மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 21 நவம்பர், 2014

வீடியோ : ஜெமினியின் ஜெம் ராகங்கள்

ஜெமினி கணேசன்.

மலஹாசனுக்கு காதல் இளவரசன் பட்டம் கிடைக்காம போகக் காரணமே இந்த ஆளுதான்... என்னடா இவன் புதுக்கதையாக் கிளப்புறானேன்னு பாக்குறீங்களா? ஆமாங்க... இந்தாளு மட்டும் காதல் மன்னன்கிற பட்டத்தை பறிச்சி வச்சிக்கலைன்னா பின்னால வந்த நம்ம முத்தகாசனுக்கு காதல் மன்னன்னு பட்டம் கொடுத்திருப்பாங்க...  ஆனா ஆளு விடவே இல்லையே... அந்தப் பட்டத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டதும் இல்லாம வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே இருந்தாருல்ல... ஒருவேளை இன்னைக்கு இருக்க மாதிரி சூப்பர் ஸ்டாரு... அடுத்த சூப்பர் ஸ்டாரு... மூணாவது சூப்பர் ஸ்டாருன்னு பட்டம் மாறிக்கிடே இருக்க நிலை அன்னைக்கி இருந்திருந்தா காதல் மன்னன் பட்டம் கமலுக்குப் போயிருக்கும்.

புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் அவர்கள் தான் பார்த்த ஆசிரியர் வேலையை விட்டு விட்டு சினிமா உலகிற்குள் வந்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததால் பின்னாளில் கதாநாயகனாக ஆனபோது  சிவாஜி நாடகத்தில் நடித்த கணேசன்... சிவாஜி கணேசன் ஆனது போல் தான் வேலை பார்த்த நிறுவன பெயருடன் தனது பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

எப்படி கமல் ரஜினி  கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலை நாயகர்களாக பலர் இருந்தாலும் விஜயகாந்த் பேசப்பட்டாரோ அதே போல் எம்ஜிஆர் சிவாஜியின் காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலையில் பலர் இருந்தும் ஜெமினி முன்னிலையில் இருந்தார் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. மலைகள் இரண்டு வெவ்வேறு பாணியில் பயணிக்க இடையில் இவரோ காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்து சாம்பார் கணேசன் என்று அன்பாக(!) அழைக்கப்பட்டாலும் காதல் மன்னனாக உயர்ந்து நின்றார். அவரின் பாடல்கள் சில இங்கே... கேளுங்கள்... ரசியுங்கள்... பின்னர் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிலவும் மலரும் பாடுது...



தனிமையிலே இனிமை காண முடியுமா...




வாடிக்கை மறந்ததும் ஏனோ..?




பிருந்தாவனமும்  நந்தகுமாரனும்...




காலங்களில் அவள் வசந்தம்...




அழகிய மிதிலை நகரினிலே...




பாட்டுப் பாடவா...




ஓ ஹோ எந்தன் பேபி...




வாராயோ வெண்ணிலாவே...




அன்று ஊமைப் பெண்ணல்லோ...




காலையும் நீயே மாலையும் நீயே...



பாடலை ரசித்தீர்கள்தானே... ஏன்னா என்னடா இவன் பாட்டைப் போட்டு பதிவு ரெடி பண்ணிடுறானேன்னு நினைச்சிட்டீங்கன்னா... எழுத நினைத்து சில வேலைகளால் தள்ளிப் போட நேர்ந்ததால்தான் இது போல பாடல்களைப் பகிர்வாக்குகிறேன்னு முன்னமே சொல்லியிருக்கேன். அப்படியிருந்தாலும் பழைய பாடல்களாகத் தேடித்தேடித்தானே தருகிறேன்... அப்ப இதுவும் பதிவுத் தேடல்தான் என்பதை நினைவில் கொள்க. அப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. இருந்தாலும் வீடியோ பகிர்வும் அதற்கான தேடலும் வாராவாரம் ஆரவாரமாகத் தொடரும்.

நன்றி.

பாடல்களை யூடிப்பில் சேகரித்து வைத்திருந்தவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்

புதன், 19 நவம்பர், 2014

மனசு பேசுகிறது : தூறல் இன்னும் நிற்கவில்லை

திரைக்கதை ஆளுமை கே.பாக்யராஜ் பற்றித்தான் பார்க்கப் போறோம்.. இதற்குள் கிராமத்து நினைவுகளும் கலந்தே வரும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாக்யராஜ் படங்கள் என்றால் தவறாமல் அம்மாவை நச்சரித்து பார்த்து விடுவது உண்டு. அவரது கதை பயணிக்கும் விதத்திற்காகவோ இரட்டை அர்த்த வசனத்திற்காகவோ பார்க்கும் வயதில்லை ஆரம்பப்பள்ளியில் படித்த காலம், நகைச்சுவைக்காகவே மட்டுமே அவரின் படங்களின் மேல் ஒரு ஒட்டுதல் இருந்தது என்பதே உண்மை.


தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக்கள் வாங்கும் போது கமல் படமும் பாக்யராஜ் படமும் வாங்கி அனுப்பாமல் பத்திரமாக நமது சொத்தில் சேர்த்து வைக்கப்படும். என்னவோ அப்படி ஒரு கிரேஸ் இருவரின் மீதும்... பெரும்பாலும் எட்டாவது படிக்கும் வரை அம்மாவோடுதான் சினிமாவுக்குச் செல்ல முடியும். அது காலைக்காட்சியாக இருந்தாலும் சரி... மேட்னியாக இருந்தாலும் சரி... இல்லை இரவுக்காட்சியாக இருந்தாலும் சரி... அம்மாவை ஒரு வாரம் நச்சரிக்க வேண்டும். அம்மா ஊரில் அவரோடு சினிமாவுக்கு வரும் சொந்தங்களிடம் சொல்லி அவர்களையும் ஒத்துக்க வைத்து மறுவாரம் கூட்டிச் செல்வார்கள். அம்மாவுடன் அக்கா, நான், தம்பி மூவர் மட்டுமே இருந்ததால் மூவரும் அவருடன் அதிகமாய் படத்துக்குப் போய் இருக்கிறோம். சில படங்களை அம்மாவும் பஞ்சம்மாவும் கடைக்குப் பொயிட்டு வாறோம்ன்னு சொல்லி நைசாப் பாத்துட்டு வந்துருவாங்க. அது வேற விஷயம்... சரி பாக்யராஜ் சாரைப் பார்ப்போம் வாருங்கள்.

ஸ்கூல்ல படிக்கும் போது 'தூறல் நின்னு போச்சு' படம் பார்க்க அம்மாவை நச்சரித்து ஒரு வழியாக இரவுக்காட்சி பார்த்துட்டு வந்தாச்சு. அந்தப் படத்தில் நம்பியாரை ரொம்ப அருமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். பல முறை தொலைக்காட்சியிலும் சில முறை இணையத்திலும் பார்த்த போதுதான் அவரின் நடிப்பை ரொம்ப ரசிக்க முடிந்தது. காரணம் தூறல் நின்னு போச்சு பார்க்கும் போது நடிப்பை எல்லாம் சிலாகிக்கும் வயது இல்லை. அந்தப் படத்தின் நகைச்சுவை மற்றும் பாடல்களுக்காகவே ரொம்ப பிடிக்கும். பாட்டுப் பிடிக்கும்ன்னாலும் விரும்பிய நேரம் கேட்டு ரசிக்க வீட்டில் டேப்ரெக்கார்டர் இல்லை என்பதைவிட கரண்டே பத்தாவது படிக்கும் போதுதான் வீட்டிற்கு வந்தது என்பதே உண்மை.. 

வீட்டில் ஒரு நாலு கட்டை போடுற நேஷனல் ரேடியோ இருக்கும். அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அதில் நியூஸ் கேப்பார். எங்களுக்கு அதில் நாடகம், ஒலிச்சித்திரம், பாடல்கள் என கேட்பது பிடிக்கும். பேட்டரி மண்டையைப் போட்டுட்டா... அதான் பேட்டரி தீர்ந்து விட்டால் வெயிலில் வைத்தெல்லாம் இந்தப்படத்தின் பாடலைக் கேட்டிருக்கிறேன். சரி அடிக்கடி வண்டி வேற கிராமத்து நினைவுகளுக்குப் போயிடுது. பாக்யராஜ் கதைக்குள்ள போவோம்.



