மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 மார்ச், 2011கட்சிகளும் காட்சிகளும்...
தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி அமைப்பதில் அதிக சிரத்தை காட்டிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் நடத்திய நாடகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தவித்த தி,மு,க, கூட்டணிக்குள் தவறே செய்யாத தங்க கட்சி போல் காங்கிரஸ் கொஞ்சம் முரண்டு பிடித்தது... உடனே நம்ம கலைஞர் 'அ.தி.மு.க எதிரிக் கட்சி, காங்கிரஸ் துரோகிக் கட்சியின்னும் இனி அண்ணா வழியில் காங்கிரஸை எதிர்ப்போம்' என்றும் சினிமா டயலாக் எல்லாம் பேசி, வெளியில் இருந்து ஆதரவு, மந்திரிகள் ராஜினாமா என்று உதார்விட்டுப் பார்த்தார். ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் மசியவில்லை...

'ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்' என்று பாடிக் கொண்டே தொகுதி விசயத்தில் சிங்கும் அன்னையும் அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கவில்லை... யோசித்த கலைஞர் கூட்டிக் கழித்துப் பார்த்து தனக்கும் தன் மக்களுக்கும்(!!!) நன்மை கிடைக்கும் ஒரு முடிவோடு தில்லியில் தனது பரிவாரங்களை வைத்துப் பேசி அவர்கள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

அது குறித்து காங்கிரஸ்காரர்கள் நாயன்மார்கள் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதி உடன் பிறப்புக்களுக்கு விளக்கம் கொடுத்தார். தனது அரசியல் சாதுரியத்தால் காங்கிரஸை வெளியில் விடாமல் பார்த்துக் கொண்டார். காங்கிரஸ் வேண்டாம் என்றோ இவ்வளவுதான் தருவேன் என்று மம்தா போலோ கடைசிவரை கலைஞர் நின்று பிடிக்க முடியவில்லை.

கொடநாட்டில் இருந்து தேர்தலுக்காக அவசரப் பயணமாக சென்னை வந்த ஜெயலலிதா கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டினார். அதன்படி மூன்றாவது சக்தியாக அவதரித்து இருக்கும் விசயகாந்த், சாதிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் என வளைத்து நல்லதொரு கூட்டணி அமைத்தார். சரி குடும்ப அரசியலுக்கு வேட்டு வைக்கும் இந்த தோழி அரசியல்ன்னு நெனக்கும் போதே ஜான்ஸிராணி தன்னிச்சையாக செயல்பட மூன்றாவது அணி அமையும் என்பது போன்ற மாய சுனாமி கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மையம் கொண்டு அப்படியே மறைந்தும் விட்டது. எல்லாரையும் இழுத்து மறுபடிக்கும் தேர் இழுக்க அம்மாவும் ரெடி ஆகியாச்சு.

கடந்த ஏழு வருசமாக அம்மா அணியில் இருந்து அம்மாவுக்காக தனது சிம்மக்குரலில் பேசி வந்த வைகோவை தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்கு கூப்பிடாமல் கேவலப்படுத்தி கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் தொகுதிகளை அள்ளிக் கொடுத்து வைகோவை வைக்கோலாக மதித்த அம்மா, வைகோ தேர்தலை புறக்கணிக்கப் போறேன் என்றதும் ஐய்யா மாதிரி நீலிக் கண்ணீரோடு அன்புச் சகோதரி என்று கடிதம் எழுதுகிறார்.பாவம் வைகோ கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்ணீரோடு இருக்கிறார்.

அம்மாவோடு பிரச்சினை என்றதும் வெளியில் தனித்து இருக்கும் வைகோவை பார்த்துப் பேச கிருஷ்ண சாமிக்கோ கம்யூனிஸ்டுகளுக்கோ எண்ணம் வரவில்லை... எல்லாரும் விசயகாந்த பின்னால்... என்ன கொடுமை இது?
அம்மா உருவப் பொம்மை எரித்த தொண்டர்களை தே.மு.தி.க. எதுவும் சொல்லாத நிலையில் அம்மாவுக்கு எதிராக களம் இறங்கிய ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ கண்டித்த போது எல்லாரும் கேலி பேசினார்கள். ஆனால் அதில் அவரின் நல்ல உள்ளம் தெரிந்தது, தன்னை கேவலப் படுத்தினாலும் ஏழு வருடங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட நன்றிக்கடன் தெரிந்தது. இருந்து தேர்தலைப் புறக்கணிக்கும அவரது முடிவால் ம.தி.மு.க நிறைய இழக்கும் என்பதை அறியாமலா இருப்பார்... இருந்தும் எப்படி இப்படி ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்?

விசயகாந்த் மாபெரும் சக்தியாக உருவெடுத்து வந்தாலும் தேர்தலுக்குப் பின் கிடைக்கும் எம்.எல்.ஏக்களுடன் அம்மாவை விட்டு வெளியில் வந்தால் நல்லது இல்லையேல் இன்றைய வைகோவாய் நாளை விசயகாந்தும் மாறலாம்... ஏன்னா அம்மா எப்பவும் இறங்கி வருவதில்லை.

