மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 ஜூலை, 2011மனசுக்குள் மண்வாசம்...


மண் வாசம் சுவாசிக்கும் முன்னர் சில வரிகள்...

எனது வலைப்பூவில் இன்னும் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை... பலருக்கு பின்னூட்டம் இட்டாலும் சிலருக்கு இடமுடியவில்லை... குறிப்பாக 'விடிவெள்ளி' செண்பகம், தமிழ்க்காதலன், அப்பாவி தங்கமணி அக்கா என இந்த பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களை படித்தது பின்னூட்டம் இடும் போது பிரச்சினை வருகிறது. எனவே நட்புக்களே பின்னூட்டம் வரவில்லை என்றதும் நான் வருவதில்லை என்று என்ன வேண்டாம். உங்கள் பதிவுகளை படிக்கிறேன்... படிக்கிறேன்... படிக்கிறேன்... (இப்படி கூவ காரணம் நாம போகலையின்னு நிறையப் பேர் நம்ம பக்கம் காணுமப்பா... அதான்... இதெல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...)

சரி மண் வாசத்துக்குள்ள போவோம்....


(மாரியம்மன் கோவில் - திருவிழா நாளில்...)


நம்ம மண்ணைப் பற்றி எழுதணுமுன்னு மலிக்கா அக்கா அன்புடன் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்காமால் இருப்பது மரியாதை இல்லை என்ற காரணத்தால் எங்கள் கிராமத்தையும் அது சார்ந்த நகரத்தையும் பற்றி எழுதியிருக்கிறேன். அதிகமெல்லாம் என்னால சொல்ல முடியாது... ஏதோ என்னால முடிந்ததை சொல்லி தொடர்பதிவு எழுதியிருக்கிறேன். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

தேவகோட்டைக் காரங்களோ, சிவகெங்கை மாவட்டத்துக்காரங்களோ (நம்ம பாரா சித்தப்பா, தேவா அண்ணா... இன்னும் நிறைய...) தவறு இருந்தால் வெளிய சொல்லி மாட்டி விட்டுறாதீங்க.

எங்கள் சிவகெங்கை மாவட்டம் வானம் பார்த்த செம்மண் பூமி, இந்தப் பூமியின் முதல் நகராட்சி என்று பெயர் பெற்ற தேவகோட்டை, அது என்னங்க தேவர்களின் கோட்டை எதுவும் இருக்கான்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. தேவி கோட்டை என்ற பெயர் மருவி தேவகோட்டை என்றாகிவிட்டது.

சரி விசயத்துக்கு வருவோம். தேவகோட்டைக்கு அருகில் 3 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்தான் எங்க ஊர்... ஒரு அழகிய சின்ன கிராமம்.... சூதுவாது அறியாத வெள்ளந்தியான மக்கள்... ( இதெல்லாம் இப்ப இல்லைங்க... எங்க அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது) ஊருக்குள் வீட்டுக்கு வீடு இருக்கும் எருமை, பசு மாடுகள், கோழிகள், ஆடுகள், நாய்கள்... (இதுவும் இப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக... ) என ஒரு அப்பட்டமான கிராமம்.

தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலையில் பிரியும் கிளைச் சாலையில் பயணித்தால் கண்மாக் கரைக்கும் வயலுக்கும் இடையில் செல்லும் தார்ச்சாலையில் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரர் வரவேற்க... சற்றே தூரத்தில் வீடுகள் அணிவகுக்கும் சிறிய கிராமம்தான் எங்கள் பரியன் வயல்.

இங்கயும் நீங்க கேட்கலாம் அது என்ன பரியன் வயல்... பரியாத வயல்ன்னு... இருங்க சொல்றேன் எங்க ஊர்ல விவசாயம் நல்லா இருக்குமா... பரிஞ்சு பொதி கட்டி நிக்கிற பயிரைப் பாக்கிறப்போ கிடைக்கிற சந்தோஷம் இருக்கே அதை அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும். அப்படி விவசாயம் கொழித்ததால எங்க ஊருக்கு பரியன் வயல்ன்னு பேர் வந்ததாக முன்னோர்கள் சொல்லக் கேள்வி.

