மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-4)

பகுதி-1               பகுதி-2            பகுதி-3                    

‘இது என் அத்தை பொண்ணுடா...’ என்று சாரதி சொன்னதும் கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. 

“என்னடா... பதிலைக் காணோம்..?” சாரதியே மீண்டும் கேட்டான்.

“என்ன சொல்லணும்... படபடன்னு பேசுதே... யார் இந்தப் பொண்ணுன்னு பார்த்தேன். உடனே நீ அத்தை பொண்ணுன்னு சொன்னே... அப்புறம் என்ன... சரி சரி... என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரியுது... உன் வருங்காலம் அழகா இருக்காடா...” என்றான் மெதுவாய்.

“வருங்காலமா... யாரு...? இந்த வாயாடியா...? சரித்தான்... இதைக்கட்டிக்கிட்டு நான் முடியைப் பிச்சிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...”

“அதான் நிறைய இருக்கே... பிச்சுக்கிட்டு நில்லு...” என்று சிரித்தான் கண்ணன்.

“என்னங்கடா... ரகசியம் பேசி சிரிக்கிறீங்க..? எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்ல...” என்றான் அம்பேத்கார்.

“ஒண்ணுமில்லடா... சும்மாதான்...” என்றான் சாரதி.

“என்ன மிஸ்டர் சாரதி, உங்க பிரண்டு யாருடா இந்த அழகின்னு என்னைப் பற்றித்தானே கேட்டார்...” என சுபஸ்ரீ கேட்கவும், “ஆமா இவ ஊர்ல இல்லாத அழகி. உன்னையப் பற்றி ரகசியம் பேச என்ன இருக்கு... உனக்கு மட்டுந்தான் நீ அழகின்னு கர்வம்... மத்தவா சொல்லணும்... அழகியா இல்லையான்னு...” சாரதி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“அலோ சார்... நாங்க அழகிதான்... இவா சொல்லாட்டி என்ன... எங்க காலேசுல இருக்கா ஆயிரம் பேரு என்னை அழகின்னு தாங்க...”

“அவாளே தாங்கட்டும்... நாங்க தாங்க நினைக்கலை... வெட்டிப் பந்தாவை விட்டுட்டு வேலையைப் பாருடி...”

“டேய்... ஏன்டா... சும்மா அவங்கிட்ட சத்தம் போடுறே... விடுடா...” என்றான் கண்ணன்.

“அது...” என்று இழுத்தவள், “அவாளுக்குத் தெரிஞ்சதுகூட எங்க சாரதி சாருக்கு தெரியலை பாருங்க அத்தை... இதைக் கட்டிக்கிட்டு என்னைய என்ன பண்ணச் சொல்றேள்... நான் மாட்டேன்...”

“ஆமா இவளைக் கட்டிக்கிறேன்னு இவ ஆத்துல வந்து கிடையாக் கிடக்கேன் பாரு... எவளாவது ஏழைப் பிராமணத்தியை கட்டிக்கிட்டு வருவேனே ஒழிய... இந்த வாயாடியை நான் ஆத்துக்காரி ஆக்கிக்கமாட்டேன்...”

“ஆமா நாங்களும் இவாள்தான் வேணுன்னு இங்க வந்து கிடக்கோம் பாருங்க... “
“ஏய் எதுக்குடி இப்ப ரெண்டு பேரும் வாய்க்குவாய் பேசறேள்... ஏன்டா சாரதி எப்ப அவகிட்ட வம்பு பண்ணுறதுன்னு இல்லையா... வந்தவா என்ன நினைப்பாங்க... தினமும் சண்டைதான் போடுறீங்க... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வச்சுண்டு சண்டை தீர்க்கிறதே எங்க வேலையா இருக்கும் போல... ரெண்டு பேரும் சித்த சும்மா இருங்கோ...”

“பின்ன என்ன அத்தை... சாரதி சார்தானே இப்படிப் பேசுறார்... அவருக்கு பிரண்ட்ஸ் எல்லாம் இருக்கான்னு தைரியம்...”

“விடுங்கங்க... அவன்தான் கிண்டலா பேசுறான்னா... நீங்களும் வருத்தப்பட்டுக்கிட்டு... நாங்க ஒண்ணும் நினைக்கலை... டேய் சாரதி... பாவம்டா அவங்க... எதுக்கு இப்ப சண்டை போடுறே..?” என்று கண்ணன் சமாதானம் பேச, அதை சட்டை செய்யாமல் சுபஸ்ரீ கோபமாக எழுந்து உள்ளே போனாள். சுபத்ராவும் “டீ... சுபா... அவன் கிடக்கான்... நீதான்டி எம் மருமகள்... கோபிக்காதேடி... என் செல்லம்ல்ல....” என பின்னாலே போனாள்.

“எங்கடா படிக்கிறாங்க...? மெதுவாகக்  கேட்டான் பிரவீண்.

“ஏன் அங்க இவங்க அழகியா... இல்லையான்னு போய் பார்க்கவா...?” என்றான் ஜாகீர்.

“என்னடா... அவ... இவன்னு சொன்னீங்க... இப்ப அவங்கன்னு மரியாதை எல்லாம் வருது... மதுரை யாதவா காலேசுல படிக்கிறா... இப்ப லீவுல்ல அதான் வந்திருக்கா... அவங்க வீட்ல இருக்கதைவிட எங்க வீட்லதான் அதிகம் இருப்பா... எங்க அம்மா செல்லம்... எங்க அத்தை கூட அவளுக்கு நீதான் அம்மான்னு சொல்லிச் சிரிப்பாங்க... சும்மா அவளை வம்பிழுப்பேன்... எல்லார்க்கிட்டயும் ரொம்பச் ஜாலியாப் பேசுவா... பிறத்தியார்ன்னு எல்லாம் பார்க்கமாட்டா... அவளுக்கு கூட்டமா உக்காந்து ஜாலியாப் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முற்போக்கு சிந்தனைவாதி... கல்லூரி பட்டிமன்றப் பேச்சாளர்... நிறைய கவிதை எழுதுவா... போட்டிகளில் ஜெயிச்சு பிரைஸ் வாங்கி குவித்து வைச்சிருக்கா... எந்த பிரைஸ் வாங்கினாலும் முதல்ல அம்மாக்கிட்ட கொண்டு வந்து கொடுத்து ஆசி வாங்கிக்குவா... அம்மாவுக்கும் அவ ஒருநாள் போனில் பேசலைன்னாலும் மனசு சரியில்லைன்னு புலம்பிடுவாங்க... அதனால எத்தனை மணியா இருந்தாலும் அவ வீட்டுக்குப் பேசுறாளோ என்னமோ அம்மாக்கிட்ட பேசிருவா... சில சமயம் அத்தை அவ பேசினாளான்னு அம்மாக்கிட்ட வந்து கேட்டுட்டுப் போகும்... அவ ரொம்ப நல்லவடா... வெகுளி... யாரும் அவ முன்னாடி சோகமா இருக்கக்கூடாது... அவளுக்கு எல்லாரும் சந்தோஷமா... மகிழ்ச்சியா... இருக்கணும்.” சாரதி நீளமாய் பேசி முடித்தான்.

“அது சரி... அப்புறம் என்ன... ரொம்ப நல்ல பொண்ணா இருக்காங்க... என்ன கேட்டே... ஏன்டா அவங்க... இவங்கன்னு பேசுறீங்கன்னுதானே... உன் மனைவியா வரப்போறவங்க... எங்க சிஸ்டர்... சோ இனி அவங்க... இவங்கதான்...” சொல்லிச் சிரித்தான் அம்பேத்கார்.

“அடப்போங்கடா... காலம் என்ன நினைக்குதுன்னு பார்ப்போம்...” என்றான் சாரதி.

“சுபஸ்ரீதான் சாரதிக்குன்னு எழுதிவச்சி ரொம்ப நாளாச்சு... இனி காலம் என்ன மாத்துறது...” என்றான் கண்ணன்.

அப்போது...

