மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 15 ஜனவரி, 2016

அவ...


வ...

என்னடா அவன்னு சொல்லி மூணு புள்ளி வச்சிருக்கானே எவன்னு யோசிக்காதீங்க... அவன்னா எனக்கு உயிர்... அதேபோல் நான் அவளுக்கு உயிர்.  எங்களோட உறவு பற்றி நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறதை படித்து முடிக்கும் போது உங்கள் பார்வையில் எங்க ரெண்டு பேருக்குமான உறவு காதலா, நட்பாங்கிற ஒரு முடிவுக்கு வருவீங்க... வரணும்... அதுதான் எனக்கு வேணும். சரி வாங்க... முடிவில்லா பயணத்தில் முடிவு காண பயணிப்போம்.

அவ... அதாங்க நான் சொன்னேனே அவதான்...

ஒரு மதியப் பொழுதில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன்... அது கல்லூரியில் வசந்த காலம்... நண்பர்களுடன் அரட்டையில் இருந்த என்னை கடந்தவளின் கண்கள் என்னையே மேய்ந்து கொண்டு போனதை நான் அறியாமல் இல்லை... இருந்தும் அவளைத் தெரியும் என்றாலும் இவ எதுக்கு என்னைப் பார்க்கணும் என்ற எண்ணம் தோன்றியதே தவிர அதை ஆராயும் எண்ணம் தோன்றவில்லை.

அன்று மாலை நானும் நண்பன் பரமுவும் சைக்கிளை உருட்டியபடி பேசிக் கொண்டு நடக்கும் போது எங்களை கடந்து சென்ற அவள், 'என்ன பரமு... ஆளையே பார்க்க முடியலை... ரொம்ப பிஸியோ...' என்று சிரித்தாள். 'ஏய் அப்படியெல்லாம் இல்லை... உன்னைத்தான் பார்க்க முடியிறது இல்லை' என்றவன் சைக்கிள் பெடலை மிதித்து அவளுக்கு இணையாக பேசியபடி செல்ல, நானும் அவன் பின்னே மெதுவாகச் சென்றேன். மனசுக்குள் எல்லாத்தையும் நமக்கிட்ட சொல்ற இந்த நாதாரி இதை மட்டும் ஏன் சொல்லலைன்னு கடுப்புத் தீ எரிந்து கொண்டிருந்தது. 

அவள் வீட்டிற்குச் செல்லும் கிளைச் சாலையில் திரும்பியதும் 'என்னடா... ஏன் மூஞ்சியை தூக்கி வச்சிருக்கே...' என்றபடி என் சைக்கிளுக்கு இணையாக வந்தான் பரமு. நான் பேசாமல் சைக்கிளை மிதிக்க, 'டேய் அவ பிஸிக்ஸ்ன்னு உனக்குத் தெரியும்.. அவ காலேசுக்கே தெரிஞ்ச பிகர்... நானும் அவளும் நிறைய பேச்சுப் போட்டிக்குப் போயிருக்கோம்... அப்ப பழக்கம்... அம்புட்டுத்தான்... ரொம்ப பிரியாப் பேசுவா... மனசுல எதையும் வச்சிக்கமாட்டா... பிரண்ட்லியா பழகினா அவளும் பிரண்டா இருப்பா... வேற மாதிரி நினைச்சா தூக்கிப் போட்டுட்டு போயிடுவா... இவ கிளாஸ்ல இளையராஜான்னு ஒருத்தன்... இவகூட திக் பிரண்டா இருந்தான்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி லவ் பண்றேன்னு லெட்டரை நீட்ட, பிடிச்சி வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டுட்டா... அது மட்டுமில்லாம அவன் பிரண்ட்ஷிப்பையும் கட் பண்ணிட்டா... இப்ப அவன் எங்கிட்ட வந்து அவளை என்னை மன்னிக்கச் சொல்லுன்னு கெஞ்சுறான்...' என்றான். அதுசரி... நமக்கு எதுக்கு வேண்டாத வேலையின்னு அவ பேச்சை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். அதன்பின்னான நாளில் அவளைப் பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை..

'டேய் நாம ஆரம்பிக்கப் போற கையெழுத்துப் பிரதிக்கு ஏழு பேரை ஆசிரியர் குழுவாப் போடலாம்ன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறே...' என்ற பரமுவிடம் 'யாரெல்லாம்..?' என்றபோது அவனின் வாயிலிருந்து முதலில் வந்தது அவதான்... 'எதுக்குடா அந்த திமிர் பிடிச்சவளை இதுல சேர்க்கிறே... லவ்வு கிவ்வு பண்ணுறியா...?' என்று கத்தினேன். 'சே... நல்ல பிரண்ட்... அருமையான பேச்சாளி... நல்லா எழுதுவா... நம்ம இதழுக்கும் லேடீசோட ரெஸ்பான்ஸ் வேணுமின்னா இவளை மாதிரி கல்லூரிப் பிகர் ஒண்ணு வேணுமின்னு அவகிட்ட கேட்டேன்... உனக்கு வேண்டான்னா எனக்கு வேண்டாம்' என்று என்னோட போரடி அவன் ஜெயித்தான்.

'இது என்னோட நண்பன்... நண்பன்கிறதைவிட உயிர்ன்னே சொல்லலாம்... இவந்தான் எல்லாம்...' என்று எங்கள் குழுவில் இருந்த நண்பர்களிடம் சொல்ல, மூவரை எனக்குத் தெரியும் என்பதால் அவர்கள் ஒன்று சொல்லவில்லை... இருவர் புதிது.. ஒருவன் பிரபாகரன்.... அவன் லேசாக புன்னகைத்தான். அப்புறம் அவள், 'ம்... கேள்விப்பட்டிருக்கிறேன்... உங்க கிளாஸ் பொண்ணுங்க நகுல சகாதேவன்னு சொல்வாங்க...' என்று சிரித்தாள்... எனக்கு எரிந்தது.

அதன் பிறகான நாட்கள் எப்பவும் போல் கழிந்தது... இதழ் வேலைகள் இருந்தால் கூடுவோம்... அப்போதெல்லாம் நான் எதுவும் பேசுவதில்லை. அப்படித்தான் ஒருநாள் மற்றவர்கள் வராமல் நாங்க மூவரும்... நாங்கன்னா நான், பரமு, அவ... புத்தகத்துக்கான வேலையில் இருந்தோம். 'என்ன பரமு உன்னோட பிரண்ட் ஊமையா...? எங்கிட்ட மட்டும் எதுவும் பேச மாட்டேங்கிறாரு...' என்று சீண்டினாள். 'ஏய் அவன் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவன்... கிளாஸ் பொண்ணுங்ககிட்டயே பேசமாட்டான்...' என்று சிரித்தான். 'ம்க்கும்... ' என்றபடி அடிப்பார்வை பார்த்துச் சிரித்தாள். கோபப்பார்வையை அவள் மீது வீசினேன். அவளோ செருமினாள் என்னைப் பார்த்தபடி.

'அலோ... உங்க பின்னாடியே எவ்வளவு தூரம் வர்றது... கிளாஸ் கட் அடிச்சிட்டு மாங்காய் பிடிங்கப் போறீங்க உங்க பின்னாடி நான் வந்து... இது இந்த மாசத்து இதழுக்கான ஆர்ட்டிக்கிள்ஸ்... லேடீஸ்கிட்ட கலெக்ட் பண்ணினது... பரமுக்கிட்ட கொடுக்கலாம்ன்னு பார்த்தா ஆள் வரலையாம்... உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி மல்லிகாகிட்ட சொன்னாராம். அவகிட்ட கொடுத்த நீயே கொடு அவன் பேசமாட்டான்னு சொல்லிட்டா... இந்தாங்க...' என்று நீட்டியவள் 'என்ன சாமியாரா?' என்றாள். 'ஏய்' என்று பல்லைக் கடித்தவன் 'சாரி... நன்றி' என்று சொல்லித் திரும்ப முதுகுக்குப் பின்னால் சிரித்தாள் என நண்பர்கள் சொன்னார்கள்.

அப்படியே போச்சு.... எம்புட்டு நாளைக்குப் போகும் சொல்லுங்க... ஒரு பொண்ணு... அதுவும் அழகான பொண்ணு... அவ பிரண்ட்ஷிப் கிடைக்குமான்னு அவனவன் ஏங்க... என்னைச் சீண்டும் ஒரு பொண்ணு... அதாங்க.... அதேதாங்க... இப்ப நாங்க பிரண்ட்ஸ்.... படிப்பில் இருந்து எல்லாம் பேசுவோம்... அவளுக்கு இலக்கியம் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முன்னெல்லாம் பரமுவும் அவளும் வண்டியில் பூட்டிய மாடுகள் போல் ஒரே நேர் கோட்டில் பயணிக்க, நான் வண்டி ஓட்டுபவன் போல் பின்னால் போவேன். இப்ப எல்லாம் தலைகீழ் நானும் அவளும் மாடுகளானோம்... பரமு வண்டி ஓட்டியானான். இப்போதெல்லாம் பரமும் நானும் நகுல சகாதேவன்களாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தேன். 

எங்கள் அறைக்கு முன்னர் இருக்கும் பித்தளைக் கேனில் தண்ணீர் குடிக்க வந்தவள் 'என்ன சார்... கிளாஸ் இல்லையா..?' என்று  சிரித்தபடியே கேட்டாள். 'இல்லை' என்றதும் 'அப்ப கிரவுண்ட் பக்கம் போயி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா...?'  என்றவள் நடக்க அவள் பின்னே போனேன். பேசினோம்... பேசினோம்... பேசிக்கொண்டே இருந்தோம். என்ன பேசினோம் என இருவருக்கும் தெரியாது.

