மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் கவிதையும் வாழ்த்தும்


விளைந்த வயலில்
நெல் மணி எடுத்து...
மாடுகளை குளிப்பாட்டி
புதுக்கயிறு கட்டி...
புதுப்பானையில்
புத்தரிசியிட்டு...

பொங்கலோ பொங்கல்
சொல்லும் தாத்தா...
மாடுகளுக்கு சோறு
தீட்டும் மாமா...
திட்டிக்குழி தீச்சட்டி
தூக்கும் பெரியப்பா...

என சந்தோஷத்தில்
திளைத்த என்
கிராமத்துப் பொங்கலின்
வாசம் துளிகூட இல்லை
மனைவி வைக்கும்
சிலிண்டர் பொங்கலில்..!

************


கருவேல மரங்களின்
பிடியில் கதிர் சுமந்த
வயல்கள்..!

காட்சிப் பொருளாய்
கசாலைகள்..!

வாழ்விழந்த
வைக்கோல் படப்புக்கள்..!

வெறுமையாய்
கோழிக்கூண்டுகள்..!

கூடி பொங்கல் வைத்த
கருப்பர் கோவிலில்
கூடாமல் நிற்கும் உறவுகள்...!

என இன்றைய மாற்றத்தில்
இனிக்கவில்லை
மாட்டுப் பொங்கல்....

***************

ஏக்கங்கள் இருந்தாலும் தமிழர் திருநாள் நம் திருநாள் எனவே எல்லோருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்களுக்கான என் பொங்கல் வாழ்த்தைப் பார்க்க இங்கே போங்க...
எல்லாரும் சந்தோஷமா கொண்டாடுங்க.

பொங்கலுக்கு நம்ம வீட்டுக்கு வந்தவங்க அப்படியே நம்ம கருத்தப்பசுவை (பாக்கலையின்னா) ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க...

போட்டோ உதவி : கூகிள்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கருத்தப்பசு


கண்ணப்பக் கோனாருக்கு எப்பவும் கருப்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அவருக்கு வாச்ச மதுரவல்லியும் கருப்புதான். அந்த வகையில அவருக்கு ரொம்ப சந்தோஷம். தன்னோட பொண்டாட்டி மேல அவ்வளவு உயிரா இருப்பாரு. அவரோட தாத்தா காலத்துல இருந்தே நில நீட்சி, ஆடு மாடுன்னு வாழ்ந்து வரும் குடும்பங்கிறதால சின்ன வயசுல இருந்தே ஆடு மாடு வளக்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். எல்லா மாட்டு மேலயும் பாசமிருந்தாலும் அவரோட கவனிப்பெல்லாம் அந்த கருத்தப்பசு கருப்பாயி மேல மட்டுதான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கருத்தப்பசு... இதே வீட்டுல இருந்த மயிலப்பசுவோட வாரிசுதான். மயிலப்பசு இத பிரசவிச்சப்போ கலரைப் பாத்துட்டு இவருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. இதுக்கு முன்ன பின்ன போட்ட கன்னுக்குட்டியெல்லாம் வெள்ளை, மயிலை, செவலைன்னு வேற வேற கலரு... இது மட்டும் அமாவாசை இருட்டை கரைச்சு ஊத்தின மாதிரி அப்படி ஒரு கருப்பு. உடனே அதுக்கு கருப்பாயின்னு பேரு வச்சிட்டாரு. அப்புறம் கருப்பாயிதான் அவருக்கு எல்லாம் ஆயிப்போச்சு. குளிக்கப் போறப்போ அதையும் கொண்டு போயி கம்மாயில போட்டு நீந்தவிட்டு குளியாட்டி கொண்டு வருவாரு. அதுக்கு அவரு பொட்டு வக்கிற அழகே தனிதான். நல்ல கருத்த முகத்துல செவப்புப் பொட்டை வச்சா எடுப்பா தெரியாதுங்கிறதால முதல்ல விபூதிய எடுத்து நல்லா ரவுண்டா தடவிடுவாரு.... சில நாள் இன்னும் அழகா இருக்கணுமின்னு நினைச்சா மஞ்சளை கலந்து தடவிட்டு அது மேல குங்குமத்தால மாங்காய், முக்கோணம், ரவுண்ட் என ஒவ்வொரு நாளும் ஒண்ணு ஒண்ணு வைப்பாரு.

ஆரம்ப காலங்கள்ல அவரும் மதுரவல்லியும் தோட்டத்துக்கு காலையில போறப்போ எல்லா மாட்டையும் கொண்டு போய் கட்டி மேயவிட்டுட்டு வய வேலைகளை பார்ப்பாங்க. நிறைய வேலை இருக்கற அன்னைக்கு வேலைக்கு ஆள் வரச்சொல்லி பார்ப்பாரு. அவரு குணம் தெரிஞ்சதால அவரு வீட்டு வேலைக்கு வர எல்லாரும் ரெடியா இருப்பாங்க. அதனால அவருக்கு ஆள் பிரச்சினை எப்பவும் வராது. மதுர வல்லி தினமும் வேலையோட வேலையா மாடுகளுக்கு புல்லும் அறுத்து அழகா கட்டி வச்சிடும். வாரப்போ அவரு மத்த சாமன்களை எடுத்துக்கிட்டு மாடுகளை ஓட்டிக்கிட்டு வர, மதுரவல்லி புல்லுக்கட்டை சுமந்துகிட்டு வரும். அப்பவும் அவரு கையில பச்சைப் பசேர்ன்னு சின்ன புல்லுக்கட்டு இருக்கும். அது அவரோட கருப்பாயிக்கு மட்டும். அதான் இந்த புல்லுக்கட்டு இருக்குல்ல அப்புறம் எதுக்கு தனியா... ஒண்ணா கட்ட வேண்டியதுதானேன்னு மதுரவல்லி கேட்டா, இது என் செல்லத்துக்கு என்று சொல்லி தனியாத்தான் கொண்டு வருவார்.