தூறல் நின்னு போச்சு பாத்த மறுநாள் பள்ளிக்கூடத்துக்குப் போயாச்சு... மத்தியானம் சத்துணவு சாப்பிட்டுட்டு பெரிய பசங்க மரங்குரங்கு (நம்ம ஊர்ல தவட்டாங்கம்பு) விளையாட, நான் செவனேன்னு ஒரு ஓரமா நின்னு பாத்துக்கிட்டு இருந்தேன். அப்பத்தான் நம்ம எட்டாப்பு சவரிமுத்து மரத்துல இருந்து கீழ குதிச்சான். சின்ன உடம்பு இல்ல... நல்லா கும்முன்னு இருப்பான். குதிச்சவன் நேர என்னைய செவத்துல தள்ளி பக்கத்து கல்லுல விழ வச்சிட்டான். முழங்கைக்குள்ள என்னமோ சொடக்குன்னு கேட்டுச்சு. அம்புட்டுத்தான் கொஞ்ச நேரத்துல சும்மா விறுவிறுன்னு வலி ஏறிடுச்சு. அப்புறம் எங்க பாப்பாத்தி டீச்சர் பாத்துட்டு கிளாஸ்ல உக்கார வச்சி ஈரத் துணியைத் சுத்தி விட்டாங்க. ம்ஹூம்... வீக்கம் பெரிசாகி வலி உயிர் போயிடுச்சு. உடனே பார்த்தாங்க... நம்ம ஊருப்பய ஒருத்தனைக் கூப்பிட்டு இவன வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னாங்க.

எனக்கு வீட்டுக்குப் போனா அம்மாக்கிட்ட பூஜை விழுகுமேன்னு ஒரே பயம்... இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும். போயி மெதுவாச் சொல்லியாச்சு. உடனே அம்மா நேத்து படம் பாத்துட்டு வந்து இன்னக்கி பள்ளிக்கொடத்துல போயி பாக்கியராஜூ சண்டை போட்டமாதிரி போட்டிருப்பாரு அதான் விழுந்து கையை ஓடிச்சிக்கிட்டு வந்து நிக்கிறாருன்னு அக்காக்கிட்ட சொல்லி நமக்கு நாலு மொத்து கொடுத்தாங்க... கை வலியோட முதுகு வலி வேற... அப்ப அறியாத வயசாப் போச்சு... இல்லேன்னா அப்பவே இப்படிக் கேட்டிருப்பேன்... ஆமா அவரு போட்ட சண்டை மாதிரி நா போட்டிருந்தாலும் அவரே ஏதோ சண்டையின்னு ஒண்ணு பண்ணுனாருன்னு... ஆனா நமக்கு அன்னைக்குத் தெரியாததால அம்மா அப்படிச் சொல்ல சரியான பதில் கொடுக்க முடியல... இப்ப யோசிக்கிறது அவரு போடுற சண்டையும் அதைப் பார்த்து நாம கையை ஒடிச்சிக்கிட்ட கதையும் காமெடியால இருக்குன்னு... அவரு சண்டையை நாம போட்டு கை ஒடிஞ்சது காகம் உக்கார பணம் பழம் விழுந்த கதைதான்.. போங்க...

ராத்திரி எங்க போயி மொடங்கட்டுறதுன்னு சொல்லி ஆவாரங்கொலையை பறிச்சாந்து ஏதோ பண்ணிக் கட்டுனாங்க... கொஞ்சம் வலி கொறஞ்சாலும் இரவெல்லாம் தூக்கமே இல்லை. மறுநாள் காலையில வேகவேகமாக் கிளப்பி எங்கூருல இருந்து கண்டதேவிக்கு கூட்டிக்கிட்டு வந்து (வரும்போது வழியெங்கும் ஒரே திட்டுத்தான்... அவங்க வலி அவங்களுக்கு... என்னோட வலி எனக்கு... வழியில முள்ளு வேற...) எட்டரை கே.எஸ்.எஸ்ல காரைக்குடி போயி அங்கிருந்து குன்றக்குடி நுடவைத்திய சாலை போனா... அவரு பேச்சுப் பேச்சா இருக்கும் போது கையை ஒரு ஒடி ஒடிச்சித்தான்யா கட்டுனாரு... அப்புறம் தொடர்ந்து வாராவாரம் போயி மாவுக்கட்டு, முட்டைப் பத்துன்னு போட்டுக்கிட்டு வந்தோம். தூறல் நின்னு போச்சு படம் பாக்க அஞ்சு ரூபா டிக்கெட்டா இருந்திருக்கும்... அப்புறம் செலவு பண்ணுனது.... ம்... படம் பாத்துட்டு செவனேன்னு நின்னவனை செவத்துல தள்ளுனது நம்ம சவரிமுத்து... அம்மாக்கிட்ட அதிகமா திட்டு வாங்குனது பாக்யராஜூ... பாவம் இந்தாளு என்னய்யா தப்பு பண்ணுனாரு.



இன்னுங் காமெடி இருக்கு... காலையில அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருப்போம். அந்தப் பஸ்ஸை விட்டுட்டா அப்புறம் கவர்மெண்ட் பஸ் வர ரெண்டு மணி நேரமாகும். குன்றக்குடி போயி வர்றது அப்படி அப்படித்தான்... அவசரமாக் கிளம்புவோமா அப்பத்தான் 'ஏரிக்கரை பூங்காத்தே' அப்படின்னு ரேடியாவுல பாட்டைப் போடுவானுங்க... உடனே மெதுவாக் கிளம்ப ஆரம்பிப்பேன்.. ஏன்னா பாட்டைக் கேக்கணுமில்ல... நம்மதான் பாக்யராஜோட தீவிர விசிறியாச்சே... என்னடா பஸ்ஸூ வந்துரும் கிளம்புடான்னு அம்மா கத்த, நீ போம்மா வக்கப்பொடப்பு (வைக்கோல் வைத்திருக்கும் இடம்) போறதுக்குள்ள வந்துருவேன்ன்னு சொன்னதும் மொட்டையாப் போவான் (சத்தியமா பாக்யராஜை இல்லைங்க) பாட்டைப் போட்டுட்டானுங்களா... இனி இவன் வந்த மாதிரித்தான்... படத்தைப் பாத்துட்டு வந்து கையை ஒடிச்சிக்கிட்டு இப்படி குன்னக்குடிக்கு லோ...லோன்னு அலைய விடுறே... இதுல பாட்டு வேற... பஸ்ஸூக்காரன் மாமனா மச்சானா நமக்காக நிக்கன்னு சத்தம் போடுவாங்க... இருந்தாலும் பாட்டைக் கேட்டுட்டுத்தான் போவேன்.

அப்புறம் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என வாழ்க்கைப் பயணம் வளர்ந்து வர, அம்மா துணையெல்லாம் இல்லாம நாமே படம் பாக்க போயாச்சு.. இது நம்ம ஆளு, வீட்ல விஷேசங்க, சுந்தரகாண்டம் அப்படின்னு தொடர்ந்து பாக்யராஜ் படங்களை விரும்பிப் பார்க்கும் போதுதான் அவரின் கதையைக் கொண்டு போகும் திறமையும் யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸூம் என்னை மிகவும் கவர்ந்தது. சுந்தர காண்டம் படத்தோட பாடல்கள் எல்லாம் என்னோட டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும். அவர் நகைச்சுவையாகப் பேசினாலும் இரட்டை அர்த்த வசனம் பேசினாலும் டிரேட் மார்க் நடனம் ஆடினாலும் மனுசன் கதைக்குள்ள வச்சிருப்பாரு எல்லாத்தையும்... அந்தக் கதையோட்டத்தை அடிச்சிக்க இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஆளு இல்லைன்னு சொல்லலாம்.

