மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விதி வலை

ராசப்பன்னு சொன்னா யாருக்கும் தெரியாது. ஆனா குறி சொல்லுவாரே அவரு வீடு எதுன்னு யாரைக் கேட்டாலும் கரெக்டா சொல்லுவாங்க. ஒரு காலத்துல மூத்தான் வீடுன்னு இருந்த ராசப்பன் வீடு இப்ப குறி பாக்கிறவரு வீடுன்னு மாறிடுச்சு. சின்னஞ் சிறுசுககிட்ட மூத்தான் வீடுன்னு கேட்டா மேலயும் கீழயும் பாக்குதுங்க.

ராசப்பன்கிட்ட குறி பாக்க எங்கெல்லாமோ இருந்து வந்த காலமெல்லாம் இருக்கு. அப்பல்லாம் குறி பாக்க மொத நாளே வந்து அவரு வீட்டு திண்ணையில படுத்திருந்து அடுத்த நாள் பார்த்துட்டுப் போவாங்க... அவ்வளவு கூட்டம் இருக்கும். எத்தனை பெரிய ஆளா இருந்தாலும் அவரு வீட்டுக்கு வந்துதான் குறி பாக்கணும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் யாரு வீட்டுக்கும் போயி பாக்க மாட்டாரு. அவரு குறி சொன்னா அப்படியே நடக்குமுன்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை. அதுக்கு சாட்சியா நிறைய சொல்லலாம்.

நானாக்குடி ராமையா மகள் எவங்கூடவோ ஓடிப்பொயிட்டா... அவுங்களும் தேடி அலஞ்சு நிறைய குறி பாத்து கடைசியா ஒத்த வீட்டு மண்டையன் மூலமா இவருகிட்ட வந்தாக. அப்ப அவரு பொண்ணு போயி பதினஞ்சு நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க வந்த சனமெல்லாம் ஆத்தாடி அத்தனை கரெக்கிட்டாவுல்ல சொல்லுறாகன்னு மூக்குல விரலை வச்சிருச்சுங்க... அப்புறம் என்னென்னவோ பாத்து நாளைக்கி பன்னெண்டு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்க்குப் போங்க பொண்ணை கொண்டு வந்திடலாமுன்னாரு. ஆனா வந்தவங்களுக்கு அதுல நம்பிக்கையில்ல. எங்கயிருக்குன்னு கேட்டா பஸ் ஸ்டாண்ட்டுல பாக்கச் சொல்றாரு... எல்லாக் குறிகாரங்க மாதிரித்தாம்பு இவருமுன்னு பேசிக்கிட்டாங்க. இருந்தாலும் அவரு சொன்ன மாதிரி மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்ல போயி காத்திருந்தாங்க. திருச்சியில இருந்து வந்த கவர்மெண்ட் பஸ்ல ஒருத்தங்கூட வந்து எறங்கினா... பாத்ததும் விரட்டி புடிச்சி அவனுக்கு நாலு தட்டு விட்டுட்டு புள்ளைய கொண்டு வந்து அவசர அவசரமாக கல்யாணத்தையே முடிச்சிட்டாங்க.

இது மாதிரி மறவமங்களம் செந்தியோட கறவமாடு காணாமப் போயி பல மாதத்துக்கு அப்புறம் இவரு குறிபாக்கிறதை ஆளுக மூலமா தெரிஞ்சு வந்தப்போ மாடு இந்த ஊர்லதாம்பு நிக்கிது... கருக்கல்ல மாடவுக்கிற நேரத்துக்கு போ... மேய்ச்சலுக்கு வாராப்போ பாத்துப் பிடிச்சாந்திடலாம். ஆனா இப்ப மாட்டை வச்சிருக்கவன் சாதாரணமா தரமாட்டான்... ஊர்ல நாலு பெரிய மனுசங்களைப் பாத்து பேசி அவனுக்கு எதாவது பணம் கொடுத்து மாட்டைக் கொண்டு வான்னு சொன்னாரு. அதுபடியே ஆயிரம் ரூபா கொடுத்து மாட்டைக் கொண்டு வர பயங்கர சிரமமாயிடுச்சி.

