மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மனசு பேசுகிறது : 'உடையார்' வாசிப்பிலிருந்து...

Image result for உடையார்

பேராசிரியர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கொடுத்த ஒரு விறுவிறுப்பை... ஈர்ப்பை.... வாசிக்கும் ஆவலை... ஏனோ திரு. பாலகுமாரன் அவர்களின் 'உடையார்' கொடுக்கவில்லை என்றாலும் வாசித்தே தீருவேன் என்ற ஆவலில் வாசித்து முடித்தேன். 

பொன்னியின் செல்வனைப் போல் கல்கியின் சோலைமலை இளவரசியும் வாசிப்பை நிறுத்த முடியாத ஒரு ஈர்ப்பைக் கொடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைத்தது... ஒருவேளை இதற்குக் காரணம் அந்த எழுத்தின் ஈர்ப்பாய் இருக்கலாம்... சொல்லிச் சென்ற விதம்... கற்பனையாய் பயணிக்கும் வார்த்தைகளின் ஜாலம்... இப்படி ஏதோ ஒன்று நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்... இப்போது கூட சில பதிவர்களின் எழுத்துக்கள் இப்படி நம்மைக் கட்டிப் போடுவதுண்டு... வாசிக்க ஆரம்பித்தால் அதற்குள் நம்மை ஈர்த்துக் கொள்ளும். 

உடையார் அப்படி ஈர்க்காததற்கு காரணம் என்ன..? 

இந்தக் கேள்வியை எனக்குள்ளே கேட்ட போது... ஒரு அறிமுகத்துக்கு முன்னும் பின்னுமாய் நகரும் கிளைக்கதைகளே முக்கியக் காரணம் என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை... கதையின் போக்கில் சம்பந்தமில்லாமல் கிளைக்கதைகள் பயணிப்பதும்... வளவளவென்ற வர்ணனைகளும்தான் வாசிப்பில் ஒரு அயற்சியை ஏற்படுத்தின... 

உடையாருக்குப் பின் 'சங்கதாரா' வாசித்தேன்... கீழே வைக்கவிடாமல் வாசிக்க வைக்கும் எழுத்து.... பரபரவென்று நகரும் நாவல்... ஆனால் தமிழ் சினிமாவை மிஞ்சும் டுவிஸ்டுகள்... நல்லவர்கள் எல்லாம் கெட்டவர்களாய்... ஒரு நாகரீகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அப்படி... இனி சோழனை வாசிப்பாய் என்ற கேள்வி முன்னே நின்று சிரிக்க, நாவலை முடித்த போது ஆசிரியர் சினிமாக் கதை ஆசிரியராய் மிளிர்கிறாரே என்று யோசித்தால் ஆசிரியர் குறிப்பில் திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மகன் என்பதை அறிந்தேன். பின்னே அவரின் எண்ணங்கள் சினிமாக்கதை புனையும் நோக்கில்தானே அமையும்.

வரலாறுகளை புதினமாக்கும் போது அந்தக் கால கட்டத்துக்கு பயணிக்க மட்டும் முடியும் என்பதே உண்மை... என்ன பேசியிருப்பார்கள்... எப்படி பேசியிருப்பார்கள் என்றெல்லாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்... வரலாறுகளைப் பற்றிய செய்திகள், கல்வெட்டுக்கள், ஓலைச் சுவடிகள், செப்புத் தகடுகள், வரலாறுகளைச் சொல்லும் புத்தகங்கள் என எல்லாவற்றையும் உள்வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது அந்தக் காலகட்டத்துக்கு பயணிக்கும் எழுத்தாளர் இதுதான் கதை... இதுதான் களம்... என்பதை வைத்து தங்கள் மனதுக்குள் தோன்றுவதை களத்தை மாற்றாமல் கதையை மட்டும் பக்கம் பக்கமாக இலக்கியச் செறிவோடு இப்படிப் பேசியிருப்பான்... அப்படிச் சண்டை  போட்டிருப்பான்... என தங்கள் சிந்தையில் விளைந்ததை அறுவடை செய்திருப்பார்கள். அப்படி ஒரு இராஜராஜனைத்தான் பாலகுமாரன் படைத்திருந்தார். 

உடையாரில் இராஜராஜன் என்பவன் மக்களுக்கு அருகில் இருந்தவன்... மக்களோடு மக்களாக வாழ்ந்தவன்... அவர்களோடு பேசி... சிரித்தவன்... உண்டு... உறங்கியவன்... ஏன் அவர்களுடன் இணைந்து தஞ்சைக் கோவில் வேலையும் செய்தவன் என்பதை ஆறு பாகத்தில் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு அரசன் அமைய குடிமக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை சோழ தேசத்து மக்களுக்கு இருந்தது என்பதாய் சொல்லியிருப்பார்.

இன்றைக்கு நம்ம தெரு கவுன்சிலரைப் பார்க்கவே ஆயிரம் அல்லக்கைகளைத் தாண்ட வேண்டியிருக்கு... அப்படியும் அவரை பார்ப்பது என்பது அரிது. மக்கள் பிரதிநிதியாம் தமிழக முதல்வர் எப்படியிருக்கிறார்..? என்ன ஆனார்...? மீண்டு(ம்) வருவாரா..? என்று தமிழக மக்கள் ஒன்றும் தெரியாமல் தவிக்கும் நிலையில் நாடு இருக்கும் போது ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் சக்கரவர்த்தியாய் பெரிய தேசத்தைக் கட்டி ஆண்ட இராஜராஜன் மக்களோடு மக்களாய் இருந்தார் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். 

அன்றே சாதிகளுக்குள் பிரச்சினை இருந்தது என்பதை எனக்கு அது வேண்டும்... எனக்கு இது வேண்டும் என்று ஒவ்வொரு சாதிக்காரரும் மன்னரிடம் கேட்பதில் கொண்டு வந்து விடுகிறார்... சாதீயம் தலை விரித்தாடும்படிதான் எழுதியிருக்கிறார்... மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை சொல்லி விடுகிறார். மன்னரை மக்கள் மதிக்கவில்லை என்பதாகவும் சொல்லிச் செல்கிறார். எந்த வித இயந்திரங்களும் இல்லாமல் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய மக்களிடம் அன்றே சாதீய வேறுபாடுகள் இருந்திருக்குமா..? என்ற யோசனை எழாமல் இல்லை... இருப்பினும் ஆசிரியர் சாதீய பிரச்சினைகளை வைத்து பல பக்கங்களை நிறைத்திருப்பதால் சா'தீ' அன்றே கிளை பரப்பியிருக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறது.

அரசனுக்கு அடி பணியும் மக்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் இங்கே அரசர் அந்தணர்களுக்கு அடி பணிகிறார்... அவர்களே பெரியவர்கள் என்று இராஜராஜன் வாயால் சொல்ல வைக்கிறார்... சில இடங்களில் அரசரை அவர்களே வழி நடத்துகிறார்கள் என்பதாய் காட்டுகிறார். போருக்குச் சென்ற இடத்தில் ஒருவன் சாவான் என்று முன்கூட்டியே சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... இது இப்படித்தான் நடக்கும் என்று சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... தொண்டை நாட்டு அந்தணர்கள் வேலை பார்க்கிறேன் பேர்வழி என்று கொள்ளை அடிப்பது தெரியவில்லை... தங்க மண்வெட்டி முதல் கொண்டு நிறைய சுருட்டுவதைப் பற்றி நாவலின் இறுதி வரை யாருமே கண்டு கொள்ளவில்லை... 

அப்பனும் மகனும் எப்பவும் முட்டி மோதுபவர்கள்தான் என்று காட்டுகிறார்... அப்பன் கோவில் கட்டுவது மகனுக்குப் பிடிக்கவில்லை... மகன் கோவில் கட்டுவதில் அப்பனுக்கு விருப்பமில்லை... எப்போது பேசினாலும் இருவருக்கும் ஒத்துவராமல் சண்டையில்தான் முடியும் என்பதாய் எழுதியிருக்கிறார்.... ஒரு தேசத்தின் சக்கரவர்த்திக்கும் அவரின் ஒரே மகனான இளவரசனுக்கும் முட்டல் மோதல் என்பதெல்லாம் யோசிக்க முடியவில்லை.... ஒருவேளை அப்பனுக்கும் மகனுக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள்... பேதங்கள் இருந்திருப்பதாய் ஆசிரியர் எங்கேனும் வாசித்திருக்கலாம்.

தான் அருண்மொழிப்பட்டனை விரும்புவதாய் இராஜராஜி, பஞ்சவன்மாதேவியிடம் சொல்லும் போது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதாய் பஞ்சவன்மாதேவி சொல்வார். அருண்மொழி கருவூர்தேவரிடம் பேசும்போது மனைவி குழந்தைப் பேறுக்காக மாமனார் வீடு சென்றிருக்கிறாள் என்றும் சொல்ல, மனைவி இருக்க உன்னை விரும்பும் பெண்ணையும் கட்டிக்கொள்... உன் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாக இருப்பாள் என்று கருவூர்த்தேவர் இரண்டாம் திருமணத்துக்கு வித்திடுவார். ஆனால் அருண்மொழியும் இராஜராஜியும் ரொம்ப நாளாய் காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை ஏற்காத பிரம்மராயர் குந்தவையிடம் சொல்ல, அவள் இராஜராஜியை அழைத்துப் பேசுமிடத்தில் அருண்மொழிக்கு அவனது அத்தை பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து வைத்திருக்கிறார்கள் என்பாள்... இதில் எது முன்னே...? எது பின்னே...? என்ன ஒரு குழப்பம். நான் புரிந்து கொண்ட விதம் தவறா...? ஒரு முறைக்கு மேல் படிக்கு எண்ணம் இல்லை என்பதால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

முத்தான பொன் நங்கை..  கரூவூர்த்தேவரின் வீட்டு வேலைக்காரப் பெண்.... இரண்டு மூன்று இடங்களில் இவர் வருவார். பின்னர் கதை நகர்தலில் கருவூர்த்தேவருக்கே அப்ப அப்ப வாய்ப்பு என்ற போது வேலைக்காரி எங்கே போனால் நமக்கென்ன... என நாமும் மறந்து பயணிப்போம்... குந்தவை வீட்டில் இருக்கும் அதிகாரிச்சி ஒருத்திக்கு இதே பெயர் வரும்... அவள் பாண்டிய வீரனை திருமணம் செய்து கொள்ள விரும்புவாள்... ஆனால் அதெல்லாம் கதையில் தொடராது.... அது இருக்கட்டும் எப்படி ஒரு நாவலில் இருவருக்கு ஒரு பெயர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பமே மிஞ்சும் என்பதால் ஒரு ஊருக்குள் கருப்பையாக்கள் பலர் இருப்பதில்லையா என்று சமாதானமாக்கிக் கொண்டு நகர்ந்து விட்டேன்.

பாண்டிய வீரன் குணசீலன் கோவில் வேலை மட்டுமின்றி, கல் தூக்கி வர, தேர் செய்ய என எல்லாவற்றிலும் பெரும் உதவியாக இருக்கிறான்... அப்புறம் என்ன ஆனான்...? இராஜராஜனைக் கொல்வோம் என சூளுரைக்கும் இரவிதாசனின் தம்பி சாம்பவானும் அவர்களின் மகன்களும் என்ன ஆனார்கள்...? (ஒருவேளை இறுதியில் கைது செய்யும் சேர நாட்டு நம்பூதிகளுடன் இவர்களும் இருந்தார்களோ என்னவோ...?). கருமார்கள் திரும்பி வந்தார்களா...? ம்ஹூம் எதுவும் சொல்லலையே... 