பாக்யராஜ் அவர்களிடம் பிடித்த மற்றொன்று என்னன்னா... நாம மட்டும் கண்ணாடி போட்டு நடிச்சா கூட நடிக்கிற நடிகை அழகா இருக்காங்கன்னு அவங்களைப் பத்தித்தான் பேசுவானுங்கன்னு கணக்குப் போட்டு மனுசன் அம்புட்டுப் பேருக்கும் கண்ணாடியை மாட்டி விட்டுருவாரு... நம்ம எவர்கிரீன் பாடல்களின் தல ராமராஜன் லிப்ஸ்டிக் போட்டு நடிச்சது மாதிரி... மனுசனுக்கு இளையராசா பாட்டுப் போட்டிருப்பாரேய்யா... ம்ம்ம்... டவுசரைப் போட்டுக்கிட்டு செண்பகமே.... செண்பகமேன்னு பாடுனது இன்னைக்கு வரைக்கும் காதுக்குள்ள ஒலிச்சிக்கிட்டுத்தானே இருக்கு... எங்க தலையைப் பத்தி பேசினா நிறைய எழுதலாம்... அதுக்கு தனியா பதிவு எழுதுவோம். இப்ப திரைக்கதை நாயகன் பாக்யராஜை பாலோ பண்ணுவோம்.



அவரின் இயக்கத்திலும் மற்றவர்களின் இயக்கத்திலும் உருவான படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களே. எங்க சின்ன ராசா, அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்னவீடு, புதிய வார்ப்புகள், சுவர் இல்லாச் சித்திரம், பாமா ருக்மணி என அவரின் படங்களை தொலைக்காட்சிகளில் பலமுறை பார்த்திருந்தாலும் அவ்வப்போது இணையத்திலும் பார்க்க தவறுவதில்லை. 

கல்லூரியில் படிக்கும் போது டி.ராஜேந்தரின் உஷா, பாக்யராஜின் பாக்யா ரெண்டும் பத்திரிக்கை உலகில் ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்திருந்த நேரம். நாம எப்பவுமே பாக்யாவோட வாசகன். அதிலும் குறிப்பாக அவரின் கேள்வி பதிலுக்காகவே பாக்யா வாங்குவேன். என் நண்பர் திருநாவுக்கரசோ ராஜேந்தரின் உஷா... ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனாலும் பாக்யாவிற்கே மற்ற நண்பர்கள் ஆதரவு இருந்ததால் நாங்கதான் ஜெயிப்போம். அப்ப ஒரு படம் போட்டு கவிதை எழுதச் சொல்லுவார். அப்படி எழுதி இரண்டாம் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறோம்.

கதாநாயனாக கோலோச்சியிருந்த காலம் முடிந்ததும் விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் எடுத்தார். அப்புறம் பல படங்களில் நடித்திருக்கிறார். மகளுக்காக பாரிஜாதம் எடுத்து தானும் நடித்திருந்தார். தனுஷ் கூட நடித்திருந்தார். இப்பக்கூட துணை முதல்வர்ன்னு ஒரு படத்துல நடிக்கிறாருன்னு போட்டோக்கள் பார்த்தேன். ஆளு சும்ம்ம்ம்மா ஜம்முன்னு அது யாரோ மேனனாமே அது கூட ஜோடி போட்டு நிக்கிறாரு... முருங்கைக்காய் நாயகன் இன்னும் முத்தலைங்கன்னு (அலோ முத்தம் இல்லை) சொல்லத் தோணுது... போட்டோக்கள் பாக்க சூப்பராத்தான் இருக்கு... படத்துக்காக வெயிட்டிங்க் சார்.... 


பாக்யராஜ்... பாலியலை தனது படத்தில் அதிகமாக வைப்பார் என்று சொன்னாலும் திரைக்கதையில் அவரை மிஞ்ச ஆளே இல்லை... ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாகவும் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் சினிமாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தொட்டவர்.  தூறல் நின்னு போச்சு படத்தப் பாத்துட்டுப் போயி கையை ஒடிச்சிக்கிட்டாலும் கதையோட்டத்தால் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவரின் பின்னே ஓடிக் கொண்டேதான் இருக்கிறேன். 

எனக்கு பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் படங்கள் பிடிக்கும்... இப்பக்கூட சேரன், பாலா, சமுத்திரக்கனி, சசிக்குமார்ன்னு சில பேரோட திரைக்கதை பிடிக்கும்... ஆனா ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.

அப்படியே நம்ம கை ஒடியக் காரணமாய் அம்மா சொல்லும் தூறல் நின்னு போச்சு படத்தில இருந்து ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்துட்டுப் போங்க...



-'பரிவை' சே.குமார்.

திங்கள், 17 நவம்பர், 2014

தொடர் பதிவு : கனவில் வந்த காந்தி

ங்கள் தேவகோட்டையின் அஞ்சா நெஞ்சர் அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மிகவும் சிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். இவர் கனவில் வந்த காந்திஜி கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும் சிந்திக்கும் வண்ணமும் அழகான பதில்களைக் கொடுத்து அதனை தொடருமாறு பத்து மிகப் பெரிய அறிஞர் பெருமக்களை அழைத்திருந்தார். சரி இது சுத்தி வரும் எல்லாருடைய எண்ணங்களையும் படிக்கும் மாணவனாக இருக்கலாம் என்ற பெரிய நம்பிக்கையில் இன்று பதிவிட்ட அன்பின் ஐயா தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களும் அன்பிற்குரிய ஆசான் ஐயா கரந்தையார் அவர்களும் என்னையும் இதில் இழுத்து விட்டு விட்டார்கள். எனக்கென்ன கவலையின்னா முத்து நிலவன் ஐயா முதற்கொண்டு பெரும் பெரும் அறிஞர் பெருமக்கள் எல்லாம் எழுதிய... எழுதும் தொடர் பதிவில் நம்ம என்னத்தை எழுதப் போறோம்ன்னுதான்... இருந்தும் முயற்சித்துப் பார்ப்போம் என்று கோதாவில் குதித்தாச்சு... நான் குதிச்சது சேற்றிலா அல்லது சந்தனத்திலான்னு நீங்கதான் சொல்லணும். நம்ம என்னத்தைச் சொல்லப் போறோம்... அதனால அடிப் போட்டவரு... அவரை பின்பற்றினவங்க பதிவுகளைப் படிச்சிட்டு அப்புறமா நம்ம பதிவுக்குள்ள வரலாம்.

த்தனையோ தொடர் பதிவுகள் வந்திருந்தாலும் வித்தியாசமான இந்த தொடர்பதிவு ஓட்டத்தை துவங்கி வைத்த அண்ணன் கில்லர்ஜியின் பதிவைப் படிக்க



டுத்து ஆன்மீகப் பதிவுகளின் இந்து மகா சமுத்திரம் தஞ்சையின் மைந்தர் திரு. செல்வராஜூ ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...



ப்புறம் இலக்கியப் பெட்டகம் எங்கள் கரந்தையார் ஆசான் திரு. ஜெயக்குமார் ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...

My Photo


************************
ரி, இனி நமக்கிட்ட அண்ணல்ஜி(G) அவர்கள் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டிருந்தா... எப்படி சமாளித்திருப்போமுன்னு பார்க்கலாம்.

"என்ன தம்பி... தூக்கமோ?" - இது கனவில் வந்த காந்திஜி.

"ஆம் ஜி... நல்ல இளங்காலைக் குளிரில் தூக்கம் அடித்துப் போட்டது போல் வருமல்லவா... இதில் தூக்கமோ என்ற கேள்வி எதற்கு?" - இது அடியேன்.

"ம்... தூங்கு... நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தூங்கு..."

"சரி... கேள்விகளை தாங்கள் கேட்கிறீர்களா இல்லை நான் கேட்கட்டுமா..."

"அடேய்... தூங்க மூஞ்சி நாந்தான் கேக்குறேன்னு சொன்னேன்..."

"சரி... கேளுங்க.. கேளுங்க... நான் ரெடி... நீங்க ரெடியா... அந்த கண்ணாடியை சரியா மாட்டிக்கிட்டு கேளுங்க..."