'டேய்... நாளைக்கு எங்க போறே..?' பரமுதான் கேட்டான். என்னடா கேள்வி லீவு அன்னைக்கு எங்க போவாங்க... வீட்லதான்... இல்லேன்ன இங்க உங்க வீட்ல கிடப்பேன்... என்னமோ உனக்குத் தெரியாம எங்கயாவது போற மாதிரி கேட்கிறே' என்றேன் கோபமாய். 'ஆமா இப்பல்லாம் அப்படித்தானே நடக்குது... இன்னைக்கு முத்தமிழ் ஐயா என்ன நகுல சகாதேவர்கள் இருவருக்குள்ளும் ஒரு வரதேவதையால பிரச்சினையாமேன்னு கேட்கிறார்... மானம் போகுது...' என்றார். 'இங்க பாரு உனக்கு அவ எப்படி பிரண்டோ அப்படித்தான் எனக்கும்... நீதான் அவளைக் கூட்டியாந்து நம்ம குழுவுல இணைச்சே.... எழுத்துங்கிற அலைவரிசை ஒத்துப்போனதால பிரண்ட் ஆயிட்டா... என்ன நான் யார்கிட்டயும் பேசமாட்டேன்... அவ இலக்கியம் பேசினா... எனக்கு இனித்தது.... இது தப்பா... சரி விடு எதுக்கு எங்க போறேன்னு கேட்டே....' என்று சிரிக்க, 'அவ வீட்டுக்கு நம்மளை வரச்சொல்லியிருக்கா...' என்றான். 'என்னது அவ வீட்டுக்கா... டேய் அவனுங்க ரொம்ப ஆச்சாரமா இருப்பானுங்க... அது இருக்கட்டும் இதை ஏன் அவ எங்கிட்ட சொல்லலை...' சற்றே வார்த்தையில் சூடு வந்தது. 'எப்பா ஆச்சாரமோ அனுக்கிரகமோ அவ அக்கா பொண்ணுக்கு பர்த்டேயாம்... சாயந்தம் தேடி வந்தா நீதான் எங்கிட்ட தலைவலியின்னு சொல்லிட்டு மத்தியானமே ஆதிகூட படத்துக்குப் பொயிட்டியே... அதான் எங்கிட்ட சொல்லி உன்னையும் கண்டிப்பா கூட்டிக்கிட்டு வரச்சொன்னா...' என்றதும் பொய் சொன்னாலும் எவனாச்சும் போட்டுக் கொடுத்துடுறானுங்க.. என்று நினைத்தபடி 'ம்' என்று சொல்லி வைத்தேன்.

அவள் வீட்டில் எங்களை தவிர மற்றவர்கள் எல்லாம் அவளின் சொந்தங்களே.... எங்களை விழுந்து விழுந்து கவனித்தாள்... பால் கொண்டு வந்து கொடுத்து விட்டு எனக்கருகே அமர்ந்து 'சுகர் போதுமான்னு பாரு' என்றாள். ]இன்னைக்காச்சும் ஸ்மார்ட்டா டிரஸ் பண்ணி வரக்கூடாதா... இந்த டீசர்ட் நல்லாவேயில்லை' என்று வருந்தினாள். 'அவனைப் பாரு... ரவுண்ட் நெக் பனியன்ல கலக்குறான்... நீ ஏன் இப்படி இருக்கே...' அவனைப் பார்த்து பொறாமைப்பட்டவள் என்னைப் பார்த்து பொங்கினாள். போட்டாவுக்கு போஸ் கொடுக்கும் போது என்னருகே வந்து நின்று கொண்டாள். போட்டோ பிரிண்ட் போட்டு வந்ததும் கொண்டு வந்து காட்டி ' உன்னைவிட ஒரு இஞ்ச்தான் நான் கம்மி' என்று சொல்லிச் சிரித்தாள்.

'என்னடா லவ்வு கிவ்வுன்னு எதாச்சும் சொன்னாளா... இப்ப காலேஸ் எல்லாம் உங்க படம்தான் ஓடுது... அவகிட்ட எல்லாரும் ஒரு மாதிரி பேசுறானுங்கன்னு சொல்றேன்... பேசட்டும்... அதுக்கு என்னன்னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே போறா... என்னடா நடக்குது...' என்றான் பரமு. 'ஒண்ணும் நடக்கலை... நாங்க நல்ல பிரண்ட்ஸ்... எங்க மனசு சுத்தமா இருக்கும்போது மற்றவங்க என்ன பேசினா எங்களுக்கு என்ன... போடா அங்கிட்டு...' என்று அவனை ஒதுக்க, 'ஏய் நாளைக்கு நாம சிவன் கோவில் போலாமா..' என வந்து ஒட்டிக்கொண்டாள் அவ. 

கூட்டம் அதிகமில்லாத சிவன் கோவிலில் அவளுக்காய் காத்திருந்தேன்... பட்டுச் சேலையில் கலக்கலாய் வந்து இறங்கினாள். சைக்கிளை நிறுத்திவிட்டு 'வா போகலாம்' என்றவள் 'ஏன் இப்படியிருக்கே... கோவிலுக்கு வரும்போது கண்றாவியா டிரஸ் பண்ணிக்கிட்டு....வேஷ்டியில வந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்... நான் சேலை... நீ வேஷ்டி அழகா இருக்கும்... பாரு நேத்துப் போட்டா பேண்டு... அதுக்கு மேட்ச் இல்லாத சட்டை... போப்பா... உன்னோட வர்றதுக்கு நானே உனக்கு டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடுக்கணும் போல' என்று கோபப்பட்டாள். 'உனக்கென்ன குருக்கள் பொண்ணு... அம்மனுக்கு வர்ற பட்டுல உங்கப்பா மகளுக்குன்னு ஒண்ணு எடுத்துக்கிட்டு வந்திருவாரு... நாங்க விவசாயிங்கதானே... எங்க வீட்ல அப்பாவும் அண்ணனும் கட்டுற வேட்டிதான் இருக்கு... நமக்கு அது கட்டவும் வராது...' என்றதும் சிரித்துவிட்டு, 'கட்ட வராத வேஷ்டியை கட்டிக்கிட்டு வந்திருந்தா அந்த அழகை நானும் ரசிச்சிருப்பேன்ல... ஊமையான்னு கேட்டது எம்புட்டு தப்புன்னு இன்னைக்குத்தான் தெரியுது... வாயு ஓயாது போல' என்றாள். 

சாமி தரிசனம் எங்களின் பேச்சு என நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. எங்களைச் சுற்றி பல கண்கள் அகலாமாகவும் ஆழமாகவும் ஆராய்வதை உணர்ந்தாலும் இரு போகலாம் என்ற அவளின் வாக்குக்கு அடிபணிய அவல் கிடைத்த சந்தோஷத்தில் கண்கள் வெளியேறிக் கொண்டிருந்தன. அவள் அருகில் என்ற சந்தோஷத்தில் என் கண்கள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.

ஒரு மாலை வேளை... சூரியன் செங்கதிர்களை வீச, நாங்கள் பேசியபடி நடந்தோம்... 'இங்க பாரு மத்தவங்களும் நீயும் எனக்கு ஒண்ணு இல்லை சரியா... நீ வேற அவங்க வேற... இப்ப பாரு பரமுதான் எனக்கு முதல்ல பிரண்ட்... இப்ப அவனோட பேசுறதே குறைஞ்சி போச்சு... உனக்கு கூட பரமுவை விட நாந்தானே முக்கியமாயிட்டேன்.... இல்லையா...?' என்று சிரித்தாள். 'அதெல்லாம் இல்லை அவன் எப்பவும் எனக்கு பெஸ்ட்தான்... அவனில்லைன்னா நான் இல்லை...' என்றேன். 'ம்.. அடேயப்பா நண்பனைவிட நான் பெஸ்ட்ன்னு சொன்னதும் கோபத்தை பாரு மூக்கு மேல... சரி அப்ப நான்...' என்று கொக்கி போட்டாள். 'நீயுந்தான்...' என்றதும் 'நானுந்தான்னா எப்படி..?' என்று முகம் பார்த்தாள். 'ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல, ஒரு தராசின் இரண்டு தட்டு போல... ஒரு...' கையைக் காட்டி இடைமறித்தவள் 'உன்னை என்ன லெக்சர் அடிக்கச் சொன்னாங்களா... உனக்கு நான் எப்படியோ... எனக்கு நீதான் பர்ஸ்ட்... அப்புறம்தான் மற்றவங்க...' என்றாள். நாம எதாவது சொல்லப்போக இளையராஜா நிலமை நமக்கு ஆயிட்டா என்று யோசித்தடி 'பர்ஸ்ட்ன்னா...' என்றேன். 'பர்ஸ்ட்ன்னா பர்ஸ்ட்த்தான்... எல்லாத்துலயும் நீதான் என் பெஸ்ட்...' சிரித்தவள் 'சரி நான் உனக்கு பரமுக்கு அப்புறம்தான்.... பரவாயில்லை... நீ என்னை பற்றி என்ன நினைக்கிறே..?' என்றாள். 

கொஞ்ச நேரம் யோசித்து 'ராட்சஸி' என்றதும் கோபம் கொள்ளாமல் 'ஏய்...?' என்று அதட்டி அடிக்க கை ஓங்கினாள். 'அட அழகான ராட்சஸின்னு சொல்ல வந்தேன்' என்றதும் 'அது' என்று ஒங்கிய கையை என் கன்னத்தில் தட்டிச் சிரித்தாள். ' நல்ல தோழி... என் இலக்கியத்துக்கும் இலட்சியத்துக்கும் என்னோடு துணையாய் பயணிக்கும் நல்ல தோழி' என்று சிரித்ததும் அவளும் சிரித்தபடி 'படுவா... இப்பல்லாம் நீ ரொம்பப் பேசுறே...  நீயும்தான் எனக்கு...' என்று நிறுத்தி 'பைடா... நாளை பேசுவோம்ன்னு..' சொல்லிச் சிரித்தபடி விடைபெற 'தோழியா... காதலியாங்கிற பாட்டு டீக்கடையில் இருந்து வந்து என் காதுகளில் நுழைய, நானும் சிரித்தபடியே சைக்கிளை மிதித்தேன்.

