மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 16 ஜூன், 2024

மனசு பேசுகிறது : காலம் சொல்லும் பாடம்

காலம் சொல்லும் பாடம்.

காலம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாம் வேண்டுமானாலும் இன்னும் அப்படியே இருப்பதாய் நினைத்துக் கொள்ளலாமே ஒழிய வயது ஏறிக்கொண்டேதான் போகிறது என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.

நாம் சின்னப் பிள்ளையாய் வலம் வந்த ஊருக்குள் நம்மை உறவு முறையில் அழைத்த, நாம் உறவு சொல்லி அழைத்த, குறிப்பாக அன்று நாள் முழுவதும் வயல்களில் கிடந்து உழைத்த மனிதர்கள் எல்லாம் வயதாகி, அந்த வயதுக்கான உபாதைகளுடன் இருப்பதையும், இறந்து போனதையும் பார்க்க நேர்வது கூட ஒருவித மனவலிதான்.

எப்போது விடுமுறையில் ஊருக்குப் போனாலும் வாழ்விடம் நகரமாக இருந்தாலும் வளர்ந்த இடத்துக்குப் போய் அந்த மனிதர்களைப் பார்ப்பதும், அவர்கள் வாஞ்சையுடன் முகம் தடவி 'அப்பா நல்லாயிருக்கியா...?' என்று கேட்பதும் நம்மைக் குளிர்விக்கும் ஒரு மருந்து. எனக்கு அது எப்போதும் அதிகம் கிடைக்குமிடம் எங்கள் ஊர் என்பதால் பெரும்பாலும் அங்குதான் விடுமுறை நாட்களைக் கழிப்பேன். அந்த வாஞ்சையான உறவிகளில் பலரை இன்று அந்தக் கிராமம் இழந்துள்ளது.

நாம் பார்த்து வளர்ந்த பாசமான மனிதர்களில் பலர் பூமிக்குள் போய்விட்டார்கள். அவர்களின் இறப்பைக் கேட்கச் செல்லும் போது அவர்கள் குறித்தான நிகழ்வுகளைப் பகிர்தல் ஒரு நெகிழ்ச்சி என்றாலும் இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாது என்று நினைக்கும் போது சென்ற முறை அவரைப் பார்த்து வண்டியை நிறுத்தியபோது முகம் மலர, 'எப்போ வந்தே..? நல்லாயிருக்கியா...?' என்று கேட்டதும் 'குமாரு... எப்படா வந்தே..?' என முகம் மலரக் கேட்டதுதான் ஞாபகத்தில் ஆடியது.

இந்த முறை ஒரு இறப்பு... தொன்னூற்றாறு வயது. அந்த ஆயாவுடன் அத்தனை நெருக்கமெல்லாம் இருந்ததில்லை. நாங்கள் வளர்ந்த காலத்தில் பெரும்பாலும் ஊரோடு ஒட்டாமல் ஒதுங்கியிருந்த குடும்பம் அது என்பதால் பெரும் தொடர்புகள் இல்லை என்றாலும் அந்தாயா கடைசி காலத்தில் பட்ட கஷ்டங்களைத் தம்பி, சித்தப்பா போன்றோர் சொன்னபோது வருத்தமாக இருந்தது. இந்த வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் கஷ்டப்படாமல், யாரையும் கஷ்டப்படுத்தாமல் போய்ச் சேர்ந்தால் போதும் என்று தோன்றியது.

அடக்கம் பண்ணச் சுடுகாட்டுக்குச் சென்றபோது நாம் ஊரில் இல்லாதபோது இறந்தவர்களை எங்கே அடக்கம் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரத்தான் செய்தது. 'மாமா ஆயாவை எங்கே அடக்கம் பண்ணியிருக்கு...?' எனச் சுந்தரத்திடம் கேட்டபோது 'அந்தா இருக்கு பாருங்க... கல்லு அதுதான். அதுக்குப் பக்கத்துலதானே ஐயாவை அடக்க்ம் பண்ணினோம்' என்றார். சென்ற முறை உடல் நலமில்லாமல் பார்க்கப் போனபோது கூட 'சின்ன வயசா... அப்படித்தான் இருக்கும். நீ எப்படியிருக்கே... நீங்க நல்லாயிருந்தாப் போதும்' என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

'என்னமோ தெரியல மாப்ள... சாகுறதுக்கு பத்து நாளக்கி முன்னாடி இங்கிட்டு ஆடு மேக்க வந்த ஒங்க ஆயா தம்பி அப்பாவச் செம்முன எடத்துல முள்ளு மண்டிப்போயிக் கெடக்கு, சுத்தம் பண்ணி வய்யிப்பான்னு சொன்னுச்சு. நானும் வந்து சுத்தம் பண்ணிட்டுப் போனென். பத்து நாள்ல அதுவும் வந்து படுத்துருச்சி. அதுக்குத்தான் சுத்தம் பண்ணச் சொன்னுச்சு போல' என்றார் வருத்தம் தோய்ந்த குரலில் சுந்தர மாமா.