“கண்ணண்ணா...” என வாசலில் இருந்து கூவியபடி அபி உள்ளே நுழைய, “வயசுக்கு வந்த பொம்மனாட்டிக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்... வீதியில நின்னுன்டு கத்துறே... “ திண்ணையில் இருந்து கத்தினாள் பாட்டி.

ருதறுப்பு முடிந்த இரவில்....

“ஏத்தா... மாப்பிள்ளைக்கு நாட்டுக்கோழி ரசம்ன்னா ரொம்பப் பிடிக்கும்ல்ல... இன்னும் கொஞ்சம் ஊத்து...” சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் வேலாயுதம்.

“அடி ஆத்தி... போதும்... வயிறு புல்லா இருக்கு....” என்று மறுத்தான் ராமநாதன்.

“காலையில சீக்கிரமே போகணுமாப்பா... பத்து மணி வாக்குல போகலாம்ல்ல... உங்களுக்குப் புடிக்குமேன்னு குழிப் பணியாரத்துக்கு போட்டு ஆட்டி வச்சிருக்கேன்... சாப்பிட்டுப் போகலாம்ல்ல...” மெதுவாகக் கேட்டாள் சவுந்தரம்.

“காலையில கடைக்குப் போயாகணும்... நாளை மறுநாள் முகூர்த்தம் நாள்.... நிறைய பாத்திரம் கொடுக்கணும்... செல்வி இருந்துட்டு வரட்டும்...”

“ஏம்ப்பா... சாப்பிட்டு போங்க... ஒம்போது மணி வாக்குல நம்ம பிரசிடெண்ட் தம்பி வர்றேன்னு சொல்லியிருக்கு... நாளைக்கு நம்மூருல சாதிச் சங்க போர்டு வைக்கிறோமுல்ல...”

“எனக்கு வேலை இருக்கு மாமா... நாலு சாதி இருக்க ஊர்ல எதுக்கு மாமா சாதிச் சங்க போர்டு அது... இதுன்னு... தாயாப்பிள்ளையா பழகுற இடத்துல இதெல்லாம் நுழைஞ்சா பிரச்சினைக்குத்தானே வழிவகுக்கும்.”

“அதுக்காக... நாலு கட்சிக் கொடி பறக்குற இடத்துல நம்ம சாதிப் போர்டு வச்சா என்ன தப்புங்கிறேன்... எந்தச் சாதிக்காரன் வேணுமின்னாலும் வச்சிக்கட்டும்... அதுபோக நாம வக்கிறதுக்கு முன்னால வேற யாராச்சும் வச்சிட்டானா... நமக்கு அசிங்கமில்லையா...?”

“என்னமோ மாமா... உங்க அளவுக்கு எல்லாம் எங்களால சாதியை தூக்கிச் சொமக்க முடியலை... எங்கயாச்சும் கேட்டாலும் எவனாச்சும் பேசினாலுந்தான் எனக்கெல்லாம் சாதியே ஞாபகத்துல வரும்...”

“நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்லப்பா... அதை கீழ போட்டு உடைச்சிடக்கூடாது... இன்னைக்கு இருக்க தலமுறை அதைத்தான் பண்ணுது... அதான் அவனுகளுக்கும் சாதி உரத்தை ஏத்தத்தான் இதெல்லாம்... பாருங்க... இப்ப அம்புட்டுபய வண்டியிலயும் நம்ம சாதிச் சிங்கம் போட்டா ஓட்டிக்கிட்டு திரியிறானுங்க...”

“என்னமோ போங்க... நானெல்லாம் சாதி சாதியின்னு நின்னா என்னோட பாத்திரக்கடை தொழிலெல்லாம் படுத்திருக்கும். வர்ற சமையக்காரன் எல்லாம் நம்ம சாதிக்காரனா வர்றான்... இன்னொன்னு தெரியுமா மாமா... நம்ம ஆளுக பூராம் எங்கே நா நல்லா வந்துருவேனோன்னு செட்டியார்கிட்டதான் பாத்திரம் எடுக்குறானுங்க... இந்த சாதியை எல்லாம் நான் வீட்டை விட்டு வெளிய போகும் போது எறவாரத்துலயே  விட்டுட்டுப் போயிடுவேன்... எனக்கு வேண்டாம் இதெல்லாம்... சாதி... சாதியின்னு பேசித்தான்... இன்னைக்கு வேற சாதியில இருந்து ஒருத்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா... விட்டுட்டு வேலையைப் பாருங்க மாமா...” எதார்த்தமாய்ச் சொல்லியபடி எழுந்து போனான் ராமநாதன்.

வேலாயுதம் சவுந்தரத்திடமும் செல்வியிடமும் கத்துவதைப் போல் கத்த முடியாமல் தட்டில் இருந்த சாப்பாட்டின் மீது  கை கழுவிக் கொண்டிருந்தார்.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)

-‘பரிவை’ சே.குமார்.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மனசின் பக்கம் : மனசுக்குள் மயிலாடுது...

ஸ்ரீராம் அண்ணா அவர்களின் 'எங்கள் பிளாக்'கில் கேட்டு வாங்கிப் போடும் கதை என்ற பகிர்வை செவ்வாய்கிழமை தோறும் வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்டு வாங்கிப் போட்டார்கள் (நம்மளையும் பெரியாளாக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்). இந்த செவ்வாய் ஏனோ எனது கதையைக் கேட்டார்கள். பத்திரிக்கையில் வந்த கதை படத்துடன் வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. என்னிடம் அப்படி எந்தக் கதையும் இங்கு இல்லை என்பதே உண்மை. காரணம் புத்தகங்கள் எல்லாமே ஊரில்தான் இருக்கின்றன. எனவே முதலில் ஒரு கதை கொடுத்தேன். அதில் படம் இல்லை.... பத்திரிக்கையில் வந்ததற்கான ஆதாரமும் என்னிடம் இல்லை. நானும் அந்தப் பத்திரிக்கையில் போய் தேடியும் பார்த்தேன். 2009-ல் எழுதிய கதை என்பதால் கிடைக்கவும் இல்லை. (தற்போது பத்திரிக்கைகளுக்கு இங்கிருந்து அனுப்புவது இல்லை) பின்னர்தான் மங்கையர் சிகரத்தில் வந்த 'ஹரிணி'யை அவருக்கு கொடுத்தேன். 

அவரும் 'மனசு தள அதிபர்'ன்னு எல்லாம் இந்த சிறிய கிராமத்தானைச் சொல்லி (மொத்தமா பத்து ஏக்கர் கூட ஊரில் இல்லை) அமர்களமாக வெளியிட்டிருந்தார். எங்கள் பிளாக்கில் மிகப் பெரிய வலைஞர்கள் எல்லாம் வலம் வருவார்கள். அவர்கள் எல்லாம் சேனைத் தமிழ்உலா உறவுகளைப் போல அலசி மிகச் சிறப்பான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். என் தளத்தில் கூட கதைகளுக்கு அப்படியான கருத்துக்கள் கிடைப்பதில்லை.... இது எங்கள் பிளாக் கொடுத்ததால் கிடைத்த கருத்துக்கள் என்பதே உண்மை. 

ஹரிணி வீட்டு வேலை பார்த்திருக்க வேண்டும் எனவும், அவள் எதற்கு வேலை பார்க்கணும் எனவும் கருத்துப் போர்கள்... இந்தக் கதையில் ஹரிணி வேலை பார்த்தாளா... இல்லையா என்பதைப் பேசவில்லை. பொதுவாக வேலைக்குப் போகும் கூட்டுக் குடும்ப மருமக்கள் சின்னச் சின்ன வேலைகளைப் பார்ப்பார்கள். பார்க்காமல் இருக்க மாட்டார்கள்... அப்படித்தான் ஹரிணியும் என எடுத்துக் கொள்ளலாமே... இது அவளை மாமியார் தாங்குகிறார் என்ற ஈகோ போர்தான்... இதில் மற்ற விவரங்கள் குறித்தான பார்வை இல்லை.... திரு.ஜீவி அவர்கள் அதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். மேலும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்தியிருக்காமல் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லி மிகச் சிறப்பாக அலசியிருக்கிறார். நான் எழுதும் கதைகள் எல்லாமே பெரும்பாலும் உரையாடல்களாய் அமைவதில்லை... சில கதைகள் மட்டுமே விதிவிலக்காய்... அப்படி ஒரு கதைதான் இது. என் கதைகளை வாசிக்கும் ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட பலருக்கும் இது தெரியும். பெரும்பாலும் சுபமாய் முடியவும் செய்யாது. இந்தக் கதை எல்லா வகையிலும் மாற்றமாய்த்தான் இருக்கும். 