இப்ப எங்க ஊருக்கு பேர் வைக்கச் சொன்னா கருவ வயல்ன்னு வைக்கலாம்... ஆமாங்க சில வருடங்களாக விவசாயம் இல்லாத வயல்கள் இந்த முறை ஊருக்குப் போனபோது கருவ மரங்களால் சூழப்பட்டிருப்பதை பார்த்த போது மனசு வலிக்கத்தான் செய்தது....

என்ன செய்ய எங்கள் ஊர் விவசாயம் பொய்க்க இரண்டு காரணம்.. ஒன்று நாங்களெல்லாம் வாழ்க்கையின் பின்னால் ஓட வேண்டிய கட்டாயத்தால் பொழப்புக்காக வெளியிடங்களில் இருக்க, எங்களைப் பெற்றோர் மட்டுமே ஊருக்குள் இருப்பது... ரெண்டாவது எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தாழையூர் பெரிய நாயகி அம்மன் கோவில் மாடுகள் விளைந்த வயலில் அறுபடை செய்து விடுவதால் விளைந்ததை வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை என எங்கள் ஊர் விவசாயம் அறுபட்டுப் போய்விட்டது.


(கரகம் எடுத்தல் - முளக்கொட்டு)

இப்பல்லாம் எங்க ஊரில் எல்லோரும் கூடுவது திருவிழாக்களில் மட்டுமே. வருடம் ஒருமுறை நடக்கும் இதுமாதிரியான விழாக்கள்தான் எங்கள் கிராமத்தின் அடையாளமாய் இன்னும் இருக்கின்றன. பசுமையான வயல்கள், நீர் நிறைந்த கண்மாய்... உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள் என்றிருந்த எங்கள் ஊர் இன்று பலவீனமாக இருக்கிறது.

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒத்தையடிப் பாதை, அடி குழாய் தண்ணீர் என்றிருந்த எங்கள் ஊர் இன்று தார் ரோடு, ஊருக்குள் குடிநீர்த் தொட்டி, வீட்டுக்கு வீடு பைப் வசதி என்று வளர்ந்திருந்தாலும் விவசாயமிழந்த வயல்கள் போல... வறண்டு கிடக்கும் கண்மாய் போல... மக்கள் மனதிற்குள் வன்மம் குடி கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் வருத்தமான விஷயம்.ஆனால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஊர் திருவிழாவில் எல்லாரும் ஒன்றாக இருந்து கொண்டாடும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.

இந்த வருடம் ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வந்த எனது நண்பன் தமிழ்க்காதலன் விவசாயமற்ற ஊரைப் பார்த்து வருத்தப்பட்டான். ஆனால் எங்கள் ஊர் அம்மன் திருவிழாவில் கரகம் எடுப்பதும் முளக்கொட்டுவதும் அவனை ஆச்சரியப்பட வைத்ததுடன் அவனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. (இது குறித்து தனிப்பதிவு எழுதுவதாய்ச் சொன்னான்... மறந்துட்டான் போல...)

இவ்வளவுதான் எங்கள் ஊர் பற்றிய என் பார்வை....

நண்பர்களே நீங்க வளர்ந்த... வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் ஊரைப் பற்றி எழுதுங்கள்... யாரையாவது நாமளும் மாட்டிவிடணுமாமே... சரி நம்ம "இதயச்சாரல்...!" தமிழ்க்காதலன், "கலியுகம்" தினேஷ், அன்புடன் ஆனந்தி மூன்று பேரை என் பங்கிற்கு களத்தில் இறக்கி விடுகிறேன்.

