மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 மார்ச், 2011அடைகாத்த நினைவுகடந்த இரண்டு வருடமாக திருவிழாவுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன். அதிகமாக ஊருக்கு செல்வதையும் குறைத்துக் கொண்டேன். தட்ட முடியாத நல்லது கெட்டது என்றால் மட்டும் செல்வதுண்டு, அதுவும் அவசரப்பயணம் மட்டுமே. சில நாட்களாகவே போனில் பேசும் போதெல்லாம் அம்மா, நீ வராமா ரெண்டு வருச திருவிழா நல்லாவேயில்லை ரகு. நீ இந்த வருசம் கண்டிப்பா வந்திட்டுப் போப்பா.. என அனத்த ஆரம்பித்திருந்தார்கள். போதாக்குறைக்கு அப்பா, 'ஏன்டா வர மாட்டேங்கிறே..?' என்று கேள்வி வேறு கேட்க ஆரம்பித்து விட்டார்.

சரி அவர்களுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள். அக்காவும் கல்யாணமாகி திருப்பூரில் கணவனுடன் இருக்கா. இந்த முறை அவளும் வர்றேன்னு சொன்னதா அம்மா சொன்னார்கள். சரி போன எல்லாரையும் பார்த்துட்டு வந்துடலாமுன்னு திருவிழாவுக்குப் போக முடிவு செய்தேன். ஆனால கிளம்பும் வரை போவோமா... வேண்டாமான்னு மனசுக்குள்ள ஒரே போராட்டம். சரி பொயிட்டு உடனே திரும்பிடலாம் என்ற எண்ணத்துடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

திருவிழா என்றால் முதல் ஆளாக போகும் நான் இரண்டு வருடமாக திருவிழாவை ஒதுக்கக் காரணம்... ஒரு பெண்... அவள் என் ஜாஸ்மின்.

"தம்பி... தம்பி..."

கண்களுக்குள் ஜாஸ்மினை வைத்திருந்த நான் சற்று விழித்துப் பாத்தேன். கையில் மஞ்சள் பையுடன் ஒரு பெரியவர் நின்னார்.

"என்ன வேணும்?"

"இல்ல தம்பி... கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளி உக்காந்தீங்கன்னா அங்கிட்டு உக்காந்துப்பேன். ஜன்னல் ஓரத்துல உக்காந்தா மொகத்துல காத்தடிக்கிறதால கொடலப் பொறட்டிக்கிட்டு வராது. இல்லன்னா பொறட்டிக்கும்... வாந்தி வர்ற மாதிரி இருக்கும்.. அதான்..."

"அதுக்காக... வேற எடமில்லையா..?" கோபமாய் கேட்டேன்.

"இல்ல தம்பி... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க... தம்பி.." பாவமாய் கேட்டார்.

"சரி... சரி உக்காருங்க..." என்றபடி தள்ளி அமர்ந்து மீண்டும் கண்களை மூட, கண்ணுக்குள் சிரித்தாள் ஜாஸ்மின்.

"ஏய் ஜாஸ்...ஜாஸ்..."

"என்ன..."

"நில்லேன்... நானும் வாரேன்..."

"வேண்டாம்பா... எங்க வீட்ல யாராவது பாத்தா கொன்னுபுடுவாங்க..."

"யாரும் பாக்க மாட்டாங்க ஜாஸ்... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"என்ன சொல்லு..?"

"அது... அது... உனக்கு எப்ப பரிட்சை ஸ்டார்ட் ஆகுது..?"

"இதை கேட்கத்தான் என்னைய நிக்கச் சொன்னியாக்கும்?"

"இல்ல... அது வந்து..." குழறலாய் அன்று விதைத்தது தொடர்ந்த நாட்களில் பேசாத இரவுகள் தூங்காத இரவுகளாகின. எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக காதல் பயிர் வளர ஆரம்பித்தது. நான் எம்.காம் முடிக்கும் போது அவள் எம்.எஸ்.ஸி படித்துக் கொண்டிருந்தாள். ஊருக்கு வெளிய இருந்த எங்கள் காதல் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் காலை எனது செல்போன் அழைக்க..