"லொள்ளு... பதில்ல இருக்கட்டும் இந்த பேச்செல்லாம்... "

"ம்க்கும்... கேள்வி கேக்கிறது ஈசி... பதில் சொல்றதுதானே கஷ்டம்... பெரிய பெரிய ஆளுக எல்லாம் சூப்பர பதில் சொல்லும் போது நான் சொதப்பிட்டா..."

"என்னவோ பண்ணு... எல்லாரும் கேட்ட உடனே பதிலைச் சொல்லி கலக்குறாக... நீ என்னடான்னா... சரி ஆரம்பிக்கிறேன்" என்ற அண்ணல் அதிரடியாய் கேட்க ஆரம்பித்தார்.

1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?

று பிறவியா? இந்தப் பிறவியில என்ன சாதித்து விட்டோம்... அடுத்த பிறவி எடுத்து சாதிக்க...

அப்படியே மறு பிறப்பு இருந்தால் எங்கள் சிவகங்கை சீமையில் தேவகோட்டைக்கு அருகே இருக்கும் எங்கள் ஊரில் இதே பெற்றோருக்கு மகனாகவும்... இந்தப் பிறப்பில் நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் என் அன்பு மனைவிக்கு கணவனாகவும் (அவரு விருப்பமும் இதுவாத்தான் இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை) எனது இரண்டு செல்வங்களுக்கும் மீண்டும் தந்தையாகவும் பிறக்க ஆசை ஜி.

அண்ணல் : வெரிகுட்... வெரிகுட்...

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?

நானா... விட்டுருவானுங்களா... அப்பன் மகன விடமாட்டேங்கிறான்... அண்ணன் தம்பிய விட மாட்டேங்கிறான்... இதுல கிராமத்துல பொறந்து அரசியல் அரிச்சுவடே அறியாத என்னையா விடுவானுங்க... திருப்பாச்சி அருவாள தீட்டி வச்சிருவானுங்க ஜி... கொஞ்ச காலமாச்சும் வாழ ஆசை... சரி... உங்க விருப்படி ஆட்சியாளனாக ஆனால்... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் திரு.சகாயம் ஐ.ஏ,எஸ். அவர்களைப் போன்றோரின் துணையுடன் லஞ்ச மற்ற, வறுமையற்ற வளமான பாரதத்தை உருவாக்கப் முயற்சி செய்வேன்... பின்னால குழி தோண்டாத அமைச்சர்கள் இருக்கும் பட்சத்தில் அதில் வெற்றியும் பெறுவேன்.

அண்ணல் : சகாயத்தை கிரானைட் கொள்ளையவே விசாரிக்க விடமாட்டேங்கிறாங்களே... சரி விடு... நல்ல பதில்... நல்ல பதில்...

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?

திர்ப்பு எங்க இல்லாம இருக்கு சொல்லுங்க ஜி... கல்யாணமா இருந்தாலும் சரி... காது குத்தா இருந்தாலும் சரி... எவனாவது ரெண்டு பேர் எதிர்க்கத்தான் செய்கிறான்... அவ்வளவு ஏன் வலைப்பதிவர் மாநாடு நடத்துனா அங்க ரெண்டு பேரு என்னைக் கவனிக்கலைன்னு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க... உள்நாட்டுக்காரனே எதிர்ப்பான்... வெளிநாட்டுக்காரன் எதிர்க்காமலா இருப்பான்... எதிர்ப்பில் எதிர்த்து வெற்றி நடை போட்டால் எதிர்ப்பெல்லாம் புஸ்வானமாகிவிடும்... இந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு... அதனால எவன் எதிர்த்தாலும் அதையெல்லாம் பற்றி கவலையே படமாட்டேன்... என் பாதையில் நான் பயணிப்பேன்..

அண்ணல் : ஆமா... ஆமா... எனக்கு எம்புட்டு எதிர்ப்பு இருந்துச்சு தெரியுமா... அத்தனையிலும் வெற்றி பெறலையா... சரி... என் பாதையில் நான் பயணிப்பேன்னு சொன்னே பாரு... கிரேட்... கிரேட்...

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

ளைஞனுக்கு திட்டம் தீட்டினாலே செயலாக்க முடியலை... அப்புறம் முதியவர்களுக்கு என்ன திட்டம் தீட்டுறது. ஆனா பாருங்க... பெரியவங்க வயசாயிடுச்சின்னு கவலைப்படாம இருக்க... கையில ஆளுக்கு ஒரு லேப்டாப் கொடுத்து கேம் விளையாடுங்க... மனசுல பட்டதை இதுல பதிஞ்சி வையுங்கன்னு சொல்லி அவங்களை சுறுசுறுப்பா செயலாற்றச் செய்வேன். முடங்கிக் கிடக்காமல் மூச்சிருக்கும் வரை எதாவது செய்து கொண்டே இருங்கள் என்று சொல்லி அவர்களை இளைஞர்களாக வாழச் செய்வேன்.

அண்ணல் : நல்லது.... நல்லது... 

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

வனுகளை சுத்தம் பண்ணுறதுங்கிறது ரொம்பக் கஷ்டம் ஜி... ஒரே வழி வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இப்ப இருக்க மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாத்தையும் விரட்டிட்டு படிச்ச பயபுள்ளகளுக்கு மட்டுமே அரசியல்வாதியாகிற தகுதி இருக்குன்னு சட்டம் கொண்டு வருவேன். அதற்காக ஆன்லைனில் தேர்வு எழுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்துவேன். கல்வி அறிவிருந்தால் மட்டுமே ஒரு நல்ல அரசை அமைக்க முடியும்ன்னு செயல்படுத்திக் காட்டுவேன்.

அண்ணல் : (அப்ப அருவா உறுதிடி...) நல்ல திட்டம்.... சாத்தியப்படுத்தினால் நன்று.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?

ன்லைனில்தானே பரிட்சை எழுதப் போகிறார்கள். வினாக்களை நிறைவு செய்யும் போது நீ பாஸா பீஸான்னு சிஸ்டமே சொல்லிடும். அப்புறம் மதிப்பெண் தவறுன்னு எப்படி சொல்லுவாய்ங்க... எவனும் நீதி மன்றம் போக முடியாது... அதுக்கெல்லாம் அம்மா பாலிடிக்ஸ் மாதிரி அதிரடி சட்டம் போட்டுருவோமுல்ல... சிவகங்கை சீமையில இருந்து வந்தோம்ன்னு சொன்னா 'பசி' மாதிரி பதுங்கியே இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க... மருதுபாண்டியன் மண்ணுல பிறந்தவன் எல்லாம் 'பசி' மாதிரி இருக்கமாட்டான். அம்புட்டுக்கும் ஆப்பு கரெக்டா ரெடி பண்ணி வச்சிருவோம்.... நீதிமன்றத்துல இருக்கவனெல்லாமே இப்படி பரிட்சை எழுதி வந்தவனாத்தான் இருப்பான். இந்த மாதிரி கேசை எடுத்து வாதாட நினைக்கவே மாட்டான். ஏன்னா இந்த மாதிரி வழக்கு தொடுத்தால் அதற்கான தண்டனைகளை கடுமையாக்குவோம்.

அண்ணல் : இங்க எதுக்கு அரசியல்... பசியே இப்ப ருசி மாத்தப் பாக்குது... சரி... சரி... கேக்க நல்லாத்தான் இருக்கு... கேப்பையில நெய் வடியுமா?

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?

விஞ்ஞானிகளுக்கு எப்பவும் போல்தான்... அவர்களுக்கு புதிதாக எதுவும் செய்யும் எண்ணம் இல்லை... ஆனால் விவசாயிகளுக்குச் செய்வேன்... கருவை மண்டிக்கிடக்கும் நிலங்களை எல்லாம் சீர் செய்து மீண்டும் பசுமை மணக்கச் செய்வேன்.. நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி நீக்கமற விவசாய பொருட்கள் கிடைக்கச் செய்வேன்... அதற்காக லட்சங்களை அல்ல கோடிகளையும் கொடுத்து லட்சியத்தை நிறைவேற்ற வைப்பேன்.