ஒற்றைக் கை இல்லாதவன் மரம் ஏறுவான்... தன் அடையாளத்தை உடனே மாற்றிக் கொள்வான்... கோவில் கோபுரத்தில் ஏறுவான்... ஒரு கையால் மண்ணை நோண்டியே பிணங்களைப் புதைப்பான்... அது எப்படி... அதெல்லாம் அப்படித்தான் என நகர்ந்தாலும் இப்படியும் முடியுமான்னு ரொம்ப யோசிக்கலை... காரணம் தமிழ் சினிமா நாயகன் 100 அடி தூரத்தில் இருந்து பறந்து போய் இரயிலைப் பிடிக்கலையா...?

அரசன் கதையைவிட அந்தணர்கள் கதையே உடையாரை ஆக்கிரமித்திருந்தது.... யாதவன் மாடு மேய்க்க... வேளாளன் விவசாயம் செய்ய... வணிகர்கள் வியாபாரம் செய்ய... கருமார்கள் ஆயுதம் தயாரிக்க... மறவர்கள் போர் செய்ய... என இருக்கும் போது எந்த வேலையும் பார்க்க மாட்டோம்... வேதம் ஓதுவதே எங்கள் வேலை என்று அரசனை எதிர்க்கும் அந்தணர்கள் மட்டுமே படித்தவர்கள்... பண்பானவர்கள்... அரசரை கேள்வி கேட்கும் வல்லமை இவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதாய் கதை நகருமே ஒழிய இராஜராஜனை மையப்படுத்தி நகராது... அரசனை கேலி கிண்டல் எல்லாம் செய்வார்கள்.... இராஜராஜன் பெரும்பாலும் புலம்பிக் கொண்டு திரிபவனாக கதையில் காட்டப்பட்டிருக்கும்.

தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய தஞ்சைக் கோவிலை விட்டுப் போனதும் இராஜராஜன் தஞ்சைக்கே வரவில்லை என்பதாய் சொல்வது ஏன்... இதற்கு எதுவும் சான்றுகள் இருக்கா...? ஒவ்வொரு வேலையையும் ரசித்து இறைப்பணியே என் பணி என விரும்பிக் கட்டியவன் ஒரு முறை கூடவா வந்திருக்கமாட்டான்... ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

எது எப்படி என்றாலும் பல இடங்களில் அவர் தொட்டுச் செல்லும் விஷயங்கள் நம்மை அப்படியே அசரடிக்கும். இரவில் குதிரையில் தனியே பயணித்து பஞ்சவன்மாதேவி உயிர், உடம்பு குறித்து அறியும் நிலை, இராஜராஜன் தனது மரணத்துக்கு முன்னால் மனசுக்குள் பேசும் பேச்சு... கோவில் கருவறைக்குள் பிரமாண்ட லிங்கத்தை நிறுவும் பணி... மேலைச் சாளுக்கியத்துடனான போர்... என நம்மை கட்டிப் போடும் பக்கங்களும் உண்டு... குறிப்பாக இறப்பு குறித்தான ஆசிரியரின் பார்வை நம்மை கண் கலங்கி பயணிக்க வைக்கும்.

உடையார் ஒரு வரலாற்றை அதன் வடிவத்தில் கொடுக்கவில்லை என்றாலும் ரொம்ப பொறுமை இருந்து  வாசித்தால் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்பது உண்மை. 

பெண்களை கேவலமாக, போகப் பொருளாக உருவகித்திருந்தாலும் குந்தவை, பஞ்சவன்மாதேவி, சீரடியாள், ராஜராஜி எனச் சிலரை ஆட்கொண்டவர்களாகவும் ஆட்சி செய்தவர்களாகவும் காட்டியிருப்பார். 

மொத்தத்தில் உடையாரில் பலவற்றை தனக்காக உடைத்து தான் நினைத்த இராஜராஜனை நம்முன்னே வைத்திருக்கிறார் பாலகுமாரன்.என் எழுத்து எப்படியிருந்தாலும் படிப்பார்கள் என்ற எண்ணம் எந்த எழுத்தாளனுக்கும் இருக்கக் கூடாது. தானே பெரியவன் என்னை மிஞ்சி எவனும் இல்லை என்ற நினைப்பு எவனுக்கும் வரக்கூடாது.  அந்த எண்ணம் வந்தால் என்ன எழுதி என்ன புண்ணியம் சொல்லுங்கள்... உடையாரில் இருக்கும் எழுத்துக்கள் பல இடங்களில் நானே பெரியவன் என்று சொல்லாமல் சொல்லி சிரிக்கின்றன... வாசித்த நாம்தான் வரலாறுகள் எப்படி புனைவுகளாய் சிதைந்து போய் நிற்கின்றன என உடைந்து போகிறோம்.

உடையார் வாசியுங்கள்... கூட்டுக்கறியைப் போல் ஒரு வரலாற்றையும் அதன் நாகரீகத்தை  தனது எண்ண ஓட்டத்தில் கிளைகளைப் பரப்பி பக்கம் பக்கமாய்ச் சொல்ல முடியும் என்பதையும் அறிவீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

காத்தாயி (அகலில் வெளியானது)

அகல் மின்னிதழில் (அக் : 1 -15) எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. இது அகலில் வெளியாகும் எனது 2 வது சிறுகதையாகும். முதல் சிறுகதை சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதை... அதன் பின் தொடர்ந்து நான்கு கட்டுரைகள்... மொத்தத்தில் இது அகலில் ஆறாவது படைப்பு. தொடர்ந்து எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் அகல் திரு. சத்யா அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் அகலின் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என் நன்றி.

அகலில் வாசிக்க.... காத்தாயி

அங்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நட்புக்களே... அது என்னைவிட அகலுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.  நன்றி.

*******

Image result for கிழவி

ஊருக்குள்ள ரொம்ப ராசியானவன்னு பேரெடுத்தவ காத்தாயி.. அவளைப் பாத்துட்டுப் போனா நடக்காதுன்னு நினைக்கிற காரியங்கூட நடக்கும்ன்னு நம்ப ஆரம்பிச்சாங்க... முக்கியமா எங்கயாச்சும் போகயில காத்தாயி எருக்கொட்டிட்டு எதிரே வந்தாள்ன்னா போறவுகளுக்கு அந்தக் காரியம் அப்பவே முடிஞ்ச மாதிரி சந்தோஷம். பொண்ணு மாப்ள பேசுறதுன்னா அவளைக் கூட்டிக்கிட்டுத்தான் போவாங்க.

அப்படிப்பட்ட காத்தாயி இன்னைக்கு ஊருக்குள்ள ராசியில்லாதவளா ஆயிட்டா... அன்னைக்கி அவளைப் பாத்துட்டுப் போனா மண்ணெல்லாம் பொண்ணாகும்ன்னு பேசுன சனங்க இன்னைக்கு அவளைப் பாத்துட்டுப் போனா பொச கெட்ட வாய்க்கு போயிலை கிடைக்காதுன்னு பேசிக்கிறாங்க. எங்கயாச்சும் போகும் போது எதிரே அவ வந்துட்டா அம்புட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு போகவும் செய்தாங்க... காத்தாயி எங்கிட்டாச்சும் நிக்கிறாளான்னு பாரு... அவ இல்லாதப்பத்தான் போகணும்ன்னும் பேச ஆரம்பிச்சாங்க... நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்தானே... அன்னைக்கு தெய்வமா இருந்தவ இன்னைக்கு கல்லாத் தெரியக்காரணம் என்னன்னு அவளுக்கு விளங்கவே இல்லை. ​

காத்தாயி ஆளை அசர வைக்கிற அழகு எல்லாம் இல்லை... கிராமத்துல இருட்டுக் கருப்புன்னு சொல்வாங்க அப்படி ஒரு இருட்டுக் கருப்பு அவ... மஞ்சளரச்சிப் பூச்சிக் குளிச்சிட்டு வந்து தலையை அள்ளிக் கட்டிக்கிட்டு நெத்தியில பெரிய அளவுல மீனாட்சி குங்குமம் வச்சி கோபுரக்கரை சேலையை கெரண்டக்கால் தெரிய கட்டி நடந்து வந்தான்னா அந்த மாரியாத்தாவே நடந்து வர்ற மாதிரி இருக்கும். அவளுக்கு உதட்டு மேல மூக்குக்கு கீழ இருக்கிற அந்தப் பருதான் அழகே... எந்த நேரமும் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பா.

அந்த ஊருக்கு அவள் திருமணமாகி வரும் போது பதினெட்டு வயசு கூட ஆகலை... சின்னப்புள்ளையா சேலையை சுத்திக்கிட்டு திரிவா... அவ புருஷன் ராமசாமி அப்பல்லாம் ஒரு உருப்படியான வேலை இல்லை. கொஞ்ச நாள் டீக்கடையில இருப்பான்... திடீர்ன்னு பழக்கடையில வேலை பார்ப்பான்... அப்புறம் மாதவனோட பலசரக்கடையில இருப்பான்... நாடு மாறியின்னு கேள்விப்பட்டிருப்பீங்கதானே இவன் வேலைமாறி... ஒரு சின்னப்பிள்ளை பொறுப்பில்லாத புருஷன் கூட குடும்பம் நடத்துற எவ்வளவு கஷ்டம்ன்னு அவ உணர்ந்தாலும் வீட்டுப் பெரியவங்க உணரலை... அவனை நீதான் திருத்தணும்... புருஷனை முந்தானைக்குள்ள முடியத் தெரியணும்டி... சும்மா அவங்கூட படுத்து எந்திரிச்சா பத்தாது... படுக்கும் போது அவனை நம்ம வழிக்கு கொண்டாரணும் அங்கதான் இருக்கு வாழ்க்கையோட சூட்சமம்ன்னு அவ அக்கா சொல்லிக் கொடுத்தா அதை இவ செஞ்சா.

அவன் சித்தம் போக்கு சிவம் போக்குன்னு திரிஞ்சவன் அவ மகுடிக்கு ஆட ஆரம்பிச்சான்... ஆடி போயி ஆவணி வந்தா சரியாகும்ன்னு ஜோசியக்காரன் சொல்ற மாதிரி அவ வந்த ஆறு மாசத்துக்குள்ள முத்தையா செட்டியாருக்கிட்ட கணக்கெழுதுற வேலைக்குச் சேந்தான்... அப்புறம் அங்கயே நிலைச்சிட்டான். செட்டியார் உதவியில ரோட்டோரத்துல கிடந்த செல்லையாவோட நாலு ஏக்கரு புஞ்சையை வாங்கினான். செட்டியார் கொடுத்தது போக பத்தாதுக்கு காத்தாயியோட நகையை அடகு வச்சி பணம் கொடுத்தான். அவனுக்கு நகையைக் கொடுக்காதேன்னு எல்லாரும் சொன்னாங்க... ஆனா அவன் மேல் இவ முழு நம்பிக்கை வச்சா... அந்த இடத்துல நாலு வருசத்துல போர் போட்டு வாழை, தென்னை, மா, பலா எல்லாம் வச்சி விவசாயம் பண்ண ஆரம்பிச்சான். நல்ல வசதி, வாய்ப்புன்னு வந்த பின்னாலயும் பழச மறக்காம செட்டியார் வீட்டு வரவு செலவுக் கணக்கை வருசா வருசம் அவன்தான் எழுதிக் கொடுப்பான். எதுவாயிருந்தாலும் காத்தாயிதான் அவனுக்குத் தெய்வம்... அவ சொன்னா தட்டமாட்டான். யோசிச்சிக்கப்பான்னு யாராச்சும் சொன்னா எங்காத்தா சொல்லிட்டா. சரியா நடக்கும் என்பான். அதே மாதிரி நடக்கும். ஊருக்குள்ள மாடி போட்டு முதல்ல வீடு கட்டுனது அவன்தான். உதவாக்கரைப் பயல உசரத்துல உக்கார வச்சிட்டா ராஜாத்தின்னும், அவ அடி எடுத்து வச்ச நேரம்னும் ஊரே காத்தாயியைப் புகழ்ந்துச்சு.