'இந்தா இந்தப் பக்கம் தனியா வயல ஒட்டி இருக்குற கல்லுதான் குப்பம்மா...' என்று சொல்ல, அதென்ன வயல் பக்கமா போயிருச்சு என்றபோது 'அடக்கம் பண்ணும் போது அப்படிப் பண்ணிட்டாங்க' என்றார்கள். பெரும்பாலும் கணவன், மனைவி, மகன்கள் என்ற வரிசையில்தான் அடக்கம் பண்ணியிருக்கிறார்கள். 

அதேபோல் ஐயா, சின்னய்யா, சித்தப்பா எனப் பலரின் அடக்க இடங்களை அடையாளப்படுத்தும் கற்களைக் காண முடிந்தது. இப்போது ஒரு சிலருக்குத்தான் கல் ஊன்றியிருக்கிறார்கள். பலருக்கு அப்படி எதுவும் இல்லை. இந்தா இங்கதான் உங்க மாமா, அங்கிட்டு அந்த ஐயா என நினைவில் வைத்துச் சொல்லும் சிலருக்குக் கூட பலரின் அடக்க இடம் தெரியாமல்தான் இருக்கிறது.

நமக்கு முந்தைய தலைமுறையில் பலர் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இருக்கும் சிலரும் நோயின் பிடியில் இருப்பதைப் பார்க்கும் போது அந்த மனிதர் வயது காலத்தில் ஊருக்குள் எப்படி இருந்தார் என்ற எண்ணம் தோன்ற, எப்படி இருந்த மனிதர்கள் இன்று நோயின் பிடியில் இருக்கிறார்களே என்ற வருத்தம் அதிகமானது. ஊரில் நல்லது கெட்டது என எது நடந்தாலும் அதிகாரமற்ற தன் குரலால் எங்களை எல்லாம் வேலை வாங்கி, சில நேரங்களில் கோபமாய்ச் சத்தமிட்டுச் சிங்கமெனக் கர்ஜித்துத் திரிந்த சித்தப்பா, உடல் நலமில்லாமல் நடக்கவே சிரமப்படும் நிலை காணும் போது மனசு உடைந்தது. என்னைப் பார்த்ததும் அருகே அழைத்து 'குமாரு எப்படா வந்தே...? நல்லாயிருக்கியா' என முகம் மலர அவர் கேட்டபோது இன்று உறவுகளை உதறிவிட்டுச் செல்லும் மனிதர்கள்  நினைவில் வந்தார்கள்.

அடுத்த முறை ஊருக்குப் போகும் போது இன்னும் சிலரை அந்தப் பூமி இழந்திருக்கும் என்பதை மனது அறிந்திருந்தாலும் மீண்டும் அவர்களைச் சந்திப்போம் என்ற நம்பிக்கை மனசின் ஒரு ஓரத்தில் துளிர்த்துத்தான் இருக்கிறது என்றாலும் காலம் நகர்ந்து கொண்டுதானே இருக்கிறது.

எங்கள் ஊர் விவசாயத்தை மட்டுமல்ல விவசாயம் மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்த மனிதர்களையும் இழந்து இருக்கிறது... இருப்பவர்களையும் இழந்து கொண்டுதான் இருக்கிறது.

நம்மைப் பார்த்ததும் முகம் மலரப் பூரிக்கும் அந்த முகங்களுக்குள் அடுத்த முறை உன்னைப் பார்ப்பேனா என்ற ஏக்கமும் நிறைந்திருப்பதைப் பார்க்கும் போது மனசு வலித்தது.

என்ன செய்ய... காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

நெகிழ்வான பதிவு.

ஊருக்கு வந்து இருக்கிறீர்களா குமார்?

அன்பாய் நலம் விசாரிக்கும் உறவுகளை , நம்மை பார்த்து பூரிக்கும் உறவுகளை இழப்பது மிகவும் கொடுமை.

எங்களை போன்ற வயதானவர்களுக்கு இறைவனிடம் கேட்கும் வரம், இறுதி காலத்தில் யாருக்கும் தொந்திரவு கொடுக்கமால் போக வேண்டும் என்பதுதான் .

அதை கூட கேட்க கூடாது என்கிறார்கள். எங்களை விட பெரியவர்கள். "அன்று எழுதிய எழுத்தை அழிச்சி எழுத முடியாது, பிறப்பு, இறப்பு தேதி எழுதிதான் இறைவன் நம்மை பூமிக்கு அனுப்புவான்

இருக்கும் வரை வாழ்க்கையை நல்லபடியாக வாழ் என்று சொல்கிறார்கள்."

காலை எழுந்தவுடன் இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும், இரவு பொழுதில் இறைவனுக்கு நன்றி.


வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெகிழ்ச்சி. காலம் கடந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய. பலரை இழந்து கொண்டேயிருக்கிறோம் :(