அவரு குறி சொல்ற அழகே தனிதான். குறி பாக்க வந்து காத்திருக்கிற ஆளுங்களுக்கு டோக்கன் கொடுத்து வரிசைப்படுத்திட்டு பள்ளிக்கொடத்துக்குப் போறதை வழக்கமா வச்சிருந்தான் பெரியவன். ராசப்பன் குளிச்சிட்டு காவி வேஷ்டியோட வந்து திண்ணையில இருக்கிற பதினெட்டாம் படியானை விழுந்து வணங்கிட்டு ஏதோ வாய்க்குள்ள சொல்லுவாரு.

அப்புறம் அவருக்குன்னு போட்டிருக்க பலகையில உக்காந்து துணூறை எடுத்து நெற்றியெல்லாம் பட்டையா பூசிட்டு, மதுரை மீனாட்சி குங்குமத்தை எடுத்து வட்டமா வச்சிப்பாரு. அப்புறம் நெஞ்செல்லாம் துணூறை பூசிப்பாரு. அதுக்கப்புறம் எல்லாச் சாமியையும் அழைப்பாரு... அப்படி அழைக்கிறப்போ 'சங்கிலிக் கருப்பா நீ...' என்று போடும் சத்தத்துக்கு குழந்தைங்க வீல்லுன்னு கத்த ஆரம்பிச்சிடுங்க. எங்கயோ போற நாய்களெல்லாம் மாத்தி மாத்தி குரைக்க ஆரம்பிக்குங்க.

அப்புறம் வரிசையா இருக்க தேங்காய் பழ பையை எடுத்து துணூறை அதுமேல போட்டு கையில எடுத்தா... குறி பாக்க போறாருன்னு அர்த்தம். இல்ல துணூறை போடுறப்பவே தள்ளி வச்சிட்டாருன்னா இன்னைக்கு குறிகேக்க நமக்கு குடுப்பினை இல்லேன்னு போக வேண்டியதுதான்.

பெரியவனை படிக்க வச்சிப் பாத்தாரு பத்தாவதை தாண்டாத அவன் கடல் தாண்டி துபாய் போனான். போனப்போ மாசமாசம் எட்டாயிரமோ பத்தாயிரமோ அனுப்பினான். எடையில வந்து கலியாணம் பண்ணிட்டுப் போனான். அவன் பொண்டாட்டி இங்கதான் இருக்கா. வாயிம் வயிறுமா இருக்கா. அடுத்த மாசம் புள்ள பொறக்குமுன்னு டாக்டரம்மா சொல்லியிருக்கு. மகன் அனுப்புற காசுல மாசாமாசம் அவகிட்ட ரெண்டாயிரத்தை கொடுத்துடுவாரு. அப்படியிருந்தும் அவளுக்கு எல்லாரு மாதிரி டவுனுல தனியா இருக்க ஆசை. அதுக்கு அவ புருசன் ஒத்துக்கலை. அதனால பல்லக் கடிச்சிக்கிட்டு ஓட்டுறா.

இப்ப என்னவோ எக்கனாமி பிரச்சினையின்னு சொல்லி அவனோட கம்பெனி ஆளைக்க குறைக்கிதாம். நிறைய பேரு வந்துட்டாங்க... அவனை கருப்பன் புண்ணியத்துல இதுவரை அனுப்பலை. ஆனா முன்ன ஓவரு டைமெல்லாம் கொடுத்தாங்களாம் இப்ப இல்லையாம். சம்பளத்தையும் கூட்டவே இல்லையாம்... கொறவாத்தான் அனுப்புறான். ஊருக்கு வாரேன்னு வேற இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டான். இங்க விக்கிற வெலவாசிக்கு வந்து என்னடா பண்றதுன்னு தட போட்டு வச்சிருக்காரு.