வருஷங்கள் வந்து போக, கருப்பாயியும் வளர்ந்து கிடேரியாயிடுச்சு. அதோட ஆத்தா நல்ல ஒசரமா இருக்கும். ஆனா இது குட்டையாவும் இல்லாம ஒசரமாகவும் இல்லாம இருந்தது. எங்க போனாலும் கண்ணப்ப கோனாரோட கருப்பாயிங்கிற கொரலைக்கேட்டா நின்னு திரும்பிப் பாக்கும். அது மாதிரி அவரு ரெண்டு மூணு நாளைக்கு எங்கயாவது பொயிட்டு வந்தா வந்த உடனே அதை பாக்க கசாலைக்கு போயிடுவாரு... அவரைப் பாத்ததும் அங்கிட்டும் இங்கிட்டுமா மருகும்... மூசு மூசுன்னு மூச்ச விடும்... அவரோட கைய முகத்துல வச்சதும் அதோட முகத்தைக் கொண்டாந்து அவரு உடம்போட வச்சி தேச்சுக்கும். அப்ப சத்தமா கத்தாம சின்னதா ஒரு கொரல் கொடுக்கும். அவருக்கு மட்டும்தான் அந்த பாசத்தோட அர்த்தம் புரியும். இதை ஆரம்ப காலத்துல பாத்த மதுரவல்லி ஆத்தே... மனுசங்க மாதிரியில்ல கொஞ்சுது. பிள்ளைங்க அப்பானுட்டு பலகாரப் பையை பாக்குதுங்க... இது என்னடான்னா மனுசனை மோந்து மோந்து பாத்துல்ல கத்துதுன்னு வாய் விட்டே சொல்லிட்டா. இதுதான்டி பாசமுன்னு பெருமை பட்டுக்கிட்டாரு.

கருப்பாயி செனையான நாளுல இருந்து அதை பாத்துப்பாத்து கவனிச்சாரு... முதக் கன்னு போடப் போகுது அதனால நல்ல தெம்பா இருக்கணுமினுட்டு புல்லோட தீவனமெல்லாம் வாங்கியாந்து ஊற வச்சிப் போட்டாரு... மதுரவல்லிகிட்ட சொல்லி பச்சரிசி கஞ்சி காச்சி அவரே அதுக்கு வச்சி பக்கத்துல உக்காந்து கலக்கி கலக்கி விட்டு குடிக்க வச்சாரு... அதோட வயித்துக்குள்ள கன்னுக்குட்டி முட்டுறப்போ இவரு தடவிப்பாப்பாரு... ஆரம்பத்துல வயித்துல முட்டின கன்னுக்குட்டி நாள் நெருங்க நெருங்க இடுப்புப் பகுதியில முட்ட ஆரம்பிச்சாச்சு, எலும்பெல்லாம் அமுங்கி தர்றாம் புர்றான்னு நடக்க ஆரம்பிச்சிருச்சு. மதுரவல்லி மோகனுக்கு இப்படித்தான் நடந்துக்கிட்டு திரிஞ்சா... அப்புறம் கவிதா பொறந்தப்போ கொஞ்சம் பரவாயில்லை அவ பொறக்குற வரைக்கும் கட்டுக்கட்டுன்னு வேல பாத்துகிட்டு திரிஞ்சா... அப்புறம் சரசு... அப்புறம் மணியின்னு நாலு பெத்துட்டா... கருப்பாயிய பாக்கும் போதெல்லாம் முத குழந்தைக்கு மதுரவல்லி இருந்த மாதிரிதான் அவருக்கு தோணுச்சி... அடுத்த கன்னுக்கு கொஞ்சம் தேறிடுமுன்னு நினைச்சிக்கிட்டாரு...

அந்தப் பக்கமா போனா வெள்ளத்தாயியை பாத்தவரு, சின்னத்தா நம்ம கருப்பாயி கன்னு போடுற மாதிரி நிக்கிது... படுக்கவும் எந்திரிக்கவுமா இருக்கு வந்து பாத்து எப்ப போடுமுன்னு சொல்லிட்டுப் போன்னு கூப்பிட்டு காட்டினாரு... அந்த ஊர்ல மாட்டு மருத்துவச்சி அதுதான்... யாரு வீட்ல கன்னு போட்டாலும் அதுதான் போயி லாவகமா காலைப் பிடிச்சு இழுத்து எடுத்துடும். அது வந்து பாத்துட்டு, ஏலேய்... சட்டமெல்லாம் வடிவாயிடுச்சி... நாளைக்கு மத்தியானத்துக்குள்ள கன்னு போட்டிடும்ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு... ராத்திரியெல்லாம் தூங்காம அடிக்கடி எந்திருச்சுப் போயி பாத்துட்டு பாத்துட்டு வந்தாரு... சத்த படுங்க நாளைக்குத்தான் கன்னு போடுமுன்னு மதுரவல்லி எவ்வளவோ சொல்லியும் அவரை அவ காலையில பாத்தப்போ கண்ணெல்லாம் செவந்து போயித்தான் இருந்தாரு.

எப்பவும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி தோட்டத்துக்கு போறவரு அன்னைக்கு புள்ளைங்க போயியும் வீட்டை விட்டு நகரலை. என்னங்க தென்னைக்கு உரம் வைக்கணுமின்னு சொன்னீங்க... போகலையா... என்று கேட்ட மதுரவல்லியிடம் பூமிய வக்க சொல்லியிருக்கேன். அவன் வந்து வச்சிருவான்... நான் சாயந்தரமா போயி பாத்துட்டு வாரேன் என்றார். இங்கயிருந்து என்ன பண்ணப் போறீங்க... என்னதான் நம்பிக்கையிருந்தாலும் நாம இருந்து பாக்கிறமாதிரி வருமான்னு சத்தம் போட, என்னடி நீ நம்ம கருப்பாயி கன்னு போடப்போகுது அதான் அப்புறம் போறேன். நீங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க... கன்னு போட்டா சொல்லிவிடுறேன், இப்ப கிளம்புங்கன்னு கிளப்பி விட்டுட்டா. தோட்டத்துக்கு போனாலும் கருப்பாயி நினப்புதான். 

யாராச்சும் அந்தப்பக்கமா சைக்கிள்ல வந்தா கன்னு போட்டுடுச்சோன்னு நினைப்பாரு. மத்தியானம் வீட்டுக்கு வந்தப்போ சின்னவன் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அம்மா எங்கடான்னு கேக்க, நம்ம கருப்பாயி கன்னுக்குட்டி போடுதாம். அம்மாவும் வெள்ள அப்பத்தாவும் பாத்துக்கிட்டு இருக்காகன்னு சொல்ல வேகமா ஓடினாரு... அங்க கருப்பாயி செவலைக் கலர்ல ஒரு காளைக்கன்ன போட்டுட்டு இவரைப் பாத்ததும் 'அம்மா'ன்னு அதோட சந்தோஷத்தையும் வலியயும் இவருகிட்ட பகிந்துக்கிச்சி... அதை தடவிக் கொடுத்தவரு, அது இளங்கொடி போடுற வரைக்கும் அதுகிட்டே இருந்து போட்டதும் அதை ஒரு சாக்குல வச்சு கட்டி நாயி நரி இழுக்காம ஆலமரத்துல கொண்டு போயி கட்டிட்டு வந்தாரு. அப்புறம் கருப்பாயியையும் குளிப்பாட்டி மஞ்சள் தடவி பொட்டு வச்சு கொண்டாந்து கட்ட, கன்னுக்குட்டிய குளிப்பாட்டிய மதுரவல்லி கருப்பாயிகிட்ட முத பாலை பீச்சினாள்.