ஒவ்வொரு முறையும் கல்யாணம் தட்டிப் போன சரசுக்கு மாப்பிள்ளை பாக்கப் போகும் போது பார்வதிக்கிட்ட அக்காவ் இந்த மாப்பிள்ளைதான் சரசுக்கு முடியும் பாருன்னு சொன்னா அவ சொன்ன முகூர்த்தமா இல்ல சரசுவுக்கு நல்ல நேரமான்னு தெரியல. அந்த இடம் ஓகே ஆகி, சரசுக்கு கல்யாணம் ஆகி கையில ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமாக கூட்டிக்கிட்டு ஆத்தாவை பாக்க அடிக்கடி வருவா... வரும்போதெல்லாம் காத்தாயி வீட்டுக்கு வந்து மணிக்கணக்குல பேசிக்கிட்டு இருப்பா... அவளும் இப்ப பேரன் பேத்தி எடுத்துட்டா...

வாத்தியாரு வேலைக்கு இண்டர்வியூ போன சுப்பையாக்கிட்ட, 'மாப்ள கவலப்படாம போங்க... கண்டிப்பா ஒங்களுக்கு இந்த வேல கெடைக்கும்' அப்படின்னு சொல்லி மாரியம்மன் கோவில் துணூறைப் நெற்றியில் பூசிவிட்டா, அவ வாய் முகூர்த்தம் அவனுக்கு வாத்தியார் வேலை கிடைச்சதா ஊர்ல பேசிக்கிட்டாங்க. இன்னைக்கு அவன் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கான். அவன் மகங்கூட ரெண்டு வருசத்துக்கு முன்னாடி காலேசுல வாத்தியாராயிட்டான்.

குழந்தையில்லாத வேலம்மா மகளுக்கு, ஏதோ ஒரு கசாயம் ரெடி பண்ணி மூணு நாளு காலையில வெறும் வயித்துல குடிக்கச் சொல்லி கொடுத்தா... மூணு பயலுகளுக்குப் பின்னே பொண்ணு வேணும்ன்னு இப்ப நாலாவதை சுமந்துக்கிட்டு நிக்கிறா...

அறுவடை சமயத்துல யார் வீட்டுல கருதறுப்புன்னாலும் மொத அரி அவளோட அரியாத்தான் இருக்கும் அந்த வயல்ல பத்து மூடை வர்ற இடத்துல பதினைந்து மூடை வரும்னு நம்பினாங்க. அவளை வீட்ல வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. இதெல்லாமே ராமசாமி இருக்கும் வரைக்கும்தான். அறுபத்தஞ்சு வயசுல தோட்டத்துல வேலை பாத்துக்கிட்டு இருந்தவன் எதோ கடிச்சி நுரை தள்ளி மயங்கிக் கிடக்க, தூக்கிக்கிட்டு பெரியசாமிக்கிட்ட ஓடுனாங்க... முடிஞ்சி போச்சுன்னு சொல்லிட்டாரு. அத்தோட காத்தாயியோட சந்தோஷம் போச்சு... வட்டப் பொட்டு இல்லாத முகம் வசீகரம் இழந்து போச்சு... ராசியானவங்கிற பேருமே ராசியில்லாமப் போச்சு.

மேல வீட்டு சுசீந்திரன் பொண்டாட்டிக்கு வயித்த வலி வந்து கார்ல கூட்டிப் போனப்போ, இவ வீட்டைக் கடக்கும் போது வாசல்ல நின்னு நல்லபடியாப் பொறக்கும் கவலைப்படாம போங்கன்னு கை காட்டினா. குழந்தை இடம் மாறிக் கெடக்குன்னு சொல்லி ஆபரேசன் பண்ணினப்போ குழந்தை பிழைச்சிக்கிச்சு அவ செத்துப்போயிட்டா. காத்தாயிய பாத்துட்டுப் போனதுதான் காரணம் ஊருக்குள்ள பேச ஆரம்பிச்சாங்க... தாலியறுத்தவளா லெட்சணமா வீட்டுக்குள்ள இருக்காளா பாருன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

முத்துப்பாண்டிப் பய வீட்டு மாடு முடியாம நின்னப்போ, அவன் பொண்டாட்டி இவகிட்ட வந்து புலம்ப, இவ போயிப் பாத்துட்டு வாழைப்பழம் வாங்கியாரச் சொல்லி கத்தாழையோட ஏதோ பச்சிலை கலந்து வாழைப்பழத்துக்குள்ள வச்சி கொடுத்துட்டு வந்தா... நல்லா பால் கறந்த பசு அன்னைக்கி ராத்திரியே செத்துப் போச்சு... பச்சக்கன்னுக்குட்டி கத்திக்கிட்டே கிடக்கு. இவ மருந்து கொடுக்கலைன்னா மாடு பொழச்சிருக்கும் என்ன மருந்தைக் கொடுத்தாளோன்னு முத்துப்பாண்டி பொண்டாட்டி ஒப்பாரி வச்சா.... அந்த முண்டச்சிய ஏன்டி மருந்து கொடுக்கச் சொன்னே... ஒரு போனு பண்ணியிருந்தா கம்பவுண்டரு வந்திருப்பாருன்னு கனகம் சத்தம் போட்டா.

கண்ணபிரான் மகனுக்கு வீடு கட்ட தச்செஞ்சப்போ, ஊருக்குள்ள எல்லாருக்கும் சொன்னாரு... சரி சொல்லியிருக்காரே போவாம இருக்ககூடாதுன்னு சாமியெல்லாம் கும்பிட்டு பூஜை போட்டதுக்கு அப்புறம்தான் போனா... இவ எதுக்கு ஆட்டிக்கிட்டு இங்க வாறா முண்டச்சி அப்படின்னு பாப்பாத்தி பக்கத்தில இருந்த வீராயிக்கிட்ட சொன்னதை காதுல கேட்டு கண் கலங்கினாள். என்ன ஆச்சோ தெரியலை பாதி வரைக்கும் கட்டுன வீடு மீதியை கட்ட முடியாம கிடக்கு... காத்தாயி கால் வச்சதாலதான் இப்படி ஆச்சின்னு கண்ணபிரான் பொண்டாட்டி கண்டவங்ககிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கா.

எல்லாத்துக்கும் நம்மள முன்னாடி நிக்கச் சொன்ன ஊரு இன்னைக்கு ஒதுக்கிப் பாக்குதேன்னு அவ மனசு வருந்துச்சு... அவளைப் பாக்க வந்த மகன்கிட்ட 'காலையில வெளிய தெருவ போகும்போது யாராச்சும் என்னய பாத்துட்டுப் போனா... அன்னைக்கு காரியம் வெளங்காமப் போயிருதுன்னு பேசிக்கிறாங்க... சுமங்கலி பொம்பள போனாலே ஆயிரம் பேசுவாங்க... நா அமங்கலி... அவங்க முன்னாடி எதுக்குப் போவணும்ன்னு வெளிய போக யோசிச்சிக்கிட்டு அடக்கிக்கிட்டு வீட்டுக்குள்ள உக்காந்திருக்கேன்... ஆறு மணிக்கு போயிப் பழக்கப்பட்டவ பத்துப் பதினோரு மணி வரைக்கும் அடக்கிக்கிட்டு இருக்க முடியுமா சொல்லு. அந்த தென்ன மரத்துப் பக்கம் ஒரு கக்கூசு கட்டிக் கொடுத்தியன்னா நாம்பாட்டுக்கு அதுல இருந்துப்பேன்னு சொன்னதுக்கு 'செலவு மேல செலவும்மா... பாக்கலாம்' என்று சொல்லிச் சென்றவன் நாலஞ்சு மாசமா ஊருப்பக்கம் வரவேயில்லை.

இப்பல்லாம் அவ எந்த நல்லது கெட்டதுக்கும் போறதில்லை. அம்மன் கோவில் திருவிழா அப்பக் கூட வீட்டுக்குள்ளதான் முடங்கிக் கிடப்பா... எல்லாரும் சாமி கும்பிட்டுப் போன பின்னால அங்க போயி ரொம்ப நேரம் ஆத்தாவோட வாசல்ல கிடப்பா... அப்பல்லாம் கண்ணீரு மாலைமாலையா ஒடும். யாருக்கும் கெடுதல் நினைச்சதில்லை. அன்னைக்கி என்னையப் பாத்துட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கனுமின்னு நின்னவங்க இன்னைக்கி எதிர்ல வராதேன்னு சொல்றாங்க. பேசாம என்னையும் எம்புருஷன் போன இடத்துக்கு போக வச்சிருன்னு புலம்புவா. எப்பவும் போல மாரியத்தா சிரிச்சிக்கிட்டே இருப்பா.

காளியம்மா மகன் சேகருக்கு கல்யாணம். சின்ன வயசுல ஆயா ஆயான்னு இவ முந்தானையை பிடிச்சிக்கிட்டு யார்க்கிட்டயும் போவமாட்டேன்னு அடம் பிடிச்சி இவளுக்கிட்ட கிடந்த பய அவன். இப்பவும் ஊர்ல இருந்து வரும் போது இவளுக்குன்னு தனியா பலகாரமெல்லாம் வாங்கியாந்து கொடுப்பான். இவகிட்டத்தான் வந்து கிடப்பான்... ஒரு தடவை அவனோட அப்பத்தா எப்பப் பாத்தாலும் அங்க என்ன வேலையின்னு கத்துனதுக்கு உன்னோட வேலையைப் பாரு என்னைய அங்க போகாதேன்னு சொல்ல நீயாருன்னு கேட்டுட்டான். போன வாரம் அவளுக்கு சேலை வாங்கிக் கொண்டாந்து கொடுத்து நான் தாலி கட்டுறப்போ நீ இந்தச் சேலையிலதான் வரணும்ன்னு சொல்லிட்டுப் போனான். ஊரே ராசியில்லாதவன்னு சொல்றப்போ நாம அங்க போயி புள்ளையோட கல்யாண வாழ்க்கை சூனியமாயிட்டான்னு நினைச்சி கல்யாணத்துக்கு அவ போகாம மகனையும் மருமகளையும் போகச் சொல்லிட்டா...