"என்ன ஜாஸ்... என்ன விசயம்..?"

"நீ சென்னைக்கு போறியா..?"

"ஆமா... ஒரு வேலை இருக்குன்னு பிரண்ட் சொன்னான்... போய் பாத்துட்டு வரலாமுன்னு பாக்கிறேன்... வந்துடுவேன்டா..."

"ப்ளீஸ்... நீ போறதுக்கு முன்னால உங்க வீட்ல நம்ம காதலைப் பத்தி சொல்லி உங்கப்பாவை எங்கப்பாகிட்ட பேசச் சொல்லேன்..."

"அதுக்கு இப்போ என்ன அவசரம்... நான் ஒரு வாரத்திலயோ... இல்ல... ஒரு மாசத்திலயோ திரும்பி வந்திடுவேன்...ஒரு வேலையோட வந்து பேசினாத்தான்டா கெத்தா இருக்கும்."

"கெத்தெல்லாம் பாக்க வேண்டாம்பா... எங்க சின்ன மாமாவுக்கு என்னை கட்டி வச்சிடலாமுன்னு வீட்ல பிளான் போட்டுக்கிட்டு இருக்காங்க... "

"இங்க பாரு... நீ படிக்கணுமின்னு சொல்லி வை.. படிப்பு முடிஞ்சதும் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்க... அதுக்குள்ள நான் வேலையோட வந்திடுவேன்... சரியா... இப்ப நம்ம குடும்பத்துக்குள்ள பூகம்பத்தை கிளப்ப வேண்டாம்."

"ஐய்யோ... புரிஞ்சுக்க... அவருக்கு வயசு ஏறிக்கிட்டே போகுதாம். அதனால பாட்டியும் அம்மாவும் இந்த முடிவை எடுத்து இருக்காங்க. கல்யாணத்தைப் பண்ணிட்டு தொடர்ந்து படிக்கட்டுமின்னு சொல்றாங்க. அதனாலதான் வீட்ல பேசச் சொல்றேன்... இல்ல சரியா வராதுன்னா சொல்லு எங்கயாவது நாம போயிடலாம்."

"என்ன ஜாஸ் பேசுறே... கொஞ்ச நாள் பொறு பேசுவோம்...ஓடிப்போயி என்ன பண்றது சொல்லு இன்னும் நிலையான வேலையில்லை... தெருவில நிக்கிறதா... நான் பேசுறேன்... நீ பயப்படாதே..."

"என்னடா... தனியா வந்து நின்னு என்ன பேசுறே..." என்றபடி அப்பா அருகில் வர...

"இல்லப்பா... பிரண்ட் ஒருத்தனுக்கு ஒரு பிரச்சினை... அதான்... ஒண்ணும் ஆகாது... பயப்படாதேன்னு சொன்னேன்..." மிடறு விழுங்கினேன்.

"அப்படி என்னப்பா தலை போற பிரச்சினை...?"

"இல்லப்பா...அவன் படிக்கும் போது வேறு சாதிப் பெண்ணை... லவ் பண்ணினான்... இப்ப ரெண்டு பேரும் வீட்ல சொன்னப்போ பிரச்சினையாயிடுச்சு... அந்தப் பொண்ணு வீட்ல அதுக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பாக்கிறாங்க... அதான்..."

"கஷ்டப்பட்டு காடு கழனிய வித்து படிக்கவச்சா லவ் பண்றாங்களாம் லவ்வு... இதுக வெளங்கவா... இதுக்கு நீங்க ஆதரவு... ஆமா வீட்ல ஒத்துக்கலைன்னா ஓடிப்போற முடிவ எடுத்திருக்க்காங்களா..?"

"அப்படியெல்லாம் இல்லப்பா..."

