவிக்குப் பிடித்த மலையாளத்தான் கடை அப்பம் வாங்கிக் கொண்டு பெரியவனை நெஞ்சில் சுமந்தபடி கனத்த மனதுடன் சைக்கிளை மிதித்தார்.
 
*****
 
குறிப்பு: இது மனசில் வரும் 150வது பதிவு. கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் என நான் தொடராத மூன்று தளங்களில் பதிந்தவைகளுடன் சேர்த்து இது 345வது பதிவு. இதற்கு உங்கள் ஊக்கம்தான் முக்கிய காரணி என்றால் மிகையாகாது. நன்றி நட்புக்களே...!


படத்திற்கு நன்றி : மாலைமலர்

-'பரிவை' சே.குமார்.

33 கருத்துகள்:

 1. நல்ல கதை குமார். பல குடும்பங்களில் நடப்பதுதான். யதார்த்தத்தை அப்படியே காட்டியிருக்கிறீர்கள்.

  150-க்கு நல்வாழ்த்துக்கள்.

  345 சீக்கிரம் 500 ஆகட்டும்:)!

  பதிலளிநீக்கு
 2. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

  பதிலளிநீக்கு
 3. கதை எதார்த்தமா இருக்கு....150க்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப நன்றாக இருக்கிறது குமார். கதை மாதிரியே இல்லை.யதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதையே கதையாக சொல்லியுள்ளீர்கள்..

  பதிலளிநீக்கு
 5. வெளிநாட்டுல இருக்கோம்னாலே நிறைய வச்சிருப்பான்ங்கிற நினைப்பு மட்டும் தான் எல்லாருக்கும் வருது..அருமையா யதார்த்ததைச் சொல்லி இருக்கீங்க குமார்.

  அடடே..150வது பதிவா? வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 6. குடும்ப மலர் கதைபோல் இருந்தது.

  அனுப்பலாமே?

  பதிலளிநீக்கு
 7. நல்லா எழுதி இருக்கிங்க குமார்.

  அப்படியே 150க்கு வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 8. பதிவுகள் தொடர்ந்து எழுதுவது மகிழ்வாக இருக்கிறது!

  வாழ்க்கையில், அதுவும் வெளிநாட்டில் பலவித வலிகளுடன் வாழ்பவனின் வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளை, அவனின் தந்தையின் பார்வையில் அழகாகச் சொல்லி 150 ஆவது பதிவை முடித்திருப்பதற்கு என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் குமார். வெளிநாட்டில் வாழ்பவனின் நிலையை கோடிட்டுல்லீர்கள்

  பதிலளிநீக்கு
 10. 150-ம் 345 ம் பல்கிப்பெருகி பலநெஞ்சங்களுக்குள் ”மனசு” குடியேறட்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குமார்

  கதை வெகு அருமை. அதற்கான படத்தேர்வும் சூப்பர்..

  பதிலளிநீக்கு
 11. தொய்வில்லாது கதை சொல்லும் பாங்கு.. நன்று குமார்!
  நூற்றைம்பதுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. kumar anna arumaiyaana kathai...
  yatharththamaana varikal........
  valththukkal.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ராமலெஷ்மி அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க அம்பாளடியாள்...
  முதல் வருகை மனவலியோடு வந்திருக்கிறீர்கள்...
  உங்கள் மனவலி என்னவென்று சொல்லுங்கள் தீர்வு கிடைக்குமா பார்ப்போம்.
  உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க மேனகா அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க ரமா அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செங்கோவி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க தொப்பிதொப்பி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  அனுப்பலாம்... அபுதாபியில் இருந்து அனுப்ப வேண்டுமா என்ற எண்ணமே இப்போதெல்லாம் வருவதால் அனுப்ப நினைப்பதில்லை. உங்கள் அன்புக்கு நன்றி.

  வாங்க சுசி அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க மனோ அம்மா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க எல்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க மலிக்காக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க ஜி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க விடிவெள்ளி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கதை நன்றாக இருக்கிறது!
  150க்கு வாழ்த்துக்கள்!!தொடர்ந்து எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 19. குமார் உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன்
  http://niroodai.blogspot.com/2011/07/blog-post_04.html
  நீங்களும் பங்குகொள்ளுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 20. யதார்த்தம்.. மிக அருமை குமார். 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.:)

  பதிலளிநீக்கு
 21. 150 வது பதிவுக்கு சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 22. வெளிநாட்டுல இருக்கோம்னாலே நிறைய வச்சிருப்பான்ங்கிற நினைப்பு மட்டும் தான் எல்லாருக்கும் வருது..அருமையா யதார்த்ததைச் சொல்லி இருக்கீங்க....

  பதிலளிநீக்கு
 23. எதார்த்தமான கதை.. நடக்கறத அழகா சொல்லிருக்கீங்க.

  150 ஆவது, பதிவிற்கு வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள். :)

  பதிலளிநீக்கு
 24. வர ரொம்பப் பிந்திட்டுது சகொதரம் மன்னியுங்கள்... தங்களது 150 வத பதிவக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

  பதிலளிநீக்கு
 25. நல்லககதை.தொடரட்டும் 150 1500 ஆக.எழிலன்

  பதிலளிநீக்கு
 26. வாங்க சௌந்தர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க பிரியா அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 27. வாங்க மலிக்கா அக்கா...
  கண்டிப்பா எழுதுகிறேன்... உங்கள் அழைப்புக்கு நன்றி.

  வாங்க தேனக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க மாலதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆனந்தி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க எழிலன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. இந்த சிறுகதைதான் மூத்தவன் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.அதுவரைக்கும் பரவாயில்லை உங்கள் பெயரை போட்டிருக்காங்க...

  பதிலளிநீக்கு
 31. வாங்க மேனகாக்கா...
  உங்கள் அன்புக்கு நன்றி அக்கா...
  எனது சகோதரர் தினத்தந்தியில் வேலை பார்க்கிறார். எனது கதைகள் முன்பு தினத்தந்தி குடும்பமலரில் வெளி வந்திருக்கின்றன. எனவே அவர் மூலமாக குடும்பமலர் எடிட்டருடன் தொடர்பு உண்டு. கடந்த வாரம் எனது சகோதரருடன் பேசும் போது எடிட்டர் உனது கதையை படித்துவிட்டு நல்லாயிருக்கு. குடும்ப மலரில் பெயரை மட்டும் மாற்றி போடலாமா? உங்கள் சகோதரரிடம் கேளுங்கள் என்று சொன்னார்... என்று என்னிடம் சொன்னார். அனுமதியுடன் தான் பிரசுரித்துள்ளார். ஆனால் எனக்கு நேற்றிரவு எதார்த்தமாக தினத்தந்தி பார்க்கும் போதுதான் தெரிந்தது என் கதை இந்த வாரமே வந்திருப்பது. சிறிது நேரத்தில் உங்களிடம் இருந்தும் பின்னூட்டம். நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...