தாலி கட்டின பின்னால பொண்ணு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு ஊர்ல சாமி கும்பிட சில பெருசுங்க வந்தாங்க. காத்தாயி வீட்டு வாசல்ல வேனை நிறுத்தச் சொன்னான் சேகர். ‘எப்பா சாமி கும்பிட்டு வந்திடலாம். மொத மொதல்ல கோயிலுக்குத்தான் போகணும்' என்றாள் வீராயி. 'அப்பத்தா... இதுதான் என்னோட கோவில்... என்னோட சாமி இங்கதான் இருக்கு... எனக்கு இந்த ராசியில எல்லாம் நம்பிக்கை இல்லை' அப்படின்னு சொல்லி பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு இறங்கிட்டான். 'சொல்லச் சொல்லக் கேக்குதா பாரு... இவனோட ஆத்தா காத்தாயி அம்மா வீட்டுக்கு போக விடாதீக... நாளப்பின்ன ஆசி வாங்கிக்கலாம்ன்னு இது இப்பத்தான் ஏறிக்கிட்டுப் போகுது... அவ உங்கள நம்பி போகச் சொன்னேன் பாருன்னு நம்மளையில்ல திட்டுவா' என்றாள் பாப்பாத்தி.

சேகரைப் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ச்சியாக எழுந்தவள், 'கோயிலுக்குப் போகாம இங்க எதுக்கு வந்தே... முதல்ல ஆத்தாவோட குங்குமத்தை உம் பொண்டாட்டிக்கு வச்சிவிடு... போ... அப்பறம் இங்க வரலாம்' என்றாள்.

“ஆயா புரியாத சனங்க உன்னைப் புண்படுத்தலாம் நீதான் எனக்கு சாமி. நாங்க நல்லாயிருக்கணும்ன்னு வேண்டிக்க உங்கையால எங்களுக்கு துணூறு பூசி விடு நீ வாழ வச்ச குடும்பந்தான் நிறைய இருக்கு உன்னால கெட்ட குடும்பம்ன்னு எதுவும் இல்லை" என்று அருகில் நின்றவளிடம் ஜாடை காட்ட, இருவரும் காலில் விழ, "நல்லாயிருப்பீக பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழ்வீங்க எந்த குறையும் எம் பிள்ளைகளுக்கு வராது" என்று அவர்களைத் தொட்டுத் தூக்கியவளின் கண்கள் கலங்கி இருந்தன.

‘ம்க்கும் பதினாறு பெத்துட்டாலும், என்ன நடக்கப் போவுதோ தெரியலையே' பாப்பாத்தியின் காதைக் கடித்தாள் வீராயி.

இன்னைக்கு சேகர் கனரா பேங்கோட குறுந்தங்குடி கிளையில மேனேஜரா இருக்கான்... அவன் பொண்டாட்டி புஷ்பவதி கல்லூரிப் பேராசிரியையா இருக்கா... தேவகோட்டை ஜமீந்தார் நகர்ல ரெண்டு மாடி வீடு கட்டி, ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோஷமா இருக்கான். அடிக்கடி காத்தாயிய வீட்டுக்கு கூட்டிப் போயிருவான். அவளும் மகன் வீட்டுக்குப் போறாளோ இல்லையோ சேகர் வீட்டுக்கு உடனே கிளம்பிடுவா...

காத்தாயிய இப்பல்லாம் யாரும் ராசியில்லாதவன்னு சொல்றதில்லை... காத்தாயியும் இப்பல்லாம் யாருக்காகவும் பயப்படுவதுமில்லை...

****

சென்ற தீபாவளிக்கு எழுதிய 'ஜீவ நதி' சிறுகதை திரைக்கதை வடிவில் அன்பின் அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்கள் எழுதி அனுப்பியிருக்கிறார்.... மிக நீண்டதாய் இருப்பாதால் இரண்டு பகிர்வாக விரைவில் பகிர்கிறேன்.... அதே சமயம் அண்ணனின் தளத்திலும் பகிரப்படும்...  நன்றி சரவணன் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

புதன், 5 அக்டோபர், 2016

வரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா?

Image result for குந்தவை நாச்சியார்

'என்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...?' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரலாறை அறிந்து கொள்வோமேன்னுதான்...' மெல்ல இழுத்தேன்.

'பொன்னியின் செல்வன்... உடையார்.... சங்கதாரா... என வரிசையாக சோழ வரலாற்றுக்குள் மூழ்கி எழுத்தியே முத்தெடுத்தியா..? அடுத்தது என்ன நந்திபுரத்து நாயகியா...?'

'இல்ல கடல் புறா பக்கமாகப் போகலாம்ன்னு நினைக்கிறேன்...'

'ஏன் என்னாச்சு... சோழம்... சோழம்ன்னு ஓடினே.... நந்திபுரமும் வாசிச்சிட வேண்டியதுதானே...?'

'அய்யய்யோ இப்ப அதையும் வாசிச்சா நான் யாருன்னே மறந்து போகுமப்பா... முடியல... ஆளாளுக்கு ஒரு கதை சொல்லி இனி வரலாற்று புதினம் வாசிப்பே... வாசிப்பேன்னு சுளீர் சுளீர்ன்னு அடிக்கிறாங்கப்பா... கடல் புறா சோழனோடு பயணித்தாலும் இளைய பல்லவனைச் சுற்றி பிண்ணப்பட்ட கதையாம்...'

'ஹா.. ஹா.... அப்பவே சொன்னேன்... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அதில் வரலாறுங்கிற ஊறுகாயை வைத்து பெரிய விருந்தே சமைப்பாங்கன்னு கேட்டாத்தானே....'

'சொன்னே.... இருந்தாலும் ஏதோ ஒரு ஆசையில வாசிச்சேன்... முடியல...'

"என்னாச்சு...?'

'கல்கி... பாலகுமாரன்... டி.ஏ.நரசிம்மன்... மூன்று பேரும் எடுத்திருந்த களம் சோழர்கள்தான்... ஆனால் நம்மளை சுழற்றிச் சுழற்றி அடிச்சிட்டாங்க...'

'ம்... அவங்க அவங்க எண்ணத்தில் என்னமாய் நினைத்தார்களோ அதை எழுதியிருப்பாங்க'

'கல்கியும் பாலகுமாரனும் கொஞ்சம் ஒத்துப் போனால் நரசிம்மன் தள்ளி நிற்கிறார்.'

"ஹா...ஹா... மூவருக்கும் இடையில் வித்தியாசம் என்ன...? சொல்லு...'

'ஆதித்த கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் இறந்தார் என்று கல்கியும்... ஆற்றில் பிணமாக மிதந்தார் என்று பாலகுமாரனும் சொல்ல, தஞ்சை மாளிகையில் கொலை செய்யப்பட்டு சம்புவரையர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நரசிம்மன் சொல்றார்...  '

'ம்... '

'கல்கி எடுத்தது பொன்னியின் செல்வனான அருண்மொழியோட கதை... அதனால அவர் ஆதித்த கரிகாலன் பின்னே அதிகம் பயணிக்கலை... பாலகுமாரன் எடுத்தது தஞ்சைக் கோவில் கட்டும் கதை... இதுவும் இராஜராஜனான அருண்மொழியோட கதை என்பதால் ஆதித்த கரிகாலனோட இறப்பை மட்டுமே சில இடங்களில் சொல்றார்... ஆனா நரசிம்மர் ஆதித்த கரிகாலம் இறப்பின் மர்மத்தை உடைக்கிறேன்னு தமிழ் சினிமாவைவிட ரொம்ப மோசமா எழுதியிருக்கிறார்.... இது வரலாற்று உண்மைங்கிறதை ஏற்றுக்க முடியலை... என்னைப் பொறுத்தவரை வரலாறு இங்கே கொல்லப்பட்டுவிட்டது.'

'ம்... அப்புறம்...?'

'ஆதித்த கரிகாலனின் உற்ற தோழன் வந்தியத்தேவன் என கல்கியும்... சோழநாடு போனால் பிழைத்துக் கொள்ளலாம் என வந்தவன் என பாலகுமாரனும்... வீரபாண்டியனைக் கொல்ல உதவி செய்து ஆதித்தனுக்கு நண்பனாகி... சோழ தேசத்தை அழிக்க வந்தவன் என்று நரசிம்மனும் சொல்றாங்கப்பா... வந்தியத்தேவன் மிக நல்லவர் என்று படித்ததை எல்லாம் மாற்றி... வில்லனாக்கி... முடியலை... அதுவாவது பரவாயில்லை.. குந்தவையோடு காதல் கணவனாய் வாழ்ந்தவர்ன்னுதான் வரலாற்றுக் குறிப்பு.. ஆனா அவரு வல்லத்துல இன்னொரு திருமணம் பண்ணி அங்கு அதிகம் தங்கியதாகவும்... குந்தவையோடு திருமணத்துக்குப் பின் கூடல் இல்லை என்றும் சொல்லி.... ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல சாமி... இங்கும் வரலாறு படுத்துருச்சு...'

'வல்லவராயன் வந்தியத்தேவன் வில்லனாவும் குந்தவையை விடுத்து வேறு  ஒருத்தியை கட்டியவராகவும் நினைக்கத் தோணலை... மேல சொல்லு...'

'குந்தவை மிகச் சிறந்தவள்... அவள் என்ன சொல்கிறாளோ அதன்படியே இராஜராஜன் ஆட்சி செய்தான் என்றும் சொன்னதில் கல்கியும் பாலகுமாரனும் ஒத்துப் போனாங்க... ஆனா தமிழ் சினிமா மாதிரி குந்தவையை நல்லவள் போல் காட்டி மிகப்பெரிய வில்லி ஆக்கி.... அய்யோ என்ன கொடுமை இது ஆட்டை தூக்கி குட்டியில போட்டு குட்டியை தூக்கி ஆட்டுல போட்டு மிக மோசமாக சோழ வரலாற்றைக் கதையாக்கி குழப்பிட்டாரு மூன்றாமவர்...'

'அடேங்கப்பா... குந்தவை கொலைகாரியா...?'

'சொன்னா நம்பமாட்டே.... ஆதித்த கரிகாலனைக் கொன்னது குந்தவைதான்னு சொல்லியிருக்கிறார்.... அதுவும் தஞ்சையில கொன்னு சம்புவரையர் மாளிக்கைக்கு எடுத்துப் போனதை படிச்சேன்னு வச்சிக்க வடிவேலு மாதிரி உனக்குத் தேவையா... உனக்குத் தேவையான்னு நீயே கேட்டுப்பே...'

'ஹா..ஹா... ஒரு வழி ஆயிட்டேன்னு சொல்லு....'

'ஆமா...'

"அடுத்து உத்தம சோழன்ங்கிற மதுராந்தகன்... இளவரசர் ஆதித்த கரிகாலன் மறைவுக்குப் பின்... சக்கரவர்த்தி சுந்தரசோழர் நிலமை ரொம்ப மோசமாக, அவரின் அண்ணன் மகனான மதுராந்தகர் 15 வருடம் ஆண்ட பிறகே இராஜராஜர் ஆட்சி பீடத்தில் ஏறினார் என்பது வரலாறுன்னு நினைக்கிறேன் . கல்கி உண்மையான மதுராந்தகர் பூங்குழலியின் அத்தை மகனான சேந்தன் அமுதன் எனச் சொல்லி அவனை அருண்மொழியே பதவி ஏற்க வைத்தான் என்று சொல்வார்... பாலகுமாரன் மதுராந்தகனான உத்தம சோழன் அரசனாக வேண்டும் என அவன் அம்மா தில்லு முல்லு வேலைகள் செய்வதாகவும் இராஜராஜன் விட்டுக் கொடுத்து விலகிச் செல்வதாகவும் சொல்லியிருப்பார்... நரசிம்மரோ காணாமல் போன கண்டராதித்தன்... காணாமல் போன அவரின் மகன் மதுராந்தகன்...  என்றெல்லாம் சொல்லி... மதுராந்தகனை அரியணை ஏற்றுகிறார்... இதில் என்ன கூத்துன்னா மதுராந்தகரான  உத்தம சோழனை, சுந்தர சோழரின் மகன் என்றும் குந்தவையின் தம்பி என்றும் சொல்கிறார்... எது உண்மைன்னு நாம குழம்பி நிக்கிற மாதிரி ஆயிருச்சு...'

