மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 பிப்ரவரி, 2013

வட்டியும் முதலும் ! - ராஜுமுருகன்



(நன்றி : ஓவியம்: ஹாசிப்கான்)


ரேஞ்சர் தெரியுமா உங்களுக்கு?

கடலூர் பக்கம் ஒரு கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ மக்களின் தலைவர் ரேஞ்சர். பாண்டிச்சேரி கலைச்செல்வன்தான் ரேஞ்சரைப் பற்றிச் சொல்லி, அவரிடம் என்னை அழைத்துப்போனது. நாங்கள் போனது ஒரு சாயங்காலம். ஊர் திடலில் மொத்த நரிக்குறவ மக்களும் திரண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில், 'தலைவர் வர்றாரு... தலைவர் வர்றாரு...’ எனச் சத்தங்கள் வர, ரேஞ்சர் வந்தார். ஜகஜக வெனப் பச்சைக் கலரில் தலைப்பாகை கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பளபள காவி பைஜாமா, பட்டு வேட்டியில் விசித்திரமாக இருந்த ரேஞ்சரை ஒரு நாற்காலியில் அமர்த்தித் தூக்கி வந்து திடல் நடுவே உட்காரவைத்தார் கள். அது தலைவருக்கு அவர்கள் தரும் மரியாதை போல என நினைத்தேன். கூட்டத்தில் சில பிரச்னைகளை அந்த மக்கள் சொல்ல, சடசடவென லா பாயின்ட்களோடு பல விஷயங்களை ரேஞ்சர் பேசியது அவ்வளவு வசீகரம். கூட்டம் முடிந்ததும் மறுபடி நாற்காலியோடு அவரைத் தூக்கிப் போனார்கள். அப்போதுதான் கவனித்தேன்... அவருக்கு இரண்டு கால்களும் ஊனம். சட்டென்று அந்தக் காட்சியின் விசித்திரம் துயரமாக மாறி என்னை அறைந்தது.

''இது என்ன பேரு ரேஞ்சர்னு..?'' என்றதும் பகபகவெனச் சிரித்தார். 

''நம்மாளுகள்ல பார்த்தீங் கன்னா, ஊர்ப் பேரை நிறைய ஆளுகளுக்கு வெச்சிருப்போம். சிதம்பரம், பழநி, பாண்டிசேரினு. அப்ப எங்க தங்கிருக்கமோ அந்த ஊர் பேரை வெச்சி ருவோம். அப்புறம் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய்னு சினி ஆக்டருங்க பேரையும் வெச்சுருவோம். எங்கப்பா ஒரு மொரட்டுக் கூக... நாங்க அப்ப காட்டுக்குள்ள இருந்தோம். எப்போ பாத்தாலும் இந்த ரேஞ்சருங்க வந்து டார்ச்சர் குடுத்துட்டே இருப்பாங்க... அப்பதான் நா பொறந்துருக்கேன். ஒடனே எங்கப்பா, 'நீங்க என்னடா ரேஞ்சரு... எம் புள்ளையும் ரேஞ்சருதான்’னு கோவத்துல இந்தப் பேரை வெச்சுட்டாரு. எப்பிடியோ நாமளும் ரேஞ்சர் ஆகிட்டம்...'' என்றவரின் கால்களைக் கவனித்தேன். இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் ஊனமாகி இருந்தன. நான் கவனிப்பதைப் பார்த்தவர், ''இதுங்களா..? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்குங்க...'' எனச் சிரித்தார்.

20 வருடங்களுக்கு முன்பு அந்த மக்கள் எல்லாம் பிழைப்புக்காக கடலூர் பக்கம் வந்திருக்கிறார்கள். ஊசிமணி பாசிமணி விற்பது, வேட்டையாடுவது எனத் திரிந்தவர்களின் வாழ்க்கையை மாற்ற நினைத்து இருக்கிறார் ரேஞ்சர். அப்போது கடலூரில் இருந்த அதிகாரி ஒருவர், அரசு புறம்போக்கு நிலத்தை அவர்களுக்கு வழங்க... ரேஞ்சர் அந்த மக்களைச் சேர்த்துக்கொண்டு விவசாயம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். மொத்தப் பேரும் கை கோத்து, விதைத்து, நட்டு, உரம் போட்டுக் காவல் காத்துப் பயிர் பண்ணியிருக்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிட்ட ஓர் இரவில், 'தொழிலாளிப் பசங்க மொதலாளியாகலாம்னு பாக்குறீங்களாடா... விவசாயம் கேக்குதா ஒங்களுக்கு...’ என குரூப் கட்டி வந்த பக்கத்து ஊர்க்காரர்கள் மொத்த வயலையும் அறுத்துப் போய்விட்டார்கள். அப்போது பார்த்து அந்த அதிகாரி மாற்றலாகிவிட்டார். ஊர்க்காரர்களை எதிர்த்துக் கேட்க முடியாமல்... என்ன செய்வது என்று தெரியாமல் மொத்த ஜனமும் கண்ணீரில் நிற்க, நொறுங்கிவிட்டார் ரேஞ்சர். போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எனத் திரிந்தவர் மனசு நொந்துபோய், தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு புளிய மரத்தில் ஏறிக் கீழே குதித்திருக்கிறார். 