இப்பச் சொல்லுங்க எங்க உறவு நட்புங்கிற வட்டத்துக்குள்ள இருக்கா இல்லை காதல்ங்கிற கண்ணாம்பூச்சி ஆட்டத்துல நுழைஞ்சிருச்சான்னு... அவகிட்ட நேரடியாக் கேட்க எனக்குப் பயம்.. அதே மாதிரி பரமுக்கிட்ட கேட்டா என்னை பந்தாடிடுவான்... ப்ளீஸ் கொஞ்சம் எனக்குச் சொல்லுங்களேன்... அவளுக்கு அடுத்த வாரம் பர்த்டே வருது... அதுக்குள்ள தெரிஞ்சாத்தான் அவளுக்கான கிப்டை நான் செலக்ட் பண்ண முடியும்.... ப்ளீஸ்... ப்ளீஸ்.... என்ன அவ பேரா... ஆமால்ல அவ... அவன்னுதானே சொன்னேன்.... அவ பேரு சுபத்ரா... நான் மட்டும் அவ செல்லப்பேரான பட்டுன்னுதான் கூப்பிடுவேன். அதைத்தான் அவளும் விரும்புவா... சுபத்ரான்னா ஏன்னே கேட்கமாட்டா.... நட்போ காதலோ அவ எனக்கு வேணும்... இருந்தாலும் உங்க கருத்தையும் சொன்னீங்கன்னா நான் சந்தோசப்படுவேன்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 14 ஜனவரி, 2016

மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு


ல்லிக்கட்டு... எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்...

பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதிவு என்பதைவிட இது எங்களின் உரிமை என்ற ஆணித்தரமான பதிவு. இது தென்தமிழகத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்று சொல்லி எதிர்க்கும் வடதமிழகத்து நண்பர்களே... குறிப்பாக சென்னை நண்பர்களே... இது தமிழனின் வீர விளையாட்டு... பாரம்பரிய விளையாட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளம் வந்தபோது அது வடதமிழகத்தில்தான் பெய்தது என்று எந்தத் தென்மாவட்டத்துக்காரனும் நினைக்கவில்லை... என் மக்கள்... என் இனம்... பாதிக்கப்பட்டிருக்கு என்றுதான் ஓடோடி வந்தான்... நம் உரிமையை அழிக்க நினைப்பவருக்கு ஜால்ரா அடிப்பதை விடுத்து நாம் தமிழர்கள் என ஒன்று கூட முயலுங்கள்.

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளையை சிறிய கன்றிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்ப்பவன் விவசாயி. அவன் அதை துன்புறுத்துகிறான் என்று ஏதோ சில பதியப்பட்ட காட்சிகளை வைத்துக் கொண்டு தடை செய்து... அந்த வீர விளையாட்டையே... எம் இனத்தின் பாரம்பரியத்தையே அழிக்கத்துடிக்கும் அற்பப் பதர்களுக்கு அந்த மாட்டை பராமரிக்கும் முறை தெரியுமா...? அதன் கண்களில் துன்புறுத்திய வேதனை தெரியும் என்று ஏதோ ஆராய்ந்து பார்த்தது போல் சொல்லியிருக்கிறார்கள்... அதன் கண்களில் எங்கே வேதனை தெரிந்தது... என்னை வளர்க்கும் எஜமானன் தோற்கக்கூடாது என்ற வெறியே தெரியும்... என் வீரம் நான் என் எஜமானனுகு அளிக்கும் பரிசு என்ற வெறியே தெரியும்.. மாட்டுக்கறியைச் சாப்பிடுவோம்... வண்டி வண்டியாக கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புவதற்கு உதவுவோம்... ஆனால் வருடமெல்லாம் வயலில் கிடந்து உழன்று அந்த ஒருநாள் சந்தோஷமாக இருக்கும் விவசாயியை மட்டும் சந்தோஷமாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் இவர்கள் எல்லாம் யார்..? இவர்கள் மாட்டின் நலம் விரும்பிகளா...? அல்லது மாட்டு இறைச்சி விரும்பிகளா...?

தென் தமிழகத்தில் விவசாயம் செய்யும் எல்லாரிடமும் மாடுகள் இருக்கும்... பால் வியாபரத்துக்கு மட்டுமின்றி... உழவுக்கு என்றும்... பந்தய மாடுகள் என்றும்.. மஞ்சுவிரட்டு மாடுகள் என்றும் தரம் வாரியாக வைத்துப் பராமரிப்பார்கள். அவற்றை அவர்கள் பராமரிக்கும் முறையை இவர்கள் அறிவார்களா? வீட்டு விலங்காக இருக்கும் காளைகளை வன விலங்கு என்று சொல்லி வாதிடுகிறார்கள். வருடம் பூராம் உழைக்கும் வர்க்கம் தங்களின் பிள்ளைகளோடு பிள்ளைகளாக வைத்து வளர்த்து வரும் ஒரு உயிரினத்தை காட்டு விலங்கு என்று சொல்லும் இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கூட்டம் இது மனிதாபிமானம் அற்ற செயல்... இது மாடுகளை துன்புறுத்தும் செயல்... இது மகா பாதகமான செயல்... என்று கூப்பாடு போடுகிறது. இவர்களுக்கு என்ன தெரியும் விவசாயியின் வாழ்க்கையும் அவனது வாழ்வாதாரமும்.. இந்த மாடுகளோடு பின்னிப் பிணைந்து கிடப்பது...

நாங்கள் அடுக்கடுக்காய் பேனர் வைப்போம்... நடிகனின் கட் அவுட்டுக்கு அண்டாக்களில் பால் வாங்கி அபிஷேகம் செய்வோம். எவனோ ஒரு நடிகன் சாகக்கிடந்தால் மொட்டை அடிப்போம்... என்று இன்னமும் திருந்தாமல் திரியும் நீங்கள் இந்த தமிழனின் பரம்பரை விளையாட்டை இது தென்தமிழகத்தில் ஒரு சாரார் நடத்தும் விளையாட்டு... இது தமிழர்களின் விளையாட்டு அல்ல என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை... ஏனென்றால் நீங்கள் எல்லாம் தமிழனாய் வாழ நினைக்காதவர்கள்... ஏதோ மேற்கத்திய நாகரீகத்தில் ஒன்றி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி வாழ நினைக்கும், வாழ்ந்து வரும் மேல்த்தட்டு வாசிகள். தமிழன் என்றால் அதில் வீரம் இருக்கும்... தன்மானம் இருக்கும். அதை மறந்த உங்களுக்கு ஏழைகளின் வீரமிக்க இந்த விளையாட்டு எம் தமிழினத்தின் விளையாட்டு.. இது அழியக் கூடிய விளையாட்டு அல்ல.... பாதுகாக்க வேண்டிய விளையாட்டு என்பது எப்படித் தெரியும்.


தமிழனின் விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வழக்குத் தொடந்த மேனகா காந்திக்கு இதைப் பற்றி என்ன தெரியும். தமிழ்நாட்டிற்கு வந்து அரைகுறை ஆடையில் இளைஞர்களை எல்லாம் கவர்ச்சி உலகில் மயங்க வைத்து பணம் சம்பாரிக்கும் மேற்கத்திய எமிக்கு மாட்டை எப்படி பாராமரிப்பார்கள் என்பது தெரியுமா..? உடலில் எல்லா இடத்திலும் பச்சை குத்தி, அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரிஷாவுக்கு, காளைகள் விவசாயியின் குழந்தையோடு பேசும், விளையாடும் என்பது தெரியுமா...? கத்திச் சேவல் சண்டையை வைத்து படமெடுத்து தேசிய விருது பெற்ற... தென் தமிழக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முன்னுக்கு வந்த... ரஜினியின் மருமகன்... ஒல்லிப்பிச்சான் தனுஷ்க்கு மாடுகள் தங்கள் எஜமானனைப் பார்க்கவில்லை என்றால் உணவு உண்ணாது என்பது தெரியுமா...? ஏன் கிரிக்கெட்டில் கோடிகளைக் குவித்து அனுஷ்காவோடு சுற்றும் விராட் கோலிக்கும், இதை எதிர்க்கும் மற்ற பிரபலங்களுக்கும் என்ன தெரியும் இதைப் பற்றி...? பந்தை விரட்டி அடிப்பது போல் எங்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டால் இவர்களால் விரட்டி பிடிக்கத்தான் முடியுமா... அல்லது அடிக்கத்தான் முடியுமா... தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசும் இவர்கள்... தமிழனின் பாரம்பரியத்தை... வீரவிளையாட்டை தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதன் காரணம் என்ன...?

இந்த பெடா(PETA) அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பு... இவர்களால் ஜரோப்பியா, தென் அமெரிக்கா நடுகளில் நடக்கும் காளைச் சண்டைகளை நிறுத்த முடியுமா..? ரோட்டில் கிடக்கும் விலங்குகளை பிடித்து பதினைந்து நாட்கள் வைத்திருந்து யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றால் அதை கொலை செய்யும்... அதற்குப் பெயர் கருணைக் கொலையாம்... இவர்கள் உண்மையிலேயே மாட்டின் நலனில் கொண்ட அக்கறையால்தான் இதற்கு தடை கோருகிறார்களா என்றால் இல்லை என்றுதான்  சொல்ல வேண்டும். மேலும் நகரங்களில் பசுக்களில் மார்க்காம்புகளில் மிஷினை வைத்து பாலை உறிஞ்சி எடுப்பதையும், ஒவ்வொரு தெருவிலும் மாட்டை நிறுத்தி ஊசி போட்டு பால் கறந்து கொடுப்பதையும் இவர்கள் எதிர்ப்பதில்லை... காரணம் அந்தப் பாலில்தானே இவர்கள் காபி சாப்பிடுகிறார்கள்... இந்த இனத்தின் மீதான அடக்குமுறைக்குப் பின்னே ஏதோ ஒரு அந்திய சக்தியும்  அதன் பணமும் இருக்கிறது. அதற்கு இவர்கள் மூலமாகவும் இவர்களுக்கு அதன் மூலமாகவும் ஆக வேண்டிய மிகப்பெரிய காரியம் கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர்களால் மற்ற மாநிலங்களில்... மற்ற நாடுகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை நிறுத்தத் திராணி இருக்கிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

அதை விடுங்க... நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் பூரம் திருவிழாவில் யானைகள் பயன்படுத்துவதால் அவை துன்புறுத்தப்படுகின்றன என்று இவர்களால் அதற்கு தடைவாங்க களமிறங்க முடியுமா...? முடியாது... முடியவே முடியாது... காரணம்... கேரளாவின் பாரம்பரியத்து ஒரு பிரச்சினை என்றால் அங்கு சாதி, மதம் பார்ப்பதில்லை... வடக்கு, தெற்கு பார்ப்பதில்லை..., ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பார்ப்பதில்லை... மாநிலமே ஒன்று கூடும்.. தங்கள் உரிமையை விடாமல் போராடுவார்கள். அதனால் அங்கு கால் வைக்க இந்த காவாளிக்கூட்டத்துக்குப் பயம்...? இதே தமிழன் என்றால் சாதியும் மதமும் முதலில் பார்ப்பான்... அப்புறம் வடக்கு தெற்கு என வியாக்கியானம் பேசுவான், ஆளும் அரசும் எதிர்கட்சிகளும் பேனர்கட்டி கொடிப்பிடித்து எதிர்எதிர் கருத்துக்களைப் பேசியே கொல்வார்கள்... எவனும் ஒன்று கூட மாட்டான்... அவனுக்குத்தானே ரத்தம் வருதுன்னு இவன்பாட்டுக்கு வேலைக்குப் போவான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு... தங்களின் வயிற்றை நிரப்ப ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு இந்த பெடா களம் இறங்கியிருக்கிறது.