மூன்றாவது அணி அமையும் என்ற நிலை வந்த போது மனசுக்குள் மகிழந்த கலைஞர் வெளியில் அடுத்த கட்சிப் பிரச்சினைகளைப் பார்த்து சந்தோஷப்படுவன் நானல்ல என்றார். ஆனால் மருத்துவர் அய்யாவும், திருமாவும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள். எப்படியும் நாம ஜெயிக்கலாம் என்ற நப்பாசையில் பூரித்துத் சிரித்தார்கள். ராமதாசை நம்பி ஏமாந்த மக்கள் இன்னமும் அவர் பேச்சைக் கேட்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. திருமாவைப் பொறுத்தவரை தன் மக்களுக்காக உழைக்கும் தலைவராகத்தான் இன்னும் இருக்கிறார்...

மக்களைப் பொறுத்தவரை இலவசங்களுக்கு அடிமையாகி சில காலமாகிவிட்டது. பதவி வெறி பிடித்த தலைவர் கதாநாயகி என்று வர்ணித்து கிரைண்டர், மிக்ஸி என இலவசங்களை அடுக்குகிறார். நாம் இலவசங்களுக்கு மயங்கி அவர் சம்பாதிக்க வழி வகை செய்வோம் என்று அதீத நம்பிக்கை.

இலவசங்களை மட்டுமே நம்பும் அரசு தனது சாதனைகளை சொல்ல முடியுமா..? வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம் என்றோ... ஏழைகள் இல்லாத தமிழகமாக மாற்றினோம் என்றோ... சொல்ல முடியுமா? எப்படி சொல்வார்கள் பரம ஏழைகளுக்கு அரிசி இலவசம் என்றதும் எல்லாரும் பரம ஏழைகளாகி விடுகிறோம்... ஏழைகள் நிறைந்த தமிழகமாக மாறி வரும் போது எப்படி ஏழைகளே இல்லை என்று சொல்ல முடியும்?.

ஹிந்தி வேண்டாம் என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் அவர்கள் குழந்தைகளை மட்டும் படிக்க வைத்தவர்கள்தான் அவர்கள்... தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லி லண்டனில் பேரன் பேத்திகளை படிக்க வைத்தவர்கள் அவர்கள். இலவசங்களால் நம்மை எழும்ப விடாமல் அமுக்கி வைப்பவர்கள்தான் அவர்கள்... தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளும் காட்சிகளும் மட்டுமே மாறுகின்றன. மாறாமல் மடிந்து கொண்டிருப்பது தமிழன் என்ற இனம் மட்டுமே.

இந்த முறை இலவசங்களுக்காக நமது தன்மானத்தை இழக்காமல் இயன்றவரை நல்லவர்களுக்கு வாக்களிப்போம். இனியாவது இலவசங்களின் பிடியில் இருந்து இறங்கி சுயமாக சிந்திக்க ஆரம்பிப்போம்.

வைகோ போல் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் நாம்... எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியின்னு பார்த்து வாக்களிப்போம்... இதுவரை தொகுதிக்குள் வராத எம்.எல்.ஏ.வுக்கு இந்த முறை வாக்களிக்க முடியாது என்று சொல்லுவோம். இயன்றவரை நல்லவன் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.

-'பரிவை' சே.குமார்.
 
Thanks : Phots from Google

11 கருத்துகள்:

 1. இயன்றவரை நல்லவன் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.


  good kumar

  கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.

  பதிலளிநீக்கு
 2. வாங்க சரவணன்...
  உண்மைதானே... நல்லவன் எவனோ அவனுக்கே வாக்களிப்போம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. யோசித்த கலைஞர் கூட்டிக் கழித்துப் பார்த்து தனக்கும் தன் மக்களுக்கும்(!!!)  (!!!!!!!!!!!!!!!!!!)

  பதிலளிநீக்கு
 4. ரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியின்னு பார்த்து வாக்களிப்போம்...

  பதிலளிநீக்கு
 5. இயன்றவரை நல்லவன் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.

  பதிலளிநீக்கு
 6. சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட சரியான சிந்திக்கவைக்கும் கட்டுரை நண்பா..

  பதிலளிநீக்கு
 7. //இயன்றவரை நல்லவன் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.//

  சரியா சொன்னீங்க குமார்.

  பதிலளிநீக்கு
 8. என்னவோ போங்க..யார் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போறாங்க,நாமளும் ஏமாறத்தான் போறோம்...

  பதிலளிநீக்கு
 9. நல்ல கருத்தினை சொல்லி இருக்கிறாய் நண்பா. ஆனால் கேட்பது யார் என்பதுதான் கேள்வி..? ஆனாலும் நாம் ஊதும் சங்கை ஊதுவோம். மக்கள் திருந்தினால்... திருப்பம். இல்லையேல் வருந்தி வாழட்டும்.

  பதிலளிநீக்கு
 10. டும்டும்...டும்டும்...
  தொகுதிக்கு விசிட அடிக்காதவர்களுக்கு ஓட்டு இல்லையென்றால் எந்த எம்.எல்.ஏ வும் எக்காலத்திலும் ஒரு முறைக்கு மேல் ஜெயிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...