'ரொம்ப யோசிக்காதே... படிச்சதோட நிறுத்து...'

'ஹா.... ஹா... இன்னும் இருக்கு... அருண்மொழியோட இலங்கைப் படையெடுப்பை கல்கி அருமையாய் விவரித்திருப்பார்.... அருண்மொழி இலங்கையில் இருந்து திரும்பிய பின்னரே மதுராந்தகருக்கு பட்டாபிஷேகம்... பாலகுமாரனோ மதுராந்தகரை அரசராக்கிய பின்னர்  அருண்மொழியை இலங்கைக்கு போர் தொடுக்கச் செல்ல வேண்டும் என்று சொல்வதாக பட்டும்படாமலும் சொல்லியிருப்பார். நரசிம்மரோ இலங்கை கதையை தொட்டிருக்கமாட்டார்... காரணம் அவர் களம் ஆதித்த கரிகாலனின் கதை என்கிறார். ஆனால் இராஜராஜனுக்கு பட்டம் கட்டாமல் மதுராந்தகர்தான் பட்டத்துக்கு வரவேண்டும்... என்று சொல்லி அவரை அரசனாக்கி மற்றவரையெல்லாம் துரோகியாக்கியிருப்பார்.'

'ம்... அப்புறம்...?'

'அருண்மொழி.... மிகச் சிறந்த வீரன்... என்பதை மூவருமே ஒத்துக் கொண்டிருப்பார்கள்... அவன் சுந்தர சோழரின் மகன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் தம்பி என்பதை கல்கியும் பாலகுமாரனும் சொல்லியிருப்பார்கள்... தஞ்சை கல்வெட்டுக்களில் கூட 'யான் கொடுத்ததும் அக்கன் கொடுத்ததும்' என்று இராஜராஜன் பொரித்து வைத்திருப்பதாக பாலகுமாரன் சொல்லியிருப்பார். நரசிம்மன் அவர்களோ அருண்மொழி குந்தவையின் தம்பி என்று சொல்லி கதை நகர்த்தி இறுதியில் குந்தவையின் மகன் என்று சொல்வார்... ஏற்க முடியாத ஒன்று... அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்... சினிமாவை மிஞ்சும் கேலிக்கூத்து...'

'ஆட்டைக் கடிச்சி... மாட்டைக் கடிச்சி... கடைசியில் இராஜராஜனையே கடிச்சிட்டாரா...?'

'ஆமாம்... ஒரு தேசத்தை கட்டி ஆண்ட... நம் நாகரீகத்தை உலகம் அறியச் செய்த... மிகப்பெரிய கற்கோவிலைக் கட்டிய... மாவீரன் இராஜராஜன் சுந்தர சோழனின் மகன் என்பது வரலாறு.... நாம் வரலாற்றை வரலாறாய்ப் பார்ப்போம்... புதினங்கள் எல்லாமே ஆசியர்களின் கற்பனையே என்பதாய்ப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்..'

'அதுதானே உண்மை... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அது சரி... அப்ப இனி சோழ சக்கரவர்த்தி இராஜராஜன் பற்றி வாசிக்க மாட்டியோ...?'

'வாசிப்பேன்... உண்மையான வரலாறு கிடைத்தால் வாசிப்பேன்... அது வரைக்கும் பொய்க்கதைகளுக்குள் புதைய மாட்டேன்...'

'ஓகே...'

'சரி... இந்த வாரம் தஞ்சை கோவிலுக்குப் போறேன் வாறியா...?'

'வரலாமே...'

'பாலகுமாரன் நாவலின் பிரமாண்டத்துக்காக கோவில் வேலைகளை ரொம்பவே கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் அந்த கற்கோவிலின் பிரமாண்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்... எத்தனையோ முறை பேருந்தில் தஞ்சை பெரிய கோவிலைக் கடந்திருக்கிறேன்... பார்க்கணும்ன்னு தோணலை... உடையார் முடித்ததும்  பார்த்தே ஆகணும்ன்னு ஆசை வந்திருச்சு... இந்த வாரம் இராஜராஜன் பாத்துப் பாத்து கட்டிய கோவிலைப் பார்த்துட்டு வரலாம் சரியா..'

'ஓகே... இப்ப என்ன பண்றே...?'

'அதான் சொன்னேனே... கருணாகரப் பல்லவனோடு கடல் புறாவில் பயணிக்கிறேன்....'
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 3 அக்டோபர், 2016

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...

Image result for அப்போலோ மருத்துவமனை

'உங்களுக்காக நான்... உங்களோடு நான்...' என்று சொன்ன மக்கள் பிரதிநிதி பத்து நாளைக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குறித்த எந்த செய்திகளும் இல்லாமல்... எப்படியிருக்கிறார்...? என்ன பிரச்சினை...? என்பது எதுவும் தெரியாமல் ஒரு மாநிலம் பரிதாபமாய் நிற்கிறது. ஆளுநர் சென்று வந்தது கூட பார்த்தாரா... பார்க்கவில்லையா... என்ற பட்டிமன்ற நிலையில்தான் இருக்கிறது.

சிறைக்குச் சென்ற போது மக்களின் முதல்வர் என்றார்கள்... அந்த மக்களின் முதல்வருக்கு என்னாச்சு...? மக்களுக்குத் தெரிய வேண்டாமா...? மற்ற தொலைக்காட்சிகளை விடுங்கள் அம்மா புகழ் பாடும் தொலைக்காட்சியிலாவது அம்மாவை வாட்ஸ்அப்பில் பேசச் சொல்லலாமே... மழையின் போது அப்படித்தானே பேசினார்... எதுவுமே இல்லாத ஒரு அமானுஷ்ய சூழலில் தமிழகம் இருக்கும் போது ஆறு கோடி மக்களில் சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உண்மை விபரம் அறிந்தவர்களாக... இவர்கள் மட்டும்தான் தமிழகமா...? எல்லாத்துக்கும் பொங்கும் ஊடக நண்பர்கள் அமைதி காப்பது ஏன்...? அம்மா மீது உள்ள பயமா..? இல்ல சின்ன அம்மா மீதுள்ள பயமா...? உங்க ஊடக தர்மம் என்னாச்சு... இதே கலைஞரை விடுங்க... விஜயகாந்த் என்றால் இந்நேரம் மருத்துவமனை மேற் கூரையைப் பிரிச்சிக்கிட்டு இறங்கியிருப்பீங்கதானே... உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய ஊடகம் அம்மாவுக்கு பக்கத்துப் படுக்கையில் தூங்கிக்கிட்டு இருப்பதுதான் வேதனை. 

மந்திரிகள் எல்லாம் மந்திகளாய் அப்போலோ வாசலில் காத்து நின்றால் போதுமா..? பாவம் மந்திகள்... அவற்றிற்கு கொஞ்சமேனும் சுயபுத்தி உண்டு... இங்க சொல்புத்தியும் இல்லை... சுய புத்தியும் இல்லை.... அம்மா ஆதரவில் இரண்டு முறை முதல்வராய் இருந்த பன்னீர்ச்செல்வம் அப்போலோ வாசலில் விளக்கேற்றி அதற்கு நடுவில் அமர்ந்து பூஜை செய்கிறார்... அது மட்டும் போதுமா...? அவருக்குப் போதும்... பதவியை தக்க வைக்க...  அவர் மட்டுமா இப்படி...? ஏகப்பட்ட பூஜைகள்.. வேண்டுதல்கள்... அழுகைகள்... ஆரவாரங்கள்... என்ன கேவலம் இது...? இதைவிட தமிழனை கேவலப்படுத்த வேறு என்ன இருக்கு...? அம்மாவுக்கு என்னாச்சு... அதைச் சொல்லுங்கடா முண்டங்களா... தமிழகத்தைக் கெடுக்க வந்த தண்டங்களா...? பூஜையாம் புனஷ்காரமாம்... அடுத்த மாநிலத்துக்காரன் உங்கம்மாவுக்கு என்னாச்சுன்னு  கேவலமாய் கேட்கிறான்... என்னத்தைச் சொல்ல... எங்கம்மாக்கிட்ட காலையில பேசினேன் நல்லாயிருக்கே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

கர்நாடகாக்காரன் தண்ணி தர முடியாதுங்கிறான்... நீதிமன்ற தீர்ப்பைத் தூக்கி குண்டிக்குப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறான். முன்னாள் பிரதமர் ஒருத்தன் உண்ணாவிரதம் இருக்கிறான். அவன் பிரதமர் ஆக நாமதானே காரணமா இருந்தோம்... இன்னைக்கு அவன் உண்ணாவிரதம் இருக்கிறானே பாருங்கள்... அவனுக்கு விளக்கேத்தி அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியா வரவிடமா விளக்கை அணைச்சவனுங்கதானே நாம...  தூங்கமூஞ்சி தேவகௌடா பிரதமரா இருக்கும்போது நமக்கு என்ன பண்ணியிருப்பான் யோசிச்சீங்களா...? அவனை புடிச்சி உள்ள போடுங்கடான்னு ஒரு வழக்குத் தொடுக்க துப்பில்லை... மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுன்னு சொல்லுது... என்ன பண்ணப் போறோம்... எவனும் பேசாமல் தூங்கிக்கிட்டுதானே இருக்கப் போறோம்... காவிரிக்காக கண் விழித்துக் கொள்ளாதவனெல்லாம் தூக்கம் மறந்து ரோட்டில் நிற்கிறான்... காவிரி பிரச்சினை அப்போ நம்ம மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் இப்படி கூடலையே... அப்ப மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கலை... காத்துக் கிடக்கலை... ரோட்டுக்கும் வரலை... விவசாயத்துக்கு தண்ணி வேணுமின்னு பூஜை எல்லாம் பண்ணலை....

உண்மையாக முதல்வருக்கு என்னாச்சு... ஒரு பெண்ணாக இருந்தாலும் பல விஷயங்களில் அதிரடியாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்பதை எல்லோரும் அறிவோம்... காவிரி நீர் பிரச்சினையை சட்டப்படி நகர்த்தியதில் சாமர்த்தியசாலி.... கேரளனும் கர்நாடகனும் பயப்படும் தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி... எதையும் எப்படியும் நகர்த்தும் திறமைசாலி... அவருக்கு குடும்பம்... குழந்தை இல்லாததால் வஞ்சக வலைக்குள் சிக்கித் தவிக்கிறார் என்பதை எல்லாரும் அறிவோம்.