ஒரு கலந்துரையாடலில் பெடா அமைப்பைச் சேர்ந்த முதிர்ந்த அம்மணியை சீமான் மடக்கினார். இது தமிழர்களின் வீரவிளையாட்டு இதைத் தடைசெய்ய நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா காளைகள் துன்புறுத்தப்படுகின்றன... இதை நடத்தவே கூடாது என்றார். அப்ப கேரளாவில் யானைப் பந்தயம், கர்நாடகாவில் குதிரைப் பந்தயம் எல்லாம் நடக்குதே அதையெல்லாம் நிறுத்துங்கள் என்று சொன்னதும் அவற்றை ஏன் நிறுத்தணும் என்றவர், குதிரை ஓடுவதற்கு என்றே பிறந்தது என்றார். அப்ப மாடு ஓடாதா..? என்றதும் நான் சொன்னது தவறுதான் என்று  அந்த அம்மையார் ஒத்துக்கொண்டார். உங்கள் எதிர்ப்பு மாடுகளைக் காக்கும் என்றால் அந்த எதிர்ப்புக்கு எல்லாருமே ஆதரவு தருவோம். ஆனால் நாங்கள் மாடுகளை வெட்டிச் சாப்பிடுவோம்... ஆனால் விளையாட விடமாட்டோம்.. என்று நீங்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது படித்த மாக்களே.

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதை எல்லாரும் அறிவோம். அரபு நாட்டுக்கு வரும் மாட்டிறைச்சிகளை அனுப்பும் நாடுகளில் இந்தியாவுக்கே முதலிடம்... இருக்கும் மாடுகளை எல்லாம் கொன்று விற்றுக் கொழிப்போம்... ஆனால் தான் வளர்த்த மாட்டை தன் இனத்தின் முன் பெருமையுடன் அவிழ்த்து விட்டு முடிந்தால் பிடித்துப் பாருங்கடா... என்று மார்த்தட்டிச் சந்தோஷிக்கும் தமிழனை சந்தோஷமாக இருக்க விடமாட்டோம். தொன்மை மொழியாம் தமிழை அழிக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைவோம் என்று சிந்திப்பவர்களே... நன்றாக இருக்கிறது உங்கள் இரக்க குணம். குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலைச் செய்யும் அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குறியதுதான். 

எது எப்படியோ இது எங்களின் பாரம்பரியம்... வீர விளையாட்டு... இதில் குத்துப்படுவனும்... அடிபடுபவனும் விரும்பித்தான் ஏற்கிறானே ஒழிய... யாரும் கட்டாயப்படுத்தி அவர்களை களம் இறக்குவதில்லை... இது எங்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விளையாட்டு... நாங்கள் மாடுகளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டாடும் மரபினர்... எங்கள் சிவன் கோவில்களில் மூலவரை தரிசிக்கச் செல்லும் முன்னர் நந்தியை வணங்கிச் செல்பவர்கள் நாங்கள்... நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள்.. நாங்களை அதை இறைவனாகப் பார்க்கிறோம்.  எங்கள் இறைவனுடன் நாங்கள் பேச, மகிழ, ஓடிப்பிடித்து விளையாட யாரோட அனுமதிக்காக காத்திருக்க வேண்டும்...? பிள்ளையோடு விளையாட அம்மா அனுமதி வாங்க வேண்டுமா என்ன... எங்கள் மாடுகளை நாங்கள் அவிழ்த்து விடுவோம்... முடிந்தால் பிடித்துப் பாருங்கள் பெடா தோழர்களே...

முகநூலில் ஒரு டிரண்ட் இருக்கு... கமலஹாசன் ஊரை விட்டுப் போறேன்னு சொன்னா 'ஐ சப்போர்ட் கமல்'... அம்மா ஜெயிலுக்குப் போன 'ஐ சப்போர்ட் அம்மா'... இப்படி எல்லாத்துக்கும் எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணுவோம் நாம்... இப்ப 'ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு' அப்படின்னு பலர் போடுறாங்க... இதுல சப்போர்ட் என்ற வார்த்தைக்கே வேலையில்லை... இது நம் பாரம்பரியம்... தமிழக மண்ணுக்கே உரிய வீரவிளையாட்டு... இது நம் உரிமை... உரிமை வேறு... ஆதரவு வேறு... நம்மளோட சொத்தைக் காப்பாற்றுவது உரிமை... ஆதரவு அல்ல... இது எங்கள் உரிமை... உடமை என்று குரல் கொடுப்போம் நண்பர்களே...

இங்கே நீதி செத்து நாளாச்சு... பெண்ணைக் கொடுத்தோடு மட்டுமில்லாமல் இரும்புக் கம்பியை சொருகியவனுக்கு மைனர் என விடுதலை... குடித்து விட்டு காரை ஓட்டி ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்றவனுக்கு விடுதலை... தீவிரவாதிகளுக்கு உதவினான் என்றாலும் அவனுக்கும் ஜாமீன்.... கோடிக் கோடியாக கொள்ளை அடித்தாலும் பதவியில் இருந்தால் சட்டம் ஒன்று செய்யாது... பத்து ரூபாய் கட்டாத விவசாயிடம் கறாராக பேசும் வங்கிகள் ஆடம்பரமாய் இருப்பவன் எல்லாம் இழந்தேன் என்றால் கோடிகளில் கொடுத்த கடனை தள்ளுபடி செய்யும்... இந்தியாவில் நீதி தேவதை செத்து ரொம்ப நாளாச்சு.... தமிழன் என்றால் எல்லாமே செத்துப் போகும்... நாம் அழியும் வரை அவர்கள் விடமாட்டார்கள்... ஆரம்பிப்போம் நம் ஆட்டத்தை... அப்பத்தான் அவர்கள் அடங்குவார்கள்... அடக்கு முறை எதிர்ப்போம்... அடிபணிய மறுப்போம்.


வீட்டு விலங்கை வன விலங்கென பட்டியலில் சேர்த்து மாட்டுக்கறியும் முயல்கறியும் மான் கறியும் தின்று கொக்கரிக்கும் கூட்டத்துக்கு முன் நம் தென்தமிழக கிராமங்களில் நடக்கும் மாட்டுப் பொங்கலில் நாம் மாட்டுக்குச் செய்யும் மரியாதை என்ன என்பதைக் காட்டுவோம் தமிழர்களே... தமிழன் என்று ஒரு இனம் உலகெங்கும் பரவிக்கிடப்பதைப் போல அவனையும் அவனது பாரம்பரியத்தையும் அழிப்பதற்கென்றே ஒரு இனம் நம்மோடு கள்ளிச் செடியாக பரவிக்கிடக்கிறது. அந்த விஷச் செடிகளை வேரோடு களைந்து நம் இனம்... நம் பாரம்பரியம்... நம் பண்பாடு காப்போம் நண்பர்களே...

பொங்கல் கொண்டாடுவோம்... அதுவும் நம் அன்புக் காளைகளுடன் கொண்டாடுவோம்....

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... எதையும் நினைத்து வருத்தம் கொள்ளாமல் நம் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மாடுகளோடு இந்தப் பொங்கலை  சிறப்பாக கொண்டாடுங்கள். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


உங்களின் உண்மையான கருத்துக்களைப் பகிருங்கள்... தாயும் தாரமும் போல் மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம் என்பதை தென்தமிழகத்து சிவகங்கை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் உணர்வோடு சொல்லிக்கொள்கிறேன்.

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மார்கழிக் கோலங்கள் - 3

கோலம் என்பது எல்லாராலும் பொறுமையாகப் போட்டுவிடமுடியாது. அழகாகக் கோலம் போடும் ஒருவரே அவசர கோலத்தில் புள்ளிகளை வைத்து கோலமாக்க முயற்சித்தால் அது தெற்கு வடக்காக நீண்டோ அல்லது குறுகியோதான் காணப்படும்.  அதனால் கோலம் போடும்போது மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தி போட்டால்தான் கோலம் சிறப்பாக அமையும்.

பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கோலத்தின் மீது ஒருவித ஈர்ப்பு வந்துவிடும். அவர்களின் பள்ளி நோட்டில் கோலம் வரைந்து பார்ப்பார்கள். பெண் குழந்தைகளின் கையில் இருக்கும் நோட்டில் கோலம் வரையவில்லை என்றால் அது உலக அதிசயமே. எல்லாருடைய நோட்டிலும்  ஒரு நாலு புள்ளி வைத்தாவது கோலம் போட்டிருப்பார்கள். கல்லூரியில் எங்களுடன் படித்த பெண்களின் நோட்டுக்களில் எல்லாம் கோலங்களின் ஊர்வலமாகத்தான் இருக்கும்.