அண்ணல் : பலே... பலே... விவசாய நிலமெல்லாம் வீடுகளாகி வருவது வருத்தமே... இது ரொம்ப நல்ல திட்டம்...

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?

செய்ய வைக்க என்னென்ன முயற்சிகள் உண்டோ அத்தனையும் செய்து வைத்து விடுவேன். ஆட்சிக் காலத்தில் மக்கள் கையை ஓங்கச் செய்வேன்... அடுத்து வருபவன் செய்யத் தவறினால் அவர்கள் கையை ஓங்குவார்கள் இல்லையா.

அண்ணல் : அடடே... சூப்பருடா...

9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?

ந்தியனாய் நாம் எது செய்தாலும் புதுமைதானே ஜி... எல்லா நாட்டுலயும் எல்லாம் இருந்தாலும் நமக்கிட்ட இருக்க வளம் எல்லாம் எல்லா நாட்டுலயும் இல்லையில்ல... அதையெல்லாம் பாதுகாத்து ஒரு வளம் நிறைந்த பாரதத்தை... வளமையான பாரதத்தை உருவாக்குவேன். அப்புறம் ஐயா கரந்தையார் சொன்னது போல நூறு சதவிகித வேலை வாய்ப்பை உருவாக்குவேன்.

அண்ணல் : பதிலில் காப்பி அடிக்கிறாயா?

நான் : பதிவையே காப்பி அடிக்கிறானுங்க... நான் ஐயாவோட பதிலைத்தானே காப்பி செய்திருக்கிறேன்.. விடுங்க ஜி...

அண்ணல் : பதில் தெரியுதோ இல்லையோ நல்லாச் சமாளிக்கத் தெரியுது... ஆனா இந்தியனாய் அப்படின்னு சொன்னே பாரு... அந்த ஒற்றை வார்த்தையே போதுமே... ஆஹா... வளமான பாரதம் காண வாழ்த்துக்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?

ஹா... ஹா... இம்புட்டும் செய்தால் இன்றைய இந்தியாவில் பாவம் செய்தவனாகிவிடுவேன் என்பது உண்மைதான்... என்ன இங்க இருக்க அரசியல் வியாதிகளுக்கு பாவி ஆவேன்னு நினைச்சால் இறைவனுக்குமா... அது சரி... மறு பிறவியாக வேறு பிறவியா... வேண்டாம் ஜி... வேண்டவே வேண்டாம்... மானிடனாய் பிறந்து மற்றவர்களை இம்சித்தது போதும்... மானிடன் அல்லாத மறு பிறப்பும் வேண்டாம்.

அதுசரி... மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்ன்னு ரெண்டாவதா ஒரு கேள்வி கேட்டீங்க... நானும் அதே ஊரில் பிறக்கணுமின்னு சொன்னேன். இங்க மானிடப் பிறவி இல்லைங்கிறேள்... முரணாக இருக்கிறதே... சரி... சரி... தூக்கக் கலக்கம் இருவருக்கும்... கொஞ்சம் மாற்றி வந்திருக்கலாம்... விட்டுடுவோம். 

அண்ணல் : எங்கு பிறக்கணுமின்னு கேட்டேன்... மானிடனாய்ன்னு சொல்லலையே (சமாளிப்பு) கடைசி கேள்விதானே விடு... விடு... எல்லோரும் மறுபிறவி கேட்கும் போது நீ வேண்டாங்கிறே... சரி உன் விருப்பம் அதுவெனில் நான் என்ன செய்ய முடியும். எல்லாம் இறைவன் சித்தம்.

அம்புட்டுத்தானே... ஆளை விடுங்க சாமி.

இரு... நல்லா பதில் சொன்னாய்... இனி உன்னோட நண்பர்கள் முகவரி கொடு... அவர்கள் கனவில் போய் நான் காலாய்க்கணும்... என்ற அண்ணல் நான் கொடுத்த இஞ்சி டீயை ருசித்துக் கொண்டிருக்க, நானோ நண்பர்கள் முகவரியைத் தேடினேன்... கிடைத்ததில் முத்துக்கள் பத்தை முன்னே வைத்தேன். 

அன்புச் சகோதரி ஸஷிகா கிச்சன் மேனகா சத்யா அவர்கள்

பாசமிகு அண்ணன்  WARRIOR  தேவா  அவர்கள்

அன்பின் ஐயா அசை போடுவது வலைச்சரம் சீனா  அவர்கள்

நேசமிகு அண்ணன் தேவியர் இல்லம் ஜோதிஜி  அவர்கள்

அன்பான அக்கா வானம் வெளித்த பின்னும் ஹேமா  அவர்கள்

எனது இனியவன் இதயச்சாரல் தமிழ்க் காதலன்  அவர்கள்

பாசக்கார அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன்  அவர்கள்

அருமை அண்ணன் வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்

கவிதை நாயகன் தம்பி  கலியுகம் தினேஷ் குமார் அவர்கள்

எனதுயிர் அக்கா  தூரிகைச் சிதறல் காயத்ரி  அவர்கள்...

ம்... அப்புறம்...

அண்ணல் : போதும் போதும் பத்தாச்சு... பத்தாச்சு...

நான் : ஐயோ பத்தாச்சா.... கனவுல வந்து இப்படி பத்து மணி வரைக்கும் படுக்க வச்சிட்டிங்களே... இனி வேலைக்குப் போனா மாதிரித்தான்...

அண்ணல் : அடேய்... கிறுக்கா... பத்து பேர் ஆச்சு... மத்தவங்களுக்கும் வேணுமின்னு சொல்ல வந்தேன்... சரி... ஓகே... இனி இந்தப் பத்து பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணனும்... அதுக்குள்ள எத்தனை பத்து வருதோ தெரியலயே... ஒருத்தனை கனவுல கேள்வி கேக்கப் போக இப்படி மாட்டிவிட்டு தூங்காம அலைய வச்சிட்டாரே...

நான் : (மனசுக்குள் : அதான் எங்க தூக்கத்தை கெடுத்துட்டீரே..) என்னது உங்களுக்குப் பத்தா?

அண்ணல் : அப்பா... சாமி... ஆளைவிடு... விட்டா எல்லா நோயும் இருக்கானான்னு கேப்பே போல... வர்றேன்... எந்திரிச்சி வேலைக்குப் போ... பை..பை... சியூ...

நான்.. சியூவா... வேண்டாம்... வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...

பக்கத்து கட்டில்காரர் (சத்தமாக) : ஏன்டா நாதாரி... நைட் வேலை பாத்துட்டு வந்து படுத்தா... விடிஞ்சிம் எந்திரிக்காம வேண்டாம் வேண்டான்னு கத்தி தூக்கதைக் கெடுக்குறே...?

ஐயோ.... விடிஞ்சிருச்சா... ஓடுறா.. ஓடுறா குமாரு... பாத்ரூமுக்குள்ள வேற எவனாச்சும் நுழைஞ்சிருக்கப் போறான்னு அவசரமாக பாத்ரூம் அருகே ஓட உள்ளே பூட்டியிருந்தது.

நான் வாசலில் காத்திருக்கிறேன்...

தொடர் பதிவை ஆரம்பித்த அண்ணனுக்கும் என்னை அதில் கோர்த்து விட்ட ஐயாக்களுக்கும் ஆவலாக எழுதும் நட்புக்களுக்கும் என்னைத் தொடர்ந்து எழுத இருக்கும் நட்புக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

(ரொம்ப பெரிசா போச்சு... கோவிக்காதீங்கோ... மீ எஸ்கேப்... ரெண்டு நாளைக்கு)

-'பரிவை' சே.குமார்.