சின்னவனுக்கு இவரு மாதிரி குறி பாக்க ஆசை... அவன் சொல்றதும் பலிக்குமுன்னு இவருக்குத் தெரியும். இருந்தாலும் இவரே இப்ப அவ்வளவா ஆட்கள் வராம வீட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு இருக்கிறப்போ அவனும் இதுல எறங்கி அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடனுமான்னு படிக்க வச்சுப் பாத்தாரு...பத்தாவதுல பெயிலானதும் படிக்க மாட்டேனுட்டான். டுட்டோரியல்ல சேத்து விட்டாரு. அங்க படிக்க வந்த பொண்ணோட சுத்துனானே தவிர படிப்புல கவனம் போகலை... எழுதிக்கிட்டே இருந்தான் வெற்றி மட்டும் தூரத்துலயே நின்னது. அப்புறம் அவங்கூட படிச்ச பசங்க இருக்காங்கன்னு சென்னைக்குப் போனான். எதோ ஒரு வேலையில சேந்துட்டான்... கிடைக்கிறதுல அவன் செலவுக்கே சரியா இருக்கும் போல, ஊருக்கு வாரப்போ அவங்க அம்மாகிட்ட எதாவது கொடுத்துட்டுப் போவான்.

உதடெல்லாம் கருத்துப் போயி இருக்க... சிகரட் எதுவும் பிடிப்பானோன்னு சந்தேகப்பட்டு எங்க நாம கேட்டா கோவப்பட்டு முறைச்சுக்கிட்டு நிப்பானுட்டு அம்மாக்காரிய கேக்க சொன்னாரு. அவ கேட்டதுக்கு நம்ம பக்கத்து வீட்டு காயத்ரி அக்கா உதடு கூட கருப்பாத்தான் இருக்கு அப்ப அது சிகரட் பிடிக்குதான்னு எதிர் கேள்வி கேட்டு வாய அடச்சிட்டான். அப்புறம் அதைப் பத்தி ரெண்டு பேரும் பேச்சே எடுக்கலை. போன தடவ ஊருக்கு வந்தவன் ஊரு வெளக்குல இருக்க ஒத்த பெட்டிக்கடையில அதிக நேரம் உக்காந்து அரட்டையடிச்சிக்கிட்டு இருந்தான். திடீர்ன்னு ஒரு நா அவரு அந்த வழியா வந்தப்போ கையில இருந்த சிகரட்டை மறைக்க அவன் பட்ட பாடு இருக்கே... செம்மத்துக்கும் மறக்க மாட்டான்.

தோளுக்கு மேல வளந்துட்டான். அவனுக்கு புத்தி சொன்னா பிடிக்காதுங்கிறதால சூதனமா பொழச்சுக்கப்பா... மூத்தவன் ஏதோ கஷ்டப்பட்டாலும் அவன் வாழ்க்கை நல்லாயிருக்குமின்னு எனக்கு தோணுது... நீதான் நல்லா வரணும்... வருவே... நாலு காசு சேத்து வச்சியனாத்தான் நாளைக்கு நாய் கூட உன்ன மதிக்குமின்னு பொத்தாம் பொதுவா சொல்லி வச்சாரு... அதை அவன் காதுல வாங்குன மாதிரி தெரியலை.

இப்ப குறி பாக்க வாரவங்க ரொம்ப குறஞ்சிட்டாங்க. பொண்டாட்டிக்காரிக்கும் உடம்புக்கு நல்லாயில்லாம... கெடந்து கஷ்டப்பட ஆரம்பிச்சிட்டா. மூத்தவன் வேலை சரியில்லைங்கிறான்... சின்னவன் பேருக்கு வேலை பாக்குறான்... மருமக இன்னைக்கோ நாளைக்கோன்னு வயித்த வச்சிக்கிட்டு புள்ளப் பேருக்கு காத்திருக்கா... நல்லபடியா பொறக்கணும்... பொண்ணுக்கு இன்னும் சரியான வரன் அமையலை... தங்கச்சி பையனுக்கு புடிச்சு கட்டி வச்சிடலாமுன்னு பாத்தா அவ பிடி கொடுத்தே பேசமாட்டேங்கிறா... இவருக்கும் இப்ப கால் மூட்டுக்கு மூட்டு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. கார மடைக்காரர்கிட்டதான் எண்ணெய் வாங்கி தேக்கிறார்.