அதில்தான் இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டனவாம்.

''தற்கொலை செஞ்சுக்கக்கூடத் தெரியாத தற்குறியா இருந்திருக்கேங்க நான்... இயலாமை யும் கோவமும் முண்டிக்கிட்டு என்ன பண்ற துனு தெரியாம எத்தன ஏழபாளைங்க இருக் காங்க சாமி இந்த நாட்டுல? சாவணும்னா புளிய மரத்துல ஏறிக் குதிக்கக் கூடாதுங்கறதுதான் நான் கத்துக்கிட்ட பாடம்...'' என இப்போது சிரிக்கிறார் ரேஞ்சர். அதன் பிறகு, ஆஸ்பத்திரியில் வைத்து, இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் வந்தவரை அந்த மக்கள் தலைவராக்கிக்கொண்டார்கள். அப்புறம் இந்த மக்களின் பிரச்னைகளையே தனது தினசரி வாழ்வாக்கிக்கொண்டார். உட்கார்ந்தபடியே உலகம் படித்து, சட்டங்கள் அறிந்து, மனிதர்கள் புரிந்து அந்த மக்களுக்காகவே இருக்கிற ரேஞ்சரைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. வரும்போது அவர் சொன்னார், ''சார்... நா எதுக்காக விவசாயம் பண்ணணும்னு நினைச்சேன்... எதுக்காவ புளிய மரத்துல ஏறி வுழுந்து சாவணும்னு துடிச்சேன்... எனக்காகவும் இதுங்களுக்காகவும் இல்ல... எங்க புள்ளைவளுக்காவ... இந்தக் கதியத்த பொழப்ப அதுங்க வாழக் கூடாதுங்கறதுக்காவ... நம்ம கஷ்டத்த அடுத்த தலைமுறைக்குக் குடுத்துட்டுப் போவக் கூடாது சார். அதுங்களுக்கு எதாவது நல்லது பண்ணிட்டுப் போறவன்தான் மனுஷன். பணங்காச வுடுங்க... நம்பிக்கையக் குடுத்துட்டுப் போவணும்ல?!''

இதைக் கேட்டதும் எனக்குச் சிலிர்த்துவிட்டது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வந்தேன். அடுத்த தலைமுறைக்காக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்ன நம்பிக்கைகளை சேர்த்துவைக்கிறோம்? நமது நினைவாக எதைக் கையளிக்கப்போகிறோம்? என அலை அலையாக மனம் கேள்வி எழுப்பியது. இரை தேடும் வித்தையை மட்டும் அல்ல, பசி தீர்க்கும்கருணை யையும் அல்லவா கையளிக்க வேண்டும். அதிகாரத்தை அடையும் பாதைகளை மட்டும் அல்ல; எளியவர்களுக்காகப் போராடும் உணர்வு களையும் அல்லவா சொல்லித் தர வேண்டும். பிழைப்பதற்கான மூளையை மட்டும் அல்ல; வாழ்வைத் தரிசிப்பதற்கான மனசையும் அல்லவா கையளிக்க வேண்டும்.

