மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 மார்ச், 2011

கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...




இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தையும் மனச்சோர்வு தின்று விடுகிறது என்பதே உண்மை. சரி விசயத்துக்கு வருவோம்.

நான் முன்பு கிராமத்து நினைவுகள் மற்றும் மனசின் பக்கம் என்ற தலைப்பில் சில பதிவுகள் எழுதினேன். இரண்டுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது என்பது உண்மை. இருந்தும் தொடர முடியாமல் வேலைப்பளூவின் காரணமாக மனச்சோர்வு. அதன் காரணமாக படிப்பது எப்பவோ குறைந்து விட்ட நிலையில் இப்போது எழுதுவதும் குறைந்துவிட்டது.

இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் கிராமத்து நினைவுகளில் தண்ணீர் குறித்த எழுதலாம் என்று தோன்றியதின் விளைவே இந்த தண்ணீர்... தண்ணீர்...

நாங்கள் படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் ஒரே ஒரு அடிபைப் மட்டுமே. அந்தப் பைப் மோட்டார் பொருத்தப்பட்டு இன்றும் எங்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் தண்ணீர் அடித்துத்தான் எடுக்க வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் முன் 10, 15 குடம் தண்ணீர் எடுத்து வீட்டில் நிரப்பி வைத்துச் செல்ல வேண்டும். தினமும் இதுதான் வேலை. நான் மட்டுமல்ல... என் தம்பி மற்றும் மற்ற பசங்கள் எல்லாரும் தினமும் செய்வோம். அதன்பின் பெரிய இரும்பு வாளிகளில் தண்ணீர் அடித்து நிரப்பி பைப்பின் அருகிலேயே வைத்து எல்லாரும் பேசிக் கொண்டே குளிப்போம்.

அடிபைப் தண்ணீர் குடிக்க அவ்வளவாக நல்லா இருக்காது. சோறு வடித்தால் பழைய சாதம் நல்லாவே இருக்காது. அதனால் நல்ல தண்ணி தனியாக எடுக்கப் போக வேண்டும். சைக்கிள் ஓட்டாத காலங்களில் குடி தண்ணீருக்காக அக்காக்கள் தலையில் குடம் சுமந்து 4,5 கிலோ மீட்டர் நடந்தே சென்று செங்கல் சூளைக்காக வெட்டப்பட்டிருக்கும் கிணறுகளில் அவர்களின் திட்டுக்களை வாங்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவார்கள். ஊரில் உள்ள இளம் பெண்களும் பெரியவர்களும் வாளியும் கையுமாக செல்லும் போது அந்த வயதில் அவர்களின் கஷ்டமும் வலியும் தெரிவதில்லை.

தினமும் தண்ணீர் எடுக்க வருகிறார்களே... திட்டினாலும் கேக்க மாட்டேங்கிறார்களே என்று கிணறுகளில் செடி கொடிகளை வெட்டிப் போட்டு வைத்து விடுவார்கள். ஒவ்வொரு கிணறாக பார்த்து தண்ணீர் எடுத்து வருகிறோம் என்று சொல்லுவார்கள். அதை கேட்பதோடு சரி... அது குறித்து யோசிப்பதே இல்லை.

நானெல்லாம் பிறக்கும் முன் தண்ணீர் கஷ்டம் போக்க எங்கள் ஊர் கம்மாய்க்குள் கிணறு வெட்டி உரையெல்லாம் இறக்கியிருந்தார்கள். சில காலம் அதில் தண்ணி தூக்கியதாக சொல்வர்கள். அப்புறம் யாரோ சில புண்ணியவான்கள் செத்த ஆடு, மாட்டின் இளங்கொடி என சிலவற்றை அதில் போட, அந்தக் கிணறும் பாழாகிப் போனதால் மீண்டும் குடம் தூக்குவதாக அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். இன்னும் அந்தக் கிணறு பிரயோசனமற்று இருக்கிறது.

ஏழாவது படிக்கும் போட்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, எட்டாம் வகுப்பு படிக்கும் போது நல்லா ஓட்டியதால் அப்புறம் சைக்கிளில் தண்ணீர் எடுக்கும் பணியைத் தொடங்கினோம். நாங்கள் நாலஞ்சு பேர் சைக்கிளில் இரண்டு குடங்களை கட்டி தொங்கவிட்டு தண்ணீர் தேடிப் போவோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவோம்.

ஒரு கிணறை பிடித்து வைத்து தொடர்ந்து எடுத்து வந்தோம். எல்லாரும் ஒரே இடத்தில் தொடர்ந்து எடுக்க... அங்கயும் பிரச்சினை வந்தது... அப்புறம் அடுத்த கிணறு.... இப்படியாக நாலைந்து வருடங்கள் சைக்கிள் தண்ணீர் எடுத்து வந்தோம்.