அக்காவை பாக்க ஊர்ல இருந்து வந்த மச்சான் சாப்பிட்டுக்கிட்டே ஏம் மச்சான் இப்படி வீட்டோட போட்டு ஆட்டுதே கெரகம் கிரகம் சரியில்லை போல தெரியுது... அது என்னன்னு பாக்கலாமுல்ல... நாளைக்கி வெள்ளிக்கெழமைதானே உங்க குறி எடுக்க வேண்டியதுதானே என்றான். இல்ல நம்ம வீட்டுக்கு நான் குறி எடுக்க முடியாது மச்சான் என்று சொல்ல, என்ன மச்சான் ஊருக்கே சொல்றீங்க உங்களுக்கு பாக்க முடியாதா.?. ஊருக்கு சொல்லலாம் மச்சான். அவங்க வந்து பாக்கிறப்போ எல்லாம் எனக்கு தெரியும் ஆனா நல்லதை சொல்லிட்டு கெட்டதை சொல்லாம ஆறு மாதத்துக்கோ ஒரு வருசத்துக்கோ நேரம் சரியில்லைன்னு சொல்லிடுவேன். ஆனா நம்ம குடும்பத்துக்குப் பாத்தா எதுவா இருந்தாலும் எம் மனசுக்குள்ளயே நிக்கும். ஆத்தி இன்னைக்கு நடந்துடுமோ, நாளைக்கு நடக்குமோன்னு மனசு தவிச்சிக்கிட்டே இருக்கும்... நிம்மதி போயிடும் மச்சான் என்றார் வருத்தம் தோய்ந்த குரலில். நீங்க சொல்றதும் சரிதான்... அப்ப நம்ம வெத்தியூர் சோசியருக்கிட்ட போயி பாத்துட்டு வரலாமா... என்றதற்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் எல்லாம் சரியாகும் என்றபடி எழுந்து கை கழுவப் போனார்.

ஊர் விழிக்கும் முன்னால எழுந்து குளிச்சு பதினெட்டாம்படியானை கும்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த மச்சானை எழுப்பி வெரசா கிளம்பி வா முத வண்டியியல வெத்தியூருக்கு பொயிட்டு வந்திடலாம் என்றவரின் கையில் இருந்த மஞ்சப் பைக்குள் ஜாதகங்கள் சிரித்தன.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ - நன்றி : கூகிள்

32 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

நல்ல நடை

செங்கோவி சொன்னது…

வித்தியாசமாக ஜோசியரைப் பிடுச்சுட்டீங்க போல..நல்லாருக்கெ..தனக்குத்தானே வைத்தியம் பார்க்குறது கஷ்டம்தான்!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகான எழுத்து...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

நல்ல கதை - பொதுவாக ஜாதகம் பார்ப்பவர்கள் அவர்களுக்குப் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் . கதை நன்கு சொல்லப்பட்டிருக்கிறது. எளிய நடை. வாழ்க வளமுடன்.

சுசி சொன்னது…

நல்ல கதைங்க.

ரேவா சொன்னது…

superb.......

பெயரில்லா சொன்னது…

அருமையான நடை குமார்! நல்லாயிருக்கு! :)

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லாருக்குங்க நல்ல எழுத்து நடை ஸ்வாரஸ்யமாக இருக்கு

பெயரில்லா சொன்னது…

குறி ஜோதிடம் கிராமங்கள் தோறும் இருப்பதுதான்..ஆனா இவர் போன்ற குறி தவறாம சொல்றவங்க காணாம போயி பரிகாரம் சொல்றவங்க அதிகமாயிட்டாங்க

பெயரில்லா சொன்னது…

ஆனா நம்ம குடும்பத்துக்குப் பாத்தா எதுவா இருந்தாலும் எம் மனசுக்குள்ளயே நிக்கும். ஆத்தி இன்னைக்கு நடந்துடுமோ, நாளைக்கு நடக்குமோன்னு மனசு தவிச்சிக்கிட்டே இருக்கும்...//
இதை படிக்கும்போது என் கண்கள் கலங்கின...இது முற்றிலும் உண்மை...அனுபவம் கூட...