நான் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடையவே முடியவில்லை. உலகின் அற்புதமான சொற்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும் நமக்குத் தந்தபடி அவர்கள் 'பிழைக்கத் தெரியாதவர்களாக’ தேநீர்க் கடைகளிலும், மதுக் கடை களிலும், பயணங்களிலும் காணக் கிடைக்கிறார் கள். அறத்தையும் அடுத்தவர்களின் விளைவு களையும் பொருட்டாகக் கருதாமல், மோதி மிதித்து நடக்கும் பலர் பணம், அதிகாரம் என ஓர் இடத்தை அடைந்துவிட்டதையும் பார்க்கி றேன். ஈழப் பிரச்னை எரிந்தபோது, தவ்விக் குதித்து வந்த பலர் இப்போது என்ன செய்கிறார் கள்? கூடங்குளத்துக்காக எகிறி வந்தவர்கள் பாதிப் பேர் எங்கே போனார்கள்? 'போராளி’ என்கிற அடையாளத்தைத் தனது வாழ்வின், பிழைப்பின் ஒரு பகுதியாக வைத்திருப்பவர்கள், அடுத்த அரசியல் முகத்தை மாட்டிக்கொண்டு வேறு வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள். தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்கள் அவர்கள். அவர்கள்தான் நினைத்ததைக் கொள்முதல் செய்கிறார்கள். தனக்கான நாற்காலியை அடைகிறார்கள். சுற்றத்தால் கொண்டாடப்படுகிறார்கள். ''வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுறாங்க பாஸ்...'' என்றபடியே மத்திய அமைச்சகத்துடன் ஐபோனில் பேசுகிற இடத்தில் இருக்கிறார்கள். ''அவரைப் போல பொழைக்கத் தெரியணும். அந்த இடத்துக்கு நீ வரணும்டா...'' என அடுத்த தலைமுறைக்கு (தவறான)முன்னுதாரணம் ஆகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேகம் எடுக்கிற உலகத்தில் சக மானுடர்களின் பசி, ஏக்கம், போராட்டம் பற்றிய அக்கறையின்மை யைத்தான் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோமா நாம்? தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, தோல்வி யைத்தான் அவர்களுக்குப் பாடமாக்குகிறோமா?

சமீபத்தில் திருவொற்றியூரில் நண்பர் குமரய்யா அழைத்திருந்த ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். வட சென்னையைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கும் விழா அது. சில நண்பர்கள் சேர்ந்து 'புத்தக வங்கி’ ஏற்படுத்தி, இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள். விழாவில் திருவொற்றியூர் முருகனைச் சந்தித்தேன். ''இவரு கேன்சர் விழிப்பு உணர்வுக்காக சைக்கிள்லயே தமிழ்நாடு முழுக்கச் சுத்திட்டு வந்திருக்கார் சார்... இதுக்காக இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோ மீட்டர் சைக்கிள்லயே போயிருக்காரு...'' என முருகனை அறிமுகப்படுத்தினார்கள். ''எப்பிடி இந்த விஷயம் உங்களுக்குத் தோணுச்சு?'' என அவரிடம் கேட்டேன். ''என் மனைவி கேன்சர் வந்து செத்துப்போயிட்டாங்க சார். மார்பகப் புற்று நோய்... அது வரைக்கும் அதைப் பத்தி எதுவும் தெரியாது. அப்புறம்தான் இந்தப் புற்றுநோய்க்காக எவ்வளவு சிகிச்சைகள் இருக்கு... எவ்வளவு இடங் கள் இருக்கு... என்னல்லாம் பண்ணணும்னு  தெரிஞ்சது. நான் என் மனைவியை அவ்வளவு நேசிச்சேன் சார். அவங்க போனதை இப்போ வரை ஜீரணிக்கவே முடியலை. என்னை மாதிரி இந்த நோயால எவ்வளவு ஜனம் கஷ்டப்படும்னு நெனைச்சேன்.... நாளைக்கு வர்றவங்க இதைத் தெரிஞ்சுக்கணும்னு நெனைச் சேன்... அதனாலதான் சார் இந்த சைக்கிள் பயணத்தை ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தபா எங்க ஏரியால மருத்துவ முகாமும் ஏற்பாடு பண்றேன். ஏதோ என்னால முடிஞ்சது'' என்றார் புன்னகையுடன்.

வெற்றி, தோல்வி என்றெல்லாம் எதுவும் இல்லை. சந்தோஷம் துயரம் என்றும் எதுவும் இல்லை. நமது தோல்வியை வெற்றியாகவும் துயரத்தைச் சந்தோஷமாகவும் வரும் தலை முறைக்குக் கொடுப்பதுதான் இந்த வாழ்வின் அர்த்தம் என்பதை திருவொற்றியூர் முருகன் எனக்குச் சொல்லித்தந்தார். குழந்தைகளின் கலைஞன் வேலு சரவணனும் அப்படித்தான்.