கோலம் போடுவதில் மும்மரமாகிவிட்டால் மார்கழி மாதம் பனியாவது மழையாவது எப்படியும் கோலம் போட்டு விடுவார்கள். அதற்கு கலரும் ரசனையாக கொடுத்துவிடுவார்கள். கலர் கொடுக்கும் போது அது திட்டுத்திட்டாக தெரியக்கூடாது என அழகாக நேர்த்தியாக கலர் கொடுப்பார்கள். 

பொங்கலுக்கு முதல்நாள் இரவு வீட்டுக்குள் கோலம் போடுவார்கள். அரிசிமாவை அரைத்து கொஞ்சம் தண்ணீர் கலந்து வைத்துக் கொண்டு ஒரு சிறு துணியை நனைத்து விரல்களுக்கு இடையே வைத்து லாவகமாக இழுத்துக் கோலமிடுவார்கள். அது கொஞ்ச நேரத்தில் காய்ந்து அழகாக தோற்றமளிக்கும். சிமெண்ட் வீடுகளில் விரைவில் காயாது. யாரவது தெரியாமல் மிதித்துவிட்டால் அவர்களின் காலடித் தடத்தோடுதான் காட்சியளிக்கும். அதே கோலத்தை சாணம் போட்டு மெழுகிய மண்தரை வீட்டிலோ அல்லது செம்மண் சுவற்றிலோ வரைந்தால் அச்சுப் பதித்தது போல மிக அழகாக காட்சியளிக்கும். அடுத்து மெழுகும்வரை நடந்து நடந்து வெள்ளைக் கலர் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு கலருக்கு மாறினாலும் அப்படியே இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீட்டுத் தரைகளை கிரானைட், மார்பிள், டைல்ஸ் என ஆக்கிரமித்துவிடுவதால் வீடுகளுக்குள் போடும் கோலம் அரிதாகிவிட்டது. 

எங்க வீட்டு வாசலை அலங்கரித்த இந்த வருசத்து மார்கழிக் கோலங்கள் கீழே.... இவை அனைத்துமே என்னோட இல்லத்தரசியின் கைவண்ணமே... எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க...








கோலங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 11 ஜனவரி, 2016

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

தொடர்பதிவுகள் முடிவதில்லை என்பது போல் கடவுளைக் கண்டு கேட்ட கேள்விகள் இன்னும் முடியாதபட்சத்தில் இப்போ பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்  சகோதரி மகிழ்நிறை மைதிலி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்... ஆனா சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ்கிட்ட நம்ம ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மாட்டிக்கிட்டதும் இல்லாம நம்மளையும் மாட்டிவிட்டுட்டாங்க... சரி அழைத்தாச்சு... எழுதுறதுதான் மரியாதை... அப்படியே நமக்கும் ஒரு பதிவு தேறும்... அதுபோக நாம ரெண்டு அப்பாவிகளை மாட்டிவிடலாமே... சரி வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்...


1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

நாம இருந்தது தமிழகத்தின் கடைக்கோடியில்... கல்லூரி, பல்கலைக்கழகம், பின்னர் தேவகோட்டை கல்லூரியில் பணி என என் வாழ்க்கை வயலோடும் வரப்போடுமே திருமணம் வரை பயணித்தது. எங்கு சென்றாலும் பேருந்துப் பயணமே... ரயில் பயணம் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான். முதல் பயணம் சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னோட சான்றிதழ்களில் அமீரக தூதரகத்தில் கையெழுத்துப் பெறுவதற்காக மனைவியின் மாமா மற்றும் உறவினர் பையனுடன் போனேன். மிகவும் அருமையானதொரு பயணம்... ஒரு ராணுவ வீரரின் குடும்பத்துடன் பேசியபடி பயணித்தோம்.  இரண்டு நாட்கள் பயணம்... சந்தோஷமான பயணம்.

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

மறக்கமுடியாத பயணம்ன்னா நிறைய இருக்கு... ஒவ்வொன்னாப் பார்ப்போமே... ரயிலில் என்றால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சென்ற பயணங்கள்... அதிலும் குறிப்பாக நான், மனைவி, என் மகள் ஸ்ருதி என மூவரும் பயணித்த பயணங்கள்... ஸ்ருதிக்கு சன்னல் வழியே செழிப்பான, விளைந்து நின்ற வயல்களைக் காட்டியபடி பயணித்தது மறக்க முடியாதது.

பேருந்தில் என்றால் எம்.சி.ஏ., பண்ணும் போது காரைக்குடியில் இருந்து என்.என்.எல் பேருந்தில் பயணித்த தினங்கள்... பிடித்த பாடல்கள்... எங்களது நட்புக்கூட்டம், கண்டக்டருடன் அரட்டை, எங்களுக்காக பேருந்தை நிறுத்தி வைத்து ஏற்றி வருவது என அது ஒரு சந்தோஷமான பயண அனுபவம்தான் போங்கள்.

வேனிலோ காரிலோ என்றால் அம்மா, அப்பா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி  என எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அழகர் கோவில் சென்று அப்படியே மீனாட்சியை தரிசித்து வரும் அந்த நாட்கள் என்றுமே மகிழ்ச்சியான நாட்களே... அப்படி ஒரு பயணம் சென்ற முறை அழகர்கோவிலுக்கு ஏற்பாடாகி பின்னர் சிலகாரணங்களால் முடியாமல் போக பின்னர் திருச்செந்தூருக்கு அதேபோல் ஒரு பயணம் அமைந்தது. இப்ப இருக்கும் குடும்ப பிரச்சினைகளில் இனி அது போன்றதொரு பயணம் அமையுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்தப் பயணம்தான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான பயணம்.

பைக்கில் என்றால் எங்கள் கணிப்பொறி மையம் பள்ளிகளில் வகுப்பெடுக்கும் போது கிட்டத்தட்ட  20, 25 கிலோ மீட்டரில் இருக்கும் கிராமத்துப் பள்ளிகளுக்கு நானும் என் நண்பன் முருகனும் ஆளுக்கொரு வண்டியிலோ அல்லது ஒரே வண்டியிலோ முன்னால் கணிப்பொறி மற்றும் கீபோர்டை வைத்து ஓட்ட பின்னால் ஒருவர் சிபியூ பிடித்திருக்க பயணிப்போம். அந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்.

சைக்கிளில் என்றால் கல்லூரி படிக்கும் போது நாங்கள் பத்துபேர் ஒரு குழுவாய் இருப்போம்... நல்ல நட்பு வட்டம்... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு தேவகோட்டையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் சென்றோம். அது மிகவும் இனிமையான பயணம்.. கல்லூரி வாழ்க்கையை நினைத்தால் மனசுக்குள் நவநீ, ஆதி, திருநா, ராம்கி, பிரான்சிஸ், முத்தரசு, அண்ணாத்துரை, சேவியர் என எல்லாரும் வந்து செல்லும்போது இந்த சைக்கிள் பயணமும் வந்து மலர்ச்சியை மனதில் புகுத்திச் செல்லும். அதேபோல் தினமும் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் நானும் ராம்கியும் மட்டும் சைக்கிளை மெதுவாக ஓட்ட மற்றவர்கள் நடந்துவர பயணித்த மூன்று வருடங்கள் மறக்கமுடியாதது.

நடைப்பயணம் என்றால் பழனிக்கு நடந்த அந்த ஆறு ஆண்டுகள், சபரிமலை சென்ற நான்கு ஆண்டுகள், திருப்பரங்குன்றம் சென்ற பயணம் மறக்க முடியாதது. 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

நமக்கு பேருந்துப் பயணத்திலே அலாதி இன்பம்... அதுவும்  பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கையோதான் என்னோட தேர்வு. காற்றும் வேண்டும் அதே நேரம் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க வேண்டும் எனவே சன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கவே பிடிக்கும். பேருந்தில் நின்று கொண்டோ அல்லது படியில் தொங்கிக் கொண்டோ பயணிக்கப் பிடிப்பதில்லை.

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

ராசாதான்..... 80, 90களில் ராசாவின் ஆதிக்கம் மேலோங்கிய பாடல்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மனநிலையைப் பொறுத்து மெலோடியோ அடிப்பாடலோ கேட்கத் தோன்றும். ராமராஜனின் பாடல்கள் எல்லாம் விருப்பம்... வேனில் பயணித்தால் நான் தேடித்தேடி பதிந்து வைத்திருக்கும் கேஸெட்டுக்களை அள்ளிக் கொண்டு போய்விடுவேன். அதுதான் காலை முதல் இரவு திரும்பும் வரை.... இப்பவும் எனக்கு ராசா பாடல்களே...

5.விருப்பமான பயண நேரம்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எப்பக் கிளம்ப வேண்டும் என்றாலும் ரெடிதான்.. இந்த நேரத்தில்தான் பயணிக்கனும் என்று எண்ணுவதில்லை.

6. விருப்பமான பயணத்துணை?

படிக்கும் காலத்தில் ஏதாவது வார, மாத இதழ்கள். இப்போ பெரும்பாலும் மொபைலில் சேமித்து வைத்திரும் பாடல்கள். 

7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

பயணத்துக்கு என தனி புத்தகம் எல்லாம் எடுப்பதில்லை... பெரும்பாலும் வார மாத இதழ்கள்தான்.

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

மழையில் நனைந்தபடி சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பது.... அதுவும் மழை அடித்துப் பெய்யும் போது முழுக்க நனைந்தபடி முகத்தில் சுளீரென பட்டுத் தெறிக்கும் மழையை ரசித்தபடி பயணிப்பதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அப்படியெல்லாம் எதுவுமில்லை... கேட்க்கும் பாடல் வரியும் வார்த்தையும் மாறாமல் அப்படியே முணுமுணுப்பேன்... அதே ராகத்திலும். அது இப்பவும் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது காதில் நுழையும் பாடல் வாய் வழியாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் பிடித்த பாடலென்றால் சத்தமாகவும் வரும்.

10. கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை... நிறையக் கனவுகளைக் செயலாக்க நினைத்து இன்னும் ஏமாற்றத்தில்தான் இருக்கு. அதனால் கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் எங்காவது பயணிக்க வேண்டும்.

(மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் இந்தப்பாடல்)

சரி.. நம்ம பயணம் முடிவுக்கு வந்தாச்சு... அடுத்த டிரைவரை மாற்றி விட்டுட்டு நாம இறங்கணும்.. அப்படி மாட்டபோற ரெண்டு பேரு... ம்... கில்லர்ஜி அண்ணாவை மாட்டலாம் என்றால் நிஷா அக்கா முந்திக்கிட்டாங்க... அதனால நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களையும் சந்தித்ததும் சிந்தித்ததும் வெங்கட் நாகராஜ் அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். இருவரும் நேரம் கிடைக்கும் போது மெதுவாக என்னைத் திட்டாமல் (திட்டமாட்டாங்க) எழுதுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

இதுல என்ன விஷேசம்ன்னா நான் சொல்லியிருக்கும் இருவருக்குமே பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரின் பகிர்வும் பக்காவாக இருக்கும் என்பதை இங்கு சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 9 ஜனவரி, 2016

மனசு பேசுகிறது : தாயும் தாரமும்


ரு மனிதனுக்கு தாயும் தாரமும் நன்றாக அமைந்துவிட்டால் அவனால் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும். தாய் சரியில்லாத பிள்ளைகள் பலரின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிப்பதில்லை. அதேபோல் தாரம் சரிவர அமையாத பலரின் வாழ்க்கையும் நன்றாக அமைவதில்லை. சரி தலைப்பை தாயா...? தாரமா..? அப்படின்னு வச்சிருக்கலாமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா பாருங்க... அப்படிக் கேள்விக்குறியோட தலைப்பு வச்சா இது பட்டிமன்றத் தலைப்பு ஆகிவிடும். சாலமன் பாப்பையா அவர்களைக் கூப்பிட்டால் தாய்தான் சிறந்தவள்ங்கிறேன்... அதுக்காக தாரத்தை விட்டுடுடமுடியுமாங்கிறேன் அப்படின்னு பேச ஆரம்பித்து விளக்கமாய் விளக்கி ராசாவை தாய்க்கு பேச வைத்தால் பாரதி பாஸ்கரை தாரத்துக்கு பேச வைத்து, நம்மை சிரிக்க வைத்து ரெண்டுந்தான் வேணுங்கிறேன்னு முடிப்பார். சரி இவரு வேண்டாம் சிரிக்க சிரிக்க பாட்டோடு பேசுற லியோனி அவர்களைக் கூப்பிட்டா 'அம்மான்னா சும்மா இல்லேடா'ன்னு ஆரம்பிச்சி பாட்டாலே விளக்கிச் சொல்லித் தாரம்தான் சிறந்ததுங்கிற அணிக்காக பேசுற அவர் மனைவியைப் பார்த்ததும் திருமணத்துக்குப் பிறகுதான் மனிதனுக்கு பொறுப்பு வருது... வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறான்... அப்படின்னு எல்லாம் சொல்லி இப்ப வந்த தங்கமகன்ல இருந்து 'என்ன சொல்ல ஏது சொல்ல'ன்னு பாடி தாரமேன்னு சொல்லிடுவாரு. அதனால பட்டிமன்றம் வைக்காமல் தாயும் தாரமும்ன்னு நாமே பேசலாம்.

இந்த தலைப்பு வச்சு எழுதக் காரணம் ஒரு சின்ன விவாதமே. வியாழன் அன்று அலுவலகத்தில் பேசிய போது இது குறித்தும் பேசியதால் தோன்றியதே இந்தத் தலைப்பு. எங்க எகிப்துக்காரனுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. மனைவியின் பெற்றோர் இங்குதான் இருக்கிறார்கள். அதனால் அவனது மனைவியும் இங்கு இருக்கிறார். எங்களுக்கு எட்டு மணிக்கு அலுவலகம், ஆனால் அவன் வருவது பத்து மணிக்குத்தான்... காலையில் வரும்போது அத்தி பூத்தாற்போல் வீட்டிலிருந்து காலை டிபனோ அல்லது மதிய உணவோ எடுத்து வருவான். பெரும்பாலும் வந்ததும் ஆர்டர் பண்ணித்தான் சாப்பிடுவான். அன்றும் பத்து மணிக்கு மேல்தான் வந்தான். வீட்டிலிருந்து எதுவும் கொண்டு வரவில்லை... ஆர்டரும் சொல்லவில்லை, சரி சாப்பிட்டு வந்திருப்பான்னு நினைச்சோம். இன்னைக்கு வீட்லயே சாப்பிட்டு வந்தாச்சு போலன்னு நாந்தான் மெதுவாக் கேட்டேன். உடனே அவன் இல்லை இனிதான் சாப்பிடணும் என்றான். எதுவும் கொண்டு வரவில்லையா என்றதும் இல்லை... என் மனைவி விருப்பப்பட்டால்தான் செய்வாள். தினமும் செய்து தரமாட்டாள் என்றான். என்னடா இது எட்டு மணிக்கு வந்தாலும் பரவாயில்லை பத்து மணிக்கு வர்றே... இங்கே நீ ஆர்டர் பண்றது பதினாறு திர்ஹாம் வருது. இது தேவையில்லாத செலவு தானே என்றதும் சிரித்து விட்டுப் பேச ஆரம்பித்தான்.

எப்பவுமே அம்மாதான் உசத்தி தெரியுமா..? அம்மாவுக்குத்தான் நம்மளைப் பற்றித் தெரியும்.. எங்கம்மா நாங்க பள்ளிக்கூடம் போகும் போது சாப்பாடெல்லாம் தயார் பண்ணி வச்சிட்டு எங்களை வந்து எழுப்பி குளித்து சாப்பிட்டுப் போகச் சொல்லும். இப்ப என் மனைவிக்கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது.  காலையில் கேட்டால் கொஞ்சம் தூங்க விடுங்களேன் என்பாள். அதனால் நான் ஒண்ணும் கேட்பதில்லை. இரவில் கூட வெளியில் போய்விட்டு எங்காவது சாப்பிட்டு வர வேண்டும் என்றான். என்ன உலகமடா இது... நம்மளைப் போல நாலுவகை செய்தாலும் பரவாயில்லை. ஒரு பன்னை ரெண்டாக் கீறிக்கிட்டு உள்ளே இலை, தழைகளை வைத்து வெண்ணெய், அரைத்த கடலை எல்லாம் போட்டு விட்டால் வேலை முடிந்தது. இல்லேன்னா ரெண்டு பிரட்டை எடுத்து டோஸ்ட் பண்ணிட்டு முட்டையை புல்பாயில் போட்டு அதுக்குள்ள வச்சிக் கொடுத்தா வேலை முடிந்தது இதைச் செய்ய அந்தப் பெண்ணால் முடியவில்லையாம் என்று நினைத்துச் சிரித்தபோது 'மனைவி எப்பவுமே தொல்லைதான்' என்று அவனும் சிரித்தான். சிறிது நேரத்தில் அவனுடனான எங்கள் உரையாடலை நிறுத்திக் கொண்டோம்.

அதன் பின்னர் நானும் மலையாளியும் இது குறித்துப் பேசினோம். அப்ப அவன் சொன்னான் அம்மாதான் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். இது குறித்து மலையாளத்தில் ஒரு கதை சொல்வார்கள் என்று சொல்ல ஆரம்பித்தான். ஒருத்தன் அரபு நாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்குப் போவதற்கு முன்னர் வீட்டிற்கு அழைத்து மனைவி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாரிடமும் பேசி என்ன வேண்டும் என்று கேட்க, அவர்கள் எல்லாம் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்தார்களாம். எல்லாரிடமும் பேசியதும் அம்மாக்கிட்ட கொடுங்கன்னு சொல்லி இந்த மாதிரி இத்தனாம் தேதி வர்றேம்மா... திருவனந்தபுரம் ஏர்போர்ட்தான்.... இத்தனை மணிக்கு இறங்கும் என்றெல்லாம் சொல்லி உனக்கு என்னம்மா வேணும் என்றானாம். எனக்கு எதுக்குப்பா... அதெல்லாம் வேண்டாம்... நீ இறங்குனதும் சாப்பாட்டுக்கு இங்கதானே வருவே... உனக்குப் பிடிச்ச கறி சமைச்சி வைக்கிறேன் என்றாராம். அம்மாவுக்கு மட்டுமே மகன் மீது பாசம் மற்றவர்களுக்கு எல்லாம் கொண்டு வரும் பொருள் மீதே பாசம் என்று சொல்லி, அம்மாவுக்கு என்னோட மார்க் 100க்கு 100 என்றான்.

நான் நூற்றுக்கு நூறு மார்க்கை ஏற்கவில்லை... உடனே அவன் என்ன நீ இப்படிப் பேசுறே என்றான். இங்கபாரு அம்மாவுக்கு மகன் மீது அதிக பாசம்... பார்த்துப் பார்த்துச் செய்வாள் என்பதெல்லாம் நான் ஏத்துக் கொள்கிறேன். ஆனாலும் மகனுக்கு திருமணம் ஆனதும் எங்கே நம் பிள்ளையை பிரித்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அதன் பிறகான அம்மாவின் பாசத்தில் மருமகள் மீதான கோபமும் ஏறி விடுகிறது. இதனால் சதா சண்டைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. மருமகளும் மாமியாரும் கீரியும் பாம்புமாக மாறி அவனை நிம்மதி இழக்கச் செய்து விடுவார்கள் என்றேன். இல்லை இல்லை அம்மாவுக்கு அப்படி மனசு வராது... வர்ற பெண்தான் பிரச்சினைக்கு காரணமாவாள்... அம்மாக்கள் எப்போதும் அம்மாக்களே... அந்தப் பாசத்துல வேஷம் இருக்காது... நேசம் மட்டுமே இருக்கும் என்றான்.