ஜெயலலிதா சர்வாதிகாரி என்று சாதிக்கட்சிகள் சப்தமிடலாம்... ஆம் சர்வாதிகாரிதான்... அந்த சர்வாதிகாரியால்தான் சில நன்மைகள் நமக்குக் கிடைத்தது... கலைஞரால் என்ன கிடைத்தது.... பாலம் கட்டினார்.. அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க... யோசித்துப் பாருங்க... குடும்ப அரசியல்... குடும்ப தொழிற்சாலைகள்.. குடும்ப ஊழல்.. அப்படித்தான் நகரும் அவரின் மக்கள் பணி. ஜெயலலிதா செய்யலையான்னு கேக்கலாம்... கொடநாட்டுல போய்த் தூங்கினார்ன்னு சொல்லலாம்... எதிலும் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்... செய்பவர் என்றெல்லாம் சொல்லலாம்... அவரும் செய்தார்தான்... இருந்தாலும் தமிழனுக்குன்னு சில விஷயங்களில் போராடி வெற்றியும் பெற்றார் இல்லையா... அதைப் பாராட்ட வேண்டிய இடத்தில் அரசியல் பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்...

ஜெயலலிதாவோ கருணாநிதியோ மக்கள் பிரதிநிதி என்கிற போது அவர்களின் உடல்நிலை குறித்தான விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கத்தானே வேண்டும். பத்துநாளாக எதுவுமே சொல்லாமல் நல்லாயிருக்கார் என்று நாட்களை நகர்த்தும் நாடகத்தின் உண்மை என்ன...? செத்துவிட்டார் என்ற வதந்தி கிளம்பியபோதும் நான் நலமுடன் இருக்கிறேன் என்று அவர் ஒரு வார்த்தை சொல்லாதது ஏன்..? சசிகலாவின் கைப்பாவையான அவரை மரப்பாச்சி பொம்மை ஆக்கிவிட்டார்களா...? சசிகலாவும் இளவரசியும் மட்டுமே பார்க்க முடிந்த அவரை மூத்த அமைச்சர்கள் கூட பார்க்க முடியாத நிலை ஏன்...? உண்மையில் அப்போலோவில் நடப்பது என்ன...? தமிழகத்துக்கு தலைமை ஏற்க வருவாரா... இல்லையா...?

முதல்வர் இல்லாமல் ஒரு மாநிலத்தின் அலுவல்கள் நடந்து கொண்டிருப்பது வேடிக்கையே... அவருக்கு பிரச்சினை என்றால் ஏன் தற்காலிகமாக ஒருவரை நியமித்து அலுவல்களை செய்யவில்லை... தலைமைச் செயலகம் அப்போலோவிற்கு மாற்றப்பட்டுவிட்டது என்பது நகைச்சுவையாக இருந்தாலும் கேவலமும் வேதனையும்தானே... எந்த மாதிரி சூழலில் மாநிலம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் நாட்கள் நகர்வது நல்லதுக்கல்ல... முதல்வர் எப்படியிருக்கிறார்... நலமாக இருக்கிறாரா...? என்று எப்போது நாம் அறிந்து கொள்ள முடியும்... தமிழகம் சர்வாதிகாரிகளின் கையிலா...? இவர்கள் எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க முடியும்...? கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தானே வேண்டும்...

இதைவிடக் கொடுமை... ஜெயலலிதா செத்து விட்டார் என்று சந்தோஷிக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது...?  சிலருக்கு ஒருவரின் மரணம் என்ற செய்தி எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை பார்க்கும் போது வலிக்கத்தான் செய்கிறது... அவளுக்கு அதுவாம்... செத்துட்டாளாம்... அப்படி இப்படின்னு பேசும்போது அவர்கள் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்... எத்தனை குரூரம்... ஏதோ தான் சார்ந்த சாதிக்கட்சித் தலைவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் தமிழகத்துக்கு மோட்சம் கிடைக்கும் என்ற மிகப்பெரிய கனவைச் சுமக்கிறார்கள் என்பதே இந்த சந்தோஷத்துக்கு காரணம்... எந்த சாதிக்கட்சித் தலைவனாலும் தமிழனை முன்னேற்றிவிட முடியாது... இனி எவன் முதல்வன் ஆனாலும் தமிழன் தலை நிமிரவே விடமாட்டார்கள்... சாதிகள்தான் தலை நிமிரும்... சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி கூட மீண்டு வந்தால் சாதிகள் உண்டென்று கொட்டு முரசேன்னுதான் பாடுவாரு... இன்றைய அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... 

சாகக் கிடக்கிறவன் எதிரியே என்றாலும் நமக்கு கொஞ்சமேனும் பச்சாதாபம் உண்டாக வேண்டும்... ஐய்யோ பாவம் என்ற எண்ணம் மனசுக்குள் எழ வேண்டும்... அப்படிப்பட்டவன்தான் மனிதன்... ஆஹா செத்துட்டானா... அவன் சாவு எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று நினைத்து மகிழ்வது வக்கிர புத்தி அல்லாது வேறென்ன... எவ்வளவு கேவலமான எண்ணம்... சிந்தனை... முகநூலில் முதல்வர் குறித்து வரும் மோசமான செய்திகளை எல்லாம் வாசித்து மகிழ்ந்து அதை மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பது... குழந்தைகளுக்கு போனில் சொல்லி சிரிப்பது என்ன வகையான மனம்... இது குரூர புத்தி அல்லவா...? இறைவா இந்த மனத்தை எம்மிடத்தில் இருந்து தள்ளியே வை... எமக்கு வேண்டாம் இந்த மனம்... எதிரி என்றாலும் துரோகி என்றாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும்... மரணம் மரணமாக நிகழட்டும்... கொடூரமாக வேண்டாம்.

ஒருவேளை இணையத்திலும் தமிழகத்திலும் சுற்றும் வதந்தி உண்மையாக இருந்தால்.... நினைத்துப் பாருங்கள்... ஒரு மாநிலத்தின் முதல்வர் அநாதை போல பத்து நாட்களாக... என்ன வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் குளிரூட்டிய அறைக்குள் வைத்திருப்பார்கள் என்று நம்பலாம்... ஆனால் அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது நம்மில் யாருக்குத் தெரியும்... எதோ ஒரு குடும்பம் வாழ அவரை பயன்படுத்துகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்... இதே அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வருமா...? அவருக்கு என்ன ஆச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்தானே... சொத்துக்காக... அதை தங்கள் பக்கம் எடுப்பதற்காக இந்த நாடகம் என்றால்... அப்படித்தான் பேச்சுக்கள் வருகின்றன... எது உண்மை என்பதை நாம் அறியோம்... ஒரு சர்வாதிகாரியாக வாழ்ந்தவர்... மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்... இன்று இருக்கிறாரா...? இல்லையா....? என்று தெரியாமலேயே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல்வர் இல்லை என்ற நிலை வந்தால் அடுத்த முதல்வர் யார்..? இப்போதைய சூழல் சின்னம்மாவைத்தான் முன்னிறுத்துகிறது... அப்ப அவர்தான் அடுத்த முதல்வரா...? கட்சி கரைவேஷ்டிகளுக்கு அழைப்பு விடுப்பது... அப்போலோவில் ஆலோசனை என எல்லாமே இப்ப சின்னம்மா கையில்தானாமே... தமிழகமும் சின்னம்மா கைக்குப் போனால்.... நினைக்கவே பயமாக இருக்கிறது.... ஒரு தேசம்... ஒரு நாகரீகம்... ஒரு மூத்த மொழி அழிவின் பிடியில்... என்ன செய்வது...? தமிழனின் தலையெழுத்து....

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஏதும் ஆகியிருக்காது என்று நம்புவோம்... விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று திடமாய் நம்புவோம்...

நம்பிக்கைதானே வாழ்க்கை...

______________________________

அகல் மாதமிருமுறை  மின்னிதழில் (அக். 1-15) எனது சிறுகதை 'காத்தாயி' வெளிவந்திருக்கிறது. இதுவரை நான்கு கட்டுரைகள் ஒரு சிறுகதை எழுத வாய்ப்பளித்த அகலில் எனது ஆறாவது படைப்பு இது. கட்டுரை வேணும் ஜி... என்று மட்டுமே கேட்கும் அகல் சத்யா அவர்கள் எங்கே நம்மை கட்டுரைகள் மட்டும் எழுத பயன்படுத்துவாரோ என்ற நினைப்பை உடைக்கும் விதமாக சிறுகதையை வாங்கிப் போட்டிருக்கிறார். கதையை வாசித்து கருத்தைச் சொல்லுங்க...


எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் அகல் சத்யா ஜி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் அகல் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..?

Image result for advice

ஒரு சிலர் எப்பவும் அட்வைஸ் அதாங்க அறிவுரைன்னு சொல்வாங்களே... அந்த அறிவுரை மழையில நம்மள திணறத் திணற நனைய வைப்பாங்க... எதெற்கெடுத்தாலும் அறிவுரை சொல்றவங்க முதல்ல தாங்கள் அதையெல்லாம் பின்பற்றுவார்களா என்றால் சத்தியமாக இருக்காது. அறிவுரைகள் மற்றவர்களுக்கானவை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு சிலரின் அறிவுரைகளை மட்டுமே... அது அறிவுரைகளாக இல்லாமல் நம் பயணத்தை மேம்படுத்தும் ஒரு வார்த்தையாகத்தான் இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பதால்... ஏற்றுக் கொள்வேன். மற்றபடி மற்றவர்களின் அறிவுரைகளின்படி நடப்பது என்பது எனக்குப் பிடிக்காத விஷயம். எந்த முடிவாக இருந்தாலும் நாம் முடியுமா... முடியாதா என்பதை யோசித்துச் செய்தாலே போதும்... மனசுக்கு சரியெனப்பட்டால் அதில் சட்டென இறங்கி விடவேண்டும்... வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

அன்று அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்தவர்கள் அதிகம்... ஆனால் இன்று அப்படியல்ல.. யாருக்கும் அறிவுரை சொல்ல முடிவதில்லை என்பதே உண்மை... யாராவது 'நான் என்ன சொல்ல வர்றேன்னா...' என்று ஆரம்பித்தால் 'நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும்'ன்னு படக்கென்று சொல்லி சொல்ல வந்தவர் வாயை அடைப்பவர்களே அதிகம். எங்க ஊர்ப்பக்கம் 'அடுத்தவனுக்கு புத்தி சொல்றது சுலபம்... ஆனா நாம அப்படி நடக்குறோமான்னு முதல்ல யோசிக்கணும்'ன்னு சொல்வாங்க. அதான் உண்மை. அவன் பாதையில் சரிவரப் போறவன் அடுத்தவன் பாதையில் நின்று அறிவுரை சொல்ல வரமாட்டான். அப்படி சொல்ல நினைத்தாலும் இதை இவன் ஏற்றுக் கொள்வானா என்று சிந்தித்துத்தான் பேசவே ஆரம்பிப்பான். 