சனி, 15 நவம்பர், 2014

மனசு பேசுகிறது : ஈஸ்வரிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் கானங்கள்


'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி... 
தேவி கருமாரி... துணை நீயே மகமாயி...' 
- என்ற பாடல் வரிகளை 
எப்போது கேட்டாலும் பக்தி பரவசம் அடையச் செய்துவிடும். அம்மன் கோவில் விழாக்களில் எல்லாம் திருமதி. எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் கம்பீரக் குரலில் இந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கு. குறிப்பாக பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை எங்கள் ஏரியாவில் எந்தப் பக்க்ம் சென்றாலும் இந்தப் பாடல்களைக் கேட்கலாம். எனக்கு இந்த அம்மன் பாடல்களை கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். நானும் அப்போது ஒரு பாடகனாகி வரிகளோடு வசியப்பட்டு பாட ஆரம்பித்து விடுவேன். ஆனா எனக்கு மட்டுமே கேட்கும்படி ஏன்னா நான் பாத்ரூம் பாடகன் கூட கிடையாது.

எத்தனையோ பேர் அம்மன் பாடல்களைப் பாடியிருந்தாலும் திருவிழாக்களில் கரகம் எடுத்து வரும் போதோ அல்லது பூக்குழியின் போதே இந்தப் பாடல்கள் ஒலித்தால் போதும் சாமி ஆடுபவர்கள் மட்டுமின்றி பார்வையாளராக வந்தவர்களும் ஆட ஆரம்பித்து விடுவார்கள். எல்லோரையும் ஆட வைக்கும் பாடல்களாக இவை இன்றும் தொடர்கின்றன. சாமி வந்தவரை பிடித்துக் கொண்டு வரும்போது பக்கத்தில் வருபவர் 'ஏய்ய்ய்ய்... ஆத்தா...' என ஆட ஆரம்பித்து விடுவார். அந்தளவுக்கு இந்தப் பாடல்கள் ஒரு ஈர்ப்பு உடையவை.


'செல்லாத்தா... செல்ல மாரியாத்தா...
எங்கள் சிந்தையிலே வந்து நில்லாத்தா' 
- என்று ஈஸ்வரி 
அவர்களின் குரல் ஒலித்தால் அந்த அம்மனே செல்லமாக சிரித்து எழுந்து வந்து விடுவாள். ஊரில் திருவிழாவின் போது மைக் செட் போட வரும் முருகனிடம் அம்மன் பாடல்கள் இருக்குமே தவிர எல்.ஆர். ஈஸ்வரி பாடல்கள் இருக்காது. எப்போது என்னிடம் இருக்கும் அம்மன் காசெட்டைத்தான் கொடுப்பது வழக்கம். இந்த முறை கூட அவன் போட்ட பாடல் சாமி வருவதற்கான அறிகுறி காட்டாத பாடல்தான். என்னிடம் அந்த கேசெட்டும் இல்லை... அவனும் இப்போ சிடி/பென்டிரைவுக்கு மாறியாச்சு.

தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் மாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் சிறப்பானது. பூக்குழி அன்று கோவில் வளாகத்துக்குள் 'மாரியம்மா.. எங்கள் மாரியம்மா...',  என எல். ஆர். ஈஸ்வரியின் கணீர்க் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். பால் குடம் எடுத்து வருபவர்களும் வேல் போட்டவர்களும் அதுவரை சாமி ஆடி வந்திருந்தாலும் அந்தப் பாடல்களைக் கேட்டதும் ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை பிடித்துக் கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அதிலும் சாமி வருபவர்கள் பால் குடம் எடுப்பவர்களைப் பிடித்திருந்தால் அவ்வளவுதான் பிடித்திருந்தவரை விட்டுவிட்டு அவரும் ஆட ஆரம்பித்து விடுவார். இது எங்க ஊர் பால்குடத்தின் போதும் நடக்கும்.


கோவில் திருவிழாக்களில் எத்தனை பாடல்கள் ஒலித்தாலும் பெரிய பெரிய ஸ்பீக்கர் வைத்து இன்று வந்த அம்மன் பாடல்களை எல்லாம் 'கும்..கும்' என்ற இசையுடன் ஒலிக்க விட்டாலும் அன்றைய இசையில் சுத்தமான தமிழ் உச்சரிப்பில் கணீர்க்குரலில் ஈஸ்வரி அம்மாவின் குரலில் 'வேற்காடு வாழ்ந்திருக்கும்...' என்றோ 'கருணை வடிவானவளே...' என்றோ 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...' 'கற்பூர நாயகியே கனகவல்லி' , என்றோ பாடல்கள் ஒலித்தால் கோவில் வாசலில் கூடி இருக்கும் ஜனங்களில் பெரும்பாலானோருக்கு சாமி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

எங்கள் ஊரில் அம்மன் கரகம் எடுத்து வரும்போது 'ஏப்பா... நல்லா சாமி வர்றமாதிரி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டை போடச்சொல்லுங்கப்பா' என்று சொல்வார்கள். நான் முன்னமே சொன்னேனே எங்கள் ஊர் மைக்செட்காரரிடம் அந்தப் பாடல்கள் மட்டும் இருக்காது என்று... இருக்காதா அல்லது எங்க ஊருக்கு கொண்டு வரமாட்டாரா தெரியாது. எப்பவும் திட்டுத்தான் வாங்குவார். நாம கேசெட் கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதைப் போடுவார். சரியாக கரகம் எடுத்து வரும் போது எதாவது கேட்காத பாடலாகப் போடுவார். அப்புறம் எப்படிங்க ஒரு மிகச் சிறப்பான ஆட்டத்தைப் பார்ப்பது. எல்லா இடங்களிலுமே ஈஸ்வரி அம்மாவின் பாடல்களால்தான் அந்த ஈஸ்வரி இறங்கி வருகிறாள் என்பதை கோவில் விழாக்களில் முழங்கும் அவரின் பாடல்கள் சொல்லும். ஆனால் எங்க ஊரில் எப்போதும் எதாவது ஒரு பாடலைப் போட்டு திட்டு வாங்குவார். அம்மன் கரகம் வரும்போதுதான் பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கும் மகாநதி ஷோபனா பாடிய பாடலைப் போடுவார்.


'கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாருமம்மா..' 
- என்று தங்களை 
உந்தன் கடைக்கண்ணால் பாருமம்மா என்று கேட்கும் ஈஸ்வரி அம்மா சினிமாவில் 'வாராயோ தோழி வாராயோ', 'எலந்தப் பழம்... எலந்தப் பழம்','காதோடுதான் நான் பேசுவேன்' 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என இன்றும் ரசித்துக் கேட்கும் பல பாடல்களை ஜானகி அம்மா. சுசிலாம்மாவுக்கு இணையாகப் பாடியிருக்கிறார். அவர்கள் கோலோச்சியிருந்த காலத்தில் இவரும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். இளையான்குடியை பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவக் குடுபத்தில் பிறந்திருந்தாலும் என்றென்றும் சாகவரம் பெற்று தமிழக கோவில்களில் எல்லாம் கணீர் குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் அவரை காலங்கள் கடந்தும் எல்லோர் மனதிலும் மதிப்புமிக்க இடத்தில் வைத்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன. சிறந்த குரலுக்குச் சொந்தக்காரரான அம்மன் பாடல்களின் நாயகி இன்னும் நிறைய பாடல்களை கருமாரிக்கு பாட வேண்டும்.

* படங்கள் மற்றும் பாடல்களுக்கு நன்றி இணையத்திற்கு...

மனசு தொடர்ந்து பேசும்.

முந்தைய பகிர்வான கிராமத்து நடையில் வளரும் தொடர்கதை 'வேரும் விழுதுகளும் படிக்காதவங்க இங்கு சொடுக்குங்கள்...

-'பரிவை சே.குமார்.

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 8)

முந்தைய பகுதிகள் : 


பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6     பகுதி-7


---------------------------------

ஏழாவது பகுதியின் இறுதியில்...

"உனக்கென்ன அறிவு கிறிவு கெட்டுப் போச்சா... மாமனாருக்கிட்ட வாங்கிக் கொடுடான்னு நா எப்படி கேக்குறது...?"

