மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 பிப்ரவரி, 2011

இதயச்சாரல்


ரமேசுக்கு டவுன்ல இருந்து இருட்டுல வர்றப்போ மனசுக்குள்ள ஒரு பயம் வந்து திக்...திக்குன்னு தொத்திக்கும். காலேசுப் படிக்கிற பயலா இருந்தாலும் இந்த பயம் மட்டும் அவனுக்குள்ள நல்லா சம்மணம் போட்டு உக்காந்துக்கிச்சு. இங்கிலீஸ் எழுதி எழுதி அரியராத்தான் போகுது... ஒரு முப்பத்தஞ்சு மார்க் போட மாட்டேங்கிறாங்க. இது கடைசி வருசம் வேற... அரியர் வச்சா அம்புட்டுத்தான் வேதாசலத்துக்கு பயங்கரமா கோவம் வந்துருங்கிறதுக்காகவே சின்னசாமி சாருக்கிட்ட டியூசன் படிக்கிறான். இந்த பயத்தை அவருகிட்ட சொல்ல முடியாம காலையில வர்றேன்னு சொன்னதுக்கு, காலையில பொம்பளப்புள்ளங்களுக்கு மட்டுந்தான் எடுப்பேன்னுட்டாரு. என்ன செய்ய... இரவுல வேர்க்க விறுவிறுக்க பயத்தோட எப்படியோ வீடு வந்து சேர்ந்துடுவான்.

இந்தப் பயம் சின்ன வயசுல இருந்து இருந்தாலும் பத்தாப்பு படிக்கும் போது சாயந்தரம் டியூசனுக்குப் பொயிட்டு ஆறு...ஆறரை மணிக்கு வர ஆரம்பிச்சு... அப்புறம் ஏழு...ஏழரைன்னு ஆனப்போ இருட்டுல வாரதுனாலே கருக்குன்னு இருக்க ஆரம்பிச்சிருச்சு... அது இன்னும் தொடருது... அவனும் இருட்டுல வர்றதை நிப்பாட்ட முடியலை... பயமும் அவனை விட்டுப் போகலை... அதுவும் சைக்கிள்ல வரும்போது கமல் பாட்டோ... ரஜினி பாட்டோ... பாடிக்கிட்டே வருவான். கரெக்டா சுடுகாட்டுக்கு நேரா வரும் போது அவனையறியாம 'காக்க காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க நொடியில் நோக்க...' அப்படின்னு கந்த சஷ்டி கவசம் சத்தமா வந்துரும். அதுக்கு அப்புறம் ரோட்டை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாக்க மாட்டான்.

டவுனுல பெட்டிக்கடை வச்சிருக்கிற வேதாச்சலம்... அவனோட அப்பாவை அவன் எப்பவும் மரியாதையா வேதாசலமுன்னுதான் சொல்லுவான். எல்லாம் காலேசு படிக்கிற ரவுசு... ஒருத்தனுக்கு ஒருத்தன் என்னடா அருள்சாமி என்ன சொல்றான்... வேதாசலம் ரொம்ப லொள்ளு பண்றான்னுதான் பேசுவாங்க. எப்பவும் ராத்திரி பத்து பதினோரு மணிக்குத்தான் வருவாரு. அதுவும் லொடலொடன்னு சத்தம் போட்டுக்கிட்டு முப்பதுக்கு மேல போனா மூச்சு வாங்குற டிவிஎஸ்ல... காலையில எப்படி பாக்கிறானே அப்படியேதான் வருவாரு... முகத்துல கொஞ்சங்கூட பயக்கலையே இருக்காது. எப்பவும் இப்படித்தான்... எங்கயும் எந்த நேரத்துலயும் போவாரு. அவருக்கு பிள்ளையா பொறந்து நாம இப்படியிருக்கோமேன்னு நெனச்சுக்குவான்.

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ யாராவது வீட்டுத் திண்ணையில உக்காந்து பேய்க்கதை பேசினா போதும். அப்படியே எந்திருச்சு வீட்டுக்குள்ள போய் படுத்துப்பான். அன்னைக்கு ராத்திரி மூத்தரம் வந்தாலும் எந்திரிக்க மாட்டான். மத்த நாள்ல இருட்டுக்குள்ள கண்ணை மூடிக்கிட்டே வந்து வாசலை விட்டு இறங்கியும் இறங்காமயும் இருந்துட்டுப் போயிடுவான். இப்ப பரவாயில்லை... ராத்திரி எந்திரிக்கிறதில்லை... அப்படியே எந்திரிச்சாலும் வேப்ப மரத்துப் பக்கம் 'காக்க காக்க கனகவேல்...' துணையோட பொயிட்டு வருவான்.