இன்னைக்கு பள்ளியில் படிக்கும் பையனுக்கே அறிவுரை சொல்ல முடியவில்லை... பின்னே எப்படி குடும்பம் குழந்தையின்னு இருக்கவனுக்கு அறிவுரை சொல்றது...? அறிவுரை சொல்லப் பொயிட்டு வடிவேலு மாதிரி 'இது உனக்குத் தேவையா'ன்னு நம்மளை நாமளே கேட்டுக்கணும். எங்க விஷாலுக்கே நாம எதாவது சொன்னா... 'ஏம்ப்பா எப்பப் பாத்தாலும் ஏதாவது சொல்றீங்க...?' அப்படின்னு ஒரு அயற்சியோடு கேக்கிறான்... அதைவிட பரிட்சை சமயத்தில் 'பரிட்சைக்குப் படிச்சியா...?' அப்படின்னு கேட்டா யாரு போன் பண்ணினாலும் 'படி படியின்னு  சொல்றீங்க... வேற பேச மாட்டீங்களா?' அப்படின்னு கொஞ்சம் கோபமாகிறான்... படிப்பது மூணாவது... இதே ஆறாவது... பத்தாவது... பனிரெண்டாவது... கல்லூரி... படிக்கும் போதெல்லாம் என்னப்பா படிச்சியான்னு ஆரம்பிச்சா... யோவ்... உனக்கு வேலை இல்லை... எப்பப்பாரு நை...நைன்னு படிச்சியா மிதிச்சியான்னு அப்படின்னு கேட்டாலும் கேப்பான்.

என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் போதும் என்று நினைப்பவன்... கூட்டி வச்சி வாத்தியார் மாதிரி நீ இதைச் செய்யணும்... இப்படித்தான் செய்யணும்ன்னு எல்லாம் அறிவுரை சொல்லித்தான் வாழ்க்கையில் உயர வைக்கணுமின்னு இல்லை... நம்ம பிள்ளை நல்லா வருவான்... உயர்ந்த இடத்தில் இருப்பான்னு நமக்கு நம்பிக்கை இருக்கணும்... அவனைப் பார்... இவனைப் பார்... அப்படி வரணும்... இப்படி வரணும்... என்றெல்லாம் சொல்லி பக்கம் பக்கமா அறிவுரை சொல்லி வளர்ப்பதால் எந்தப் பிள்ளையும் வெற்றிப் பாதையில் பயணிக்கப் போவதில்லை என்று நினைப்பவன். அவர்கள் போக்கில் பயணித்தாலே கண்டிப்பாக நல்ல பாதையில்தான் செல்வார்கள் என்று நினைப்பேன். நான் படிப்பு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவர்களின் போக்கில் விட்டுவிடுவேன்... அதிகம் கண்டிப்பதில்லை... சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைப்பேன். அவர்களுக்கும் அதனாலேயே அப்பா என்றால் அதீத அன்பு... இதுதானே வாழ்க்கை... இதுதானே கொடுப்பினை... இப்பவே எதற்கு அதீத சுமை...

என் மனைவியிடமும் இதைத்தான் சொல்வேன்... விஷால் வீட்டில் படிக்கவே மாட்டேங்கிறான் என்று அவர் சத்தம் போடும் போது எப்படிப் படிப்பான்... அவங்க அப்பன் படிச்சிருந்தாத்தனே பிள்ளை படிக்கும்... வீட்ல நான் எப்பவும் படிக்க மாட்டேன்... அதுக்குன்னு நேரம் ஒதுக்கி படிப்பது பரிட்சையின் போது மட்டுமே... அப்ப நம்ம வாரிசும் அப்படித்தான் இருக்கும்... அதெல்லாம் படிச்சிருவான் விடு... எல்லாம் மனசுக்குள்ள வச்சிருப்பான்னு சொன்னா... நீங்களே கெடுங்க... படிக்கலைன்னு சொன்னா கூப்பிட்டு திட்டாம அவன் அப்படித்தான்னு சொல்றீங்க... வெளங்கிடும் என்பார்... எல்லாரும் என்ன சொல்றாங்க... குமார் மாதிரியே இருக்கான்னுதானே சொல்றாங்க... நீ என்ன சொல்றே... படுக்குறதுகூட உங்கள மாதிரியே தலைக்கு கை வச்சித்தான் படுக்கிறான்னு சொல்றே... அப்புறம் என்ன படிக்கிறதும் என்னைய மாதிரியே இருக்கட்டும் என்று சொன்னதும் மனைவி தலையில் அடித்துக் கொள்வார்... விஷாலோ ஒரு ஆட்டம் போட்டு சந்தோஷித்து அந்த சந்தோஷத்தோடு என்னை மனைவி ஏதாவது சொன்னா எங்கப்பா பச்சைமண்ணு அவரையா திட்டுறீங்கன்னு மல்லுக்கு நிப்பான். பசங்க அம்மா மீது பாசமாம்... இங்கு அம்மாவைவிட அப்பா மீதே அதிகம்.

ஸ்ருதியைப் பொறுத்தவரை சில வேளைகளில் திட்டு வாங்கும்... ஆனால் படிப்பில் ரொம்ப கண்டிப்பதில்லை.... மார்க் குறைகிறதா... அதெல்லாம் சரியாயிரும் அப்படின்னு சொல்லி வைப்பேன். லேசாக சத்தமிட்டாலும் கண்ணீரை காவிரியாக்கி விரைவாக பாய்ந்தோடச் செய்து விடும்... அது உட்கார்ந்து படிப்பதைப் பார்த்த எங்கம்மா, 'என்னடி உங்கப்பன் மாதிரி நீயும் பண்ணுறே..?' என்று சொல்லி நம்ம கதையையும் அவுத்து விட்டாச்சு... அதாவது நாம பள்ளியில் படிக்கும் போது ரேடியோவோ, டேப்ரெக்கார்டரோ ஓடிக்கிட்டு... மன்னிக்கவும் பாடிக்கிட்டு இருக்கும்.  கல்லூரிக்குப் போனப்போ டிவிக்கு மாறியாச்சு... இப்போ ஸ்ருதிக்கு படிக்கும் போதும் எழுதும் போது டிவியில் பாட்டு ஒடிக்கிட்டே இருக்கணும். 

இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா... பசங்களுக்கு எப்பப் பார்த்தாலும் அறிவுரைகள் சொல்லிச் சொல்லியே அவர்களுக்குள் அயற்சியை உண்டு பண்ணுவதோடு அப்பா என்றாலே அலர்ஜியும் உண்டாகும். இங்கு இருவர் எப்பவும் அறிவுரையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு அதை போன் மூலமாக ஊரில் இருக்கும் பிள்ளை மீது இறக்கி வைக்கிறார்கள்... அதுவும் மணிக்கணக்கில்... அவனைப் பார்... இவனைப் பார்... நீயும் பிறந்திருக்கிறாயே என்று எத்தனை குதர்க்கமான... ஆக்ரோஷமான... அருவெறுப்பான வார்த்தை உபயோகங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை கொடுக்கும் வலியை ஏனோ குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்... அதன் வசந்தத்தை... பகட்டை மட்டுமே சொல்லிக் கொடுத்து விட்டு பின்னர் அறிவுரை என்ற பெயரில் அள்ளி இறைத்து என்ன பயன்...? அவன் என்னவாய் ஆவான் என்று தெரிந்த பின்னும் பில்கேட்ஸ் ஆகலைன்னு புலம்புவது என்ன லாபம்...? பணம் இருக்குன்னு காட்டிட்டு நாளைக்கு பிச்சைதான் எடுப்பே என்பதையும்... நீ படிச்சிருந்தா இன்னைக்கு அவனை மாதிரி இருந்திருக்கலாம் என்பதையும் அவன் எப்படி தன்னுள் இறக்கிக் கொள்வான். சினிமாவுக்கு வந்த புதிதில் அஜீத் ஒரு பேட்டியில் 'நீ என்னவா வரணும்ன்னு நினைக்கிறியோ அதை மனதில் வைத்து அதன் பின்னே போ... அப்பாவுக்காக டாக்டர் ஆகவோ, அம்மாவுக்காக இஞ்சினியர் ஆகவோ போறேன்னு உன்னை நீ அழித்துக் கொள்ளாதேன்னு சொன்னார். அது எவ்வளவு சரியான வார்த்தை... எனக்குத் தெரியுமே என்னால் என்ன பண்ண முடியும் என்பது அப்புறம் எதற்காக அவர்கள் தூக்கி வைக்கும் விருப்பமில்லாத பொதியைச் சுமக்க வேண்டும்.

இன்னொருத்தர் எப்பவும் ராமாயணம் படிப்பதுடன் அவர் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்... அறிவு ஜீவி என்ற நினைப்பில் இங்கிருந்து மணிக்கணக்கில் பசங்களுக்குப் பாடம் நடத்துவார். எல்லாப் பாடமும் இவர் சொல்லிக் கொடுத்தால் அப்புறம் அவனெதற்கு பள்ளியில் படிக்கிறான்... நான் படித்தது கணிப்பொறி.. அது குறித்த கேள்விகள் வரும்போது பதில் சொல்லிக் கொடுக்கலாம்... அதற்காக உயிரியல்... வேதியில்... என எல்லாம் எனக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கத் தெரியும்... ஆனால் அவர் பேசுவார்... மணிக்கணக்கில் பேசுவார்... அம்மா மருத்துவமனையில் இருப்பதையும் ஆளுநர் வந்து பார்த்துச் சென்றதையும் ஒரு பெரிய பாடமாக நடத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பக்கம் என்ன நினைத்திருப்பார்கள் கல்லூரி படிக்கும் பெண்ணும் பள்ளியில் படிக்கும் பையனும்...

அவர் அவர்களுக்கான வாழ்க்கைப் பாடத்தை ஒரு தோழனாய் சொல்லிக் கொடுக்கலாம்... அப்பாவும் ஆசிரியனாய் கண்டிப்புடன் நிற்பது அவர்களுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கும்... காலங்கள் நகர, பெண் பிள்ளைகளை விடுங்கள்... பையன் முகம் கொடுத்து பேச யோசிப்பானா இல்லையா..? இன்னும் என்ன கூத்துன்னா அவர் சார்ந்த சாதிக் கட்சித் தலைவர் ஒரு படத்தைப் பார்த்து நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா இவரு அதைப் பார்த்து ஆஹா ஓஹோன்னு சொல்லுவாரு... நானெல்லாம் அட்டர்பிளாப் படத்தையும் அசராம பாக்குறவன் எங்கிட்டே பக்கம் பக்கமாப் பேசுவாரு.... உடனே ஊருக்கு போனடிச்சி இந்தப் படம் பாரு... நம்ம அவரே ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரு சொல்லி பாக்க வச்சி... அடுத்து பல நாளைக்கு அதை வச்சி பக்கம் பக்கமா வகுப்பெடுத்து... அப்புறம் அந்த சாதி சார்ந்த தொலைக்காட்சியில்... சாதி சார்ந்த பேச்சு வரும்போது கூப்பிட்டு பார்க்கச் சொல்வார்.... நாம் சாதியை ஒழிப்போம் என்கிறோம்... சில பிள்ளைகளுக்கும் சாதி விளக்கை ஏற்றச் சொல்லிக் கொடுக்கிறார்கள்... அறிவுரை என்பது அளவோடு இருந்தால்தான் நல்லது,.