இது இப்ப நடந்தது போல இருக்கு, அதுக்கப்புறம் எத்தனையோ கன்னு போட்டு இப்ப வயசாயி நிக்கிது கருப்பாயி... அதுகிட்ட முன்ன மாதிரி உடம்புல சதையெல்லாம் இல்லாம் எலும்பு தெரிய ஆரம்பிச்சிருச்சி... அது போட்டதுல ஒரே ஒரு பொட்டக் கன்னுக்குட்டி மட்டும் நல்ல கருப்பா இருந்துச்சி... அதுக்கு சின்னக் கருப்பின்னு பேரு வச்சிருந்தாரு. அதுவும் கன்னு போடுற நிலமயில இருந்துச்சு. இப்பல்லாம் முன்னமாதிரி புல்லறுத்துப் போடமுடியலை. விவசாயமும் பொய்த்துப் போச்சு. சும்மா கெடந்த நெலத்துல ஆரசுவதி மரங்களை வச்சி விட்டுட்டாரு... கவிதாவை கட்டிக் கொடுத்துட்டாரு... மோகனுக்கு தங்கச்சி மகளை பரிசம் போடலாமுன்னு மனசுக்குள்ள எண்ணமிருக்கு... சின்னது ரெண்டுக்கும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு நினைச்சிருந்தாரு.

கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு மோட்டு வளையை வெறிச்சுக்கிட்டு இருந்தவரை மூத்தவனின் குரல் எழ வைத்தது. அவனுடன் மாட்டு வியாபாரி மனோகரன் நின்னுக்கிட்டிருந்தாரு... வாப்பா மனோகரா... நல்லாயிருக்கியா என்றார் கண்களை துடைத்தபடி. அப்பா நம்ம கருப்பாயிய கொடுத்துடலாமுன்னுதான் மனோகர் மாமாவ வரச்சொன்னேன். இப்ப என்னப்பா அதுக்கு அவசரம் அப்படின்னு மகனைப் பாத்து கேக்க, அம்மாவாலயும் பாக்க முடியலை, சின்னக் கருப்பி வேற கன்னு போடுற மாதிரி இருக்கு...இதுக்கும் வயசாயிக்கிட்டே போகுது... இப்ப செனையா இருக்கிறப்போ கொடுத்தா நல்ல வெல கிடைக்கிமுன்னு மாமா சொன்னாங்க. அம்மாகிட்ட கேட்டேன் கொடுத்துடலாமுன்னு சொன்னுச்சின்னு சொல்ல திரும்பி மதுரவல்லிய பாத்தாரு, ஒண்ணும் பேசாம நிக்க, நீயும் கொடுக்கனுமின்னு முடிவு பண்ணிட்டியா? மனைவியிடம் கேட்டபோது எதோ அழுத்த வார்த்தை வர சிரமப்பட்டது. ஆமா... அதுக்கும் வயசாச்சு... கன்னு போட்ட பின்னால கொடுத்தா வெல கிடைக்காது... அதான் கொடுத்துடலாம்... என்றவளை பார்த்த பார்வையை தரைக்கு திருப்பினார். எங்கே கலங்கும் கண்கள் அவரை காட்டிக் கொடுத்துவிடுமோ என்பதால் தரையை விட்டு பார்வையை விலக்காமல் சரி... கொடுத்திடுங்க... என்றார்.

நா ஒரு வெல வச்சிருக்கேன்... நீங்க உங்க வெலய சொன்னிங்கன்னா தெகையுதான்னு பாக்கலாம் என்ற மனோகரிடம், வெல என்னய்யா வெல... என் கருப்பாயிக்கு வெல இல்லய்யா... ஒ அக்காகிட்ட பேசிக்க... நான் அவளுக்கு வெல வக்க முடியுமா... இல்ல அவ பாசத்துக்குதான் வெல வக்க முடியுமா... என்றவர். 'ஸ்ஸ்....ஆஆஆ' என்று பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கலங்கிய கண்களுடன் மீண்டும் விட்டத்தை வெறிக்கலானார்.

வெல பேசி நாளைக்கு புடிச்சிக்கிறது என்று முடிவான செய்தி அறிந்ததும் வெளியில் கிளம்ப தயாரானார். எங்க போறீங்க என்ற மனைவியிடம், கருப்பாயிய அவங்க பிடிச்சிக்கிட்டு போறப்போ அவ என்னைப் பாத்து கத்துனா என்னால தாங்க முடியாது. ரெண்டு நாளைக்கு கவிதா வூட்ல இருந்துட்டு வாறேன் என்று அவர் சொன்னபோது மதுரவல்லிக்கு கண்ணீர் வந்தது. படிகளில் இறங்கியவர் வாசலில் கட்டியிருந்த கருப்பாயியை பார்த்ததும் கண்கள் கலங்க அருகில் சென்று ஆதரவாய் தடவ, அவரது கைகள் நடுங்க, உதடு துடித்தது... இன்னைக்குதான் நம்ம பாசத்தோட கடைசி நாள். நாளை நீ எங்க இருப்பியோ தெரியாது... ஆனா கடைசி வரைக்கும் எம்மனசுக்குள்ள இருப்பேன்னு அதுக்கிட்ட சொன்ன போது அவரது கண்ணீர்துளி அதன் முகத்தில் வழிந்தது. தனது துண்டால் அதை துடைக்கப் போனவர் முதல் முறையாக கருப்பாயியின் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்தார்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ உதவி : கூகிள்

வியாழன், 6 ஜனவரி, 2011

அப்பாவின் நாற்காலி



திண்ணையில் கிடக்குதே இந்த மர நாற்காலி இதுதான் அப்பாவின் சிம்மாசனம். இதில் அமர்ந்திருக்கும் போது அவரது மிடுக்கு மிகவும் அழகாக இருக்கும். பெரும்பாலான பொழுதுகளை இதில்தான் கழிப்பார். காலையில் குளித்து முருகனை வணங்கி நெற்றி நிறைய விபூதி பூசி அதன் மீது அழகாக குங்குமம் வைத்து நாற்காலியில் வந்து அமர்ந்துவிடுவார். மணியக்கார சோமு சித்தப்பா தினமும் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் பேப்பரைப் படிப்பது, அம்மா கொடுக்கும் காபியைக் குடிப்பது எல்லாமே இதில் அமர்ந்தபடிதான். விவசாய காலங்களில்தான் இந்த நாற்காலிக்கு அதிக ஓய்வு கிடைக்கும் மற்ற நாட்களிலெல்லாம் அவரை மட்டுமே அதிகம் சுமக்கும்.