"கேளுங்கன்னா கேளுங்க... இப்படி பேசிப் பேசித்தான் எதுவுமில்லாம நிக்கிறோம்... எம்புட்டு நாளைக்குத்தான் இப்படியே இருக்கது... வாங்குறது வாய்க்கும் கைக்கும் பத்தல... கேட்டா என்ன கொறஞ்சா போயிடுவீக... இது வேண்டான்டா இந்த வருச வெவசாயம் முடிஞ்சதும் இருக்க சொத்த பங்கு வைக்க சொல்லுங்க... இப்ப கடன ஒடன வாங்கி எடத்தை வாங்கிட்டு அப்புறம் ஊர்ல எடத்தை வித்துட்டு கடனைக் கட்டிக்கலாம்...  " என்று மூக்கைச் சிந்தியபடி பாகப்பிரிவினைக்கு அடிப்போட்டவளுக்கு என்ன  பதில்சொல்வது என்று தெரியாமல் விழித்தான் மணி.

இனி...

ம்பியிடம் கேளுங்க இல்லாட்டி அவரது மாமனாரிடம் வாங்கித் தரச் சொல்லுங்க என்ற சித்ரா, இல்லைன்னா சொத்த பங்கு வைக்கச் சொல்லுங்க என்று சொன்னதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் மணி.

"என்ன நாஞ் சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா எரும மாட்டு மேல மழ பேஞ்ச மாதிரி இருக்குறீக..." கடுப்பாகச் சொன்னாள்.

"என்னய என்ன சொல்லச் சொல்றே?"

"உங்கள ஒண்ணுஞ் செய்யச் சொல்லல சாமி... உங்க தம்பிக்கிட்ட கொஞ்சம் காசு கேளுங்கன்னு சொன்னேன்..."

"என்னடி புரியாம பேசுறே... அவனே இப்பத்தான் லோனைக் கீனைப் போட்டு வீடு கட்டியிருக்கான்... அவனுக்கிட்ட காசு இருக்குமா என்ன... மகா படிப்புக்கு அவந்தான் அப்ப அப்ப பணம் கொடுக்கிறான்... அவனே மாமனார்கிட்ட கேப்பானான்னு தெரியல... நமக்காக கேக்கச் சொன்னா என்ன நினைப்பான்... அப்புறம் அப்பா அம்மா காலத்து வரைக்கும் சொத்த பிரிக்க வேண்டாம்... அது பாட்டுக்கு கிடக்கட்டும்... அவரால முடிஞ்ச வரைக்கும் பாக்கட்டும்... நாம பிரிச்சி என்ன அங்க போயா வெவசாயம் பண்ணப் போறோமுன்னு நானும் அவனும் பேசியிருக்கோம். இப்ப சொத்த பிரிப்போமுடான்னு சொன்னா..."

"என்ன ஐயாவுக்கு மானம் போயிருமோ... எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்லிருங்க... நமக்கு உங்க பூர்வீக சொத்து வேணாம். அதையெல்லாம் அவரே எடுத்துக்கிட்டு இன்னைக்கி வெல என்னவோ அதை நாலு பேர வச்சி முடிவு பண்ணி கொடுக்கட்டும்.. நாம அண்ண வீட்டுகிட்ட இருக்க எடத்தை வாங்கி வீட்டைக் கட்டிப்போம்... இங்க பாருங்க... கல்லெறிஞ்சாத்தான் காய் விழும்... அதுக்காக காத்துக்கிட்டு இருக்க முடியாது. அவருக்கிட்ட நீங்க பேசுறியளா... இல்ல நா பேசவா?"

"ஆத்தா... நீ ஒண்ணும் பேச வேணாம்... நா அவங்க்கிட்ட நாளைக்கி பேசுறேன்..."

"நல்ல நாள் பாத்துத்தான் பேசுவிகளோ... இன்னைக்கி பேசுங்க... அதுவும் இப்ப பேசுங்க..."

"ராத்திரியில அவனுக்கிட்ட இதைப் பத்தி பேசணுமா?"

"பேசப் போற காரியத்துக்கு ராத்திரி என்ன பகலென்ன... பேசுங்கன்னா... எனக்குன்னு வந்து நல்லா வாச்சிருக்கு பாரு... ஒண்ணத்துக்கு லாயக்கில்லாம... அன்னைக்கே தேரையூர் ராசுக்கு கேட்டானுங்க... எங்கப்பன் நொக்கா வீட்டுலதான் கட்டுவேன்னு நின்னு இப்புடி ஒண்ணத்துக்கும்  லயக்கில்லாத ஒருத்தருக்கு கட்டி வச்சி என்னைய காலம் பூராம் கஷ்டப்பட விட்டுட்டாரு... அந்த மனுசன் நல்ல சாவே சாவ மாட்டாரு.... இன்னைக்கி அந்த ராசு கோடிக்கணக்குல சம்பாரிச்சி பெரிய லெவல்ல இருக்காரு..."

"ம்... அந்தாளுக்கு வந்தவ மகராசியா இருக்கா... நீ போயிருந்தியன்னா அங்கயும் நக்கிக்கிட்டுத்தான் இருக்கணும்... பேச்சைப்பாரு பேச்சை... பொண்ணைக் கட்டிக்கொடுக்கப் போற வயசுல அவனுக்கு கேட்டாக இவனுக்கு கேட்டாகன்னு... இத்தனை வருசத்துல உன்னைய என்னடி கஷ்டப்பட வச்சிருக்கேன்... ஏதோ நா வாங்குற சம்பளத்துல நம்ம பொழப்பு நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு... ராஜகோபுரத்துல உன்னைய ஏத்தி உக்கார வைக்கலைன்னாலும் கோயிலுக்குள்ளதானே இருக்க வச்சிருக்கேன்... சும்மா வாய்க்கு வந்ததை பேசி என்னைய டென்சனாக்காதே... இப்ப என்ன குமரேசங்கிட்ட பணம் கேக்கணும் அதானே... கேட்டுத் தொலைக்கிறேன்.."

'ஆத்தாடி இந்தாளுக்கு இம்புட்டுக் கோபம் வருது... என்னைய அங்க கேட்டாக இங்க கேட்டாகன்னு ஒரு பிட்டைப் போட்டா எப்பவும் சிரிச்சிட்டு போற மனுசனா இப்படி கத்துறாரு... வயசானா கோபம் கூடும் போல' என்று நினைத்துக் கொண்டு கோபமாக இருப்பது போல் பேசாமல் இருந்தாள்.

"அம்மா... அப்பாவுக்கு ஆபீசிலும் டென்சன்... வீட்லயும் டென்சன்னா எப்படிம்மா... எப்பவுமே எதாவது பேசி அப்பாவை ஏம்மா டென்சனாக்குறே... இப்ப உங்கண்ணன் வீட்டுக்கிட்ட இடம் வாங்கி வீடு கட்டலைன்னா என்ன... சும்மா அவரைப் போட்டு படுத்திக்கிட்டு..." இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மகா கத்தினாள்.

"ஏய்... பெரியவுக பேசயில உனக்கென்ன வேல... நீ படிக்கிறதை மட்டும் பாரு.. எனக்கு புத்திமதியெல்லாம் சொல்ல வேண்டாம்..."

"ஆமா... எல்லாத்துக்கும் கத்துறதை எப்பத்தான் நிறுத்தப் போறீகளோ...?" என்றபடி அங்கிருந்து எழுந்தாள்.

"மகா... நீ சும்மா இருடா... அப்புறம் உங்கிட்டயும் கத்த ஆரம்பிச்சிருவா..." என்று சொல்லிச் சிரித்தான். மகாவும் சிரித்துக் கொண்டே தனது அறைக்குச் செல்ல தம்பிக்கு போன் பண்ண மொபைலை எடுத்தான்.

"என்னங்க... " கணவனின் நெஞ்சில் தலைவைத்துக் படுத்திருந்த அபியின் அழைப்புக்கு 'ம்' என்றான் குமரேசன்.

"லீவு வருதுல்ல... கருதறுப்புக்கு ஊர்ல போயி இருந்தா அவங்களுக்கும் உதவியா  இருக்கும். நானும் பிள்ளைகளும் அங்க் போயி ஒரு பத்து நாள் இருந்திட்டு வர்றோம். அப்புறம் பொங்கலுக்கு எல்லாரும் போகலாம்... சரியா?"