"இல்ல அப்படியும் தோணும்... அப்பன் காசுல படிச்சாச்சி... அப்புறம் என்ன விருப்பப்பட்டவளை கட்டிக்கிட்டு எங்கிட்டாவது போக வேண்டியதுதானே... பெத்தவங்க எப்படி போனா என்ன... சரி காலங்காத்தால உனக்கெதுக்கு இந்த வேலை... போயி ஊருக்கு போறதுக்கு ஆக வேண்டியதைப் பாரு... அப்புறம்பா... எங்கூட வேல பாத்தான்னு எவளையாவது எனக்கு மருமகளா இழுத்துக்கிட்டு வந்திடாதே... ஆமா..."

"சேச்சே...அப்படியெல்லாம் இல்லப்பா..."

ஜாஸ்மினை தனியாக சந்தித்து சூழலை எடுத்துக்கூறி சீக்கிரம் நல்ல வேலையோட வந்து நம்ம விசயமா பேசுறேன்னு ஆறுதல் கூறி வந்தது முதல் தினமும் ஜாஸ்மினுடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் ரகு எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க... என்னால முடியாது... ப்ளீஸ் வந்து கூட்டிப் போயிடு என்று அழுதாள். ஊருக்கு போயி அவளை கூட்டி வந்து விடலாம் என்று நினைத்து நண்பனிடம் பேசினேன்.

"வேண்டான்டா... கல்யாணம் நிச்சயமான பொண்ணை கூட்டிக்கிட்டு வந்துட்டியன்னா... அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரோட பெற்றோர் நிலமையை நினைச்சுப்பாரு... அவ சொன்ன அன்னைக்கே பேசியிருந்தியன்னா என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிருக்கும்... அப்ப நீ கோழையா இருந்துட்டே... ஒன்னய பேசச் சொன்ன அவளும் கோழையா இருந்திருக்கா... இனி இதுல தேவையில்லாத முடிவு எதுக்கு... நீங்க ரெண்டு பேரும் சேரணுமின்னு விதியில்ல... விட்டுட்டு வேலைய பாரு...." என்று சொல்ல...

"நா இல்லன்னா அவ செத்துருவாடா..."

"அட... ரெண்டு நாள் அழுவா... அப்புறம் நமக்கு விதிச்சது இதுதான்னு மனசை தேத்திப்பா... படிச்ச பொண்ணு தற்கொலைக்கெல்லாம் போகமாட்டா... அவகிட்ட பேசி நிலமையை சொல்லி புரிய வை."

ஜாஸ்மினுக்கு போன் பண்ணிய போது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்... நீண்ட நேர அமைதிக்குப் பின் உடம்ப பாத்துக்க என்று சொல்லி வைத்தாள். அதன்பின் இருவருக்குமான தொடர்பு நின்று இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

நினைவின் முடிவில் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

"என்ன தம்பி... உடம்பு சுகமில்லையா?" ஆறுதலாய் கேட்டார் பெரியவர்.

"இல்லங்க..."

"அப்ப ஊர்ல பெரியவங்களுக்கு எதுவுமா?"

"அப்படியெல்லாம் இல்லங்க..."

"என்ன பழகுன புள்ளைக்கு கல்யாணமா?" வெடுக்கென்று கேட்டார்.

என்னிடமிருந்து பதில் இல்லை என்றதும்... "ஓடி ஓடி பழகிட்டு பிரியிறது ரொம்ப கஷ்டம் தம்பி.... பொல்லாத மதமும், சாதியும் இருக்கிறவரைக்கும் இந்த காதல் செத்துக்கிட்டுத்தான் இருக்கும் தம்பி... இதையும் எதுக்கணுமின்னா கை நிறைய பணமிருக்கனும் . ஆனா அது இல்லாததாலே எத்தனையோ காதலர்கள் மனசை தொலச்சிட்டு இன்னும் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்காங்க... இந்த காதலால நான் இழந்தது நிறைய தம்பி... " அவர் கண்கள் கலங்கின.