பெயரில்லா சொன்னது…

பல ஜோதிடர்களிடம் பழகியவன் என்ற முறையில் இதை படிக்கும்போது பலரின் வாழ்க்கை என் கண் முன்னால் வந்து போகிறது...ரொம்ப நாள் கழித்து அருமையான பதிவை படித்த திருப்தி..நன்றி குமார்

Menaga Sathia சொன்னது…

வித்தியாசமான கதை...

Asiya Omar சொன்னது…

அப்படியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு,ஜோசியக்காரரை.பத்திரிக்கைக்கு கதை எழுதி அனுப்புங்க தம்பி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செங்கோவி...
ஆமா...கொஞ்சம் வித்தியாசமா ஆடுகளம் பாக்கலாமேன்னுதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீனா ஐயா...
உண்மைதான்... ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னுடைய மரண நேரத்தையே கணித்து வைத்து இருந்தார்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சங்கவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.



வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சதீஷ் அண்ணா...
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் உங்கள் அன்பான வருகைக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
உங்கள் கருத்துக்கள் எப்பவும் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. படிக்கும் காலத்தில் பத்திரிக்கையில் நிறைய எழுதியிருக்கிறேன்... ஆனால் இப்ப அபுதாபியில் இருந்து கொண்டு அதைப் பற்றி சிந்திக்கவேயில்லை.... இருந்தும் பிளாக்கில் எழுத ஆரம்பித்த பின்னர் சில கதைகள் நண்பர்கள் வற்புறுத்தலால் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. இப்ப ஏனோ முயற்சியில்லை. பார்க்கலாம் அக்கா...

Chitra சொன்னது…

வட்டார பேச்சு வழக்குடன், உங்கள் எழுத்து நடை சூப்பரா இருக்குது!

ஜோதிஜி சொன்னது…

புது சொக்கா நல்லாயிருக்கு குமார்.

Unknown சொன்னது…

ஜோசியக்காரனால நான் பட்டபாடுகள் கண்முன் மீண்டும் வந்துவிட்டன...

Pavi சொன்னது…

அருமை

அம்பிகா சொன்னது…

வட்டார வழக்கில் அருமையான சிறுகதை. சரளமான எழுத்து நடை. நல்லாயிருக்கு குமார்.

vanathy சொன்னது…

super! well written.

ம.தி.சுதா சொன்னது…

தங்களின் ஒவ்வொரு பதிவும் மண்வாசனையுடன் மனதை வருடுகிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ராவோட ராவா இந்த ராசப்பன் இப்படி
மாறுவாருன்னு நான் கனவிலயும்
நெனைக்கலை. அந்த எதிர்பாரா
திருப்பம் சூப்பர்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கிராமிய சொல்வழக்கில் கதை, பரபரப்பாக
சென்றாலும் சற்றே பெரிய கதை என்று
நினைக்கிறேன்.
அதனால், கடைசி பத்திக்கு முந்தின
மச்சான்கள் இருவரும் பேசிக் கொள்ளும்
பத்தியை பத்தி-பத்தியாய் பிரித்து
போட்டிருந்தால், படிக்க எளிதாய்
இருந்திருக்கும் என்று
நினைக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். http://sinekithan.blogspot.com/2011/02/blog-post_14.html

Pranavam Ravikumar சொன்னது…

எழுத்து சூப்பர்!

ஹேமா சொன்னது…

வாசிக்க மிகவும் சுவாரஸ்யமா இருக்கு குமார்.சாத்திரம் பாத்திட்டு அதையே நினைச்சு அவதிப்படுறவங்க எங்க வீட்லயும் இருக்காங்க !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கதை ரொம்ப யதார்த்தமா நல்லாருக்கு..