அப்புறம் 'இப்பல்லாம் இப்படி இல்லை... அப்பா அம்மா கூட இருப்பாங்களான்னு கேட்பாங்க' என்று சொல்லியிருக்கிறார் ஒரு அம்மா... இது நகர வாழ்க்கையில் இருக்கலாமே ஒழிய, இன்னும் கிராமங்களில் பெரியவர்களுடன் வாழும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பவும் சில இடங்களில் சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, எங்கள் குடும்பத்தில் இதுவரை எல்லா விழாக்களையும் ஒன்றாகக் கொண்டாடித்தான் வருகிறோம் என்பதனை வைத்து என்னால் கூட்டுக் குடும்ப வாழ்வு இன்னும் இருக்கிறது என்று அடித்துச் சொல்லமுடியும். மேலும் கதை எழுதியது 2008 கடைசியில் என்று நினைக்கிறேன். வெளியானது 2009-ல்... அன்றைய காலகட்டத்தில் (7 ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டிப்பாக சாத்தியப்பட்ட ஒன்றுதானே... 

எழுத்துப் பிழை அதிகம் என்றும் சொல்லியிருந்தார்கள்... நான் முழுவதும் பிழையில்லாமல் எழுதினேன் என்று சொல்ல மாட்டேன்... கண்டிப்பாக பிழை இருக்கும்... ஆனாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். காரணம்... பெரும்பாலும் எனது கதைகள் எல்லாமே எங்க பக்கத்து பேச்சு வழக்கில் இருக்கும். அதனால் வார்த்தைகளில் வித்தியாசம் கூட பிழையாகத் தெரியலாம். 'நீ பேச்சு வழக்கில் இருந்து பொதுவான வழக்குக்கு மாறுடா' என்று நட்புக்கள் சொன்னாலும் பொது வழக்கைவிட பேச்சு வழக்கில் எழுதுவதிலேயே ஒரு திருப்தி இருக்கிறது. எது எப்படியோ எனது தவறுகளைச் சுட்டிக்காட்டிய வலை நட்புக்களுக்கும் இதற்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட 'எங்கள் பிளாக்' உறவுகளுக்கும் நன்றி.

எங்கள் பிளாக்கில் கதை வாசிக்க : ஹரிணி

ண்பர் சத்யா அவர்கள் நடத்தும் அகல் மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார். எழுதுபவர்கள் எல்லாருமே மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். பிப்ரவரி மாதம் அகல் மின்னிதழின் முதலாமாண்டு கொண்டாட்டமாம். இரண்டு இதழாக வெளியிடுகிறார். முதல் இதல் பிப்-1 அன்று வெளியானது. மிகச் சிறந்த கட்டுரைகளால் இதழ் சிறப்பாக வந்திருக்கிறது. நீங்களும் வாசிக்கலாம்... உங்கள் கருத்தைக் கூறலாம்... ஏன் நல்ல பகிர்வுகளை அகல் மின்னிதழில் எழுதலாம்... 

என்னமோ தெரியலை... மிகச் சிறப்பானவர்களுடன் பயணிக்கும் எல்லாருமே நம்மளையும் கூப்பிடுறாங்க... சிறப்பானவர்களுடன் நம்மளையும் பயணிக்க வைக்கிறாங்க... அது நம்ம ராசி போல... சிறுகதைப் போட்டிக்காக அங்கு போனேன்... புத்தகங்கள் பரிசும் பெற்றேன்... சிறப்பான புத்தகங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து... 'வந்து விட்டதா..?' என முகநூலில் கேட்டுக் கேட்டே நட்பானோம்... இப்போ தினமும் இரண்டு வார்த்தையாவது முகநூலில் பேசிவிடுகிறோம். திடீரென 'ஜி அகல் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க' என்றார். 'கதை என்றாலும் ஏதாவது கிறுக்குவேன்... கட்டுரையா..?' என்றதும் 'எழுதுங்க ஜி அதெல்லாம் முடியும்.. எனக்கு கட்டுரை வேண்டும்' என அன்பாய் கட்டளை இட்டார். எழுதி அனுப்பினேன்.... 

பின்னர் அவரிடம் 'நல்லாயிருக்கா..?' என்று கேட்க 'இது கிராமம் தொடர்பான கட்டுரை.... இதை அடுத்த மாதத்துக்கு புக் பண்ணிட்டேன்...' என்றவர், 'இப்ப வேற மாதிரி நீங்க பார்த்த, வாழ்ந்தவற்றைப் பற்றி எழுதுங்களேன்..' என்றார். சரியின்னு எழுதினால்... நம்ம எழுதினாத்தான் பக்கம் பக்கமாப் போகுமே... சும்மா ஒரு எட்டுப் பக்கத்துக்கு எழுதி அனுப்பி 'ரொம்ப நீளமா இருக்கு... நீங்களே சுருக்கிக்குங்க..' என்று சொன்னதும் 'பார்க்கிறேன்' என்றவர், படித்து விட்டு 'ரொம்ப அருமையா இருக்கு ஜி, இதை ரெண்டு பகுதியா போடுறேன்... இந்த மாதம் பாதி... அடுத்த மாதம் பாதி...' என்றார். ஆம் அகல் ஆண்டுவிழா மலர் இரண்டில் (வரும் - 14 இரவு) பகுதி ஒன்று வருகிறது. இப்படிப்பட்ட நட்புக்களால்தான் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. நம் எழுத்தையும் நம்பி வாங்கிப் போடும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி.

அகல் பிப்ரவரி ஆண்டு மலர் -1 வாசிக்க இங்கு கிளிக்குங்கள்.

விழுதுகளைத் தாங்கிய வேர்கள் பழுக்க ஆரம்பித்துவிட்டன... ஆம் எங்கள் ஊரில் 'பேராண்டி' என வாய் நிறைய அன்போடு அழைக்கும் ஆயா ஒருவர், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தயிர் வியாபாரம் செய்ய காலையில் தேவகோட்டைக்கு தயிர்க்கூடை சுமந்து செல்வார். பெரும்பாலும் அதிர்ந்து பேசமாட்டார். வம்பு சண்டைக்கும் போகமாட்டார்....கணவரின் மறைவுக்குப் பின்னர் பழசை எல்லாம் மறந்தவராய் இருந்தாலும் நம்மைப் பார்த்தால் சில நேரங்களில் புரிந்து கொள்வார். கடந்த செவ்வாய் அன்று இறந்து போய் விட்டார். இன்று அவரின் இறுதிச் சடங்குகள் எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நேற்று விஷாலுடன் நடந்த உரையாடலில் ' அப்பா... மே மாசம் வரவாப்பா?' என்றதும் 'இப்ப வரவேண்டாம்... பத்து மாசத்துக்கு அப்புறம் வாங்க' என்றான். 'ஏன்டா?' என்று அவரின் அம்மா கேட்க, 'ஆமா அவரு வந்தா கிரிக்கெட்டே பாப்பாரு... என்னைய நாடகம் (சீரியல்) பார்க்க விடமாட்டாரு...' என்றானே பார்க்கலாம்... 'டேய் பத்தேமாரி படத்துல 50 வருசமா இருக்க அப்பன் பேசும் போது பெரிய பசங்களா வந்ததும்தான்... அம்மா அவரு பேசினா அறுத்துக் குமிச்சிருவாரு... தூங்கிட்டோம்ன்னு சொல்லுவானுங்க... நீ அஞ்சு வருசத்துலயே வரவேண்டாம்ன்னு சொல்றியேடா'ன்னு சொன்னதும் அவங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. பயபுள்ளய சீரியல்காரன் என்னமா கெடுத்து வச்சிருக்கான்... ஆனாலும் அதிலும் ஒரு சந்தோஷம் என்னன்னா கொஞ்ச நாளா எனக்கும் என் செல்ல மகளுக்கும் சின்ன சண்டை அப்படியிருந்தும் நான் ஒரு தேதி சொல்ல, ஏன் அதுக்கு முன்னால வியாழக்கிழமை எல்லாம் வராதா...? அப்படின்னு ஸ்ருதி சொன்னுச்சு... மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்... மகள்கள் எவ்வளவுதான் கோபமாக இருந்தாலும் அப்பா பாசத்தில் உசத்தி என்பது.... மொத்ததில் பார்த்தா நமக்கும் பத்தேமாரி கதைதான் போலும்.