"ம்... ஒரே பையன்... எல்லாத்தையும் வித்து இன்சீனியருக்கு படிக்க வச்சேன்... அப்பன் நம்மளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறானே... நல்லா படிச்சி இழந்த சொத்த மீட்டு அப்பன் ஆத்தாளை நல்லா வச்சுக்கணுமுன்னு சொன்ன மனசுக்குள்ள கூடப் படிச்ச பொண்ணு குடி வந்திட்டா... ஆனா பொல்லாத மதமும் சாதியும் அவங்களுக்கு எதிராயிடுச்சி... அந்தப் புள்ள பணக்காரப்புள்ள... நாங்க அவங்களைப் பாத்த துண்ட இடுப்புல எடுத்துக் கட்டி நிக்கிற சாதி... எப்படி ஒத்துப்போகும்... அவளுக்கு கல்யாணம் நடந்தப்போ எங்க வீட்ல கருமாதி நடந்துச்சி... ஒத்தப் புள்ளைக்காக நிலம் நீச்சி இழந்து கடைசியா..." கலங்கினார்.

"விடுங்க பெரியவரே... போன உங்க பையன் திரும்ப வரவா போறான்... அழுகாதீங்க..."

"திரும்ப வந்தாலும் அந்த நாயை நானே அடிச்சுக் கொல்லுவேன் தம்பி... இருபத்தைஞ்சு வருசம் சீராட்டி வளத்து படிக்க வச்சா... ரெண்டு மூணு வருஷம் பழகினவளுக்காக செத்துப் போயிடுச்சு அயோக்கிய நாயி... அந்தப் பொண்ணு குழந்தை குட்டிகளோட நல்லாயிருக்கா....என்ன செய்ய... காதல் போச்சின்னு வேற முடிவ எடுத்திடாதீங்க... தாடியும் கீடியுமா பாத்த எம்பையனை பாத்தது மாதிரியே இருக்கு...ம்... சாக ரெண்டு நாளைக்கு முன்னாடி பரதேசி மாதிரி நின்னான்..."

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்ல பெரியவரே... வேலை அதிகம் திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சுகமில்லை... அதான் ஊருக்கு போறேன்..." ஒரு பொய்யை சொல்லி வச்சேன் 'அம்மாகூட சொன்னாள் ஜாஸ்மினுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவள் மறந்து வாழ்கிறாளோ இல்லை மறத்து வாழ்கிறாளோ... கணவன் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டாள். நாம ஏன் இன்னும் அவளை நினைவில் வச்சிக்கிட்டு வாடனும்... பஸ்ஸை விட்டு இறங்கியதும் ஷேவ் பண்ணிக்கிட்டுதான் போகணும்' என்று நினைத்துக் கொண்ட அதே வேளை பெரியவர் மனசுக்குள்..

' அதான் கண்ணை மூடிக்கிட்டு சாசுமினு... சாசுமினுன்னு சொன்னியாக்கும்... எப்பவோ செத்த காதலுக்காக இன்னும் செத்துக்கிட்டிருக்கேன்னு உன்னோட கோலம் காட்டுதே... எனக்காவது மகனாவது...சும்மா போட்டு விட்டேன்... இனி நீ காதலை மறந்துட்டு சந்தோஷமா இருப்பேல்ல' என்று நினைத்திருக்கலாம் என்பதை அவரது புன்னகை சொன்னது.

*************
இன்று இந்த பூமிக்கு வந்த நாள். எப்பவும் போல் இதுவும் கடந்து போகும் நாள்தான்... இருந்தும் காலையில் பள்ளிககுச் செல்லும் முன் எனக்காக காத்திருந்து ஸ்கைப்பில் முதல் வாழ்த்துச் சொன்ன என் மகள், என் மனைவி, இன்னும் சரியாக பேச ஆரம்பிக்காததால் கையை ஆட்டி வாழ்த்திய என் மகன் எல்லாருடைய வாழ்த்துக்களாலும் நிரம்பிய இந்த நாளை, பதிவுகள் எழுதுவதை குறைத்திருந்த போதிலும் இந்த நாளில் எப்போவோ எழுதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

**************
-'பரிவை' சே.குமார்.
Thanks.... Photo From Google.

26 கருத்துகள்:

 1. நிஜமோ,கதையோ,எதுவானாலும் நல்லாருக்கு!