வேலுவை நான் பரபரப்பான தி.நகர் சாலை ஒன்றில் சந்திப்பேன். ஏதேதோ வேலை களுக்காக ஓடித் திரியும்போது நடுவில் கிடைக்கும் சந்திப்பு.

''குழந்தைகளுக்கான ரசனையை மேம்படுத்த ஒரு கூத்து பண்றோம். அதுக்காகப் போயிட்டு இருக்கேன்...'' என்பார் புன்னகையுடன். ஒரு நாள் பார்த்தால் விழுப்புரம் பக்கத்தில் ஏதாவது கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருப்பார். தஞ்சா வூர் பக்கம் ஏதோ ஒரு சிற்றூர் மைதானத்தில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருப்பார். ஒரு நாள் திருவண்ணாமலையில் பொம்மை முகமூடி மாட்டிக்கொண்டு அவர் தவ்வித் திரிய, மொத்தக் குழந்தைகளும் குதித்துச் சிரித்துக் கிடந்த காட்சி அழகாக இருக்கிறது இப்போதும்.

வேலுதான் சொன்னார், ''பிள்ளைகளுக்கு இயற்கையையும் மண்ணையும் நேசிக்கக் கத்துத்தரணும். அவங்களுக்கு ரசனையையும் அன்பையும் ஊட்டுறதுதான் என் வாழ்க்கை.

பணம் காசு எதுவும் இல்லைங்க... அவங் களோட ஒரு சிரிப்பு போதும் என் வாழ்க் கையை அர்த்தப்படுத்த. அடுத்த தலை முறைக்கு நாம அந்த சிரிப்பைத்தானே தரணும்!''

அந்தக் கணம் எனக்கு அவராகவே மாறிவிடத் தோன்றியது!

-'பரிவை' சே.குமார்.

மன்னித்துவிடு பாலச்சந்திரன் - கார்ட்டூனிஸ்ட்.பாலா


2009 ஆரம்ப நாட்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அங்கிருந்து வரும் புகைப்படங்கள் விடீயோக்கள் போரின் கொடூரத்தை சொன்னது. அதில் கர்ப்பிணி ஒருவரின் வயிறு கிழிந்து அவரின் சிசுவின் பிஞ்சு கால் விரல்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்றும் இருந்தது. 

என்னால் மறக்கவே முடியாத படம் அது. அப்போது என் மனைவியும் எழுமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனாலயே என்னை அந்தப் படம் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கியிருந்தது. அந்த சிசுவின் கால்விரல்கள் பிறந்திராத என் குழந்தையாக என்னைச் சித்திரவதை செய்தது. 

இன்றளவும் சிலபேர் மீது எனக்கு வன்மம் குறையாமல் இருப்பதற்கு அந்தப் படமும் ஒரு காரணம். 

இனிமேலும் தொடர்ந்து ஈழத்திலிருந்து வரும் புகைப் படங்களைப் பார்த்தால் மனப்பிறழ்வுக்குள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். 



சில மாதங்களுக்கு முன்பு மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருந்தது. இப்போது சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் உயிரோடு இருக்கும் பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருக்கிறது. 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது.. தனக்கு என்னாகும் என்பது பற்றியெல்லாம் ஏதும் அறிந்திராத அந்தப் பாலகன் ராணுவம் கொடுத்த பிஸ்கெட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிற அந்தப் புகைப்படத்தை பார்த்த தருணத்திலிருந்து 2009 காலகட்டங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் இன்று வந்தது. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படத்தை விடப் பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டு உயிரோடு அமர்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது.. 
அதுவும்.. அந்த வெறித்தக் கண்கள்... பாவிகளே.. எப்படி மனசு வந்தது.. அந்த குழந்தையை சுட்டுக்கொல்ல..

ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்க முடியாதளவுக்கு வன்மத்தோடு இருக்கும் ஒரு இனவெறி அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்போதும் கூறி அறிவுஜீவிகள் சிலர் தங்கள் வாழ்வை செழிப்பாக்க கூடும். 

தலைவர் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும்.. என்று செத்துப்போன உங்களை வைத்து சிலர் பிழைப்பும் நடத்தக்கூடும். 

தம்பி.. உன் தந்தையிடம் சொல்.. இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர்களாகப் பிறந்ததே அசிங்கம் என்று.. 

மன்னித்துவிடு பாலச்சந்திரன்.. 
நாங்கள் கையாலாகாத தமிழர்கள்.. 