நானும் என் தங்கையும் பள்ளியில் படிக்கும் காலத்தில் அப்பாவின் இருக்கையாக இருந்து ஒரு இரும்புச் சேர்தான். அதில் அமர்ந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டு அவர் வயதொத்தவர்களிடம் ஊர்க்கதைகள் பேசுவார். சில கதைகள் பேசும் போது நாங்கள் அருகில் இருந்தால் ஒன்றும் சொல்லமாட்டார். பொண்டு பிள்ளை கதைகள் என்றால் இங்க உங்களுக்கு என்னடா வேலை... உள்ள போங்க என்று விரட்டுவார். அம்மாவிடமும் அப்பத்தாவிடமும் எங்களுக்கு இருந்த நெருக்கும் ஏனோ அப்பாவிடமும் ஐயாவிடமும் இல்லை. மரியாதை என்பதைவிட அவர்கள் இருவரும் வைத்திருந்த முரட்டு மீசையே காரணம். பேசும் போது மீசையை லாவகமாக விளக்கிவிடும் அப்பாவை பார்க்க ஆவலாய் இருக்கும்.

நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போதுன்னு நினைக்கிறேன் சரியா ஞாபகமில்லை வயலில் நின்ற வைரம் பாய்ந்த வேல மரத்தை வெட்டி அதில்தான் இந்த நாற்காலியை செய்தார். அதுவும் அவரது நண்பரும், மர வேலையில் கெட்டிக்காரரான சின்னப்ப ஆசாரி மாமாதான் செய்தார். அவர் கால்களை ரெடி பண்ணும் போது இத நல்லா சீவுடா... அதை அப்படி பண்ணுடான்னு நச்சரிச்சுக்கிட்டே இருப்பாரு. அப்பல்லாம் சின்னப்ப ஆசாரி மாமா மாப்ளே, உங்கப்பனை விட்டாலே அழகா செய்திடுவான் போல... எனக்கு தொழில் சொல்லித்தாரான் பாரு... மத்தவங்க போட்டுட்டுப் போயிடுவாங்கன்னுதான் என்னய கூப்பிட்டிருக்கான்னு சொல்லி சிரிப்பாங்க. ஆமா, இவரு பெரிய டவுசரு...அரைகுறை வேலைக்காரனுக்கு சொல்லித்தான் தரணும். போட்டுடுட்டுப் போனியன்னா என் தங்கச்சி சோறு போடாதுடி என்று பதிலடி கொடுப்பார்.

அப்பாகிட்ட ஒரு குணம் உழைக்கிறவனுக்கு அவன் கேக்கிறதை விட அதிகமா பணம் கொடுப்பார். யாராவது கேட்டா அவன் இன்னைக்கு பார்த்த வேலைய ரெண்டு நாள் பாத்திருந்த இதவிட கூடக் கிடைச்சிருக்கும். உழைக்கிறவன் திங்கிறதுல தப்பேயில்லை என்பார். நாற்காலி செய்த அன்றும் அப்படித்தான் மாமா கடைசி வரை இருந்து அழகாக செய்து முடித்தார். அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். நீதான்டா வேலைக்காரன்... நல்லா இருக்குடா... எவ்வளவுடா என்றார். ஆனால மாமா பணம் வாங்க மறுத்தார். இங்க பாரு நட்பு வேற ... தொழில் வேற... இன்னைக்கு வேற எடத்துக்குப் போயிருந்தா பணம் வாங்காம வருவியான்னு சொல்லி அவர் மறுக்க மறுக்க அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாய் பாக்கெட்டில் திணித்தார்.

அடுத்த நாள் வேம்பு மாமா வந்து அதுக்கு பாலீஸ் தடவி கருகருன்னு ஆக்கிட்டுப் போனாரு. அதுக்கப்புறம் அந்த நாற்காலியில்தான் அப்பா அமர்வது வழக்கம். அதுவும் குடும்பப் பிரச்சினை என்று வருபவர்கள் அவரது நாற்காலிக்கு முன்னர் திண்ணையில் அமர, நாற்காலியில் அமர்ந்து ஓம் முருகா சுருட்டைப் பிடித்தபடி அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை கூர்ந்து கேட்டு தீர்ப்பு வழங்குவார். எங்கள் பகுதியில் யார் வீட்டில் பிரச்சினை என்றாலும் அப்பாவிடம்தான் வருவார்கள். சும்மா நாட்டாமைக் கனக்கா தீர்ப்பு சொல்வாரு. அதிகம் அம்பேத்கார் காலனியில உள்ள பொம்பளைங்கதான் வருவாங்க... உட்காராம நின்னுக்கிட்டே இருப்பாங்க. அப்பல்லாம் அப்பா ஆம்பளைங்கிறதால மரியாதை போலன்னு நினைப்பேன். ஏன்னா எங்களுக்கு உக்காந்து சோறு போடுற அம்மா, அப்பா சாப்பிடுறப்போ நின்னுக்கிட்டேதான் போடுவாங்க. அதுமாதிரி நிக்கிறாங்கன்னு நினைச்சுப்பேன். அவங்க சொல்ற பிரச்சினைகள்ல பெரும்பாலும் குடிச்சிட்டு போட்டு அடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான், சாப்பாட்டுக்கு பணமே தரமாட்டேங்கிறாங்கிற கதைகள்தான் அதிகம் இருக்கும். தீர்ப்பு சொல்றதோட மட்டுமில்லாம சாமிக்கண்ணு இங்க வாடான்னு என்னய கூப்பிட்டு என்னோட எடவார எடுத்தான்னு சொல்லி அதுல இருந்து பணமெடுத்துக் கொடுத்து இந்தா தாயி புள்ளைகளுக்கு எதாவது வாங்கி ஆக்கிப் போடுன்னு கொடுப்பாரு. அதனால அந்த மக்களுக்கு அப்பாதான் கருணமகாராஜா.