இந்த சினிமா பத்திச் சொல்லும் போது இது நல்லபடம் என்றால் பார்க்கச் சொல்லலாம் தப்பில்லை... ஒருவன் ஓசியில் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோன்னு சொன்னா அதை பிள்ளைகளிடம் சுமத்தி அது மாதிரி படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்வது நல்லதல்லவே... எங்க வீட்டுல இது நல்லாயிருக்குன்னு சொன்னா... நீங்க நல்லாயிருக்குன்னு சொல்லுறீங்களா.. அப்ப யோசிக்கணும்ன்னு சொல்லிடுவானுங்க... இந்த ரஜினி முருகனை சிவகார்த்திகேயன் வீட்டுல கூட இத்தனை முறை பாத்திருக்கமாட்டானுங்க... ஆனா எங்க வீட்டுல ரெண்டு பேரும் ரஜினியையும் முருகனையும் படாதபாடு படுத்தி வைக்கிறாங்க... விஷால் கதை எழுதுறேன்னு சொன்னப்போ போடா போயி படிக்கிற வேலையைப் பாருன்னு அம்மா சொல்ல அட சூப்பருல்ல... எங்கே கதையைச் சொல்லுன்னு சொல்லி உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல... தமிழ்லயே சொல்றேன்னு அவன் நமக்கு பல்ப் கொடுத்து... சொல்லி... சின்னச் சின்னதாய் மூணு கதை... அவன் வயதுக்கு நல்லாவே இருந்தது... எழுது... இன்னும் எழுது என அவனுக்கு ஒரு டைரி கொடுக்கச் சொன்னபோது மனைவி அட நீங்க வேற என்றார். ஆனால் அவன் மனசுக்குள் உள்ளதை எழுதட்டுமே... அது அவனின் தனித்திறமையாய் வளரட்டுமே... என்று சொன்னேன்... பிள்ளைகளை தட்டிக் கொடுப்போம்... தரணியில் புகழோடு வாழ வைப்போம்... சும்மா தொட்டதற்கெல்லாம் பிரம்பை எடுத்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணுவதால் காரியமில்லை என்பதை உணர்வோம்.

அதீத அறிவுரைகள் அயற்சியைக் கொடுப்பதுடன்  மட்டுமல்ல அன்பையும் அழித்துவிடும்...

யோசிப்போம்.... அறிவுரைகளை அளவோடு சொல்வோம்.
-'பரிவை' சே,குமார். 

சனி, 1 அக்டோபர், 2016

சினிமா : கசாபா (மலையாளம்)

மெகா ஸ்டார் மம்முட்டி போலீசாய்... மெகா ஸ்டார்ன்னு சொல்றதுல தப்பேயில்லை... மகன் துல்கர் ஒரு பக்கம் வளர்ந்து வர, இவர் இன்னமும் கலக்கலாய் நடித்துக் கொண்டிருக்கிறார். 

Image result for kasaba malayalam movie
(ராஜன் சகாரியாவாக மம்முட்டி)
வரலெட்சுமி... அதாங்க நம்ம சரத்குமார் மக... தாரை தப்பட்டையில் பட்டையைக் கிளப்பியவர்... இதில் விபச்சார விடுதி தலைவியாய்...

மம்முட்டிக்கும் வரலெட்சுமிக்கும் மோதல்தானே ஒழிய காதல் இல்லை... அவர் தன்னோடு வாழ நினைக்க, மம்முட்டி இறுதியில் வண்டியில் சூசனை ஏற்றிக் கொள்கிறாரே ஒழிய வரலெட்சுமியை அல்ல என்பதையும் சொல்லி விடுகிறேன்... வரலெட்சுமி நாயகின்னு நினைச்சா அது தப்பு... தூள் சொர்ணாக்கா மாதிரி மோசமான ஆள்... ஒரு அரசியல் ரவுடியின் தொடுப்பு... இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சில காரணங்களால் ரவுடியுடன் மோதி... மம்முட்டியோட இருக்க ஆசைப்படுது... ஆனா போலீஸ் போலீசாக இருந்து விடுவதால் அந்த ஆசை நிராசையாகிறது. எப்படியிருந்தாலும் கதை வரலட்சுமி - மம்முட்டியைச் சுற்றித்தான் நகர்கிறது.... நாயகனுக்கு நாயகி ஆகாத கதையின் நாயகியாய் வரலெட்சுமி.

சரி கதை என்ன அதைச் சொல்லு அப்படித்தானே நினைக்கிறீங்க... கதையைச் சொன்னா இதுக்கு பேரு விமர்சனமான்னு லைட்டை அங்க வச்சிருக்கலாம்... இந்த கேமரா பயன்படுத்தியிருக்கலாம்... இந்தப் பாடல் காட்சியில் இப்படி ஆடச் சொல்லியிருக்கலாம் என்று ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளித் தெளிக்கும் சில இணைய விமர்சக நட்புக்கள் சண்டைக்கு வர்றாங்க... அதனால இலைமறை காயாய் கதையைச் சொல்லிட்டு விட்டுருவோம்....

மம்முட்டி சர்க்கிள் இன்ஸ்பெக்டர்... இடுப்பை ஆட்டி ஆட்டி நடக்கும் அந்த நடை கூட நல்லாத்தான் இருக்கு. தப்புச் செய்தவன் போலீஸ்காரன் என்றாலும் அடித்து துவைத்துக் காயப்போடுவார். தன்னோட மேலதிகாரியோட ரொம்ப நெருக்கம்... அவர் வீட்டில் ஒருவனாய் இருக்கிறார்... அவருடைய மகனும் இவர் மீது அதிக பாசம் கொண்டவனாக இருக்கிறான்... இவர் என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் குணம் கொண்டவன்... அவனுக்கு திருமணம் நிச்சயமாக... கேரளா - கர்நாடகா எல்லையில் இருக்கும் ஒரு ஊருக்கு பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் திருமணம் நிச்சயமான ஜோடி கொல்லப்படுகிறது... 

கொலைக்கு மாவோயிஸ்டுகளை காரணம் காட்ட... அதை விசாரிக்க அங்கு செல்லும் மம்முட்டி... அரசியல் ரவுடியுடன் மோத... சூடு பிடிக்கும் படத்தில் மம்முட்டிக்கும் வரலெட்சுமிக்கும் முட்டிக் கொள்ள... அரசியல் ரவுடி மம்முட்டியை வளைத்துப் போட நினைத்து மாட்டிக் கொள்ள... விசாரணை அதிரடியாய் தொடர்கிறது. தன் மேலதிகாரியின் மகனும் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட, அவனது காதலியும் எதனால் கொல்லப்பட்டார்கள்...? அவர்களோடு ஆறு போலீஸ்காரர்களையும் கொல்லக் காரணம் என்ன..? யார் இந்தக் கொலையைச் செய்தது...? இதில் அரசியல் ரவுடிக்கு பங்கு இருக்கா...? வரலெட்சுமி யார்...? அவளுக்கு இதில் என்ன தொடர்பு...? என கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பொதுவாக மம்முட்டி படங்களை விரும்பிப் பார்ப்பேன்... இதுவும் அப்படி ஒரு விருப்பத்தில் பார்த்ததுதான்... பெரும்பாலும் மம்முட்டி படங்களின் கதை நம்ம சசிகுமார் படம் போல அவரைச் சுற்றியே பயணிக்கும். சில படங்கள் விதிவிலக்கு... இதிலும் அப்படித்தான் முழுக்க முழுக்க அவரின் பின்னே... இடுப்பை ஆட்டும் நடையும்... கேலியான பேச்சுமாய்... இதிலும் அவரின் பின்னேதான் கதை பயணிக்கிறது என்றாலும் அரதப்பழசான கதைக்களம் படத்தின் வேகத்துக்கு கட்டை போடுகிறது.

Image result for kasaba malayalam movie
(கமலாவாக வரலட்சுமி)
சின்னப் பெண்ணை விபச்சாரவிடுதியில் வைத்து அடித்து உதைத்து சாகடிப்பதில் தெரிகிறது இது போன்ற ஆட்களிடம் வழி தெரியாமல் மாட்டிக் கொள்ளும் அபலைப் பெண்களின் வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கை. அதே விபச்சார விடுதியில் சில பெண்கள் கற்போடு இல்லாவிட்டாலும் களங்கமில்லா நல்ல மனதோடு இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தியான சூசனைத்தான் நாயகன் தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறார்.  வரலெட்சுமியை வக்கிரம் நிறைந்தவளாய்... திமிரெடுத்தவளாய்... காட்டிவிட்டு இறுதியில் தானும் சாதாரணப் பெண்தான்... பாசத்துக்கு கட்டுப்பட்டவள்தான்... என்று நினைப்பவளாய் முடித்திருக்கிறார்கள்.

விபச்சார விடுதி... பெண்களிடம் கிண்டல்... என படம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால் சேர தேசத்து மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்து வழக்கும் தொடுத்தது... ஆனாலும் படம் பெட்டியை நிரப்பி விட்டது என்றே சொல்கிறார்கள். 

மலையாளப் படங்களில் தமிழனை ஒரு கதாபாத்திரம் ஆக்கி, முடிந்தவரை கேவலப் படுத்துவார்கள்... இதை சரிவரச் செய்வதில் ஜெயராம் கில்லாடி... இந்தப் படத்திலும் ஒரு வயதான தமிழன் விபச்சார விடுதி போய் எங்கிட்ட பெட்டி நிறைய பணம் இருக்கு என்று சொல்வதாகவும் ஒரு சின்னப்பெண்... வில்லனிடம் அடிபட்டு வேதனையோடு படுத்திருப்பவளை அனுபவிக்கத் துடித்து அடிவாங்கிச் செல்வதாய் காட்டியிருப்பார்கள்... அந்தக் காட்சிக்கு மலையாளியே போதும் என்ற போதும் கதாபாத்திரத்தை தமிழன் ஆக்கியிருக்கிறார்கள்... ஏனென்றால் கேவலப்பட்டவன்தானே நாம்... 

தமிழில் வில்லனாக ஜொலிக்கும் சம்பத் ராஜ் இதில் அரசியல் ரவுடியாய் மம்முட்டியோடு மல்லுக்கு நிற்பவராய் நடித்திருக்கிறார். சிறப்பாய் பண்ணியிருக்கிறார். வரலெட்சுமி அடித்து ஆடியிருக்கிறார்... விபச்சார விடுதி நடத்தும் பெண்ணாய்... குரூரம் நிறைந்தவளாய்... ரவுடியையே ஆட்டம் காண வைப்பவளாய்... கலக்கியிருக்கிறார்... ஆனால் குஷ்புக்கு அக்கா மாதிரி ஆகிவிட்டார்... இனி கதாநாயகியாக நடிப்பது என்பது உடம்பைக் குறைப்பதைப் பொறுத்துத்தான்... நேகா சக்சேனாவும் அதே விபச்சார விடுதியில் இருக்கிறார்...  அடுத்தவர் மனம் புரிந்தவராக... அடுத்தவருக்காக போராடுபவராக... மம்முட்டிக்கு உதவி செய்பவராக அவரது கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்.

Image result for neha saxena kasaba actress
(சூசனாக நேகா சக்சேனா)

படத்தை நிதின் ரஞ்சி பணிக்கர் எழுதி இயக்கியிருக்கிறார்.  ராகுல் ராஜ் இசையில் பின்னணி அருமை.

கசாபா அதிரடி போலீஸ் கதைதான் என்றாலும் ரொம்ப ஆராவாரமில்லை... ஓங்கி அடிச்சா ஒன்னறை டன் வெயிட்டுடா என்று சூர்யா கர்ஜித்த பரபரப்பைக் கொடுக்கவில்லை என்றாலும்... படம் ஆரம்பத்தில் மெதுவாகப் போய் வரலெட்சுமி - சம்பத் - மம்முட்டி என பயணிக்கும் போது பரபரப்பாகிறது.

மம்முட்டியை ரசிப்பவர்கள் ஒரு முறை பார்க்கலாம். வரலெட்சுமியை ரசிப்பவர்களும்(?) பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.