இப்படித்தான் ஒருதடவை அவனோட அக்கா வேணி, மாடு தேடிப் போறேன்னு பொயிட்டு வந்துட்டு ராத்திரியில கத்தி ஊரைக் கூட்டிருச்சி... அடுத்த நாள் பாத்தா நல்லா வேலை பாத்துக்கிட்டு இருக்கும்போதே எங்கயோ பாத்துக்கிட்டு நிக்கும்... நாக்கை கடிக்கும்... மேல பாக்கும்... சிரிக்கும்... கீழ பாக்கும் 'டேய்' அப்படின்னு கத்தும்... அப்புறம் அப்படியே நிக்கும்.

அம்மா இது பேய்க் கோளாறுதான்னு எம் புள்ளைய காப்பத்துடி கொல்லங்குடி காளின்னு ஒண்ணேகால் ரூபா முடிஞ்சு போட்டாங்க... அப்புறம் சாமி ஆடி சித்தப்பாகிட்ட கூட்டிப் போனாங்க... அவரு வேணியப் பாத்தோடனே ஆட ஆரம்பிச்சிட்டாரு... யாருகிட்ட... போறியா... இல்லையான்னு... ஆக்ரோஷமா ஆட... வேணியும் ஆட ஆரம்பிச்சிட்டா.... வாடா பாப்போம்ன்னு குதிக்கிறா... அப்புறம் சித்தப்பா அக்கா தலையில நச்சினு அடிக்க... மயங்கி விழுந்துட்டா... அப்புறம் நார்மலா இருந்தா... இருந்தாலும் ரொம்ப நாளைக்கு ரமேசுக்கு அக்காகிட்ட பேசவே பயம்.

இதே மாதிரி ராமசாமிய ஒரு தடவ பேய் பிடிச்சிக்கிச்சு... அவனை விட்டு போக மாட்டேன்னு அலும்பு பண்ணுச்சி... அது யாரோ நாண்டுக்கிட்டு செத்ததாம். இருந்தாப்புல இருப்பான்... திடீர்னு கழுத்தைப் புடிச்சு இழுக்குற மாதிரி செஞ்சுக்கிட்டு ஒரு மாதிரி மூச்சை விடுவான். அவங்களும் எங்க எங்கயோவெல்லாம் பாத்தாங்க... ஒண்ணும் சரியாகுற மாதிரி தெரியலை... அப்புறம் கேரளாவுல இருந்து வந்திருந்த ஒரு மந்திரவாதிய வச்சி எதோ பூசையெல்லாம் செஞ்சி ராத்திரி பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குப் போயி பூசை வச்சாங்க... கண்ணன், முத்துல்லாம் போனாங்க... ஆனா ரமேசு அந்தப் பக்கமே போகல.

மறுநா முத்துப்பய வந்து சுடுகாட்டுல ராமசாமிய பொணம் எரிச்ச எடத்துல படுக்க வச்சு பூஜை பண்றப்போ எங்களை எல்லாம் ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள நிக்க வச்சாங்கன்னு சொன்னப்போ ரமேசுக்கு இருதயம் இடமாறிடுச்சு. அப்புறம் ராமசாமிக்கு சரியாயிடுச்சு. எல்லாரும் அவங்கூட பேசினாலும் ரமேசுக்கு மட்டும் ஏனோ மனசுக்குள்ள பயம்.

இரும்பு இருந்தா பேய் பக்கத்துல வராதுன்னு பாட்டி கதை சொல்றப்போ சொல்லியிருக்கு. அதான் சைக்கிள்ல வர்றப்போ கொஞ்சம் தைரியம். பேய்க்கு என்ன தெரியும் இரும்பு... கரும்புன்னு மனசுக்குள்ள பயத்தோட நெனச்சு சிரிச்சுக்குவான். எத்தனை பேரு வண்டியியல போறாப்போ பேய் பிடிச்சிருக்கு. அப்ப எங்க போச்சு பாட்டியோட இரும்புச்சாமி... பயம் மனசுக்குள்ள இருந்தாலும் இதுபோல குதர்க்கமா யோசிக்கிறதுல ரமேசு கில்லாடி.