ஒரு தடவை எதோ பிரச்சினையின்னு எங்க தோட்டத்துல வேலை செய்யிற மாரியண்ணனும் சோனையண்ணனும் வந்திருந்தாங்க.அப்பாகிட்ட பிரச்சினையை சொல்லிட்டு துண்ட எடுத்து கக்கத்துல வச்சி அதோட ஒரு தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக்கிட்டு வாசல்ல நின்னாக, எனக்கு ஒண்ணும் புரியலை. அப்பாகிட்ட கேக்கமுடியாது, அம்மாகிட்ட கேட்டப்போ, அவங்க கீழ்சாதி, நம்ம வீட்டுக்கு வந்தா தீட்டுன்னு சொன்னாங்க... என்னம்மா தீட்டு தோட்டத்துக்கு போறப்பல்லாம் மாரியண்ணன் எளநீ வெட்டித்தருது. அதைதான் அப்பாவும் , நாமும் குடிக்கிறோம். அது மட்டும் தீட்டில்லையான்னு கேட்டதுக்கு உனக்குத் தெரியாது பெரிய இவனாட்டம் பேசாதேன்னு வாய அடைச்சிட்டாங்க. நானும் அதுக்கு அப்புறம் பேசலை. அப்பாவோட தீர்ப்பு அவங்களுக்கு சரியின்னு பட்டதும் ரொம்ப நன்றி சாமின்னு சொல்லிட்டு பொயிட்டாங்க.

எல்லாரும் சாப்பிட உக்காந்தப்போ ஓ மகன் என்னமோ ஒங்கிட்ட கேட்டானே என்னன்னு அம்மாகிட்ட கேட்டாரு. அம்மா ஒண்ணுமில்லேன்னு சொல்ல, சும்மா சொல்லு, என்ன உக்காராம நிக்கிறாங்கன்னுதானே என்றதும் உங்களுக்கு பாம்புக்காதுன்னு அம்மா சொல்லி சிரிச்சாங்க. பாம்புக்கு காது இருக்கான்னு எனக்குத் தெரியாது. போச்சுடி உனக்கு இன்னைக்கு பூஜை இருக்குன்னு மெதுவாக என் காதைக்கடித்தாள் தங்கை புஷ்பா. அவளை முறைத்தாலும் எதற்கும் முன்னெச்சரிக்கையாக கைக்கெட்டாத தூரத்தில் தள்ளி அமர்ந்து கொண்டேன்.

இதெல்லாம் வழிவழியா வார வரைமுறைகள்... இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது. காலம் போகப் போகத்தெரியும். அவங்க நம்ம வீட்டுக்குள்ள வரமாட்டாங்க... குடியானவங்க யாரு போனாலும் ஐயர் வீட்டுக்குள்ள விடமாட்டங்க... நமக்கு இவங்க கீழ்சாதி, ஐயருமாருக்கு நாம எல்லாரும் கீழ்சாதி... விடு... உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு பொதுவா பேசினாலும் எனக்கு இந்த சாதிக் கட்டுப்பாடுகள் சுத்தமாக பிடிக்கவில்லை. திருவிழா வேலைகளை எல்லாம் அவர்கள் பார்க்க, அலங்கரித்த அம்மன் பள்ளக்கில் வரும் போது அவர்கள் தெருப்பக்கமே திரும்பாமல் வருவதை பார்க்கும் போதெல்லாம் மனிதன் தான் சாதிப் போர்வையை போர்த்தியிருக்கான்னா... தெய்வத்துக்குமான்னு நினைப்பு வரும். என்ன செய்ய பழமையில் ஊறிய ஊரில் சின்ன வயதில் நான் என்ன செய்யமுடியும். ஆனா இப்ப அப்படியில்லை... சாதியாவது மதமாவது எங்க ஊரு மாரியாத்தா இப்பல்லாம் பள்ளக்குல எல்லாவீதிக்கும் போய்வருது. விழாவுக்கு வார ஐயரு எங்க வீட்லயும் காபி சாப்பிடுறாரு... இந்த மாற்றம் எங்க ஊருக்குள்ள வர எத்தனையோ வருடங்கள் வீழ்த்தப்பட்டிருக்கு.

எங்க வீட்ல எங்க அப்பாவுட்டு பொருள்கள் எல்லாமே அப்பா என்ற அடைமொழியோடதான் இருக்கும். தண்ணி குடிக்க தம்ளரை எடுத்தா அப்பா டம்ளரை எடுக்காதேன்னு அம்மா திட்டுவாங்க. சாப்பிட தட்டை எடுத்துக்கிட்டு வந்து உக்கார்ந்தா எத்தனை தடவையிடா சொல்றது உங்க அப்பமுட்டு தட்டை எடுக்காதேன்னு அப்பத்தா தலையில கொட்டும். சைக்கிளுக்குப் பேரு அப்பா சைக்கிள், குடைக்குப் பேரு அப்பா குடை இப்படி அவர் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அப்பா பொருட்கள்... அந்த வரிசையில் மர நாற்காலியும் அப்பா சேராயாயிருச்சு.

அப்பா இல்லாதப்ப அதுல உட்கார்ந்து படிக்க எனக்கும் என் தங்கைக்கும் போட்டியே நடக்கும். அப்பா சேர்ல உக்காந்தாலே எனக்கு யானை பலம் வந்த மாதிரி ஒரு நினைப்பு வரும் . இல்லாத மீசை வளர்ந்து இருக்க மாதிரி தடவி விடச் சொல்லும். யாராவது பசங்களை பிடிச்சாந்து அவரு மாதிரி கனச்சுக்கிட்டு தீர்ப்பு சொல்லிப்பாக்கச் சொல்லும். அவருக்கு வயசானாலும் அந்த நாற்காலி அப்படியே இருந்துச்சு. அப்பாவும் மிடுக்கு குறையாமல் அதுல உக்காந்து இருப்பாரு.

சில வருஷத்துக்கு முன்னால உடம்பு சரியில்லாம இருந்தப்ப இதுல உக்காந்து வாசலை வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாரு. அவரைப் பாக்க களத்தூர்ல இருந்து புஷ்பா புள்ளைங்களோட வந்திருந்தா. அம்மா, நான், சித்ரா, புஷ்பா எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தோம். பசங்களெல்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப திண்ணையில இருந்து ஏவ்வ்ன்னு ஒரு சத்தம், என்னமோ எதோன்னு போயிப்பாத்தா நாற்காலியில அமர்ந்தபடி அப்பாவோட உயிர் போயிடுச்சு... எல்லாரும் கதறுறாங்க... அப்புறம் என்ன அவருக்கு புடிச்ச நாற்காலியிலயே வச்சி எல்லாக் காரியமும் பண்ணி அடக்கம் பண்ணிட்டு வந்தோம்.