நன்றி:  கார்ட்டூனிஸ்ட்.பாலா

-'பரிவை' சே.குமார்

புதன், 13 பிப்ரவரி, 2013

காதலர்களுக்காக... சில கவிதைகள்


புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..! 



காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற 
நாட்களே அதிகம்...! 




மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!




நீ நீரருந்திய 
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
 விடுவதில்லை...
என்னைத் தவிர..!




நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!




உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது 
கையிலிருக்கும்
செல்போன்..!




துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!


நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்....


(எனது கிறுக்கல்கள் வலைப்பூவில் எழுதியவை பிப்ரவரி-14  பகிர்விற்காக மீண்டும் ஒருமுறை இங்கே)


(படங்களுக்கு நன்றி இணையம் மற்றும் ஓவியர். இளையராசா)


-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மனசு


இந்த மனசு இருக்கே அது எதையாவது பிடிச்சா உடும்புப் பிடிதான் போங்க. காலையில எழும்போதே 'என்னவளே... அடி என்னவளே...' பாட்டு ஞாபகத்தில் வந்தால் அன்று முழுவதும் நம்மையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடலாக அதுதான் இருக்கும்.

அதுமாதிரிதாங்க இன்னைக்கு காலையில எழும்போதே பக்கத்து வீட்டு பரஞ்சோதி மாமா ஞாபகம் மனசுக்குள் மணியடித்துக் கொண்டிருந்தது.

எனக்கே ஆச்சர்யம். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை, பேசிக்கொள்வதில்லை. இருந்தும் அவர் ஞாபகம் மீண்டும் மீண்டும் மனசுக்குள்.

எங்காவது போகும்போது ரோட்டோரம் அழகான பொண்ணு போனாப் போதும், நம்ம அறியாமலே இந்த மனசு உடனே படம் பிடித்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்து உறங்கினாலும் அந்த முகத்தையே ஞாபகப்படுத்தி நம்மை ஒரு வழி பண்ணும். என்னதான் முயன்றாலும் மனதின் முன் நாம் தோற்றுவிடுவோம் என்பதே நிதர்சன உண்மை.

மனசு சம்பந்தமான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அம்மாவின் குரல். எழுந்து வெளியில் வந்தபோது அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மனசு எதிர் வீட்டு மாமாவை நினைவூட்ட எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கம் பார்த்தேன். சத்தியமா அவரைப் பார்க்கத்தாங்க நினைச்சேன். ஆனா அவரு மக நின்னா. பிளஸ் டூ படிக்கிறா. பல வருட சண்டையால அவ கிட்ட இதுவரை பேசியது கூட இல்லைங்க. என்னவோ நான் அவளை பார்க்கிறதா நினைச்சு உள்ள இருந்து வந்த பரஞ்சோதி மாமா 'அங்க என்னம்மா பண்றே..? கண்ட காலிப்பயலுக வேலியில ஓணானாட்டம் திறியிறானுங்க... உள்ள வா.' என்று சத்தம் போட்டார். எங்க வீட்டுப் பக்கம் நிக்கும் போதே காலிப் பயலாம். என்ன செய்ய, திட்டு வாங்கத்தான் மனசு அவர ஞாபகப்படுத்தியதோ என்னவோ. நல்லவேளை அப்பா காதுல விழலை என்று நினைத்த என் மனதுக்குள் பரஞ்சோதி மாமா மறைந்து அவர் மகள் உட்கார்ந்து கொண்டாள்.

காலேசுக்கு கிளம்பும்போது மறக்காமல் நான் எழுதிய முதல் கதையை எடுத்துக்கொண்டேன். என்னடா திடீர்னு கதை அது இதுன்னு போறானேன்னு நினைக்கிறிங்களா..?. இதுக்கும் மனசுதாங்க காரணம்.

போன வியாழக்கிழமை சவரிமுத்து ஐயா தமிழ் வகுப்பு எடுத்தப்ப யார் யாரு கதை, கவிதை எழுதுவிங்க என்று கேட்டார். பதிப்பேர் கையை தூக்க நான் உட்பட சிலர் கை தூக்கவில்லை. நமக்கு தெரியலைன்னா என்னங்க பண்ணமுடியும்.