ஒரு தடவை அப்படித்தான் ரமேசு ஒரு ஏழு மணிக்கு சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்தான்... அப்ப அவனுக்கு முன்னாடி வெள்ளையா ஒரு உருவம் நல்ல உயரமா வேகவேகமா நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு... அம்புட்டுத்தான் பயலுக்கு நாக்கு வறண்டு... உடம்பெல்லாம் வேர்க்க... இருதயம் படபடன்னு அடிச்சிக்கிச்சி... காக்க காக்க சொல்லிக்கிட்டு... கண்ண மூடிக்கிட்டு... சைக்கிளை மிதிக்க... ரோட்ட விட்டு இறங்கி மடேர்ன்னு விழுந்தான். முன்னால போனவரு 'அடியாத்தி... யாரு இந்த இருட்டுல விழுந்ததுன்னு ஓடியாந்து தூக்குறப்போதான் பார்த்தான். அது பாண்டி மாமா... அன்னைக்கு கால்ல பட்ட சிராப்பு இன்னும் தழும்பாவே இருக்கு.

ஆம்பளைப்புள்ள படப்படக்கூடாதுப்பான்னு அம்மா எவ்வளவோ சொல்லியும் அவனுக்குள்ள இருக்க பயம் பட்டும் போகவேயில்லை. அவங்க சித்தி பொண்ணு சித்ரா பத்தாப்பு படிக்கிறா... ராத்திரி டியூசன் படிச்சிட்டு எட்டு மணிக்குத்தான் வருவா... எந்தப் பயமும் இல்லாம... ரமேசுக்கே ஆச்சரியமா இருக்கும். அதுக்காக அவகிட்ட போயா கேக்கமுடியும்.

இவன் பயப்படுறது சின்னப்புள்ளயில அவன ஒத்த பசங்களுக்கு தெரியும். அதனால அவனுக்கு பயந்தாங்கோழின்னு பட்டமே இருந்துச்சு... அதுக்காக மத்தவங்களுக்கு இல்லாம இல்ல...கண்ணனுக்கு கருப்பட்டி, ராமசாமிக்கு லெப்ட்... முத்துக்கு தொத்தன்னு... இப்ப அதெல்லாம் மறைஞ்சு போச்சு... இவன் இன்னும் பயப்படுறான்னு அம்மாவுக்கு மட்டும்தான் இப்ப தெரியும். பிரண்ட்டெல்லாம் ராத்திரியில வர்றதால பயத்தையெல்லாம் மறந்துட்டான்னு நெனச்சுக்கிட்டாங்க...

போன வாரம் வைதேகி மருந்தைக் குடிச்சிட்டா... அவளோட அப்பா எதுக்கோ திட்டினாருன்னு சொல்லிட்டு வீட்ல இருந்த பால்டாலை எடுத்து குடிச்சிட்டு செத்துப் பொயிட்டா... ஊருக்குள்ள எவனாவது போயி போலீஸ்ல சொல்லிப்புட்டா கேசு அது இதுன்னு அலையணுமின்னு எல்லாருமா சேந்து அவசர அவசரமா அவளை எரிச்சிட்டு வந்திட்டாங்க. அவ இப்படி கோழைத்தனமா செத்ததுல மகேசுக்கு ரொம்ப வருத்தம்.

யாராவது வயசானவங்க செத்தா ரோட்டுல கொள்ளிக்கட்டையும் வெத்தலை, பாக்கு, போயிலையோட ஒரு சின்ன மண் சட்டியில தண்ணியும் வைப்பாங்க. அப்படி வச்சா அதை மட்டும் பாக்கவே மாட்டான். ஆனா இந்த முத்துப்பய எட்டி காலால உதைப்பான்... கேட்டா... ஆமா கெழடு எந்திரிக்க முடியாம கெடந்து செத்துச்சு... அதுதான் வந்து பிடிக்கிதாக்கும்... போடா இவனேன்னு சொல்லுவான். ஆனா வைதேகி சின்ன வயசுல செத்ததால இது மாதிரி எந்த சடங்கும் இல்லை. சின்னப்புள்ள... மனசுக்குள்ள என்னென்ன நெனச்சிருந்துச்சோ... பேயா அலையப் போகுதுன்னு அம்மா யாருகிட்டயோ சொன்னதை கேட்டப்போ ரமேசுக்கு வயித்துல புளியக் கரைக்க ஆரம்பிச்சிருச்சு.