ந்தப் பாட்டை கேட்கும் போது கிராமத்தில் இருக்கும் சந்தோஷம்... ஆடும் நாயகியை விடுங்க... பாடும் குரலைக் கேளுங்க... அந்தக் குரல் அப்படியே உங்களை இழுத்துக்கிட்டு போய் சுத்திக் காட்டும்.... கண்டிப்பாக ரசிப்பீங்க...



மனசின் பக்கம் தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

என்னைப் பறிச்சவளே..!

எதைச் சொல்வேன்...
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!

நீரெடுக்க நீ வருவேன்னு
காத்திருந்தேன் கரையோரம்...
குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!

வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!

வழியை மறிச்சு நீ
வாகாய் நிற்கையிலே...
கன்னத்தில் நான் பேசி
கடந்து சென்றேனே..!
முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!

கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!

காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!

உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!

திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!


மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...

போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...

ஆடிபோன பின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும்
நன்நாளை நினைக்கையிலே....

வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!

அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!

(படம் இணையத்தில் சுட்டது -  அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)

(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)
-'பரிவை' சே.குமார்.

சனி, 6 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-3)

‘சரவணன் வரலாம்ல... அவனுக்கு நெல்லை அரிசியாக்கி அங்க கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்’ என்று செல்வி கேட்டதும் “இல்லத்தா…. ரெண்டு பேரும் வாத்தியார் வேலை… இப்ப மழை பேஞ்சதால ஸ்கூலெல்லாம் அதிகமா லீவு விட்டுட்டாங்க…. இனி லீவு இல்லையாம்… நாம பாத்துக்கலாம்… எதுக்கு அவனை தொந்தரவு பண்ணிக்கிட்டு…” மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் வேலாயுதம்.

“அதானே…. சின்னவனை உங்களுக்கு எதுவும் சொல்லக்கூடாது… இவன் எப்பவும் வேலைக் களவாணிப் பயதானே…. மூத்தவனை மாதிரி இவன் என்னைக்கி வயல்ல இறங்கி வேலை பார்த்திருக்கிறான்…” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ஆமா... மூத்தவன் மாதிரி இவன் இல்லைதான்... அதான் இன்னைக்கி நம்ம சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருக்கான்... இந்த வீட்டுக்குள்ள அவனைப் பற்றி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அப்படியிருந்தும் அவன் பேச்சுத்தான் எல்லாப் பக்கமும் ஓடுது... அந்த ஓடுகாலி நாயைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு... அப்ப உங்க மனசுக்குள்ள எல்லாம் அந்த சாதி கெட்ட மூதேவிதான் இருக்கான் இல்லையா...?” கோபமாக மகளைப் பார்த்துக் கேட்டார்.

“அப்படியில்லப்பா... அவன் வேலை பாப்பான்னு....” மெல்ல இழுத்தாள் செல்வி.

“அதான் பார்த்தானே... நல்ல வேலையா... எவளோ ஒருத்தியை இழுத்துக்கிட்டு ஓடி... கேவலப்பட்ட பய... சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதை தூக்கி வீசிட்டுப் போன தறுதலை நாயி... அவன் பேச்சு இனி எனக்கு முன்னாடி பேசக்கூடாது... ஆமா... அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன்...”

“சரி... விடுங்க.... அவ ஏதோ வாய் தவறி சொல்லிட்டா... பேத்திக்குட்டி வேற திருதிருன்னு முழிக்கிறா பாருங்க... நீ சாப்புடிடி ஆத்தா... உங்க ஐயாவுக்கு இப்படித்தான் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரும்...” என்று சவுந்தரம் சொன்னதும் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டனர்.

வேலாயுதம் எழுந்து போன பின்னர், “ஆமா... இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கத்துறாரு... எனக்கு வேற வேலைவெட்டி இல்லாமத்தான் இங்க வந்தேனா... உங்க வீட்டு கருதறுப்புக்கு வந்து எனக்கென்ன ஆகப்போகுது... ஒரு மூடை அரிசி கொடுப்பியலா... தம்பி டவுனுல கஷ்டப்படுறான்னு சொல்லி அவனுக்கு அவிச்சி ஏத்துவிய... இப்ப என்னவோ மூத்தவன் பேரைச் சொன்னதுக்கு இம்புட்டுக் குதி குதிக்கிறாரு... அவன் வேல பாக்குறதைத்தான் இந்த ஊரே சொல்லுமே... ஆத்தா அப்பன் செரமப்படுறாங்களேன்னு வந்தா... எனக்கு இது தேவைதான்...” செல்வி கோபமாய் சவுந்தரத்திடம் சொன்னாள்.

“விடுத்தா... அவருக்கு அவன் செஞ்சதை ஏத்துக்க முடியலை... அவனைப் பற்றி யாரு பேசினாலும் படக்குன்னு முகத்துல அடிச்ச மாதிரி திட்டிடுறாரு...”

“ஆமா சாதியைக் கட்டிக்கிட்டு அழச் சொல்லு... அதுதான் நாளைக்கு அவருக்கு சோறு போடும்... போன வருசம் முடியாமக் கிடந்தாரே... அப்ப இவருக்கு பாத்த பூமிநாதன் டாக்டரும், அங்க இருந்த நர்ஸ்களும் இவரு சாதியாமா..? அவ்வளவு ஏன் ரத்தம் ஏத்துனாங்களே... அது என்ன இவரு சாதியில இருந்து பிடிச்சாந்த ரத்தமா...? சும்மா சாதி... சாதியின்னு... எங்க ஊரு சந்திரன் மக ஒருத்தனோட ஓடிப்போனா... நம்மளைப் பார்த்தா துண்டெடுக்கிற சாதிப்பயதான்... நல்ல வேலையில இருக்கான்... ஆரம்பத்துல முறுக்குனாங்க... இந்த மகளையும் மாப்பிள்ளையையும் சேத்துக்கிட்டாக... அன்னைக்கி பேத்திய தூக்கிக்கிட்டு எதித்தாப்ல வருது... யாருத்தான்னு கேக்குறேன்... என்ன இப்படிக் கேக்குறே... நம்ம சுசீலா மக... அங்க போயிருந்தேன்... ரெண்டு நாளைக்கு இங்க வச்சிருக்கலாம்ன்னு கூட்டுக்கிட்டு வந்தேன்னு சொல்லிட்டுப் போகுது.... எம்புட்டு நாளைக்குத்தான் இவரு சாதியக் கட்டிக்கிட்டு அழப்போறாரு... எம்புள்ளைகளுக்கு நாளக்கி நல்லது கெட்டதுக்கு ரெண்டு மாமனும்தான் வேணும்... ஆமா சொல்லிப்புட்டேன்...”

“நீ வேற ஏண்டி... சும்மா இருடி... அவரு காதுல கேக்கப்போகுது... தேவையில்லாத பிரச்சினை... விட்டுட்டு வேலையைப் பாரு...”

“ஆமா... இப்படி அவருக்கு பயந்து பயந்து ஜால்ரா போட்டே காலத்தை ஓட்டிட்டே... இனியா நீ மாறப்போறே...”

“சவுந்தரம்... ஆத்தாளும் மகளும் என்ன ரகசியம் பேசுறீங்க...? அந்த வெத்தலையை எடுத்துக்கிட்டு வா...” வாசத்திண்ணையில் இருந்து கத்தினார் வேலாயுதம்.