சில நாட்கள் போக மனமின்றி மறுத்தால் நீ புள்ளையா இந்த சேகரு ரெண்டு தடவை எடுத்துக்கிட்டு வந்திட்டான். சரவணன் கூட பொயிட்டான்னு அம்மாகிட்ட திட்டு வாங்கணும். அப்புறம் முனங்கிக்கிட்டே குடத்தை எடுத்து கட்டிக்கிட்டு தண்ணீர் எடுத்து வந்த நாட்கள் கண்ணுக்குள் இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்றன.

கம்மாய் நிறைந்து இருந்தால் தண்ணீர் எடுக்கப் போகவேண்டியதில்லை. கம்மாத் தண்ணியத் தூக்கிட்டு வந்து தேத்தாங்க் கொட்டை போட்டு சுத்தம் பண்ணி வைத்து பயன் படுத்துவார்கள். அப்பல்லாம் எங்க வீட்ல மண்ணு போட்டு அதுமேல மண் பானை வச்சி தண்ணி வச்சிருப்பாங்க. கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்டு இருக்கும். சும்மா சில்லுன்னு இருக்கிற தண்ணிய செம்பு நிறைய மோந்து அப்படியே மடமடன்னு குடிக்கும் போது வயிறும் மனசும் சில்லுன்னு இருக்கும் பாருங்க... அப்பா அந்த சந்தோஷத்துல கடுகளவுகூட இப்ப குடிக்கிற பிரிட்ஜ் தண்ணியில இல்லை.



அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து வரும் போது ஓடிவந்து கம்மாயில இறங்கி தண்ணிய லேசா ஒதுக்கி விட்டு அப்படியே வாய் வச்சி குடிச்சா மனசும் வயிறும் நிறையும். ஒரு சில பேரு ரொம்ப சுத்தமானவங்க மாதிரி கையில அள்ளி அள்ளி குடிப்பாங்க... நமக்கெல்லாம் அப்படியே வாயை வச்சி உறிஞ்சதான் பிடிக்கும். அந்த சுவையே தனிதான்.

நல்ல மழை பெய்யும் போது மழையோட நாங்கள்ளாம் கிளம்பி போயி குழக்கால் அங்க இங்க எல்லாம் சரி பண்ணி எங்க கம்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்போம். கம்மாய் நிறைந்திருக்கும் காலத்தில விடுமுறை நாட்களில் மதிய வேளையில் தண்ணீருக்குள் கிடப்பதே ஒரு சுகந்தான். அதுவும் மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சில்லிப்பாகவும் உள்ளே இளஞ்சூடாகவும் இருக்கும் பாருங்க... வாவ்... அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த சுகம் தெரியும்.

இப்ப எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் சீரிய பணியால் ஊருக்குள் தண்ணீர் தொட்டி கட்டி போர் போட்டு எல்லா வீட்லயும் பைப் போட்டு வச்சிருக்காங்க. காலையிலும் மாலையிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இப்ப மழைக்காலத்தில் கண்மாய் நிரம்பினாலும் சில நாட்களில் பாசம் படர்ந்து பயன்படமால் போய்விடுகிறது. சைக்கிளில் குடம் கட்டும் காலம் எங்களோடு போய்விட்டது.

ஊருக்குப் போகும் போதெல்லாம் நாங்கள் அடித்து அடித்து தண்ணீர் எடுத்த அடிபைப்பில் போய் தண்ணீர் பிடித்து அங்கயே குளிக்க ஆசையாக இருக்கும்.... இருந்து வீட்டுக்கே தண்ணீர் வருவதால் இங்கயே குளிடா என்று அம்மா சொல்லுகிறார்கள். எல்லாம் காலத்தின் மாற்றம்.

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photos from Google

31 எண்ணங்கள்:

middleclassmadhavi சொன்னது…

குடிதண்ணீருக்கு ரொம்ப தூரம் போய் குடத்தில் நீர் எடுத்து வந்த காலம் ஞாபகம் வந்தது! வசதிகள் வந்து தான் விட்டது!

நல்ல பதிவு!

மோ. கணேசன் சொன்னது…

அருமை நண்பா..!

பாட்டு ரசிகன் சொன்னது…

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்...

தண்ணீர் தினம் நிறைய பதிவுகள் வந்துக் கொண்டிருக்கிறது..

சக்தி கல்வி மையம் சொன்னது…

தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவோம்.. பகிர்வுக்கு நன்றி..

நேரமிருந்தால் ..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html

சென்னை பித்தன் சொன்னது…

மண்ணின் மணம் கமழ்கிறது!