"கருதறுப்புக்கு நீயும் உன்னோட பிள்ளைகளும் உதவியா... அதுசரி நீங்க போனா அவங்களுக்கு உபத்திரவம்தான்... பேசாம உங்கப்பா வீட்டுக்கு பொயிட்டு வாங்க... அவரு ஆளுகள வச்சி கருதறுத்துக்குவாரு..."

"நா போனா வயலுக்குப் போகாட்டியும் அடுப்புல போட்டு எறக்குறதெல்லாம் செய்வேனுல்ல... அத்தைக்கு உதவியா..."

"டீச்சருக்கு ஏன் இந்த வேல... கல்யாணம் முடிஞ்சி ஊருக்கு வந்தவ நெல்லுக் காக்கிற மரத்தைக் காமிங்கன்னு சொன்னே... நீ கருதறுக்க..." சிரித்தான்.

"ம்... சிட்டிக்குள்ள இருந்தவங்க நாங்க... உங்கள மாதிரி எருமை மாட்டுப் பின்னாடியா திரிஞ்சோம்.. எல்லாந் தெரிய..." அவனது நெஞ்சில் கோலம் போட்டவள் முடியைப் பிடித்து இழுத்தாள்.

"ஏய்... வலிக்குதுடி... சரி... சரி... போங்க... என்ன நம்ம நாலு பேருக்கு சமைக்கவே தரிகிணத்தோம் போடுற நீ... முப்பது நாப்பது பேருக்கு சமைச்சிப் போடுறேன்னு சொல்லுறே... அத நினைச்சாத்தான் பாவமா இருக்கு..."

"யாரு பாவம்... நானா?"

"நீ சமைச்சிப் போட்டு சாப்பிடப் போற வேலையாட்கள்தான் பாவம்..."

"ஐயாவுக்கு கொழுப்பு அதிகமாயிருச்சு.... கொஞ்ச நாளைக்கு சாப்பாட்டை குறைக்கணும்.."

"எந்தச் சாப்பாட்டை..?"

"ம்... எல்லாச் சாப்பாட்டையுந்தான்..." என்று அவள் முறைக்க அவனின் போன் அழைத்தது.

"அந்த போனை எடுடி... இந்த நேரத்துல யாரு... அபீசில இருந்தா..." என்று சொல்ல, போனை எடுக்க எழுந்த அபி "சிவ பூஜையில மொபைல் கரடியா?" என்று சிரித்தபடி எடுத்து "மணி மாமா" என்றபடி கொடுத்தாள்.

"என்ன இந்த நேரத்துல கூப்பிடுது?" என்றபடி ஆன் செய்து "என்னண்ணே... என்ன இந்த நேரத்துல கூப்பிடுறே... எதாவது பிரச்சினையா?"

"ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லடா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... படுத்திட்டியோ?"

"இல்ல... சொல்லு.,.."

"அது... எனக்கு..." எப்படி கேட்பது என யோசனையில் இழுத்தான்.

"என்ன எதாவது காசுப் பிரச்சினையா?"

"ம்... ஒரு எடம் ஒண்ணு கொறச்ச வெலக்ககி வருது... வாங்கிப் போட்டா பின்னாடி வீடு கட்டிக்கலாம்... "

"ம்.. எங்கே... திருச்சியிலயா?"

"இல்ல காரைக்குடியில... மச்சினன் வீட்டுக்குப் பக்கத்துல... இங்க வாங்கி சரியா வராது... ஊருப்பக்கம்தான் சரியா வரும்... அதான்..."

"சரி... அதுக்கு நா என்ன பண்ணனும்..?"

"இல்ல பணம் இருந்தா..."

"எம்புட்டுண்ணே?"

"ஒரு மூணு லெட்சம்..."

"மூணா... என்னண்ணே வெளையாடுறியா... வீட்டைக் கட்ட லோனப் போட்டு ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு வாறோம்... என்னால முடிஞ்சதை பிரட்டித்தாறேன்.... நீ எதிர் பாக்குறதெல்லாம் கஷ்டம்ண்ணே..."

"இதை விட்டா அப்புறம் வாங்குறது கஷ்டம்... இது நல்ல சான்ஸ்... நானும் நகை கிகையை வச்சி பணம் புரட்டிக்கிறேன்... லோனுக்கும் கேட்டுப் பாக்குறேன்.. அது கொஞ்சம் லேட்டாகும்.. இப்பக் கொடு லோன் வந்ததும் திருப்பிக் கொடுத்துடுறேன்..."

"அண்ணே நீ திருப்பிக் கொடுப்பே இல்லேன்னு சொல்லலை... அம்புட்டுப் பணத்துக்கு நா எங்க போவேன்..."

"உன்னோட மா... மாம...னா...ர் கிட்ட கே...கேட்...டு...ப் பா....க்...கி...றி...யா?" மெதுவாக இழுத்தான்.

"என்ன? இங்க பாருண்ணே... நா வீடு கட்டும் போதே அவருக்கிட்ட கேக்கலை... உனக்கே தெரியும் எங்க மேரேஜ்க்கு எல்லாரும் எதிர்த்துத்தான் பின்னால ஒத்துக்கிட்டீங்க... அதனால அவருக்கிட்ட நா அதிகம் பேசுறதில்லை... இப்பவும் அபிக்கிட்டயும் பேரன் பேத்திக்கிட்டயும் பேசுவாரு.. எங்கிட்ட எதுவும் பேச மாட்டாரு... அவருக்கிட்ட போயி..." என்று குமரேசன் சொல்ல என்ன என்பது போல் அபி புருவத்தை உயர்த்த, ஒண்ணுமில்ல என சைகை செய்தான்.

"ம்... எனக்கும் தெரியிது.. எனக்கு உன்னை விட்டா ஆளில்ல... அவ அண்ணனும் கொஞ்சம் பணம் தர்றேன்னு இருக்காரு... பேசாம நம்ம சொத்துப்பத்து வீடுவாசல் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டு எனக்கு ஒரு வெல வச்சிக் கொடுத்துடு... " மனைவி சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் மணி.

"என்னது நம்ம பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...?" அதிர்ச்சியாய் கேட்டான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 13 நவம்பர், 2014

அப்பத்தா இல்லாத வீடு



வெறிச்சோடிக் கிடந்தது
அப்பத்தா இல்லாத வீடு...

வெறுமை சுமந்திருந்தது
நேற்று அவள் 
கிடந்த திண்ணை...

எச்சில் பணிக்கனும்
வெற்றிலைப் பெட்டியும்
எடுப்பாரின்றி மூலையில்...

தெருவில் போவோரை 
காது தண்டட்டி ஆட
பேரைச் சொல்லிக்
கூப்பிட்டு விசாரித்தபடி
அமர்ந்திருக்கும் நாற்காலி
சுமக்க ஆளின்றி 
சும்மா கிடந்தது...

எங்கும் நிறைந்திருந்த
அவளின் நினைவுளின்
சுமையால் அமுங்கிக்
கிடந்தது வீடு...

நல்ல மனுஷி என
முந்தானையில் மூக்கைச் 
சிந்தியபடி இன்னமும் 
வந்து கொண்டுதான் 
இருக்கின்றன உறவுகள்...

அத்தைகள் ஆளுக்கொரு
மூலையில் அழுத வண்ணம்...
அப்பாக்கள் எல்லாம்
அப்பத்தாவைப் பேசியபடி...

அவள் உடுத்திக் களைத்த
கோபுரக்கரைச் சீலை
அவளின் வாசம் தாங்கி
வாசல் கொடியில்...

அவளின் கையிலேயே
எப்போதும் இருக்கும்
ஊன்றுகோல் யாரும்
தேடாமல் வாசலில்
கிடந்தது அநாதையாய்...!

வெத்தலை தண்ணியும்
கொள்ளிக் கட்டையும்
கொண்டு வைக்கும் போது 
மறக்காம இந்த கம்பையும்
கொண்டே வைச்சிருங்கப்பா...

யாரோ வெளியே 
சொல்லிக் கொண்டிருக்க...
அப்பத்தாவின் வாசம்
மெல்லக் கரைந்து
கொண்டிருந்தது வீட்டுக்குள்...
-'பரிவை' சே.குமார்.