“போ உங்கப்பனுக்கிட்ட வெத்தலப் பெட்டிய எடுத்துக் கொண்டேக் குடு... நா வாறேன்...” என்று சவுந்தரம் சொன்னதும் செல்வி முணங்கிக் கொண்டே எடுத்துக் கொண்டு போனாள்.

***
சுபத்ரா கொடுத்த குலோப் ஜாமூனை ருசித்தபடி, “ஏம்மா... எங்கே நம்ம அபி..?” என்றான் கண்ணன்.

“டியூசன் போயிருக்கா... இப்ப வந்திருவா... அவ எங்க போறேன்னு சொன்னா... கண்ண அண்ணனெல்லாம் வர்றாங்க... போகலம்மா... ப்ளீஸ்மான்னு கெஞ்சினா... நாந்தான் அவங்க இங்கதான் இருப்பாங்க... போயிட்டு வந்து அவாகிட்ட பேசிண்டிருக்கலாம்ன்னு சொன்னேன்...” என்றாள்.

சாரதியைக் காட்டி “அபி... இவனை மாதிரி இல்லம்மா... ரொம்ப ஜாலியான பொண்ணு... அண்ணா... அண்ணான்னு உசிரை விடும்...” என்றான் கண்ணன்.

“ம்... வீட்ல சாரதிக்கிட்ட பேசிண்டு இருந்தாள்ன்னா அதுல பெரும்பாலும்  கண்ண அண்ணன்... கண்ண அண்ணன்தான்...” என்றாள் சுபத்ரா.

“ஆமா... இன்னைக்கு சாயந்தரம் நான் இங்க வந்தச்சே எனக்கிட்டயும் இந்த கண்ண அண்ணன் புராணம்தான் பாடிண்டு இருந்தா... அதுல இன்னைக்கு நீயுந்தானே எங்க கண்ண அண்ணனைப் பார்க்கப்போறே... அவரு சூப்பர் குணம்ன்னு சொன்னா.... அதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி பாத்துண்டிருந்தேனே கண்ண அண்ணாவோட குணத்தை...” கண்ண அண்ணாவை அழுத்தமாகச் சொன்னபடி அவர்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் அவள்.

 
“வாயாடி சும்மா இருடி...” என்றாள் சுபத்ரா.

“என்னைய அடக்கி வைங்க அத்தை... உங்க அத்தையை அடக்காதீங்க... அது பாட்டுக்கு திண்ணையில உக்காந்திண்டு ஜாதி, சம்பிரதாயம்ன்னு கத்திண்டு இருக்கு...” என்றாள் அவள்.

“ஏண்டா... இது நம்ம சாரதியோட தங்கச்சி இல்லை... அப்ப சொந்தக்காரியா இருக்குமோ..? இல்ல பக்கத்து வீடா....? முன்னப்பின்ன தெரியாத நமக்கிட்ட இந்தப் போடு போடுது... ஐயராத்துப் பொண்ணுக்கு பயமிருக்காதுதான்.... ஆனா நம்மளை விட்டு... இல்லையில்ல உன்னைய தாக்குதாக்குன்னு தாக்குது... இந்தக் குட்டிய முன்னப் பின்ன பார்த்திருக்கியா...?’ மெதுவாக கண்ணனின் காதைக் கடித்தான் ஜாகீர்.

“சும்மா இருடா... அத்தை அத்தையின்னு வேற பேசுது... சொந்தமா இருக்கப் போகுது...  குட்டி கிட்டின்னு பேசி அவங்க காதுல விழப்போகுது...” கண்ணனும் மெதுவாகச் சொன்னான்.

“என்னப்பா... உங்களுக்குள்ள பேசிண்டு இருக்கீங்க..?” எனக் கேட்டாள் சுபத்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நம்ம சாரதி வீட்ல எல்லாரும் ரொம்ப அன்பா... ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுறாங்கன்னு சொன்னான்... நான் பாட்டியைத் தவிரன்னு சொன்னேன்...” என்றபடி கண்ணன் எதிரே இருந்த அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

தங்க விக்ரகம் போல் அமர்ந்திருந்தாள் அவள்.


கண்ணன் அவளைப் பார்க்கவும் “அவ எங்க அத்தை பொண்ணு சுபஸ்ரீடா...” என மெல்ல அவனின் காதைக் கடித்தான் சாரதி.

(பகுதி -4 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சினிமா : இறுதிச்சுற்று

குருவைக் காதலிக்கலாமா...? கூடாதா...? என்பது சில நாட்களுக்கு முன்னர் எனது புதிய தொடர் பற்றி அண்ணன் ஒருவருடன் பேசும் போது  நிகழ்ந்த விவாதம். அது தப்பென்று சொன்னாலும் தங்கள் காதலைச் சொல்ல முடியாத சிஷ்யர்களும் சிஷ்யைகளும் படும் அவஸ்தையை அவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வையும் தன் தொழிலின் மீது வெறி கொண்ட ஒருவன் மீன் விற்கும் பெண்ணை உலக அரங்கில் குத்துச் சண்டை வீராங்கனையாக்குவதையும் மிக அழகாக, நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் படம் இது.


பெண்கள் கொண்டாடும் மேடி...   தம்பி படத்துக்குப் பிறகு ஏற்றிருக்கும் மிகச் சிறப்பான கதாபாத்திரம்... சாக்லெட் பாய் மேடிக்குள் இப்படி ஒரு அசுர வேகம் இருந்ததை தம்பி படம் கூட காட்டவில்லை என்றே சொல்லலாம். அந்த ஹேர் ஸ்டைலும் தன் சிஷ்யை லவ் பண்ணுறேன்னு சொல்லும் போது அதைத் தட்டிக்கழித்து எனக்கு உன்னோட விளையாட்டு மேலதான் குறியின்னு சொல்வதில் அவருக்கு குத்துச் சண்டை வீரனாய் தான் பிடிக்க முடியாமல் போனதை ஒரு பயிற்சியாளனாய் பிடிக்க வேண்டும் என்ற வெறி மனசுக்குள் இருப்பதைக் காட்டுகிறது. அதுவும் சென்னையில் போய் நீ சாதிச்சுக் காட்டு என முன்விரோதத்தால் தலைவர் அனுப்பிவிட,  மனசில்லாமல் சவால் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து ஒருத்தியை கண்டு பிடித்து அவளுக்கு மிரட்டலும் உருட்டலுமாய் பயிற்சி கொடுத்து, தன்னோட சிஷ்யை உலக அரங்கில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்ற வெறி படம் முழுவதும் இருப்பதைக் காண முடிகிறது. அருமையான நடிப்பு.

அதாருப்பா அது அந்தப் பொண்ணு... என்னமோ நம்ம பக்கத்து வீட்டுப் பிள்ளை மாதிரி மனசுக்குள்ள பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது... அதுவும் சேரிப் பேச்சை பேசிக்கிட்டு மீன் விற்றுக் கொண்டு  அக்காவுடன் ஆட்டம் போடுவதாகட்டும்... பணத்துக்காக பயிற்சிக்கு வருவதாகட்டும்... தன்னோட அக்காவே தனக்கு எதிரியாய் நிற்கிறாளே என்று வருந்தினாலும் அதை வெளிக்காட்டாமல் மாதவனிடம் அடி வாங்குவதாகட்டும்... அவளைப் பெரியாளாக்குறேன் என்று சொல்லும் தலைவர், நீ முன்னுக்கு வர, என்னோட இருக்க வேண்டும் எனும்போது அவனுக்கு பாடம் புகட்டுவதாகட்டும்... உனக்கு என்ன வேணும் மாஸ்டர் என்று கேட்டு எதிரியை நாக்-அவுட் செய்வதாகட்டும்... எனக்காக எல்லாம் செய்யுறியே... அப்ப இது காதல் இல்லாம என்னவாம் என்று சொல்லிச் செல்வதாகட்டும்... இறுதிக்காட்சியில் போட்டி நடைபெறும் இடத்தில் மாதவன் இல்லாது தவிப்பதாகட்டும்... ரித்விகாசிங் நடிக்கவில்லை... சேரிப் பெண் லக்ஸின் தங்கையாக மதியாக... அதுவும் நிறைந்த பௌர்ணமியாக அருமையாக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் மதி.