அவரு எல்லாரையும் விட்டுட்டு என்னய பார்த்து 'என்ன சார், நமக்கு எதுவுமே வராது படிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். எதுக்குத்தான் வர்றோமோ. பாவம் பெத்தவங்க.' என்றார் நக்கலாக. வகுப்பே கொல் என்று சிரித்தது. குறிப்பா மல்லிகா சிரிப்பு மட்டும் தனியா கேட்டது. ரெண்டு நாளா இந்த மனசு வேற அவ சிரிச்சதையே ஞாபகப்படுத்தி கஷ்டப் படுத்திருச்சுங்க.

சை... எல்லாரு முன்னாலயும் அவமானப்படுத்திட்டாரே. அதுவும் மல்லிகா முன்னால வச்சு கேவலப்படுத்திட்டாரே... அவரே எல்லாரு முன்னாலயும் புகழனும் அதுக்கு ஒரே வழி கதை எழுதுறதுதான் என முடிவு செய்து ரெண்டு நாளா யோசிச்சு நேத்து காலையில கம்மாக்கரையில உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன். அதை இன்னைக்கு அவர்கிட்ட கொடுக்கணும்.

மாமாவையும் மாமா மகளையும் மறந்த மனசு சவரிமுத்து ஐயாவையும் மல்லிகாவையும் பற்றிக் கொண்டது.

நேராக தமிழ்த்துறைக்குச் சென்று ஐயாவிடம் கதையை நீட்டினேன். என்னப்பா இது..? என்று புருவம் உயர்த்தினார். 'கதை' என்றேன். ஓற்றைச் சொல்லில். என்னை ஏற இறங்க பார்த்தார். 'சரி படிச்சுட்டு கருத்தை சொல்லுறேன். மதியம் வந்து பாரு' என்றார்.

'உங்க கருத்தை நான் தனியா கேட்க விரும்பலை. நீங்க உங்க வகுப்புல எல்லாரு முன்னாலயும் சொல்லுங்க. கேவலப்படுத்துறப்ப மட்டும் தனியா வரச்சொல்லியா பண்ணினிங்க.' என்றேன்.

'ம்... தனியா சொல்றது உனக்கு நல்லதுன்னு பார்த்தேன். அப்புறம் உன் இஷ்டம்.' என்றார். 'பரவாயில்லை' என்று கிளம்பினேன்.

நம்ம கதைய படிச்சுட்டு ஐயா நல்ல கருத்தை வகுப்பில சொல்லட்டும் அப்புறம் பாரு மல்லிகாவை என்ன பண்ணுறேன்னு. அவளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே என் கதையின் நாயகி பேர மல்லிகான்னு வச்சேன்.

மதியம் முதல் பிரிவேளை தமிழ் ஐயா வந்தார். வந்தவர் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனது கதை பற்றி எதுவும் கூறவில்லை. மனசு சொல்லுவாரா மாட்டாரான்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பாடத்துல எப்பவும் கவனம் போகாது. இன்னைக்கு சுத்தமா இல்ல. அடிக்கடி என்னய பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். அவரு மேல கடுப்புதான் வந்தது.

வகுப்பு முடிய பத்து நிமிடம் இருக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி செல்வம், ஒரு கதை எழுதி எங்கிட்ட கொடுத்து படிச்சு கருத்துச் சொல்லச் சொன்னார். அதுவும் வகுப்புலதான் சொல்லணுமுன்னு கேட்டுக்கிட்டார் என்றதும் எல்லோரும் என்னய திரும்பிப் பார்த்தனர்.

மல்லிகா மட்டும் நக்கலாக சிரித்தாள். அவளுக்கு எப்பவுமே எல்லாத்திலும் தானே முதல் என்ற கர்வம் உண்டு. அவ நல்லா கதை, கவிதை எழுதுவா. கல்லூரியில வர்ற எல்லா கையெழுத்துப் பிரதியிலயும் எழுதுவா. அழகா வேற இருப்பாளா தேடி வந்து கதை வாங்குவாங்க. அதனால நாம கதை எழுதினா அவளுக்கு நக்கலாத்தான் தெரியும்.

ஐயா தொடர்ந்தார், 'முதல்ல கதை எழுதணுங்கிற அவரோட ஆர்வத்தை பாராட்டுறேன் என்றதும் நான் மத்தவங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தேன். 'ஏம்மா மல்லிகா... சமீபத்துல மூன்றாம் பிறை படம் போட்டானா..?' என்று வினவ, நம்ம கதைக்கும் இவரு கேக்குற கேள்விக்கும் என்ன சம்பந்தம்? என்ற என் யோசனையை  'ஆமா ஐயா... வியாழக்கிழமை கே டிவியில போட்டான்' என்ற மல்லிகாவின் பதில் கலைத்தது.