அடுத்த நாள் அந்த திண்ணைய பாக்கிறப்போ கலையிழந்து இருந்துச்சு. அப்பா இல்லாம அனாதையா கிடந்த நாற்காலிய பார்க்கிறப்போ அப்பாவின் இழப்பு எங்களைவிட அதை அதிகம் பாதிச்சதை உணர முடிந்தது. அந்தப் பக்கமா போனா அதுல அப்பா உட்காந்திருக்க மாதிரியே தோணும். ரோட்ல போறவங்ககூட இந்த சேரப்பாக்கயில ஐயா உக்காந்திருக்க மாதிரியே தோணுது தம்பி. மனுசன் இது மேல உக்காந்திருக்கிற அழகே தனிதான் போங்கன்னு சொல்லுவாங்க.

அம்மா இருக்கும் வரை அப்பா சேரை தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க... அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. எதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல. சின்ன வயசுல அப்பா சேர்ல உக்கார சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால அதுல உக்கார நினைக்கலை. அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.

கால மாற்றத்துல அப்பா சேர் திண்ணையின் ஒரு மூலைக்குப் போனாலும் என்னோட பேரப்பிள்ளைங்க யாராவது அதுமேல ஏறிக்குதிச்சு விளையாண்டா, டேய் அது தாத்தா சேர்... கீழ இறங்குன்னு சத்தம் போடுறதை மட்டும் நிறுத்தமுடியலை.

-'பரிவை' சே.குமார்.

புதன், 5 ஜனவரி, 2011

காதலிக்கு...




ன்பின் உருவமாய்...

ணவத்தின் எதிரியாய்...

னிய தோழியாய்...

கையில் அமுதசுரபியாய்...

றவின் திருவாய்...

னமில்லா பாசமாய்...

ன்னில் முழுமையாய்...

ழிசைக் கீதமாய்...


ம்பெரும் தேவியாய்...

ப்பில்லா தாயாய்...

டிவரும் அலையாய்...

வையின் ஆத்திசூடியாய்...

(அக்)கறையின் நிழலாய்...

என்னுள் கலந்து


எனக்குள் வாழும்


என் இதயத்துக்கு


என் வாழ்த்துக்கள்..!

(இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு மனைவிக்காக...)

******************

வருட ஆரம்பத்தில் மூன்று சந்தோஷங்கள்...

1. என்னவளின் பிறந்ததினம்.

2. ஜலீலாக்கா அவர்கள் அன்புடன் கொடுத்த விருது. ரொம்ப நன்றி அக்கா.

3. இன்றைய வலைச்சரப் பகிர்வில் அமைதிச்சாரல் அவர்களால் அறிமுகம். நன்றி அமைதிச்சாரல்.
 
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

வரி கொடுக்கா மறவன்



கட்டப்பொம்மன் என்றால் நமக்கெல்லாம் நடிகர் திலகம் சிவாஜியைத்தான் ஞாபகத்தில் வரும். உண்மையான கட்டப்பொம்மனை பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகத்தில் எதாவது ஒரு பக்கத்தில் அரைப்பக்க விளக்கத்தில் மட்டுமே படித்திருப்போம். அவர் எப்படியிருப்பார் என்று யாரையாவது கேட்டால் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் பார்த்தியா அதுல வார சிவாஜி மாதிரி இருப்பார் என்று சொல்லுபவர்களும் உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரி கொடுக்க மறுத்த குறுநில மன்னன். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மறத்தமிழன். மருதிருவர் அமைத்த வெள்ளையர் எதிர்ப்பு குழுவில் முக்கியப் பங்காற்றியவன். தாய் நாட்டுக்காகவும் தம் மக்களுக்காகவும் தூக்குக்கயிரை முத்தமிட்ட வேங்கை... இப்படி கட்டப்பொம்மன் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெலுங்கு வம்சாவழியான கெட்டிப்பொம்மு நாயக்க வம்சாவழி மன்னரான ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். இவரது பெயர் மருவி கெட்டிப் பொம்மு என்பது கட்டப் பொம்மு என்று மாறியது. நாளடைவில் பொம்மு பொம்மன் ஆனது.

இன்று நாம் யாதவ், தேவர், நாயக்கர், கவுண்டர், என்று பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைப்பதுபோல் அதன்பின் அந்த வம்சத்தில் வந்தவர்கள் எல்லாருடைய பெயருக்குப் பின்னாலும் கட்டப்பொம்மன் இணைந்தே வந்தது. அந்த வகையில் திக்குவிஜய கட்டப்பொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு.

தனது 30வது வயதில் அதாவது 1790ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கட்டப்பொம்மன் 9 வருடங்களுக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இவரது மனைவி வீரசக்கம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ஆர்க்காடு நவாப் வாங்கிய கடனுக்காக வெள்ளையரிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட, அந்த தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வெள்ளையர்க்ள வரி வசூலிக்கும் அதிகாரத்தை நவாப்பிடம் இருந்து பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். மக்களிடம் வரி வசூலித்துக் கொடுக்காத பாளையக்காரர்கள் துன்புறுத்தப்பட்டனர். கட்டப்பொம்மன் ஆட்சிக்கு வரும் வரை இந்த நிலை தொடர்ந்தது. மக்களிடம் ஒற்றுமையின்மை இருந்தால்தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்த வெள்ளையர்கள் தங்களுக்கே உரிய சில சதி வேலைகளை மேற்கொண்டு பயனும் அடைந்தனர்.

இப்படி பிரச்சினைகள் நிறைந்த கால கட்டத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கட்டப்பொம்மன் வரி வசூலித்துக் கொடுப்பதை நிறுத்தினார். எவ்வளவோ முயன்றும் அவரை அவரது நிலையில் இருந்து வெள்ளையர்களால் மாற்ற முடியவில்லை. எனவே வஞ்சகமாக அவரை மடக்க திட்டமிட்டனர். நாம் சமாதானமாக போகலாம் அதற்காக ஒரிடத்தில் கூடி பேசலாம் என கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினர். ராமநாதபுரத்தில் சேதுபதி ராஜா அரண்மனையில் நிகழ்ந்த அந்த சந்திப்பில் வெள்ளையர்கள் சார்பாக பேச வந்தவர்தான் ஜாக்சன் துரை. அங்கு நடந்த பிரச்சினையில் பாஞ்சாலங்குறிச்சிக்காக இன்னுயிரை ஈந்தவரும் கட்டப்பொம்மனின் நம்பிக்கைக்கு உரியவருமான மந்திரி தானாதிபிள்ளை கைது செய்யப்பட கட்டப்பொம்மன் தப்பிவந்தார்.