போலீஸ் ஆகணும் அதுதான் லட்சியம் என்று போராடும் அக்கா லக்ஸ், அதற்காக முயற்சித்து... நிறைய இழப்புக்களையும் சந்தித்து... முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் போது அதற்கு தங்கையே வில்லியாக வருகிறாளே என்ற வருத்தத்தில்... வேதனையில்... கடுப்பில்... தங்கையின் கையில் ஆணி குத்த வைப்பதில் தொடங்கி, மீண்டும் அவள் பயிற்சி பெற வரும் போது அவளிடம் நீ எதுக்குடி இங்க வந்தே என சண்டையிட்டு... மாதவனிடம் எனக்கு எதுக்கு மாஸ்டர் அவளுக்குச் சொல்லித் தர்ற மாதிரி சொல்லித் தரமாட்டேங்கிறே என்று வாய்விட்டுக் கதறி... ஆரம்பத்தில் அக்காவும் தங்கையும் ஆட்டம் போட்டாலும் இடைவேளைக்குப் பிறகு எதிரும் புதிருமாக நிற்க, கடைசிக் காட்சியில் குத்துச் சண்டை போட்டியில் அடி வாங்கி ரத்தம் வடிய நிற்கும் தங்கையைப் பார்த்து ஓடி வந்து அவளுக்கு முதலுதவி செய்யும் போது அந்தப் பாசம்... உடன் பிறந்த பாசம்... எத்தனைதான் மோசமான சண்டைகள் இருந்தாலும்... பேசவே கூடாது என்று நினைத்தாலும் இப்படியான சூழலில் உள்ளத்துக்குள் உறங்கும் அந்தப் பாசம் விழித்துக் கொள்ளும் என்பதை பார்ப்பவர்கள் அனைவரின் மனதிலும் உணர வைத்த நடிப்பு. லக்ஸாக வரும் மும்தாஸ் சர்க்காரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.


நாம் நாசரை வில்லனாய்... ஒரு கனமான கதாபாத்திரமாய் பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். அதை இதில் உடைத்திருக்கிறார்கள்... எனக்கு காமெடியும் வரும் என்பதை மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார். அதுவும் மாதவனுடன் தண்ணியடிக்கும் போது லிவர் கேட்பதும்... உடனே தண்ணி அடிச்சா லிவர் கெட்டுப் போயிடும்ன்னு சொல்லுவாங்க... அதுக்குத்தான் இந்த லிவர்... இதை சாப்பிட்டுக்கிட்டே அடிச்சா இந்த லிவர்தானே கெட்டுப்போகும் என்று  சொல்வதும்... ராதாரவியை வைத்துக் கொண்டு மாதவனிடம் 'சார்... இது அந்த வீணாப்போன முண்டம்..ஓடிப்போன தண்டம் மாதிரி இல்ல சார்... பாரு சார்... அதுக்கிட்ட உயிரே இல்லை' என்று சொல்லி விட்டு தன்னை ராதாரவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு 'நீங்க...?' என்றதும் 'இப்பச் சொன்னியே வீணாப்போன முண்டம்... அதோட அப்பா...' என்று ராதாரவி சொல்லும் போது சத்தமாக சிரிக்க வைத்தார். மதிக்காக போராடும் மனிதராய் வந்து நாசர் கலக்க, மாமனாராக... மாப்பிள்ளையின் பின்னே திரிந்து நிறைவாய் செய்திருக்கிறார் ராதாரவி.

ரித்திகாவின் அம்மாவாக இந்தி பேசும் சேட்டுப் பெண் சரியான தேர்வு. அப்பாவாக வரும் காளி வெங்கட்டும் குறை வைக்கவில்லை. இன்னும் சிறிய சிறிய கதாபாத்திரங்களும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளன. மாதவனின் மனைவி ஓடிப் போய்விட்டாள் என்பதை முன்கதைக்குள் கொண்டு செல்லாமல் ஒரு வரி வசனத்தோடு முடித்திருப்பது சிறப்பு. குள்ளநரித்தனமாய் வில்லத்தனம் செய்யும் குத்துச்சண்டை அமைப்புத் தலைவராக வரும் ஜாகீர் உசேன் இறுதியில் ரித்விகாவின் குத்தை வாங்கி சரிகிறார். அவர் பேசும் தமிழும்.... அந்த கண்ணாடிக்குள் சிரிக்கும் கொடூரமான கண்ணும்...  சிலகாட்சிகளே என்றாலும் சிறப்பாய் செய்திருக்கிறார்.

இசை சந்தோஷ் நாராயணன்... பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன... பாடல்கள் படத்தோடு பயணிப்பது சிறப்பு... பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயனின் கேமரா வட சென்னை மற்றும் வட மாநிலங்களின் உண்மைத் தன்மையை அப்படியே படம் பிடித்திருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாய் நகர வைத்திருக்கிறது. அருண் மாத்தீஸ்வரனின் வசனங்களில் ஆங்காங்கே நெருப்புப் பொறி. உடை மற்றும் சிகை அலங்காரத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.

மணிரத்னத்தின் உதவியாளரான சுதா, துரோகி படத்தின் மூலம் இயக்குநராய் மலர்ந்தார் என்றாலும் இந்தப்படம் யார் இந்த சுதா..?  என்று எல்லாரையும் கேட்க வைத்துவிட்டது. மூன்றாண்டுகளுக்கு மேல் அவர்பட்ட கஷ்டத்தை எல்லாம் களைந்து போட்டுவிட்டது இந்த இறுதிச் சுற்று... இதுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கான ஆரம்பச் சுற்று எனலாம்... இவ்வளவு நேர்த்தியாக ஒரு பெண் இயக்குநர் படம் எடுக்க முடியுமா என்று எல்லோரையும் யோசிக்க வைத்துவிட்டார். மாதவன் ஒழுக்கமானவன் அல்ல என்பதை ஆரம்பக் காட்சியிலேயே காட்டிவிடுகிறார். மேலும் அவன் மதியிடம் வரம்பு மீறவும் இல்லை என்பதை படத்தில் வரும் வசனங்கள் மூலமாகவே நகர்த்தி விடுகிறார். முதல் மனைவி ஓடிட்டா... அப்படியா அப்ப அதை மாதவன் சொல்றப்போ அப்படியே காட்சிகளை விரி... குடிச்சிக்கிட்டு இருக்கானா.... கதையை சொல்லிட்டான்ல... அப்ப அந்தப் பார்லயே ஒரு பாட்டை வைய்யிய்யா என்று கல்லாக் கட்டும் ராஜேஷ்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் 'அவ ஓடிப்பொயிட்டா' என்ற வசனத்தோடு கடந்து போகும் சுதாவுக்கு ஒரு பூங்கொத்து என்ன ஓராயிரம் பூங்கொத்து கொடுக்கலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் முன்னுக்கு வர பாலியல் ரீதியாக எப்படியெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை தைரியமாக கையிலெடுத்திருக்கிறார்கள். அதுவும் காவல் நிலையத்தில் அடிவாங்கி கிடக்கும் போது மாதவனுக்கு போன் செய்ய, விபசார வழக்கில் கைதான பெண் செல்போன் கொடுத்து உதவுவது.. அவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும் காட்சி... இதற்கெல்லாம் ஒட்டு மொத்த குழுவுக்கும் வாழ்த்துச் சொல்லணும்.


இறுதிச்சுற்றின் இறுதிக்காட்சியில் தன் மாஸ்டர் இல்லையே என அடி வாங்கி அவன் முகம் தெரிந்ததும் அடித்து ஆடி வெற்றி பெறும் ரித்விகாவை, தன்னோட தேர்வு என சொல்ல வரும் தலைவனுக்கு அடி கொடுத்து ஓடி வந்து மாதவனின் மீது தாவி, குழந்தை போல் அழும் போது 'அட இந்தப் பொண்ணு ஜெயிச்சிருச்சே' என சந்தோஷப்பட முடியாமல் நமக்கும் கண்ணீர் வரத்தான் செய்கிறது. அப்போது கேமரா மாதவனின் முகம் காட்ட, மேடி உதட்டைச் சுளித்து சிரிப்பார் பாருங்கள்... அட... அட... சூப்பர்.