  பதிலளிநீக்கு
 2. 'அம்மாகூட சொன்னாள் ஜாஸ்மினுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவள் மறந்து வாழ்கிறாளோ இல்லை மறத்து வாழ்கிறாளோ... கணவன் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டாள். நாம ஏன் இன்னும் அவளை நினைவில் வச்சிக்கிட்டு வாடனும்... பஸ்ஸை விட்டு இறங்கியதும் ஷேவ் பண்ணிக்கிட்டுதான் போகணும்'


  .....practical ஆக இருக்க சொல்லும் அருமையான கதை. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. வாங்க சென்னை பித்தன் ஐயா...
  இது முழுக்க முழுக்க கற்பனைதான்... நிஜமல்ல...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வாங்க சித்ராக்கா...
  உடனுக்குடன் படித்து பாராட்டும் உங்கள் அன்புக்கு நன்றி.
  //practical ஆக இருக்க .. இது தானேக்கா உண்மை.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குமார்...மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  கதை மனசில பாரமா இறங்கிவிட்டது.
  எத்தனை காதல்கள் இப்படி !

  பதிலளிநீக்கு
 6. கதை அருமை. நல்ல தெளிவான நடை.
  அப்படியே...
  பிறந்த நாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  பதிலளிநீக்கு
 7. குமார்.. சுவாரஸ்யமான எழுத்து. பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமார்..

  பதிலளிநீக்கு
 8. குமார்...மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  சோகமான காதல்கதை.

  பதிலளிநீக்கு
 9. பிறந்த நாள் வாழ்த்துகள் குமார்..கதையும் சூப்பர்..ஆமா, யாரு அந்த ஜாஸ்மின்? இன்னுமா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?(ஏதோ நம்மால் முடிந்த.... பிறந்த நாள் பரிசு!)

  பதிலளிநீக்கு
 10. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமார்.

  கதையும் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. ' அதான் கண்ணை மூடிக்கிட்டு சாசுமினு... சாசுமினுன்னு சொன்னியாக்கும்... எப்பவோ செத்த காதலுக்காக இன்னும் செத்துக்கிட்டிருக்கேன்னு உன்னோட கோலம் காட்டுதே...

  -அருமையான எழுத்து.கவிஞர்களுக்கு எழுதச் சொல்லியா கொடுக்க வேண்டும்.சரியான முடிவு.

  பதிலளிநீக்கு
 12. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.

  பதிலளிநீக்கு
 13. குமார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. சற்றே தாமதமாக என் வாழ்த்துக்களும் குமார்!

  பதிலளிநீக்கு
 15. ஒரு அட்வைசை அட்வைஸ் மாதிரி இல்லாம அழகா கதையா சொல்லிட்டீங்க.
  பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 16. ////பொல்லாத மதமும், சாதியும் இருக்கிறவரைக்கும் இந்த காதல் செத்துக்கிட்டுத்தான் இருக்கும்///
  உண்மையான வரிகள் ....நெகிழ வைத்துவிட்டது ...

  பதிலளிநீக்கு
 17. வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அமைதிச்சாரல்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹேமா...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ராஜ ராஜ ராஜன்...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஜி...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அம்பிகாக்கா...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க செங்கோவி...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  மறக்கக் கூடிய நினைப்பா நண்பா... எங்க வீட்ல நம்மளைப் பத்தி போட்டுக் கொடுக்க நினைத்தால் திரும்ப வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கும்... முடிந்தால் முயலவும்...

  வாங்க சுசிக்கா...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ஆசியாக்கா...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரஷா...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தங்கமணி...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ரவி...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஸஸரிரி...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க உழவன்...
  வாழ்த்துக்கு நன்றி..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கோவை நேரம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...