'ம். அதானே பார்த்தேன். யாரும் படம் பாக்கலைன்னா இந்த கதைய வாங்கி படிங்க. பேர் மாற்றத்தோட கதை அப்படியே மாற்ற்மில்லாம இருக்கு. ஆத்திரப்பட்டா மட்டும் போதாது தம்பி, சுயமா சிந்திச்சா கண்டிப்பா நல்ல கதை உங்களாலயும் எழுத முடியும்.' என்றார். உடனே வகுப்பு முழுவதும் கோரஸாக கத்தியது.

எனக்கு என்னவோ போலாகி விட்டது. சே... இந்த மனசு இப்படி கேவலப்பட வச்சுடுச்சே. கதை எழுதணுமுனு நினைச்சு உட்கார்ந்தப்ப, பார்த்த படத்தோட கதைய அப்படியே ஞாபகப்படுத்தி... சை... நன்றி கெட்ட மனசு. யார் முகத்திலும் முழிக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டேன்.

'எல்லாருக்கும் ஓண்ணு சொல்லுறேன். யாருக்காகவும் எழுதாம நீங்களா முயலுங்கள். கண்டிப்பா உங்க திறமை வெளிப்படும். அப்புறம் நம்ம கல்லூரியில ஒரு சிறுகதைப் பட்டறை நடக்கப் போகுது. நிறைய கல்லூரியில இருந்து பசங்க கலந்துக்க இருக்காங்க. அதுக்காக நம்ம கல்லூரியில கதை தேர்வு நடக்க இருக்கு. அது தொடர்பான சுற்றறிக்கை முதல்வர்கிட்ட இருக்கு. விரைவில் உங்களுக்கு வாசிக்கப்படும். நல்ல கதையா குடுங்க. நம்ம மல்லிகா பொருளாதார பசங்க நடத்துற மனசு பத்திரிக்கையில இந்த மாதம் எழுதியிருக்க ஜன்னலோர ரோஜா அருமையான கதை. அம்மா மல்லிகா, அதையே கொடு. கண்டிப்பா பட்டறைக்குப் பிறகு நடக்கப்போற கதை தேர்வுல முதல் கதையா வரும்.' என்று எனக்குள் கனன்ற கோபத்திற்கு எண்ணெய் வார்த்துச் சென்றார்.

மனசு முழுவதும் மல்லிகா ஆக்கிரமித்தாள். வேறு எதை நினைத்தாலும் மனசு அவளிடமே வந்து நின்றது. சே... வெட்கம்கெட்ட மனசே அவளை நினைப்பதை நிறுத்து என மனசோடு சண்டையிட்டேன். ஆனால் ஜெயித்தது என்னவோ மனசுதான்.

அடுத்த பிரிவேளையை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தால் அம்மா, 'ஏண்டா, வரும்போது அக்கா வீட்டுக்குப் போயி விதை நெல்லு மூட்டை தூக்கியாரச் சொன்னேனே. தூக்கியாரலயா..?' என்று கோபமாக கேட்க, காலையில் கிளம்பும் போது அம்மா சொன்னது இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது. எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் மனசு இதை மட்டும் மறந்துவிட்டதே. என்ன மனசு இது என்று மனசை திட்டினேன்.

'அவருக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கப் போகுது. பக்கத்து வீட்டுப் பக்கமுல்ல ஞாபகம் போகுது.' படுத்திருந்தபடி அப்பா சொல்ல, ஏனோ தெரியவில்லை பரஞ்சோதி மாமாவும் அவரது மகள் யாழினியும் மனசுக்குள் மணியடித்தனர்.

-'பரிவை' சே.குமார்

சிறுகதைகள் வலைப்பூவில் எழுதியது மீள்பதிவாக...               