பயிற்சியாளனாய் மாதவன் மின்ன, வீராங்கனையாய் ஜொலிப்பது புதுமுகம் ரித்விகாதான்... அசால்டா எல்லாரையும் அடிச்சி வீழ்த்திட்டு படத்துல முதல் இடத்துக்கு போய்க்கிட்டே  இருக்கு. படம் பார்க்கும் வரை இந்த பஞ்சாபிப் பெண் உண்மையான குத்துச் சண்டை வீராங்கனை என்பது தெரியாது. நேற்றுத் தெரிய அவரின் ரியல் குத்துச் சண்டை வீடியோ பார்த்தேன். அதிலும் ரித்விகாவுக்கே வெற்றி... ஜெயிக்கட்டும்... ஜொலிக்கட்டும்... முன்னாடியே தெரிந்திருந்தால் அட இது குத்துச் சண்டை தெரிந்த பெண்தானே என்று கூட தோன்றியிருக்கலாம்.

ஆமா... படத்துல குறையே இல்லையாக்கும் என்று நினைக்கலாம்... சில குறைகள் இருந்தாலும் நிறைவாய்... நிறைய காட்சிகள் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணான்னு பாடிக்கிட்டு போக வேண்டியதுதானே... அப்புறம் எல்லாரும் கண்டிப்பாக பாருங்கள். அப்படியே ரித்விகாவின் இந்த குத்தையும் பாருங்க... கண்டிப்பாக ரசிப்பீங்க...


என்னடா இவன் சினிமா பதிவுக்கு பொயிட்டானேன்னு நினைக்கும் நட்புக்களுக்கு... சில பல மனக் குழப்பங்கள்... எதுவும் எழுதாமல் இருப்பதைவிட இதுபோல் எழுதினால் மனசுக்கும் கொஞ்சம் ஆறுதல்... அதனால்தான் இப்படி... நாளை வழக்கம் போல் 'குறிஞ்சியும் நெருஞ்சியும்' எழுதிடலாம்... இன்று போல் நாளை இல்லை அல்லவா...? ஹா.. ஹா... மீண்டு(ம்) வருவோம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சினிமா : பத்தேமாரி (மலையாளம்)

ரபு நாட்டுக்கு வரும் ஒரு மலையாளியின் வாழ்க்கைப் பாதையில் நிரம்பியிருக்கும் கற்களையும் முட்களையும் வைத்து மிக அழகாக, உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியிருக்கும் படம்தான் 'பத்தேமாரி'.


அரபு நாட்டில் என்றில்லை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கனடா, இந்தோனேஷியா என எங்கும் இருக்கும் நம்மவர்கள் பற்றியகதைதான்  இது. மலையாளிகள் அதிகம் இருக்கும் அரபு நாட்டை (துபாய்) மையப்படுத்து மிக அருமையானதொரு வாழ்க்கை கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சலீம் அஹமத்.

ஊதாரித்தனமான தந்தை, அம்மா, சகோதர, சகோதரிகள் என பெரிய குடும்பம், அவர்கள் வாழ்விற்கான கப்பல் வழியாக அரபு நாட்டுக்கு தன் நண்பனுடன் பயணிக்கும் ஒருவன் அதன் பின் அரபு நாட்டில் படும் கஷ்டங்களும் அவன் ஊருக்குப் போகும் போதும் அதன் பின்னான நாட்களிலும் உறவுகளால் படும் கஷ்டங்களும்  என மிக நேர்த்தியாய் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

அடிக்கும் அலாரத்தை நிறுத்தாமல் படுத்திருக்கும் நாராயணன் இறந்து விட்டான் என்பதில் ஆரம்பிக்கும் கதையில் அடுத்த காட்சியாக ஊரில் அவரின் மூத்த மகனுக்கு செய்தி சொல்லப்பட, அங்கு அவனின் உடலை பெற்று இறுதிக்காரியங்கள் செய்வதற்காக அவனின் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவுகள் கூடியிருக்க, நாராயணனின் நண்பனான மொய்தீன் தன் வீட்டில் இருந்து பேருந்தில் வருகிறார். அதன்பின் கதை கடந்த காலத்துக்குச் செல்கிறது. நாராயணன் (மம்முட்டி) தன் நண்பன் மொய்தீனுடன் (ஸ்ரீனிவாசன்) அரபு நாட்டுக்கு வந்து வேலை பார்க்கிறார். ஆரம்பக் காட்சிகள் 1980 களின் அரபு தேசம் என்பதால் இப்போது இருக்கும் வானுயர்ந்த கட்டிடங்களைக் காட்டாமல் பெரும்பாலும் தங்கியிருக்கும் அறை, சில நேரங்களில் பேசிக் கொண்டிருக்கும் சிறிய கேண்டீன், சில கட்டிடங்கள் மட்டுமே தெரியும் கடற்கரைப் பரப்பு என மிகச் சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார். 

குடும்பம் துறந்து தனிமையில் இருக்கும் அந்நிய நாட்டு வாழ்க்கையில் அறை நட்புக்கள் மட்டுமே துணை. அதுவும் கால மாற்றத்திற்கு ஏற்ப அறையில் கட்டில்கள் மாறுவது... அறைகள் மாறுவது... ஆட்கள் மாறுவது என அழகாக அமீரக வாழ்க்கையும் பயணிக்கிறது. போன் பண்ண பொதுத் தொலைபேசியில் வரிசையில் நின்று அம்மா, மனைவி நளினியிடம் (ஜூவல் மேரி) ஊரில் இருக்கும் நண்பனின் கடைக்கு வரவைத்துப் பேசுவது... காலையில் டீயும் பண்ணும் சாப்பிடுவது... முதல் முறை ஊருக்குப் போகும் போது மற்றவர்கள் பார்சல் கொடுப்பது... வீட்டில் உள்ளவர்களுக்கு பார்த்துப் பார்த்து வாங்குவது... கேரளாவில் பன்னாட்டு விமானநிலையம் இல்லை என்பதைக் காட்டும் விதமாக மும்பை செல்வது... அங்கு பாதுகாப்புச் சோதனை அதிகாரிகள் பெட்டியை பிரிக்கச் சொல்வது... பணம் கேட்பது... என அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.


ஊரில் தங்கையின் மகளைத் தூக்கி கொஞ்சுவது... அம்மா, சகோதரன், சகோதரிகளுடன் சந்தோஷமாய் இருப்பது... மனைவியிடம் தான் கொண்டு வந்த நண்பர்களின் பார்சலில் ஒரு பெயரைச் சொல்லி அதை எடுத்து வரச்செய்து அவர்கள் முன்னால் உனக்கு எதுவும் கிடைக்காது அதனால்தான் இப்படி என அந்தப் பார்சலைப் பிரித்து பவுடர், செண்ட் எடுத்துக் கொடுப்பது... அம்மாவுக்கு வளையல் கொண்டு வந்து போட்டு விடுவது... சந்தோஷமாய்க் கழியும் நாட்களில் பயணத்துக்கு முன்னால் சகோதரன் சந்திரன் (ஜோய் மாத்யூ) இந்த வீட்டில் எனக்கும் பங்கிருக்கு... அதனால எனக்கு வீடு வேண்டாம்... கடை வைக்க இருபத்தையாயிரம் கொடு என்பதாய் கேட்பதில் 'நீ துபாய்க்காரன்தானே உன்னிடம் இல்லாத பணமா...?' என்ற கேள்வி தொக்கி நிற்பதைப் பார்த்து நாராயணனின் முகத்தில் அப்படி ஒரு அயற்சி, கவலை.