நன்றி... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

20 கருத்துகள்:

 1. நிஜமாகவே மண் வாசனை மனசுக்குள் சென்றுவிட்டது. அழகான பதிவு.வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 2. //அது என்னங்க தேவர்களின் கோட்டை எதுவும் இருக்கான்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. தேவி கோட்டை என்ற பெயர் மருவி தேவகோட்டை என்றாகிவிட்டது.// சரி, அப்போ தேவியின் கோட்டையாவது இருக்கா?

  பதிலளிநீக்கு
 3. மண் மனக்குதையா அழகான ஊர் உங்களுடையது ... சிக்க விட்டுட்டீங்களே தல சரி எழுதுறேன் ...

  பதிலளிநீக்கு
 4. உங்க பக்கமெல்லாம் நான் வர்ரதே இல்லங்க, ரொம்ப வருத்தமா இருக்கு....! இனி அடிக்கடி வர முயற்சி பண்றேன்..!

  பதிலளிநீக்கு
 5. அண்ணே... நமக்கு காரக்குடிதேன்... மண் வாசனையை உணரமுடியுது!

  பதிலளிநீக்கு
 6. பதிவு ரொம்ப நல்லா இருக்குங்க... உங்க ஊர் பற்றி தெரிந்து கொண்டோம்..!!!

  தொடர் பதிவு எழுத போறவங்களுக்கு வாழ்த்துக்கள்..!!!

  பதிலளிநீக்கு
 7. உங்கள் ஊர் பற்றி அறிந்து கொண்டதில், மகிழ்ச்சி. படங்களுடன், இயல்பாய் சொல்லி இருந்தீங்க.

  என்னையும், தொடர்பதிவு எழுத, அழைத்ததற்கு நன்றிங்க. விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.

  (என்னோட விரைவில்....., சரி விடுங்க.. சீக்கிரமே எழுதுறேங்க)

  மீண்டும் நன்றி!!! :)

  பதிலளிநீக்கு
 8. padhivu பதிவு எப்போதும் போல் அழகு.. பிளாக்கின் லே அவுட் டிசைன் கலர் காம்பினேஷன் அருமை

  பதிலளிநீக்கு
 9. அன்பு தோழமைக்கு வணக்கம், இனிமையான அனுபவங்களை அழகாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  தென்னகத்தின் மணமணக்கும் மண் வாசனை மனம் நிறைக்கிறது.

  சின்ன சின்ன கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கும் தமிழர்களின் அடையாளங்கள் அழிந்து விடாமல் காப்போம்.

  என்னை வம்பில் மாட்டி விட எத்தனை நாள் ஆசையோ...?

  உனக்காக பதிவு செய்கிறேன். எனது மண் வாசனையை.

  பதிலளிநீக்கு
 10. அடுத்த தொடர் பதிவு ஆரம்பித்தாயிற்றா...

  பதிலளிநீக்கு
 11. வாங்க சென்னை பித்தன் சார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ரமா அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க செங்கோவி...
  தேவி கோட்டை இருக்கோ இல்லையோ... எங்கள் ஊரில் பெரிய பெரிய வீடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க தினேஷ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பன்னிக்குட்டி ராம்சாமிங்ண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  சந்தோஷம்... அடிக்கடி வாங்க.

  பதிலளிநீக்கு
 14. வாங்க வைகை...
  ரொம்ப சந்தோஷம்... இப்போ என் குடும்பமும் காரைக்குடியில்தான் வாசம்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சௌந்தர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ஆனந்தி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  விரைவில் எழுதுங்க.

  வாங்க சிபி அண்ணா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க தமிழ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கண்டிப்பா விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  வாங்க கவிதைவீதி சௌந்தர்...
  ஆமா... நம்மளை மாட்டிவிட்டாங்க... நாமளும் மாட்டிவிட்டாச்சு.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மண்வாசனையோடு உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள் குமார்.
  கொடுத்தவைத்தவர் நீங்கள் !

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...