நானும் அம்மாவின் பாசத்தில் நேசம் மட்டுமே இருக்கும் என்பதை ஒத்துக் கொண்டேன். ஆனால் 100 மார்க்கெல்லாம் அதிகம் 50-ல் இருந்து 75 சதவிகிதமே அம்மாவின் பாசத்துக்கு கொடுக்கமுடியும். 25 சதவிகித அம்மாக்கள் மகனின் திருமணத்திற்குப் பிறகு சுத்தமாக மாறிவிடுகிறார்கள். மகன் நல்லதே சொன்னாலும் செய்தாலும் என்னடா அவ சொல்லிக் கொடுத்துத்தானே நீ பேசுறே என்பார்கள். பக்கத்து வீட்டு மனிதர்களிடம் 'இப்ப இந்தப்பய சுத்தமா மாறிட்டான்... என்னைப் பார்க்கிறதே இல்லை... எல்லாத்துக்கும் காரணம் அந்தச் சிறுக்கிதான்...' என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவர்களின் பாசத்துக்குள் கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பித்து விடுகிறது என்றேன். அவன் சிரித்தான்... பின்னர் ஆமோதித்தான்.

நான் சொன்னேன்... நான் படிக்கும் போது எங்கம்மா எனக்கு அதிகாலையில் பேருந்து என்றால் மூன்று மணிக்கே எழுந்து சமையல் பண்ணி டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து என்னை எழுப்பி குளித்துவிட்டு வந்ததும் அந்த நேரத்தில் சாப்பிடச் சொல்லி அனுப்பி வைப்பார். என் திருமணத்திற்கு முன்பு வரை நானே எங்கம்மாவுடன் இருந்தவன் என்பதால் எனக்கு எது புடிக்கும் எது புடிக்காது எனப் பார்த்துப் பார்த்துச் சமைப்பார். திருமணத்திற்குப் பின் என் மனைவி, என் அம்மா போல்தான் அதிகாலையில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்னரே எழுந்து டிபன் செய்து, எனக்கான எல்லாம் தயார் பண்ணி, சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார். அதனால் ஒருவனுக்கு அம்மாவும் தாரமும் ஒரே அலைவரிசையில் அமைந்து விட்டால் அவனுக்கு எங்கம்மா உசத்தி என மனைவியிடமும் என் மனைவி என்னை எப்படிப் பாக்குறா தெரியுமா என அம்மாவிடம் சொல்லத் தேவையில்லை என்றேன்.

என் மனைவி இங்கு வந்திருந்த ஒரு மாதமும் எனக்கு காலையில் டிபன் செய்து கொடுத்து மதியத்துக்கு சாப்பாடு, குழம்பு, கூட்டோ அல்லது பொரியலோ செய்து கொடுத்துத்தான் அனுப்பினார். இவனுக்குப் பார்... அந்தப் பெண்ணால் ஒரு பிரட் எடுத்து செய்து கொடுக்க முடியலை. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான்... அது எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை என்றேன். மலையாளியோ மறுபடியும் என்ன இருந்தாலும் அம்மாதான் உசத்தி என்றான். பாசத்தில் மனைவியின் பாசத்தைவிட அம்மாவின் பாசம் கொஞ்சம் உசத்தியாய் இருக்கலாம். அம்மாவுக்கு குழந்தைகளின் மீது கூடுதல் பாசம் வருவது இயற்கை.... ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  அம்மா நம்மை பெத்தெடுப்பவள் என்றால் வரும் மனைவியோ நம்மை தத்தெடுப்பவள்.. எனவே தி.மு அம்மா என்றால் தி.பி மனைவி, மனைவி வந்த பின்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழப்பழகுகிறான் என்றேன். தி.மு, தி.பி என்று சொன்னதை கேட்டுச் சிரித்தான்... ஆனால் ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.

பின்னர் இதைப் பற்றி மற்றொரு நண்பருடன் பேசும்போது என் மனைவி என்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை... எங்கம்மாதான் இப்பவும் வாஞ்சையாக என்னை உச்சிமோர்ந்து எப்படியிருக்கேன்னு கேட்பார் என்று சிலாகித்தார்... நல்ல மனைவி வாய்க்கப் பெற்றவனுக்கு இரட்டை அன்னை என்று நினைத்துக் கொண்டேன். எனக்கும் இரட்டை அன்னை அல்லவா... என்னையே சிந்திக்கும் மனைவி கிடைத்திருக்கும் போது என்ன கவலை சொல்லுங்க... சரி அது இருக்கட்டும்... ஆனால் அதன் பிறகு சொன்னது உண்மைதான். அதை என்னாலும் மறுக்க முடியவில்லை... நாம் யாருடன் பேசினாலும் ஹலோ என்றதும் சொல்லுங்க என்றோ, என்ன பண்ணுறீங்க என்றோதான் ஆரம்பிப்பார்கள்... நாமும் பெரும்பாலும் அப்படியேதான் ஆரம்பிப்போம். ஆனால் அம்மாவோ நம் குரல் கேட்டாலே 'என்னப்பா நல்லாயிருக்கியா...? சாப்பிட்டியா...?' என்று கேட்ட பின்னர்தான் பேச ஆரம்பிப்பார்கள் என்றார். ஆம்... இது உலகெங்கும் ஒன்றுதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. தாய்ப் பாசம் என்பது அளவிட முடியாதது... ஆனாலு சில நேரங்களில் சில மனிதர்கள் விதையும் நஞ்சில் இந்தப் பாசம் சற்றே தள்ளாடும் என்பதாலேயே என்னால் முழு மதிப்பெண் கொடுக்க முடியவில்லை... இதைத் தவறென்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் பார்த்த, என் நட்புக்களின் வாழ்வில் கேட்ட சில அம்மாக்கள் இந்த வட்டத்துக்குள் வருகிறார்கள். அவர்களைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படிப் பார்க்கும் போது எல்லா இடத்திலும் களை இருக்கத்தான் செய்கிறது. என்ன மற்ற இடத்தில் களை அதிகம் இருந்தால் அம்மாக்கள் என்ற விளைச்சலில் களை குறைவாக இருக்கலாம். அதனால்தான் இருபத்தைந்து சதவிகிதம் மாற்று இருக்குன்னு சொல்றேன்.

இந்த விவாதம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது நேற்று ஒருவருடனும் பேசும்போதும் தொடர, அவர் நாம் அம்மா வயிற்றுக்குள்ளேயே பத்து மாசம் இருப்பதாலும் தொப்புள்கொடி உறவாலும் தான் நம்மைப் பற்றி அம்மாவுக்கு அதிகம் தெரிகிறது என்பதோடு மட்டுமில்லாமல் நமக்கு பசி என்பதை அவரால் மட்டுமே அறிய முடிகிறது என்றார். நம் பசியை அம்மாவால் அறிய முடியும்தான்... ஆனால் அம்மா போலவே ஒருத்தனுக்கு மனைவி அமையும் போது அவளாலும் அவனது பசியை மட்டுமில்லாமல் மனசையும் அறியமுடியும் அல்லவா? எத்தனையோ பேர் சாதிக்க மனைவிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். எனவே தாயும் தாரமும் 50-50 என அமைந்தால் ஒரு மனிதன் 100 சதவிகிதம் சந்தோஷமாகவும் நினைத்த இடத்தை அடைந்து வாழ்வில் பூரண சுகத்துடன் ஜொலிக்க முடியும். அதைவிட மாமியாரும் மருமகளும் புரிந்து கொண்டு அன்பாய் இருந்தார்கள் என்றால் அவனுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்த சந்தோஷம் கிடைக்கும்.

எனவே தாயா... தாரமா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தாமல் அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்.

என்ன உறவுகளே... இந்தக் கருத்து சரியா... தவறா... அம்மான்னா அவங்களுக்கு மார்க்கெல்லாம் கொடுக்க முடியாது... அவங்களை தெய்வமாய்த்தான் வைத்துப் பார்க்க முடியும் என்கிறீர்களா...? அல்லது இந்த மார்க்கில் உடன்படுகிறீர்களா..? இதையெல்லாம் விடுத்து உனது பார்வையில் கோளாறு இருக்கிறது என்கிறீர்களா...? எதுவாக இருந்தாலும் கருத்தில் சொல்லுங்கள்.... கருத்தின் மூலமாக இதை இன்னும் தொடர்வோம்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 7 ஜனவரி, 2016

மனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்


சென்ற திங்கள்கிழமை நம்ம தஞ்சையம்பதி செல்வராஜூ அய்யா அவர்களின் பேத்தியின் பிறந்ததினம். மாலை அவர்கள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. கில்லர்ஜி அண்ணா அவர்கள் ஒருவாரமாகவே ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கும் செல்ல ரொம்ப ஆசை... ஆனால் கடந்த சில வாரங்களாகவே ஒரு பிரச்சினைக்குரிய வேலையை எடுத்திருக்கிறோம். இதை முடித்தால் இந்த வேலை முடிவுக்கு வந்துவிடும். அதன் காரணமாக எங்களுக்குள் பிரச்சினை மேகம் சூழ்ந்திருந்தது. அது பெருமழையாகி அடிதடி... வெட்டுக்குத்து... என எல்லாம் நடக்கலாம் என்ற சூழலில்தான் பயணித்தோம்... இன்னும் பயணிக்கிறோம். அதனால் மாலை சீக்கிரம் வீடு திரும்ப முடியவதில்லை... அண்ணனிடம் விபரம் சொன்னேன்... சரி ஆறு மணிக்குள் வர முடிந்தால் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்... நம்ம நேரம் பாருங்க... அன்னைக்கு நான் வெளியில் வந்து போன் பண்ணும் போது ஆறுக்கு மேலாகியிருந்தது. இனி அறைக்கு வந்து கிளம்பி... நம்மால் ஏன் அவருக்கும் தாமதமாக வேண்டும் என அண்ணனிடம் மீண்டும் போனில் பேசி விபரம் சொல்லி எனது வாழ்த்தையும் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி விட்டேன். இங்கு சொந்தங்கள் கிடைப்பதே அரிது... அப்படியிருக்க அன்பாய் அழைத்த பிறந்தநாளுக்குச் செல்ல முடியவில்லை... குட்டீஸ்க்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற வருத்தம்தான் மனசில்... கில்லர்ஜி அண்ணாவுடன் இடையில் ஒருநாள் சென்று வர வேண்டும்... இப்போதைக்கு செல்லக்குட்டிக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.