மீண்டும் நகரும் அரபு நாட்டு வாழ்க்கை... அம்மாவின் இறப்புக்குச் செல்ல முடியாத நிலை... தங்கையின் மகள் பெரியவளாகி விடுகிறாள்... இவனுக்கும் இரண்டு பையன்கள்...  தங்கையும் கணவனை இழந்து மகளுடன் இவன் வீட்டிற்கே வந்து விடுகிறாள்... மற்ற சகோதரிகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இவன் இனி அரபு நாட்டுக்கு வருவதில்லை என ஊருக்குப் போகிறான். மனைவியிடம் சொல்ல அவளோ 'துபாய்க்காரன் மனைவியின்னு பேராச்சும் இருந்துச்சு... இனி அதுவும் இல்லை' என்று சொல்லும் போது உடைந்து விடுகிறான். மேலும் தங்கையின் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் வர, அதை முடிக்கிறார்கள். அவர்களும் பெண்ணுக்கு வீடு இலலை.... வீடு வேண்டும் என்றதும் சந்திரன் அந்த வீட்டை தங்கைக்கு கொடுப்போம் என்கிறார். 'அதுக்குத்தான் நீங்க இருபத்தையாயிரம் வாங்கிட்டீங்களேன்னு' இவன் சொல்ல, 'ஆமா உங்களுக்கு எல்லாத்துக்கும் கணக்கு இருக்கும். நான் எவ்வளவு சாமான் கடையில் இருந்து கொடுத்திருப்பேன்... அதுக்கெல்லாம் எங்கிட்ட கணக்கு இல்லை.. அப்படி வச்சிக்க நினைக்கிறதுமில்லை'ன்னு சொல்ல வீட்டை தங்கைக்கு கொடுத்துவிட்டு தனக்கு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து மீண்டும் பாஸ்போர்ட்டைத் தேடி, விசா முடிய சில நாட்களே இருப்பதால் திருமணத்தை முன்னரே நடத்த மாப்பிள்ளை வீட்டில் பேச, அவர்கள் மறுத்துவிட திருமணத்துக்கு முன்னரே அந்த நினைவுகளைச் சுமந்தபடி பயணிக்கிறான்.

திருமணத்தன்று ஊருக்குப் பேச, அவர்கள் யாருமே சட்டை செய்யவில்லை. மனைவி கூட 'இப்ப வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கோம் ராத்திரி பேசுங்க' என்கிறாள். அந்தக் கணத்தில் அவனின் சந்தோஷங்கள் சரிகின்றன. அதன் பின்னான நிகழ்வுகள் அவனின் வாழ்க்கையைப் பேச, இடையிடையே நட்புக்கள்... ஒரு மலையாளிக்கு உதவி.. ஊரில் வீடு கட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் தங்கைக்கு கொடுத்த வீட்டை அவர்கள் வாடகைக்கு விடப்போவதாக சகோதரன் சொல்ல, அந்த வாடகையை நானே கொடுக்கிறேன் எனச் சொல்லி சொந்த வீட்டில் வாடகைக்கு தங்குகிறான். அவனின் நண்பன் மொய்தீனின்  மகன் அரபு நாடு வந்து நாலைந்து கடைகள் திறந்து பெரிய அளவில் உயர, அவரும் ஊரில் போய் செட்டிலாகி விடுகிறார். வீட்டில் மாட்டலாம் என அழகான விளக்கு ஒன்றைப் பார்த்து விலை கேட்க, அது அதிகமாக இருப்பதால் பின்னர் வருகிறேன் என்று கிளம்பும் நேரத்தில் இவன் உதவிய நபர் வந்து நாந்தான் இந்தக் கடையின் முதலாளி உள்ள வாங்க உக்காந்து பேசலாம் எனக் கூட்டிச் சென்று அவன் விரும்பிய விளக்கையும் கொடுத்து விடுகிறார். அதைக் கொண்டு வந்து கட்டிலுக்கு கீழே பத்திரப்படுத்துகிறான்.


ஒரு மலையாள தொலைக்காட்சி நிலையம் அரபு நாட்டில் மலையாளிகள் என்பது குறித்தான ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறது. அதில் வரும் ஒருவன் இவனின் மகன் சதீஷின் நண்பன் என்பதாலும் 50 வருடங்கள் அரபு நாட்டில் கழிந்திருக்கும் ஒரு மனிதன் என்பதாலும் இவனிடம் பேட்டி கேட்க, மறுக்காமல் சம்மதிக்கிறான். அன்றைக்கு இரவே பாலைவனப் பூமியில் தனது உயிரை விடுகிறான். அவனின் உடல் ஊருக்கு அனுப்பப்படுகிறது.

வீட்டை தங்கைக்கு கொடுக்க தயங்கும் அண்ணன் குறித்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தங்கை சொல்வது... போன் பண்ணும் போது அவரு பேசினா அறுத்துக் குவிச்சிருவாரு... தூங்கிட்டேன்னு சொல்லும்மா என மகன்கள் சொல்வது... அவனுங்க தூங்கிட்டானுங்கன்னு மனைவி பொய் சொல்வது,... சந்திரன் வீட்டிற்கு பணம் வாங்கிக் கொண்டு வீட்டில் எனக்கும் பங்கிருக்கு என மீண்டும் சொல்வது... அம்மாவின் இறப்புக்கு வர முடியாமல் கடற்கரையில் நின்று அழுவது... இப்படி நிறையக் காட்சிகள் தன் குடும்பத்துக்காக வெளிநாட்டில் சொந்தம். சந்தோஷம் என எல்லாம் இழந்து தவிக்கும் ஒருவனுக்கு வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

'அவனோட ஆசை இந்த வீடு... அவனோட உடலை இந்த வீட்டில் கொஞ்ச நேரமாச்சும் போட்டுட்டு எடுக்கலாம்' என மொய்தீன் சொல்ல, சகோதரன் சந்திரன் அரை மனதாக சம்மதிக்க, விமான நிலையத்தில் உடலைப் பெற்று வரும் மூத்தமகன் 'என்ன அங்கே...?' எனக்கேட்டு 'நாங்க வாழப்போற வீடு... நாளைக்கு விற்றாக்கூட யாரும் வாங்க மாட்டாங்க...' எனச் சொன்னதும் மொய்தீன் தனிச்சி நின்று அழுவதும் நாராயணனின் உடல் அங்கு இறக்கப்படாமலே கொண்டு சென்று எரியூட்டப்படுவதும் உண்மையை உரக்கச் சொன்ன காட்சிகள். எனக்கு இது போன்ற காட்சிகள் கண் கலங்குவதை தவிர்க்க முடியாது. இவ்வளவு தூரம் குடும்பத்துக்காக உழைத்தவனை வீட்டில் கூட போடக் கூடாதுன்னு சொல்றாங்களேன்னு நினைச்சப்போ கண்ணீர் வழிந்ததைத் தடுக்க முடியவில்லை. இதே கண்ணீர் நேற்றிரவு இறுதிச்சுற்று படம் பார்க்கும் போது வெற்றி பெற்ற நாயகி, மாதவனைத் தேடி ஓடி வந்து குதித்து அவன் மீது ஏறி அமர்ந்து அழும்போது அட அவதான் ஜெயிச்சிட்டாளேன்னு சந்தோஷம் கொள்ளாமல் மீண்டும் வந்தது... காரணம் அவ ஜெயிக்க அவனும் அவளும் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் நிறைய... சரி அதை மற்றுமொரு பதிவில் பேசலாம்.... இப்ப நாராயணனைப் பற்றிப் பார்ப்போம்.


அதற்கு அடுத்த நாள் பிள்ளைகள் டிவி பார்க்க, சந்திரன் விரட்டுகிறான்... அப்போது நாராயணன் கொடுத்த பேட்டி ஓளிபரப்பாக ஓட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து அழுகிறது. அப்படி என்ன சொன்னான்னுதானே கேக்குறீங்க... அரபு நாட்டில் காலை உணவு இல்லாமல் வெளியிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டில் இருப்போர்கள் நலமுடன் வாழ தன்னையே எரித்துக் கொள்ளும் ஆத்மாக்கள் மனதில் என்ன இருக்குமோ அதை அப்படியே கொட்டி வைத்திருப்பான்.... அதையும் சொல்லிட்டா அப்புறம் நல்லாயிருக்காது பாருங்க... அதனால அதை மட்டுமாவது படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

-'பரிவை' சே.குமார்.