திங்கள், 4 பிப்ரவரி, 2013

'மன்னிப்புக் கேள்'-தணிக்கைத் துறை :: ‘கருத்து சுதந்திரம்'-சசிதரூர்



 'மன்னிப்புக் கேள்' - தணிக்கைத் துறை

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறை மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 144 தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை தணிக்கை துறை வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தணிக்க‌ை சான்று அளித்ததில் தவறு நடந்ததாக , கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்கள் வாதாடினார்.இந்த விஷயத்தில் தவறான தகவல் தந்தததாக தமிழக அரசு வக்கீல், நவநீதிகிருஷ்ணன் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது

-----****-----

 ‘கருத்து சுதந்திரம்' - சசிதரூர்

நாட்டில் சமீபத்திய விஸ்வரூபம் திரைப்படம், ஆஷிஸ்நந்தியின் பேச்சு ஆகியவற்றுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளை பார்க்கும் போது சமுதாயம் சகிப்புதன்மை அற்று இருப்பதையே வெளிக்காட்டுகிறது என்றும், கருத்து சுதந்திரம் பறிபோய் வருகிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: விஸ்வரூபம் சர்ச்சை , தாழ்த்தப்பட்டோர் குறித்து எழுத்தாளர் ஆஷிஸ் நந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு இந்த சமூகத்தில் எதிரொலித்திருக்கிறது. இது கலாச்சாரம் என்ற பெயரில் வளர்ந்து வந்துள்ளமை போட்டி மனப்பாங்கு கொண்ட சகிப்புத்தன்மையற்று போனதையே காட்டுகிறது.

எழுத்து, கருத்து சுதந்திரம் நீதிபதி மற்றும் அரசு மூலம் தான் வழிபிறக்கும் என்றால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றோம். இது குறித்து நானும் அதிகம் பேச விரும்பவில்லை. எந்தவொரு விமர்சனமும் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே நேரத்தில் கருத்து சுதந்திரம் பறிபோவது சரியல்ல. எந்தவொரு விஷயமானாலும் விவாதிக்கவோ, வாதிடவோ நமக்கு உரிமை உண்டு. சமூகத்திற்கு ஒரு சவாலாக இருந்து வரும் இந்த விஷயத்தில் ஒரு சம நிலை ஏற்பட வழி பிறக்க வேண்டும்.

தணிக்கை துறை சான்று :

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருக்க கூடாது. தணிக்கை துறை சான்று அளித்த பின்னர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்த போதும், எதிர்ப்பு வரும் தேவையற்ற காட்சிகள் இருக்கும் யாரும் நினைத்தால் காட்சிகளை ரத்து செய்ய சொல்லி படத்தயாரிப்பாளரிடம் வாதிடலாம். ஆனால் தடை விதிக்க முன்வரக்கூடாது.

ஆஷிஸ்நந்தியின் பேச்சுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது. இது தேவையற்றது. சல்மான் ருஷ்டி கோல்கட்டாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இன்னும் நாம் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் கடந்து வந்த பாதை



டிசம்பர் 7:  "விஸ்வரூபம்' படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

டிசம்பர் 9:  முதலில் டீ.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியாகும்  என்ற அறிவிப்பு வந்தது.

டிசம்பர் 9:  டீ.டி.எச். குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் கமல் பேச்சு நடத்தினார்.

டிசம்பர் 11: டீ.டி.எச். வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு.

டிசம்பர் 29: டீ.டி.எச். நிறுவனங்களுடன் கமல்ஹாசன் ஒப்பந்தம்.

ஜனவரி 9: "என்னை தொழில் செய்ய விடாமல்'  தடுக்கிறார்கள் என்றார் கமல்.

ஜனவரி 12: திரையரங்க சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.



ஜனவரி 14: டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளிலும்,

பிப்ரவரி 2-ம் தேதி டீ.டி.எச். மூலமும் "விஸ்வரூபம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 22: "விஸ்வரூபம்' படத்துக்கு தடை கோரி முஸ்லிம்  அமைப்புகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு.

ஜனவரி 23.  "விஸ்வரூபம்' படத்துக்கு அரசு திடீர் தடை.

ஜனவரி 24:  கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு.

ஜனவரி 26:  உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் "விஸ்வரூபம்' படத்தை பார்த்தார்.

ஜனவரி 29:  படத்துக்கு தடை இல்லை என நீதிபதி அறிவித்தார்.



ஜனவரி 30:  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து "விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்.

ஜனவரி 30: மதச்சார்பற்ற நாட்டை தேடிப் போவேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்.

ஜனவரி 30: சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்தார்.

ஜனவரி 31: சட்டம் - ஒழுங்கு பிரச்னையால்தான் விஸ்வரூபத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்தது. 



பிப்ரவரி 1: அரசு முன்னிலையில் பேச்சு நடத்த கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்புகள் ஒப்புதல்.

பிப்ரவரி 2: குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததால்,  விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.


நன்றி : தினமணி

-'பரிவை' சே.குமார்