அதுனால ஒரு வாரமா டியூசன் போகலை... இன்னைக்கு சின்னசாமி சாரு பாத்து இப்புடி படிச்சியன்னா பாஸாக முடியாது... இன்னைக்கு டியூசனுக்கு வரலைன்னா... இனி என்னைக்குமே வராதேன்னு கோவமா சொல்லிட்டாரு.. அதனால பயத்தோட அவருக்குப் பயந்து டியூசன் பொயிட்டு வந்தான்... நெஞ்சு திக்குத்திக்கின்னு அடிக்க... மனசுக்குள்ள வைதேகி நெனப்பு மட்டுந்தான் வருது... வேற எதுவுமே வரலை...

காக்காத்தோப்புக்கிட்ட வரும்போது என்னைக்கும் கழடாத சைக்கிள் செயின் கழண்டுக்கிச்சு... அவனுக்கு நாக்கெல்லாம் வறண்டு வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிருச்சு... உக்காந்து செயினை மாட்டப் பயம் தள்ளிக்கிட்டே ஓடியாந்திட்டான். காக்காத்தோப்புங்கிறது ரொம்பத்தூரம் இல்ல... ஊருக்குள்ள இருக்க மொதவீட்ல இருந்து ஒரு அரைக்கிலோ மீட்டர் இருக்கும். அம்புட்டுத்தான்.

வேர்த்துப் போயி வந்த மகனைப் பார்த்து என்னப்பா... ஆத்தி.. இப்புடி வேர்த்து வந்திருக்கே... எதையும் பாத்து பயந்துட்டியான்னு அம்மாக்காரி பதற, இல்லம்மா... சைக்கிள் செயின் கழண்டு போச்சு அதான் தள்ளிக்கிட்டு வந்தேன்... என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான். இரவு படுத்தவன் ஏதேதோ பொலம்ப ஆரம்பிச்சிட்டான்.

காலையில வீட்டுக்கு வந்த சாமியாடி சித்தப்பாக்கிட்ட அம்மா, என்னன்னு தெரியலை.... ராத்திரி வேர்த்துப் போயி வந்தான்... ராவெல்லாம் தூங்கலை... முணங்கிக்கிட்டே கிடந்தான்... அவகிவ பிடிச்சிருப்பாளோன்னு பயமா இருக்கு... கொஞ்சம் என்னான்னு பாருங்கன்னு சொன்னவுடனே... சித்தப்பா இடுப்புல இருந்த விபூதிப் பையில இருந்து துணூறை எடுத்து கண்ணை மூடி வாய்க்குள் மொனங்கி எங்கே வந்தே... போ... என்று தலையில் அடித்து நெற்றில் பூசிவிட்டுட்டு அம்மாகிட்ட அத்தாச்சி நீ நினைச்சது சரிதான்... வைதேகிதான் பிடிச்சிருக்கா.... விரட்டிட்டேன். கோளாறு தெரிஞ்சா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வான்னு சொல்லிட்டுப் போனாரு.

ரமேசுக்கு அந்த நேரத்திலும் பயத்தைவிட சிரிப்புதான் வந்தது... உசுரோட இருக்கப்போ எத்தனை தடவ லவ் பண்றதா சொல்லியிருப்பேன்... அப்பல்லாம் பிடிக்கலே... பிடிக்கலேன்னு சொன்னா... இப்ப வந்து பிடிச்சிருக்கா... சரி... இப்பவாவது என்னய பிடிச்சிச்சே... என்னைய விட்டு வெரட்டுனா வேற யாருகிட்டயாவது போவா... அட அவ பாட்டுக்கு இருக்கட்டும்... நமக்கும் ஒரு தொனையான்னு நெனச்சு சிரிச்சிக்கிட்டான்... ஆனா அவனையறியாமல் மனசுக்குள்ள ஏனோ பால்டால் ஞாபகம் வட்டமிட ஆரம்பிச்சிருச்சு.