தமிழ்க்காதலன் சொன்னது…

பழைய நினைவுகளில் ஊறிப்போக செய்த நட்பே, நம்முடைய கிராமங்களின் நிலையை சரியாக சொல்லி உள்ளாய். இன்னும் இது போல நிறைய கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நம் மக்களுக்கு இன்னும் பொதுநல விசயங்களில் போதுமான அக்கரையும் அறிவும் வரவில்லை என்பது வருந்தத் தக்கது.

ரேவா சொன்னது…

கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்டு இருக்கும். சும்மா சில்லுன்னு இருக்கிற தண்ணிய செம்பு நிறைய மோந்து அப்படியே மடமடன்னு குடிக்கும் போது வயிறும் மனசும் சில்லுன்னு இருக்கும் பாருங்க... அப்பா அந்த சந்தோஷத்துல கடுகளவுகூட இப்ப குடிக்கிற பிரிட்ஜ் தண்ணியில இல்லை.,,,


நீங்கள் சொல்லிய விதமே நாங்களும் உங்களோடு கிராமத்துக்குள் சென்று மண்பாண்டத் தண்ணீர் பருகிய மாதிரி ஓர் உணர்வைத் தந்தது ...நகரத்தில் ஊறிப் போன எங்களுக்கு கிராமத்து நினைவுகள்: பசுமையாய்....வாழ்த்துக்கள் நண்பரே

Menaga Sathia சொன்னது…

நல்ல பதிவு!!பழைய நினைவுகள் ஞாபகம் வந்துவிட்டது...

பெயரில்லா சொன்னது…

இயல்பான நடையில் நினைவுகள். என் பால்யத்தின் நாட்களிலும் தண்ணீருக்காய் அலைந்து இருக்கிறேன். சிறப்பாக சொல்லியிருக்கீங்க..

Asiya Omar சொன்னது…

அருமையான பகிர்வு தம்பி,நானும் குடம் தூக்கி நல்ல தண்ணீர் எடுத்திருக்கிறேன்..எத்தனை நடை நடந்தாலும் அயர்ச்சியோ அலுப்போ தெரியாது,ம்ம்ம்..அந்தக்காலம் நினைத்தாலும் திரும்ப வராது..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சுகமான நினைவுகள் நண்பா..

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல பதிவு..ஊர் நியாபகத்தை நினைவுப்படுத்தியது..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

எனது தண்ணீர்தின சிறப்பு இடுகையைப் பார்த்தீர்களா நண்பா

Vidhya Chandrasekaran சொன்னது…

நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் குமார்.

மனச்சோர்வு - இசையில் நேரம் செலவழியுங்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மலரும் நினைவுகள் அருமை.

தண்ணீர் மிகப்பெரிய சொத்து. நாம்தான் அதை வீணாக்குகிறோம்.

thamizhparavai சொன்னது…

சுகமான பகிர்வுகள் பரிவை சே.குமார்...(இதான் எனக்குப் பிடிச்சிருக்கு :) )

ஹேமா சொன்னது…

தண்ணீர் தினத்தில் அருமையான நினைவுகள்.இயற்கையழிவால் எதிர்காலத்தில் தண்ணீருக்கும் பஞ்சம் வந்தாலும் வரலாம் என்று சொல்கிறார்களே !

நிலாமதி சொன்னது…

நாங்களும் சில் வருடங்களில் தண்ணீருக்கு பட்ட பாடு .......

....எந்த பிரிஜ் வாட்டரும் குடத்துள் ஜில்லுன்னுவரும் நீருக்கு ஈடாகாது ....

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு. அப்பா கிராமத்திலை சித்தப்பா வீட்ல இருந்து அத்தை வீட்டுக்கு குடம் சுமந்த நினைவு வருது.

Riyas சொன்னது…

//இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தையும் மனச்சோர்வு தின்று விடுகிறது //

எல்லோருக்கும் இதே நிலைதான்..

நல்ல பதிவு..

வேலன். சொன்னது…

மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சில்லிப்பாகவும் உள்ளே இளஞ்சூடாகவும் இருக்கும் பாருங்க... வாவ்... அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த சுகம் தெரியும்//

ஆம் ...நானும் அதை அனுபவித்திருக்கின்றேன்..ஆனால் கண்மாய்க்குள் இல்லை-கிணற்றில்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தண்ணீர் பற்றி மலரும் நினைவுகள்.
தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை வலியுறுத்திய பதிவுக்குப் பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாதவியக்கா...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கணேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பாட்டு ரசிகன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கருண்...
கண்டிப்பாக வருகிறேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பித்தன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முனைவரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மலிக்காக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முனைவரே...
உங்கள் இடுகைகள் எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுவும் பார்த்தாச்சு...

வாங்க வித்யாக்கா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ரியாஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நீங்க சொன்ன அத்தனையையும் நானும் அனுபவித்திருக்கிறேன் நண்பா :-)
ரசித்த பதிவு