அதன்பின்னான நாட்களில் ஜாக்சன் பதிவி நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி ஆட்சியர் ஏன் வரி கொடுக்கவில்லை என காரணம் கேட்டு கட்டப்பொம்மனுக்கு கடிதம் எழுத... வரிக்காக வைத்திருந்த பணம், தானியம் எல்லாம் கொள்ளை போய்விட்டது. அதனால் வரி கட்ட முடியவில்லை என்று பதில் அனுப்பினார். இந்தப் பதில் வெள்ளையர்களை மேலும் வெறியேற்றியது. எனவே கட்டப்பொம்மனை நாட்டின் பொது எதிரி என்று அறிவித்தனர்.

இதன்பின் வெள்ளையர்களின் காலை நக்கும் நாயாக மாறிய எட்டப்பனை வைத்து கட்டப்பொம்மனின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர். சரியான சமயம் பார்த்து இராணுவத் தளபதி பாணர்மேன் உருவாக்கிய திட்டத்தின்படி கர்னல் கொலினிஸ் என்பவர் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். கட்டப்பொம்மனின் வீரர்கள் திருப்பி தாக்கிய தாக்குதலை கண்டு வெள்ளையர்கள் ஆடிப்போய்விட்டனர். அதனால் பின்வாங்கிய வெள்ளையர்படை மேலும் ஆயுதங்கள் வேண்டும் என மேலிடத்தில் முறையிட்டது. இந்த சமயத்தை பயன்படுத்தி கட்டப்பொம்மன் தப்பிச் சென்றார். அவர் தப்பியதை அறிந்த வெள்ளையர்கள அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அதன்பின் புதுக்கோட்டை ராஜாவிடம் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த கட்டப்பொம்மன், ஒரு கட்டத்தில் வெள்ளையரின் சூழ்ச்சியால் சரணடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

1799 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி வெள்ளையர்களால் கைது செய்யப்பட்ட கட்டப்பொம்மன் மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தூக்கிலடப்பட்டார்.

முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்.

கட்டப்பொம்மன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் கயத்தாறில் இருக்கும் அவரது சிலையும் அவரின் வீரத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

நடிகர்கள், அரசியல்வாதிகளின் பிறந்த தினங்களை நினைவில் நிறுத்திக் கொண்டாடும் நாம் நமக்காக வாழ்ந்து தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களின் பிறந்த தினங்களை நினைவிலாவது கொள்ளலாமே...

இன்று பிறந்தநாள் காணும் பாஞ்சாலங்குறிச்சி சிங்கம், மக்களுக்காக உயிரை கொடுத்த மறவன், வெள்ளையனை பீதிக்கு ஆளாக்கிய வேங்கை வீரபாண்டிய கட்டப் பொம்மனை நினைவில் நிறுத்துவோம்.

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'இதயச்சாரல்' தமிழ்க்காதலன் அவர்களின் கவிதையான............ 'விடுதலை தமிழன்'

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'கலியுகம்' தினேஷ்குமார் அவர்களின் கவிதையான...... 'விண்ணிறங்கி வாராயோ'.

கட்டப்பொம்மன் குறித்து வேறு நண்பர்கள் பதிவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை நான் படித்த கவிதைகளை உங்களுக்காக இணைப்புக் கொடுத்துள்ளேன்.

கட்டப்பொம்மன் படத்தை கூகிளில் தேடியபோது சரத்குமாரும், சிவாஜியும்தான் வந்தார்கள் என்பது வருத்தமான விசயம்.

-'பரிவை'. சே.குமார்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

2010...2011

என்ன தோழர்களே... எல்லாருக்கும் 1-1-11 ரொம்ப சந்தோஷமான பொழுதுகளை அள்ளிக் கொடுத்ததா? கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை. அறைக்கு நண்பர்கள் வருகை, பிரியாணி விருந்து என சந்தோஷத்தில் கழிந்ததால் வலைப்பூவை வாசம் பிடிக்க நேரமில்லை. எல்லாரும் அமர்ந்து பேசும்போது கணிப்பொறியை எடுத்தால் எப்பப் பார்த்தாலும் அதுகிட்டே இரு என்ற குரல்கள் பலத்து ஒலிக்க நட்புக்காக கணிப்பொறிக்கு விடுமுறை கொடுத்தாச்சு. (அதுவும் மிகவும் சந்தோஷப்பட்டிருக்கும் என்பது நேற்றிரவு நண்பர் ஒருவருடன் உரையாடும் போது எந்தப் பிரச்சினையும் இன்றி சீராக இயங்கியதில் தெரிந்தது).


நிறைய நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். மின்னஞ்சலில் வாழ்த்திய நட்புக்களுக்கு பதில் வாழ்த்து அனுப்பியாச்சு. வலைப்பூவில் வாழ்த்திய நண்பர்களுக்கு இந்த 2011ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

2010 நமக்கு என்ன செய்தது? சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்ததா? சங்கடங்களை மட்டுமே தனித்துக் கொடுத்ததா? நாம் சாதித்தது என்ன? செய்ய நினைத்து செய்தவைகள் எத்தனை? செய்யாதவைகள் என்னென்ன? இன்னும் நிறைய கேள்விகள் எல்லாருக்குள்ளும்...

என்னைப் பொருத்தவரை கவிஞன் சொல்வது போல் 'ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்.' என்று கவிஞன் சொன்னது போல் நமக்கும் வயது வாய்ப்பும் போகும் அவ்வளவுதான்... மற்றபடி புத்தாண்டு சபதங்களோ... கொண்டாட்டங்களோ... எனக்கு பிடிப்பதும் இல்லை... செய்ய நினைப்பதும் இல்லை.

ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கு புதிய தினம்தான்... புதுத்தினம் என்று கொண்டாடிக் கொண்டா இருக்கின்றோம். அன்றைய வேலைக்குள் நம்மை திணித்துக் கொண்டு இயங்கும் உலகில் இயந்திரமாய்தானே இருக்கின்றோம்.

கடந்து சென்றவைகளை கடத்திக் கொண்டு வரமுடியுமா நம்மால்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்... இனி நம்மை கடக்க இருப்பவைகளை கவனித்துக் கடப்போம். அப்படிக் கடந்தாலே நல்லன எல்லாம் நம் கையில் வரும்.

வாழ்க்கை என்பது சந்தோஷங்கள் என்ற ஒரு வட்டத்துக்குள் இருந்தால் கண்டிப்பாக இனிக்காது. அதனால்தான் அதற்குள் கஷ்டங்கள், துக்கங்கள் என எல்லாம் கலந்து இருக்கின்றது. இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம் என்று எடுத்துக் கொள்வோம்.

சென்ற ஆண்டு நமக்கு எப்படியிருந்தால் என்ன வருங்காலங்கள் இனியதாக அமையட்டும்.