-'பரிவை' சே.குமார்.

Photo - Thanks : Google

24 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

குட் ஒன்

அன்புடன் மலிக்கா சொன்னது…

சிறுகதைகள் அனைத்தும் அழகக எழுதுறீங்க குமார். வாழ்த்துக்கள்.
புத்தகமாக தொகுக்கலாமே..

ராமலக்ஷ்மி சொன்னது…

வித்தியாசமான கரு. நல்ல கதை.

Asiya Omar சொன்னது…

கதை அருமை தம்பி.
முன்பு பேய் எல்லாம் நம்பியதில்லை,தெரிந்தவர் ஒருவருக்கு முன்பு பேய் பிடித்ததை பார்த்த பின்பு நம்பாமல் இருக்க முடியலை.

”மனசுக்குள்ள ஏனோ பால்டால்
ஞாபகம் வட்டமிட ஆரம்பிச்சிருச்சு.”
பால்டால் வார்த்தை இதுவரை கேள்விப்படலையே!

Chitra சொன்னது…

வித்தியாசமான முடிவு..... கதையின் எழுத்து நடையும் ரொம்ப நல்லா இருக்குது.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சுடுகாட்ட பார்த்து பயப்படாதவங்க யார் இருக்கா?

நல்ல திகில் கதை குமார்.

Sriakila சொன்னது…

நானும் முதல்ல படிக்கும்போது 'திக், திக்'னனுதான் படிச்சேன். கடைசியில படிக்கும்போது கொஞ்சம் பயம் விலகி ரசித்தேன்.

அம்பிகா சொன்னது…

\\உசுரோட இருக்கப்போ எத்தனை தடவ லவ் பண்றதா சொல்லியிருப்பேன்... அப்பல்லாம் பிடிக்கலே... பிடிக்கலேன்னு சொன்னா... இப்ப வந்து பிடிச்சிருக்கா... சரி... இப்பவாவது என்னய பிடிச்சிச்சே.\\
அதானே! கடைசியில் நகைச்சுவையாக முடித்து விட்டீர்கள். நல்ல, பயப்படுத்தும் நடை.

செங்கோவி சொன்னது…

முடிவு அருமை..நீங்களும் பேயைப் பார்த்திருக்கீங்களா..

Philosophy Prabhakaran சொன்னது…

பதிவுக்கான புகைப்படத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்.... செமையா இருக்கு... பதிவும் அவ்விதமே...

vanathy சொன்னது…

good one. well written.

மோகன்ஜி சொன்னது…

குமார். எடுத்த கதைக் களனை நேராக சொல்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

மனிதர் உணர்ந்து கொல்ல இது மனித காதல் அல்ல... பேய் காதல்னு சொல்றீங்களா...? nice write up.....:)

Priya சொன்னது…

எழுத்து நடை நல்லா இருக்கு... கதையும் அருமை!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kaadhalar காதலர் தின ஸ்பெஷலா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மலிக்கா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//புத்தகமாக தொகுக்கலாமே..//
பார்க்கலாம் அக்கா... இறைவன் சித்தம் இருப்பின் தொகுக்கலாம்.


வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
நானும் நம்புவதில்லை... சில விஷயங்களை பார்த்த போது இருக்கலாமோ என்று தோன்றியது.
//பால்டால் வார்த்தை இதுவரை கேள்விப்படலையே!//
இது ஒரு வகை பூச்சிக் கொல்லி மருந்து பயிருக்கு அடிப்பார்கள். விவசாயிகள் வீட்டில் இருக்கும். இதை அருந்தி உயிரிழந்தோர் அதிகம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சுடுகாட்டுக்கிட்ட பகலெல்லாம் மாடு மேச்சிருக்கோம். இரவில் இருட்டு பயம் உண்டுதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அம்பிகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//நீங்களும் பேயைப் பார்த்திருக்கீங்களா..//
இன்னும் இல்லைங்க... ஹா...ஹா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//பதிவுக்கான புகைப்படத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்.... செமையா இருக்கு... //
எல்லாம் கூகிள் தேடுபொறியோட உதவிதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மோகன்ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அப்பாவி தங்கமணி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//காதலர் தின ஸ்பெஷலா?//
சத்தியமா இல்லைங்க...