ந்த மனுசனை கொஞ்ச நாளாத்தான் பதிவுப்பக்கம் காணோம்...ஆனா ஆளு எதோ முக்கியமான வேலையா இருக்காருன்னு மட்டும் தெரியுது. இல்லேன்னா எங்க யாரு எழுதியிருந்தாலும் அங்க இவரோட கருத்து இருக்கும். சில நாட்களில் இங்கு இரவு பனிரெண்டு மணிக்கு (இந்திய நேரம் இரவு 1.30) யாருக்காச்சும் கருத்துப் போடப் போயி அங்க நாமதான் முதல்லு நினைச்சு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டா... இவர் அங்கு கருத்து இட்டிருப்பார்... வலைச்சரத்தில் உங்களைப் பற்றிச் சொல்லிய அந்த வார ஆசிரியர் விவரம் சொல்ல வருமுன் இவர் அங்கே சொல்லி இணைப்பும் கொடுத்திருப்பார்... நமது தளத்தில் ஏதாவது பிரச்சினையா ஓடி வந்து உதவுவார்... யாரைச் சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் தெரியாமயா இருக்கும்... ஆமா நம்ம வலைச்சித்தர் அண்ணன் தனபாலன் அவர்களைத்தான் சொல்றேன். அவரைப் பற்றி எதுக்கு எழுதுறான்னு எல்லாம் நினைக்கமாட்டீங்க... ஏன்னா நீங்கள்லாம்தான் அவரோட முகநூல் பக்கத்துல வாழ்த்து மழை பொழிஞ்சிட்டீங்களே...  அந்த குங்குமப் பொட்டுக்காரரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் இரண்டு முறை போனிலும் சில பல மின்னஞ்சலிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்பு அண்ணன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ன் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்லச் சொன்னார்... எல்லாருக்கும் என் மனைவியின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்தே எங்களை மலர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நலமோடும் வளமோடும் வாழ வைக்கும்... மீண்டும் நன்றி.

ன் மனைவியின் பிறந்தநாளுக்கு சேனையில் வாழ்த்துப் போட்ட நிஷா அக்காவுக்கும் அங்கு வாழ்த்திய நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும், என் கொலையாளி யார்..? குறுநாவலின் தொடர் வாசகி, என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்த என் எழுத்தின் ரசிகை, எனது அன்பு அக்கா பானு ஷாபனா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தை தொடர்ந்து பூங்கதிர் சார் பகிர்ந்து வருவது மகிழ்ச்சி என்றால் சென்ற வாரத்தில் வாசகர் வாய்ஸ் என்ற பகுதிக்கு எழுதியதில் பாக்யராஜ் சார் தேர்வு செய்த கருத்துக்களில் என் கருத்தும் ஒன்று... ரொம்பச் சந்தோஷமாக இருந்தது... திரைக்கதை மன்னனல்லவா அவர்... அவரின் மனசுக்கு பிடிச்ச மாதிரி நம்ம கருத்து இருப்பதே பெரிய விஷயம் அல்லவா.. என்னவோ தெரியலை முந்தாநாள் தாவணிக் கனவுகள் படம் பார்க்கணுமின்னு தோணுச்சு... இதற்கு முன் அந்தப்படத்தை முழுவதும் பார்த்ததில்லை... கோழி கிளறியது போல் சில இடங்களை மட்டும் பார்த்திருப்பேன். நேற்று உட்கார்ந்து பார்த்தேன்... என்ன அழகான ஸ்கிரீன்பிளே... ஐந்து தங்கைகளின் அண்ணனாக... அதுவும் கஷ்டப்படும் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக மனுசன் வாழ்ந்திருக்கிறார். வசனங்களில் அத்தனை ஷார்ப்... அதுவும் பாரதிராஜா அவர்களின் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து ராதிகாவிடம் நடித்துக் காண்பிக்கும் போது பேசும் வசனங்கள்.... அதேபோல் இறுதிக்காட்சியில் மனிதர் பேசாமல் பெண்களைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கும் இடத்தில் வரும் வசனங்கள்... தியேட்டர் காட்சிகள் சிரிக்க வைத்தாலும் ரொம்பவே சிந்திக்க வைத்தது. திரைக்கதை மன்னன்னா அவர்தான் போங்க... அவருக்கும் பிறந்தநாளாம்... ஆர்.வி. சரவணன் அண்ணன் மட்டும்தான் சொல்வாரா நாமளும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிடுவோம்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்.


ன்னடா ஒரே பிறந்த நாளா இருக்குன்னு யோசிக்காதீங்க வாங்க கொஞ்சமா அரசியலும் பேசுவோம், பொங்கல் பரிசுன்னு சொல்லி ஒரு ரெண்டு கோடியை அம்மா கட்டம் கட்டிருச்சு போல. வெள்ள நிவாரணத்துக்கு வந்த தொகை இப்போ மக்களை மயக்கி முட்டாளாக்கி ஜெயிக்கிறதுக்காக பயன்படப்போகுது... சரி விடுங்க... பச்சரிசி, வெல்லம், கரும்பு, கையில 100 ரூபா... (இதுல நிறைய 100 ரூபாய் அம்மாவுக்கே திரும்பி போயிரும் டாள்மார்க் வாயிலாக) எல்லாம் கொடுக்கிறாங்களாம்.. விடாதீங்க... வாங்கிக்கங்க... ஆமா என்ன கொடுத்தாலும் வாங்கிக்கங்க.. செய்வீங்களா... செய்வீங்களான்னு கேட்டா செய்வோம்... வச்சிச் செய்வோம்ன்னு  மறக்காம சொல்லிடுங்க...? அதே மாதிரி ஐந்து வருடத்துக்கு முன்னால நாம அனுப்புன எம்.எல்.ஏ. ஓட்டுக் கேட்டு வருவாப்ல... இப்பத்தான் வழி தெரிஞ்சுச்சான்னு எல்லாம் கேக்காதீங்க... வரவேற்பு கொடுங்க... ஆளுயர மாலை போடுங்க...முடிஞ்சா அடிக்காம அடிக்கு ஒரு கட் அவுட்டோ பதாகையோ வையுங்க.. உனக்குத்தான் ஓட்டு... உன்னை வச்சிக் குத்துறோம்ன்னு சொல்லுங்க... அப்புறம் ஆல் அல்லக்கைஸ் கண்டிப்பா  அம்மா, அய்யான்னு வருவாங்க... தவறிக்கூட உங்க கோபத்தைக் காட்டிராதீங்க... கொடுக்கிறதை வாங்கிக்கங்க... அவங்களை கொண்டாடி அற்புதப்படுத்துங்க... முடிஞ்சா கரகாட்டம், ஆடல்பாடல் எல்லாம் வச்சி ஜமாய்ங்க... ஆனா தப்பித்தவறிக்கூட உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லாதீங்க.... எல்லாம் உங்களுக்கேன்னு சொல்லி வர்றவனுக்கிட்ட எல்லாம் வஞ்சமில்லாம சிரிச்சி வையுங்க... ஆனா தேர்தலப்போ சிந்தித்து ஓட்டுப் போடுங்க... காசுக்கும் சேலைக்கும் பொங்கல் பரிசுக்கும் ஏமாந்துறாதீங்க... அப்புறம் அடுத்த அஞ்சு வருசத்துக்கு உங்க வாழ்க்கையில பஞ்சம்தான்... இந்த முறை ஆணவ ஆட்சியையும் வாரிசு அரசியலையும் ஒளித்து வாழ்க்கைக்கு வளமான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுங்க.



சி படம் பார்க்கணும்ன்னு ரொம்பநாளா ஆசை... ஆனா பார்க்க முடியாமலே போனது... நேற்றுப் பார்க்க முடிந்தது... அருமையான படம்... அதுவும் ஷோபா... அப்பப்பா அந்த மாதிரி நடிக்கிற நடிகை நம்ம காலத்துல இல்லாமப் பொயிட்டாங்களே... குப்பத்துப் பெண்ணாய்... சும்மா மும்பையில அந்தப் பையன் அடித்த ஆயிரம் ரன்னு மாதிரி பத்து மடங்கு புகுந்து விளையாடியிருக்காங்க... என்ன நடிப்பு... என்ன நடிப்பு... அடேங்கப்பா... டெல்லிகணேஷ் குடும்பத்தை பற்றி சிந்திக்காத ஒரு தந்தையாக வருகிறார்... அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே அருமையா நடிச்சிருக்காங்க. கமல் ஒரு காட்சியில் வருகிறார். சோகமான முடிவாய் இருந்தாலும் கடைசிக் காட்சியில் திரையில் போடப்படும் வரிகள் அருமை. படம் பார்க்கும் போது நல்ல நடிகை... தேசிய விருது வாங்கியவர்... தற்கொலை செய்து கொண்டு எதற்காக சாகணும்... வாழ்ந்திருக்கலாமே... இன்னும் நிறைய சாதிச்சிருக்கலாமே என்றுதான் தோன்றியது. பாவம் ஷோபா... 


சில தொடர்கள், சில கதைகள் எழுதும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அலுவலக வேலையின் பிடியில் சிக்கி கற்பனைக்கு சிறையிட்டு இருக்க வேண்டியதாகிவிட்டது. அப்படியிருந்தும் 2016 தொடக்கத்தில் எதாவது எழுதணும் என இரண்டு கதைகள் எழுதியாச்சு.. இனி வரும் நாட்களில் நிறைய எழுதணும்... வித்தியாசமான முயற்சியாய் நல்ல தொடர்கள் எழுதணும்... இங்கு இன்னுமொரு காதல் தொடர்கதை ஆரம்பிக்கணும் என்ற ஆசையிருக்கிறது. எண்ணங்கள் ஈடேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ப்படியே ஷோபா நடித்த முள்ளும் மலரும் படத்தில் இருந்து ஒரு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...



மனசின் பக்கம் அடுத்த வெள்ளியில் மீண்டும்..
-'பரிவை' சே.குமார்.