என்னைப் பொருத்தவரை 2010 எனக்கு மிகச்சிறப்பாக இருந்தது. பொருளாதார ரீதியாக இதுவரை கடந்து சென்ற காலங்கள் ஒண்ணும் சந்தோஷத்தைக் கொடுத்துவிடவில்லை என்றாலும் கடந்த வருடம் வலைப்பூவினால் எனக்கு கிடைத்த நட்புக்கள்... அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, சகோதரி, நண்பன் என எத்தனை உறவுகள். சந்தோஷங்களைப் பகிரவும் துக்கங்களை தாங்கிக் கொள்ளவும் ஆன அருமையான நட்புக்கள்.

வலைச்சரத்தில் திரு.சீனா ஐயா அவர்களின் அன்பால் ஒரு வாரம் ஆசிரியனாய் இருந்த அனுபவம். எனது சில கதைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த சந்தோஷம், நான் பலவற்றை என் பாணியில் கிறுக்கினாலும் எனது கதைகளை விரும்பிப் படித்து என்னை உற்சாகமூட்டும் தமிழ்க்காதலன், ஆசியாக்கா, சகோதரி ஆனந்தி போன்ற பல உறவுகளின் அன்பும் பாசமும் எனக்குள் வரக் காரணமாக இருந்தது மனசுதான் என்பதே ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

சென்ற மே மாதம் விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது அந்த ஒரு மாதங்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த மே மாத விடுமுறையை எதிர் நோக்கி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நாட்கள் இப்போது வர ஆரம்பித்து விட்டன.

எங்கள் பெங்களூர் சார் அவர்களின் மகளின் மரணம், என் அத்தை பையனின் குழந்தை மரணம் போன்ற நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தன.

சில வலை நண்பர்களுடன் போனிலும் , சாட்டிலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இடையில் சில நாட்கள் கால் வலியால் அவதிப்பட்டதும், குழந்தைகள மற்றும் மனைவியின் உடல்நல்க் கோளாறுகள் என கஷ்டங்களும் இருக்கத்தான் செய்தன.

மொத்தத்தில் கடந்த காலங்கள் எல்லாமே சந்தோஷம் துக்கம் கவலை என கலந்துதான் கொடுத்துச் சென்றுள்ளன.

இந்த வருடம் என் சில கனவுகளை நனவாக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. இறையருளும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்ற வருடத்தின் கடைசி பதிவா சில நண்பர்களை வைத்து ஒரு பதிவு எழுதினேன். நண்பர் சி.பி.செந்தில்குமார் கூட இதுக்கு நிறைய கல்லாக் கட்டலாமுன்னு சொன்னார். ஆனா பாருங்க நம்ம நண்பர்களுக்கு நீயெல்லாம் இப்படி எழுதினா யார்டா படிப்பான்னு ஓட்டே போடலைங்க... கதை, கவிதையின்னா 20க்கு மேல ஓட்டு விழும். இதுக்கு என்னடான்ன (மூணு நாளா இடுகையே போடலை) ஓட்டே போடமா நம்மளை ராமதாஸ் நிலைக்குத் தள்ளிட்டாங்க... இதுல இருந்து என்ன தெரியுது நமக்கு ஒரு முத்திரை குத்தியாச்சு... அதை விட்டு வெளியே வந்தே மவனேன்னு சொல்லாம சொல்லிப்புட்டாங்க... சரி... எப்பவாவது எழுதினாலும் தெரிஞ்சதை எழுதுவோமுன்னு... அட எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குல்ல இந்த எப்பவாவது வார்த்தை... புத்தாண்டுல சந்தோஷமா இருங்க...

சரி நம்ம புராணம் மட்டுமே பேசினால் உங்களுக்கு கோபம் வரும்... இவங்களுக்கும் கடந்த ஆண்டு இப்படித்தான் போச்சாம்... அவங்க சொல்றதை கேட்டுட்டு போங்க... மேல என்னமோ சொன்னேன்னு சொல்லக்கூடாது... மனசுக்குள்ள இருக்கதை மட்டும் மனசுல போட்டுட்டு அடுத்த பதிவுல இருந்து நம்ம கொள்கைய கடைப்பிடிக்கலாமுன்னுதான்...



கருணாநிதி: குடும்ப பிரச்சினைகள், பாராட்டுவிழா, ஜெயலலிதாவின் சீண்டல்களுக்கு பதில்கள், அப்ப அப்ப செம்மறி ஆடு... மக்களுக்கு இலவசங்களை கொடுத்து மரியாதையை தக்க வைத்துக் கொள்ள ஆடு புலி ஆட்டம்.

ஜெயலலிதா : கொடநாட்டில் தங்கிய நாட்களே அதிகம், கருணாநிதி எதிர்ப்பு, மாதம் ஒரு முறை மக்களுக்காக குரல்.

ராமதாஸ்: நகைச்சுவை பேச்சுக்கள், யாரும் அழையா விருந்தாளி, ஏமாளி மக்களை ஏமாற்றும் கொள்கை, மெகா நகைச்சுவையாக 2011 ஜ 2016ஆக மாற்றியது.

விஜயகாந்த : விருதகிரி கைய கடிக்கவில்லை, கட்சிப் பணி பரவாயில்லை, கூட்டணி ஆசை.

திருமா : இலங்கை மக்களை மட்டும் நம்பி அரசியல், ஐயாவை விட்டு விலகினால் இருக்கும் இடமும் போய்விடுமோ பயம்.

சீமான் : ஆவேசமான பேச்சு, புதிய கட்சி ஆரம்பம், சிறைவாசம்.

ரஜினி : இந்திய சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையே ஆட்டிப் படைத்த எந்திரன், மகளின் திருமணம். இன்னும் ஹீரோ.

கமல் : சறுக்காத மன்மதன் அம்பு, மருத நாயகம் ஞாபகத்தை சில நாட்கள் தூசி தட்டிப் பார்க்க வைத்தது, வசைபாடிகளின் வசவு.

விஜய் : எழுந்திரிக்க முடியாத அடி.

அஜீத் : படு தோல்விக்கு போகாத படங்கள், பலரை கோபப்பட வைத்த பேச்சு, தொடரும் ரஜினியின் ஆசி.

நித்யானந்தா : இதற்கு மேல் பட என்ன இருக்கிறது என்று நினைக்க வைத்த வருடம்.

சரி இரண்டு நாட்களுக்குப் பிறகு சொன்னாலும்

"2011 எல்லோருக்கும் சிறப்பான வாழ்க்கையை கொடுக்கட்டும்..."

மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

-"பரிவை" சே.குமார்.

போட்டோ : தினமலர்